உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 5/15 பக். 28-31
  • டால்முட்—என்பது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டால்முட்—என்பது என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • டால்முட் உருவாதல்
  • இரண்டு டால்முட்டுகளை உண்டாக்குதல்
  • டால்முட் எதை சாதித்தது?
  • மிஷ்னாவும்—மோசேக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யூத மதம்—வேதாகமம், பாரம்பரியம் மூலமாக கடவுளைத் தேடல்
    கடவுளைத் தேடி
  • வாய்வழிச் சட்டம்—ஏன் எழுத்துருவானது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • ரபீ என்றழைக்கப்பட தகுதியுள்ளவர் யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 5/15 பக். 28-31

டால்முட்—என்பது என்ன?

“சந்தேகமில்லாமல், டால்முட் எக்காலங்களிலும் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்று.” —தி யூனிவெர்ஸல் ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா.

“[டால்முட்] மனிதவர்க்கத்தின் பெரும் அறிவுத்திறன் வாய்ந்த சாதனைகளில் ஒன்று, அது கருத்தாழமிக்க, அர்த்தம் நிறைந்த, சூட்சுமமான ஓர் ஆவணம்; அதனால் ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட காலமாக புத்திக்கூர்மையான மனங்களை சுறுசுறுப்பாய்ச் செயல்படும்படி வைத்திருக்கிறது.” —ஜேக்கப் நியூஸ்னர், யூத அறிஞரும் நூலாசிரியரும்.

“டால்முட் யூத வாழ்க்கையின் ஆவிக்குரிய மற்றும் அறிவுத்திறன் வாய்ந்த முழு கட்டட அமைப்பையும் தாங்குகிற [யூதமதத்தின்] மத்திப தூணாக விளங்குகிறது.”—அடின் ஸ்டீன்சால்ட்ஸ், டால்முட் அறிஞரும் ரபீயும்.

சந்தேகமில்லாமல், டால்முட், நூற்றாண்டுகளாக யூத ஜனங்களின்மீது மிகப் பேரளவான பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. எனினும், மேலே மேற்கோள்களாக எடுத்துக் குறிப்பிடப்பட்ட பாராட்டுகளுக்கு நேர்மாறாக, டால்முட்டின் பெருமை குலைக்கப்பட்டு, “தெளிவற்றதும் கலங்கி சேறாக இருப்பதுமான ஒரு கடல்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பிசாசின் தேவதூஷண இலக்கிய படைப்பு என்று பழித்துரைக்கப்பட்டிருக்கிறது. போப்பின் கட்டளையால் அது மறுபடியும் மறுபடியுமாகக் கண்டனம் செய்யப்பட்டது, பறிமுதல் செய்யப்பட்டது, ஐரோப்பாவின் பொது சதுக்கங்களில் பெரும் எண்ணிக்கைகளில் எரிக்கவும்பட்டது.

இவ்வளவு அதிக எதிர்ப்பைத் தூண்டியிருக்கிற இப்படைப்பு உண்மையில் என்ன? யூத இலக்கியங்களில் இந்த டால்முட்டை ஈடிணையற்றதாக்குவது எது? அது ஏன் எழுதப்பட்டது? யூதேய மதத்தின்மீது அத்தகைய வலுவான பிடி அதற்கு எவ்வாறு ஏற்பட்டது? யூதரல்லாதவர்களின் உலகிற்கு அதனால் பிரயோஜனமுண்டா?

பொ.ச. 70-ல் எருசலேமிலிருந்த ஆலயம் அழிக்கப்பட்டதற்குப் பின்னான 150 ஆண்டுகளின்போது, இஸ்ரவேல் முழுவதும் இருந்த ரபீக்களாகிய சாதுக்களின் கல்விச் சாலைகள், யூத பழக்கவழக்கங்களைக் காத்துவருவதற்கான ஒரு புதிய ஆதாரத்தை அவசரமாய்த் தேடின. அவர்கள் விவாதித்து, பின்னர் தங்கள் வாய்மொழியான சட்டத் தொகுப்பின் பல்வேறு பாரம்பரியங்களை தொகுத்தார்கள். இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டியமைப்பவர்களாக, யூதேய மதத்திற்கு புதிய வரம்புகளையும் தேவைகளையும் நியமித்து, ஆலயமில்லாமல் பரிசுத்த வாழ்க்கைக்கான அன்றன்றுக்குரிய வழிநடத்துதலைக் கொடுத்தார்கள். பொ.ச. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குள், ஆவிக்குரிய இந்தப் புதிய திட்டம், ஜூடா ஹானாஸியால் தொகுக்கப்பட்ட மிஷ்னாவில் குறிப்பிடப்பட்டு வைக்கப்பட்டது. a

