யெகோவா எங்களோடு இருந்ததால் நாங்கள் பயப்படவில்லை
ஏயிப்டியா பெட்ரீடூ சொன்னபடி
சகோதரர் நேதன் எச். நார் கொடுத்த பேச்சைக் கேட்பதற்கு சைப்ரஸ் எங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள் 1972-ல் நிகோசியாவில் கூடி வந்திருந்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தை நீண்டகாலமாகவே அவர்தான் கண்காணித்து வந்தார். நான் அவரிடம், ‘என்னைத் தெரிகிறதா’ என்று கேட்பதற்கு முன்னரே அவர் என்னைக் கண்டுபிடித்துவிட்டார். “எகிப்திலிருந்து செய்தி ஏதாவது வந்ததா?” என்று கேட்டார். எகிப்திலுள்ள என்னுடைய சொந்த ஊரான அலெக்சாண்டிரியாவில் 20 வருடங்களுக்கு முன்னால் சகோதரர் நாரை நான் சந்தித்திருந்தேன்.
அலெக்சாண்டிரியா நகரில் ஜனவரி 23, 1914-ல் நான் பிறந்தேன். நான்கு பிள்ளைகளில் நான் தலைப்பிள்ளை. நாங்கள் வளர்ந்த இடத்திலிருந்து கல்லெறி தூரத்தில்தான் கடல் இருந்தது. அலெக்சாண்டிரியா, பன்னாட்டு மக்கள் குடியிருந்த ஓர் அழகான நகரம். கட்டடக்கலைக்குப் பெயர்பெற்றது, சரித்திரப் புகழ்வாய்ந்தது. அங்கு அரேபியர்களும் ஐரோப்பியர்களும் கலந்திருந்ததால், சிறுபிள்ளைகளாயிருந்த நாங்கள் தாய்மொழியான கிரேக்கு தவிர அரபிக், ஆங்கிலம், இத்தாலியன், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் பேசக் கற்றுக்கொண்டோம்.
பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பிரெஞ்சு நாகரிக ஆடை நிறுவனம் ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. உயர்குடிப் பெண்களுக்கு நவநாகரிக ஆடைகளை வடிவமைத்துத் தைத்துக்கொடுப்பது எனக்குப் பெருமையாக இருந்தது. மதத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருந்தது; பைபிள் படிப்பது என்றால் எனக்கு உயிர். அதனால், புரிந்தாலும் சரி புரியாவிட்டாலும் சரி, அதைப் படிப்பது என் வழக்கமாக இருந்தது.
ஏறக்குறைய அந்தச் சமயத்தில், அதாவது 1935 வாக்கில் சைப்ரசைச் சேர்ந்த ஓர் அருமையான இளைஞனைச் சந்தித்தேன். அவருடைய பெயர் தியாதாட்டாஸ் பெட்ரீடிஸ். அவர் மல்யுத்த வீரராக இருந்தார். அதேசமயம் இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் தொழிலையும் கற்றிருந்தார். இனிப்பு வகைகளை விற்கும் பிரபலமான ஒரு கடையில் வேலையும் செய்துவந்தார். கருங்கூந்தலுடன் ஒடிசலாக இருந்த என்னை அவர் காதலித்தார். எங்கள் வீட்டின் ஜன்னலுக்கு வெளியேயிருந்து காதல் சொட்டும் கிரேக்கக் கீதங்களை அவர் அடிக்கடி பாடுவார். ஜூன் 30, 1940-ல் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்; அவை இருதயத்தை வருடும் இன்பமான நாட்கள். அம்மா குடியிருந்த வீட்டிற்குக் கீழேயே நாங்கள் வசித்தோம். எங்கள் முதல் பிள்ளையான ஜான் 1941-ல் பிறந்தான்.
