மைமானடிஸ்—யூத மதத்துக்கு மறுவிளக்கம் கொடுத்தவர்
“பைபிள் காலத்து மோசே முதல் மோசே வரை மோசேக்கு ஒப்பானவர் எவருமே இல்லை.” இந்த மறைப்புதிரான கூற்றை அநேக யூதர்கள் 12-ஆம் நூற்றாண்டு யூத தத்துவஞானியும் முறைப்படுத்தியவரும் யூத வேதத்துக்கும் (தல்மூட்) வேதவார்த்தைகளுக்கும் விளக்கவுரையாளருமான—மைமானடிஸ் என்றும் ராம்பாம் என்றும் அறியப்பட்ட—மோசஸ் பென் மைமானுக்குப் புகழ்ச்சியாக உரைக்கப்பட்ட வார்த்தைகள் என்று அறிவர்.a இன்று மைமானடிஸைப் பற்றி அநேகருக்குத் தெரியாது, ஆயினும் அவர் எழுதியவை அவருடைய நாட்களிலிருந்த யூத, முகமதிய மற்றும் சர்ச் சிந்தனையில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. அடிப்படையான விதத்தில் அவர் யூத மதத்திற்கு மறுவிளக்கம் தந்தார். மைமானடிஸ் என்பவர் யார்? அநேக யூதர்கள் அவரை “இரண்டாவது மோசே”யாக ஏன் நோக்குகின்றனர்?
மைமானடிஸ் என்பவர் யார்?
மைமானடிஸ் ஸ்பெய்னில் உள்ள கோர்டோபாவில் 1135-ல் பிறந்தார். அவருக்குப் பெரும்பாலான ஆரம்ப மத பயிற்றுவிப்பை அளித்த அவருடைய தந்தை மைமான் சிறப்புப் பெற்ற ரபீக்களின் குடும்பத்திலிருந்து வந்த ஒரு பேர்பெற்ற கல்விமான். கோர்டோபாவை 1148-ல் அல்மொகாடுகள் வென்ற போது அங்கிருந்த யூதர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறுவதா அல்லது அங்கிருந்து ஓடிவிடுவதா என்ற தெரிவை எதிர்ப்பட்டனர். மைமானடிஸ் குடும்பம் நீண்டகாலத்துக்கு இங்குமங்கும் அலையும்படியாக இது செய்தது. 1160-ல், அவர்கள் மொராக்கோவில் இருந்த ஃபெஜ் என்ற இடத்தில் குடியேறினர், அங்கு அவர் ஒரு மருத்துவராக பயிற்றுவிப்பைப் பெற்றார். 1165-ல், அவருடைய குடும்பம் பலஸ்தீனாவுக்கு ஓட வேண்டியதாயிற்று.
ஆயினும், இஸ்ரேலில் நிலைமை நிலையற்றதாய் இருந்தது. அங்கிருந்த சிறிய யூத சமுதாயத்தினர் கிறிஸ்தவமண்டலத்தின் சிலுவைப்போர் வீரர்களிடமிருந்தும் முகமதிய படைகளிலிருந்தும் ஒரேவிதமான ஆபத்தை எதிர்ப்பட்டனர். “பரிசுத்த தேச”த்தில் சுமார் ஆறு மாதங்கள் தங்கியபின் மைமானடிஸும் அவர் குடும்பமும் எகிப்திலிருந்த பண்டைய கெய்ரோ பட்டணத்தில் ஃப்யூஸ்டாட் என்ற இடத்தில் தஞ்சம் புகுந்தனர். இங்கு தான் மைமானடிஸின் திறமைகள் முழுமையாக கண்டுணரப்பட்டன. 1177-ல் அவர் யூத சமுதாயத்தின் தலைவராக ஆனார், 1185-ல் பிரபல முகமதிய தலைவரான சலாதீனின் அரண்மனை மருத்துவராக நியமிக்கப்பட்டார். மைமானடிஸ் இவ்விரு ஸ்தானங்களையும் 1204-ல் அவருடைய மரணம் வரையாக வகித்திருந்தார். அவருடைய மருத்துவத் திறமை அவ்வளவு புகழ் பெற்றதாக இருந்ததால், தொலைதூரத்திலிருந்த இங்கிலாந்தின் அரசனான தைரியசாலி ரிச்சர்டு மைமானடிஸை தன்னுடைய தனிப்பட்ட மருத்துவராக ஆக்கிக்கொள்ள முயன்றதாக சொல்லப்படுகிறது.
