வாழ்க்கை சரிதை
உலகளாவிய பைபிள் கல்வி புகட்டும் வேலையில் பங்குகொண்டதில் ஆனந்தம்
ஆனா மாதேயாகீஸ் சொன்னபடி
நான் பயணம் செய்துகொண்டிருந்த கப்பல் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. 171 மீட்டர் நீளமுள்ள அந்தக் கப்பல் மூழ்கினால், அதனுடன் சேர்ந்து நானும் தண்ணீருக்குள் சமாதியாகி விடுவேன். எனவே, வெகுண்டெழுந்த அலைகளோடு போராடி பாதுகாப்பான இடத்தை நோக்கி வெறித்தனமாய் நீந்தினேன். மூழ்கிவிடாதிருக்க எனக்கிருந்த ஒரே வழி, இன்னொரு பெண் அணிந்திருந்த மிதவையைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வதுதான். பலத்தையும் தைரியத்தையும் தரும்படி கடவுளிடம் ஜெபித்தேன். ஆம், அதை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது.
இது நடந்தது 1971-ல். அந்தச் சமயத்தில் நான் இத்தாலிக்குத் திரும்பிப் போய் கொண்டிருந்தேன்; என் மிஷனரி ஊழியத்தில் எனக்கு நியமிக்கப்பட்ட மூன்றாவது இடம் அது. அந்தக் கப்பல் சேதமடைந்தபோது கிட்டத்தட்ட என்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஆனாலும், மிக முக்கியமானவற்றை இழக்கவில்லை. ஆம், என் உயிரை இழக்கவில்லை, அன்பான கிறிஸ்தவ கூட்டுறவை இழக்கவில்லை, யெகோவாவுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தை இழக்கவில்லை. அதனால்தான் மூன்று கண்டங்களில் என்னால் ஊழியம் செய்ய முடிந்தது. எத்தனை எத்தனையோ துயரங்களைச் சந்தித்திருக்கிறேன், அவற்றுள் இந்தக் கப்பற்சேதமும் ஒன்று.
நான் 1922-ல் பிறந்தேன். ஜெருசலேமுக்கு வடக்கே சுமார் 16 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ராமல்லா என்ற இடத்தில் என் குடும்பத்தார் வசித்து வந்தார்கள். என் அம்மா அப்பா கிரீட் தீவைச் சேர்ந்தவர்கள், ஆனால் அப்பா வளர்ந்ததெல்லாம் நாசரேத்தில்தான். எங்கள் குடும்பத்தில் மூன்று பையன்கள் இரண்டு பெண்கள், அதில் நான்தான் கடைக்குட்டி. என்னுடைய இரண்டாவது அண்ணன் ஸ்கூல் பிக்னிக்கின்போது ஜோர்டான் நதியில் மூழ்கி இறந்துபோனான்; அப்போது என் குடும்பமே துக்கத்தில் நொறுங்கிப் போனது. அந்தத் துயர சம்பவத்திற்குப் பிறகு ராமல்லாவில் இருக்க என் அம்மாவுக்குத் துளிகூட விருப்பமில்லாமல் போனது, எனவே நாங்கள் கிரீஸிலுள்ள ஏதன்ஸுக்குக் குடிமாறினோம், அப்போது எனக்கு மூன்று வயது.
