பகிர்ந்துகொள்ள ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷம்
க்ளோரியா மேலேஸ்பீனா கூறியபடி
சிசிலியின் கடற்கரை எங்கள் பார்வையிலிருந்து மறைந்தபோது, நானும் என் கணவரும் நாங்கள் போய்சேரும் இடமாகிய மத்தியதரைக் கடல் தீவாகிய மால்டாவின்மீது எங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தத் தொடங்குகிறோம். என்னே ஒரு கிளர்ச்சியூட்டும் வாய்ப்பு! எங்களுடைய கப்பல் கடலில் கடந்து செல்லுகையில், மால்டாவில் அப்போஸ்தலன் பவுலுக்கு முதல் நூற்றாண்டின்போது ஏற்பட்ட அனுபவத்தை நாங்கள் நினைத்துப் பார்த்தோம்.—அப்போஸ்தலர் 28:1-10.
அப்போது 1953, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையை மால்டா சட்டப்பூர்வமாக அங்கீகரிக்காமல் இருந்தது. அதற்கு முந்தின வருடம், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் நாங்கள் பட்டம் பெற்று, இத்தாலிக்குப் போகும்படி நியமிக்கப்பட்டிருந்தோம். சிறிது காலம் இத்தாலிய மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு, மால்டாவில் எங்களுக்காக என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம்.
ஒரு வாலிபப் பெண்ணாக இருந்த நான், எப்படி ஒரு வெளிநாட்டு மிஷனரியானேன்? கேளுங்கள் சொல்லுகிறேன்.
அம்மாவின் தூண்டுதலளிக்கும் முன்மாதிரி
1926-ல், எங்கள் குடும்பம் கனடாவின் ஒன்டாரியோவைச் சேர்ந்த ஃபோர்ட் ஃப்ரான்சஸில் வாழ்ந்து வந்தது. அச்சமயம் இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிப்பதில்லை (ஆங்கிலம்) என்ற சிறுபுத்தகத்தை என் அம்மா ஒரு பைபிள் மாணாக்கரிடமிருந்து (யெகோவாவின் சாட்சிகள் அப்போது இப்படித்தான் அழைக்கப்பட்டனர்) பெற்றுக்கொண்டார்கள். அதை மிக ஆர்வத்தோடு படித்துவிட்டு, அதே வாரத்தில் காவற்கோபுர பத்திரிகையை குழுவாக சேர்ந்து படிக்கும் ஒரு பைபிள் படிப்புக்குப் போனார்கள். அம்மா பேராவலுடன் பைபிளைப் படிப்பவராக இருந்ததன் காரணமாக, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை, தான் தேடிக்கொண்டிருந்த பொக்கிஷம் கிடைத்தாற்போல் ஏற்றுக்கொண்டார்கள். (மத்தேயு 6:33; 13:44) அப்பா வன்மையாக எதிர்த்தபோதிலும், வளர்ப்பதற்கு மூன்று பெண்குழந்தைகள் இருந்தபோதிலும், தான் கற்றுக்கொண்டிருந்தவற்றிற்கு நிலைநிற்கையை எடுத்தார்கள்.
அடுத்த 20 வருடங்களின்போது அம்மா கொண்டிருந்த அசையாத நம்பிக்கை, நானும் என் இரண்டு அக்காமார்கள் தெல்மாவும் வையோலாவும், நீதி வாசமாயிருக்கும் புதிய உலகத்தில் நித்திய ஜீவனைப் பற்றிய அற்புதமான நம்பிக்கையை அறிந்திருக்கும்படி செய்தது. (2 பேதுரு 3:13) கடுமையான சோதனைகள் அநேகத்தை அவர்கள் எதிர்ப்பட்டார்கள், ஆனாலும் அவர்கள் தெரிந்துகொண்டிருக்கும் போக்கு சரியானதுதானா என்று நாங்கள் ஒருபோதும் சந்தேகப்பட்டதில்லை.