சத்தியம் கிடைத்த விதம்
கொஞ்ச காலமாகவே, தியாதாட்டாஸ் எங்களுடைய மதத்தில் திருப்தியற்றவராய் இருந்தார். அதனால் பைபிள் சம்பந்தமாக அடிக்கடி கேள்விகள் கேட்டார். எனக்குத் தெரியாமலேயே யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்திருந்தார்கள். ஒரு நாள் என் குழந்தையோடு வீட்டிலிருக்கையில், ஒரு பெண் பைபிள் செய்தி அடங்கிய ஓர் அட்டையைக் கொடுத்தார். ஒரு மரியாதைக்காக அதை வாங்கிப் படித்துப் பார்த்தேன். அவர் சில பைபிள் பிரசுரங்களையும் கொடுத்தார். ஆச்சரியம் என்னவென்றால், அவை தியாதாட்டாஸ் வீட்டுக்குக் கொண்டுவந்திருந்த அதே புத்தகங்கள்தான்.
“என்னிடம் இந்தப் புத்தகங்கள் இருக்கின்றனவே. தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்று எலெனி நிக்கோலா என்ற அந்தச் சாட்சியிடம் சொன்னேன். அவர் உள்ளே வந்ததும் அடுத்தடுத்து சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டு அவரைத் துளைத்தெடுத்தேன். அவர் பொறுமையாக எல்லாக் கேள்விகளுக்கும் பைபிளிலிருந்தே பதில் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பைபிள் சத்தியம் என்னவென்று எனக்குப் பிடிபட்டது. எங்கள் உரையாடலைச் சற்று நிறுத்தியபோது என் கணவருடைய படத்தை எலெனி பார்த்துவிட்டார். “இவரை எனக்குத் தெரியுமே!” என்று ஆச்சரியத்தோடு சொன்னார். தியாதாட்டாஸின் குட்டு வெளிப்பட்டதும் எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்னைக் கூட்டிக்கொண்டு போகாமல், ஏன், ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு தியாதாட்டாஸ் சென்றிருக்கிறார்! அன்றைக்கு அவர் வீட்டுக்கு வந்தவுடன், “போன ஞாயிற்றுக்கிழமை எங்கே போனீர்களோ அங்கே, இந்த வாரம் நானும் உங்களோடு வருவேன்!” என்று சொன்னேன்.
நான் சென்ற முதல் கூட்டத்தில் சுமார் பத்துப்பேர் பைபிளிலுள்ள மீகா புத்தகத்தைச் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். என்னை அறியாமலேயே நானும் அந்தப் படிப்பில் மூழ்கிவிட்டேன். அதுமுதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஜார்ஜ் மற்றும் காட்டரீனி பெட்ராகி எங்களுக்கு பைபிள் படிப்பு நடத்த வந்துவிடுவார்கள். சாட்சிகளோடு பைபிள் படிப்பதை என் அப்பா எதிர்த்தார். என் கூடப்பிறந்தவர்களுக்கும் அது பிடிக்கவில்லை. ஒரு தங்கை மட்டும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவள் ஒரு சாட்சியாக மாறவில்லை. என் அம்மா சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். நானும் தியாதாட்டாஸும் என் அம்மாவும் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, 1942-ல் அலெக்சாண்டிரியாவிலுள்ள கடலில் முழுக்காட்டுதல் பெற்றோம்.
வாழ்க்கையில் இடையூறுகள்
இரண்டாம் உலகப் போர் 1939-ல் ஆரம்பித்து, சீக்கிரத்திலேயே தீப்போல் எங்கும் பரவியது. 1943 வாக்கில் ஜெர்மன் படைத்தளபதி எர்வின் ரமலும் அவருடைய பீரங்கிப் படையினரும் எல் ஆலமேனுக்கு அருகில் இருந்தார்கள்; அலெக்சாண்டிரியா முழுவதிலும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் குவிந்திருந்தார்கள். நாங்கள் உலர்ந்த உணவு வகைகளை ஏராளமாகச் சேமித்து வைத்துக்கொண்டோம். என்னுடைய முதலாளி சூயஸ் கால்வாய்க்கு அருகில் இருந்த போர்ட் டாஃபிக் நகரில் இன்னொரு இனிப்புக் கடையைப் புதிதாகத் திறந்தார். அதைக் கவனிக்கும் பொறுப்பை என் கணவரிடம் ஒப்படைத்தார். அதனால் நாங்கள் அங்கே குடிமாறினோம். கிரேக்கு மொழி பேசும் இரண்டு சாட்சிகள் எங்களைத் தேடி வந்தார்கள். எங்களுடைய முகவரி அவர்களுக்குத் தெரியாததால், எங்களைக் கண்டுபிடிக்கும்வரை வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள்.
