பைபிளிலுள்ள ஜெபங்கள் கூர்ந்தாராயத்தக்க மதிப்பிற்குரியவை
கவலையுற்ற ஒரு பெண், ஓர் அரசன் மற்றும் கடவுளுடைய சொந்த மகன் செய்த ஜெபங்களை இப்பொழுது நாம் கூர்ந்து ஆராயலாம். ஒவ்வொரு ஜெபத்தையும் வித்தியாசப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைமைகள் தூண்டின. என்றாலும் அத்தகைய சூழ்நிலைமைகள் இன்று நம்மை பாதிக்கக்கூடும். இந்த முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
‘உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பாரும்’
நிலைத்திருக்கும் பிரச்சினையோடு நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது கவலையினால் நீங்கள் அழுத்தப்படுகிறீர்களா? அப்படியென்றால், அன்னாள் தன்னுடைய முதல் பிள்ளையாகிய சாமுவேலை பெற்றெடுப்பதற்கு முன்னிருந்த அதே நிலைமையைப் போன்றதே உங்களுடையதும். அவள் பிள்ளையற்றவளாக இருந்தாள் மற்றும் வேறொரு பெண்ணால் நிந்திக்கப்பட்டாள். உண்மையில், அன்னாளின் நிலைமை அவளை அவ்வளவு விரக்தியும் கவலையும் அடையச்செய்ததினால் அவளால் சாப்பிடவும் முடியவில்லை. (1 சாமுவேல் 1:2-8, 15, 16) அவள் யெகோவாவிடம் முறையிட்டு, பின்வரும் விண்ணப்பத்தை ஏறெடுத்தாள்:
“சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை.”—1 சாமுவேல் 1:11.
அன்னாள் தெளிவற்ற நிலையில் பேசவில்லை என்பதை கவனியுங்கள். அவள் குறிப்பான வேண்டுதலோடு (ஒரு ஆண் பிள்ளைக்காக) நிச்சயமான தீர்மானத்தோடும் (அவனை கடவுளுக்காக விட்டுவிடுவதையும்) சேர்த்து யெகோவாவிடம் வேண்டுதல் செய்தாள். இது நமக்கு எதைச் சொல்கிறது?
இன்னலின் போது ஜெபத்தில் தெளிவாக குறிப்பிடுங்கள். உங்களுடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும்—குடும்ப நிலையோ, தனிமையோ அல்லது ஆரோக்கியமின்மையோ—அதை குறித்து யெகோவாவிடம் ஜெபியுங்கள். உங்களுடைய கஷ்டத்தின் சரியானத் தன்மையையும் நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதையும் அவரிடத்தில் விவரித்துக்கூறுங்கள். லூயிஸ என்னும் பெயர் கொண்ட விதவைக் கூறுகிறார், “ஒவ்வொரு மாலையிலும் என்னுடைய பிரச்சினைகளையெல்லாம் யெகோவாவிடம் ஒப்புவித்து விடுவேன். சிலசமயங்களில் அநேகப் பிரச்சினைகள் இருக்கும், ஆனாலும் நான் ஒவ்வொன்றையும் தெளிவாகக் குறிப்பிடுவேன்.”
சரியானப் பதங்களை உபயோகித்து யெகோவாவிடம் பேசுவது பலன்களைக் கொண்டு வருகிறது. அவ்வாறு செய்வதானது நம்முடைய பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நமக்கு உதவும், அப்பொழுது அது குறைவாகவே பயமுறுத்துவதாகத் தோன்றும். குறிப்பான ஜெபங்களைச் சொல்வதானது கவலையிலிருந்து நம்மை நீக்குகிறது. அன்னாள் தன்னுடைய ஜெபத்திற்கு பதிலளிக்கப்படுவதற்கு முன்பே, “அவள் துக்கமுகமாயிருக்கவில்லை,” அவள் உறுதியளிக்கப்பட்டதாக உணர்ந்தாள். (1 சாமுவேல் 1:18) மேலுமாக, குறிப்பாக செய்வதானது நம்முடைய ஜெபத்திற்கான பதிலை விழிப்போடு அடையாளம் கண்டுகொள்ள உதவும். “நான் எவ்வளவு குறிப்பாக ஜெபத்தைச் சொல்கிறேனோ பதில்கள் அவ்வளவு தெளிவாக உள்ளன,” என்று ஜெர்மனியிலுள்ள பர்ன்ஹார்ட் என்னும் கிறிஸ்தவர் ஒருவர் கூறுகிறார்.
