ரபீ என்றழைக்கப்பட தகுதியுள்ளவர் யார்?
சுற்றுலா பயணம் செல்பவர் ஒருவர், சரியான நேரத்துக்கு விமான நிலையம் செல்லமுடியும் என்ற நம்பிக்கையில்லாமல் இருந்தார். ஜெரூசலத்தின் தெருக்களில் திரண்டு குவிந்திருந்த 3,00,000-க்கும் மேற்பட்ட துக்கம்கொண்டாடிய மக்களை நூற்றுக்கணக்கான காவலர்கள் காவல் காத்துக்கொண்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துகொண்டிருந்தனர். “ஜனாதிபதிகள், ராஜாக்கள் அல்லது சர்வாதிகார ஆட்சியின் சர்வாதிகாரிகள் போன்றவர்களுக்கென்று மட்டுமே பொதுவாக உரித்தான அளவுக்கு அந்தச் சவ ஊர்வலம் இருந்தது” என்று தி ஜெரூசலம் போஸ்ட் அதை அழைத்தது. இஸ்ரேலின் தலைநகரை பல மணிநேரங்களாக முடக்கிப்போடும் அளவுக்குப் பக்தியை பொழியச்செய்த அவர் யாராயிருக்க முடியும்? ஒரு மதிப்புக்குரிய ரபீ. யூதர்கள் மத்தியில் ரபீயின் ஸ்தானம் ஏன் அப்படிப்பட்ட மரியாதைக்குரியதும் பக்திக்குரியதுமாய் இருக்கிறது? “ரபீ” என்ற பதம் எப்போது முதலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது? அது யாருக்கு சரியாகவே பொருந்துகிறது?
மோசே ஒரு ரபீயா?
யூத மதத்தில் மோசே என்ற பெயர் மிகவும் மதிப்புக்குரியதாய் இருக்கிறது, அவர் இஸ்ரவேலின் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராக இருந்தார். மதப்பற்றுள்ள யூதர்கள் அவரை “மோசே ‘எங்கள் ரபீ’” என்று அழைக்கின்றனர். இருப்பினும், மோசேயை “ரபீ” என்ற பட்டப்பெயரால் பைபிள் எந்த இடத்திலும் குறிப்பிடுவதில்லை. உண்மையில், “ரபீ” என்ற பதம் எபிரெய வேதாகமத்தில் தோன்றுவதே கிடையாது. அப்படியென்றால், யூதர்கள் ஏன் மோசேயை இந்த விதத்தில் அழைக்க ஆரம்பித்தனர்?
எபிரெய வேதாகமத்தின்படி, லேவி கோத்திரத்தின் ஆசாரியர்களாகிய ஆரோனின் வம்சத்தாருக்கு நியாயப்பிரமாணத்தைப் போதித்து விளக்கும் பொறுப்பும் அதிகாரமும் அளிக்கப்பட்டது. (லேவியராகமம் 10:8-11; உபாகமம் 24:8; மல்கியா 2:7) என்றபோதிலும், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், யூத மதத்துக்குள் ஓர் அமைதலான புரட்சி ஆரம்பித்தது, அந்தச் சமயம் முதற்கொண்டு அது யூதர்களுடைய எண்ணத்தை நிரந்தரமாக மறக்கமுடியாதவகையில் பாதித்தது.