என் குடும்பத்தார் சத்தியத்தை அறிந்துகொள்கிறார்கள்
கிரீஸுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே, என் மூத்த அண்ணன் நிகாஸுக்கு பைபிள் மாணாக்கர்களோடு பழக்கம் ஏற்பட்டது; யெகோவாவின் சாட்சிகள் முன்பு அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். அப்போது என் அண்ணனுக்கு 22 வயது. பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்டு வந்தது அவருக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது, கிறிஸ்தவ ஊழியத்தில் ஈடுபட வேண்டுமென்ற கட்டுக்கடங்காத ஆசையையும் எழுப்பியது. இதைப் பார்த்து அப்பா கோபத்தில் கொதித்தெழுந்தார், அண்ணனை வீட்டை விட்டே துரத்தினார். ஆனால் அப்பா பாலஸ்தீனாவுக்குப் போகும்போதெல்லாம் அம்மாவும், அக்காவும் நானும் அண்ணனோடு கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போனோம். அந்தக் கூட்டங்களிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை அம்மா உற்சாகம் பொங்க பேசிய காட்சி இன்னும் என் மனத்திரையில் ஓடுகிறது. கொஞ்ச நாளுக்குள்ளாக அம்மாவுக்குப் புற்றுநோய் வந்தது, 42 வயதிலேயே இறந்துபோனார். அந்தக் கஷ்ட காலத்தில் என் அக்கா அரியாட்னிதான் குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக் கொண்டார். அந்தச் சின்ன வயதிலும் அம்மாவைப் போலிருந்து என்னை எத்தனையோ வருடங்களுக்குப் பார்த்துக் கொண்டார்.
அப்பா ஏதன்ஸில் இருந்த சமயங்களில் தவறாமல் என்னை ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு அழைத்துப் போனார், அவர் இறந்த பிறகு அவ்வப்போது சர்ச்சுக்குப் போய் வந்தேன். அங்கு வந்து போகிறவர்களிடம் கொஞ்சங்கூட கடவுள் பக்தி இல்லாததைப் பார்த்தபோது சர்ச் பக்கம் போவதையே நிறுத்திக்கொண்டேன்.
அப்பா இறந்த பிறகு நிதி அமைச்சகத்தில் எனக்கு நிரந்தர வேலை கிடைத்தது. என் அண்ணனோ தன் வாழ்க்கையை ராஜ்ய பிரசங்க வேலையில் அர்ப்பணித்தார், கிரீஸில் பல வருடங்கள் ஊழியம் செய்தார். 1934-ல் சைப்ரஸுக்குக் குடிமாறிச் சென்றார். அந்தச் சமயத்தில் சைப்ரஸில் முழுக்காட்டப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் யாருமே இல்லாததால், பிரசங்க வேலையை அங்கு முன்னேற்றுவிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். திருமணத்திற்குப் பிறகு, அவருடைய மனைவி காலாடியாவும் அவருடன் சேர்ந்து அநேக வருடங்கள் முழுநேர ஊழியம் செய்தார்.a எங்களுக்கு பைபிள் பிரசுரங்களையும் பத்திரிகைகளையும் அடிக்கடி அனுப்பி வைத்தார், ஆனால் நாங்கள் அதைத் திறந்துகூட பார்க்கவில்லை. இறக்கும்வரை அவர் அங்கேயே இருந்தார்.
பைபிள் சத்தியத்தை மனதார ஏற்றுக்கொள்ளுதல்
1940-ல் ஜார்ஜ் டூராஸ் என்பவர் எங்களை வந்து சந்தித்தார். இவர் ஏதன்ஸில் வைராக்கியத்துடன் ஊழியம் செய்து வந்த ஒரு யெகோவாவின் சாட்சி, என் அண்ணனின் நண்பரும்கூட. சிறு தொகுதியாக அவருடைய வீட்டிலே நடைபெற்ற பைபிள் படிப்பில் எங்களையும் வந்து கலந்துகொள்ளும்படி அழைத்தார். நாங்களும் சந்தோஷமாகப் போனோம். கற்றுக்கொண்ட காரியங்களை சீக்கிரத்திலேயே நாங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல ஆரம்பித்தோம். பைபிளிலிருந்து அருமையான விஷயங்களைக் கற்றுக்கொண்டதால், நானும் அக்காவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கத் தூண்டப்பட்டோம். 