வாழ்க்கை சரிதை
சுகவீனத்தின் மத்தியிலும் சந்தோஷமான ஊழியம்
வர்னாவாஸ் ஸ்பெட்சியோடிஸ் சொன்னபடி
1990-ம் ஆண்டில் என் 68-வது வயதில் பக்கவாதத்தால் முற்றிலும் செயலிழந்து போனேன். இருந்தாலும், கடந்த 15 வருடங்களாக சைப்ரஸ் தீவில் முழுநேர ஊழியத்தை சந்தோஷமாக செய்து வருகிறேன். சுகவீனத்தின் மத்தியிலும் சுறுசுறுப்புடன் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய எனக்கு எங்கிருந்து அவ்வளவு பலம் கிடைத்தது?
அக்டோபர் 11, 1922-ல் நான் பிறந்தேன். எங்கள் குடும்பத்தில் மொத்தம் 9 பிள்ளைகள்; அதில், 4 பையன்கள், 5 பெண்கள். நாங்கள் சைப்ரஸ் தீவிலுள்ள க்சுலஃபாகு கிராமத்தில் வசித்து வந்தோம். எங்கள் பெற்றோர் ஓரளவு வசதியானவர்கள். ஆனாலும், எங்களுடைய பெரிய குடும்பத்தைக் கட்டிக்காக்க அவர்கள் வயலில் கடினமாக வேலை செய்தார்கள்.
என்னுடைய அப்பா பெயர் அன்டோனிஸ். அவர் ஒரு புத்தகப் புழு; எல்லாவற்றையும் துருவித் துருவி ஆராய்பவர். நான் பிறந்து கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, கிராமத்திலுள்ள பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்திக்க அப்பா சென்றிருந்தார். அங்கு, பைபிள் மாணாக்கரால் (இப்போது யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுகிறவர்களால்) பிரசுரிக்கப்பட்ட பீப்பிள்ஸ் புல்பிட் என்ற துண்டுப்பிரதியைப் பார்த்தார். உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்தார். அதில் சொல்லப்பட்டிருந்த விஷயங்களோடு அப்படியே ஒன்றிவிட்டார். படித்த விஷயங்கள் பிடித்திருந்ததால் அவரும், அவருடைய நண்பரான அன்த்ரேயாஸ் கிறிஸ்துவும் யெகோவாவின் சாட்சிகளை அணுகினர். அங்கு, சாட்சிகளுடன் முதன்முதலில் தொடர்பு கொண்டவர்கள் இவர்கள்தான்.
எதிர்ப்பின் மத்தியிலும் வளர்ச்சி
காலப்போக்கில், இவர்கள் இருவரும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து நிறைய பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டனர். அதன் பிறகு, தாங்கள் கற்றுக்கொண்டிருந்த பைபிள் சத்தியங்களைப் பற்றி கிராமத்திலிருந்த மற்றவர்களிடம் பேச தூண்டப்பட்டனர். இதனால், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பாதிரிகளிடமிருந்தும், சாட்சிகளைப் பற்றி மோசமான அபிப்பிராயத்தை வைத்திருந்த மற்றவர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பைச் சந்தித்தனர்.
இருந்தாலும், பைபிளைப் போதித்த இவர்கள் இருவரையும் கிராமவாசிகளில் அநேகர் வெகுவாக மதித்தனர். என்னுடைய அப்பா தயவுக்கும் தாராள குணத்துக்கும் பெயர்போனவர். ஏழை குடும்பங்களுக்கு அடிக்கடி உதவிக்கரம் நீட்டுவார். சில சமயம் நடுராத்திரியில் யாருக்கும் தெரியாமல் அவர்களுடைய வீட்டு வாசலில் கோதுமையை அல்லது ரொட்டியை வைத்துவிட்டு வந்துவிடுவார். இப்படிச் சுயநலமில்லாமல் செய்யப்பட்ட உதவிகளைக் கண்ட அநேகர் அவர்கள் சொல்வதைக் கேட்கத் தூண்டப்பட்டனர்.—மத்தேயு 5:16.
இதன் விளைவாக, சுமார் பன்னிரண்டு பேர் பைபிள் செய்தியில் ஆர்வம் காட்டினர். பைபிள் சத்தியத்தை அவர்கள் அதிகமதிகமாகப் புரிந்து கொண்டபோது, வீடுகளில் கூடி ஒரு தொகுதியாக பைபிள் படிப்பதன் அவசியத்தை உணர்ந்தனர். 1934 வாக்கில் கிரீஸில் இருந்து நீகோஸ் மதெயாகிஸ் என்ற முழுநேர ஊழியர் சைப்ரஸுக்கு வந்து, க்சுலஃபாகு தொகுதியைச் சந்தித்தார். இந்தத் தொகுதியை ஒழுங்கமைக்கவும், இதில் உள்ளவர்கள் பைபிளை நன்கு புரிந்துகொள்ளவும் சகோதரர் மதெயாகிஸ் உதவினார். இதையெல்லாம் அவர் பொறுமையோடும் விடாமுயற்சியோடும் செய்தார். சைப்ரஸில் பிற்பாடு இந்தத் தொகுதி வளர்ந்து முதல் சபையாக ஆனது.
