வாழ்க்கை சரிதை
வாழ்நாள் முழுக்க நீடித்துவரும் கல்வி
ஹாரல்ட் க்லூயஸ் சொன்னது
நான் சிறுவனாக இருக்கையில் பார்த்த ஒரு காட்சி, 70 வருடங்களுக்குப் பிறகும் என் கண் முன்னே நிற்கிறது. நான் சமையலறையில் உட்கார்ந்திருந்தபோது “சிலோன் டீ” என்று எழுதியிருந்த லேபிளைப் பார்த்தேன். சிலோனிலுள்ள (இப்போது இலங்கை) செழிப்பான வயல்களில் சில பெண்கள் தேயிலைகளை பறிப்பதைப் போன்ற ஒரு படம் அதில் போடப்பட்டிருந்தது. நாங்கள் வசித்த வறண்டுபோன தென் ஆஸ்திரேலியாவிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இந்த இடத்தை பார்த்தவுடன் கற்பனையில் மிதக்க ஆரம்பித்தேன். எத்தனை அழகான, ஆர்வமூட்டும் நாடாக சிலோன் இருக்க வேண்டும்! இப்படி ஒரு இனிய தீவில் நான் மிஷனரியாக 45 வருடம் சேவை செய்வேன் என்று அப்போது நினைத்துப் பார்க்கவேயில்லை.
நான் 1922-ம் வருடம், ஏப்ரல் மாதத்தில் பிறந்தேன். அன்றைய உலகத்திற்கும் இன்றைய உலகத்திற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கிம்பாவில், தொலைதூரத்தில் அமைந்திருந்த நாட்டுப்புறப் பகுதிக்கு அருகே தன்னந்தனியே ஒதுக்குப்புறமாக இருந்த பண்ணையில் என்னுடைய குடும்பம் வேலை செய்தது. பெரிய பாலைவனத்தின் தென்முனையிலும் பரந்துவிரிந்த ஆஸ்திரேலியா கண்டத்தின் மத்திப பகுதியிலும் இந்தக் கிம்பா நகரம் இருந்தது. அவ்விடத்தில் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகவே இருந்தது. எப்போதும் வறட்சியிலும் பூச்சித் தொல்லையிலும் சுட்டுப் பொசுக்கும் வெயிலிலும் தவிக்க வேண்டியிருந்தது. அப்பாவையும் பிள்ளைகள் ஆறு பேரையும் பராமரிக்க என்னுடைய அம்மா கடினமாக உழைத்தார்கள். நாங்கள் ஒரு சிறிய தகர குடிசையில் வசித்தோம்.
என்றாலும் ஆஸ்திரேலியாவில் நான் சுதந்திரப் பறவை போன்று சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். கொழுத்த காளைகள் கூட்டம் கூட்டமாக சென்று காடுபோல் வளர்ந்து கிடந்த செடிகளை மேய்ந்ததை சிறுவனாக இருந்தபோது வியப்போடு பார்த்தது என் நினைவுக்கு வருகிறது. பேரிரைச்சலோடு வீசிய புயல்காற்று புழுதியை அள்ளிவீசி நாட்டுப்புறப் பகுதிகளை போர்த்திவிடுவதும் ஞாபகத்தில் நிற்கிறது. ஆக, நான் கல்வி பயில ஆரம்பித்தது, பள்ளிக்கூடம் போவதற்கு வெகு காலத்துக்கு முன்பே என்றுதான் சொல்ல வேண்டும். பிற்பாடு, என்னுடைய வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பள்ளிக்கூடத்திற்கு சென்றேன், அங்கு ஒரே ஒரு டீச்சர்தான் இருந்தார்கள்.
எங்களுடைய பண்ணையிலிருந்து பட்டணத்திலிருக்கும் சர்ச்சுக்குப் போக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் என்னுடைய பெற்றோர் சர்ச்சுக்கே போனதில்லை. ஆனாலும் அவர்கள் மதப்பற்றுள்ளவர்களாக இருந்தார்கள். என்றபோதிலும் 1930-ம் வருட ஆரம்பத்தில் ஜட்ஜ் ரதர்ஃபர்ட்டின் பைபிள் சம்பந்தப்பட்ட பேச்சுக்களை என்னுடைய அம்மா கேட்க ஆரம்பித்தார்கள். அது அடிலெய்ட் நகர வானொலி நிலையத்திலிருந்து வாரந்தோறும் ஒலிபரப்பப்பட்டது. ஜட்ஜ் ரதர்ஃபர்ட்டை, அடிலெய்ட்டில் வசிக்கும் ஒரு பிரசங்கி என்றே நினைத்தேன். அப்போது எனக்கு அவருடைய பேச்சில் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய அம்மா ஒவ்வொரு வாரமும் தவறாமல் ரதர்ஃபர்ட்டின் பேச்சை கேட்பதற்கு ஆவலோடு காத்திருப்பார்கள். பேட்டரியில் இயங்கும் எங்களுடைய அந்தக் காலத்து ரேடியோ கர்கர் என்று ஒலிக்கும்போது அவருடைய குரலை கேட்க உன்னிப்பாக கவனிப்பார்கள்.