போர்ட் டாஃபிக்கில் இருந்தபோது ஸ்டாவ்ரோஸ், யூலா கிப்ரேயாஸ், அவர்களுடைய பிள்ளைகளான டோட்டோஸ், இயார்யியா ஆகியோருக்கு பைபிள் படிப்பு நடத்தினோம். அவர்கள் எங்களுக்கு நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். ஸ்டாவ்ரோஸுக்கு பைபிள் படிப்பு மிகவும் பிடித்துவிட்டது; அதனால், வீட்டிலிருக்கும் எல்லாக் கடிகாரங்களின் முள்ளையும் ஒரு மணிநேரம் பின்னால் நகர்த்தி வைத்துவிடுவார். எனவே, ஊருக்குச் செல்லவேண்டிய கடைசி ரயிலை நாங்கள் தவறவிட்டுவிடுவோம். அங்கேயே நீண்ட நேரம் இருக்க வேண்டியதாகிவிடும். எங்களுடைய கலந்துரையாடல் நள்ளிரவுவரை தொடரும்.
போர்ட் டாஃபிக்கில் 18 மாதங்கள் இருந்தோம்; அதன்பிறகு, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அலெக்சாண்டிரியாவுக்குத் திரும்பினோம். யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த அவர் 1947-ல் இறந்துவிட்டார். அந்தச் சமயத்தில், முதிர்ச்சி வாய்ந்த சகோதர சகோதரிகளின் புத்துணர்ச்சியூட்டும் கூட்டுறவினால் யெகோவா எங்களை ஊக்கப்படுத்தியதை மீண்டும் உணர்ந்தோம். வெளிநாடுகளில் நியமிப்புகளைப் பெற்ற மிஷனரிகள் செல்லும் கப்பல்கள் அலெக்சாண்டிரியாவில் சில மணிநேரம் நின்றபோது அவர்களை உபசரிக்கவும் முடிந்தது.
இன்பங்களும் துன்பங்களும்
1952-ல் எங்களுடைய இரண்டாவது மகன் ஜேம்ஸ் பிறந்தான். பிள்ளைகளை நல்ல ஆன்மீகச் சூழலில் வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களாகிய எங்களுக்கு இருந்தது. எனவே, பைபிள் படிப்புகள், கூட்டங்கள் போன்றவை எங்கள் வீட்டிலேயே நடப்பதற்கு ஏற்பாடு செய்துகொண்டோம். முழுநேர ஊழியர்களையும் அடிக்கடி வீட்டிற்கு அழைத்தோம். இதனால், மூத்த பையன் ஜானுக்கு பைபிள் சத்தியத்தை நெஞ்சார நேசிக்க வாய்ப்பு கிடைத்தது; சுமார் 15 வயதிலேயே பயனியர் செய்ய ஆரம்பித்தான். அதேசமயம், அவனுடைய படிப்பை முடிப்பதற்கு மாலைநேர பள்ளிக்குச் சென்றான்.
