தனிமையில் இருந்தாலும் ஒருபோதும் கைவிடப்படவில்லை
ஏடா லூயிஸ் சொன்னபடி
நான் எப்போதுமே தனித்தியங்கும் மனச்சாய்வைக் கொண்டிருந்திருக்கிறேன். மேலும் நான் செய்யும் எல்லா காரியத்திலும் உறுதியான தீர்மானமுடையவளாகவும் இருக்கிறேன்—மற்றவர்கள் அதைச் சிலவேளை பிடிவாதம் என்பார்கள். வெளிப்படையாகப் பேசுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும்; இந்தக் குணமானது வருடங்களினூடே எனக்குப் பிரச்சினைகளை உண்டுபண்ணியிருக்கிறது.
இருந்தாலும், என்னுடைய ஆளுமை குறைகளின் காரணமாக யெகோவா தேவன் என்னைத் தள்ளிவிடவில்லை என்பதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவருடைய வார்த்தையைப் படிப்பதன்மூலமாக, நான் என்னுடைய ஆளுமையை மாற்றியமைக்க முடிந்திருக்கிறது; அதன் காரணமாக அவருடைய ராஜ்ய அக்கறைகளுக்காக சுமார் 60 வருடங்களாகச் சேவித்திருக்கிறேன். சிறுவயது முதற்கொண்டே, குதிரைகள்மேல் பிரியமுள்ளவளாக இருந்தேன்; ஓரளவுக்கு பிடிவாதமான என்னுடைய பண்புக்கூறைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பெற்ற கடவுளின் உதவி, கடிவாளம் எப்படி ஒரு குதிரையைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படலாம் என்பதை அடிக்கடி எனக்கு நினைவுபடுத்தியிருக்கிறது.
தென் ஆஸ்திரேலியாவிலுள்ள மௌன்ட் கேம்பியரிலுள்ள ஓர் அழகிய நீலநிற ஏரிக்கு அருகாமையில், 1908-ல் நான் பிறந்தேன். என்னுடைய பெற்றோர், பால் பண்ணை ஒன்றை வைத்திருந்தனர்; எட்டு பிள்ளைகளில் நான்தான் மூத்த மகளாக இருந்தேன். நாங்கள் எல்லாரும் சிறியவர்களாக இருக்கும்போதே எங்கள் தந்தை இறந்துவிட்டார். குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தைச் சம்பாதிப்பதற்காக என்னுடைய இரு மூத்த சகோதரர்களும் வீட்டைவிட்டு தூரமாகச் சென்று வேலைபார்க்க வேண்டியதாயிருந்ததால், பண்ணையைக் கவனித்துக்கொள்வதில் பெரும் பொறுப்பு என்மீது விழுந்தது. பண்ணையில் வாழ்க்கை அதிகத்தைத் தேவைப்படுத்துவதாக, கடின உழைப்பை உட்படுத்துவதாக இருந்தது.
பைபிள் சத்தியத்துடன் முதல் தொடர்பு
எங்கள் குடும்பத்தினர் பிரஸ்பிட்டேரியன் சர்ச்சுக்குச் செல்பவர்கள்; நாங்கள் அங்கு ஒழுங்காக ஈடுபடும் அங்கத்தினர்களாக இருந்தோம். நான் ஸன்டே ஸ்கூல் டீச்சராக ஆனேன்; ஆவிக்குரியவிதத்திலும் ஒழுக்கரீதியிலும் சரியானதென நான் நம்பின அனைத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதைப் பெரிய உத்தரவாதமாக எடுத்துக்கொண்டேன்.
1931-ல் என் தாத்தா இறந்துபோனார்; உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரஸிடென்ட்டாக இருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் அவருடைய உடைமைகளில் இருந்தன. தேவனின் சுரமண்டலம் மற்றும் படைப்பு என்ற ஆங்கில புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்; நான் எவ்வளவு அதிகமாக வாசிக்கத் தொடங்கினேனோ அவ்வளவு அதிகமாக, நான் நம்பியதும் அந்தப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்ததுமான போதனைகள் பைபிளால் ஆதரிக்கப்படவில்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.