சரியென்று காட்டுவதற்கு பைபிள் குறிப்புகளை ஆதாரத்திற்காக தேடாமல், மிஷ்னா தனித்து நின்றது. அதன் விவாத முறையும் எபிரெய மொழிநடையுங்கூட தனித்தன்மை வாய்ந்தவையாக, பைபிள் மூலவாக்கியத்திலிருந்து வேறுபட்டிருந்தன. மிஷ்னாவில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்ட ரபீக்களின் தீர்மானங்கள், எல்லா இடங்களிலுமுள்ள யூதரின் அன்றாட வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தின. சரியாகவே, ஜேக்கப் நியூஸ்னர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இஸ்ரவேலின் சட்ட அமைப்பை மிஷ்னா அளித்தது. . . . அதன் சட்டங்களுக்கு இணங்கி உட்படுவதை அது வற்புறுத்தினது.”

ஆனால், உண்மையில் மிஷ்னாவில் மேற்கோள்களாகக் குறிப்பிட்டுள்ள சாதுக்களின் அதிகாரத்துவம், வெளிப்படுத்தப்பட்ட வேதவசனத்திற்கு இணையானதா என்று சிலர் சந்தேகித்துக் கேட்டால் அப்போது என்ன செய்வது? மிஷ்னாவில் காணப்படுகிற டனாயீமின் (வாய்மொழிச் சட்ட போதகர்களின்) போதகங்கள் எபிரெய வேதவசனங்களோடு முழுமையாக ஒத்திருந்தன என்பதை ரபீக்கள் காண்பிக்க வேண்டியிருந்தது. மேலுமான விளக்கவுரை அவசியமாயிற்று. மிஷ்னாவை விளக்கி சரியெனக் காட்டி, அது சீனாய் மலையில் மோசேக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திலிருந்து தோன்றினதென நிரூபிக்கும்படியான தேவையை அவர்கள் உணர்ந்தார்கள். ரபீக்கள், வாய்மொழி சட்டமும் எழுதப்பட்ட சட்டமும் மெய்யான கருத்தையும் நோக்கத்தையும் உடையவை என நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார்கள். ஆகவே மிஷ்னா, யூதேய மதத்தின்பேரில் முடிவான விளக்கமாக இருப்பதற்கு மாறாக, மத விவாதங்களுக்கும் தர்க்கங்களுக்கும் புதிய ஆதாரமாயிற்று.

டால்முட் உருவாதல்

இந்தப் புதிய சவாலை ஏற்ற ரபீக்கள், அமோரேயிம்—மிஷ்னாவின் “பொருள் விளக்குபவர்கள்,” அல்லது “விரித்துரைப்பவர்கள்”—என்று அறியப்பட்டனர். ஒவ்வொரு கல்விச்சாலையும் பிரபலமான ஒரு ரபீயை மையமாக கொண்டிருந்தது. அறிஞர்களும் மாணாக்கர்களும் அடங்கிய ஒரு சிறிய குழுவினர் ஆண்டு முழுவதும் கலந்தாலோசிப்புகளை நடத்தினர். ஆனால், மிக முக்கியமான கூட்டங்கள், ஆண்டுக்கு இருமுறை, ஆதார், எலூல் மாதங்களின்போது நடத்தப்பட்டன. அம்மாதங்களில் பயிர்த்தொழில் அதிகமாக இல்லாததால் நூற்றுக்கணக்கானோர் அல்லது ஆயிரக்கணக்கானோருங்கூட அவற்றிற்கு வர முடிந்தது.

