வாழ்க்கை சரிதை
சேவையில் சுயதியாக மனப்பான்மை
டான் ரென்டல் சொன்னபடி
1927-ல் அம்மா இறந்தபோது எனக்கு ஐந்தே வயது. அவர்களுடைய விசுவாசமோ என் வாழ்க்கை முழுவதையும் சிறந்த விதத்தில் ஆக்கிரமித்திருந்தது. அது எப்படி?
அம்மா சர்ச் ஆஃப் இங்லண்ட்டை சேர்ந்த தீவிர பக்தை; அப்போது, பயிற்சி பெற்ற ஓர் ராணுவ வீரரான என் அப்பாவை திருமணம் செய்துகொண்டார்கள். அது நடந்தது முதல் உலகப் போருக்கு முன்பு. முதல் உலகப் போர் 1914-ல் திடீரென மூண்டது; அந்த சர்ச்சின் மதகுரு சர்ச் மேடையை ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணி மேடையாக பயன்படுத்தினதை அம்மா ஒத்துக்கொள்ளாமல் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அந்த மதகுருவின் பதில்? “இப்படிப்பட்ட விஷயங்கள பற்றி நீ ரொம்ப அலட்டிக்காத, பேசாம வீட்டுக்குப் போ!” அந்த பதில் அவர்களை நெருடியது.
போர் உச்சக்கட்டத்தை எட்டியபோது 1917-ல், “ஃபோட்டோ-டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படக்காட்சியைப் பார்க்க அம்மா போனார்கள். சத்தியத்தை கண்டுபிடித்துவிட்டதாக அவர்கள் உறுதியாக நம்பினதால், பைபிள் மாணாக்கர் என அப்போது அழைக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவு கொள்வதற்காக சர்ச்சை விட்டு உடனே வெளியேறினார்கள். யோவில் நகரில் நடத்தப்பட்ட சபைக் கூட்டங்களுக்கு அவர்கள் சென்று வந்தார்கள்; அந்நகரம் இங்கிலாந்திலுள்ள ஸமர்செட் மாவட்டத்தைச் சேர்ந்த வெஸ்ட் கோகர் என்ற எங்கள் கிராமத்திற்கு மிக அருகிலிருந்தது.
புதிதாக கண்டுபிடித்த விசுவாசத்தைப் பற்றி உடனே தன் தங்கை இரு அக்காமார் ஆகிய மூவருக்கும் அம்மா சொன்னார்கள்; அம்மாவும் அவர்கள் தங்கை மில்லீயும் வைராக்கியத்துடன் எங்கள் பரந்த கிராமப்புற பிராந்தியங்களில் சைக்கிளில் சென்று வேதாகமத்தில் படிப்புகள் என்ற ஆங்கில பைபிள் விளக்க புத்தகங்களை விநியோகித்ததை யோவில் சபையைச் சேர்ந்த முதியவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் அம்மா இறப்பதற்கு முன்பு 18 மாதங்கள் படுத்த படுக்கையாய் கிடந்தது வருத்தத்திற்குரியது; அப்போது நிவாரணம் கண்டுபிடிக்கப்படாத காச நோயால் அவதிப்பட்டார்கள்.
செயலில் சுயதியாகம்
அப்போது மில்லீ சித்தி எங்களோடு வசித்து வந்தார்கள்; அம்மாவுக்கு சுகமில்லாமல் போனபோது அவர்களுக்கு சித்திதான் பணிவிடை செய்தார்கள்; அத்துடன் என்னையும் ஏழு வயதான என் அக்கா ஜோனையும் அவர்கள்தான் கவனித்துக்கொண்டார்கள். அம்மா இறந்ததும் எங்களை வளர்க்கும் பொறுப்பை உடனே மில்லீ சித்தி ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதை நினைத்து சந்தோஷப்பட்ட அப்பாவும், மில்லீ சித்தி எங்களுடனேயே நிரந்தரமாக தங்கிக்கொள்ள உடனே ஒப்புக்கொண்டார்.
நாங்கள் வளர வளர மில்லீ சித்தியின் மீது நாங்கள் வைத்திருந்த அன்பும் வளர்ந்தது; அவர்கள் எங்களுடனேயே தங்கிவிட்டது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் இந்த தீர்மானத்தை எடுத்தார்கள்? அம்மா போட்டிருந்த அஸ்திவாரத்தின்மீது கட்டுவதற்கு—பைபிள் சத்தியத்தை எனக்கும் ஜோனுக்கும் கற்பிப்பதற்கு—தான் கடமைப்பட்டிருந்ததாக உணர்ந்ததை அநேக ஆண்டுகளுக்குப் பிறகு மில்லீ சித்தி எங்களிடம் தெரிவித்தார்கள்; அப்பாவுக்கு மதத்தில் ஈடுபாடு இல்லாததால் அவர் இதை ஒருநாளும் செய்ய மாட்டார் என்று அவர்கள் நினைத்ததால் அத்தீர்மானத்தை எடுத்திருந்தார்கள்.