மனித ஆத்துமா அழியாதது அல்ல என்றும், இறந்துவிடும்போது அநேக மக்கள் பரலோகத்துக்குப் போவதில்லை என்றும், துன்மார்க்கருக்கு எரிநரகத்தில் நித்திய வாதனை இல்லை என்றும் கற்றுக்கொள்வது அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமையை வாராந்தர ஓய்வுநாளாக ஆசரிப்பது ஒரு கிறிஸ்தவ தேவை அல்ல என்பதைக் கண்டறிந்ததும் என்னைக் கலங்க வைத்தது. இப்போது ஒரு முக்கியமான தீர்மானத்தை எதிர்ப்பட்டேன்: கிறிஸ்தவமண்டலத்தின் பாரம்பரிய போதனைகளைக் கடைப்பிடிப்பதா அல்லது பைபிள் சத்தியத்தைப் போதிப்பதா என்ற தீர்மானம். பிரஸ்பிட்டேரியன் சர்ச்சுடன் எல்லா தொடர்பையும் விட்டுவிடத் தீர்மானிப்பதற்கு எனக்கு அதிக சமயம் எடுக்கவில்லை.
இப்போது உண்மையிலேயே தனிமையில்
சர்ச்சை விட்டுச்செல்வது மற்றும் ஸன்டே ஸ்கூலில் இனிமேலும் கற்பிக்கப்போவதில்லை என்ற எண்ணத்தை நான் அறிவித்தபோது என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் சர்ச்சில் பழக்கமானவர்கள் ஆகியோருக்கு அது பிடிக்கவில்லை. ஜட்ஜ் ரதர்ஃபர்டைச் சேர்ந்த மக்கள் என்பதாக அழைக்கப்பட்டவர்களுடன் நான் ஈடுபாடு கொண்டிருப்பதை அவர்கள் கண்டறிந்ததும், அது அவர்களுடைய சூடான வீண்பேச்சை இன்னும் சூடேற்றுவதாகவே இருந்தது. நான் உண்மையில் ஒதுக்கிவைக்கப்படவில்லை; ஆனால் சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், என் குடும்பத்தினரில் பெரும்பான்மையோரும் முன்னாள் நண்பர்களும் என்னிடத்தில் சிநேகமற்றவர்களாக நடந்துகொண்டார்கள்.
நான் வாசித்துக் கொண்டிருந்த புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருந்த வசனங்களை எடுத்துப்பார்த்து, எவ்வளவு அதிகமாக படித்தேனோ, அவ்வளவு அதிகமாக பிரசங்கிப்பதற்கான தேவையைக் காண ஆரம்பித்தேன். யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வெளி ஊழியத்தின் பாகமாக வீட்டுக்கு வீடு சென்றார்கள் என்று கற்றுக்கொண்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் எங்கள் மாவட்டத்தில் சாட்சிகளே இல்லை. ஆகையால், ஒருவரும் என்னை உற்சாகப்படுத்தவோ கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பது எப்படி என்று எனக்குக் காண்பிக்கவோ இல்லை. (மத்தேயு 24:14) நான் மிகவும் தனிமையாக உணர்ந்தேன்.
இருந்தபோதிலும், மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்ற பைபிள் கட்டளையானது என் மனதில் நிலையான பதிவை ஏற்படுத்தியது; எப்படியாவது நான் பிரசங்கிக்கத் தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதிக ஜெபத்திற்குப்பின், என்னுடைய படிப்புகளில் நான் என்ன கற்றுக்கொண்டிருந்தேன் என்பதை சொல்லவும் இந்தக் காரியங்களை அவர்களுடைய சொந்த பைபிள்களிலிருந்தே காண்பிக்க முயலும்படியும் அயலாருடைய வீடுகளைச் சந்திக்க வேண்டுமென தீர்மானித்தேன். முன்பு என்னுடைய ஸன்டே ஸ்கூல் கண்காணியாக இருந்தவருடைய வீடே என் முதல் வீடாக இருந்தது. அவருடைய உணர்ச்சியற்ற பிரதிபலிப்பும், நான் சர்ச்சை விட்டுச்சென்றதைப் பற்றிய எதிர்மறையான குறிப்புகளும் நிச்சயமாகவே உற்சாகமூட்டும் ஆரம்பமாக இருக்கவில்லை. ஆனால் அவருடைய வீட்டைவிட்டு தொடர்ந்து மற்ற வீடுகளைச் சந்திக்கையில், உள்ளக்கிளர்ச்சியையும், வித்தியாசமான உள்பலத்தையும் உணர்ந்தேன்.