அடின் ஸ்டீன்சால்ட்ஸ் இவ்வாறு விளக்குகிறார்: “அந்தக் கல்விச்சாலையின் தலைவர், ஒரு நாற்காலியில் அல்லது பிரத்தியேக பாய்களின்மீது உட்கார்ந்து கூட்டத்தை நடத்தினார். அவருக்கு எதிரே முன் வரிசைகளில், அவருடைய சக ரபீக்கள் அல்லது முதன்மையான மாணாக்கர்கள் உட்பட, முக்கியமான அறிஞர்கள் உட்கார்ந்தனர்; அவர்களுக்குப் பின்னால் மற்ற எல்லா அறிஞர்களும் உட்கார்ந்தனர். . . . அமருவதில் இருந்த இந்த ஒழுங்கு முக்கியத்துவத்தின்பேரில் சார்ந்திருந்தது.” மிஷ்னாவின் ஒரு பாகம் வாசிக்கப்படும். பின்பு, மிஷ்னாவில் அடங்கியிராத, டனாயீம்களால் சேகரிக்கப்பட்ட, இணையான அல்லது கூடுதலான விஷயத்தோடு ஒப்பிடப்படும். பகுத்தாராயும் நடவடிக்கை ஆரம்பமாகும். போதகங்களுக்கிடையே உட்புற ஒத்திசைவைக் கண்டுபிடிப்பதற்கு கேள்விகள் கேட்கப்பட்டன, முரண்பாடுகள் பகுத்தாராயப்பட்டன. ரபீக்களின் போதகங்களை ஆதரிப்பதற்கு, எபிரெய வேதாகமத்திலிருந்து நிரூபிக்கும் வசனங்கள் தேடப்பட்டன.

கவனமாக அமைக்கப்பட்டபோதிலும், இந்தக் கலந்தாராய்ச்சிகள் தீவிரமாகவும் சில சமயங்களில் அமளியாகவும் இருந்தன. ஒரு விவாதத்தின்போது, ரபீக்கள் வாய்களிலிருந்து “தீப்பொறிகள்” பறந்ததாக டால்முட்டில் குறிப்பிடப்பட்ட ஒரு சாது பேசினார். (ஹல்லன் 137பி, பாபிலோனியன் டால்முட்) அந்த நடவடிக்கையைப் பற்றி ஸ்டீன்சால்ட்ஸ் இவ்வாறு சொல்கிறார்: “சொற்பொழிவாற்றும் அந்தக் கல்விச்சாலையின் தலைவர் அல்லது சாது, பிரச்சினைகளைப் பற்றிய தன் சொந்த விளக்கத்தைக் கொடுப்பார். சபையிலுள்ள அறிஞர்கள் மற்ற மூலங்களிலிருந்து, அதாவது, மற்ற உரையாசிரியர்களின் கருத்துக்களிலிருந்து அல்லது தங்கள் சொந்த தர்க்கரீதியான முடிவுகளின் அடிப்படையிலிருந்து பெரும்பாலும் அவரைக் கேள்விக் கனைகளால் கடுமையாய் தாக்குவார்கள். சில சமயங்களில் அந்தப் பொது விவாதம், ஒரு தனிப்பட்ட கேள்விக்கு, மிகச் சுருக்கமாயும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் இருக்கும் முடிவான பதிலுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மற்ற சந்தர்ப்பங்களில் மற்ற அறிஞர்கள் மாற்று தீர்வுமுறைகளை அளிப்பார்கள்; இது பெரும் வாக்குவாதங்களில் விளைவுறும்.” வந்திருப்போர் யாவரும் பங்கெடுக்கும்படி அனுமதிக்கப்பட்டனர். அந்தக் கூட்ட அமர்வுகளில் தெளிவாக்கப்பட்ட பிரச்சினைகளை மற்ற அறிஞர்கள் மறுபார்வையிடும்படி, மற்ற கல்விச்சாலைகளுக்கு அவை அனுப்பப்படும்.

எனினும், இந்தக் கூட்ட அமர்வுகள் முடிவற்ற வெறும் சட்டப்பூர்வ விவாதங்களாக இல்லை. யூத மத சட்டதிட்டங்கள் உட்பட்ட சட்டப்பூர்வ காரியங்கள் ஹலாக்கா என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பதம் எபிரெய மூலமாகிய “செல்வது” என்பதிலிருந்து தோன்றுகிறது, ‘ஒருவர் செல்ல வேண்டிய வாழ்க்கை முறையைக்’ குறிப்பிடுகிறது. மற்ற எல்லா காரியங்களும்—ரபீக்களையும் பைபிள் குறிப்பிடும் நபர்களையும் பற்றிய கதைகள், ஞானக் கூற்றுகள், நம்பிக்கையையும் தத்துவத்தையும் பற்றிய பொதுக் கருத்துக்கள்—ஹகாடா என்று அழைக்கப்படுகின்றன. இது, “சொல்வதற்கு” என்ற எபிரெய மூலத்திலிருந்து வருகிறது. ரபீக்களின் தர்க்கத்தின்போது, ஹலாக்காவும் ஹகாடாவும் ஒன்றோடொன்று கலப்படம் செய்யப்பட்டன.