அதன்பின், மற்றொன்றையும் மில்லீ சித்தி தனக்குள் தீர்மானம் செய்திருந்தது எங்களுக்குத் தெரியவந்தது. எங்களை சரிவர கவனித்துக்கொள்வதற்காக திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்பதே அது. எவ்வளவு பெரிய சுயதியாகம்! நானும் ஜோனும் அதற்காக அவர்களுக்கு ரொம்ப நன்றிக் கடன்பட்டுள்ளோம். மில்லீ சித்தி எங்களுக்குக் கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் அவர்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரியையும் நாங்கள் மறக்கவே இல்லை.
தீர்மானத்திற்கான சமயம்
நானும் ஜோனும் சர்ச் ஆஃப் இங்லண்ட் கிராமப் பள்ளியில் படித்தோம்; அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் எங்கள் மத கல்வி சம்பந்தமான உறுதியான நிலைநிற்கையை மில்லீ சித்தி நன்கு தெளிவுபடுத்திவிட்டார்கள். மற்ற பிள்ளைகள் சர்ச்சுக்கு அணிவகுத்து சென்றபோது, நாங்கள் வீட்டுக்குச் சென்றோம்; மத போதனைக்காக அந்த மதகுரு பள்ளிக்கு வந்தபோதெல்லாம் நாங்கள் மட்டும் தனியே உட்கார்ந்து, கொடுக்கப்பட்ட பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்தோம். இவ்வாறு மனப்பாடம் செய்தது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது; ஏனெனில் இந்த வசனங்கள் என் மனதில் அழியாமல் பதிந்துவிட்டன.
உள்ளூரிலிருந்த சீஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் நான்கு வருட பயிற்சி பெறுவதற்காக 14 வயதில் பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டேன். பியானோ இசைக்கவும் கற்றுக்கொண்டேன்; இசையும் பால்ரூம் நடனமும் என் ‘ஹாபி’ ஆயின. என் இதயத்தில் பைபிள் சத்தியம் வேரூன்றியிருந்தது; ஆனால் ஏனோ அது இன்னும் என்னை உந்துவிக்கவில்லை. பிறகு ஒரு நாள் மார்ச் 1940-ல், சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஸ்வின்டனில் நடக்கவிருந்த மாநாடு ஒன்றிற்கு தன்னோடு வரும்படி வயதான ஒரு சாட்சி என்னை அழைத்தார்கள். பிரிட்டனில் யெகோவாவின் சாட்சிகளை முன்னின்று நடத்திய ஊழியரான ஆல்பர்ட் டி. ஷ்ரோடர் பொதுப் பேச்சை கொடுத்தார். அந்த மாநாடு என் வாழ்வில் திருப்புக்கட்டமாக அமைந்தது.
இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. என் வாழ்க்கையில் இவ்வளவு நாளை வீணாக்கினது போதும் என்று நினைத்தேன். ஆகவே, யோவிலில் இருந்த ராஜ்ய மன்றத்திற்கு மீண்டும் செல்ல தீர்மானித்தேன்; நான் சென்றிருந்த முதல் கூட்டத்தில் தெரு ஊழியம் அறிமுகம் செய்யப்பட்டது. நானோ கற்றுக்குட்டிதான்; ஆனாலும் இந்த ஊழியத்தில் பங்கெடுக்க முன்வந்தேன்; எங்களைக் கடந்து சென்றவர்களில் என் நண்பர்கள் என சொல்லிக்கொண்ட அநேகர் என்னைக் கேலி செய்தது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
ஜூன் 1940-ல் ப்ரிஸ்டல் நகரில் முழுக்காட்டுதல் பெற்றேன். ஒரு மாதத்திற்குள் ஒழுங்கான பயனியரானேன்; அதாவது ஒரு முழுநேர ஊழியனானேன். சற்று பின்னர், என் அக்காவும் ஒப்புக்கொடுத்திருந்ததை தண்ணீர் முழுக்காட்டுதலால் அடையாளம் காட்டினபோது எனக்கு சந்தோஷம் தாளவில்லை!