‘நானோவென்றால் சிறுபிள்ளையாயிருக்கிறேன்’
என்றபோதிலும் ஒரு நபர், தான் தகுதியற்றதாகக் கருதுகிற நியமிப்பு ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்போது, அவர் ஒரு வித்தியாசமான விதத்தில் கவலையை உணரக்கூடும். சிலசமயங்களில் யெகோவாவினால் உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதத்தினால் திணறடிக்கப்படுவதாக நீங்கள் உணருகிறீர்களா? அல்லது சில ஆட்கள் உங்களுடைய நியமிப்புக்கு உங்களைத் தகுதியற்றவராக நோக்குகிறார்களா? இளம் சாலொமோனும் தான் அரசனாக அபிஷேகம் செய்யப்பட்டபோது அதே நிலைமையில் தான் இருந்தார். சில செல்வாக்குமிக்க மனிதர்கள் வேறொருவரை சிங்காசனத்தில் அமர்த்த விரும்பினார்கள். (1 இராஜாக்கள் 1:5-7, 41-46; 2:13-22) சாலொமோன் தன்னுடைய ஆட்சியின் ஆரம்பகாலத்தில் ஜெபத்தில் ஒரு வேண்டுதல் செய்தார்:
‘என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். உமது ஜனத்தை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்.’—1 இராஜாக்கள் 3:7-9.
சாலொமோன், யெகோவாவிடம் தனக்குள்ள உறவு, அவரால் தனக்குக் கொடுக்கப்பட்ட சிலாக்கியம், நியமிப்பை நிறைவேற்றுவதற்கானத் தன்னுடைய திறமை இவற்றின் பேரில் தன்னுடைய ஜெபத்தை ஒருமுகப்படுத்தினார். நம்முடையத் திறமைக்கும் அப்பாற்பட்டதாக நாம் கருதும் நியமிப்பு, எப்பொழுதெல்லாம் நமக்குகொடுக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம், அந்த வேலையைச் செய்வதற்கு நம்மை ஏற்றவராகத் தயார்படுத்த கடவுளிடத்தில் நாமும் அவ்விதமாகவே விண்ணப்பிக்க வேண்டும். பின்வரும் அனுபவங்களைக் கவனியுங்கள்:
“உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் இன்னும் பெரிய பொறுப்பை கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நான் அறவே தகுதியற்றவனாக உணர்ந்தேன். மற்றவர்கள் நன்கு தகுதிபெற்றவர்களாகவும் அதிக அனுபவமுடையவர்களாகவும் இருந்தார்கள். அடுத்த இரண்டு இரவுகள் சற்றே கண்ணுறங்கி, பெரும் பகுதி நேரத்தை ஜெபிப்பதற்குச் செலவிட்டேன், அது எனக்குப் பலத்தையும் வேண்டிய நம்பிக்கையையும் கொடுத்தது,” என்று யுஜின் விளக்குகிறார்.
மிகவும் பிரபலமாக இருந்த ஒரு இளம் நண்பனுடைய அகால மற்றும் அவல மரணத்தைத் தொடர்ந்து சவ அடக்கப் பேச்சு கொடுக்கும்படி ராய் கேட்டுக்கொள்ளப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் நிச்சயம் வருவார்கள். ராய் என்ன செய்தார்? “பலத்திற்காகவும் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதற்கானத் திறமைக்காகவும் கட்டியெழுப்பக்கூடிய எண்ணத்தை வெளிப்படுத்துவதற்காகவும் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இயல்புக்கும் மாறாக அவ்வளவதிகமாய் ஜெபித்தேன்.”
