வாழ்க்கை சரிதை
என் சிருஷ்டிகருக்குத் தொடர்ந்து சேவை செய்யத் தீர்மானமாய் இருக்கிறேன்
கான்ஸ்டன்ஸ் பெனான்டி சொன்னது
எல்லாமே ரொம்ப சீக்கிரமாக நடந்து முடிந்துவிட்டது! என் மகள் காமில் 22 மாத குழந்தை. திடீரென அவளுக்குப் பயங்கர காய்ச்சல் வந்து ஆறே நாட்களுக்குள் இறந்துபோனாள். என்னால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. நானும் செத்துவிடலாமென நினைத்தேன். கடவுள் ஏன் இப்படிச் செய்தார்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
என் பெற்றோர் இத்தாலி நாட்டு சிசிலியில் உள்ள காஸ்டெல்லாமாரே டெல் கோல்ஃபோ நகரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நியு யார்க் நகரில் குடியேறினார்கள். அங்கு டிசம்பர் 8, 1908-ல் நான் பிறந்தேன். எங்கள் வீட்டில் மொத்தம் பத்து பேர்—அப்பா, அம்மா, எட்டு பிள்ளைகள். எனக்கு ஐந்து தம்பிமார், இரண்டு தங்கைமார்.a
என் அப்பா சான்டோ காட்டான்ட்ஸாரோ, 1927-ல் பைபிள் மாணாக்கர் என்ற ஒரு சிறிய தொகுதியினரின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்துவந்தோம். அங்கு இத்தாலி நாட்டு சகோதரரான ஜொவான்னி டெசெகா என்பவர் கூட்டங்கள் நடத்தி வந்தார். அருகிலிருந்த நியு யார்க், புரூக்ளின் நகரில் உள்ள தலைமையகத்தில் (பெத்தேல் என அழைக்கப்படுகிறது) அவர் சேவை செய்துகொண்டிருந்தார். காலப்போக்கில், அப்பா பிரசங்க வேலையில் ஈடுபட ஆரம்பித்தார், பிற்பாடு, முழுநேர ஊழியரானார், 1953-ல் மரிக்கும்வரை அந்த ஊழியத்தைத் தொடர்ந்து செய்தார்.
என் அம்மா சின்ன வயதில் கன்னிகாஸ்திரீயாக ஆவதற்கு விரும்பினாராம், ஆனால் அவருடைய அம்மா அப்பா அதற்குச் சம்மதிக்கவில்லையாம். ஆரம்பத்தில், அம்மா பேச்சைக் கேட்டு அப்பாவுடன் சேர்ந்து பைபிள் படிப்பில் கலந்துகொள்ள மறுத்தேன். ஆனால் சீக்கிரத்திலேயே, அப்பாவிடம் பல மாற்றங்களை கவனித்தேன். அவர் ரொம்பவே அமைதியானவராக, சாந்தமானவராக ஆனார், அதனால் வீடே அமைதியாயிற்று. அது எனக்குப் பிடித்திருந்தது.
இதற்கிடையே சார்ல்ஸ் என்பவரைச் சந்தித்தேன். அவருக்கும் என்னுடைய வயதுதான், அவர் புரூக்ளினில் பிறந்தவர். என்னுடைய பெற்றோரைப் போல அவருடைய பெற்றோரும் சிசிலியிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள். விரைவில் எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. 1931-ம் வருடம் ஒஹையோவில் கொலம்பஸ் நகரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் அப்பா கலந்துகொண்டு திரும்பி வந்தபின், எனக்கும் சார்ல்ஸுக்கும் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திற்குள் எங்கள் மகள் காமில் பிறந்தாள். அவள் இறந்தபோது, என் இதயமே வெடித்துவிடும்போல் ஆனது. அழுதுகொண்டிருந்த சார்ல்ஸ் ஒருநாள் என்னிடம் இப்படிச் சொன்னார்: “காமில் உனக்கு மட்டுமா மகள், எனக்கும்தானே, என்ன செய்வது? இனி ஒருவரையொருவர் தேற்றிக்கொண்டு வாழ்க்கையைத் தொடர வேண்டியதுதான்.”
பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்கிறோம்
காமில்லின் அடக்கத்தின்போது அப்பா கொடுத்த பேச்சில் உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி அவர் குறிப்பிட்டதை சார்ல்ஸ் எனக்கு ஞாபகப்படுத்தினார். அதற்கு, “உயிர்த்தெழுதலை நீங்க உண்மையிலேயே நம்புறீங்களா?” என்று அவரிடம் கேட்டேன்.
“ஆமா, நம்புறேன்,” என்றார் பதிலுக்கு. “அதைப் பற்றி பைபிள் வேறு என்னெல்லாம் சொல்லுதுன்னு நாம தெரிஞ்சுக்கலாமே?” என்றார் மேலுமாக.
அன்றிரவு எனக்குத் தூக்கமே வரவில்லை. காலையில் ஆறு மணிக்கு அப்பா வேலைக்குப் போவதற்கு முன், அவரிடம் போய், சார்ல்ஸும் நானும் பைபிள் படிக்க விரும்புகிறோம் என்று சொன்னேன். அவர் சந்தோஷத்தில் என்னை அன்போடு அணைத்தார். படுக்கையைவிட்டு இன்னும் எழாதிருந்த அம்மா, நாங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார். என்ன நடந்ததென்று அம்மா என்னைக் கேட்டார். “ஒண்ணுமில்லை, சார்ல்ஸும் நானும் பைபிள் படிக்கத் தீர்மானிச்சிருக்கோம், அவ்வளவுதான்” என்றேன்.
அதற்கு அம்மா உடனே, “நாம எல்லாருமே பைபிளைப் படிக்கணும்” என்றார். அதனால், என் தம்பிமாரையும் தங்கைமாரையும் சேர்த்து நாங்கள் 11 பேரும் குடும்பமாகப் படிக்கத் தொடங்கினோம்.
பைபிள் படிப்பு எனக்கு ஆறுதல் அளித்தது, என் மனதிலிருந்த குழப்பமும் கவலையும் நீங்கி நம்பிக்கை பிறந்தது. ஒரு வருடத்திற்குப் பின், 1935-ல், சார்ல்ஸும் நானும் பைபிள் சத்தியங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தோம். பிப்ரவரி 1937-ல், புரூக்ளினிலுள்ள தலைமையகத்தில், தண்ணீர் முழுக்காட்டுதலின் வேதப்பூர்வ முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு பேச்சு கொடுக்கப்பட்டது; அதைக் கேட்ட பிறகு, அருகே ஒரு ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தில் நாங்களும் இன்னும் பலரும் முழுக்காட்டுதல் பெற்றோம். நான் இந்தப் படியை எடுத்ததற்குக் காரணம், என் மகளை ஒருநாள் திரும்பவும் பார்க்க வேண்டுமென்ற ஆசையால் மட்டுமல்ல, நான் நேசிக்கிற சிருஷ்டிகருக்குச் சேவைசெய்ய வேண்டுமென்ற ஆசையாலும்தான்.
முழுநேர ஊழியத்தைத் தொடங்குதல்
கற்ற விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வது எனக்கு உற்சாகத்தையும் திருப்தியையும் அளித்தது. முக்கியமாய் அந்தச் சமயத்தில் அநேகர் ராஜ்ய செய்தியை ஏற்று அதை அறிவிப்பதில் பங்குகொண்டது உற்சாகம் அளித்தது. (மத்தேயு 9:37) 1941-ல், சார்ல்ஸும் நானும் பயனியர்கள் ஆனோம், முழுநேர ஊழியர்களை யெகோவாவின் சாட்சிகள் அப்படித்தான் அழைக்கிறார்கள். அதற்குப் பின் சீக்கிரத்திலேயே நாங்கள் ஒரு டிரெய்லர் வண்டியை வாங்கினோம். காற்சட்டைகளைத் தைக்கும் எங்கள் குடும்பத் தொழிற்சாலையை என் தம்பி ஃபிராங்க்கிடம் சார்ல்ஸ் ஒப்படைத்துவிட்டு வந்தார். பிற்பாடு விசேஷப் பயனியர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் ஒரு கடிதத்தைப் பெற்றோம். அப்போது நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. முதலில், நியூ ஜெர்ஸியில் நாங்கள் சேவைசெய்தோம். பிறகு நியு யார்க்கிற்கு அனுப்பப்பட்டோம்.
