மணியான பொக்கிஷத்தை நான் கண்டுபிடித்தேன்
ஃபிளாரன்ஸ் விடோசன் சொன்னபடி
அந்திப்பொழுது தொடங்கியபோது, ஏரிக்கருகில் ஒரு கூடாரமிட்டுத் தங்க நாங்கள் திட்டமிட்டோம். இரண்டு பெண்கள் கூடாரமிட்டுத் தங்குமளவிற்கு இது பொருத்தமான இடமில்லை. ஆனால் ஓர் இரவிற்குத்தானே, பரவாயில்லை என்று நாங்கள் நினைத்தோம். நான் கூடாரத்தைப் போடுவதில் மும்முரமாய் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மார்ஜரி எங்களுக்கு மாலை உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தாள்.
நான் கடைசி கூடார ஆணியை சுத்தியால் அறைந்தவுடன், கருப்பு மரக்கட்டை அருகில் நகருதல் என்னைக் கவர்ந்தது. “அந்த மரக்கட்டை நகர்வதைப் பார்த்தாயா?” நான் மார்ஜரியை அழைத்தேன்.
“இல்லை,” என்று சிறிது பயத்துடன் அவள் பதிலுரைத்தாள்.
“நிச்சயமாகவே, அது நகர்ந்தது,” என்று நான் கத்தினேன். “வெந்நீர் கொதிகலத்தை எடுத்து என்னிடத்தில் கொடு!”
அதை எடுத்துக்கொண்டு, என் தோள்பட்டையில் கோடாலியோடு ஏரியை நோக்கி நடந்தேன். நான் ஏறக்குறைய மரக்கட்டையின் அருகில் வந்தபோது, அதன் பின்னிருந்து ஒரு மனிதன் தோன்றினான்!
“ஏரியில் உள்ள நீர் குடிப்பதற்கு உகந்ததா?” நான் படபடப்புடன் சொல்லி சமாளித்தேன்.
“இல்லை, அது அவ்வாறு இல்லை! உங்களுக்கு குடிநீர் வேண்டுமென்றால் நான் கொஞ்சம் கொண்டுவருகிறேன்,” என்று கடுகடுப்பாக பதிலளித்தான்.
நான் உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன், அவன் உடனே திரும்பிப்போய்விட்டதானது எனக்கு ஆறுதலளிப்பதாய் இருந்தது. நடுங்கிக்கொண்டே, மார்ஜரியிடம் விரைந்தோடிப்போய், நடந்ததைச் சொன்னேன். உடனே நாங்கள் கூடாரத்தை கீழிறக்கி, வரிந்தெடுத்துக்கொண்டு, இடத்தைவிட்டுப் போனோம். அந்த மனிதன் சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையாக்கப்பட்டார் என்று பின்பு எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
1937-ல் தங்கத்தின் தாதுக்களை நாடுபவர்கள் ஆஸ்திரேலியாவின் தங்க வயல்களில் பெரும்பாலும் கூடாரமிட்டாலும், நாங்கள் வித்தியாசமான தாதுக்களை நாடுபவர்களாக இருந்தோம். நாங்கள் கடவுளுக்கு அருமையானவர்களைத் தேடிக்கொண்டிருந்தோம்.
என் குடும்பப் பின்னணி
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, என் அப்பா விக்டோரியா மாநிலத்திலுள்ள பார்பன்கா என்ற சிறிய கிராமத்தில் கொல்லனாக இருந்தார். நான் அங்கு 1895-ல் பிறந்தேன், நான் மவுன்ட் பஃபலோ-வுக்கு அடிவாரத்திலுள்ள அவன்ஸ் ஆற்றின் அருகில் நான்கு அண்ணன்மார்களோடு வாழ்ந்துவந்தேன். என் பெற்றோர்கள் யூனியன் சர்ச்சுக்கு ஒழுங்காகப் போகிறவர்களாய் இருந்தனர்; என் அப்பா கண்காணிப்பாளராக இருந்த ஞாயிறு-பள்ளிக்கு நான் போனேன்.