டால்முட்டின் உலகம் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் மாரிஸ் அட்லர் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: “நீண்டதாயும் கடினமாயும் இருக்கிற சட்டப்பூர்வ விவாதம் ஒன்று நடைபெறுகையில், ஞானமுள்ள ஒரு போதகர், சற்று இலகுவாயும் அதிகப்படியாய்க் கட்டியெழுப்பும் இயல்புடையதாயும் இருக்கிற ஒரு விஷயத்தை இடையில் பேசுவார் . . . இவ்வாறு. புராணக் கதைகளும் சரித்திரமும், சமகால அறிவியலும் பரம்பரை நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும், பைபிள்பூர்வ விளக்கங்களும் வாழ்க்கை வரலாறுகளும், மதபோதனையும் இறைமை ஆராய்ச்சியும் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பது, கல்விச்சாலைகளின் வழிகளோடு பழக்கப்படாத ஒருவருக்கு, ஒழுங்கற்ற செய்திக் குறிப்புகளின் புதிரான கலப்படமாகத் தோன்றுமெனக் காண்கிறோம்.” கல்விச்சாலைகளிலுள்ள அறிஞர்களுக்கு, இப்படி விஷயத்தைவிட்டு சற்று விலகிச் செல்வது ஒரு நோக்கத்திற்காகவே இருந்தது, மற்றும் கலந்தாராயும் குறிப்போடு இவை சம்பந்தப்பட்டிருந்தன. ஹலாக்காவும் ஹகாடாவும், ரபீனிய கல்விச்சாலைகளில் கட்டப்பட்டு வருகிற புதிய கட்டமைப்பின் கட்டிட பாளங்களாக இருந்தன.

இரண்டு டால்முட்டுகளை உண்டாக்குதல்

கடைசியாக, பலஸ்தீனாவில் இருந்த ரபீக்களின் முக்கிய இடம் திபேரியாவுக்கு மாற்றப்பட்டது. செஃபோரிஸிலும் சிசெரியாவிலும் லிட்டாவிலும் மற்ற முக்கியமான கல்விச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் படிப்படியாக மோசமான பொருளாதார நிலைமையும், அடிக்கடி ஏற்பட்ட அரசியல் மாற்றமும், கடைசியாக விசுவாச துரோகக் கிறிஸ்தவத்திலிருந்து வந்த அழுத்தமும் துன்புறுத்துதலும், கிழக்கே யூத ஜனத்தொகை பெருத்த மற்றொரு மையத்தில்—பாபிலோனியாவில்—பெருமளவாகக் குடியேறுவதற்கு வழிநடத்தினது.

பல நூற்றாண்டுகளாக, கல்விச்சாலைகளில் பெரிய ரபீக்களிடம் படிக்கும்படி மாணாக்கர்கள் பாபிலோனியாவிலிருந்து பலஸ்தீனாவுக்குக் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அத்தகைய மாணாக்கர்களில் ஒருவர் பென் இபோ, இவர் அபா ஆரிக்கா—உயரமான அபா—என்றும் அழைக்கப்பட்டார். எனினும் பின்னால் ரப் என்று மட்டுமே அறியப்பட்டார். ஜூடா ஹகா-நிஸியிடம் படித்தப் பின்பு, ஏறக்குறைய பொ.ச. 219-ல் பாபிலோனியாவுக்கு அவர் திரும்பிச் சென்றார்; இது, பாபிலோனிலிருந்த யூத சமுதாயத்தின் ஆவிக்குரிய முக்கியத்துவத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. யூதர்கள் பெரும்பான்மையாகவும், ஆனால் அறிஞர்கள் சிறுபான்மையாகவும் இருந்த ஓர் இடமாகிய சூராவில் ஒரு கல்விச்சாலையை ரப் ஏற்படுத்தி வைத்தார். அவருக்கிருந்த நற்பெயர், 1,200 மாணாக்கர்களை அவருடைய கல்விச்சாலைக்கு தவறாமல் வரும்படியும், எலூல், ஆதார் ஆகிய யூத மாதங்களின்போது இன்னும் ஆயிரக்கணக்கானோர் வரும்படியும் செய்வித்தது. ரப்பின் சமகாலத்தவரும் பிரபலமானவருமான சாம்யல், நஹெர்டியாவில் ஒரு கல்விச்சாலையை ஏற்படுத்தினார். வேறு முக்கியமான கல்விச்சாலைகளும் பம்படித்தாவிலும் மெஹோசாவிலும் ஸ்தாபிக்கப்பட்டன.