அவர் என்ன எழுதினார்?
மைமானடிஸ் ஒரு மாபெரும் எழுத்தாளர். முகமதிய துன்புறுத்தலை விட்டு ஓடுகையிலும் தலைமறைவாக இருக்கையிலும் அகதியாக தப்பி ஓடுகையிலும் அவருடைய பிரதான புத்தகமாகிய மிஷ்னாவின் பேரில் விளக்கவுரை (ஆங்கிலம்) என்பதன் பெரும்பகுதியை அவர் தொகுத்தார்.b அரபு மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகம் மிஷ்னாவிலுள்ள அநேக கொள்கைகளையும் பதங்களையும் விளக்குகிறது, சில சமயங்களில் யூத மதத்தின் பேரில் மைமானடிஸின் தத்துவ விளக்கங்களையும் கூறுகிறது. யூத நியாயசங்கம் ஆராய்ச்சிக் கட்டுரையை விளக்கும் பகுதியில் மைமானடிஸ் யூத விசுவாசத்துக்கு 13 அடிப்படை நியமங்களை வரையறுத்தார். யூத மதம் அதன் நம்பிக்கைகளின் அறிக்கையை முறைப்படியாக ஒருபோதும் விளக்கியதில்லை. இப்போது மைமானடிஸின் விசுவாசத்துக்கான 13 நியமங்கள் நாளடைவில் வரையறுக்கப்பட்ட யூத மதக்கோட்பாட்டின் முன்னுருவமாக ஆயின.—பக்கம் 23-ல் உள்ள பெட்டியைக் காண்க.
மைமானடிஸ் எல்லாவற்றிலும், அவை சடப்பொருளானாலும் ஆவிக்குரியவையானாலும், அவற்றிலுள்ள நியாயமான கிரமத்தை விளக்க முயன்றார். குருட்டு நம்பிக்கையை நிராகரித்து, அவர் பகுத்தறிவுக்குரிய நிரூபணங்கள் மற்றும் நியாயங்கள் என்று கருதியவற்றின் அடிப்படையில் எல்லாவற்றுக்கும் விளக்கங்களை வற்புறுத்தினார். இந்த இயற்கையான நாட்டம் அவருடைய இலக்கியப் பெரும்படைப்பை எழுதும்படி வழிநடத்தியது.—மிஷ்னே டோரா.c
மைமானடிஸின் நாட்களில் இருந்த யூதர்கள் “டோரா” அல்லது “நியாயப்பிரமாணம்” என்ற பதம் மோசே பதிவு செய்த வார்த்தைகளுக்கு மட்டுமன்றி, நூற்றாண்டுகளாக இந்த நியாயப்பிரமாணத்திற்கு ரபீக்கள் கொடுத்த எல்லா பொருள் விளக்கங்களுக்கும்கூட பொருந்துவதாக கருதினர். இந்தக் கருத்துக்கள் யூத வேதத்திலும், யூத வேதத்தின் பேரில் ரபீக்கள் செய்த ஆயிரக்கணக்கான தீர்மானங்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகியவற்றிலும் பதிவு செய்யப்பட்டன. இந்த எல்லா தகவலின் பெருத்த அளவும் ஒழுங்கற்ற நிலையும் ஒரு சராசரி யூதன் தன்னுடைய அன்றாடக வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட தீர்மானங்களைச் செய்ய முடியாதபடி ஆக்கிவிட்டன என்பதை மைமானடிஸ் உணர்ந்தார். பெரும்பாலும் கடினமான அரமேயிக் மொழியில் எழுதப்பட்டிருந்த ரபீக்களின் இலக்கியங்களையெல்லாம் வாழ்நாட்காலம் முழுவதும் படிப்பதற்குரிய நிலையில் பெரும்பாலானோர் இல்லை. மைமானடிஸின் தீர்வு இந்த எல்லா தகவலையும் சேர்ந்து திரட்டியமைத்து நடைமுறையான தீர்மானங்களை மேம்படுத்தி அவற்றை பொருளின் தலைப்புக்கு ஏற்றபடி பிரிக்கப்பட்ட 14 புத்தகங்கள் அடங்கிய ஒரு கிரமமான ஏற்பாடாக ஒழுங்கமைப்பதே ஆகும். அவர் அதைத் தெளிவான சரளமான எபிரெய மொழியில் தேர்ந்த விதத்தில் எழுதினார்.