1931-ல், நான் பத்தேபத்து வயது நிரம்பியவளாக இருந்தபோது, அ.ஐ.மா.-வைச் சேர்ந்த மினிசோடாவின் வடபகுதியில் இருந்த ஒரு பண்ணைக்கு நாங்கள் மாறிச் சென்றோம். அங்கு யெகோவாவின் சாட்சிகளோடு தவறாமல் கூட்டுறவுகொள்வதிலிருந்து நாங்கள் துண்டிக்கப்பட்டோம், ஆனால் அம்மாவிடம் இருந்து கிடைக்கும் பைபிள் போதனையிலிருந்து துண்டிக்கப்படவில்லை. ஒரு கோல்போர்ட்டராக அல்லது முழுநேர ஊழியராக அவர்கள் செய்துவந்த அர்ப்பண சேவையானது, நானும் அவர்களோடு அந்த முழுநேர ஊழியத்தில் சேர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையை என்னில் தூண்டிவிட்டது. நானும் என்னுடைய இரண்டு அக்காமார்களும் 1938-ம் ஆண்டு, மினிசோடாவின் டூலுத்தில் நடந்த ஒரு மாநாட்டில், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினோம்.
1938-ல் நான் மேல்நிலைப் பள்ளி படிப்பை முடித்த பிறகு, வாணிபப் பயிற்சிப் படிப்பில் சேர்ந்துகொள்ளும்படி என்னுடைய அம்மா என்னை உற்சாகப்படுத்தினார்கள். நான் பயனியராக (கோல்போர்ட்டரின் புதிய பெயர்) ஆகும்போது என்னை நானே ஆதரித்துக்கொள்வதற்காகவே இந்த ஆலோசனை. முக்கியமாக நாங்கள் எங்களையே ஆதரித்துக்கொள்ளும்படி அப்பா எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய்விட தீர்மானித்ததனால், இது நல்லதொரு யோசனையாகவே இருந்தது.
எங்களுடைய பொக்கிஷத்தை முழுநேரம் பகிர்ந்துகொள்ளுதல்
முடிவில் நான் கலிபோர்னியாவுக்கு மாறிச் சென்று, 1947-ல், சான் பிரான்ஸிஸ்கோவில் பயனியர் சேவையைத் தொடங்கினேன். லாஸ் ஏஞ்சலிஸில் “அனைத்து தேசங்களின் விஸ்தரிப்பு” மாநாட்டின் முன்னேற்பாட்டு வேலையில் ஈடுபட்டிருந்தபோது, ஃபிரான்சிஸ் மேலேஸ்பீனாவைச் சந்தித்தேன். மிஷனரி ஆகவேண்டும் என்ற எங்களுடைய பரஸ்பர குறிக்கோளானது ஒரு பாச உறவு மலர வழிநடத்திற்று. 1949-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
செப்டம்பர் 1951-ல், நானும் ஃபிரான்சிஸும் 18-வது கிலியட் வகுப்பிற்கு வரும்படி அழைக்கப்பட்டோம். ஐந்து மாத தீவிர பயிற்சிக்குப் பிறகு பிப்ரவரி 10, 1952, பட்டமளிப்பு தினத்தன்று, நாங்கள் அனுப்பப்படவிருக்கும் நாடுகளை அந்தப் பள்ளியின் முதல்வர், நாதன் H. நார், அகரவரிசையில் சத்தமாக வாசித்தார். “சகோதரர் மேலேஸ்பீனாவும் சகோதரி மேலேஸ்பீனாவும் இத்தாலிக்கு,” என்று சொன்னபோது, நாங்கள் ஏற்கெனவே கற்பனையில் பயணம் செய்துகொண்டிருந்தோம்!
ஒருசில வாரங்களுக்குப் பின்னர், இத்தாலியிலுள்ள ஜினோவாவுக்குப் போகும் பத்து நாள் பிரயாணத்திற்கு நாங்கள் நியூ யார்க்கில் கப்பலேறினோம். புரூக்லின் தலைமை அலுவலக பணியாளர்களில் ஜோவான்னி டேச்சிகாவும் மேக்ஸ் லார்ஸனும் எங்களை வழியனுப்ப துறைமுகத்திற்கு வந்திருந்தனர். ஜினோவாவில் அந்த நாட்டிற்குள் நுழையும் சிக்கலான விதிமுறைகளை அறிந்திருந்த மிஷனரிகள் எங்களை சந்தித்தனர்.