போர்க் கால பயனியர் சேவை
போர் ஆரம்பித்து ஒரு வருடத்திற்குப் பிறகு ராணுவத்தில் சேர்ந்துகொள்ளும்படியான அழைப்பு எனக்கு வந்தது. மத நியமங்களுக்காக படைத்துறை பணியை மறுப்பவராக யோவிலில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் ப்ரிஸ்டலில் இருந்த ஒரு தீர்ப்புமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்தது. கிளாஸ்டர்ஷயர், சின்டர்ஃபர்டிலும் அதன் பிறகு வேல்ஸில் ஹார்ஃபர்ட்-வெஸ்ட், கார்மார்த்தன் ஆகிய இடங்களிலும் ஜான் வின்னுடன் பயனியர் ஊழியம் செய்தேன்.a பிறகு, கார்மார்த்தன் நீதிமன்ற விசாரணை ஒன்றில், ஸ்வான்ஸி சிறையில் மூன்று மாத சிறைத்தண்டனையும் அத்துடன் 1,725 ரூபாய் கூடுதல் அபராதமும் விதிக்கப்பட்டது—அந்தக் காலத்தில் அது கணிசமான தொகை! பின்னர் அந்த அபராத தொகையைக் கட்ட முடியாமல் போனதால் இன்னும் மூன்று மாத சிறைத்தண்டனையை அனுபவிக்க நேர்ந்தது.
மூன்றாவது விசாரணையில், “‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’ என்று பைபிள் சொல்கிறதல்லவா?” என்று என்னிடம் கேட்டார்கள். “ஆம், எனக்குத் தெரியும், ஆனால், அந்த வசனத்தில் ‘தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்’ என்றும் சொல்வதை குறிப்பிட விரும்புகிறேன். அதைத்தான் நான் செய்துவருகிறேன்” என்று பதிலளித்தேன். (மத்தேயு 22:21) சில வாரங்களுக்குப் பிறகு, கட்டாய ராணுவ சேவையிலிருந்து நான் விலக்கப்பட்டதை தெரிவிக்கும் கடிதம் ஒன்று எனக்கு வந்தது.
1945-ன் ஆரம்பத்தில், லண்டன் பெத்தேல் குடும்பத்தில் பணிசெய்ய அழைக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்துவந்த குளிர்காலத்தில், உலகளாவிய பிரசங்க வேலையை ஒழுங்கமைத்து வருவதில் தலைமை பொறுப்பில் இருந்த நேதன் எச். நாரும், அவருடைய செயலர் மில்டன் ஜி. ஹென்ஷலும் லண்டனுக்கு வந்தனர். பிரிட்டனிலிருந்து இளம் சகோதரர்கள் எட்டு பேர் மிஷனரி பயிற்சிக்காக உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் எட்டாவது வகுப்பில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டனர்; நானும் அவர்களில் ஒருவன்.
மிஷனரி நியமிப்புகள்
மே 23, 1946-ல், போர்க் கால விடுவிப்பு கப்பல் ஒன்றில் ஃபௌவீ என்ற சிறிய கார்னிஷ் துறைமுகத்திலிருந்து எங்கள் பயணத்தை தொடங்கினோம். துறைமுக அதிகாரி கேப்டன் காலின்ஸ் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர்; நாங்கள் பிளாட்ஃபார்மைக் கடந்தபோது சங்கொலி எழுப்பினார். இங்கிலாந்தின் கடற்கரை எங்கள் கண்ணைவிட்டு மறைவதைக் கண்ட எங்களுக்குள் பலவகை உணர்வுகள் தோன்றின. அந்த அட்லாண்டிக் கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பான ஒன்றாய் இருந்தது; என்றாலும் 13 நாட்கள் கழித்து ஐக்கிய மாகாணங்களுக்கு பத்திரமாக போய்ச் சேர்ந்தோம்.