1942-ல் அக்காவும், 1943-ல் நானும் முழுக்காட்டுதல் பெற்றோம்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தபோது சைப்ரஸுக்கு வரும்படி அண்ணன் அழைத்தார், எனவே 1945-ல் நாங்கள் நிகோசியா என்ற இடத்திற்குக் குடிமாறிச் சென்றோம். கிரீஸைப் போல் சைப்ரஸில் பிரசங்க ஊழியம் தடை செய்யப்பட்டிருக்கவில்லை. அதனால் நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மட்டுமல்ல, தெரு ஊழியத்திலும் கலந்துகொண்டோம்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, கிரீஸுக்கு அக்கா திரும்பிப் போக வேண்டி வந்தது. அங்கு அவர் தன் வருங்கால கணவரைச் சந்தித்தார்; அவரும் ஒரு யெகோவாவின் சாட்சி. எனவே அக்கா அங்கேயே தங்கிவிட்டார். அதன்பின் சீக்கிரத்திலேயே, கிரீஸின் தலைநகருக்கு வந்து அங்கு முழுநேர ஊழியம் செய்யும்படி அக்காவும் அவருடைய கணவரும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். பயனியர் ஊழியம் செய்ய வேண்டுமென்ற இலக்கு என் மனதில் இருந்து வந்ததால் ஏதன்ஸுக்குத் திரும்பினேன், அங்கு பிரசங்க ஊழியர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.
வாய்ப்பெனும் புதிய கதவுகள் திறக்கின்றன
1947, நவம்பர் 1-ம் தேதி பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன், ஒவ்வொரு மாதமும் 150 மணிநேரம் ஊழியத்தில் செலவிட்டேன். எங்களுடைய சபை பிராந்தியம் மிகப் பெரியது, கால் கடுக்க நடக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அநேக ஆசீர்வாதங்களைப் பெற்றேன். யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க ஊழியத்திலோ கிறிஸ்தவக் கூட்டங்களிலோ கலந்துகொள்வதைப் பார்த்தபோதெல்லாம் அவர்களைப் போலீஸார் கைது செய்தார்கள், சீக்கிரத்தில் என்னையும் கைது செய்தார்கள்.
மற்றவர்களை மதம் மாற்றுவதாக என்மீது குற்றம் சுமத்தினார்கள்; அதுவொரு பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. ஏதன்ஸிலிருந்த ஆவெராஃப் மகளிர் சிறைச்சாலையில் இரண்டு மாத சிறை தண்டனை பெற்றேன். ஏற்கெனவே அங்கு இன்னொரு கிறிஸ்தவ சகோதரியும் தண்டனை அனுபவித்து வந்தார், சிறையில் தள்ளப்பட்ட போதிலும் நாங்கள் இருவருமே சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தோம். தண்டனை காலம் முடிந்த பிறகு, பயனியர் ஊழியத்தை மீண்டும் சந்தோஷமாகச் செய்ய ஆரம்பித்தேன். அப்போது பைபிளைக் கற்றுக்கொள்ள நான் நிறைய பேருக்கு உதவினேன், அவர்களில் அநேகர் இன்னமும் யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக இருக்கிறார்கள், இது எனக்கு அளவிலா ஆனந்தத்தை அளிக்கிறது.
1949-ல், அமெரிக்காவிலுள்ள உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 16-ம் வகுப்பில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டேன்; மிஷனரி ஊழியத்தில் ஈடுபட முழுநேர ஊழியர்களுக்கு இப்பள்ளி பயிற்சி அளிக்கிறது. இந்த அழைப்பு கிடைத்தபோது எனக்கும் என் உறவினர்களுக்கும் ஒரே சந்தோஷம். 1950-ன் கோடை காலத்தின்போது நியு யார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு கிலியட் செல்ல திட்டமிட்டேன்.