1909-ல் பலத்த புயல் வந்தபோது, என் அம்மா மாரடைப்பு ஏற்பட்டு, என் அப்பாவின் கரங்களில் சாய்ந்து மரித்தாள். பின்பு 1914-ன் ஆரம்பத்தில், என் சகோதரர்களில் ஒருவர் வீட்டைவிட்டுப் போய்விட்டார். சில மணிநேரங்கள் கழித்து, அவர் பிணமாக வீட்டிற்கு கொண்டுவரப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை மன்னிக்கப்பட முடியாத பாவம் என்று சொல்லப்பட்டதால், அவருக்கு நரகம் காத்திருந்தது என்ற சர்ச்சின் போதகம் எங்கள் துயரத்தை அதிகப்படுத்தியது.
அந்த ஆண்டின் பிற்பகுதியில் முதலாம் உலகப் போர் ஆரம்பித்தது. என் சகோதரர்களில் இருவர் வெளிநாட்டு சேவைக்காகப் படையில் சேர்க்கப்பட்டனர். இரத்தம் சிந்துதல் மற்றும் துன்பம், இளம் பெண்களாக எங்கள் ஆறு பேரையும், என் அப்பாவோடு சேர்ந்து யோவான் பைபிள் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிக்கும்படி தூண்டியது.
உண்மையான பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தல்
ஆலன் ஹட்சன், காலம் அண்மையிலிருக்கிறது (The Time Is at Hand) என்ற சார்ல்ஸ் டேஸ் ரசல் எழுதிய புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார். அவர்களுடைய உற்சாகம் தொகுதியிலிருந்த மீதிபேராகிய எங்களனைவரையும் தூண்டியது. அந்தப் புத்தகம் வேதாகமங்களில் ஆய்வுகள் (Studies in the Scriptures) என்று தலைப்பிடப்பட்ட ஆறு தொகுதிகளின் தொடர்ச்சிகளில் ஒன்றுதான் என அறியவந்தபோது, மெல்போர்னில் இருந்த சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் சொஸையிட்டிக்குக் கடிதம் அனுப்பி, மீதி தொகுதிகளைக் கேட்டு எழுதியிருந்தார். எங்கள் தொகுதி காலங்களின் தெய்வீக திட்டம் (The Divine Plan of the Ages) என்ற முதல் தொகுதியை எங்களுடைய வாராந்திர படிப்புகளில் பயன்படுத்த ஒத்துக்கொண்டது.
எரிநரகம் இல்லை என்பதை அறிவதில் அப்பா மற்றும் என்னுடைய சந்தோஷத்தைக் கற்பனைசெய்து பாருங்கள். என் சகோதரன் நரக அக்கினியில் வாதிக்கப்படுகிறான் என்ற பயம் நீக்கப்பட்டது. மரித்தவர்கள், ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதுபோல உணர்வற்று இருக்கிறார்கள், மேலும் அவர்கள் வேறெங்கோ வாழ்ந்து இம்சைக்குள்ளாகவில்லை என்ற சத்தியத்தைக் கற்றுக்கொண்டோம். (பிரசங்கி 9:5, 10; யோவான் 11:11-14) எங்களுடைய பைபிள் படிப்புத் தொகுதியிலுள்ள சிலர், எங்கள் அயலகத்தாரிடம் நாங்கள் கற்றுக்கொள்ளும் சத்தியங்களைப் பிரசங்கிக்கப் போவதற்கு தீர்மானித்தனர். நாங்கள் அருகிலிருந்த வீடுகளுக்கு நடந்துசென்றோம். கிராமங்களிலுள்ளோரைச் சந்திக்க மிதிவண்டிகளை அல்லது இரண்டு சக்கர ஒற்றைக் குதிரை வண்டியைப் பயன்படுத்தினோம்.