உண்மையில் நேரடியான எதிர்ப்பு எதுவும் இல்லை; ஆனால் முன்னாள் சர்ச் கூட்டாளிகளை நான் சந்திக்கையில் அவர்களுடைய அசட்டையான போக்கைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். எனக்கு ஆச்சரியத்தையும் ஏமாற்றத்தையும் தரும் வகையில், என்னுடைய மூத்த சகோதரனிடமிருந்து மிகவும் பலமான எதிர்ப்பை அனுபவித்தேன்; இது இயேசுவின் வார்த்தைகளை நினைவுபடுத்துவதாக இருந்தது: “பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; . . . என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.”—லூக்கா 21:16, 17.
மிக இளவயதிலேயே நான் குதிரை சவாரியில் அனுபவமுள்ளவளாயிருந்தேன்; ஆகவே மக்களுடைய வீடுகளை விரைவில் சென்றெட்டுவதற்கான வழி குதிரை சவாரியின் மூலமே என்று தீர்மானித்தேன். அருகாமையிலுள்ள நாட்டுப்புற பிராந்தியங்களில் அதிக தூரத்து இடங்களுக்குச் செல்வதற்கு இது எனக்கு உதவியது. என்றபோதிலும், ஒரு மதியானவேளையில், என்னுடைய குதிரை ஒரு வழுக்கலான பாதையில் தடுக்கி விழுந்தது; இதனால் என் மண்டை ஓட்டில் மோசமான முறிவு ஏற்பட்டது. நான் பிழைக்கமாட்டேன் என்று சில காலத்திற்கு பயந்துகொண்டிருந்தேன். அப்போது விழுந்ததற்குப் பிறகு, ரோடுகள் ஈரமாகவோ வழுக்கலாகவோ இருந்தால், குதிரையில் சவாரி செய்வதற்குப் பதிலாக ஒற்றையாள் குதிரை வண்டியில் [ஸல்கியில்] பயணம் செய்தேன்.a
அமைப்புடன் தொடர்பு
எனக்கு விபத்து ஏற்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, பயனியர்கள் என்று தற்போது அழைக்கப்படுகிற முழுநேர ஊழியர் தொகுதி ஒன்று மௌன்ட் கேம்பியர் மாவட்டத்தை விஜயம் செய்தது. இவ்வாறாக, முதல் முறையாக, உடன் விசுவாசிகளுடன் நேருக்கு நேராகப் பேச முடிந்தது. அவர்கள் விடைபெறுமுன், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்திற்கு எழுதி, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் எப்படி பொது பிரசங்க வேலையில் பங்கெடுப்பது என கேட்கும்படி என்னை உற்சாகப்படுத்தினார்கள்.
சொஸைட்டிக்கு எழுதிய பின்னர், புத்தகங்களையும், சிறு புத்தகங்களையும், வீடுகளில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்கு சாட்சி அட்டையையும் பெற்றுக்கொண்டேன். கிளை அலுவலகத்துடன் கடித தொடர்பு கொண்டிருந்ததால், என்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் சற்று நெருக்கமாக உணர்ந்தேன். ஆனால் அந்தப் பயனியர் தொகுதி அங்கிருந்து புறப்பட்டு அடுத்த நகருக்குச் சென்றபோது, எப்போதையும்விட அதிக தனிமையாக உணர்ந்தேன்.
ஒவ்வொரு நாளும்—குறிப்பாக குதிரை மற்றும் ஸல்கியில்—ஒழுங்காக சாட்சி பகரும் சுற்றுக்களை நடத்தியதால் நான் அந்த மாவட்டத்தில் நன்கு அறியப்பட்டேன். அதே நேரத்தில், என்னுடைய பண்ணை வேலைகளையும் கவனித்துக்கொள்ள முடிந்தது. அதற்குள் என்னுடைய குடும்பத்தினர் இந்த வழக்கமுறைக்குப் பழக்கப்பட்டுவிட்டனர்; அதில் குறுக்கிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனித்த, முழுக்காட்டப்படாத நற்செய்தி அறிவிப்பாளராக இந்த விதத்தில் நான் நான்கு வருடங்கள் சேவை செய்தேன்.