பிரசங்க வேலை மும்முரமாக நடந்தது. நிறைய பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் கூட்டங்களை நடத்துவதற்கு நிரந்தரமான ஓர் இடம் தேவை என்பதை சகோதரர்கள் உணர்ந்தார்கள். இதற்கு உதவ, என்னுடைய அண்ணன் யார்காஸும், அண்ணி எலெனியும் முன்வந்தார்கள். எப்படியெனில், அவர்கள் களஞ்சியமாகப் பயன்படுத்தி வந்த இடத்தைக் கூட்டங்கள் நடத்துவதற்குக் கொடுத்தார்கள். இது அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது. இது பழுதுபார்க்கப்பட்டு, கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. இப்படியாக, சைப்ரஸிலுள்ள சகோதரர்களுக்குச் சொந்தமாக ஒரு ராஜ்ய மன்றம் கிடைத்தது; இதுதான் அத்தீவிலேயே முதல் ராஜ்ய மன்றமாகும். இதற்காக அவர்கள் ரொம்பவே நன்றியுள்ளவர்களாக இருந்தார்கள். மேலுமான வளர்ச்சிக்கு இந்த ராஜ்ய மன்றம் தூண்டுதலாக அமைந்தது.
சத்தியம் எனக்குச் சொந்தமானது
1938-ல், அதாவது எனக்கு 16 வயதானபோது, தச்சுவேலையைக் கற்றுக்கொள்ள தீர்மானித்தேன். அதற்காக அப்பா என்னை சைப்ரஸின் தலைநகரான நிகோசியாவுக்கு அனுப்பினார். அங்கே நீகோஸ் மதெயாகிஸ் வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவர் தீர யோசித்துத்தான் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தார். ஏனெனில் இந்த உண்மையுள்ள சகோதரரின் பெயரைக் கேட்டாலே இன்றும் அத்தீவில் உள்ளவர்களுக்கு அவருடைய வைராக்கியமும் உபசரிக்கும் குணமும்தான் சட்டென்று நினைவுக்கு வரும். அவர் தணியாத ஆர்வமும், மிகுந்த தைரியமும் கொண்டவர். அந்தக் காலத்தில் சைப்ரஸில் இருந்த கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தக் குணங்கள் ரொம்பவே தேவைப்பட்டன.
சகோதரர் மதெயாகிஸ் என்னுடைய பைபிள் அறிவுக்குப் பலமான அஸ்திவாரம் போட்டார். அதோடு, ஆன்மீக ரீதியில் முன்னேறவும் உதவினார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, அங்கு நடந்த எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டேன். யெகோவாவுக்கான அன்பு எனக்குள் வேரூன்றி, வளர ஆரம்பித்ததை முதன்முதலாக உணர்ந்தேன். கடவுளோடு நல்ல பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தீர்மானித்தேன். சில மாதங்களுக்குள் சகோதரர் மதெயாகிஸுடன் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ளவும் விரும்பினேன். இதைக் குறித்து அவரிடம் பேசினேன். இது நடந்தது 1939-ல்.
அதன் பிறகு, என்னுடைய குடும்பத்தாரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அப்பாவோடு செலவிட்ட அந்த நாட்கள், சத்தியத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் கண்டுபிடித்துவிட்டதை எனக்கு மேலும் உறுதிப்படுத்தின. செப்டம்பர் 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. என் வயதிலிருந்த அநேக இளைஞர்கள் போரிடுவதற்கு ஆர்வமாக முன்வந்தார்கள். ஆனால் நான் பைபிள் சொல்கிறபடி நடுநிலை வகிக்க தீர்மானித்தேன். (ஏசாயா 2:4; யோவான் 15:19) அந்த வருடத்திலேயே என்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தேன். 1940-ல் முழுக்காட்டுதலும் பெற்றேன். மனித பயம் என்ற சங்கிலியை அறுத்தெறிந்து விடுதலையானது போல முதன்முறையாக உணர்ந்தேன்.