போர் நிறுத்த நாளாகிய (Armistice Day), நவம்பர் 11, 1918 அன்று வீட்டுக்குவீடு ஊழியத்தை முதன்முதலாக ருசிகண்டேன். எங்கள் படிப்புத் தொகுதியிலிருந்து நாங்கள் மூவர், மக்கள் மேடை (Peoples Pulpit) என்ற துண்டுப்பிரதியை வினியோகிக்க உவாங்கரட்டா நகர்வரையாக 80 கிலோமீட்டர் பயணம்செய்தோம். ஆண்டுகள் கழிந்தபின்பு, அதிக தொலைவான பகுதிகளில் ஒன்றில் என்னுடைய பிரசங்க நியமிப்பின்போது, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டுள்ள அனுபவத்தை நான் பெற்றேன்.
1919-ல், மெல்போர்னில் பைபிள் மாணாக்கர்கள் மாநாட்டிற்குப் போயிருந்தேன். அங்கு, ஏப்ரல் 22, 1919-ல், யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலைத் தண்ணீர் முழுக்காட்டுதல்மூலம் அடையாளப்படுத்தினேன். அந்த ஆவிக்குரிய விருந்து பரலோக ராஜ்யத்தின் ஆவிக்குரிய பொக்கிஷத்திற்கும் யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பிற்கும் என் போற்றுதலை ஆழமாக்கியது.—மத்தேயு 13:44.
மாநாடு முடிந்தபிறகு நான் வீடு திரும்பவில்லை. ஒரு முழுநேர பிரசங்கியாகிய ஜேன் நிக்கல்சன் என்ற சகோதரியோடு சேர்ந்து ஒரு மாதம் சாட்சிகொடுக்கும் வேலையில் ஈடுபடுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டேன். எங்கள் நியமிப்போ, கிங் ஆற்றின் பக்கத்திலிருந்த பண்ணை மற்றும் ஆய குல மக்களிடமாக இருந்தது. ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, பனிமூடிய ஆற்றிலிருந்து வந்த மனிதன் (The Man From Snowy River) என்ற திரைப்படத்தின் பின்னணியாக இந்த மலைப்பகுதி இருந்தது.
1921-ல் கடவுளின் சுரமண்டலம் (The Harp of God) என்ற அருமையான ஒரு பைபிள் படிப்பு உதவிப் புத்தகத்தை நாங்கள் பெற்றோம். அப்பா இதை ஞாயிறு-பள்ளி வகுப்பிற்கு பாடப்புத்தகமாகப் பயன்படுத்த ஆரம்பித்தபோது, பல பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரை ராஜினாமா செய்யும்படி கேட்டனர். அவர் உடனே அவ்வாறு செய்தார். பின்பு, நரகம், “அது என்ன? யார் அங்கு இருக்கின்றனர்? அவர்கள் வெளியே வரமுடியுமா?” போன்ற ஆவலைத்தூண்டும் அட்டைப்பட கேள்விகளையுடைய நரகம் (Hell) என்ற சிறு புத்தகத்தை நாங்கள் பெற்றோம். அந்தத் தலைப்புப்பொருளில் கொடுக்கப்பட்டிருந்த தெளிவான பைபிள் சான்றுகளினால் அப்பா அவ்வளவு கிளர்ச்சியடைந்ததால், அவர் உடனே வீட்டுக்குவீடு சென்று பிரதிகளை வினியோகிக்க ஆரம்பித்தார். எங்கள் கிராமத்திலும் அருகிலுள்ள நகர்ப்புறங்களிலும் நூற்றுக்கணக்கான பிரதிகளைக் கொடுத்தார்.
அப்பாவுடன் பிரசங்க சுற்றுப்பயணங்கள்
இறுதியில், மற்ற இடங்களிலுள்ள மக்களை ராஜ்ய செய்தியினால் அடைவதற்கு அப்பா ஒரு மோட்டார் வண்டியை வாங்கினார். கொல்லனாக இருந்ததால், குதிரைகளைப் பயன்படுத்துவதில் அதிக பழக்கம்பெற்றிருந்தார், எனவே நான் கார் ஓட்டுபவளாக ஆனேன். ஆரம்பத்தில் நாங்கள் தங்கும்விடுதிகளில் இராத்தங்கினோம். விரைவில் இது அதிக செலவை உட்படுத்துகிறது என்று உணர்ந்தோம், எனவே கூடாரம்போட்டு தங்க ஆரம்பித்தோம்.