இந்த ஆவிக்குரிய உருமாற்றத்தைக் குறித்து, டானியல் ஜெரமி சில்வர் என்பவர் யூத மதத்தின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகிறார்: “[அந்தச்] சமயத்தில் ஆசாரியரல்லாத வேதபாரகரும் கல்விமான்களும் அடங்கிய வகுப்பார் டோராவை [மோசேயின் நியாயப்பிரமாண சட்டம்] விளக்குவதில் ஆசாரியர்களுக்கு மட்டுமே இருந்த உரிமையை சவால்விட ஆரம்பித்தனர். ஆலய பணிகளை நிறைவேற்றும் அதிகாரிகளாக ஆசாரியர்கள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக்கொண்டனர், ஆனால் டோராவைப் பற்றிய விஷயங்களைக் குறித்ததில் அவர்கள் ஏன் கடைசியாக முடிவு எடுக்க வேண்டும்?” ஆசாரிய வகுப்பாரின் அதிகாரத்தின் பேரில் இந்தச் சவாலை பின்னின்று தூண்டியவர்கள் யார்? யூத மதத்துக்குள் பரிசேயர்கள் என்றழைக்கப்பட்ட ஒரு புதிய தொகுதியினரே. சில்வர் தொடர்ந்து சொல்கிறார்: “பிறப்பின் [ஆசாரிய வம்சத்தின்] அடிப்படையில் அல்லாமல் தகுதிகள் அடிப்படையில் பரிசேயர்கள் தங்கள் கல்விச்சாலைக்குள் நபர்களை அனுமதித்தனர், அவர்கள் மத தலைமைத்துவத்துக்குள் ஒரு புதிய யூத வகுப்பாரைக் கொண்டு வந்தனர்.”
பொ.ச. முதல் நூற்றாண்டுக்குள், இந்தப் பரிசேய கல்விச்சாலைகளிலிருந்து பட்டம் பெற்றவர்கள் யூதமத சட்டத்தின் போதகர்கள் அல்லது ஆசான்கள் என்று அறியப்படலாயினர். மரியாதைக்கு அடையாளமாக, மற்ற யூதர்கள் அவர்களை “என் போதகர்,” அல்லது “என் ஆசான்,” எபிரெய மொழியில் ரபீ என்று குறிப்பிட ஆரம்பித்தனர்.
யூத சரித்திரத்திலேயே மிகப்பெரிய போதகராக கருதப்பட்ட மோசேக்கு இந்தப் புதிய பட்டப்பெயரை பொருத்துவதைத் தவிர வேறு எதுவும் கூடுதலான அதிகாரத்தை அதற்கு கொடுக்க முடியாது. மோசேக்கு ரபீ என்ற பட்டப்பெயரை அளிப்பது, ஆசாரியத்துவத்தின் பேரிலுள்ள அழுத்தத்தை இன்னும் கூடுதலாக குறைத்து, பரிசேய தலைமைத்துவத்தின் அதிகரித்துக்கொண்டே செல்லும் செல்வாக்கை இன்னும் வலுவூட்டும். இவ்வாறு, அவருடைய மரணத்திற்குப் பிறகு 1,500 வருடங்கள் கழித்து, கடந்தகால நிகழ்ச்சிகளைப் பாதிக்கும் வகையில் மோசே “ரபீ” என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
ஆசானைப் பின்பற்றுதல்
“ரபீ” (“என் ஆசான்”) என்ற சொற்றொடர், சில சமயங்களில் பொது மக்கள் தாங்கள் மரியாதை காண்பித்த மற்ற ஆசிரியர்களைக் குறிப்பிடுவதற்கு உபயோகித்தபோதிலும், அந்தப் பதம் பொதுவாக பரிசேயர்கள் மத்தியில் முக்கியத்துவம்வாய்ந்த போதகர்களுக்கு, “அறிவாளிகளுக்கு” பொருத்தப்பட்டது. பொ.ச. 70-ல் ஆலயம் முழுவதுமாக அழிக்கப்பட்டதோடுகூட, ஆசாரியத்துவத்தின் அதிகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது; பரிசேய ரபீக்கள் யூத மதத்தின் ஈடுயிணையில்லா தலைவர்களாக ஆனார்கள். அவர்களுடைய நிகரில்லா ஸ்தானம், ரபீனிய அறிவாளிகளை மையமாகக்கொண்டு ஒருவகையான வழிபாட்டு முறை வளருவதற்கு உற்சாகமளித்தது.