சிருஷ்டிகர் காரியங்களை “தீவிரமாய்” செயல்படுத்தும் போதும் தம்முடைய அமைப்பை விரிவாக்கும் போதும் தானாகவே நேரக்கூடிய விளைவானது, அதிகமான அவருடைய ஊழியர்கள் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறார்கள். (ஏசாயா 60:22) உங்களுடைய பங்கில் அதிகரிக்குமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்களானால், அனுபவத்திலும் பயிற்சியிலும் அல்லது உங்கள் பங்கில் திறமை குறைவுற்றிருந்தாலும், யெகோவா பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். சாலொமோன் செய்த அதே விதத்தில் கடவுளை அணுகுங்கள், நியமிப்பை நிறைவேற்ற அவர் உங்களை ஆயத்தம் செய்வார்.
“அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்”
இன்று எழக்கூடிய மூன்றாவது சூழ்நிலையானது கூட்டம் ஒன்றை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்யவேண்டியத் தேவை. மற்றவர்களின் சார்பாக ஜெபிப்பதற்காக அழைக்கப்படும்போது, நாம் எதற்காக ஜெபிக்க வேண்டும்? யோவான் 17-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இயேசுவின் ஜெபத்தைக் கவனிங்கள். இந்த ஜெபத்தை அவர் ஒரு மனிதராக தம்முடைய கடைசி மாலையின்போது தம் சீஷர்களின் முன்னிலையில் செய்தார். எத்தகைய விண்ணப்பங்களை தம் பரம பிதாவுக்கு ஏறெடுத்தார்?
இயேசு தாமும் தம் உடனிருந்தவர்களும் பொதுவில் கொண்டிருந்த இலக்குகளையும் நம்பிக்கையையும் வலியுறுத்தினார். அவர் யெகோவா தேவனுடைய பெயர் மகிமைப்படுவதையும் அவரின் ராஜ்யம் அறிவிக்கப்படுவதையும் குறிப்பிட்டார். வேதாகம அறிவை ஆதாரமாகக் கொண்டு, தகப்பன் குமாரன் இடையே உள்ள தனிப்பட்ட உறவின் மதிப்பை வலியுறுத்திக் காண்பித்தார். அவர் உலகத்திலிருந்து பிரிந்திருத்தலைப்பற்றி பேசினார், அது தம்மை பின்பற்றுகிறவர்கள் எதிர்ப்பை எதிர்ப்பட அவர்களை ஆயத்தப்படுத்தியது. தம் தகப்பனிடத்தில் சீஷர்களைப் பாதுகாக்கவும் மெய்வணக்கத்தில் ஒன்றுபடவும்கூட கிறிஸ்து கேட்டுக்கொண்டார்.
ஆம், இயேசு ஒற்றுமையை வலியுறுத்தினார். (யோவான் 17:20, 21) அந்த மாலையில் சற்று முன்னர் தான், சீஷர்கள் முதிர்ச்சியற்ற விதத்தில் வாய்ச்சண்டையில் ஈடுபட்டிருந்தனர். (லூக்கா 22:24-27) ஜெபத்தில், கிறிஸ்து இதை விட்டுவிட வேண்டும் என்று அல்ல, ஆனால் ஒற்றுமைப்படுத்தவேண்டி வகைதேடினார். அதே விதத்தில், குடும்பம் மற்றும் சபையின் ஜெபங்கள் அன்பைத் தூண்டுவதாகவும் தனிப்பட்டவர்களுக்கிடையே உள்ள கருத்துப்பேதங்களைச் சரிசெய்வதாகவும் இருத்தல் வேண்டும். பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறவர்கள் ஒற்றுமையில் ஒன்றாக இணைக்கப்படவேண்டும்.—சங்கீதம் 133:1-3.