மாநாடும், கடைசியில் முழுக்காட்டுதலும்
ஏப்ரல் 1938-ல், சகோதரர் ரதர்ஃபர்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்தார். மதகுருக்களின் பலமான எதிர்ப்பின் காரணமாக, சிட்னி டவுன் ஹாலுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. என்றபோதிலும், கடைசி நேரத்தில், ஸ்போர்ட்ஸ் க்ரவுண்ட்ஸைப் பயன்படுத்தும்படி அனுமதி கிடைத்தது. கட்டாயத்தின்பேரில் திட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் உண்மையில் பிரயோஜனமுள்ளவையாக நிரூபித்தன; ஏனென்றால் பெரியதாக இருந்த ஸ்போர்ட்ஸ் க்ரவுண்ட்ஸில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இடவசதியளிக்க முடிந்தது. சுமார் 12,000 பேர் வந்திருந்தனர்; நம்முடைய கூட்டத்திற்கு மதகுருக்களால் தூண்டிவிடப்பட்ட எதிர்ப்புதானே அநேகருடைய ஆவலைக் கிளறியதாகத் தெரிகிறது.
சகோதரர் ரதர்ஃபர்டுடைய சந்திப்பின் தொடர்பாக, பல நாட்களை உள்ளடக்கிய மாநாடு ஒன்றும் சிட்னியின் புறநகர் பகுதிக்கு அருகில் நடத்தப்பட்டது. கடைசியில் அங்குதான் நான் யெகோவா தேவனுக்கான என்னுடைய ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினேன். பெரிய ஆஸ்திரேலிய கண்டமெங்குமுள்ள நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளுடன் இவ்வளவு காலத்துக்குப் பிறகு ஒன்றுகூடியதால் ஏற்பட்ட என் ஆனந்தத்தை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா?
மீண்டும் மௌன்ட் கேம்பியருக்கு
வீடு திரும்பியதும், நான் மிகவும் தனியாக உணர்ந்தேன்; இருந்தாலும், ராஜ்ய வேலையில் என்னால் முடிந்ததை எல்லாம் செய்வதற்கு முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அதிக தீர்மானமாக இருந்தேன். சீக்கிரத்தில் அக்னியூ குடும்பத்தாருடன்—ஹியூ, அவருடைய மனைவி, அவர்களுடைய நான்கு பிள்ளைகள் ஆகியோருடன்—அறிமுகமானேன். மௌன்ட் கேம்பியரிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தூரத்தில் மில்லசென்ட் என்ற நகரில் அவர்கள் இருந்தனர்; அவர்களுடன் ஒழுங்காக பைபிள் படிப்பு நடத்துவதற்காக குதிரை மற்றும் ஸல்கியில் போகவர 100 கிலோமீட்டர் பயணம் செய்வேன். அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டபோது, என் தனிமையிலிருந்து விடுபட்டேன்.
சிறிது காலத்திற்குள், ஒழுங்கமைக்கப்பட்ட சாட்சிபகருதலுக்காக நாங்கள் ஒரு தொகுதியாக அமைக்கப்பட்டோம். பின்னர், மகிழ்ச்சிக்குரியவிதத்தில், என்னுடைய அம்மா அக்கறைகாட்ட ஆரம்பித்து, புதிதாக அமைக்கப்பட்ட தொகுதியுடன் படிப்பைக் கொண்டிருப்பதற்காக என்னோடு அந்த 100 கிலோமீட்டர் பயணத்தில் சேர்ந்துகொண்டார்கள். அம்மா முழுக்காட்டுதல் பெறுவதற்கு ஒருசில வருடங்கள் ஆனபோதிலும், அப்போதிலிருந்து அவர்கள் எப்போதும் எனக்கு உற்சாகமளிப்பவர்களாகவும் உதவியளிப்பவர்களாகவும் இருந்தார்கள். இனிமேலும் தனிமை இல்லை!
எங்களுடைய சிறிய தொகுதி நான்கு பயனியர்களை உருவாக்கியது, மூன்று அக்னியூ குடும்பத்து பெண்களாகிய கிறிஸ்டல், எஸ்டல், பெட்டி ஆகியோரும் நானும். பின்னர், 1950-களின் ஆரம்பத்தில், அந்த மூன்று சகோதரிகளும் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்குச் சென்றனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மிஷனரிகளாக அனுப்பப்பட்டு, அங்கேயே அவர்கள் இன்னும் உண்மையாக சேவித்து வருகிறார்கள்.