எங்களைச் சுற்றியிருந்த எல்லாவற்றாலும் கிளர்ச்சியூட்டப்பட்ட நாங்கள் பொலோனாவுக்குப் போக ஒரு ரயிலில் ஏறினோம். போய் சேர்ந்தவுடன் எங்களுடைய கண்களுக்குத் தென்பட்டது, இரண்டாம் உலகப் போரின் குண்டு வெடிப்புகளினால் உருக்குலைக்கப்பட்ட ஒரு நகரமாக இருந்தது. ஆனால் காலைத் தென்றலில் நிறைந்திருந்த, எதிர்க்கமுடியாதவண்ணம் கவர்ந்திழுக்கும் வறுக்கும் காஃபியின் நறுமணம், மாவினால் செய்த எண்ணற்ற வகை பதார்த்தங்களோடு சேர்த்து சாப்பிட தயாரிக்கப்படும் பிரமாதமான சாஸ்களில் இருந்து வரும் வாசனைத்திரவியங்களின் மணம் போன்ற அநேக மகிழ்ச்சிதரும் காரியங்களும் இருந்தன.
ஒரு குறிக்கோளை நிறைவேற்றுதல்
மனப்பாடம் செய்து வைத்திருந்த ஒரு பிரசங்கத்தைக் கொடுப்பதோடு எங்கள் ஊழியத்தைத் தொடங்கினோம். அந்தச் செய்தி ஏற்றுக்கொள்ளப்படும்வரை அல்லது கதவு அடைக்கப்படும்வரை அந்தப் பிரசங்கத்தைத் திரும்பத் திரும்ப கொடுத்தோம். எங்கள் நம்பிக்கையை ஆட்களிடம் சொல்லவேண்டும் என்ற ஆசை அந்த மொழியை முழுமூச்சுடன் கற்றுக்கொள்ளும்படி எங்களைத் தூண்டிற்று. நான்கு மாதங்கள் கழித்து, நேபிள்ஸிலுள்ள ஒரு புதிய மிஷனரி இல்லத்திற்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம்.
பிரமாண்டமான இந்த நகரம் அதன் கண்கொள்ளாக் காட்சிகளுக்குப் பேர்போனதாய் இருக்கிறது. அங்கு எங்களுடைய ஊழியத்தை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். ஆனால் இன்னும் நான்கு மாதங்களுக்குப் பிறகு, என் கணவர் வட்டார அல்லது பிரயாண வேலைக்காக நியமிக்கப்பட்டார். அது ரோமிலிருந்து சிசிலி வரையுள்ள சபைகளுக்கெல்லாம் விஜயம் செய்யும் வேலையாயிருந்தது. காலப்போக்கில், நாங்கள் மால்டாவிற்கும், ஆப்பிரிக்காவின் வடபகுதியிலிருக்கும் லிபியாவுக்கும்கூட விஜயம் செய்தோம்.
அந்தக் காலத்திலெல்லாம் நேபிள்ஸிலிருந்து சிசிலிக்குப் போகும் ரயில் பயணங்கள் சரீரப்பிரகாரமான சகிப்புத்தன்மைக்கு ஒரு சோதனையாக இருந்தன. நெரிசல் மிகுந்த ஒரு ரயிலில் ஏறுவோம், கூட்டம் நிறைந்த நடைபாதைகளில், சிலசமயங்களில் ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை, நின்றுகொண்டே பயணம் செய்வோம். இருந்தபோதிலும், எங்களைச் சுற்றியிருந்தவர்களை நன்கு அறிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பை அது அளித்தது. வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒயின் நிறைந்த, பிரம்புக்கூடையால் சூழப்பட்ட ஒரு பெரிய குடுவை அடிக்கடி அதன் சொந்தக்காரருக்கு இருக்கையாக பயன்பட்டது. நீண்ட பயணத்தின்போது தன் தாகத்தைத் தணித்துக்கொள்ள அவர் அவ்வப்போது அதிலுள்ள ஒயினை குடித்துக்கொள்வார். கனிவான பிரயாணிகள் அடிக்கடி தங்களுடைய ரொட்டி மற்றும் சலேமியை எங்களுக்கும் கொடுப்பார்கள். இருதயத்தைக் குளிர வைக்கும், உபசரிக்கும் அடையாளமாக இருந்த அதை நாங்கள் போற்றினோம்.