காரின் முன் இருக்கையைச் சாயும்படியாக அப்பா பொருத்தினார், இதனால் நான் காருக்குள்ளேயே உறங்கமுடிந்தது. அப்பா தூங்குவதற்கு ஒரு சிறிய கூடாரத்தை நாங்கள் போட்டோம். பல வாரங்கள் கூடாரமிட்டு கழித்தப்பின்பு, நாங்கள் பார்பன்காவிற்கு திரும்புவோம். அங்கு அப்பா தன்னுடைய கொல்லர் பட்டறையை மறுபடியும் திறந்து வேலைபார்ப்பார். எங்களுடைய அடுத்த பிரசங்க சுற்றுப்பயண செலவிற்குத் தேவையான பணத்தைச் சமாளிப்பதற்கு ஏற்றவகையில் பல வாடிக்கையாளர்கள் தங்களுடைய பில்களுக்குரிய பணத்தை எப்போதும் கொடுத்துவிடுவதைப் பற்றி நாங்கள் ஆச்சரியப்பட தவறியதேயில்லை.
சரியான மனப்போக்கிலுள்ள பலர் எங்களுடைய விஜயங்களுக்கு சாதகமானவகையில் பிரதிபலித்து, இறுதியில் வீட்டுப் பைபிள் படிப்புகளை ஏற்றுக்கொண்டனர். பார்பன்காவிலிருந்து வந்த எங்களுடைய சிறிய தொகுதியால் ஆரம்பத்தில் சேவைசெய்யப்பட்ட பகுதியில், இப்போது ஏழு சபைகள் தங்களுடைய சொந்த ராஜ்ய மன்றங்களைக் கொண்டிருக்கின்றன. உண்மையில், “அற்பமான ஆரம்பத்தின் நாளை” யார் அசட்டைபண்ணமுடியும்?—சகரியா 4:10.
1931-ல் அப்பாவும் நானும் மிக மோசமான சாலைகளின் வழியே கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு விசேஷித்த கூட்டத்திற்காகக் காரில் பயணம்செய்தோம். அங்கு எங்கள் புதிய பெயராகிய, “யெகோவாவின் சாட்சிகள்” என்பதை ஏற்றுக்கொண்டோம். இந்த விசேஷித்த வேதாகம பெயர் எங்களிருவருக்கும் மகிழ்ச்சியூட்டியது. (ஏசாயா 43:10-12) “சர்வதேச பைபிள் மாணாக்கர்கள்” என்ற குறைவாக வேறுபடுத்திக்காட்டும் பெயரைவிட இது எங்களை மிகத் தெளிவாக அடையாளப்படுத்தியது. அப்போதிருந்து நாங்கள் அவ்வாறுதான் அறியப்பட்டுவந்தோம்.
ஒரு நாள், பெத்தாங்கா நகரில் நாங்கள் சாட்சி கொடுத்துக் கொண்டிருந்தபோது, சர்ச் ஆஃப் இங்கிலண்ட் பிரிவைச் சேர்ந்த ஓர் உள்ளூர் ஊழியக்காரரைச் சந்தித்தேன். அவர் கோபப்பட்டு, எங்களுடைய புத்தக அளிப்புகளைக் கவனிக்க ஆரம்பித்து, மக்கள் தங்களுடைய புத்தகங்களை தன்னிடத்தில் திருப்பித் தந்துவிடவேண்டுமென்று வற்புறுத்தினார். பின்பு நகரின் மத்தியில் பொதுமக்களுக்கு முன்பாகப் புத்தக எரிப்பு நிகழ்ச்சியை நடத்தினார். ஆனால் அவருடைய மூர்க்கத்தனமான செயல் எதிர்ப்பதமான பாதிப்பைக் கொண்டுவந்தது.