பொ.ச. முதல் நூற்றாண்டுக்குரிய இந்த இடைக்கால பகுதியைப் பற்றி கலந்தாலோசிக்கையில், பேராசிரியர் டோவ் ஸ்லாட்நிக் குறிப்பிடுகிறார்: “டோராவைப் படிப்பதைக்காட்டிலும் ‘அறிவாளிகளை மிகவும் உன்னிப்பாக கவனிப்பதே’ அதிமுக்கியமானதாக ஆனது.” யூத கல்விமான் ஜேக்கப் நாய்ஸ்நர் கூடுதலாக விளக்குகிறார்: ஒரு ரபீயிடம் தன்னையே பிணைத்துக்கொள்ளும் மாணவனே ‘அறிவாளிகளின் சீஷன்.’ அவன் ‘டோராவை’ கற்றுக்கொள்ள விரும்புவதன் காரணமாக அவ்வாறு செய்கிறான். . . . மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் மூலம் டோரா கற்றுக்கொள்ளப்படுவதில்லை, உயிரோடிருக்கும் அறிவாளிகளின் செயல்கள் மற்றும் சைகைகளில் அடங்கியிருப்பவற்றிலிருந்து நியாயப்பிரமாணம் கற்றுக்கொள்ளப்படுகிறது. அவர்கள் சொல்பவற்றால் மட்டுமல்லாமல் செய்யும் காரியங்களின் மூலம் நியாயப்பிரமாணத்தை கற்றுக்கொடுக்கின்றனர்.”
யூத இலக்கியங்களின் கல்விமான் அடின் ஸ்டின்சால்ட்ஸ் இதை ஊர்ஜிதப்படுத்தி எழுதுகிறார்: “அறிவாளிகளே சொன்னார்கள், ‘அறிவாளிகளின் பொதுவான சம்பாஷணைகள், வேடிக்கைப் பேச்சுகள் அல்லது தற்செயலாக சொல்லும் கூற்றுகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.’” எந்த அளவுக்கு இதை ஆராய வேண்டும்? ஸ்டின்சால்ட்ஸ் குறிப்பிடுகிறார்: “இதற்கு மிகவும் உச்ச அளவான உதாரணம் என்னவென்றால், தன் பெரிய போதனையாளர் எவ்வாறு தன் மனைவியிடம் நடந்துகொண்டார் என்பதைப் பார்ப்பதற்கு ஒரு சீஷன் கட்டிலுக்கு கீழே தன்னை மறைத்துக்கொண்டான் என்று தெரிவிக்கப்பட்டது. அவனுடைய அறிந்துகொள்ளும் ஆவலைப் பற்றி கேள்வி கேட்டபோது, அந்த இளம் சீஷன் பதிலளித்தான்: ‘அது டோராவைப் பற்றிய விஷயம், அதைப் படிப்பது தகுதியானது,’ ரபீக்கள் மற்றும் மாணவர்களால் தகுதியானது என்று ஏற்றக்கொள்ளப்பட்ட ஓர் அணுகுமுறை.”
டோராவைக் காட்டிலும் ரபீக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணமாக—டோராவை ரபீயின் மூலம் கற்றுக்கொள்வது—பொ.ச. முதல் நூற்றாண்டு முதற்கொண்டு யூத மதம் ரபீக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மதமாக ஆனது. ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையின் மூலமல்லாமல், தனிப்பட்ட முன்மாதிரியாளர், ஓர் ஆசான் அல்லது ரபீயின் மூலம் ஒரு நபர் கடவுளிடமாக நெருங்கி சேர்ந்தார். இவ்வாறு, ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதாகமத்திலிருந்து இந்த ரபீக்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட வாய்மொழியான சட்டங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் முக்கியத்துவம் இயல்பாகவே மாற்றப்பட்டது. இந்தச் சமயம் முதற்கொண்டு கடவுளுடைய தீர்ப்புகளுக்குப் பதிலாக, ரபீக்களின் கலந்தாலோசிப்புகள், கட்டுக்கதைகள், நடத்தை ஆகியவற்றிற்கு டால்மூட் போன்ற யூதமத இலக்கியங்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றன.