1946-ல் மேரிலாந்திலுள்ள பால்டிமோரில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்குச் சென்றிருந்தோம்; அப்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷப் பிரதிநிதிகளைப் போய்ப் பார்க்கும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. அங்கு நேதன் ஹெச். நாரையும் மில்டன் ஜி. ஹென்ஷலையும் சந்தித்தோம். அவர்கள், மிஷனரி ஊழியத்தைப் பற்றியும், முக்கியமாய் இத்தாலியில் பிரசங்க வேலை செய்வதைப் பற்றியும் எங்களிடம் பேசினார்கள். உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும்படியும் எங்களிடம் சொன்னார்கள்.
“நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்,” என்று எங்களிடம் சொன்னார்கள். அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தபின் சார்ல்ஸும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம், பிறகு திரும்பி உள்ளே சென்று, “யோசித்துவிட்டோம், நாங்கள் கிலியட்டுக்கு ரெடி” என்று பதில் அளித்தோம். பத்து நாட்களுக்குப்பின், கிலியட்டின் ஏழாவது வகுப்பில் கலந்துகொண்டோம்.
நாங்கள் பயிற்சிபெற்ற அந்த மாதங்களை மறக்கவே முடியாது. அங்கு எங்களை முக்கியமாய்க் கவர்ந்தது பயிற்சியாளர்களின் பொறுமையும் அன்பும்தான். அந்நிய நாட்டில் கஷ்டங்களை எதிர்ப்படுவதற்கு அவர்கள் எங்களைத் தயார்படுத்தினார்கள். ஜூலை 1946-ல் பட்டம் பெற்ற பிறகு, நியு யார்க் நகரில், இத்தாலியர் அதிகம் குடியிருந்த பகுதியில் சிறிது காலம் பிரசங்கிப்பதற்காக நியமிக்கப்பட்டோம். பின்பு பெருமகிழ்ச்சி அளித்த அந்த நாள் வந்தது! ஜூன் 25, 1947-ல், மிஷனரி நியமிப்பைப் பெற்று இத்தாலிக்குப் புறப்பட்டோம்.
ஊழிய வேலையில்
முன்பு இராணுவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கப்பலில் பயணித்தோம். கடலில் 14 நாட்கள் பயணித்த பின், இத்தாலிய துறைமுகமான ஜினோவாவை அடைந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்துமுடிந்திருந்த இரண்டாம் உலகப் போரினால் அந்த நகரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்கூடாகக் காண முடிந்தது; உதாரணமாக, குண்டுவீச்சுகளின் காரணமாக ரயில்வே ஸ்டேஷன் ஜன்னல்களில் கண்ணாடிகளே இருக்கவில்லை. ஜினோவாவிலிருந்து மிலானுக்கு சரக்கு ரயிலில் சென்றோம்; அங்குதான் கிளை அலுவலகமும் மிஷனரி இல்லமும் இருந்தது.
போருக்குப் பின் இத்தாலியில் நிலைமை வெகு மோசமாக இருந்தது. மறுகட்டுமானப் பணிகள் நடைபெற்றன, ஆனாலும், வறுமை தலைவிரித்தாடியது. சீக்கிரத்திலேயே ஒரு மோசமான நோய் என்னைத் தாக்கியது. என்னுடைய இருதயத்தில் பயங்கர கோளாறு இருப்பதாக ஒரு டாக்டர் கணித்ததால், நான் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்வதுதான் நல்லதென அவர் நினைப்பதாக என்னிடம் சொன்னார். அவருடைய பரிசோதனை தவறு என்பதை அறிந்து மன மகிழ்கிறேன். 58 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட இன்னமும் இத்தாலியில்தான் ஊழியம் செய்துகொண்டிருக்கிறேன்.