சிசிலியில் நண்பர்கள் எங்களை வந்து சந்திப்பார்கள். மலையின் உச்சியில், மூன்றரை மணிநேர செங்குத்தான பயணத் தொலைவில் இருந்த சபைக்கு எங்களுடைய சூட்கேஸுகளை தூக்கிக்கொண்டு போவார்கள். அந்தக் கிறிஸ்தவ சகோதரர்களின் அனலான வரவேற்புதானே எங்களுடைய களைப்பையெல்லாம் மறக்கச் செய்தது. தடுக்கிவிழாத உறுதிவாய்ந்த கோவேறுக்கழுதைகளின்மீது சிலசமயங்களில் சவாரி செய்தோம். ஆனால் கீழேயுள்ள மலைச்சரிவுகளின் ஆழத்தை நாங்கள் ஒருபோதும் பார்க்கவில்லை. அந்தக் கோவேறுக்கழுதை ஒரேவொரு அடி தப்பாக எடுத்துவைத்தாலும் போதும் நாங்கள் விழுவதற்கு. எங்களுடைய சகோதரர்கள் தங்களுடைய கஷ்டங்களுக்கு மத்தியிலும் பைபிள் சத்தியத்துக்காக எடுத்திருக்கும் உறுதியான நிலைநிற்கை எங்களை பலப்படுத்தியது; அவர்கள் எங்களிடம் காண்பித்த அன்பு, நாங்கள் அவர்களோடு இருப்பதற்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கும்படி செய்தது.
மால்டாவும் லிபியாவும்
சிசிலியிலுள்ள எங்கள் சகோதரர்களைப் பற்றிய நினைவுகளால் நிரம்பி வழிந்தவர்களாய், நாங்கள் மால்டாவுக்குக் கடல்பயணத்தை மேற்கொண்டோம். அப்போஸ்தலன் பவுல் அங்குள்ள ஜனங்கள் அன்புள்ளவர்களாய் இருப்பதாகக் கண்டார், நாங்களும் அப்படித்தான் கண்டோம். செ. பால் வளைகுடாவில் ஏற்பட்ட ஒரு புயல், முதல் நூற்றாண்டில் இருந்த அந்தச் சிறிய கப்பல்கள் எதிர்ப்பட்ட ஆபத்துகளை நாங்கள் புரிந்துகொள்ளச் செய்தது. (அப்போஸ்தலர் 27:39–28:10) எங்களுடைய அடுத்த விஜயம் லிபியாவுக்கு. எங்களுடைய வேலை தடைசெய்யப்பட்டிருந்த இந்த ஆப்பிரிக்க தேசத்தில் நாங்கள் எப்படி சமாளிக்கப்போகிறோம்?
மீண்டும் ஒருமுறை நாங்கள் முற்றிலும் வித்தியாசமான பண்பாட்டை எதிர்ப்பட்டோம். ட்ரிபோலி நகரத்தின் முக்கியப் பகுதியில், இரு ஓரங்களிலும் தூண்களைக்கொண்ட தெருக்களில் நடந்துபோகையில், அந்நகரத்தின் காட்சிகளும் சப்தங்களும் என் கவனத்தை ஈர்த்தன. சஹாரா பாலைவனத்தின் தீய்க்கும் பகல்நேர சூட்டிலிருந்தும் இரவுநேர குளிரிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆண்கள் ஒட்டக மயிரினால் நெய்யப்பட்ட உடைகளைப் பயன்படுத்தினர். வாழும் இடங்களில் உள்ள சீதோஷ்ணநிலைகளுக்குத் தக்கவாறு மக்கள் தங்களையே மாற்றியமைத்துக்கொள்ளும் முறையை நாங்கள் புரிந்துகொண்டு அதை மதித்து நடந்துகொள்ள கற்றுக்கொண்டோம்.
அந்தச் சகோதரர்கள் கொண்டிருந்த எச்சரிக்கையோடுகூடிய வைராக்கியம், யெகோவாவின் மீது முழுக்கமுழுக்க சார்ந்திருப்பதைப் பற்றியும், அத்தகைய சூழ்நிலைமைகளின்கீழ் பிரசங்கிப்பதில் அதிக அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவதைப் பற்றியும் எங்களுக்கு அதிகத்தைக் கற்றுக்கொடுத்தது. எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்கள் பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இருப்பினும் யெகோவாவுக்கான தங்களுடைய சேவையில் ஒருங்கிணைந்து வேலைசெய்தனர்.