என்ன நடந்தது என்பதைப் பற்றி நான் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தின பின்பு, பாதிரி செய்ததற்குக் கண்டனம்தெரிவித்து ஒரு வெளிப்படைக் கடிதம் அச்சடிக்கப்பட்டது. மேலும், மாநகரெங்கும் இந்தக் கடிதத்தை பல கார்கள் நிறைவான சாட்சிகள் வினியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்பு அப்பாவும் நானும் நகரத்திற்கு மறுபடியும் விஜயம்செய்தபோது, நாங்கள் முன்பைவிட கூடுதலான புத்தகங்களை வினியோகித்தோம். “தடைசெய்யப்பட்ட” பிரசுரத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள நகரமக்கள் ஆவலுடன் இருந்தனர்!
நாங்கள் செய்த பிரசங்கத்தினால், வடகிழக்கு விக்டோரியாவில் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட முதல் நபர் மில்டன் கிப். எங்கள் விஜயங்களுக்கு மத்தியில், அவரிடம் நாங்கள் விட்டுவந்த சொஸையிட்டியின் எல்லா பிரசுரங்களையும் ஒன்றுவிடாமல் படித்துமுடித்திருந்தார். எங்களுடைய ஒரு மறுசந்திப்பில், “இப்பொழுது உங்கள் சீஷர்களில் ஒருவன் நான்” என்று சொல்லி எங்களைத் திகைப்பிற்குள்ளாக்கினார்.
அவருடைய தீர்மானத்தில் சந்தோஷமடைந்தவளானபோதிலும், “இல்லை மில்டன், என் சீஷர்களில் ஒருவராக நீங்கள் இருக்கமுடியாது,” என்று நான் விளக்கினேன்.
“சரி, பின்னே, நான் ரதர்ஃபோர்டின் [உவாட்ச் டவர் சொஸையிட்டியின் அப்போதைய தலைவர்] சீஷர்களில் ஒருவர்.”
மீண்டும் அவரிடம், “இல்லை, ரதர்ஃபோர்டின் சீஷர்களில் ஒருவராயுமல்ல, ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டு சொன்னேன்.
பல ஆண்டுகள் ஆவிக்குரிய தாதுக்களை நாடுபவளாக நான் கழித்ததில் கிடைத்த பல அருமையான பொக்கிஷங்களில் மில்டன் கிப் ஒருவராய் தன்னை நிரூபித்தார். அவரும் அவருடைய இரண்டு மகன்களும் கிறிஸ்தவ மூப்பர்களாக இருக்கின்றனர். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்கள் சபையில் சுறுசுறுப்பாய் ஈடுபடுகின்றனர்.
வேறுபட்ட சோதனைகளை எதிர்ப்படுதல்
ஜனவரி 1941-ல் ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளின் வேலையின்மீது தடைபோடப்பட்டிருந்தும், நாங்கள் வெறும் பைபிளைப் பயன்படுத்தி பிரசங்கத்தைத் தொடர்ந்தோம். பின்பு, என் பயனியர் ஊழியம், அல்லது முழுநேர ஊழியம் தடைப்பட்டது, ஏனென்றால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்த என் அப்பாவைக் கவனிப்பதற்காக நான் வீட்டிற்கு அழைக்கப்பட்டேன். பிறகு, நானும் சுகவீனமடைந்தேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உடல் ஆரோக்கியத்தைப் பெற எனக்குச் சிறிது காலம் எடுத்தது. ஆனால் கடவுளின் வாக்குறுதியின் உண்மையை உணர்ந்தேன்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.” (எபிரெயர் 13:5) ஒரு கிறிஸ்தவச் சகோதரி என்னை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “ஃபிளோ, நீ ஒருபோதும் தனிமையிலில்லை. நீயும் யெகோவாவும் எப்போதும் பெரும்பான்மையைக் காத்துக்கொள்வீர்கள்.”