எங்களுடைய ஊழியத்தை ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆகியிருந்த சமயத்தில், அமெரிக்காவிலிருந்த என் தம்பிமார் எங்களுக்கு ஒரு காரை வாங்கித்தர விரும்பினார்கள். ஆனால் சார்ல்ஸ் அதை வேண்டாமென்று தயவோடு சொல்லிவிட்டார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு நல்லதாகவே பட்டது. ஏனென்றால், எங்களுக்குத் தெரிந்தவரை இத்தாலியில் யெகோவாவின் சாட்சிகள் யாருமே அப்போது கார் வைத்திருக்கவில்லை. அங்கிருந்த கிறிஸ்தவ சகோதரர்களுடைய வாழ்க்கையைப் போலவே எங்களுடைய வாழ்க்கையும் இருக்க வேண்டுமென சார்ல்ஸ் நினைத்தார். பல வருடங்களுக்குப் பிறகு 1961-ல்தான் ஒரு சிறிய காரை வாங்கினோம்.
மிலானில் ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்தது எங்களுடைய முதல் ராஜ்ய மன்றம்; அதற்கு மண் தரையே இருந்தது. பாத்ரூம் இருக்கவில்லை, மழை பெய்து தரையில் ஓடும் தண்ணீரைத் தவிர வேறெந்த குழாய்த் தண்ணீரும் இருக்கவில்லை. இங்கும் அங்குமாக சுண்டெலிகளும் ஓடித்திரிந்தன. கூட்டத்தின்போது வெளிச்சத்திற்காக இரண்டு பல்புகள் போடப்பட்டிருந்தன. இத்தனை அசௌகரியங்கள் மத்தியிலும், நல்மனமுள்ளவர்கள் கூட்டங்களுக்கு வந்ததையும் பிற்பாடு ஊழியத்தில் கலந்துகொண்டதையும் பார்த்தது எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது.
மிஷனரி அனுபவங்கள்
ஒருசமயம், சமாதானம்—அது நிலைத்திருக்குமா? (ஆங்கிலம்) என்ற ஒரு சிறு புத்தகத்தை ஒருவரிடம் கொடுத்தோம். நாங்கள் அந்த வீட்டிலிருந்து கிளம்பிய சமயம்பார்த்து, பை பையாக நிறைய சாமானங்களுடன் அவருடைய மனைவி சான்டினா அங்கு வந்து சேர்ந்தாள். எங்களைப் பார்த்ததும் சற்று எரிச்சலுடன், ‘எனக்கு எட்டு மகள்கள், தலைக்கு மேல் வேலையிருக்கு, உங்களோடு பேசுவதற்கெல்லாம் நேரம் கிடையாது’ என்று சொன்னாள். சான்டினாவை நான் மறுபடியும் சந்தித்தபோது, அவளுடைய கணவர் வீட்டில் இல்லை, அவள் ஸ்வெட்டர் பின்னிக்கொண்டிருந்தாள். “நீங்க சொல்றத கேட்க எனக்கு இப்போ நேரமில்ல, முதலாவது எனக்கு வாசிக்கவே தெரியாது” என்றாள்.
நான் மௌனமாக யெகோவாவிடம் ஜெபித்துவிட்டு, ‘பணம் கொடுக்கிறேன், என் கணவருக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னித் தருவீங்களா’ என்று கேட்டேன். இரண்டு வாரங்களுக்குப் பின், எனக்கு அந்த ஸ்வெட்டர் கிடைத்தது; அதன் பிறகு “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து சான்டினாவுக்கு பைபிள் படிப்பைத் தவறாமல் நடத்தத் தொடங்கினேன். சான்டினா வாசிக்கக் கற்றுக்கொண்டாள், தன் கணவருடைய எதிர்ப்பின் மத்தியிலும், தொடர்ந்து படித்து முழுக்காட்டுதலும் பெற்றாள். அவளுடைய மகள்களில் ஐந்து பேர் யெகோவாவின் சாட்சிகள் ஆனார்கள். பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு வேறு பலருக்கும்கூட சான்டினா உதவியிருக்கிறாள்.