காலங்களினூடே ரபீக்களின் பங்கு
அதிகாரத்தையும் செல்வாக்கையும் பெருமளவில் பயன்படுத்தியபோதிலும், ஆரம்பகால ரபீக்கள் தங்கள் மத நடவடிக்கைகளின் மூலம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தவில்லை. என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா குறிப்பிடுகிறது: “டால்மூடின் ரபீ . . . நவீன நாளைய ரபீக்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவராக இருந்தார். டால்மூடின் ரபீ பைபிளையும் வாய்மொழியான சட்டங்களையும் விளக்குபவராயும் உட்பொருளை வெளிப்படுத்துபவராயும் இருந்தார், மேலும் அவர் வேலை செய்து உழைத்து தன் வாழ்க்கையை நடத்தினார். இடைநிலைக் காலத்தின்போதுதான் ரபீ . . . யூத சபையின் அல்லது சமுதாயத்தின் போதகராகவும், பிரசங்கியாகவும், ஆவிக்குரிய தலைவராகவும் ஆனார்.”
ரபீக்கள் தங்கள் ஸ்தானத்தை சம்பளம் தரும் தொழிலாக மாற்ற ஆரம்பித்தபோது தானே, சில ரபீக்கள் அதற்கு விரோதமாகப் பேசினர். 12-வது நூற்றாண்டில் புகழ்பெற்ற ரபீயாக இருந்த மைமானடிஸ் ஒரு மருத்துவராக வேலை செய்து வாழ்க்கை நடத்தினார். அவர் அப்படிப்பட்ட ரபீக்களை மிகவும் கடுமையாக கண்டித்தார். “[அவர்கள்] தங்களுக்கென்று தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் சமுதாயங்களிலிருந்தும் பணசம்பந்தமான தேவைகளை பெற்றுக்கொண்டனர், டோராவை படிப்பவர்களுக்கு அது வாழ்க்கைத் தொழிலாக இருப்பதால், அறிவாளிகளுக்கும், கல்விமான்களுக்கும் உதவி செய்வது கடமை என்றும் பொருத்தமானது என்றும் ஜனங்களை மடத்தனமாக சிந்திக்கும்படி அவர்கள் செய்தனர். ஆனால் இவையனைத்தும் தவறு. டோராவிலோ அல்லது அறிவாளிகளின் வார்த்தைகளிலோ இந்தப் போதனையை ஆதரிப்பதற்கு ஒரு வார்த்தையும்கூட கிடையாது.” (கமென்ட்டரி ஆன் தி மிஷ்னா, ஏவாட் 4:5) ஆனால் மைமானடிஸ்-ன் கண்டனம் ரபீக்களின் எதிர்கால சந்ததியாரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
யூத மதம் நவீன சகாப்தத்துக்குள் பிரவேசித்தபோது, அது சீர்திருத்தம், மாறுதல் விரும்பாதவர், பழமைப்பற்றாளரின் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பல கட்சிகளாக பிரிந்தது. அநேக யூதர்களுக்கு மத நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மற்ற காரியங்களுக்கு அடுத்ததாகவே ஆயின. அதன் விளைவாக, ரபீயின் ஸ்தானம் பலவீனப்படுத்தப்பட்டது. ரபீ பெரும்பாலும் ஒரு சபையின் அதிகாரமளிக்கப்பட்ட தலைவராக ஆனார், தன் தொகுதியிலுள்ள அங்கத்தினர்களுக்கு சம்பளம் பெறும் போதனையாளராகவும் அறிவுரை கூறுபவராகவும் ஆனார். இருப்பினும், தீவிரமான பழமைப்பற்றுமிக்க ஹசிடிக் தொகுதிகளுக்கிடையில், ஆசானாகவும் முன்மாதிரியாளராகவும் இருப்பவர் ரபீ என்ற கருத்து இன்னும் கூடுதலானதை அர்த்தப்படுத்தியது.