கிளீவ்லாண்ட், ஒஹாயோவில் 1946, ஆகஸ்ட் 4 முதல் 11 தேதிகளில் சர்வதேச அளவில் எட்டு நாட்கள் நடைபெற்ற களிகூரும் ஜனங்கள் தேவராஜ்ய மாநாட்டில் கலந்துகொண்டது நெஞ்சைவிட்டு நீங்காத நினைவாகும். 32 நாடுகளைச் சேர்ந்த 302 பேர் உட்பட எண்பதாயிரம் பேர் அதற்கு வந்திருந்தார்கள். அந்த மாநாட்டில் விழித்தெழு!b பத்திரிகை வெளியிடப்பட்டது; “தேவனே சத்தியபரர்” என்ற ஆங்கில பைபிள் உதவி புத்தகமும் ஆர்வமிக்க பார்வையாளர்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
கிலியட் பள்ளியிலிருந்து 1947-ல் பட்டம் பெற்றபோது நானும் பில் காப்ஸனும் எகிப்துக்கு நியமிப்பை பெற்றோம். ஆனால் அங்கு செல்ல புறப்படுவதற்கு முன்பு புரூக்ளின் பெத்தேலில் ரிச்சர்ட் ஆபிரகாம்ஸனிடமிருந்து அருமையான அலுவலக பயிற்சி பெற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அலெக்ஸாண்டிரியாவில் கப்பலைவிட்டு இறங்கினோம்; நான் விரைவில் மத்திய கிழக்கின் வாழ்க்கைப் பாணிக்கு ஏற்றாற்போல் என்னை மாற்றிக்கொண்டேன். என்றாலும் அரபிக் மொழியை கற்றுக்கொள்வது பெரும் சவாலாக இருந்தது; எனவே நான்கு மொழிகளில் சாட்சி கார்டுகளை வைத்துக்கொண்டேன்.
பில் காப்ஸன் ஏழு வருடங்கள் தங்கினார்; எனக்கோ முதல் வருடத்திற்குப்பின் விசாவைப் புதுப்பிக்க முடியாமற்போனதால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. மிஷனரி சேவையில் இருந்த அந்த வருடத்தை இப்போது நினைத்துப் பார்க்கையில், என் வாழ்க்கையிலேயே அதிக பலன்தந்த ஒன்றாக அதைக் காண்கிறேன். வாரா வாரம் 20-க்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகளை வீடுகளில் நடத்தும் அரிய வாய்ப்பை பெற்றேன். அன்று சத்தியத்தைக் கற்றவர்களில் சிலர் இன்றுவரை ஆர்வத்துடன் யெகோவாவை துதிக்கின்றனர். எகிப்திலிருந்து சைப்ரஸுக்கு நியமிக்கப்பட்டேன்.
சைப்ரஸும் இஸ்ரேலும்
புதிய மொழியான கிரேக்கு மொழியை கற்க ஆரம்பித்தேன்; உள்ளூரில் பேசப்படும் விதத்தையும் தெரிந்துகொண்டேன். சற்று பின்னர், ஆன்தனீ ஸிடர்ரஸ் கிரீஸுக்குச் செல்லும்படி சொல்லப்பட்டார்; சைப்ரஸில் ஊழியத்தை மேற்பார்வை செய்யும் நியமிப்பை நான் பெற்றேன். அப்போது சைப்ரஸ் கிளை அலுவலகமே இஸ்ரேலில் நடந்த ஊழியத்தையும் கவனித்துக்கொண்டது; மற்ற சகோதரர்களுடன் சேர்ந்து அங்குள்ள சில சாட்சிகளையும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இஸ்ரேலுக்கு நான் முதலில் சென்றபோது, ஹைஃபாவில் இருந்த ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு சிறிய மாநாட்டை நடத்தினோம்; அதற்கு 50, 60 பேர் வந்திருந்தனர். வெவ்வேறு நாடுகளின் அடிப்படையில் மாநாட்டு நிகழ்ச்சியை ஆறு மொழிகளில் நடத்தினோம்! மற்றொரு சந்தர்ப்பத்தில் யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு படக்காட்சியை ஜெருசலேமில் காட்ட முடிந்தது; ஒரு பொதுப் பேச்சையும் கொடுத்தேன்; அதைப் பற்றி ஆங்கில செய்தித்தாள் சாதகமான அறிக்கையை வெளியிட்டது.
அப்பொழுது சைப்ரஸில் சுமார் 100 சாட்சிகள் இருந்தனர்; விசுவாசத்திற்காக அவர்கள் கடினமாக போராட வேண்டியிருந்தது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மத குருக்களின் தலைமையில் வந்த கும்பல்கள் நாங்கள் நடத்திய மாநாடுகளுக்கு இடைஞ்சல் செய்தன; கிராமப் புறங்களில் சாட்சிகொடுக்கும்போது கல்லெறிபட்டது எனக்கு புதிய அனுபவமாய் இருந்தது. உடனடியாக தலைமறைவாகும் விதத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது! அப்படிப்பட்ட வன்முறைமிக்க எதிர்ப்புகளின் மத்தியில் அத்தீவிற்கு இன்னும் அதிக மிஷனரிகள் வந்து சேர்ந்தது விசுவாசத்தை பலப்படுத்தியது. டென்னஸ் மற்றும் மேவிஸ் மேத்யூஸும் ஜோன் ஹல்லீயும் பெரில் ஹேவுட்டும் ஃபமகுஸ்தாவில் என்னுடன் சேர்ந்து ஊழியம் செய்ய வந்தனர்; டாம் மற்றும் மேரி கூல்டனும் லண்டன்வாசியான சைப்ரஸை சேர்ந்த நீனா கான்ஸ்ட்டான்ட்டீயும் லிமாஸாலுக்குச் சென்றனர். அதே சமயத்தில் பில் காப்ஸனும் சைப்ரஸுக்கு மாற்றப்பட்டார்; பின்பு அவருடன் ஊழியம் செய்ய அங்கு பர்ட் மற்றும் பெரில் வைஸேயும் வந்தனர்.