அடுத்ததாக, என் பிரியமிக்க அப்பாவின் 13 வார இறுதி சுகவீனம் வந்தது. ஜூலை 26, 1946-ல் அவர் மரித்தார். அவர் முழு வாழ்க்கையை அனுபவித்தார். அவருடையது பரலோக நம்பிக்கையாக இருந்தது. (பிலிப்பியர் 3:14) எனவே 51 வயதில், என் முந்தைய பெரும்பாலான ஆண்டுகளையெல்லாம் அப்பாவோடு கழித்ததால், நான் தனிமையில் இருந்தேன். பின்பு என் எதிர்கால கணவரைச் சந்தித்தேன். நாங்கள் 1947-ல் திருமணம் செய்துகொண்டு, பயனியர் சேவையைச் சேர்ந்தே ஆரம்பித்தோம். ஆனால் இந்தச் சந்தோஷமான காலம் நீண்ட நாள்கள் நீடிக்கவில்லை. ஏனென்றால் 1953-ல் அவருடைய மூளை திடீர் அதிர்ச்சிக்குட்படுத்தப்பட்டதால், ஒன்றும்செய்யமுடியாத நிலைக்கு ஆளானார்.
என் கணவனின் பேசும்திறம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அவரோடு பேச்சுத் தொடர்புகொள்ள ஏறக்குறைய முடியாமலே போய்விட்டது. அவரைக் கவனித்துக்கொள்வதில் மிகக் கடுமையான பகுதியாக அது இருந்தது. அவர் என்ன சொல்ல போராடுகிறார் என்று அறிவதில் இருக்கும் மனவேதனை உண்மையில் மிக அதிகமாய் இருந்தது. நாங்கள் அருகில் சபையில்லாத தனியான பிராந்தியத்தில் வாழ்ந்தாலும், அந்தக் கஷ்டமான ஆண்டுகளில் யெகோவா எங்களைக் கைவிடவில்லை. அமைப்பின் புத்தம்புதிய தகவல்கள், மற்றும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் தொடர்ந்து வரும் ஆவிக்குரிய உணவு ஆகிய எல்லாவற்றையும் அறிந்திருந்தேன். டிசம்பர் 29, 1957-ல் என் அன்பான கணவன் இறந்துபோனார்.
அடிலெய்டில் ஊழியம்
நான் மீண்டும் தனிமையில் இருந்தேன். நான் என்ன செய்வது? கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு நான் ஒரு முழுநேர ஊழியராக ஏற்றுக்கொள்ளப்படுவேனா? ஏற்றுக்கொள்ளப்பட்டேன். எனவே என் வீட்டை விற்று, தென் ஆஸ்திரேலியாவின் தலைநகரம் அடிலெய்டில் பயனியர் வேலையில் புதிய ஆரம்பத்தை தொடங்கினேன். அந்தச் சமயத்தில அங்குப் பயனியர்கள் தேவைப்பட்டனர். பிராஸ்பெக்ட் சபையில் என்னை நியமித்தனர்.