அமெரிக்காவுக்குப் போய்ச் சேர்ந்ததும் நியு யார்க் நகரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமையகத்தில் சில மாதங்கள் ஹௌஸ்கீப்பராக, அறைகளைச் சுத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. எல்லா இடமும் பார்க்க பளிச்சென இருந்தது, கண்ணுக்கு விருந்தளித்தது, புத்துணர்ச்சியூட்டியது; எல்லா சகோதர சகோதரிகளும் சிரித்த முகத்துடன் இருந்தார்கள். அங்கு செலவிட்ட அந்த ஆறு மாதங்களை இப்போதும் ஆசை ஆசையாக எண்ணிப் பார்ப்பதுண்டு. அடுத்து கிலியட் பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் வந்தது; ஐந்து மாதம் நடைபெற்ற அப்பள்ளியில் சிறந்த போதனை அளிக்கப்பட்டதோடு கண்ணும் கருத்துமாகப் படிக்கவும் வேண்டியிருந்தது; அந்த நாட்கள் வெகு வேகமாக உருண்டோடின. பைபிளிலுள்ள சத்தியங்கள் எவ்வளவு மதிப்புமிக்கவை, எவ்வளவு அழகானவை என்பதை மாணாக்கர்களாகிய நாங்கள் புரிந்துகொண்டோம்; இது எங்கள் சந்தோஷத்தை அதிகரித்தது, உயிர்காக்கும் இந்தச் சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டுமென்ற ஆசையையும் அதிகரித்தது.
மிஷனரி ஊழியத்தில் என் முதல் நியமிப்பு
கிலியட் பள்ளியில் எங்கள் மிஷனரி நியமிப்பைப் பெறுவதற்கு முன் எங்கள் பயனியர் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டோம். ரூத் ஹெம்மிக் (தற்போது ரூத் பாஸ்ஹார்ட்) என்ற அருமையான சகோதரியை என் பார்ட்னராகத் தேர்ந்தெடுத்தேன். துருக்கியிலுள்ள இஸ்தான்புல் சென்று ஊழியம் செய்ய நாங்கள் இருவரும் நியமிப்பைப் பெற்றபோது சந்தோஷம் தாங்க முடியவில்லை! இந்த இடம் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடைப்பட்ட நாற்சந்தியில், அதாவது முக்கிய பகுதியில், அமைந்திருக்கிறது. அந்த நாட்டில் பிரசங்க வேலைக்குச் சட்டபடி அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், இருப்பினும் யெகோவா எங்களை ஆதரிப்பார் என்பதில் எள்ளளவும் எங்களுக்குச் சந்தேகமிருக்கவில்லை.
இஸ்தான்புல் ஓர் அழகிய மாநகரமாகும். அங்கிருந்த கடைத் தெருக்களில் வியாபாரம் சக்கைபோடு போட்டது, உலகெங்கும் கிடைக்கும் ருசியான பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் அங்கு கிடைத்தன, ஆர்வமூட்டும் அருங்காட்சியகங்கள் இருந்தன, ரம்மியமான சுற்றுப்புறங்கள் காணப்பட்டன; இவை எல்லாமே மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்திருந்தன. இதையெல்லாம்விட முக்கியமாக, கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டும் உண்மையுள்ள ஆட்கள் அங்கு இருந்தார்கள். இஸ்தான்புல்லில் யெகோவாவின் சாட்சிகள் கொஞ்சம் பேரே இருந்தார்கள்; அவர்களில் பெரும்பாலோர் ஆர்மீனியர்கள், கிரேக்கர்கள், யூதர்கள். ஆனாலும் வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் இருந்தார்கள்; துருக்கி மொழி உட்பட வெவ்வேறு மொழிகளைக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள அது பெரிதும் உதவியது. சத்தியத்தின் தண்ணீருக்காகத் தவித்துக்கொண்டிருந்த பற்பல நாட்டவர்களைச் சந்தித்தது எங்களுக்குப் பரம திருப்தியைத் தந்தது. அவர்களில் பலர் இன்னமும் யெகோவாவுக்கு உண்மையுடன் சேவை செய்து வருகிறார்கள்.