சூழ்நிலை மாற்றங்களை அனுசரித்தல்
1957-ன் முடிவில், நான் சுகவீனமடைந்தேன்; தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை என்னால் செய்ய முடியவில்லை. இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெற வேண்டுமானால், இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டும் என சோகத்துடன் தீர்மானித்தேன்; அங்கு 1960 வரை தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்தேன். என் அக்காவும் அவள் கணவரும் எனக்கு கனிவுடன் அடைக்கலம் அளித்தார்கள்; ஆனால் அப்போது சூழ்நிலை மாறியிருந்தது. ஜோனுக்கு நிலைமையை சமாளிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவளுடைய கணவரையும் இளம் மகளையும் கவனித்துக் கொண்டதுடன், நான் அங்கில்லாத 17 வருடத்தில் எங்கள் அப்பாவையும் மில்லீ சித்தியையும் அன்புடன் பராமரித்து வந்திருந்தாள்; நான் போயிருந்தபோது அவர்கள் முதுமை அடைந்திருந்ததுடன் உடல் நலமின்றி இருந்தார்கள். சித்தியின் சுயதியாக முன்மாதிரியை பின்பற்றுவது அவசியம் என்பது தெளிவானது; ஆகவே சித்தியும் அப்பாவும் இறக்கும் வரை நான் அக்காவுடனேயே தங்கினேன்.
இங்கிலாந்தில் எளிதாக செட்டில் ஆகியிருந்திருக்கலாம்; ஆனால் சிறிதளவு ஓய்விற்குப் பிறகு நான் நியமிப்பை பெற்ற இடத்திற்கே மறுபடியும் செல்ல வேண்டிய பொறுப்பை உணர்ந்தேன். யெகோவாவின் அமைப்பு எனக்கு பயிற்சியளிக்க எக்கச்சக்கமாக செலவிடவில்லையா என்ன? ஆகவே 1972-ல், பயனியர் செய்வதற்காக சொந்த செலவில் சைப்ரஸுக்குத் திரும்பினேன்.
நேதன் எச். நார் அதற்கடுத்த வருடம் நடக்கவிருந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டைச் செய்வதற்கு வந்திருந்தார். நான் அங்கு திரும்பி வந்திருந்ததைப் பார்த்தபோது, அந்த முழு தீவிலும் நான் வட்டார கண்காணியாக சேவை செய்யும் நியமிப்பை பெற சிபாரிசு செய்தார்; நான்கு வருடங்களாக அந்த அரிய வாய்ப்பில் ஊழியம் செய்தேன். என்றாலும், பெரும்பாலும் கிரேக்கில் பேச வேண்டிய தேவை ஏற்பட்டதால் எனக்கு பயமாக இருந்தது.
கஷ்ட காலம்
வடக்கு கரையோரத்தில் கிரீன்யாவிற்கு நேரே கிழக்கிலுள்ள காராகூமீ கிராமத்தில், கிரேக்கு மொழி பேசும் சைப்ரஸைச் சேர்ந்த சாட்சியான பால் ஆன்ட்ரேயூவுடன் ஒரு வீட்டில் தங்கினேன். சைப்ரஸ் கிளை அலுவலகம் கிரீன்யா மலைகளுக்கு தெற்கிலுள்ள நிக்கசியாவில் இருந்தது. ஜூலை 1974-ன் ஆரம்பத்தில், நான் நிக்கசியாவில் இருந்தபோது, ஜனாதிபதி மக்காரியோஸின் ஆட்சியைக் கவிழ்க்க திடீர் அரசியல் புரட்சி ஏற்பட்டது; அவருடைய அரண்மனை தீக்கிரையானதை நான் கண்டேன். பாதுகாப்பாய் பயணிக்க முடிந்தபோது, கிரீன்யாவிற்கு உடனடியாக சென்றேன்; அங்கு ஒரு வட்டார மாநாட்டை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். இரண்டு நாட்களுக்குப் பின் துறைமுகத்தில் முதல் குண்டு விழுந்ததை கேட்டேன்; துருக்கியிலிருந்து முற்றுகை படைகளை கொண்டு வந்து குவித்த ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்ட வண்ணம் இருந்ததைக் கண்டேன்.