ஹசிடிக் சாபட்-லுபவிச் இயக்கத்தைப் பற்றி எட்வர்ட் ஹாப்மேன் என்பவர் தன் புத்தகத்தில் எழுதிய குறிப்புகளை கவனியுங்கள்: “ஒவ்வொரு சந்ததியிலும் ஒரு தனித்த யூத மதத் தலைவர் வாழ்கிறார், ஒரு ஸடிக் [ஒரு நீதிமான்] அவருடைய காலத்துக்கு ‘மோசேவாக’ இருக்கிறார், அவருடைய புலமையும் பக்தியும் இணையில்லாததாய் இருக்கிறது. ரெபீ [“ரபீ” என்பதற்கு பழம் செர்மானியில்] தன்னுடைய வியப்பூட்டும் கடவுட்பற்றின் மூலம் சர்வவல்லமையுள்ளவருடைய கட்டளைகளின்மீதும்கூட செல்வாக்கு செலுத்தமுடியும் என்று ஒவ்வொரு தொகுதி ஹசிடிக்குகளும் உணர்ந்தனர். மறைபொருளை வெளிப்படுத்தும் பேச்சுகளின் மூலம் அவர் முன்மாதிரியாளராக மட்டுமல்லாமல், அவர் தன் வாழ்க்கையை வாழ்ந்த விதமும் மனிதவர்க்கத்தை உயர்த்துபவராகவும் கடவுளிடம் செல்லும் பாதைக்கு நுணுக்கமான விளக்கம் அளிப்பவராகவும் காணப்பட்டார்.”
“நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்”
கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த முதல் நூற்றாண்டு யூதராயிருந்த இயேசு, ரபீயைப் பற்றிய பரிசேய கருத்து யூத மதத்தை மேற்கொள்ள ஆரம்பித்த சமயத்தில் வாழ்ந்தார். அவர் ஒரு பரிசேயர் அல்லர், அவர்களுடைய கல்விச்சாலைகளில் பயிற்றுவிக்கப்பட்டவரும் அல்லர், அப்படி இருந்தபோதிலும் அவரும்கூட ரபீ என்றழைக்கப்பட்டார்.—மாற்கு 9:5; யோவான் 1:38; 3:2.
யூத மதத்தில் ரபீக்களுக்கிருந்த மனச்சாய்வை கண்டனம் செய்து இயேசு இவ்வாறு சொன்னார்: “வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.”—மத்தேயு 23:2, 6-8.
யூத மதத்துக்குள் உருவாகிக்கொண்டிருந்த குருமார்-பாமரமக்கள் என்ற வேறுபாட்டுக்கு எதிராக இயேசு எச்சரித்தார். மனிதர்களுக்கு மட்டுக்குமீறி அப்படிப்பட்ட முக்கியத்துவம் கொடுப்பதை அவர் கண்டித்தார். “ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்,” என்று அவர் தைரியமாக அறிவித்தார். அவர் யார்?
‘யெகோவாவால் முகமுகமாய் அறியப்பட்டவரும்,’ அறிவாளிகளால் “எங்கள் ரபீ” என்றழைக்கப்பட்டவருமான மோசே ஓர் அபூரண மனிதனாக இருந்தார். அவரும்கூட தவறுகள் செய்தார். (உபாகமம் 32:48-51; 34:12; பிரசங்கி 7:20) மோசேயை கடைசி முன்மாதிரியாளராக சிறப்பித்துக் காண்பிப்பதற்கு பதிலாக யெகோவா அவரிடம் சொன்னார்: “உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.”—உபாகமம் 18:18, 19.
