ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
யெகோவா தம் எதிரிகளைவிட பலம்வாய்ந்தவர்
சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் பொய் மதம் மற்றும் ஆவிக்கொள்கைகளின் மூலம் நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதைத் தடுக்க நீண்டகாலமாக முயற்சித்திருக்கின்றனர். சாத்தானின் பொல்லாத நோக்கத்தைப்பற்றி பைபிள் 2 கொரிந்தியர் 4:4-ல் பேசுகிறது. அது சொல்லுகிறது: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.”
ஆனால் யெகோவா தேவனோ சாத்தானைவிட பலம்வாய்ந்தவராக இருக்கிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்,” என்ற யெகோவாவின் தெய்வீக சித்தம் நிறைவேறுவதைத் தடுக்க அவருடைய எதிரிகள் ஒன்றுமே செய்யமுடியாது. (1 தீமோத்தேயு 2:4) ஆஸ்திரேலியாவில் உள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளிடம் இருந்துவரும் கீழ்க்கண்ட இந்த அறிக்கைகள் இதைச் சிறப்பித்துக் காட்டுகின்றன.
◻ மதத்திலிருந்து 20 வருடங்களாக விலகியிருந்தபின், ஒரு பெண்மணி மீண்டும் பைபிளை வாசிக்கத் தொடங்கினார். பைபிளின்பேரிலான இந்தப் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் அவரில் அநேக கேள்விகளை எழுப்பிற்று. ஆகவே பதில்களைக் கண்டுபிடிக்க உதவிசெய்யுமாறு கடவுளிடம் ஜெபம் செய்தார். அவர் சத்தியத்தைத் தேட விரும்பினார். ஆனால் தன்னுடைய பழைய மதத்திற்குத் திரும்பிச் செல்வது தன்னுடைய பிரச்சினையைத் தீர்க்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்தார். அதற்கு பதிலாக, சத்தியத்திற்கான தேடுதலை முதலில் ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போவதோடு தொடங்கினார். மதத்தின்பேரில் ஏதேனும் புத்தகங்கள் இருக்கின்றனவா என்று அவர் கேட்டார்.
மதத்தைப் பற்றிய ஒரு புத்தகம் கடையில் அல்ல ஆனால் வீட்டில் இருந்தது கடைக்காரருக்கு ஞாபகம் வந்தது. அந்தப் புத்தகத்தின் தலைப்பு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்பதாக இருந்தது. அந்தப் பெண்மணி ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தை வாசித்தார். தனது பைபிள் கேள்விகளில் அநேகத்துக்கு பதில்களைக் கண்டுபிடித்தார். டெலிபோன் டைரக்டரியில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி தேடிய பிறகு, கடைசியில் அவர்களோடு தொடர்புகொண்டு, ஒழுங்கான பைபிள் படிப்பு ஒன்றைத் தொடங்கினார்.
◻ தாயத்து ஒன்றின் விற்பனையை விளம்பரப்படுத்த வாலிபப்பெண் ஒருத்தி உள்ளூர் செய்தித்தாளின் உதவியை நாடினாள். அந்த விளம்பரம் அதை ‘அதிக வல்லமை வாய்ந்த இடைக்காலத் தாயத்து’ என்பதாகக் குறிப்பிட்டது. யெகோவாவின் சாட்சிகளில் ஒரு சகோதரி இந்த விளம்பரத்தைக் கண்டார். அதில் கொடுக்கப்பட்டிருந்த டெலிபோன் நம்பருக்கு போன் செய்து, அந்தத் தாயத்துக்கு இருப்பதாகச் சொல்லப்படும் வல்லமையின் ஊற்றுமூலத்தைப்பற்றி அந்தப் பெண்ணிடம் பேசவேண்டும் என்று அவர் தீர்மானித்தார். பிசாசுகளின் நடவடிக்கையைப் பற்றிய பைபிளின் நோக்குநிலையைப் பற்றிய ஒரு சம்பாஷணை தொடர்ந்தது. ஒரு நாளைக்கு முன்புதான், பேய்கள் தனக்குக் கொடுக்கும் பிரச்சினைகளில் உதவும்படி தான் கடவுளிடம் ஜெபம் செய்திருப்பதாக, தாயத்தை வைத்திருந்த அந்த வாலிபப் பெண் தெரிவித்தாள். அந்தச் சாட்சி டெலிபோனில் இன்னொரு முறை கலந்து பேசுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அவர் போனில் கூப்பிடும்போது, அந்த வாலிபப் பெண் வீட்டில் இல்லை. அவளுடைய அம்மா டெலிபோனை எடுத்து, “என் மகளிடம் நீங்கள் என்ன சொன்னீர்களோ தெரியவில்லை, ஆனால் என்ன நடந்ததோ அது அற்புதம்தான்!” என்று பதிலுக்கு சொன்னார்கள். அந்தச் சாட்சி முதல் முறை பேசியதைத் தொடர்ந்து, தன்னுடைய மகள் அவளுடைய சாத்தானிய படங்கள், புத்தகங்கள் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு பைபிள் படிக்கத் தொடங்கிவிட்டாள் என்று விவரித்தார்கள்.
அதன்பின் விரைவில் அந்த வாலிபப் பெண்ணை நேரில் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவள் உடனடியாக யெகோவாவின் சாட்சிகளோடு ஒரு ஒழுங்கான பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள். சாட்சிகளின் கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவதன்மூலம் அவர்களோடு கூட்டுறவுகொள்ளவும் ஆரம்பித்தாள். பைபிள் சத்தியங்களின் திருத்தமான அறிவை ஒளிரச்செய்வதன் மூலம் யெகோவா மீண்டும் பிசாசுகளைத் தோற்கடித்தார்.