வருத்தகரமாக, அந்நாட்டில் தொடர்ந்து தங்குவதற்கு ரூத்துக்கு அனுமதி கிடைக்காததால் அவள் அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அவள் இப்போது சுவிட்சர்லாந்தில் முழுநேர ஊழியம் செய்து வருகிறாள். இத்தனை வருடங்களுக்குப் பிறகும்கூட அவளுடைய கனிவும் ஊக்கமும் நிறைந்த தோழமை இல்லாத குறையை உணருகிறேன்.
உலகின் மற்றொரு பகுதிக்குச் செல்லுதல்
1963-ல் துருக்கியில் தொடர்ந்து தங்குவதற்கான அனுமதி எனக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்த கிறிஸ்தவர்கள், பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் எதிர்நீச்சல் போட்டு ஆன்மீக ரீதியில் மெல்ல மெல்ல வளர்ந்ததைக் கண்ணாரப் பார்த்து வந்த எனக்கு அவர்களை விட்டுப் பிரிந்தது அதிக வேதனை அளித்தது. அதனால் என்னைச் சந்தோஷப்படுத்துவதற்காக, நியு யார்க்கில் நடைபெறவிருந்த மாநாட்டில் கலந்துகொள்ள என் உறவினர்கள் எனக்குப் பண உதவி அளித்தார்கள். அடுத்து ஊழியம் செய்ய எங்கு நியமிப்பார்கள் என எனக்குத் தெரியாதிருந்தது.
மாநாட்டிற்குப் பிறகு பெருவிலுள்ள லிமா என்ற இடத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். இப்போது என் பார்ட்னராக ஓர் இளம் சகோதரி வந்திருந்தாள்; இருவரும் நேராக நியு யார்க்கிலிருந்து புதிய இடத்தில் ஊழியம் செய்யச் சென்றோம். அங்கு ஸ்பானிய மொழியைக் கற்றுக்கொண்டேன், யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு மேல் மாடியில் அமைந்திருந்த மிஷனரி இல்லத்தில் வசித்து வந்தேன். அந்த நாட்டில் பிரசங்க ஊழியம் செய்ததும் உள்ளூர் சகோதர சகோதரிகளோடு பழகியதும் ஓர் இனிமையான அனுபவம்.
மற்றொரு நியமிப்பும் மற்றொரு மொழியும்
வருடங்கள் உருண்டோடுகையில், கிரீஸிலிருந்த என் உறவினர்கள் முதுமையின் பாதிப்புகளையும், உடல்நலப் பிரச்சினைகளையும் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் முழுநேர ஊழியத்தைவிட்டு விட்டு, எல்லாரையும் போல் வீட்டிலிருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்கள் ஒரு தடவைகூட கேட்கவில்லை. இருந்தாலும் ஜெப சிந்தையோடு, தெளிவாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்; என் வீட்டாருக்குப் பக்கத்திலேயே ஊழியம் செய்வது நல்லது என்ற முடிவுக்கு வந்தேன். பொறுப்பிலிருந்த சகோதரர்களும் அன்போடு என் முடிவை ஏற்றுக்கொண்டார்கள், இத்தாலியில் ஊழியம் செய்யும்படி நியமித்தார்கள்; இப்படி மாற்றலாகிச் செல்வதற்கு ஆன செலவை என் உறவினர்கள் ஏற்றுக்கொண்டார்கள். சொல்லப்போனால், இத்தாலியில் பிரசங்க ஊழியர்கள் அதிகம் தேவைப்பட்டார்கள்.
மீண்டும் ஒரு புதிய மொழியை, அதாவது இத்தாலிய மொழியை, நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் ஃபாக்கியா என்ற நகரத்தில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். பின்னர் ஊழியம் செய்வதற்குத் தேவை அதிகமிருந்த நேபிள்ஸ் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டேன். அங்கு போஸிலிபோ என்ற மிக அழகிய பிராந்தியத்தில் ஊழியம் செய்தேன். அந்தப் பிராந்தியம் மிகப் பெரியது, ஆனால் அங்கு ஒரேவொரு ராஜ்யப் பிரஸ்தாபி மட்டுமே இருந்தார். ஆனாலும் ஊழியத்தை ரொம்பவே அனுபவித்து மகிழ்ந்தேன், அநேக பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு யெகோவா எனக்கு உதவினார். காலப்போக்கில் அந்தப் பகுதியில் மிகப் பெரிய சபை ஒன்று உருவானது.