மிஷ்னே டோரா அத்தனை நடைமுறையான வழிகாட்டியாக இருந்ததால், சில யூதத் தலைவர்கள் இது யூத வேதத்தின் இடத்தை முற்றிலுமாக எடுத்துக்கொள்ளும் என்று பயந்தனர். ஆயினும், அதற்கு மறுப்புத் தெரிவித்தவர்களும்கூட அந்தப் புத்தகத்தில் காணப்பட்ட பெரும் புலமையை ஒத்துக்கொண்டனர். இந்த மேம்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட சட்டத்தொகுப்பு ஒரு புரட்சிகரமான சாதனையாக இருந்தது. ஒரு சாதாரண மனிதனால் பொருத்த அல்லது கிரகித்துக்கொள்ள முடியாத யூத ஒழுங்குமுறைக்குப் புதிய உயிரை அளித்தது.
பின்பு மைமானடிஸ் மற்றொரு மகத்தான புத்தகமாகிய குழப்பமடைந்தோர்க்கு வழிகாட்டி (ஆங்கிலம்) என்பதை எழுத ஆரம்பித்தார். கிரேக்க இலக்கியங்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதனால் யூதர்கள் பெருமளவில் அரிஸ்டாட்டிலையும் பிற தத்துவ ஞானிகளையும் பற்றி தெரிந்துகொள்ள ஆரம்பித்தனர். சிலர் பைபிள் பதங்களின் சொல்லர்த்தமான அர்த்தத்தை தத்துவங்களோடு பொருத்துவதைக் கடினமாகக் கண்டதால் குழப்பமடைந்தனர். அரிஸ்டாட்டிலை வெகுவாக பாராட்டிய மைமானடிஸ் குழப்பமடைந்தோர்க்கு வழிகாட்டி என்ற புத்தகத்தில் பைபிள் மற்றும் யூதேய மதத்தின் சாராம்சத்தைத் தத்துவ எண்ணங்களுக்கும் நியாயத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு விதத்தில் விளக்க நாடினார்.—1 கொரிந்தியர் 2:1-5, 11-16-ஐ ஒப்பிடுக.
இந்த மகத்தான புத்தகங்களும் பிற எழுத்துக்களும் மட்டுமன்றி மைமானடிஸ் மருத்துவம், வானியல் ஆகிய துறைகளிலும் அதிகாரப்பூர்வமாக எழுதினார். அவருடைய ஏராளமான எழுத்துக்களுள் மற்றொரு அம்சம் கவனிக்காமல் விடப்படமுடியாது. என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா உரைக்கிறது: “கடிதம் எழுதுவதில் ஒரு சகாப்தத்தை மைமானடிஸின் கடிதங்கள் குறிக்கின்றன. தன் கடிதப் போக்குவரத்து பெரும்பாலும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள முதல் யூத கடித எழுத்தாளர் அவரே. . . . எவர்களுக்குக் கடிதம் எழுதினாரோ அவர்களுடைய மனதுக்கும் இருதயத்துக்கும் கவர்ச்சிகரமாய் இருக்கும்வண்ணம் அவருடைய கடிதங்கள் அமைந்திருந்தன, அவர்களுக்கு ஏற்றபடி தன் பாணியையும் அவர் மாற்றியமைத்துக் கொண்டார்.”
அவர் கற்பித்தது என்ன?
அவருடைய விசுவாசத்தின் 13 நியமங்களில் நம்பிக்கைக்குத் தெளிவான சுருக்க உரையை அவர் அளித்தார், அவற்றில் சில வேதாகமத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. ஆயினும், ஏழாம் மற்றும் ஒன்பதாம் நியமங்கள் இயேசு மேசியா என்ற வேதாகம அடிப்படையைக் கொண்ட விசுவாசத்தின் முக்கியக் கருத்துடன் முரண்படுகின்றன.d கிறிஸ்தவமண்டலத்தின் விசுவாசத்துரோக போதனைகளான திரித்துவம் போன்றவற்றையும், சிலுவைப்போர்களின் இரத்தம் சிந்துதல் மூலம் வெளிப்படுத்திக் காட்டப்பட்ட ஒளிவுமறைவில்லாத மாய்மாலத்தையும் கவனிக்கையில், இயேசுவின் மேசியானிய ஸ்தானத்தைப் பற்றிய கேள்வியில் மைமானடிஸ் மேலும் அதிக ஆழ்ந்து செல்லாதது வியப்புக்குரியது அல்ல.—மத்தேயு 7:21-23; 2 பேதுரு 2:1, 2.