இப்போது பலஸ்தீனாவுக்குப் பயணப்படுவது அவசியப்படவில்லை, ஏனெனில் பாபிலோனியாவிலேயே பெரிய அறிஞர்களிடம் ஒருவர் படிக்க முடியும். தனி மூலவாசக மிஷ்னா உருவாக்கப்பட்டது, பாபிலோனிய கல்விச்சாலைகள் முற்றிலுமாகத் தனித்து இயங்குவதற்கு வழியுண்டாக்கிற்று. பலஸ்தீனாவிலும் பாபிலோனியாவிலும் இப்போது, வெவ்வேறுபட்ட படிப்பு பாணிகளும் முறைகளும் தோன்றியிருந்தபோதிலும், அடிக்கடி தொடர்புகொண்டதும் போதகர்களின் பரிமாற்றமும் இந்தக் கல்விச்சாலைகளின் ஒற்றுமையைக் காத்தன.

பொ.ச. நான்காம் நூற்றாண்டின் முடிவிலும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், பலஸ்தீனாவிலிருந்த யூதருக்கு நிலைமை முக்கியமாய்க் கடினமாயிற்று. விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் அதிகமாகிக்கொண்டிருந்த அதிகாரத்தின்கீழ் மேலும் மேலுமாக எழும்பிக்கொண்டிருந்த கட்டுப்பாடுகளும் துன்புறுத்துதல்களும், ஏறக்குறைய பொ.ச. 425-ல் சன்ஹெத்ரீனையும் நாஸிக்களின் (தலைவர்களின்) ஸ்தானத்தையும் முற்றிலுமாக ஒழித்துவிடுவதற்கு செய்யப்பட்ட கடைசி தாக்குதலுக்கு வழிநடத்தினது. ஆகவே பலஸ்தீனிய அமோரேயிம், அந்தக் கல்விச்சாலைகளின் விவாதங்கள் பாதுகாக்கப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக, அவற்றின் சுருக்கக் குறிப்புகளை ஒத்திசைவான தனி புத்தகத் தொகுப்பில் ஒன்றாகத் தொகுப்பதற்குத் தொடங்கினர். பொ.ச. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவசரமாய்த் தொகுக்கப்பட்ட இந்த வேலைப்பாடு, பலஸ்தீனிய டால்முட் என்று அறியப்படலாயிற்று. b

பலஸ்தீனாவில் இருந்த கல்விச்சாலைகள் தளர்வுறுகையில், பாபிலோனிய அமோரேயிம் தங்கள் திறமைகளின் உச்சக்கட்டத்தை எட்டிக்கொண்டிருந்தார்கள். அபேயும் ராபாவும் அந்தத் தர்க்கத்தை கடும் சிக்கலான, நுட்பநுணுக்கமான விவாதமாகும்படி வழிநடத்தினர். பின்னால் இது, டால்முட் பகுப்பாய்வின் மாதிரியாயிற்று. அடுத்தபடியாக, சூராவில் (பொ.ச. 371-427) அந்தக் கல்விச்சாலையின் தலைவராகிய ஆஷி, தர்க்கங்களின் சுருக்கக் குறிப்புகளைத் தொகுக்கவும் பதிப்பிக்கவும் தொடங்கினார். ஸ்டீன்சால்ட் சொல்வதன்படி, “பெருமளவாய்ப் பேசப்பட்ட அந்த விஷயங்கள் ஒழுங்குபடுத்தி வைக்கப்படாததால், படிப்படியாய் மறக்கப்பட்டு அழிந்துவிடும் ஆபத்தில் இருந்ததென பயந்து” அவ்வாறு செய்தார்.