நான் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்ததால் துருக்கிய வீரர்கள் என்னை நிக்கசியாவின் எல்லைக்கு அழைத்துச் சென்றனர்; ஐநா அதிகாரி ஒருவர் என்னை விசாரித்து கிளை அலுவலகத்துடன் தொடர்பு கொண்டார். டெலிஃபோன், மின்சார கேபிள்கள் பிணைந்திருந்த வழியே பயந்து பயந்து நடந்து, இரு நாட்டிற்கும் சொந்தமல்லாத பொது நிலப்பகுதியின் மறுபக்கத்தில் ஆட்களின்றி காலியாக கிடந்த வீடுகளைச் சென்றடைந்தேன். யெகோவா தேவனுடன் பேச்சுத் தொடர்பு கொள்வதை எதுவும் தடை செய்ய முடியாமற்போனது எனக்கு சந்தோஷமாக இருந்தது! என் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பம் மிகுந்த அனுபவங்களில் ஒன்றை எதிர்ப்பட்டபோது, நான் செய்த ஜெபங்கள் என்னைத் தேற்றின.
என் உடைமைகளை எல்லாம் இழந்திருந்தேன்; ஆனால் கிளை அலுவலகத்தின் பாதுகாப்பில் இருந்ததை எண்ணி சந்தோஷப்பட்டுக் கொண்டேன். என்றாலும் இந்த சூழ்நிலை வெகுகாலத்திற்கு நீடிக்கவில்லை. சில நாட்களுக்குள் முற்றுகை படையினர் தீவின் வட பகுதியில் மூன்றில் ஒரு பாகத்தை கைப்பற்றியிருந்தனர். பெத்தேலை கைவிட வேண்டியதாயிற்று; நாங்கள் லிமாஸாலுக்கு மாறிச் சென்றோம். அங்கு வீடுகளை இழந்திருந்த அநேகர் உட்பட இந்தக் குழப்ப நிலையால் பாதிக்கப்பட்டிருந்த 300 சகோதரர்களை கவனித்துக்கொள்ள ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு குழுவோடு சேர்ந்து வேலை செய்ய முடிந்ததை எண்ணி சந்தோஷப்பட்டேன்.
நியமிப்பில் வெவ்வேறு மாற்றங்கள்
ஜனவரி 1981-ல், ஆதன்ஸிலிருந்த பெத்தேல் குடும்பத்தினருடன் சேவை செய்ய கிரீஸுக்கு மாறிச்செல்லும்படி ஆளும் குழு சொன்னது; ஆனால் அவ்வருட கடைசியில் மீண்டும் சைப்ரஸுக்குத் திரும்பினேன்; அங்கு கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கமைப்பாளராக நியமிக்கப்பட்டேன். லண்டனிலிருந்து அனுப்பப்பட்டிருந்த சைப்ரஸை சேர்ந்த ஆந்திரீயாஸ் கான்டாயார்கீஸும் அவருடைய மனைவி மாரோவும் எனக்கு ‘ஆறுதலாய்’ இருந்தார்கள்.—கொலோசெயர் 4:11.
1984-ல் தியோடர் ஜாரக்ஸின் மண்டல விஜயத்தின் முடிவில் ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது, அது தெரிவித்ததாவது: “சகோதரர் ஜாரக்ஸின் மண்டல விஜயம் முடிந்ததும் அவருடன் கிரீஸுக்குச் செல்லும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.” காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் கிரீஸில் நாங்கள் கால் பதித்தவுடனேயே ஆளும் குழுவிடமிருந்து மற்றொரு கடிதம் கிளை அலுவலகக் குழுவிற்கு வாசித்துக் காட்டப்பட்டது; அதில் அந்நாட்டு கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கமைப்பாளராக நான் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சமயத்திற்குள் விசுவாசதுரோகம் தலையெடுத்திருந்ததை கண்டோம். சட்ட விரோதமாக மதம் மாற்றுவதாக அநேக குற்றச்சாட்டுகளும் இருந்தன. தினமும் யெகோவாவின் ஜனங்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டார்கள். காலங்கள் மாறினாலும் தங்கள் உத்தமத்தன்மையில் மாறாத சகோதர சகோதரிகளின் அறிமுகம் கிடைத்தது எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்பு! அவர்களுடைய வழக்குகளில் சில, மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விசாரிக்கப்பட்டன; கிரீஸில் செய்யப்படும் பிரசங்க வேலையில் நல்ல தாக்கத்தைக் கொண்டிருந்த ஆச்சரியமான பலன்கள் கிடைத்தன.c
கிரீஸில் சேவை செய்துகொண்டிருந்தபோது, ஆதன்ஸிலும் தெஸ்ஸலோனிகியிலும், ரோட்ஸ், கிரீட் ஆகிய தீவுகளிலும் நினைவை விட்டு நீங்காத மாநாடுகளில் கலந்துகொள்ள முடிந்தது. அவை பலன்மிக்க சந்தோஷமான நான்கு ஆண்டுகள்; ஆனால் மற்றொரு மாற்றம் வரவிருந்தது—சைப்ரஸுக்கு 1988-ல் திரும்புவது.