மார்ச் 1951-ல், யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லாதிருந்த பிரெஷ்ஷா என்ற இடத்திற்கு மாற்றப்பட்டோம்; எங்களுடன் இரண்டு மிஷனரி சகோதரிகளும் வந்தார்கள். அவர்களில் ஒருவர் ரூத் கேனன்,b மற்றவர் லாயிஸ் கேலஹன், இந்தச் சகோதரி பிற்பாடு பில் வங்கெர்ட் என்பவரை மணம் செய்தார். பிரெஷ்ஷாவில் அனைத்து வசதிகளுடன் எங்களுக்கு ஒரு வீடு கிடைத்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதன் சொந்தக்காரர் வந்து 24 மணி நேரத்திற்குள் வீட்டைக் காலிசெய்யும்படி சொன்னார். அந்த ஏரியாவில் யெகோவாவின் சாட்சிகள் யாரும் இல்லாததால் வேறு வழியின்றி ஒரு ஹோட்டலில் கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தங்கியிருந்தோம்.
எங்களுடைய சாப்பாடு ரொம்ப ஸிம்ப்பிளாக இருந்தது; காலை: பிரெட், காபி; மதியம்: பழங்கள், பிரெட், சீஸ்; இரவு: அதேதான். இந்தக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் நாங்கள் சந்தோஷமாயும் திருப்தியாயும் இருந்தோம். பிற்பாடு, ஒரு சிறிய வீடு கிடைத்தது, 1952-ல் கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு, ராஜ்ய மன்றமாக நாங்கள் பயன்படுத்திய சிறிய அறையில் 35 பேர் கூடிவந்திருந்தார்கள்.
சவால்களைச் சமாளித்தல்
அந்தச் சமயத்தில் மத குருமார், ஜனங்கள்மீது இன்னும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தார்கள். உதாரணமாக, பிரெஷ்ஷாவில் நாங்கள் பிரசங்கித்துக்கொண்டிருந்தபோது, எங்கள்மீது கல் எறியும்படி சில பையன்களை பாதிரியார் தூண்டிவிட்டார். என்றாலும், காலப்போக்கில் 16 பேர் எங்களுடன் பைபிள் படிக்கத் தொடங்கினார்கள், கொஞ்ச காலத்திற்குள் அவர்களும் சாட்சிகளானார்கள். அவர்களில் ஒருவர் யார் தெரியுமா? எங்கள்மீது கல் எறியப்போவதாக மிரட்டிய பையன்களில் ஒருவன்! இப்போது அவர், பிரெஷ்ஷாவில் இருக்கும் ஒரு சபையில் மூப்பராகச் சேவைசெய்கிறார். 1955-ல் பிரெஷ்ஷாவை விட்டு நாங்கள் வந்த சமயத்தில், அங்கு 40 ராஜ்ய பிரஸ்தாபிகள் பிரசங்க வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள்.
அதன் பிறகு லேக்ஹார்னில் (லிவார்னோ) மூன்று வருடம் சேவைசெய்தோம், அங்கு சாட்சிகளாக இருந்த பெரும்பாலோர் பெண்களே. அதனால், பொதுவாக சபையில் சகோதரருக்குக் கொடுக்கப்படும் பொறுப்புகளைச் சகோதரிகளாகிய நாங்கள் கவனிக்க வேண்டியிருந்தது. அடுத்து, ஜினோவாவுக்கு மாறிச் சென்றோம். 11 வருடத்திற்கு முன் நாங்கள் ஊழியம் செய்யத் தொடங்கின இடம் அது. இப்போது, அங்கே ஒரு சபை இருந்தது. நாங்கள் குடியிருந்த அந்தக் கட்டிடத்தின் முதல் மாடியில் ராஜ்ய மன்றம் இருந்தது.