புதிய நியமிப்பு
எங்களுடைய பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு ஏற்பட்டதால், நாங்கள் இத்தாலியைவிட்டு வெளியேற வேண்டியதாயிற்று. ஆனாலும் 1957-ல் பிரேஸிலில் பிரசங்கிப்பதற்கான ஒரு புதிய நியமிப்பை நாங்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டோம். ஃபிரான்சிஸும் நானும் அந்த வாழ்க்கைக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எங்களை மாற்றி அமைத்துக்கொண்டோம். எட்டு மாதங்களுக்குப்பின், வட்டார வேலையை செய்யும்படி ஃபிரான்சிஸ் அழைக்கப்பட்டார். பஸ்ஸிலும், விமானத்திலும், நடந்தும் நாங்கள் பயணம் செய்தோம். இந்தப் பெரிய அழகிய நாட்டில் பயணம் செய்வது எங்களுக்கு ஒரு புவியியல் பாடம் கற்றுக்கொள்ளுவதைப் போல இருந்தது.
எங்களுடைய முதல் வட்டாரம் சாவோ பாலோ நகரத்தில் உள்ள பத்து சபைகளையும், சாவோ பாலோ மாநிலத்தின் தெற்குக் கடற்கரைப்பகுதியின் நெடுகேயும் வெகுதூரத்திலுமுள்ள பத்து சிறிய ஊர்களையும் கொண்டதாக இருந்தது. அப்போது அந்த ஊர்களிலெல்லாம் சபைகள் இல்லாமலிருந்தன. தங்குவதற்கு நாங்கள் ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, தங்கும் ஏற்பாடுகளையெல்லாம் செய்த பிறகு, வீட்டுக்கு வீடு ராஜ்ய செய்தியைக் கொண்டுசெல்வோம். உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கல்விபுகட்டும் திரைப்படங்களில் ஒன்றைக் காணும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்களையும் கொடுத்துவிட்டு வந்தோம்.
திரைப்படச் சுருள்கள், திரைப்படக் கருவி, மின்மாற்றி, கோப்புகள், பிரசுரங்கள், அழைப்பிதழ்கள், திரைப்படக் காட்சி காண்பிக்கப்படும் இடத்தின் பெயரைப் பதிப்பதற்கான ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவற்றைச் சுமந்துகொண்டு பஸ்ஸில் ஏறுவதென்பது ஏதோ சாதாரணமான காரியமல்ல. ஒப்பிட்டுப் பார்க்கையில் துணிமணிகளடங்கிய எங்களுடைய சிறிய சூட்கேஸ் ஒரு பெரிய சுமையே கிடையாது. கரடுமுரடான சாலையில் பயணம் செய்கையில் ஏற்படும் அதிர்ச்சியினால் திரைப்படக் கருவி உடைந்துவிடாதபடி அதை எங்களுடைய மடியிலேயே வைத்திருக்க வேண்டும்.
படத்தைக் காண்பிப்பதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடித்தபின், வீட்டுக்கு வீடு சென்று அந்தப் படக்காட்சிக்கு அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு வருவோம். சிலசமயங்களில் ஒரு உணவு விடுதியிலோ ஒரு தங்கும் விடுதியிலோ அந்தப் படத்தைத் திரையிட அனுமதி பெற்றோம். மற்ற சந்தர்ப்பங்களில் திறந்தவெளியில் இரண்டு கம்புகளுக்கிடையில் ஒரு பெட்ஷீட்டை விரித்துக் கட்டி வைத்தோம். ஃபிரான்சிஸ் விளக்கத்தை வாசிக்கையில் மதித்துணர்வோடு அப்படத்தைக் காண வந்தவர்கள் நின்றுகொண்டு கருத்தூன்றிக் கவனிப்பார்கள். அவர்களில் அநேகர் ஒரு இயங்கு திரைப்படத்தை ஒருபோதும் பார்த்ததேயில்லை. அதற்குப் பிறகு, நாங்கள் பைபிள் பிரசுரங்களை அளிப்போம்.
கிராமங்களைச் சென்றடைய பஸ்ஸில் பயணம் செய்தோம். சில ஆறுகள் பாலங்களால் இணைக்கப்படாமலிருந்தன. எனவே ஒரு பெரிய கட்டுமரத்தோணியின் மீது பஸ்ஸை ஏற்றிவைத்து மறுகரைக்குக் கொண்டு சேர்ப்பார்கள். பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிக் கொள்ளும்படியும், பஸ் நழுவி ஆற்றில் விழுவதைக் கண்டால், நாங்களும் தண்ணீரினுள் இழுத்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கும்பொருட்டு தோணியின் மறுபக்கத்தில் குதித்துவிடும்படியும் நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். நன்றிசெலுத்தும் வகையில், நாங்கள் பயணம் செய்த ஒரு பஸ்ஸும் அந்த ஆற்றில் ஒருபோதும் விழுந்தது கிடையாது. அது மிகவும் நல்ல காரியமாக இருந்தது, ஏனென்றால் முக்கியமாக, அந்த நதி மனிதரை உண்ணும் பைரனா மீன்களால் நிறைந்திருப்பதற்கு பேர்போனதாக இருந்தது!