சைப்ரஸுக்குப் பின் மீண்டும் கிரீஸுக்கு
சைப்ரஸில் நான் இல்லாத காலப்பகுதியில், நிகோசியாவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருந்த நீசூவில் சகோதரர்கள் புதிய கிளை அலுவலக வளாகங்களை வாங்கியிருந்தார்கள்; புரூக்ளினிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் கேரி பார்பர் பிரதிஷ்டைப் பேச்சைக் கொடுத்தார். அந்த தீவில் இப்போது முன்பைவிட சூழ்நிலைகள் சற்று சுமுகமடைந்திருந்தன; நானும் திரும்பி அங்கு வந்திருந்தது மகிழ்ச்சி தந்தது—ஆனால் சூழ்நிலைகள் வெகு சீக்கிரத்தில் மாறவிருந்தன.
கிரீஸில் ஆதன்ஸுக்கு வடக்கில் சில கிலோமீட்டர் தொலைவில் புதிய பெத்தேல் வீட்டைக் கட்டுவதற்கான திட்டங்களை ஆளும் குழு அங்கீகரித்திருந்தது. எனக்கு ஆங்கிலம், கிரேக்கு ஆகிய இரண்டு மொழிகளுமே பேசத் தெரிந்திருந்ததால், புதிய கட்டடம் எழும்பும் இடத்தில் வேலை செய்வதற்காக 1990-ல் அழைக்கப்பட்டேன்; அங்கு வேலை பார்த்த சர்வதேச ஊழியர்களடங்கிய குடும்பத்திற்கு மொழியாக்கம் செய்து வந்தேன். கோடையில் காலை வேளைகளில் ஆறு மணிக்கே கட்டுமான பணி நடக்கும் இடத்திற்குச் சென்று, கட்டுமான குடும்பத்தாரோடு சேர்ந்து வேலை செய்ய முன்வந்திருந்த நூற்றுக்கணக்கான கிரேக்க சகோதர சகோதரிகளை வரவேற்கும் மகிழ்ச்சியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்! அவர்களுடைய சந்தோஷமும் வைராக்கியமும் என் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகளாகும்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதகுருமார்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் அந்த இடத்திற்கு வந்து வேலையைத் தடுக்க முயன்றனர்; ஆனால் யெகோவா எங்கள் ஜெபங்களை கேட்டார்; நாங்கள் பாதுகாக்கப்பட்டோம். ஏப்ரல் 13, 1991-ல் புதிய பெத்தேல் வீடு பிரதிஷ்டை செய்யப்படுவதைக் காணும் வரை நான் அங்கேயே இருந்தேன்.
அருமை அக்காவை ஆதரித்தல்
மறுவருடம் விடுமுறையில் இங்கிலாந்திற்குச் சென்றேன்; என் அக்காவுடனும் அவள் கணவருடனும் தங்கினேன். வருத்தகரமாக, நான் அங்கிருந்தபோது, என் அக்காவின் கணவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்து அவர் இறந்துபோனார். நான் மிஷனரி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கையில் ஜோன் தாராளமாக எனக்கு உதவியிருந்தாள். வாரந்தவறாமல் எனக்கு ஆறுதல் தரும் கடிதம் எழுதினாள். எந்த மிஷனரிக்கும் அப்படிப்பட்ட தொடர்பு இருந்திருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்! இப்போதோ அவள் ஒரு விதவை, உடல் நலமும் சரியில்லை, அவளுக்கு ஆதரவு தேவைப்பட்டது. நான் என்ன செய்ய வேண்டும்?