1948-ல் எஃப்தெர்பீயாவை மணமுடித்தேன். எங்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பதற்கு’ நாங்கள் அரும்பாடுபட வேண்டும் என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்து கொண்டோம். (எபேசியர் 6:4) யெகோவாவை நெஞ்சார நேசிக்கவும் அவருடைய கட்டளைகளையும் நியமங்களையும் மதிக்கவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தோம். இதற்காகவே ஊக்கமாய் ஜெபித்தோம்; முயற்சியும் எடுத்தோம்.
சுகவீனமெனும் சவால்
1964-ல் எனக்கு 42 வயது இருக்கும்போது, என்னுடைய வலது கையும், காலும் மரத்துப்போக ஆரம்பித்தன. கொஞ்ச கொஞ்சமாக, என்னுடைய இடது பக்கமும் மரத்துப்போக ஆரம்பித்தது. எனக்குத் தசை மெலிவு (muscle atrophy) நோய் வந்திருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். இதற்கு நிவாரணமே கிடையாது. அதுமட்டுமல்ல, காலப்போக்கில் இது பக்கவாதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். அதைக் கேட்டதுமே எனக்குத் தலையில் இடி விழுந்த மாதிரி இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை! எனக்குள்ளேயே எரிமலையாய் குமுறினேன். ‘எனக்கு ஏன் இந்த வியாதி? நான் என்ன தப்பு செய்தேன்?’ என்று யோசித்தேன். இந்த அதிர்ச்சியிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக மீண்டேன். அதன் பிறகு குழப்பமும், கவலையும் என்னை வாட்டி வதைத்தன. மனதில் கேள்விகள் அலையலையாய் எழுந்தன. ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்குச் செயலிழந்து போய், எல்லாவற்றுக்கும் மற்றவர்களை எதிர்பார்க்கிற நிலை எனக்கு வந்துவிடுமா? இதை எப்படிச் சமாளிக்கப் போகிறேன்? மனைவி, மக்களை எப்படிக் காப்பாற்ற போகிறேன்? இதையெல்லாம் யோசிக்கும்போது மனதுக்குள் பதற்றம் பரவியது.
எப்போதையும்விட இந்த நெருக்கடியான கட்டத்தின்போது, என் மனதிலிருந்த எல்லாக் கவலைகளையும், கஷ்டங்களையும் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டித் தீர்ப்பது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொண்டேன். இரவும் பகலும் கண்ணீரோடு ஜெபித்துக்கொண்டே இருந்தேன். சீக்கிரத்தில் என் மனம் ஆறுதல் அடைந்தது. பிலிப்பியர் 4:6, 7-ல் உள்ள இந்த ஆறுதலான வார்த்தைகள் என் விஷயத்தில் ரொம்பவே உண்மையாக இருந்தன: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”
பக்கவாதத்தைச் சமாளித்தல்
என்னுடைய உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது. அதற்கேற்ற மாதிரி உடனடியாக சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டேன். தச்சு வேலையையும் என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதே நேரத்தில், குடும்பத்துக்குத் தேவையானதை சம்பாதிக்கவும் வேண்டியிருந்தது. எனவே என்னுடைய உடல்நிலையை மனதில் வைத்து, அதற்கு ஏற்றபடி ஒரு வேலையை கண்டுபிடிக்க தீர்மானித்தேன். ஆரம்பத்தில் சிறிய வேன் ஒன்றில் ஐஸ் விற்க ஆரம்பித்தேன். இப்படி, ஆறு வருடங்கள் இந்த வேலையில் உருண்டோடின. சீக்கிரத்தில், என் வியாதி என்னை வீல்சேரில் கட்டிப்போட்டது. அதன் பிறகு, என்னால் முடிந்த எளிய வேலைகளைச் செய்ய ஆரம்பித்தேன்.