கொஞ்ச காலத்திற்குப் பிறகு, தியாதாட்டாஸுக்கு மோசமான இருதயக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் செய்துவந்த வேலையை நிறுத்திவிடுமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது. அப்பொழுது மகன் ஜேம்ஸுக்கு 4 வயதுதான். நாங்கள் என்ன செய்வது? “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார் அல்லவா? (ஏசா. 41:10) 1956-ல் சூயஸ் கால்வாய்க்கு அருகிலுள்ள இஸ்மேய்லியாவில் பயனியர்களாகச் சேவை செய்ய அழைப்பு வந்தது. அதை நாங்கள் அறிந்தபோது எவ்வளவு ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்திருப்போம் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அடுத்து வந்த வருடங்களில் எகிப்து நாட்டில் சூழ்நிலை பதட்டமாக இருந்ததால் நம்முடைய சகோதரர்களுக்கு உற்சாகம் தேவைப்பட்டது.
1960-ல் நாங்கள் அனைவரும் வெறுமனே ஆளுக்கொரு பெட்டியோடு எகிப்தைவிட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று. என் கணவரின் நாடான சைப்ரஸ் தீவுக்கு நாங்கள் குடிமாறினோம். இதற்குள்ளாக, தியாதாட்டாஸ் மிகவும் நோய்வாய்ப்பட்டார், அவரால் வேலை செய்ய முடியவில்லை. என்றாலும், ஓர் அன்பான சகோதரரும் அவருடைய மனைவியும் நாங்கள் தங்குவதற்கு அவர்களுடைய வீட்டில் இடம் கொடுத்தார்கள். வருத்தகரமாக, இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் கணவர் இறந்துவிட்டார், சிறு பையனாயிருந்த ஜேம்ஸோடு நான் தனிமரமானேன். ஏனெனில், நாங்கள் சைப்ரசுக்குக் குடிமாறிய சமயத்தில் எங்களோடு வந்திருந்த ஜானுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதால், அவன் தன்னுடைய குடும்பத்தோடு தனியாக வசித்து வந்தான்.
கஷ்டகாலத்தில் பராமரிக்கப்படுதல்
அதன் பிறகு, நாங்கள் தங்குவதற்கு ஸ்டாவ்ரோஸும் டாரா காயீரிஸும் தங்களுடைய வீட்டில் இடம் தந்தார்கள். மீண்டும் எங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டதற்காக மண்டியிட்டு யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். (சங். 145:16) ஸ்டாவ்ரோஸும் டாராவும் வீட்டை விற்றுவிட்டு கீழ்த்தளத்தில் ராஜ்ய மன்றம் இருக்குமாறு ஒரு புது வீடு கட்டத் தீர்மானித்தார்கள். இரக்கத்தோடு, எனக்கும் ஜேம்ஸுக்கும் இரண்டு அறைகளையும் சேர்த்துக் கட்டினார்கள்.
காலம் சென்றது, ஜேம்ஸுக்கும் திருமணமாகி நான்கு பிள்ளைகள் பிறந்தார்கள். முதல் குழந்தை பிறக்கும்வரை அவனும் அவனுடைய மனைவியும் பயனியர்களாகச் சேவை செய்தார்கள். மறக்க முடியாத சந்தர்ப்பமாக இருந்த சகோதரர் நாரின் விஜயத்திற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1974-ல் சைப்ரசில் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலை இருந்தது.a சாட்சிகள் உட்பட அநேக ஜனங்கள் தங்களுடைய வீட்டைவிட்டு வெளியேறி, வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தார்கள். என் மகன் ஜானுக்கும் அதே சூழ்நிலை ஏற்பட்டது. தன் மனைவியோடும் மூன்று பிள்ளைகளோடும் கனடாவுக்கு மாறிச் சென்றான். அந்தச் சூழ்நிலையிலும் சைப்ரசில் ராஜ்ய பிரஸ்தாபிகள் அதிகரித்திருந்ததைப் பார்த்து நாங்கள் சந்தோஷமடைந்தோம்.