மேசியாவாகிய இயேசுவில் இந்த வார்த்தைகள் நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கின்றன என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிரூபிக்கின்றன.a இயேசு மோசேயைப் “போல்” மட்டும் இருக்கவில்லை; மோசேயைக் காட்டிலும் பெரியவராய் இருந்தார். (எபிரெயர் 3:1-3) இயேசு ஒரு பரிபூரண மனிதராக பிறந்தார், மோசேயைப் போல் இல்லாமல் அவர் கடவுளை ‘பாவமில்லாதவராய்’ சேவித்தார் என்று வேதாகமம் வெளிப்படுத்துகிறது.—எபிரெயர் 4:15.
முன்மாதிரியாளரை பின்பற்றுங்கள்
ரபீயின் ஒவ்வொரு செயலையும் வார்த்தையையும் மிகவும் மும்முரமாக படிப்பது யூதர்களை கடவுளிடம் நெருங்கி சேரும்படி செய்யவில்லை. ஓர் அபூரண மனிதன் உண்மைத்தன்மையில் முன்மாதிரியாக இருந்தாலும், அவருடைய ஒவ்வொரு செயலையும் நாம் படித்து பின்பற்றினோம் என்றால், நாம் அவருடைய தவறுகளையும் அபூரணங்களையும் அதோடுகூட அவருடைய நல்ல பண்புகளையும் பின்பற்றுவோம். சிருஷ்டிகருக்குப் பதிலாக சிருஷ்டிக்கப்பட்டவருக்கு நாம் அளவுக்கு மீறிய மகிமையைக் கொடுப்போம்.—ரோமர் 1:25.
ஆனால் யெகோவா மனிதவர்க்கத்துக்கு முன்மாதிரியான ஒரு நபரை ஏற்பாடு செய்தார். வேதாகமத்தின்படி, இயேசு மனிதராகப் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தார். உண்மையில், அவர் “அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்,” என்று அழைக்கப்படுகிறார். (கொலோசெயர் 1:15) பரலோகத்தில் கணக்கிடமுடியாத ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடவுளுடைய “கைதேர்ந்த வேலையாளாக” சேவித்து வந்திருப்பதால், யெகோவாவை அறிந்துகொள்ள நமக்கு உதவுவதற்கு இயேசு சிறந்த நிலையில் இருக்கிறார்.—நீதிமொழிகள் 8:22-30, NW; யோவான் 14:9, 10.
ஆகையால், பேதுரு இவ்வாறு எழுதமுடிந்தது: “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார்.” (1 பேதுரு 2:21) ‘விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்குங்கள்,’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது,” என்றும்கூட அவர் விளக்கினார். (எபிரெயர் 12:2; கொலோசெயர் 2:3) வேறு எந்த மனிதனும்—மோசேயோ அல்லது வேறு எந்த ரபீனிய அறிவாளியோ—அப்படிப்பட்ட கவனத்துக்கு தகுதியானவர்களாய் இல்லை. யாரையாவது மிகவும் நெருங்க கவனித்துப் பின்பற்ற வேண்டுமென்றால், அது இயேசுவாகவே இருக்க வேண்டும். கடவுளுடைய ஊழியர்கள் ரபீ போன்ற பட்டப்பெயர்களைப் பெற்றிருக்க வேண்டிய தேவையில்லை, விசேஷமாக அதற்கு நம் நாளில் இருக்கும் அர்த்தத்தின் காரணமாக அவ்வாறிருக்கிறது, ஆனால் எவராவது ரபீ என்றழைக்கப்பட தகுதிபெற்றிருந்தால் அது இயேசுவாகவே இருக்க வேண்டும்.
[அடிக்குறிப்பு]
a இயேசுவே வாக்களிக்கப்பட்ட மேசியா என்ற அத்தாட்சியின் பேரில் கூடுதலான தகவலுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் போரில்லா உலகம் ஒன்று எப்போதாவது வருமா? சிற்றேட்டில் (ஆங்கிலம்) பக்கங்கள் 24-30-ஐப் பாருங்கள்.
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
© Brian Hendler 1995. All Rights Reserved