ஜனவரி 1941-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கை ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்டது; ஆகவே நாங்கள் விரைவில் அதற்கேற்றவிதத்தில் செயல்பட்டோம். ஊழியத்தில் நாங்கள் பயன்படுத்திய அனைத்தையும்—பிரசுரங்கள், கையில் எடுத்துச்செல்லக்கூடிய ஃபோனோகிராஃப்கள், பதிவு செய்யப்பட்ட பேச்சுகள் போன்றவற்றை—ஒரு பெரிய தகர ட்ரங்க் பெட்டியில் வைத்தோம். பின்னர் அந்த ட்ரங்க்கை ஒரு கிடங்கில் வைத்து, அதன்மீது வண்டிக்கணக்கில் வைக்கோலைக் குவித்து வைத்தோம்.
தடை இருந்தபோதிலும், நாங்கள் வீட்டுக்கு வீடு ஊழியத்தைத் தொடர்ந்தோம்; ஆனால், வீட்டுக்காரர்களிடம் பேசும்போது, ஜாக்கிரதையாக பைபிளை மட்டும் பயன்படுத்தினோம். பத்திரிகைகளையும் சிறு புத்தகங்களையும் என் குதிரையின் சேணப்பகுதியின்கீழ் ஒளித்துவைத்திருப்பேன்; ராஜ்ய செய்தியில் உண்மையான அக்கறை காணப்படும்போது மட்டுமே அவற்றை வெளியே எடுப்பேன். கடைசியாக, ஜூன் 1943-ல், தடையுத்தரவு நீக்கப்பட்டது; நாங்கள் மீண்டுமாக, பிரசுரங்களை வெளிப்படையாக அளிக்க முடிந்தது.
புதிய நியமனங்கள்
1943-ல், நான் ஒரு பயனியர் ஆனேன்; அதற்கடுத்த வருடம் மௌன்ட் கேம்பியரிலிருந்து வேறொரு நியமனத்திற்குச் சென்றேன். முதலில், ஸ்ட்ராத்ஃபில்ட்டில் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் சிறிது காலம் சேவிக்கும்படி அழைக்கப்பட்டேன். இதைத் தொடர்ந்து, நியூ சௌத்வேல்ஸின் தெற்கிலும் விக்டோரியாவின் மேற்கிலுமுள்ள சிறிய நகரங்களில் அடுத்தடுத்து நியமிப்புகளைப் பெற்றேன். என்றபோதிலும், ஆவிக்குரியவிதத்தில் மிகவும் பலனளிக்கும் நியமிப்புகளில் ஒன்று, மெல்போர்ன் நகரில் ஒரு பெரிய சபையுடன் இருந்தது. சிறிய நாட்டுப்புற நகரிலிருந்து வந்திருந்த நான் அங்கு சேவிக்கையில் அதிகத்தைக் கற்றுக்கொண்டேன்.
விக்டோரியாவின் தாழ்வான கிப்ஸ்லாண்ட் மாவட்ட பகுதியில் என்னுடைய நியமிப்பில், என் பயனியர் கூட்டாளியாகிய ஹெலன் கிராஃபோர்டும் நானும் பல பைபிள் படிப்புகளை நடத்தி, குறுகிய காலத்தில் ஒரு சபை உருவானதைக் கண்டோம். பெரிய நாட்டுப்புறப் பிராந்தியத்தை அந்த மாவட்டம் கொண்டிருந்தது; பயணத்திற்காக பழைய, நம்பகமற்ற ஒரு மோட்டார் வாகனம் இருந்தது. சில தடவைகள் நாங்கள் அதில் பயணம் செய்தோம்; ஆனால் பல தடவைகள் நாங்கள் அதைத் தள்ளவேண்டியிருந்தது. ஒரு குதிரைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன்! சில நேரங்களில் என்னால் உண்மையாக இவ்வாறு சொல்ல முடிந்தது: “ஒரு குதிரைக்குப் பதிலாக எதையும் (ராஜ்யத்தைத் தவிர) கொடுத்துவிடுவேன்!” அந்த மாவட்டத்தின் பெரும்பாலான நகரங்களில் இன்று, பலமான சபைகளும் நல்ல ராஜ்ய மன்றங்களும் இருக்கின்றன.