ஜினோவாவில் நாங்கள் வந்து சேர்ந்தவுடன், ஒரு பெண்ணுக்கு நான் பைபிள் படிப்பு ஆரம்பித்தேன், அவளுடைய கணவர் முன்னாள் குத்துச்சண்டை வீரனாகவும், குத்துச்சண்டை உடற்பயிற்சி பள்ளியின் மானேஜராகவும் இருந்தார். ஆன்மீக ரீதியில் அவள் நன்கு முன்னேறி, விரைவில் ஒரு கிறிஸ்தவ சகோதரியானாள். ஆனால், அவளுடைய கணவர் சத்தியத்தை எதிர்த்தார், ரொம்ப காலத்திற்கு அப்படியே எதிர்ப்பு காட்டிவந்தார். பிற்பாடு, தன் மனைவியுடன் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார். மன்றத்திற்குள் வராமல், வெளியில் உட்கார்ந்து கவனித்தார். ஜினோவாவை விட்டு நாங்கள் வந்த பிறகு, தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி அவர் கேட்டுக்கொண்டதாக எங்களுக்குத் தெரியவந்தது. பின்பு, அவர் முழுக்காட்டுதல் பெற்று அன்புள்ள ஒரு கிறிஸ்தவ கண்காணியானார். மரிக்கும்வரையில் அவர் உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார்.
போலீஸ்காரர் ஒருவருக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்தினேன். ஆரம்பத்தில் அந்தப் போலீஸ்காரர் கொஞ்சம் ஆர்வம் காட்டினார், ஆனால், கல்யாணத்திற்குப் பிறகு ஆளே மாறிவிட்டார். அவளை எதிர்க்க ஆரம்பித்தார், அதனால் அவள் படிப்பை நிறுத்திவிட்டாள். பிற்பாடு மீண்டும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, எங்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுபோடப்போவதாக மிரட்டினார். அவளோ ஆன்மீக ரீதியில் முன்னேறி, முழுக்காட்டுதல் பெற்று, ஒரு சாட்சியாக ஆனாள். எங்களை அவர் சுடவும் இல்லை, ஒன்றுமில்லை. பல வருடங்களுக்குப்பின், ஜினோவாவில் ஒரு மாநாட்டுக்கு நான் சென்றிருந்தபோது, ஒருவர் பின்னால் வந்து என் கண்களைப் பொத்தி, தான் யார் என்று சொல்லும்படி கேட்டார். என் கண்ணைப் பொத்தியது அந்தப் பெண்ணின் கணவர்! எனக்கு அழுகையே வந்துவிட்டது. என்னை அரவணைத்தப்பின், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக அன்றுதான் முழுக்காட்டுதல் பெற்றதாகக் கூறினார்!
1964-லிருந்து 1972 வரை, என் கணவர் சார்ல்ஸ் பல சபைகளுக்குச் சென்று சபையாரை ஆன்மீக ரீதியில் பலப்படுத்தினார்; அப்போது நானும் அவரோடு செல்லும் பாக்கியம் பெற்றேன். பீட்மான்ட், லம்பார்டி மற்றும் லகுரியா என ஏறக்குறைய வட இத்தாலி முழுவதிலும் இருந்த சபைகளைச் சந்தித்தோம். பிறகு மீண்டும் பயனியர் சேவையை ஆரம்பித்து, பிளாரன்ஸ் என்ற இடத்திற்கு அருகிலும் பிற்பாடு, வெர்செலியிலும் ஊழியம் செய்தோம். 1977-ல் வெர்செலியில் ஒரேயொரு சபை மட்டுமே இருந்தது, 1999-ல் நாங்கள் அங்கிருந்து வந்தபோது, மூன்று சபைகள் இருந்தன. அப்போது எனக்கு வயது 91. அதனால் ரோமில் உள்ள மிஷனரி இல்லத்திற்குச் செல்லும்படி எங்களிடம் சொல்லப்பட்டது. ஓரளவு அமைதியான இடத்தில் அந்த அழகிய இல்லம் அமைந்திருந்தது.
மற்றொரு சோக சம்பவம்
நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருந்த சார்ல்ஸ் மார்ச் 2002-ல் திடீரென்று நோயுற்றார். கொஞ்சம் கொஞ்சமாகப் பலவீனமடைந்து கடைசியில் மே 11, 2002-ல் கண்ணை மூடினார். எங்களுடைய 71 வருட மண வாழ்வில், சுக துக்கங்களைப் பகிர்ந்து வாழ்ந்தோம். அவருடைய மரணம் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத மாபெரும் இழப்பாக இருந்தது.