ஜோனின் மகள் தெல்மாவும் அவள் கணவரும் அவர்களுடைய சபையில் விசுவாசமிக்க மற்றொரு விதவையான எங்கள் மாமா மகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்கெனவே ஏற்றிருந்தார்கள்; அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாயிருந்தது. ஆகவே ஏராளமான ஜெபத்திற்குப் பின்பு, ஜோனை கவனித்துக்கொள்ள அங்கேயே தங்கிவிட நான் தீர்மானித்தேன். மாற்றங்களை எளிதில் செய்ய முடியவில்லை; ஆனால் யோவில்லில் இருந்த இரண்டு சபைகளில் ஒன்றான பென் மில் சபையில் ஒரு மூப்பராக சேவை செய்யும் சிலாக்கியத்தை பெற்றிருக்கிறேன்.
வெளி நாடுகளில் என்னோடு ஊழியம் செய்த இடங்களிலுள்ள சகோதரர்கள் டெலிஃபோன், கடிதம் மூலமாக தவறாமல் தொடர்பு கொள்கின்றனர்; அதற்காக நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். கிரீஸுக்கோ சைப்ரஸுக்கோ நான் திரும்பிச் செல்ல வேண்டுமென என் விருப்பத்தை தெரிவித்தால், அடுத்த கணமே என் பயண டிக்கெட் வந்து சேர்ந்துவிடும் என்பது எனக்கு தெரியும். ஆனால் எனக்கோ 80 வயதாகிவிட்டது; முன்பிருந்த நல்ல கண்பார்வையோ உடல்நலமோ இப்போது இல்லை. முன்புபோல ஓடியாடி வேலை செய்ய முடியாதது ஏமாற்றத்தை அளித்தாலும், பெத்தேல் சேவை அளித்த பல வருட பயிற்சி அநேக பழக்கங்களை வளர்த்துக்கொள்ள உதவியிருக்கிறது; அவை இன்றும் எனக்கு கைகொடுக்கின்றன. உதாரணமாக, எப்போதும் காலை உணவுக்கு முன்பே தினவாக்கியத்தை படித்துவிடுவேன். மற்றவர்களுடன் ஒத்துப் போகவும் அவர்களை நேசிக்கவும் கற்றுக்கொண்டேன்; இவையே வெற்றிகரமான மிஷனரி சேவைக்கு மிக முக்கியமானவை.
யெகோவாவை துதித்து வந்த அற்புதமான கிட்டத்தட்ட 60-க்கும் அதிக ஆண்டுகளை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்; முழுநேர ஊழியமே மிகச் சிறந்த பாதுகாப்பு என்றும் உயர்தர கல்வி புகட்டுகிறது என்றும் தெரிந்துகொண்டேன். தாவீது யெகோவாவிடம் சொன்ன அதே வார்த்தைகளையே என் நெஞ்சமும் எதிரொலிக்கிறது: “எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.”—சங்கீதம் 59:16.
[அடிக்குறிப்புகள்]
a ஜான் வின்னின் வாழ்க்கை சரிதை, காவற்கோபுரம் பத்திரிகையில், செப்டம்பர் 1, 1997, பக்கங்கள் 25-8-ல் “நன்றியால் என் உள்ளம் பொங்கிவழிகிறது” என்ற கட்டுரையில் வெளி வந்தது.
b முன்பு அதற்கு கான்சலேஷன் என்று பெயர்.
c காவற்கோபுரம், டிசம்பர் 1, 1998, பக்கங்கள் 20-1-ஐயும், செப்டம்பர் 1, 1993, பக்கங்கள் 27-31-ஐயும், விழித்தெழு! ஜனவரி 8, 1998, பக்கங்கள் 21-2-ஐயும், மார்ச் 22, 1997, பக்கங்கள் 14-5-ஐயும் காண்க.
[பக்கம் 24-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கிரீஸ்
ஆதன்ஸ்
சைப்ரஸ்
நிக்கசியா
கிரீன்யா
ஃபமகுஸ்தா
லிமாஸால்
[பக்கம் 21-ன் படம்]
அம்மா, 1915-ல்
[பக்கம் 22-ன் படம்]
1946-ல் புரூக்ளின் பெத்தேல் மேல் மாடியில், கிலியட் பள்ளியின் எட்டாவது வகுப்புக்குச் சென்ற சில சகோதரர்களுடன் நான் (இடமிருந்து நான்காவது)
[பக்கம் 23-ன் படம்]
முதன்முறையாக இங்கிலாந்துக்குத் திரும்பிய பிறகு மில்லீ சித்தியுடன்