1958-ல் நியூ யார்க்கில் சர்வதேச மாநாட்டிற்கு ஆஜராகிவிட்டு பிரேஸிலுக்குத் திரும்பி, விரைவில் மீண்டும் பிரயாண வேலையை மேற்கொண்டோம். எங்களுடைய மாவட்டம் பிரேஸிலின் தெற்கே உருகுவேயின் எல்லை வரைக்கும், மேற்கே பராகுவே வரைக்கும், வடக்கே பெர்னாம்புகோ மாநிலம் வரைக்கும், கிழக்கே அட்லான்டிக் பெருங்கடல் வரைக்கும் பரந்துகிடந்தது.
குஷ்டரோகிகளின் காலனி
1960-களின் மத்திபத்தில், சங்கத்தின் திரைப்படங்களில் ஒன்றை குஷ்டரோகிகளின் காலனி ஒன்றில் காண்பிப்பதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டோம். எனக்கு ஓரளவு பயமாக இருந்தது என்பதை நான் ஒத்துக்கொள்ளவேண்டும். குஷ்டரோகத்தைப்பற்றி பைபிளில் படித்ததல்லாமல் எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாமலிருந்தது. வெள்ளையடிக்கப்பட்ட அந்தக் காம்பவுண்டினுள் நுழைந்ததும், ஒரு பெரிய கலையரங்கத்திற்கு போகும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். எங்களுக்காகவும் எங்களுடைய கருவிகளுக்காகவும் நடுவில் ஒரு பகுதி கயிற்றினால் கட்டி பிரிக்கப்பட்டிருந்தது.
எங்களுக்கு உதவி செய்துகொண்டிருந்த எலக்ட்ரிஷியன் அந்தக் காலனியில் 40 வருடங்களாக வசித்துவருகிறார். அவர் தன்னுடைய கைகளை மணிக்கட்டு வரையும் தன்னுடைய உடலின் மற்ற உறுப்புகளையும் இழந்து விட்டிருந்தார். அவை அவரை மிகவும் மோசமாக உருக்குலைத்திருந்தன. முதலில் நான் சிறிது அஞ்சினேன்; ஆனால் அவர் இதமாக பழகுவதையும் தன் வேலையை சுறுசுறுப்பாக செய்வதையும் பார்த்தவுடன் இயல்பான மனநிலைக்குத் திரும்பினேன். தேவையான முன்னேற்பாட்டு வேலைகளையெல்லாம் முடித்திருக்கும்போது நாங்கள் சற்று நேரத்தில் பல விஷயங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் காலனியில் ஆயிரம் குஷ்டரோகிகள் குடியிருந்தனர். அவர்களில் இருநூறுக்கும் அதிகமான ஆட்கள் ஆஜராகியிருந்தனர். அவர்கள் நொண்டி நொண்டி உள்ளே வந்தபோது, அவர்கள் அல்லல்பட்டுக்கொண்டிருந்த நோயின் பல கட்டங்களை நாங்கள் கவனித்தோம். எங்களுக்கு அது என்னே ஒரு அசைவிக்கும், உணர்ச்சிப் பொங்கும் அனுபவமாக இருந்தது!
“ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்று கெஞ்சின குஷ்டரோகியிடம் இயேசு சொன்னதை நாங்கள் நினைத்துக்கொண்டோம். இயேசு அவனைத் தொட்டு, “எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு,” என்று உறுதியளித்தார். (மத்தேயு 8:2, 3) அந்த நிகழ்ச்சி முடிந்ததும், நாங்கள் வந்ததற்காக எங்களுக்கு நன்றி சொல்ல அநேகர் எங்களை அணுகினர். சேதமடைந்த அவர்களின் உடல்கள் மனிதவர்க்கத்தின் பெரும் துன்பத்திற்கு உறுதியான ஒரு சாட்சியமாக இருந்தன. பின்னர், அதிகத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினவர்களோடு உள்ளூர் சாட்சிகள் பைபிளைப்படித்தனர்.