மைமானடிஸ் எழுதுகிறார்: “[கிறிஸ்தவத்தைக்] காட்டிலும் மிகப் பெரிய இடையூறு ஏதாவது இருக்கக்கூடுமா? எல்லா தீர்க்கதரிசிகளும் மேசியாவை இஸ்ரவேலின் மீட்பராகவும் அதன் இரட்சகராகவும் பேசினர் . . . [முரணாக, கிறிஸ்தவம்] யூதர்கள் பட்டயத்தால் கொல்லப்பட்டு, அவர்களின் மீதியானோர்கள் சிதறடிக்கப்பட்டு தாழ்த்தப்படவும், யூத வேதம் மாற்றியமைக்கப்படவும், உலகத்தின் பெரும் பகுதி தவறிழைக்கவும் ஆண்டவரைத் தவிர மற்றொரு கடவுளை சேவிக்கவும் செய்தது.”—மிஷ்னே டோரா, “அரசர்களின் சட்டங்களும் அவர்களின் போர்களும்,” அதிகாரம் 11.
ஆயினும் அவருக்குக் காட்டப்பட்ட எல்லா மரியாதைக்கிடையிலும் மைமானடிஸ் அதிக நேரடியாக பேசியுள்ள குறிப்பிட்ட விவாதங்களின் பேரில் அவரைப் புறக்கணிக்க விரும்புகின்றனர். ஆன்மீக யூத மதத்தின் (கபாலா) அதிகரித்து வந்த செல்வாக்கின் காரணமாக சோதிடம் யூதர்கள் மத்தியில் அதிக பிரபலமாக ஆனது. மைமானடிஸ் எழுதினார்: “சோதிடத்தில் ஈடுபட்டு தன் வேலையை அல்லது பிரயாணத்தை சோதிடர்கள் நிர்ணயிக்கும் நேரத்தை அடிப்படையாகக்கொண்டு திட்டமிடும் எவரும் சாட்டையினால் அடிக்கப்பட வேண்டும் . . . இக்காரியங்களெல்லாம் பொய்யும் வஞ்சனையுமாய் இருக்கின்றன . . . இக்காரியங்களில் நம்பிக்கை வைக்கும் எவனும் . . . முட்டாளும் புத்தியற்றவனுமாய் இருக்கிறான்.”—மிஷ்னே டோரா, “விக்கிரக ஆராதனையின் பேரில் சட்டங்கள்,” அதிகாரம் 11; லேவியராகமம் 19:26; உபாகமம் 18:9-13-ஐ ஒப்பிடுக.
மற்றொரு பழக்கத்தையும் மைமானடிஸ் வெகுவாகக் கண்டித்தார்: “தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் சமுதாயத்திலிருந்தும் [ரபீக்கள்] தங்களுக்கென்று பண வசூலை நிர்ணயித்து மக்களை அது ஒரு கடமையென்றும் சரியானதென்றும் முட்டாள்தனமாக சிந்திக்கும்படி செய்வித்தனர் . . . இதெல்லாம் தவறு. இந்த நம்பிக்கையை ஆதரிப்பதற்கு யூத வேதத்திலோ அல்லது [தல்மூட்டில் தேறிய] யூத ஞானிகளின் வார்த்தைகளிலோ ஒன்றுமே கிடையாது.” (மிஷ்னாவின் பேரில் விளக்கவுரை, ஏவாட் 4:5) இந்த ரபீக்களைப் போன்றில்லாமல் மைமானடிஸ் தன்னை ஆதரித்துக்கொள்ள ஒரு மருத்துவராக கடினமாக வேலை செய்தார், தன் மத சேவைகளுக்கு ஒருபோதும் ஊதியம் வாங்கவில்லை.—ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 2:17; 1 தெசலோனிக்கேயர் 2:9.
யூத மதமும் மற்ற நம்பிக்கைகளும் எவ்வாறு பாதிக்கப்பட்டன?
எருசலேமிலுள்ள எபிரெய பல்கலைக்கழக பேராசிரியர் யெஷையிஹூ லீபோவிட்ஸ் கூறினார்: “முற்பிதாக்களின் காலம்தொட்டு தற்காலத்திய தீர்க்கதரிசிகள் வரை யூத மத சரித்திரத்தில் மைமானடிஸ் மிக அதிக செல்வாக்குமிக்க நபர் ஆவர்.” என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா கூறுகிறது: “யூத மதத்தின் எதிர்கால வளர்ச்சியின் பேரில் மைமானடிஸின் செல்வாக்குக் கணக்கிடப்பட முடியாதது . . . மைமானடிஸ் இருந்தில்லையென்றால் யூத மதம் அநேக பிரிவுகளாகவும் நம்பிக்கைகளாகவும் பிளவுபட்டுப் போயிருக்கும் என்றும்கூட சி. சிர்னோவிட்ஸ் . . . கூறுகிறார் . . . பலவிதமான போக்குகளை ஒற்றுமைப்படுத்தியது அவருடைய மாபெரும் சாதனையாகும்.”
யூத கருத்துக்களை கிரமம் மற்றும் நியாயம் என்பதன் பேரில் தான் கொண்டிருந்த சொந்த கருத்துக்களுக்குப் பொருந்தும்படி மாற்றியமைப்பதன் மூலம் மைமானடிஸ் யூத மதத்திற்கு மறுவிளக்கம் கொடுத்தார். அவருடைய புதிய விளக்கம் அறிஞர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் நடைமுறையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் தோன்றியது. அவரை எதிர்த்தவர்களும்கூட நாளடைவில் மைமானடிஸின் அணுகுமுறையில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டனர். முடிவில்லாத விளக்கவுரைகளின் பேரில் சார்ந்திருப்பதிலிருந்து யூதர்களை விடுவிக்கும் நோக்கத்துடன் அவருடைய எழுத்துக்கள் எழுதப்பட்டபோதிலும் அவருடைய புத்தகங்களின் பேரில் சீக்கிரத்திலேயே நீண்ட விளக்கவுரைகள் எழுதப்படலாயின.
என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா கூறுகிறது: “மைமானடிஸ் . . . இடைநிலைக்கால யூத தத்துவ அறிஞர்களுள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர், ஒரு யூதனால் எழுதப்பட்ட தத்துவநூல்களுள் அவருடைய குழப்பமடைந்தோர்க்கு வழிகாட்டி அதிமுக்கியமான புத்தகம் ஆகும்.” அரபு மொழியில் எழுதப்பட்டபோதிலும், குழப்பமடைந்தோர்க்கு வழிகாட்டி மைமானடிஸின் வாழ்நாட்காலத்திலேயே எபிரெய மொழியிலும் பின்பு லத்தீனிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் படிக்கப்படும்படி செய்யப்பட்டது. இதன் விளைவாக அரிஸ்டாட்டிலின் தத்துவத்தை யூத கருத்துக்களுடன் சேர்ந்த மைமானடிஸின் தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக்கள் கிறிஸ்தவமண்டலத்தின் பிரதான சிந்தனைகளுக்குள் கலந்துவிட்டன. அக்காலத்திலிருந்த கிறிஸ்தவமண்டல அறிஞர்களான அல்பெர்ட்டஸ் மேனஸ் மற்றும் தாமஸ் அக்வினஸ் போன்றவர்கள் மைமானடிஸின் கருத்துக்களை அடிக்கடி குறிப்பிடுகின்றனர். இஸ்லாமிய அறிஞர்களும்கூட அதன் செல்வாக்கின்கீழ் வந்தனர். மைமானடிஸின் தத்துவரீதியான அணுகுமுறை பிற்பாடு வந்த யூத தத்துவஞானிகளான பாருக் ஸ்பினோசா போன்றவர்கள் புராதன யூத மதத்திலிருந்து முழுமையாக பிரிந்துசெல்லும்படி செய்தது.
மைமானடிஸ் மறுமலர்ச்சி காலத்துக்கு முன் வாழ்ந்த தீவிர மறுமலர்ச்சி சிந்தனையுள்ள ஒரு மனிதனாக எண்ணப்படக்கூடும். விசுவாசம் நியாயத்திற்கு இணக்கமாக இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்தியது இப்போதும் ஒரு தகுதியான நியமமாக உள்ளது. மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையாகப் பேசும்படி இந்த நியமம் அவரை நடத்தியது. ஆயினும் கிறிஸ்தவமண்டலத்தின் தவறான முன்மாதிரியும் அரிஸ்டாட்டிலின் தத்துவங்களின் செல்வாக்கும் பைபிளின் சத்தியங்களுக்கு இணக்கமாயுள்ள முடிவுகளை அவர் எட்டமுடியாதபடி அடிக்கடி அவரைத் தடுத்தன. மைமானடிஸின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வார்த்தைகளான—“மோசே முதல் மோசே வரை மோசேக்கு ஒப்பானவர் எவரும் இல்லை” என்பதுடன் அனைவருமே ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்றாலும் யூத மதத்தின் போக்குக்கும் அமைப்புக்கும் அவர் மறுவிளக்கம் கொடுத்தார் என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதாய் இருந்தது.
[அடிக்குறிப்புகள்]
a “ராம்பாம்” என்பது “ரபீ மோசஸ் பென் மைமான்” (“Rabbi Moses Ben Maimon”) என்ற சொற்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு எபிரெய பெயராகும்.
b மிஷ்னா என்பது வாய்மொழியாக சொல்லப்பட்ட சட்டங்கள் என்று யூதர்கள் கருதியவற்றின் பேரில் சார்ந்த ரபீக்களின் விளக்கவுரைகளின் தொகுப்பாகும். இது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் எழுதப்பட்டு யூத வேதங்களின் ஆரம்பமாக அமைந்தன. கூடுதலான தகவலுக்கு உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த யுத்தமில்லாத ஓர் உலகம் எப்போதாவது இருக்கக்கூடுமா? (ஆங்கிலம்) என்ற சிற்றேட்டில் பக்கம் 10-ஐக் காண்க.
c மிஷ்னே டோரா என்ற பெயர் உபாகமம் 17:18-லிருந்து வரும் ஓர் எபிரெய பதமாகும். அதன் பொருள், நியாயப்பிரமாணத்தின் நகல் அல்லது மறுவுரை என்பதாகும்.
d இயேசு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா என்பதற்கான அத்தாட்சியின் பேரில் கூடுதலான தகவலைப் பெற உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த யுத்தமில்லாத ஓர் உலகம் எப்போதாவது இருக்கக்கூடுமா? என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 24-30-ஐக் காண்க.
[பக்கம் 23-ன் பெட்டி]
மைமானடிஸ் கொடுத்த விசுவாசத்தின் 13 நியமங்கள்e
1. கடவுள் எல்லா காரியங்களின் படைப்பாளரும் ஆட்சியாளருமாய் இருக்கிறார். அவர் மட்டுமே எல்லா காரியங்களையும் செய்திருக்கிறார், செய்கிறார், செய்வார்.
2. கடவுள் ஒருவரே. அவருடையதைப் போன்ற ஐக்கியம் வேறு எதுவும் இல்லை.
3. கடவுள் ஒரு உடலைக் கொண்டில்லை. சரீரத் தோற்றங்கள் அவருக்குப் பொருந்துவதில்லை.
4. கடவுள் முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறார்.
5. கடவுளிடம் மட்டுமே ஜெபிப்பது சரியானது. ஒருவர் வேறு எவரிடமாவது அல்லது வேறு எதனிடமாவது ஜெபம் செய்யமாட்டார்.
6. தீர்க்கதரிசிகளின் எல்லா வார்த்தைகளும் உண்மையானவை.
7. மோசேயின் தீர்க்கதரிசனம் முற்றிலும் உண்மையானது. அவர் எல்லா தீர்க்கதரிசிகளிலும் முதன்மையானவராக இருந்தார், அவருக்கு முன்பும் அவருக்குப் பின்பும்.
8. மோசேக்குக் கொடுக்கப்பட்ட முழு டோராவை இப்போது நாம் கொண்டிருக்கிறோம்.
9. டோராவை மாற்ற முடியாது, கடவுளால் மற்றொன்று கொடுக்கப்படப் போவதில்லை.
10. மனிதனின் எல்லா சிந்தனைகளையும் எண்ணங்களையும் கடவுள் அறிந்திருக்கிறார்.
11. கடவுள் அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர்களுக்குப் பலனளிக்கிறார், அவருக்கு விரோதமாக அவருடைய கட்டளைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்கிறார்.
12. மேசியா வருவார்.
13. மரித்தோர் மறுபடியும் உயிருக்குக் கொண்டு வரப்படுவர்.
[அடிக்குறிப்புகள்]
e மிஷ்னாவின் பேரில் குறிப்புரை என்ற தன் புத்தகத்தில் மைமானடிஸ் இந்த நியமங்களை விளக்கினார், (சான்ஹெட்ரின் 10:1) யூத மதம் பின்பு அவற்றை மத கோட்பாடாக ஏற்றுக்கொண்டது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயம் யூத ஜெப புத்தகத்திலிருந்து சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
[பக்கம் 21-ன் படத்திற்கான நன்றி]
Jewish Division / The New York Public Library / Astor, Lenox, and Tilden Foundations