நகர போக்குவரத்துகளில் கார் ஓட்டுவது பற்றி நான் மிகவும் பயந்தேன். என் காரை விற்றுவிட்டு, ஒரு மிதிவண்டியை மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தேன். நான் 86 வயதாகும்வரை அதைப் பயன்படுத்தினேன், அதனால் “நீல மிதிவண்டியில் பிரியமுள்ள பெண்” என்று அந்தப் பகுதியில் தெரியப்பட்டுவந்தேன். காலப்போக்கில், போக்குவரத்து மிக பயமுறுத்துவதாக ஆனது. என் மதிவண்டியின் முன்சக்கரம் தொடர்ந்து நடுங்க ஆரம்பித்ததுபோல் உணர்ந்தேன். நான் மிதிவண்டி ஓட்டுவதை கைவிடும்படி செய்த இறுதி சம்பவம், ஒரு பிற்பகல் நான் சாலையோர வேலிக்குள் விழுந்தபோது நடந்தது. ‘இது போதும்’ என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன், எனவே மீண்டும் என் இரண்டு கால்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட மாநாட்டிற்கு ஆஜராயிருந்தபோது, என் கால்கள் உணர்வில்லாமல்போக ஆரம்பித்தன. இதைத்தொடர்ந்து என் இடுப்பு மூட்டுகளில் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டேன். அறுவை சிகிச்சைக்குப்பின் நான் நன்றாக ஊழியம் செய்துகொண்டிருந்தேன். ஒரு பெரிய நாய் என்னைக் கீழே விழத்தள்ளிய சமயம்வரை அவ்வாறு செய்யமுடிந்தது. இது மேலுமான சிகிச்சையை அவசியப்படுத்தியது. அப்போதிலிருந்து நான் நடந்துசெல்வதற்கு ஊன்றுகோல் தேவைப்பட்டது. என் மனம் இன்னும் சுறுசுறுப்பாய் இருக்கிறது. “உங்களுடைய வயதாகிக்கொண்டு போகும் உடம்பு உங்கள் இளமை ததும்பும் மனதோடு போட்டியிட்டு ஜெயிக்கமுடியாததுபோல் தெரிகிறது,” என்று ஒரு நண்பன் சொன்னதுபோல் இருக்கிறது.
பல ஆண்டுகளாக, அடிலெய்டில் உள்ள சபைகள் வளர்ந்து, விரிவடைந்து, பிரிக்கப்படுவதைக் கண்டிருக்கிறேன். பின்பு, 1983-ல், நான் 88 வயதாயிருந்தபோது அடிலெய்டிலிருந்து விக்டோரியா மாநிலத்தில் கையப்ரம் என்ற இடத்தில் இருந்த ஒரு குடும்பத்தோடு வாழ்வதற்குப் போனேன். அங்கு பத்துச் சந்தோஷகரமான ஆண்டுகளைக் கழித்தேன். இன்னும் வெளி ஊழியத்திற்கு போவதை என்னால் சமாளிக்கமுடிகிறது; என்னிடமிருந்து பத்திரிகைகளைத் தொடர்ந்து பெறுபவர்களைச் சந்திக்க சபையிலுள்ள என் நண்பர்கள் என்னைக் காரில் கூட்டிக்கொண்டு போகிறார்கள். இந்த மக்கள் நான் அவர்களிடம் பேசமுடியும்வண்ணம் காருக்கருகில் நட்பிணக்கத்துடன் வருகின்றனர்.
என்னுடைய 98 வருடத்திற்கு மேலான வாழ்க்கையைப் பின்னிட்டுப் பார்த்தால், என்னோடு யெகோவாவுக்குத் துதிசெலுத்திய பற்றுமாறாத உண்மையுள்ளோர் பலரை, விசேஷமாக என் பிரியமுள்ள அப்பாவை, நான் பாசவுணர்வோடு நினைவுகூருகிறேன். பயனியர் ஊழியத்தில் என்னோடு பங்கெடுத்தவர்களில் எஞ்சியிருப்பவளாக நான் இருக்கிறேன். ஆனால் கடவுளின் பரலோக ராஜ்யத்தில் ஜீவ பரிசு நம்பிக்கையில் பங்குகொள்ளுவோருடன் மறுபடியும் ஐக்கியப்படுவதினால் வரும் என்னே ஒரு சந்தோஷம் எனக்காகக் காத்திருக்கிறது, உண்மையில் மணியான பொக்கிஷம்!
[பக்கம் 28-ன் படம்]
நான் ஏப்ரல் 22, 1919-ல் முழுக்காட்டுதல் எடுத்தேன்
[பக்கம் 31-ன் படம்]
நான் 100 வயதை நெருங்கும்போதும் யெகோவாவைச் சேவிப்பதில் சந்தோஷப்படுகிறேன்