1990 முதற்கொண்டு, எந்த வேலைக்கும் போக முடியாத அளவுக்கு என் உடல்நிலை மோசமாகிவிட்டது. இப்போது, எல்லாவற்றுக்குமே பிறரை எதிர்பார்க்கிற நிலைக்கு வந்துவிட்டேன். ஒரு சராசரி மனிதன் செய்யும் அன்றாட வேலைகளைக்கூட இப்போது என்னால் செய்ய முடியவில்லை. படுக்க, குளிக்க, உடுத்தவென எதை செய்வதாக இருந்தாலும் எனக்கு மற்றவர்களுடைய ஒத்தாசை தேவைப்படுகிறது. கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போவதென்றால், என்னை வீல்சேரில் தள்ளிக்கொண்டுபோய், தூக்கி காரில் உட்கார வைக்க வேண்டும். ராஜ்ய மன்றத்துக்குச் சென்றவுடன் மறுபடியும் காரிலிருந்து என்னை இறக்கி வீல்சேரில் உட்கார வைத்து உள்ளே தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும். கூட்டம் நடக்கும்போது என் பாதங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள எனக்குப் பக்கத்திலேயே ஓர் எலெக்ட்ரிக் ஹீட்டர் இருக்கும்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, பொதுவாக எல்லா கூட்டங்களிலும் கலந்துகொள்கிறேன். இங்குதான் யெகோவா நமக்குப் போதிக்கிறார் என்பதை நன்கு புரிந்து வைத்திருக்கிறேன். நம்முடைய சகோதர சகோதரிகளோடு இருக்கும்போது பாதுகாப்பாக உணருகிறேன். அவர்களும் எனக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் வாரி வழங்குகிறார்கள். (எபிரெயர் 10:24, 25) முதிர்ச்சி வாய்ந்த சகவணக்கத்தார் அடிக்கடி வந்து என்னை சந்திக்கிறார்கள். இது எனக்குப் பேருதவியாக இருந்திருக்கிறது. “என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” என்று சொன்ன தாவீதைப் போலவே நானும் உணருகிறேன்.—சங்கீதம் 23:5.
இத்தனை வருடங்களாக, என் அன்பு மனைவி தூண் போலிருந்து என்னை தாங்கி வருகிறாள். என் பிள்ளைகளும்கூட எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறார்கள். அநேக ஆண்டுகளாக அவர்கள் என்னுடைய அன்றாடத் தேவைகள் எல்லாவற்றையும் கவனித்து வருகிறார்கள். இதெல்லாம் செய்வது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல. நாட்கள் செல்லச் செல்ல என்னை கவனித்துக் கொள்வது ரொம்பவே சிரமமாக ஆகியிருக்கிறது. அவர்கள் காட்டுகிற பொறுமைக்கும், செய்கிற தியாகத்துக்கும் எல்லையே இல்லை. யெகோவா அவர்களை எப்போதும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன்.
யெகோவா தம்முடைய ஊழியர்களைப் பலப்படுத்துவதற்குச் செய்திருக்கும் மற்றொரு அற்புதமான ஏற்பாடு ஜெபம். (சங்கீதம் 65:2) என்னுடைய இருதயப்பூர்வமான வேண்டுதல்களுக்குப் பதில் அளிக்கும் விதத்தில், இத்தனை ஆண்டுகளாக உண்மையோடு நிலைத்திருப்பதற்குத் தேவையான பலத்தை அவர் எனக்குத் தந்திருக்கிறார். அதுவும் முக்கியமாக, நான் உற்சாகமிழந்து பரிதவிக்கும் சமயத்தில், ஜெபம் எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சந்தோஷத்தை இழக்காமலிருக்கவும் உதவுகிறது. யெகோவாவிடம் அடிக்கடி பேசுகையில் எனக்குப் புதுத் தெம்பு கிடைக்கிறது. அவருடைய சேவையில் நிலைத்திருக்க வேண்டுமென்ற என் தீர்மானத்தைப் பலப்படுத்துகிறது. யெகோவா தம் ஊழியர்களின் ஜெபத்தைக் கேட்கிறார், அவர்களுக்குத் தேவையான மன சமாதானத்தைத் தருகிறார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.—சங்கீதம் 51:17; 1 பேதுரு 5:7.
எல்லாவற்றையும்விட, கடவுள் தம்முடைய மகனான இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் இந்தப் பூமியைப் பூங்காவனம் போன்ற பரதீஸாக மாற்றப்போகிறார் என்பதும், அதில் வாழ்பவர்களைக் குணப்படுத்தப் போகிறார் என்பதும் எனக்கு அளவிலா உற்சாகத்தை அளிக்கிறது. அந்தப் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கும்போதே, பல முறை என் கன்னங்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியிருக்கிறது.—சங்கீதம் 37:11, 29; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4.
முழுநேர ஊழியம்
1991 வாக்கில் என்னுடைய சூழ்நிலையைக் குறித்து நன்கு சிந்தித்துப் பார்த்தேன். என்னுடைய நிலையை நினைத்து பரிதாபப்பட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு ஒரே வழி, அருமையான ராஜ்ய நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதுதான் என்ற முடிவுக்கு வந்தேன். அதே வருடத்தில் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன்.