1969-ல், ஆஸ்திரேலியாவின் தலைநகராகிய கேன்பராவில் சேவிக்க எனக்கு நியமிப்பு கிடைத்தது. இங்கு அயல்நாட்டு தூதரகங்களிலுள்ள அதிகாரிகளை நாங்கள் அடிக்கடி சந்தித்ததால், இது சாட்சி பகருவதில் எங்கள் திறமைகளை நன்கு பயன்படுத்த வாய்ப்பளிப்பதும் பல்வேறு சூழல்களை உடையதுமான ஓரிடமாக இருந்தது. நான் இன்னும் இங்குதான் சேவிக்கிறேன்; ஆனால், சமீப வருடங்களில் அந்த நகரின் தொழில்மயமான பகுதிகளில் சாட்சிபகரும் வேலையை அதிகமாகச் செய்கிறேன்.
1973-ல், ஐக்கிய மாகாணங்களில் பெரிய மாநாடுகளுக்குச் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றிருந்தேன். 1979-ல் ஒரு மாநாட்டு பிரதிநிதியாக இருந்து, இஸ்ரேல் மற்றும் ஜோர்டானைச் சுற்றிப்பார்க்க முடிந்தது என் வாழ்வின் மற்றொரு சிறப்பு அம்சமாகும். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நிஜமான இடங்களைச் சென்று பார்ப்பதும் அங்கு நடந்திருக்கும் சம்பவங்களைத் தியானித்துப் பார்ப்பதும் உண்மையிலேயே நெகிழவைக்கும் ஒரு அனுபவமாகும். சவக்கடலில், அதன் அடர்த்தி மிக்க உப்புத் தண்ணீரில் மிதப்பது எப்படி இருக்கும் என்பதை என்னால் அனுபவிக்க முடிந்தது; மேலும் ஜோர்டானிலுள்ள பெட்ராவுக்குச் சென்றபோது மீண்டும் ஒருமுறை குதிரையில் சவாரி செய்யும் வாய்ப்பைப் பெற்றேன். சிதறியிருந்த, நாட்டுப்புற பகுதிகளில் ராஜ்ய செய்தியோடு செல்வதற்கு குதிரைகள் எனக்கு உதவியாக இருந்த ஆரம்ப நாட்களை இது என் நினைவிற்குக் கொண்டுவந்தது.
தொடர்ச்சியான முழுநேர ஊழியம்
வயதாகிக்கொண்டிருக்கிறபோதிலும் என்னுடைய முழுநேர ஊழியத்தில் தொடர்ந்திருப்பதற்கான என்னுடைய விருப்பம், பயனியர் ஊழியப் பள்ளி மற்றும் வட்டார மாநாடுகளையொட்டி நடத்தப்படும் பயனியர் கூட்டங்கள் ஆகியவற்றோடு பயணக் கண்காணிகளிடமிருந்து கிடைக்கப்பெறும் தொடர்ச்சியான உற்சாகம் ஆகியவற்றால் உயிர்த் துடிப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. நான் தனிமையிலிருந்த நாட்கள் கடந்தகால சரித்திரமாகிவிடும்படி யெகோவா தயவாகக் காரியங்களை இயக்கி இருக்கிறார் என்று என்னால் உண்மையில் சொல்ல முடியும்.
இப்போது எனக்கு 87 வயதாகிறது; சுமார் 60 வருடங்களாக யெகோவாவைச் சேவித்த பிறகு, என்னைப்போல் வெளிப்படையாகப் பேசுகிறவர்களாகவும் பலமாகத் தனித்தியங்கும் பண்புள்ளவர்களாகவும் இருப்பவர்களுக்கு நான் சொல்லும் உற்சாகமான வார்த்தை என்னவென்றால்: யெகோவாவின் வழிநடத்துதலுக்கு எப்போதும் கீழ்ப்படிந்துவிடுங்கள். நம் வெளிப்படையாகப் பேசும் தன்மையைக் கட்டுப்படுத்துவதற்கு யெகோவா உதவி செய்வாராக; நாம் அடிக்கடி தனிமையாக உணரக்கூடும் என்றாலும், அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடமாட்டார் என நமக்கு எப்போதும் நினைப்பூட்டுவாராக.
[அடிக்குறிப்புகள்]
a ஸல்கி என்பது பாரம் குறைந்த, இரு சக்கர வாகனம்.