1967-ல் மோசமான சில உடல்நலப் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்ள நாங்கள் ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பினோம். இவற்றிற்குத் தொடர்ந்து தீர்வு காண்கையில், நாங்கள் மீண்டும் வட்டார வேலையைச் செய்யும் சிலாக்கியத்தைப் பெற்றோம். அடுத்த இருபது வருடங்களாக, நான் ஃபிரான்சிஸோடு சேர்ந்து ஐக்கிய மாகாணங்களில் பிரயாண வேலையில் பங்குகொண்டேன். இந்தக் காலப்பகுதியில் அவர் ராஜ்ய ஊழியப் பள்ளியில் போதகராகவும் இருந்தார்.
எந்த நியமிப்பைக் கொடுத்தாலும் செய்துவந்த உண்மைத்தன்மையுள்ள கூட்டாளியையும் நேசிக்கும் கணவனையும் கொண்டிருந்தது உற்சாகத்தின் என்னே ஒரு ஊற்றுமூலமாக எனக்கு இருந்தது! பைபிள் சத்தியமாகிய பொக்கிஷத்தை இருவரும் சேர்ந்து நான்கு கண்டங்களின் பாகங்களில் பகிர்ந்துகொள்ளும் சிலாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது.
அந்தப் பொக்கிஷத்தால் பிழைத்திருப்பது
1950-ல், அம்மா, 1924-ல் முழுக்காட்டப்பட்ட, டேவிட் ஈஸ்டர் என்ற உண்மைத்தன்மையுள்ள ஒரு சகோதரரை மணந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் அநேக வருடங்கள் முழுநேர ஊழியத்தில் சேவை செய்தனர். இருப்பினும், அம்மாவுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அல்ஸீமர்ஸ் நோய் வெளிப்பட ஆரம்பித்தது. இந்த நோய் அம்மாவின் நியாயமாக யோசிக்கும் திறமையைக் குறைத்துவிட்டதால், அவர்களுக்கு அதிக கவனிப்பு தேவைப்பட்டது. ஆதரவு அளித்த என் அக்காமார்களும் டேவிடும் அவர்களைக் கவனித்துக்கொள்ளும் பாரமான பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். ஏனென்றால் எங்களுடைய முழுநேர சேவையின் விசேஷித்த சிலாக்கியங்களை நாங்கள் விட்டுவிடக்கூடாது என்று அவர்கள் விரும்பினர். அம்மா 1987-ல் மரித்ததுவரை வைத்துச் சென்ற உண்மைத்தன்மையுள்ள முன்மாதிரி, நாங்கள் வாழ்க்கையில் எங்களுடைய போக்கைத் திட்டமிடுவதற்கு அதிகத்தைச் செய்திருக்கிறது. மேலும் அவர்கள் கொண்டிருந்த பரலோக நம்பிக்கை எங்களுக்கு ஆறுதல் அளித்தது.
1989-ல், ஃபிரான்சிஸ் தனது வாலிப வயதில் இருந்ததைப்போன்று சுறுசுறுப்பாக இருக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. உலகின் பல பாகங்களில் நன்கு அறியப்பட்ட ஸ்நெய்ல் ஃபீவர் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது என்று எங்களுக்குத் தெரியாதிருந்தது. 1990-ல் விடாமுயற்சியுடன் போராடிய இந்த எதிரி அவரை மேற்கொண்டது. யெகோவாவின் சேவையில் 40 வருடங்களுக்கும் அதிகமான வருடங்கள் ஒன்றித்திருந்த என் அருமையான துணைவரை நான் இழந்தேன்.
மாற்றங்கள் வாழ்க்கையின் சகஜமான காரியங்களே. அவற்றில் சில எளிதானவை, ஆனால் சில கடினமானவை. விலையேறப்பெற்ற பொக்கிஷமாகிய பைபிள் சத்தியத்தைக் கொடுப்பவராகிய யெகோவா, தம்முடைய அமைப்பின் மூலமாகவும் என் குடும்பத்தாரின் அன்பு மற்றும் உற்சாகத்தின் மூலமாகவும் என்னைப் பிழைத்திருக்கச் செய்தார். யெகோவாவின் பொய்க்காத அனைத்து வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குகையில் நான் இன்னும் திருப்தியைக் கண்டடைகிறேன்.
[பக்கம் 23-ன் படம்]
இத்தாலியில் மிஷனரிகளாக இருந்தபோது நானும் என் கணவரும்