கேட்போர் முடிவில், “ஆமென்” அல்லது “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லும்போது இந்த ஒற்றுமையை வெளிக்காட்டுகின்றனர். இதை நிறைவேற்றுவதற்கு அவர்கள் புரிந்துகொண்டு, சொல்லப்பட்ட அனைத்திற்கும் ஒத்திசைய வேண்டும். எனவே வந்துள்ளோரில் சிலருக்கு ஜெபத்தில் சொல்லப்படும் காரியம் தெரியாதிருக்குமாயின் அது பொருத்தமற்றதாக இருக்கும். உதாரணமாகச் சபையை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் மூப்பர் ஒருவர் கவலைக்கிடமாய் நோயுற்றிருக்கும் ஆவிக்குரிய சகோதரனுக்காகவோ சகோதரிக்காகவோ யெகோவாவின் ஆசீர்வாதத்தைக் கேட்கக்கூடும். ஆனால், பொதுவாகவே அவர் ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுபவர்களில் பெரும்பான்மையோர் அந்த நபரையும் அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதையும் அறிந்திருப்பார்களேயானால் நலமாக இருக்கும்.
இயேசு கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனிப்பட்டத் தேவைகளை வகைப்படுத்தவில்லை என்பதையும்கூட கவனியுங்கள். அவ்வாறு செய்வது சிலர் மட்டுமே அறிந்திருக்கும் தனிப்பட்ட காரியங்களை சொல்வதை உட்படுத்தியிருக்கக்கூடும். தனிப்பட்ட காரிங்கள் தனி ஜெபத்திற்குப் பொருத்தமானவை. அவை விருப்பம்போல் நீளமானவையாகவும் அந்தரங்கமானவையாகவும் இருக்கலாம்.
திரளாகக் குழுமியுள்ள வணக்கத்தாரை ஜெபத்தில் பிரதிநிதித்துவம் செய்ய, ஒருவர் தன்னை எவ்வாறு ஆயத்தம் செய்யவேண்டும்? ஒரு முதிர்ச்சியான கிறிஸ்தவர் விளக்குகிறார்: “எதற்கு நன்றி செலுத்த வேண்டும், என்ன வேண்டுதல்களை சகோதரர்கள் உடையவர்களாக இருப்பர், அவர்கள் சார்பில் என்ன விண்ணப்பங்களை செய்யவேண்டும் என்று வரிசைப்படுத்த முன்னதாகவே கவனம் செலுத்துவேன். என்னுடைய சொந்த எண்ணங்களையும், துதிப்பதற்கான பதங்களையும் சேர்த்து என் மனதில் சரியாகக் கோர்வைப்படுத்துவேன். பொதுஜெபம் செய்வதற்கு முன், சகோதரர்களை மதிப்புக்குரியவிதத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு உதவியை வேண்டி, மனதிற்குள் ஜெபிப்பேன்.”
உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமை எதுவாக இருந்தாலும், நீங்கள் இருக்கும் நிலைமையைப் போன்ற நிலையில் இருந்த யாரேனும் ஒருவர் செய்த ஜெபத்தை நீங்கள் பைபிளில் கண்டடையக்கூடும். வேதாகமத்தில் உள்ள பற்பல வகையான ஜெபங்கள் கடவுளின் அன்பான தயவிற்குச் சான்றுகளாகும். இவற்றை வாசிப்பதும் அவற்றின்பேரில் தியானிப்பதும் உங்களுடைய ஜெபங்களை மெருகேற்ற உங்களுக்கு உதவிசெய்யும்.
[பக்கம் 5-ன் பெட்டி]
பைபிளிலுள்ள குறிப்பிடத்தக்க ஜெபங்கள்
யெகோவாவின் ஊழியர்கள் பல்வேறுபட்ட அநேக சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் ஜெபங்களைச் செய்தனர். நீங்கள் கீழ்க்காணும் சூழ்நிலைமைகளுள் ஒன்றிற்கோ அதற்கும் மேலோ பிரதிபலிக்க முடிகிறதா?