அங்கு முதன்முதலில் ஒரு தாய்க்கும் அவரது நான்கு பிள்ளைகளுக்கும் பைபிள் படிப்பு நடத்தினேன். அந்தத் தாயும் அவளுடைய இரண்டு மகள்களும் இன்னமும் சாட்சிகளாக சேவை செய்து வருகிறார்கள். இன்னொரு தம்பதியருக்கும் பைபிள் படிப்பு நடத்தினேன், அவர்களுக்கு ஒரு சின்னப் பெண் இருந்தாள். அவர்கள் எல்லாரும் சத்தியத்தில் முன்னேறி, முழுக்காட்டுதல் பெற்றார்கள். இப்போது அவர்களுடைய மகளுக்குத் திருமணமாகிவிட்டது, அவளும் அவளுடைய கணவரும் யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்து வருகிறார்கள். இன்னொரு பெரிய குடும்பத்துக்கும் பைபிள் படிப்பு நடத்தினேன், அப்போது கடவுளுடைய வார்த்தைக்கு இருக்கும் வல்லமையைக் கண்ணராக் கண்டு வியந்துபோனேன். சிலைகளைப் பயன்படுத்தி தம்மை வணங்குவதைக் கடவுள் விரும்புவதில்லை என்பதை நிரூபிக்கிற அநேக பைபிள் வசனங்களை வாசித்துக் காட்டியபோது, அவர்களுடைய அம்மா படிப்பு முடியும்வரைகூட காத்திருக்காமல், உடனடியாக வீட்டிலிருந்த எல்லாச் சிலைகளையும் அப்புறப்படுத்திவிட்டார்!
கடலில் எதிர்ப்பட்ட ஆபத்துகள்
இத்தாலியிலிருந்து கிரீஸுக்கு எப்போதுமே நான் கப்பலில்தான் சென்று வந்தேன். பொதுவாக இப்பயணம் ரம்மியமாக இருக்கும். ஆனால் ஒரு முறை 1971-ல் கோடையில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவமாகிவிட்டது. எலியானா என்ற கப்பலில் இத்தாலிக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஆகஸ்ட் 28-ம் தேதி விடியற்காலையில் கப்பலின் சமையலறையில் தீப்பிடித்துப் பரவ ஆரம்பித்தது, அதனால் பயணிகள் பீதியடைந்தார்கள். பெண்கள் மயங்கி விழுந்தார்கள், குழந்தைகள் அழத் தொடங்கினார்கள், ஆண்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் கண்டபடிக் கத்தினார்கள். கப்பல் தளத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் படகுகளை நோக்கி ஜனங்கள் ஓடினார்கள். ஆனால் ஒருசில மிதவைகளே அங்கிருந்தன, அதுமட்டுமல்ல, அவற்றைக் கடலிலே இறக்கிவிடும் இயந்திரமும் சரிவர வேலை செய்யவில்லை. மிதவை ஒன்றுகூட எனக்குக் கிடைக்கவில்லை, தீ ஜுவாலைகளோ கொழுந்துவிட்டு எரிந்தன; இந்தச் சமயத்தில் கடலில் குதிப்பதைத் தவிர வேறு எதுவும் புத்திசாலித்தனமாக எனக்குத் தோன்றவில்லை.