இந்தப் பெருமளவான விஷயத் தொகுப்பு, ஒரு மனிதனோ அல்லது ஒரு சந்ததியோகூட ஒழுங்குபடுத்தி அமைக்க முடியாத அளவில் பெரியதாக இருந்தது. அமோரேயிமின் காலப்பகுதி பாபிலோனில் பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டின்போது முடிவடைந்தது; ஆனால், பாபிலோனிய டால்முட்டைக் கடைசியாக பதிப்பிக்கும் வேலை, சபோரேயிம் என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினரால் பொ.ச. ஆறாம் நூற்றாண்டுக்குள்ளாகத் தொடர்ந்தது. சபோரேயிம் என்பது ஓர் அரமேயிக் பதம், இதன் அர்த்தம், “பொருள் விளக்குபவர்கள்” அல்லது “அபிப்பிராயத்தை உடையவர்கள்” என்பதாகும். முடிக்காமல் விடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கானவற்றையும், நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த ரபீக்களின் தர்க்கத் தகவல்களையும், இந்தக் கடைசி பதிப்பாசிரியர்கள் ஒன்றாகத் தொகுத்து, பாபிலோனிய டால்முட்டுக்கு சிறப்பியல்பையும் ஒழுங்கமைப்பையும் அளித்தனர். இவ்வாறாக இது, முந்தின எல்லா யூத எழுத்துக்களையும்விட தனி சிறப்புவாய்ந்ததாக ஆயிற்று.

டால்முட் எதை சாதித்தது?

மிஷ்னா, எபிரெய வேத எழுத்துக்கள் தோன்றிய அதே ஊற்றுமூலத்திலிருந்து தோன்றியதென டால்முட் ரபீக்கள் நிரூபிக்க முயன்றனர். ஆனால் ஏன் அவ்வாறு செய்ய முயன்றனர்? ஜேக்கப் நியூஸ்னர் விளக்குகிறார்: “மிஷ்னாவின் சாதனை என தீர்வாக சொல்வதற்கே. ஆனால் முக்கிய தீர்வு அந்த சாதுவின் அதிகாரத்தை சார்ந்தே இருந்தது.” இந்த அதிகாரத்தை வலியுறுத்தும்படி, மிஷ்னாவின் ஒவ்வொரு வரியும், சிலசமயங்களில் ஒவ்வொரு வார்த்தையும், ஆராயப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஒருவாறு ஒத்திசைவிக்கப்பட்டது. இந்த வகையில் அந்த ரபீக்கள், “மிஷ்னாவின் முக்கிய செயல் நோக்கத்தை ஒரு போக்கிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றினார்கள்” என்று நியூஸ்னர் குறிப்பிடுகிறார். தன்னில்தானே நிறைவுடைய ஒரு புத்தகமாக அது உருவாக்கப்பட்ட போதிலும், இப்போது மிஷ்னா பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு செய்த சமயத்தில் அது திரும்பவும் புதுப்பிக்கப்பட்டு, மறுவிளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் புதிய புத்தகமான டால்முட், அந்த ரபீக்களின் நோக்கத்திற்குச் சாதகமாக சேவித்தது. பகுத்தாராய்வதற்கான விதிகளை அவர்கள் வைத்தார்கள்; ஆகவே அது, ரபீக்களைப்போலவே சிந்திக்கும்படி ஜனங்களுக்குக் கற்பித்தது. படிப்பதற்கும் பகுத்தாராய்வதற்குமுரிய தங்கள் வழிமுறை கடவுளுடைய மனதைப் பிரதிபலித்தது என்று அந்த ரபீக்கள் நம்பினார்கள். டால்முட்டைப் படிப்பதுதானே ஒரு இலக்காக, அதாவது வணக்க முறையாக ஆயிற்று—கடவுளைப்போல் சிந்திப்பதாகக் கருதிக்கொள்ளப்பட்டது. எதிர்கால சந்ததிகளுக்கு இதே முறையில் டால்முட் பகுத்தாராய்ந்து விளக்கம் அளிக்கப்படும். இதன் விளைவு என்ன? சரித்திராசிரியர் சிசில் ராத் எழுதுகிறார்: “இந்த டால்முட் . . . [யூதர்களுக்கு] தனிப்பண்பியல்பை அளித்தது; இது அவர்களையும், ஒரு ஜனமாக அவர்களுடைய குறிப்பிடத்தக்க எதிர்ப்பு ஆற்றலையும் இசைவினையும் தன்மையையும், மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டினது. இதன் விவாதமுறை ஆராய்ச்சி அவர்களுடைய புத்தி சாதுரியத்தைக் கூராக்கி, அவர்களுக்கு . . . அறிவுக்கூர்மையை அளித்தது. . . . வரலாற்றின் இடைக் காலங்களில் துன்புறுத்தப்பட்ட யூதனுக்கு, தான் அதற்குள் தப்பியோட இயலும் மற்றொரு உலகத்தை டால்முட் அளித்தது . . . ஒரு தந்தை நாட்டை அது அவனுக்கு அளித்தது, தன் சொந்த நாட்டை இழந்தபோது அதை அவன் தன்னோடு கொண்டுசெல்லலாம்.”