எலியேசருக்குக் கடவுளிடமிருந்து வழிநடத்துதல் தேவைப்பட்டதைப் போல் உங்களுக்குத் தேவையா?—ஆதியாகமம் 24:12-14.
யாக்கோபு, வருவதாக அச்சுறுத்துகிற ஆபத்தில் இருந்ததைப் போல் நீங்கள் இருக்கிறீர்களா?—ஆதியாகமம் 32:9-12.
மோசே கடவுளை நன்கு அறிந்து கொள்ள விரும்பியதைப் போல் நீங்கள் விரும்புகிறீர்களா?—யாத்திராகமம் 33:12-17.
எலியா எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்ததைப் போல் உங்களுக்கு நேரிடுகிறதா?—1 இராஜாக்கள் 18:36, 37.
எரேமியாவுக்குப் பிரசங்கிப்பது கடினமாக இருந்ததைப் போல் உங்களுக்கு இருக்கிறதா?—எரேமியா 20:7-12.
தானியேலுக்குப் பாவங்களை அறிக்கையிடவும் மன்னிப்பைத் தேடவும் அவசியம் இருந்ததைப் போல் உங்களுக்கு அவசியமிருக்கிறதா?—தானியேல் 9:3-19.
இயேசுவின் சீஷர்கள் உபத்திரவத்தை எதிர்ப்பட்டதைப் போல் நீங்களும் எதிர்ப்படுகிறீர்களா?—அப்போஸ்தலர் 4:24-31.
இவற்றையும் காண்க: மத்தேயு 6:9-13; யோவான் 17:1-26; பிலிப்பியர் 4:6, 7; யாக்கோபு 5:16.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஊறிப்போனப் பழக்கத்திற்கெதிராகப் போராடும்போது எதற்காக ஜெபிக்க வேண்டும்?
மீண்டும் மீண்டும் தவறிவிழுகின்ற பலவீனத்திற்கு எதிராக நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஜெபங்கள் எவ்வாறு பயனுள்ளவை? தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், அவர் அநேக வெவ்வேறு சமயங்களில் தன்னுடைய சொந்த பலவீனத்திற்காக ஜெபித்தார்.
தாவீது பாடினார்: “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.” (சங்கீதம் 139:23) தகாத ஆசைகள், உணர்ச்சிகள் அல்லது உள்நோக்கங்கள் போன்றவற்றை யெகோவா தேவன் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே தாவீதின் விருப்பமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், தாவீது பாவங்களைத் தவிர்ப்பதற்காக யெகோவாவின் உதவியை அடுக்கிக்கொண்டே செல்கிறார்.
ஆனால் தாவீதின் பலவீனங்கள் அவரை மேற்கொண்டன, அவர் பயங்கரமாகப் பாவம் செய்தார். இங்கும்கூட அவருக்கு ஜெபம் உதவியது—இச்சமயம் கடவுளோடிருந்த தன்னுடைய உறவை மீண்டும் நிலைநாட்டுவதற்காக. சங்கீதம் 51:2-ன் பிரகாரம் தாவீது கெஞ்சினார்: “என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.”
நாம்கூட தவறான யோசனைகளை வெட்டி களைய யெகோவாவின் உதவிக்காகத் தாழ்மையுடன் ஜெபிப்போமாக. இது ஊறிப்போன பலவீனத்தை மேற்கொள்ள நம்மை பலப்படுத்தி, பாவத்தைத் தவிர்ப்பதற்கு உதவும். அது ஒருவேளை மீண்டும் தலைகாட்டும் என்றால், தொடர்ந்து போராட நமக்கு உதவிசெய்யுமாறு மறுபடியும் விண்ணப்பங்களோடு யெகோவாவை அணுகவேண்டும்.
[பக்கம் 7-ன் படங்கள்]
குழுவில் மற்றவர்கள் சார்பில் செய்யப்படும் ஜெபங்கள் வேதாகம நம்பிக்கைகளையும் பொதுவிலுள்ள ஆவிக்குரிய நோக்கங்களையும் வலியுறுத்த வேண்டும்