நான் ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபோது, ஊழியத்தில் இன்னும் அதிகமாக என்னால் கலந்துகொள்ள முடிந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னால் லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டேன்; அதனால், என் மகன் ஜேம்ஸின் குடும்பத்தோடு சேர்ந்துகொண்டேன். பிற்பாடு, என் உடல்நிலை மிகவும் மோசமானபோது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு பல வாரங்கள் இருந்தேன். பிறகு, ஒரு நர்சிங் ஹோமுக்கு மாற்றப்பட்டேன். வலியால் சதா அவஸ்தைப்பட்டாலும், அங்குள்ள நர்சுகளிடமும் நோயாளிகளிடமும் பார்வையாளர்களிடமும் சாட்சி கொடுக்கிறேன். நிறைய நேரம் படிக்கிறேன், சகோதரர்களின் அன்பான உதவியால் அருகிலிருக்கும் சபைப் புத்தகப் படிப்பில் கலந்துகொள்கிறேன்.
முதிர்வயதில் ஆறுதல்
நாங்கள் பைபிள் படிப்பு நடத்தியவர்களின் முன்னேற்றத்தைப் பற்றிக் கேள்விப்படும்போது ஆறுதல் அடைகிறேன். அவர்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளில் அநேகர் முழுநேர ஊழியம் செய்கிறார்கள். அவர்களில் சிலர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, கிரீஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சேவை செய்கிறார்கள். இப்பொழுது, என் மகன் ஜானும் அவனுடைய மனைவியும், கனடாவில் அவர்களுடைய மகனோடு வசிக்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகளும் அவளுடைய கணவரும் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள். தேவைப்படும்போது உதவிப் பயணக் கண்காணியாக ஜான் சேவை செய்கிறான். அவர்களுடைய இளைய மகள் லிண்டாவும் அவளுடைய கணவர் ஸ்னேப்பும் 124-ஆம் கிலியட் பள்ளியில் கலந்துகொண்டார்கள்.
என் மகன் ஜேம்ஸும் அவனுடைய மனைவியும் இப்போது ஜெர்மனியில் வசிக்கிறார்கள். அவர்களுடைய மகன்களில் இருவர் பெத்தேலில் சேவை செய்கிறார்கள்; ஒருவன் கிரீஸிலுள்ள ஏதன்ஸிலும் இன்னொருவன் ஜெர்மனியிலுள்ள செல்ட்டர்ஸிலும் சேவை செய்கிறார்கள். அவர்களுடைய இளைய மகனும், மகளும் அவளுடைய கணவரும், ஜெர்மனியில் பயனியர்களாகச் சேவை செய்கிறார்கள்.
என்னுடைய அம்மாவும், அன்பான கணவரும் உயிர்த்தெழுந்து வரும்போது அவர்களிடம் சொல்வதற்கு எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கும்! குடும்பத்திற்கு அரும்பெரும் ஆஸ்தியை விட்டுச் சென்றிருப்பதை அறிந்து அவர்கள் பிரமித்துப்போவார்கள்.b
[அடிக்குறிப்புகள்]
b இந்தக் கட்டுரை தயாராகிக்கொண்டிருந்தபோதே சகோதரி பெட்ரீடூ தனது 93-ஆம் வயதில் காலமானார்.
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
முதிர்ச்சி வாய்ந்த சகோதர சகோதரிகளின் புத்துணர்ச்சியூட்டும் கூட்டுறவினால் யெகோவா எங்களை ஊக்கப்படுத்தியதை மீண்டும் உணர்ந்தோம்
[பக்கம் 24-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
சைப்ரஸ்
நிகோசியா
மத்தியதரைக் கடல்
எகிப்து
கெய்ரோ
அலெக்சாண்டிரியா
எல் ஆலமேன்
இஸ்மேய்லியா
சூயஸ்
போர்ட் டாஃபிக்
சூயஸ் கால்வாய்
[படத்திற்கான நன்றி]
Based on NASA/Visible Earth imagery
[பக்கம் 23-ன் படம்]
1938-ல் தியாதாட்டாஸுடன்
[பக்கம் 25-ன் படம்]
மனைவியுடன் ஜான்
[பக்கம் 25-ன் படம்]
மனைவியுடன் ஜேம்ஸ்