ரபீக்களின் சிந்தனையை மற்றவர்களுக்குப் போதிப்பதற்கு டால்முட் நிச்சயமாகவே வல்லமை வாய்ந்ததாக இருந்திருக்கிறது. ஆனால், யூதரும் யூதரல்லாதவர்களுமான எல்லாருக்கும் ஒன்றுபோல் எழும் கேள்வி இதுவே, டால்முட் உண்மையில் கடவுளுடைய மனதைப் பிரதிபலிக்கிறதா?—1 கொரிந்தியர் 2:11-16.

[அடிக்குறிப்புகள்]

a மிஷ்னாவின் ஆரம்பம் மற்றும் அதன் பொருளடக்கத்தைப் பற்றிய கூடுதலான தகவலுக்கு, நவம்பர் 15, 1997 காவற்கோபுரத்தில், “மிஷ்னாவும் மோசேக்கு கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணமும்” என்ற கட்டுரையைக் காண்க.

b பலஸ்தீனிய டால்முட், எருசலேம் டால்முட் என்பதாகப் பொதுவாய் அறியப்படுகிறது. எனினும், இந்தப் பதம் தவறாக வழங்கும் பெயராக இருக்கிறது, ஏனெனில், அமோரியர் ஆட்சியில் வெகு காலத்திற்கு யூதர்கள் எருசலேமுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

[பக்கம் 31-ன் பெட்டி]

இரண்டு டால்முட்டுகள்—இவை எந்த விதத்தில் வேறுபடுகின்றன?

“டால்முட்” என்ற எபிரெயச் சொல்லின் அர்த்தம் “படிப்பு” அல்லது “கற்றல்” என்பதாகும். பலஸ்தீனாவின் மற்றும் பாபிலோனியாவின் அமோரேயிம் என்பவர்கள் மிஷ்னாவைப் படிப்பதற்கு அல்லது பகுத்தாராய்வதற்குத் தொடங்கினார்கள். இரு டால்முட்டுகளும் (பலஸ்தீனிய மற்றும் பாபிலோனிய டால்முட்டுகள்) இதைச் செய்கின்றன, ஆனால் அவை எந்த விதத்தில் வேறுபடுகின்றன? ஜேக்கப் நியூஸ்னர் எழுதுகிறார்: “முதல் டால்முட் அத்தாட்சியை பகுத்தாராய்கிறது, இரண்டாவதானது விவாத மூலக் கூற்றுகளை ஆராய்கிறது; முதலாவதானது அதன் ஆராய்ச்சிக்குரிய எல்லைகளுக்குள் முழுமையாக நிலைத்திருக்கிறது, இரண்டாவதானது பெருமளவில் அவற்றைக் கடந்து செல்கிறது.”

பாபிலோனிய டால்முட்டுக்குத் தரப்பட்ட ஆழ்ந்த மற்றும் முழுமையான பதிப்பு, அதைப் பெரியதாக மட்டுமல்லாமல், அதன் சிந்தனை மற்றும் பகுத்தாராயும் முறையில் அதை அதிக ஆழ்ந்ததாகவும் நுட்பமாய் ஊடுருவுவதாகவும் செய்வித்திருக்கிறது. “டால்முட்” என்ற சொல் குறிப்பிடப்படுகையில், பொதுவாய் அது பாபிலோனிய டால்முட் என்றே அர்த்தப்படுகிறது. இந்த டால்முட்டே, பல நூற்றாண்டுகளினூடே மிக அதிகமாய் படிக்கப்பட்டும் விளக்கவுரை அளிக்கப்பட்டும் வந்திருக்கிறது. நியூஸ்னரின் அபிப்பிராயத்தில், இந்தப் பலஸ்தீனிய டால்முட் “தலைசிறந்த படைப்பாகவும்,” பாபிலோனிய டால்முட் “மேதையின் படைப்பாகவும்” திகழ்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்