ஒரு நாள், வெயிலும் புழுதி கலந்த காற்றும் அடித்துக்கொண்டிருந்த பகல் சமயத்தில் பிக்கப் ட்ரக் ஒன்று வீட்டு வாசலின் முன் வந்து நின்றது. நேர்த்தியாக உடையணிந்த இரண்டு ஆண்கள் அதிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் சொன்ன செய்தியை கேட்டு அவர்களிடமிருந்து நிறைய புத்தகங்களை அம்மா நன்கொடை கொடுத்து வாங்கினார்கள். அதை வாங்கின கையோடு படிக்கவும் தொடங்கினார்கள். தான் படித்துவந்த விஷயங்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்வதற்காக அவர்களுடைய வீடுகளுக்கு தன்னை கூட்டிக்கொண்டு போகும்படி அப்பாவை கேட்டார்கள். அப்படியானால் படித்த விஷயங்கள் எந்தளவு அம்மாவை கவர்ந்துவிட்டன என்று பாருங்களேன்!
நல்ல செல்வாக்கினால் கிடைத்த பலன்கள்
இது நடந்து முடிந்த கொஞ்ச நாட்களிலேயே மோசமான நிலைமைகளின் காரணமாக நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்து அடிலெய்ட் நகரத்திற்கு சென்றோம். அது எங்கள் கிராமத்திலிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு சென்று ஆவிக்குரிய முன்னேற்றம் அடைய ஆரம்பித்தோம். நாங்கள் அங்கு குடிபெயர்ந்து சென்றது என்னுடைய பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அப்போது எனக்கு வயது 13 தான், ஏழாம் வகுப்பு முடித்திருந்தேன். நான் எதையும் ரொம்ப லேசாக எடுத்துக்கொள்பவனாக இருந்தேன். அது ஆவிக்குரிய நாட்டங்களிலிருந்து என்னை விலக்கிக்கொண்டு போயிருக்கும். நல்லவேளை என் மீது தனிப்பட்ட அக்கறை காட்டின அநேக அருமையான சகோதரர்கள், அதாவது பயனியர்கள் அல்லது முழுநேர ஊழியர்கள் காரணமாக நான் அவ்வாறாக விலகிப் போகவில்லை.
காலப்போக்கில் இந்த வைராக்கியமுள்ள பயனியர்கள், எனக்குள் முடங்கிக்கிடந்த ஆவிக்குரிய தன்மையை தட்டி எழுப்பினார்கள். அவர்களுடைய கடினமான உழைப்பை நான் ரசித்தேன்; அவர்களுடைய தோழமையை அனுபவித்து மகிழ்ந்தேன். ஆகவே 1940-ன் போது அடிலெய்ட்டில் நடைபெற்ற மாநாட்டில் முழுநேர ஊழியம் செய்வதற்கு உற்சாகப்படுத்தி ஓர் அறிவிப்பு செய்யப்பட்டபோது நான் என் பெயரைக் கொடுத்தது எனக்கே வியப்பாக இருந்தது. ஏனென்றால் அந்த சமயத்தில் நான் முழுக்காட்டுதல்கூட பெறவில்லை. பிரசங்கிக்கும் வேலையில் எனக்கு இருந்த அனுபவமோ கொஞ்சம்தான். இருந்தபோதிலும், சில நாட்கள் சென்றபின் வர்நம்பூல் என்ற நகரத்தில் இருந்த ஒரு சிறு தொகுதியான பயனியர்களோடு சேர்ந்துகொள்ள எனக்கு அழைப்பு கிடைத்தது. இந்நகரம் அடிலெய்ட்டிலிருந்து பல நூறு கிலோமீட்டர் தள்ளியுள்ள விக்டோரியா மாகாணத்தில் இருக்கிறது.
வெளி ஊழிய வேலையை இப்படி முன்பின் யோசிக்காமல் தொடங்கினபோதிலும் சீக்கிரத்திலேயே அதன் மீது பற்றை வளர்த்துக்கொண்டேன். இந்நாள் வரை அந்தப் பற்று தணியவில்லை என்று சொல்வதில் சந்தோஷப்படுகிறேன். சொல்லப்போனால் அது என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு திருப்புக்கட்டம். அப்போதிலிருந்து என் வாழ்க்கையில் உண்மையான ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தேன். ஆவிக்குரிய காரியங்கள் மீது நாட்டம் உடையவர்களோடு நெருக்கமாக இருப்பதன் அருமையை உணர்ந்தேன். நம் படிப்பு என்னவாயிருந்தாலும் அவர்களுடைய நல்ல கூட்டுறவு நமக்குள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டுவரும் என்பதை தெரிந்துகொண்டேன். மேலும் அவர்களிடமிருந்து நான் கற்ற பாடங்கள் எப்படி வாழ்நாள் முழுவதும் நன்மையளிக்க முடியும் என்பதையும் புரிந்துகொண்டேன்.