சார்ல்ஸை கோட்-சூட்டுடனும், 1930-களில் பிரபலமாயிருந்த தொப்பியுடனும் அடிக்கடி கற்பனை செய்து பார்க்கிறேன். புன்முறுவல் பூக்கும் அவருடைய முகம் சிலசமயம் என் மனக்கண்ணில் தோன்றுகிறது; சிலசமயம், அவருடைய சிரிப்புச் சத்தம் என் காதுகளில் ஒலிப்பதுபோல் இருக்கிறது. யெகோவாவுடைய உதவியும் அருமையான கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பலருடைய அன்பும், சோகத்தில் சகித்திருக்க எனக்குத் துணைபுரிந்திருக்கிறது. சார்ல்ஸை திரும்பவும் பார்க்கப்போகும் காலத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறேன்.
என் ஊழியத்தைத் தொடருகிறேன்
என் சிருஷ்டிகருக்குச் சேவைசெய்வதே எனக்கு மிகவும் அருமையான விஷயம். ‘யெகோவா நல்லவர் என்பதை’ அவருக்குச் சேவைசெய்த இத்தனை வருடங்களில் ‘நான் ருசித்துப் பார்த்திருக்கிறேன்.’ (சங்கீதம் 34:8) அவருடைய அன்பை நான் உணர்ந்திருக்கிறேன் அவருடைய கவனிப்பை அனுபவித்திருக்கிறேன். என் குழந்தையை நான் இழந்தபோதிலும் இத்தாலி எங்கும் அநேக ஆன்மீக மகன்களையும் மகள்களையும் யெகோவா எனக்குத் தந்திருக்கிறார். அவர்கள் என்னுடைய இருதயத்தையும் கடவுளுடைய இருதயத்தையும் சந்தோஷப்படுத்தியிருக்கிறார்கள்.
என் சிருஷ்டிகரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதே, எப்பொழுதும் எனக்குப் பிடித்தமான விஷயம். அதனால்தான், தொடர்ந்து பிரசங்க ஊழியம் செய்கிறேன், பைபிள் படிப்புகளையும் நடத்தி வருகிறேன். உடல்நிலை காரணமாக என்னால் அதிகம் செய்ய முடியவில்லையே என நினைத்து சில சமயங்களில் கவலைப்படுகிறேன். இருந்தாலும், என்னுடைய வரம்புகளை யெகோவா அறிந்திருக்கிறார் என்று எனக்குத் தெரியும், அவர் என்னை நேசிப்பதையும், நான் செய்கிற கொஞ்ச சேவையை அவர் பெரிதாக மதிப்பதையும் என்னால் உணர முடிகிறது. (மாற்கு 12:42) சங்கீதம் 146:2-லுள்ள வார்த்தைகளின்படி வாழ பிரயாசப்படுகிறேன்: ‘நான் உயிரோடிருக்குமட்டும் யெகோவாவைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் தேவனைக் கீர்த்தம்பண்ணுவேன்.’c
[அடிக்குறிப்புகள்]
a என் தம்பி ஆஞ்சேலோ காட்டான்ட்ஸாரோவின் அனுபவம், ஏப்ரல் 1, 1975, காவற்கோபுரம் (ஆங்கிலம்) பக்கங்கள் 205-7-ல் வெளிவந்துள்ளது.
b இவருடைய வாழ்க்கை சரிதையை ஆங்கில காவற்கோபுரம், மே 1, 1971, பக்கங்கள் 277-80-ல் காண்க.
c ஜூலை 16, 2005-ல், இக்கட்டுரை தயாரிக்கப்படுகையிலேயே சகோதரி பெனான்டி காலமானார். அவரது வயது 96.
[பக்கம் 13-ன் படம்]
காமில்
[பக்கம் 14-ன் படம்]
1931-ல், எங்கள் திருமண நாளன்று
[பக்கம் 14-ன் படம்]
முதலில் விருப்பம் காட்டாமலிருந்த அம்மா, பிற்பாடு நாங்கள் எல்லாருமே பைபிளைப் படிக்க ஒப்புக்கொண்டார்கள்
[பக்கம் 15-ன் படம்]
1946-ல் கிலியட் பட்டமளிப்பு விழாவின்போது சகோதரர் நாருடன்
[பக்கம் 17-ன் படம்]
சார்ல்ஸுடன், அவர் மரிப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு