நாக்மானடிஸ்—அவர் கிறிஸ்தவத்தைத் தவறென நிரூபித்தாரா?
இடைக்காலங்கள். அவை எதை மனதிற்குக் கொண்டுவருகின்றன? சிலுவைப்போர்களையா? ஒடுக்கு முறை விசாரணைகளையா? சித்திரவதைகளையா? திறந்த மனதோடு மத சம்பந்தமான விஷயங்களைக் கலந்துரையாடுவதோடு வழக்கமாக சம்பந்தப்படுத்தப்படாத ஒரு காலப்பகுதியாக இருந்தபோதிலும், அந்தச் சமயத்தில், அதாவது 1263-ம் ஆண்டில், ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த யூத-கிறிஸ்தவ விவாதம் ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டவர்கள் யார் யார்? என்னென்ன பிரச்சினைகள் எழுப்பப்பட்டன? உண்மை மதத்தை அடையாளம் காண அது இன்று நமக்கு எவ்வாறு உதவக்கூடும்?
விவாதத்தைக் கிளப்பியது எது?
இடைக்காலங்கள் முழுவதும், ரோமன் கத்தோலிக்க சர்ச் தன்னைத்தானே உண்மை மதமாக காண்பித்து வந்தது. என்றபோதிலும், தாங்கள்தான் கடவுளின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றனர் என்ற வாதத்தை யூத மக்கள் ஒருபோதும் கைவிடவுமில்லை. யூதர்கள் மதம் மாறவேண்டிய தேவை இருக்கிறதென்று சர்ச் அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்ய முடியாமல் போனது, சர்ச்சின் பெருத்த ஏமாற்றத்துக்கும், அடிக்கடி வன்முறையும் துன்புறுத்தலும் நடைபெறுவதற்கும் வழிநடத்திற்று. சிலுவைப் போர்களின்போது, முழுக்காட்டுதல் அல்லது சாவு என்ற தெரிவை யூதர்களுக்கு முன்வைக்கையில் லட்சக்கணக்கான யூதர்கள் சாவை தெரிந்துகொண்டனர் அல்லது கழுமரத்தில் கட்டி எரிக்கப்பட்டனர். அநேக நாடுகளில் சர்ச்சால் தூண்டுவிக்கப்பட்ட யூதர்களுக்கெதிரான நடவடிக்கைகள் பரவலாக இருந்தன.
ஆனாலும் 12-ம், 13-ம் நூற்றாண்டுகளில் இருந்த கத்தோலிக்க நாடாகிய ஸ்பெய்னில், வித்தியாசப்பட்ட ஒரு மனநிலை நிலவிற்று. யூதர்களுக்கு—அவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தைத் தாக்காமல் இருக்கும்வரை—மத சுயாதீனம் அளிக்கப்பட்டது; ராஜாங்கத்தில் முக்கியமான பதவிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் சுமார் நூற்றாண்டுகால இத்தகைய சலுகைக்குப் பிறகு, டாமினிக் துறவியர் குழுவினர், சமுதாயத்தில் யூதர்களுடைய செல்வாக்கைக் குறைத்திடவும் யூதர்களைக் கத்தோலிக்கராக மதம் மாற்றவும் நடவடிக்கை எடுத்தனர். டாமினிக் துறவியர் குழுவைச் சேர்ந்தவர்கள் முறைப்படியான ஒரு விவாதத்துக்கு ஏற்பாடு செய்யும்படியாக ஆரகானின் மன்னர் முதலாம் ஜேம்ஸ்-ஐ வற்புறுத்தினர்; யூத மதம் தரத்தில் தாழ்ந்தது என்பதையும் எல்லா யூதர்களும் மதம் மாறுவது அவசியம் என்பதையும் நிரூபிப்பதே அதன் நோக்கமாக இருந்தது.
இதுவே முதல் யூத-கிறிஸ்தவ விவாதமாக இருக்கவில்லை. 1240-ம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பாரிஸில் முறைப்படியான வாக்குவாதம் ஒன்று நடைபெற்றது. யூதர்களுடைய பரிசுத்த புத்தகமான தல்மூட்டை (Talmud) ஆய்வுசெய்வதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இருந்தபோதிலும், இதில் கலந்துகொண்ட யூதர்களுக்கு கொஞ்சம் பேச்சு சுயாதீனமே கொடுக்கப்பட்டது. இந்த விவாதத்தில் தான் வெற்றிபெற்றதாக சர்ச் அறிவித்த பின்பு, தல்மூட்டின் ஏராளமான பிரதிகள் பொதுவிடத்தில் கொண்டுவந்து எரிக்கப்பட்டன.
ஆனால் ஆரகானின் மன்னர் முதலாம் ஜேம்ஸ்-க்கு இருந்த அதிக சகிப்புத்தன்மையுள்ள மனநிலை இதை அனுமதிக்கவில்லை. இதை உணர்ந்த, டாமினிக் துறவியர் குழுவினர் வேறு ஒரு அணுகுமுறையை முயற்சித்தனர். ஜூடேயிஸம் ஆன் ட்ரையல் என்ற தன்னுடைய புத்தகத்தில் கியாம் மேக்கோபி விவரித்திருக்கிறபடி, “பாரிஸில் செய்ததுபோல குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல, ஆனால் வெளித்தோற்றத்தில் மரியாதைக்கும் நல்லிணக்கத்துக்குமுரிய” ஒரு விவாதத்துக்கு அவர்கள் யூதர்களை அழைத்தனர். யூதனாக இருந்து பின்னர் கத்தோலிக்க மதத்துக்கு மாறி ஒரு டாமினிக் பாதிரியாக ஆகியிருந்த பேப்லோ கிறிஸ்டியானியை தங்கள் தலைமைப் பிரதிநிதியாக டாமினிக் துறவியர் குழுவினர் நியமித்தனர். தல்மூட் மற்றும் ரபீக்களின் எழுத்துக்களைப் பற்றி பேப்லோகிறிஸ்டியானிக்கிருந்த அறிவைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் தாங்கள் வெற்றிபெற்றுவிடலாம் என்பதாக டாமினிக் துறவியர் குழுவினர் உறுதியாக நினைத்தார்கள்.
ஏன் நாக்மானடிஸ்?
விவாதத்தில் யூதர்களின் சார்பாக பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஸ்பெய்னில் ஆவிக்குரிய தகுநிலையை ஒருவர் மாத்திரமே பெற்றிருந்தார்—மோசஸ் பென் நாக்மான், அல்லது நாக்மானடிஸ்.a 1194-ல் ஜெரோனா நகரத்தில் பிறந்த நாக்மானடிஸ் பருவ வயதிலேயே பைபிள் மற்றும் தல்மூட் கல்விமான் என்று புகழ்பெற்றவராய் இருந்தார். அவர் 30 வயதை அடைவதற்குள், தல்மூட்டின் பெரும் பகுதிகளுக்கு விளக்கங்களை எழுதியிருந்தார்; அதற்குப்பின் விரைவில் மைமானடிஸின் எழுத்துக்களின் சம்பந்தமாக எழுந்த கருத்து வேற்றுமை, யூதர்களின் சமுதாயத்தில் பிரிவினையை ஏற்படுத்தவிருந்தபோது அதை சமரசம் செய்துவைப்பதில் பிரதான பிரதிநிதியாக செயல்பட்டார்.b நாக்மானடிஸ் அவருடைய தலைமுறையின் மிகப் பெரிய யூத பைபிள் மற்றும் தல்மூட் கல்விமானாகவும், அந்தக் காலப்பகுதியின் போது மைமானடிஸ்-க்கு அடுத்ததாக யூதேய மதத்தின்மீது செல்வாக்கு செலுத்திய இரண்டாவது ஆளாகவும் கருதப்படுகிறார்.
நாக்மானடிஸ் கட்டலோனியாவிலிருந்த யூதர்களின் சமுதாயத்தின்மீது பேரளவு செல்வாக்கு செலுத்தினார்; மன்னர் முதலாம் ஜேம்ஸ்-ம்கூட அரசு சம்பந்தப்பட்ட பல்வேறு காரியங்களில் அவரோடு கலந்துபேசினார். அவருடைய கூர்மையாக சிந்திக்கும் திறமைகளை யூதர்களும் புறமதத்தினரும் ஒன்றுபோல மதித்தனர். யூதர்களை திறம்பட்டவிதமாக அவமானப்படுத்துவதற்கு, அவர்களுடைய பிரதான ரபீயே விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதாக டாமினிக் துறவியர் குழுவினர் உணர்ந்தனர்.
டாமினிக் துறவியர் குழுவினர் பாரபட்சமுள்ளவர்கள் என்பதை அறிந்து, நாக்மானடிஸ் விவாதத்துக்கு ஒப்புக்கொள்ள தயங்கினார். அவர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும், ஆனால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது. என்றபோதிலும், மன்னனின் வேண்டுகோளுக்கு அவர் சம்மதம் தெரிவித்து, தான் பதிலளிக்கும்போது தடையின்றி பேச அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மன்னர் முதலாம் ஜேம்ஸ் இதற்கு ஒப்புக்கொண்டார். தடையில்லாத பேச்சுக்கு வழங்கப்பட்ட இதுபோன்ற ஒரு சலுகை இதற்கு முன்னால் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை, இடைக்காலங்கள் முழுவதிலும் திரும்பவும் இப்படி ஒன்று சம்பவிக்கவுமில்லை; நாக்மானடிஸ்மீது மன்னன் வைத்திருந்த உயர்ந்த மதிப்புக்கு இது தெளிவான அத்தாட்சியாக இருந்தது. இருந்தாலும், நாக்மானடிஸ் சற்று கவலையுள்ளவராக இருந்தார். விவாதத்தில் மிதமீறிய விதமாக அவர் விரோதியாக கருதப்பட்டால் அவருக்கும் யூத சமுதாயத்துக்கும் அது மோசமான பின்விளைவுகளைக் கொண்டுவரும். எந்தச் சமயத்திலும் வன்முறைச் சம்பவங்கள் திடீரென்று ஏற்படலாம்.
நாக்மானடிஸ்-க்கு எதிராக பேப்லோ கிறிஸ்டியானி
பார்சிலேனாவிலிருந்த ராஜ அரண்மனையே விவாதம் நடைபெற்ற முக்கிய இடமாகும். நான்கு தொடர் கூட்டங்கள் —1263 ஜூலை 20, 23, 26, 27, தேதிகளில் நடத்தப்பட்டன—ஒவ்வொரு கூட்டத்திலும் ராஜா நேரடியாக தலைமைத்தாங்கினார்; சர்ச்சின் மற்றும் அரசின் பல்வேறு பிரமுகர்களும் உள்ளூரிலிருந்த யூதர்களும் இதற்கு வந்திருந்தனர்.
விவாதத்தின் முடிவைக் குறித்து சர்ச்சுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ‘இந்த விஷயம் சந்தேகத்திற்குரியதாக இருப்பது போல மத நம்பிக்கையை விவாதிப்பது அல்ல, ஆனால் யூதர்களின் பிழைகளை அழித்து அநேக யூதர்களின் உறுதியான விசுவாசத்தைக் குலைத்துப்போடுவதே’ விவாதத்தின் நோக்கமாகும் என்பதாக டாமினிக் துறவியர் குழுவினர் தங்களுடைய அதிகாரப்பூர்வமான பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.
ஏறக்குறைய 70 வயதுள்ளவராக இருந்தபோதிலும் நாக்மானடிஸ் கலந்துரையாடலை அடிப்படை விவாதங்களுக்கு மட்டுப்படுத்திக் கொள்வதன் மூலமாக தமக்கு இருந்த தெளிவான சிந்திக்கும் திறனைக் காண்பித்தார். பின்வருமாறு சொல்வதன் மூலம் அவர் ஆரம்பித்தார்: “புறமதத்தினருக்கும் யூதர்களுக்குமிடையே [முற்காலங்களில்] எழுந்த விவாதங்கள் விசுவாசத்தின் அடிப்படை நியமத்தோடு சம்பந்தப்படாத மத சம்பந்தமான ஆசாரங்களின் அநேக அம்சங்களைப் பற்றினதாகவே இருந்தன. இருந்தபோதிலும், இந்த அரசவையில், சம்பந்தப்பட்டதாக இருக்கும் விஷயங்களைக் குறித்து மாத்திரமே நான் விவாதிக்க விரும்புகிறேன்.” மேசியா ஏற்கெனவே வந்துவிட்டாரா, அவர் கடவுளா மனிதனா, யூதர்களிடமா கிறிஸ்தவர்களிடமா யாரிடம் உண்மையான நியாயப்பிரமாணம் இருக்கிறது என்ற விஷயங்கள் மாத்திரமே விவாதிக்கப்படும் என்பதாக ஒத்துக்கொள்ளப்பட்டது.
பேப்லோ கிறிஸ்டியானி மேசியா ஏற்கெனவே வந்துவிட்டார் என்பதை தன்னால் தல்மூட்டிலிருந்து நிரூபிக்கமுடியும் என்பதாக தன் ஆரம்ப விவாதத்தில் அறிவித்தார். இது உண்மையாக இருக்குமானால், தல்மூட்டை ஏற்றுக்கொள்ளும் ரபீக்கள் ஏன் இயேசுவை ஏற்றுக்கொள்வதில்லை என்பதாக நாக்மானடிஸ் எதிர்வாதம் செய்தார். தெளிவான வேதப்பூர்வமான காரணங்களை மையமாக கொள்வதற்குப் பதிலாக திரும்பத்திரும்ப கிறிஸ்டியானி தம்முடைய விவாதங்களை நிலைநிறுத்துவதற்கு தெளிவற்ற ரபீக்களின் கருத்துக்களை குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். நாக்மானடிஸ் வரிசையாக ஒவ்வொரு குறிப்பும் சூழ்நிலைப் பொருத்தம் இல்லாமல் சொல்லப்படுவதை காண்பிப்பதன் மூலம் இவற்றைத் தவறென நிரூபித்தார். வாழ்நாள் முழுவதையும் இந்த எழுத்துக்களை ஆய்வுசெய்வதற்காகவே அர்ப்பணித்திருந்த நாக்மானடிஸ் இவற்றை விவாதிப்பதில் அதிக திறமையுள்ளவராக தன்னை வித்தியாசப்படுத்திக் காண்பிப்பார் என்பது நியாயமாகவே இருந்தது. கிறிஸ்டியானி வேதாகமத்தைக் குறிப்பிட்டு பேசிய இடங்களிலும்கூட, அவருடைய விவாதத்தில் எளிதில் தவறென நிரூபிக்க முடிகிற குறிப்புகளே சிறப்பித்துக் காட்டப்பட்டன.
நாக்மானடிஸ் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், கத்தோலிக்க சர்ச்சின் நிலையானது, ஏன் யூதர்களுக்கும் சிந்தனைசெய்யும் மற்றவர்களுக்கும் ஏற்புடையதாக இல்லை என்பதைக் காண்பித்த சக்திவாய்ந்த விவாதத்தை முன்வைக்கக்கூடியவராக இருந்தார். திரித்துவ கோட்பாடு குறித்து அவர் அறிவித்ததாவது: “வானத்தையும் பூமியையும் படைத்தவர் . . . ஒரு யூத பெண்ணின் வயிற்றில் பிறந்து . . . பின்னால் அவரை கொலைசெய்த சத்துருக்களின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவதை எந்த யூதனுடைய அல்லது எந்த மனிதனுடைய மனதும் நம்புவதற்கு அனுமதிக்காது.” நாக்மானடிஸ் துல்லியமாக இவ்வாறு சொன்னார்: “நீங்கள் நம்புவதும் உங்கள் விசுவாசத்தின் அஸ்திபாரமுமாக இருப்பது—[பகுத்தறிவுள்ள] மனதுக்கு ஏற்புடையதாக இல்லை.”
இன்றுவரையாக இயேசு மேசியாவாக இருப்பதற்கான சாத்தியத்தை சிந்தித்துப்பார்ப்பதற்கும்கூட அநேக யூதர்களுக்குத் தடையாக இருக்கும் முரண்பாட்டை உயர்த்திக் காண்பிப்பவராய், நாக்மானடிஸ் சர்ச்சின் மட்டுக்குமீறிய இரத்தப்பழியை வலியுறுத்திக் கூறினார். அவர் சொன்னார்: “மேசியாவின் காலத்தில், . . . அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை என்பதாக தீர்க்கதரிசி சொல்லுகிறார். நசரேயனின் நாட்கள் முதற்கொண்டு இன்று வரையாக, முழு உலகமும் வன்முறையும் கொள்ளையும் நிரம்பியதாக உள்ளது. [ஆம்], மற்ற ஜனங்களைக் காட்டிலும் கிறிஸ்தவர்களே அதிகமாக இரத்தம் சிந்துகிறார்கள், மேலும் ஒழுக்கமற்ற வாழ்க்கையையும்கூட நடத்துகிறார்கள். என் ஆண்டவராகிய ராஜாவே, அவர்கள் இனி யுத்தத்தைக் கற்காமல் இருந்தால் உங்களுக்கும் உங்களுடைய இந்தப் போர் வீரர்களுக்கும் அது எவ்வளவு கடினமாக இருக்கும்!”—ஏசாயா 2:4.
நான்காவது கூட்டத்துக்குப்பின்பு ராஜா விவாதத்தை முடித்துக்கொள்ளும்படியாக சொன்னார். அவர் நாக்மானடிஸிடம் இவ்வாறு சொன்னார்: “தவறான கருத்தைக் கொண்டுள்ள ஒருவர் இத்தனை நேர்த்தியாக விவாதிப்பதை நான் ஒருபோதும் பார்க்கவில்லை.” பேச்சு சுயாதீனத்தையும் நாக்மானடிஸுக்கு பாதுகாப்பையும் உறுதியளித்திருந்த அவர் தன் சொல்படியே, ஆரகானின் ராஜாவாகிய முதலாம் ஜேம்ஸ் 300 தினார்கள் வெகுமதியோடு அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். ஜெரோனா பிஷப்பின் வேண்டுகோளுக்கிணங்க, நாக்மானடிஸ் விவாதத்தை எழுத்தில் பதிவு செய்தார்.
முடிவான வெற்றியை அறிவிக்கையில், டாமினிக் துறவியர் குழுவினர் நிலைகுலைந்து போயிருந்தது தெளிவாக தெரிந்தது. பின்னால் அவர்கள் சர்ச்சுக்கு எதிராக அவர் தூஷணமாக பேசிய குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவந்து, அதற்கு அத்தாட்சியாக விவாதத்தைப்பற்றிய அவருடைய எழுத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டனர். நாக்மானடிஸை ராஜா நடத்திய விதத்தைக் குறித்து அதிருப்தியடைந்தவர்களாய், டாமினிக் துறவியர் குழுவினர் போப் நான்காவது க்ளெமென்டிடம் மனுசெய்தனர். 70-க்கும் அதிகமான வயதுள்ளவராக இருந்தபோதிலும் நாக்மானடிஸ் ஸ்பெய்ன் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டார்.c
சத்தியத்தை எங்கே காணமுடியும்?
இரு தரப்பு விவாதமும் உண்மை மதத்தை அடையாளங்கண்டுகொள்ள உதவியதா? ஒவ்வொன்றும் மற்றப் பக்கத்தின் பிழைகளை உயர்த்திக் காண்பித்த போதிலும், இரண்டுமே சத்தியத்தின் தெளிவான செய்தியாய் இருக்கவில்லை. நாக்மானடிஸ் அத்தனை திறமையோடு தவறென நிரூபித்தது உண்மையான கிறிஸ்தவமாக இல்லை, ஆனால் இயேசுவுக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு கிறிஸ்தவமண்டலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட திரித்துவ போதனையைப் போலவே மனிதர் உருவாக்கிய கோட்பாடாகும். நாக்மானடிஸ் அத்தனை துணிச்சலாக உயர்த்திக் காண்பித்த கிறிஸ்தவமண்டலத்தின் ஒழுக்கமற்ற நடத்தையும் வேண்டுமென்றே சிந்தப்பட்ட இரத்தமும் மறுக்கமுடியாத சரித்திரப் பதிவுகளாகும்.
இந்தச் சூழ்நிலைமைகளின்கீழ், கிறிஸ்தவத்துக்கு சாதகமான விவாதங்கள் நாக்மானடிஸ்-ஐயும் மற்ற யூதர்களையும் ஏன் கவர்ந்திழுக்க தவறின என்பதை புரிந்துகொள்வது கடினமாக இல்லை. மேலுமாக பேப்லோ கிறிஸ்டியானியின் விவாதங்கள் எபிரெய வேதவாக்கியங்களின் தெளிவான நியாயங்களை ஆதாரமாக கொண்டில்லாமல் தவறாக பொருத்தப்பட்ட ரபீக்களுடைய எழுத்துக்களை ஆதாரமாகக் கொண்டிருந்தன.
உண்மையில், நாக்மானடிஸ் உண்மை கிறிஸ்தவத்தை தவறென நிரூபிக்கவில்லை. அவருடைய காலத்திற்குள் இயேசுவின் போதனைகளின் உண்மையான வெளிச்சமும் அவருடைய மேசியானியத்துவத்தின் அத்தாட்சிகளும் பொய்யான கூற்றுகளால் தெளிவற்றதாக ஆகிவிட்டன. இப்படிப்பட்ட விசுவாசத்துரோக போதனை தோன்றும் என்பது இயேசுவாலும் அப்போஸ்தலராலும் உண்மையில் முன்னறிவிக்கப்பட்டிருந்தன.—மத்தேயு 7:21-23; 13:24-30, 37-43; 1 தீமோத்தேயு 4:1-3; 2 பேதுரு 2:1, 2.
என்றபோதிலும், உண்மையான மதத்தை இன்று தெளிவாக அடையாளங்கண்டுகொள்ள முடியும். தம்மை உண்மையாய் பின்பற்றுவோரைக் குறித்து இயேசு இவ்விதமாகச் சொன்னார்: “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.” (மத்தேயு 7:16, 17) அதை அடையாளங்கண்டுகொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம். வேதப்பூர்வமான அத்தாட்சிகளை நேர்மையோடு ஆய்வுசெய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவிசெய்ய அனுமதியுங்கள். இவ்விதமாக நீங்கள் மேசியாவோடும் அவருடைய ஆட்சியோடும் சம்பந்தப்பட்ட கடவுளின் எல்லா வாக்குறுதிகளின் உண்மையான கருத்தையும் கற்றுக்கொள்வீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a அநேக யூதர்கள் நாக்மானடிஸ்-ஐ “ரபீ மோசஸ் பென் நாக்மான்” (Rabbi Moses Ben Naḥman) என்ற ஆங்கில வார்த்தைகளின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கிய “ராம்பான்” என்ற புதிய எபிரெய சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.
b காவற்கோபுரம், மார்ச் 1, 1995, பக்கங்கள் 20-3-லுள்ள “மைமானடிஸ்—யூத மதத்துக்கு மறுவிளக்கம் கொடுத்தவர்” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
c 1267-ல் நாக்மானடிஸ் இப்பொழுது இஸ்ரேல் என்று அறியப்படும் தேசத்திற்கு வந்துசேர்ந்தார். அவருடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டுகள் சாதனை நிறைந்ததாக இருந்தன. ஒரு யூத முன்னிலையையும் எருசலேமில் ஆய்வுக்காக ஒரு மையத்தையும் மீண்டும் ஸ்தாபித்தார். பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களாகிய தோராவைப் பற்றிய விளக்கவுரையை எழுதி முடித்து வடக்கு கரையோர பட்டணமாகிய ஏக்கரில் யூத சமுதாயத்தின் ஆன்மீகத் தலைவரானார், அங்கே அவர் 1270-ல் மரித்தார்.
[பக்கம் 20-ன் படம்]
நாக்மானடிஸ் தன் வழக்கை பார்ஸிலோனாவில் வாதிட்டார்
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
19-20 பக்கங்களிலுள்ள படங்கள்: எடுக்கப்பட்ட மூலம்: Illustrirte Pracht - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s