நீரில் குதித்ததும் எனக்குப் பக்கத்தில் மிதவையுடன் ஒரு பெண் மிதப்பதைப் பார்த்தேன். அவருக்கு நீந்தத் தெரியாதது போல் தெரிந்தது, எனவே மூழ்கிக்கொண்டிருக்கும் அந்தக் கப்பலுக்கு அப்பால் அவரது கையைப் பிடித்து இழுத்தேன். கடலின் கொந்தளிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது, மூழ்கிவிடாமல் மிதப்பதற்காகப் போராடி போராடி ரொம்பவே களைத்துப் போனேன். தப்பிப்பதற்கு வழியே இல்லாதது போல் தோன்றியது, ஆனால் யெகோவாவிடம் தைரியத்தைத் தரும்படி வேண்டிக்கொண்டே இருந்தேன், அப்படி ஜெபித்தது எனக்குப் பலத்தைத் தந்தது. அந்தச் சமயத்தில், அப்போஸ்தலன் பவுல் கப்பல் சேதத்திற்கு உள்ளான சம்பவம் என் நினைவுக்கு வந்தது.—அப்போஸ்தலர் 27-ம் அதிகாரம்.
அந்தப் பெண்ணையும் பிடித்துக்கொண்டு நான்கு மணிநேரம் அலைகளுடன் போராடிக் கொண்டிருந்தேன்; முடிந்தபோதெல்லாம் கொஞ்சம் நீந்தினேன், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிக்கவும் செய்தேன். ஒருவழியாக ஒரு சிறிய படகு நெருங்கி வருவதைப் பார்த்தேன். நான் காப்பற்றப்பட்டேன், ஆனால் அந்தப் பெண்ணோ ஏற்கெனவே இறந்து போயிருந்தாள். இத்தாலியிலுள்ள பாரி என்ற நகரத்தை அடைந்ததும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டேன், அங்கு எனக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. சில நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்க நேர்ந்தது, யெகோவாவின் சாட்சிகளில் பலர் என்னை வந்து பார்த்தார்கள், எனக்குத் தேவைப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்து அன்போடு உதவினார்கள். அவர்கள் காட்டிய கிறிஸ்தவ அன்பு அந்த ஆஸ்பத்திரி வார்டிலிருந்த மற்றவர்களின் நெஞ்சைத் தொட்டது.b
உடல்நிலை நன்கு தேறியதும் ரோமில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டேன். அந்நகரத்தின் மையப் பகுதியிலிருந்த வியாபாரப் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். யெகோவாவின் உதவியோடு அங்கு ஐந்து வருடங்கள் ஊழியம் செய்தேன். மொத்தம் 20 வருடங்கள் இத்தாலியில் சந்தோஷமாக ஊழியம் செய்தேன்; இத்தாலியர்கள் மீது எனக்குத் தனிப் பிரியம் ஏற்பட்டது.
தொடங்கிய இடத்திற்கே
காலப்போக்கில், அக்காவும் அவருடைய கணவரும், ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்பட்டதால் அவர்களது உடல்நிலை மோசமானது. அவர்கள் அன்பாக எனக்கு எத்தனையோ செய்திருந்தார்கள், அதற்குக் கைமாறாக, அவர்களுக்குப் பக்கத்திலேயே இருந்தால் ஏதோ என்னால் ஆனதைச் செய்ய முடியும் என நினைத்தேன். ஆனால் இத்தாலியைவிட்டு வரும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது. இருப்பினும், அங்கிருந்து செல்வதற்குச் சகோதரர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்; எனவே, 1985 கோடை காலத்திலிருந்து ஏதன்ஸில்தான் பயனியர் ஊழியம் செய்து வருகிறேன். 1947-ல் முதன்முதலில் என் முழுநேர ஊழியத்தைத் தொடங்கியது இங்குதான்.