சுகவீனத்தின் காரணமாக, நான் பெரும்பாலும் கடிதங்கள் வாயிலாகத்தான் சாட்சி கொடுக்கிறேன். ஆனால், எழுதுவது அவ்வளவு சுலபமான விஷயமல்ல. அதற்கு நான் அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், தசை மெலிவினால் கை பாதிக்கப்பட்டிருப்பதால் பேனாவைக் கெட்டியாகப் பிடிப்பதே ரொம்ப சிரமமாக உள்ளது. இருந்தாலும் விடாமுயற்சியும், ஜெபமும் எனக்குக் கைகொடுத்திருக்கின்றன. இப்போது 15 வருடங்களுக்கும் மேல் கடிதங்கள் வாயிலாகச் சாட்சி கொடுத்து வருகிறேன். டெலிபோன் மூலமாகவும் சாட்சி கொடுக்கிறேன். என்னைச் சந்திப்பதற்கு உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தார் என யார் வந்தாலும் அவர்களிடம் புதிய உலகத்தைப் பற்றியும் பரதீஸ் பூமியைப் பற்றியும் பேசாமல் இருக்க மாட்டேன்.
இப்படிச் சாட்சி கொடுத்ததால் பல உற்சாகமான அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். உதாரணமாக, என்னுடைய பேரன் ஒருவனுக்கு சுமார் 12 வருடங்களுக்கு முன்னால் பைபிள் படிப்பு நடத்தினேன். அவன் நன்கு முன்னேறி பைபிள் சத்தியத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதைக் கண்டு பூரித்துப் போனேன். கிறிஸ்தவ நடுநிலை சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோது அவன் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சிக்கு ஏற்றபடி உண்மையோடு நிலைத்திருந்தான்.
நான் கடிதம் எழுதிய ஆட்கள் பைபிளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். சில சமயம், ஆட்கள் கூடுதலான பிரசுரங்களை அனுப்புமாறு கேட்பார்கள். ஒரு முறை, ஒரு பெண்மணி எனக்கு போன் செய்தார். அவருடைய கணவருக்கு உற்சாகமூட்டும் கடிதம் எழுதியதற்காக நன்றி தெரிவித்தார். அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த விஷயங்கள் ஆர்வத்தைத் தூண்டியதாகவும் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து பல முறை பைபிளைப் பற்றி கலந்து பேசினோம்.
ஒளிமயமான எதிர்காலம்
இத்தனை வருடங்களில் ராஜ்ய அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை இந்தத் தீவில் மளமளவென அதிகரித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். என்னுடைய அண்ணன் யார்காஸின் வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறிய ராஜ்ய மன்றம் பல முறை விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது, புதுப்பிக்கப்பட்டும் இருக்கிறது. இந்த அழகிய வணக்க ஸ்தலத்தைத் தற்சமயம் இரண்டு சபைகள் பயன்படுத்தி வருகின்றன.
1943-ல், அப்பா காலமானார்; அப்போது அவருக்கு 52 வயது. அவர் எங்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆன்மீக சொத்தைக் கொடுத்திருக்கிறார்! பிள்ளைகளில் நாங்கள் 8 பேர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டோம். எல்லாருமே யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகிறோம். என் அப்பா பிறந்த ஊரான க்சுலஃபாகுவிலும் அதன் சுற்றுப்புறத்தில் இருக்கும் கிராமங்களிலும் தற்சமயம் மூன்று சபைகள் உள்ளன. மொத்தமாக 230 ராஜ்ய அறிவிப்பாளர்கள் அங்கு இருக்கிறார்கள்.
இந்த அதிகரிப்புகளைப் பார்க்கையில் எனக்கு அளவிலா ஆனந்தம் ஏற்படுகிறது. சங்கீதக்காரன் கூறியதையே இந்த 83 வயதில் நானும் நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன்: “சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.” (சங்கீதம் 34:10) அதுமட்டுமல்ல, ஏசாயா 35:6-ல் காணப்படும் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறும் காலத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்: “அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்.” அந்தக் கனவு நனவாகும் நாள்வரை, என்னுடைய சுகவீனத்தின் மத்தியிலும் யெகோவாவுக்கு சந்தோஷமாக ஊழியம் செய்யத் தீர்மானித்திருக்கிறேன்.
[பக்கம் 17-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
துருக்கி
சிரியா
லெபனான்
சைப்ரஸ்
நிகோசியா
க்சுலஃபாகு
மத்தியதரைக் கடல்
[பக்கம் 17-ன் படம்]
க்சுலஃபாகுவில் முதல் ராஜ்ய மன்றம், இன்றும் பயன்படுத்தப்படுகிறது
[பக்கம் 18-ன் படங்கள்]
எஃப்தெர்பீயாவுடன் 1946-லும், இன்றும்
[பக்கம் 20-ன் படம்]
டெலிபோன், கடிதம் வாயிலாக சாட்சி கொடுப்பதில் மகிழ்கிறேன்