என் சபைக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியத்தில் ஊழியம் செய்தேன், நகரத்தின் மையப் பகுதியிலிருந்த வியாபாரப் பிராந்தியத்தில் பிரசங்கிப்பதற்கும் கிளை அலுவலக சகோதரர்களிடம் அனுமதி கேட்டேன். பயனியர் செய்து வந்த வேறொரு சகோதரியோடு சேர்ந்து இந்தப் பிராந்தியத்தில் மூன்று வருடங்கள் ஊழியம் செய்தேன். வீட்டில் சந்திக்க முடியாத ஆட்களுக்கு எங்களால் முழுமையாகச் சாட்சி கொடுக்க முடிந்தது.
காலம் உருண்டோடுகையில், கடவுளுக்குச் சேவை செய்வதற்கான ஆசை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, ஆனால் என் உடல்நலம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இப்போது என் அக்காவின் கணவர் உயிரோடில்லை. அம்மாவைப் போலிருந்து என்னைக் கவனித்துக்கொண்ட அக்காவுக்குப் பார்வை மங்கிவிட்டது. நானோ, முழுநேர ஊழியம் செய்த காலங்களில் ஆரோக்கியமாக இருந்தேன். ஆனால் கொஞ்ச நாட்கள் முன்பு பளிங்கு மாடிப் படியிலிருந்து தவறிவிழுந்து, என் வலது கையை முறித்துக்கொண்டேன். திரும்பவும் ஒருமுறை விழுந்து என் இடுப்பெலும்பையும் முறித்துக்கொண்டேன். எனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது, ரொம்ப நாட்கள் நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்தேன். முன்பு போல் இப்போது நடமாட முடிவதில்லை. நடப்பதற்குக் கைத்தடியைப் பயன்படுத்துகிறேன், யாராவதுகூட இருந்தால் மட்டுமே வெளியே போகிறேன். இருந்தாலும் என்னால் முடிந்ததைச் செய்கிறேன், என் உடல்நிலை தேறுமென நம்பிக்கையுடன் இருக்கிறேன். பைபிள் கல்வி புகட்டும் வேலையில் ஓரளவாவது பங்குகொள்ள முடிந்தாலும் முக்கியமாய் அதுவே எனக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தொடர்ந்து அளித்து வருகிறது.
முழுநேர ஊழியத்தில் செலவழித்திருக்கிற அந்தச் சந்தோஷமான வருடங்களை நினைத்துப் பார்க்கையில் மனதில் யெகோவாவுக்கு நன்றி பெருக்கெடுக்கிறது. அவரிடமிருந்தும் அவருடைய பூமிக்குரிய அமைப்பிடமிருந்தும் நம்பகமான வழிநடத்துதலும் அருமையான உதவியும் எப்போதுமே எனக்குக் கிடைத்திருக்கின்றன; அதனால்தான் அவருக்குச் சேவை செய்த காலங்களில், என் திறமைகள் அனைத்தையும் என்னால் நன்கு பயன்படுத்திக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர் எனக்குப் போதுமான பலத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் உள்ளான ஆசை. அவர் வழிநடத்தி வரும் உலகளாவிய கல்வி புகட்டும் வேலையில் என்னாலும் ஏதோ கொஞ்சம் செய்ய முடிந்ததில் எனக்கு ஆனந்தமே.—மல்கியா 3:10.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1995-ல் (ஆங்கிலம்) பக்கங்கள் 73-89-ஐக் காண்க; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b கூடுதல் தகவலுக்கு, பிப்ரவரி 8, 1972 தேதியிட்ட ஆங்கில விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 12-16-ஐக் காண்க.
[பக்கம் 9-ன் படம்]
கிலியட்டுக்குப் போவதற்கு முன் அக்காவோடும் அவரது கணவர் மைகாலிஸோடும்
[பக்கம் 10-ன் படம்]
நானும் ரூத் ஹெம்மிக்கும் துருக்கியிலுள்ள இஸ்தான்புல்லுக்கு நியமிக்கப்பட்டோம்
[பக்கம் 11-ன் படம்]
1970-களின் ஆரம்பத்தில் இத்தாலியில்
[பக்கம் 12-ன் படம்]
இன்று என் அக்கா அரியாட்னியோடு