சோதனைகள் பலம் தந்தன
நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்து கொஞ்ச காலமே ஆகியிருந்தது. அப்போது ஆஸ்திரேலியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவே சகோதரர்களுடைய ஆலோசனையை நாடினேன்; ஜனங்களிடம் பைபிளைப் பற்றி பேச எந்த தடையும் கிடையாது என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதனால் மற்ற பயனியர்களுடன் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொண்டு பைபிளிலிருந்து சுருக்கமான எளிய செய்தியை சொல்லத் தொடங்கினேன். இது, அடுத்ததாக நான் எதிர்ப்பட வேண்டியிருந்த சோதனைகளை சந்திக்க பலத்தை கொடுத்தது.
நான்கு மாதம் சென்றது. எனக்கு 18 வயது ஆனது. ராணுவத்தில் சேர அழைப்பு வந்தது. இது பல்வேறு ராணுவ அதிகாரிகளிடமும் ஒரு நீதிபதியிடமும் என்னுடைய விசுவாசத்தை ஆதரித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்தது. அச்சமயத்தில் நடுநிலை வகித்ததற்காக கிட்டத்தட்ட 20 சகோதரர்களை அடிலெய்ட் சிறையில் போட்டிருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்குள் என்னையும் அங்கேயே போட்டார்கள். பாறைகளை தோண்டியெடுப்பது, சாலைகளை சீர்ப்படுத்துவது போன்ற கடினமான வேலைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். சகிப்புத்தன்மை, மனவுறுதி போன்ற பண்புகளை வளர்த்துக்கொள்ள இது உதவிசெய்தது. எங்களுடைய நன்னடத்தை, உறுதியான நிலைநிற்கை இவற்றையெல்லாம் பார்த்த சிறைக் காவலர்களில் அநேகர் எங்களுக்கு மரியாதை கொடுத்தார்கள்.
பல மாதங்களுக்குப் பிறகு விடுதலை கிடைத்தபோது நல்ல உணவை வயிறார சாப்பிட்டேன். மறுபடியும் பயனியர் ஊழியத்தை தொடங்கினேன். அச்சமயத்தில் போதுமான பயனியர் பார்ட்னர்கள் இல்லை. எனவே தென் ஆஸ்திரேலியாவில் ஒதுக்குப்புறத்திலிருக்கும் வயல் பகுதியில் என்னால் தனியாக ஊழியம் செய்ய முடியுமா என்று கேட்டார்கள். அதற்கு சம்மதித்து யார்க் தீபகற்பத்திற்கு போக கப்பலேறினேன். பிரசுரங்களையும் சைக்கிளையும் மட்டுமே என்னோடு எடுத்துச்சென்றேன். அங்கு சென்றபோது ஆர்வம் காட்டின ஒரு குடும்பத்தார் ஒரு கெஸ்ட் ஹவுஸிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே ஓர் அன்பான பெண்மணி தன் சொந்த மகனைப் போல் என்னை பார்த்துக்கொண்டார்கள். காலைவேளைகளில் தூசி படர்ந்த பாதைகளில் சைக்கிளை மிதித்துச் சென்று தீபகற்பத்தில் அங்கேயும் இங்கேயுமாக சிதறிக் கிடந்த சிறுசிறு பட்டணங்களில் பிரசங்கித்தேன். தொலைவிடங்களில் பிரசங்கிப்பதற்காக சில சமயங்களில் சின்ன ஹோட்டல்களிலும் கெஸ்ட் ஹவுஸ்களிலும் இரவு தங்கினேன். இவ்விதமாக பல நூறு கிலோமீட்டர் தூரம் சைக்கிளிலேயே சென்று ஊழியத்தில் அருமையான அனுபவங்களை பெற்று மகிழ்ந்திருக்கிறேன். நான் தனியாக ஊழியம் செய்ததைக் குறித்து அதிகம் கவலைப்பட்டதில்லை. அதோடு யெகோவாவின் அரவணைப்பை உணர உணர அவரிடம் அதிகமாக நெருங்கிச் சென்றிருக்கிறேன்.
லாயக்கற்றவன் என்ற உணர்வை சமாளித்தல்
வட்டாரக் கண்காணியாக ஊழியம் செய்வதற்கு என்னை 1946-ல் அழைத்து ஒரு கடிதம் வந்தது. அதாவது, கொடுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில் இருக்கும் பல சபைகளை போய் சந்திக்க வேண்டும். இந்த நியமிப்பின் பொறுப்புகளை ஏற்பது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. ஒருநாள் சகோதரர் ஒருவர், “ஹாரல்ட் மேடைப் பேச்சில் அவ்வளவு திறம்பட்டவரில்லை, ஆனால் ஊழியத்தில் நன்றாக பேசுவார்” என்று சொன்னதை ஒட்டுக்கேட்டேன். அவர் சொன்னது எனக்கு ரொம்ப உற்சாகமளித்தது. பேச்சில் மற்றும் ஒழுங்கமைக்கும் விஷயத்தில் நான் கொஞ்சம் மட்டம்தான் என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தேன். ஆனால் பிரசங்கிப்பது கிறிஸ்தவர்களுடைய முக்கிய வேலை என்று கருதினேன்.
1947-ல் புரூக்ளினிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர்கள் நேதன் நாரும் மில்டன் ஹென்ஷலும் வருகிறார்கள் என்பதை கேள்விப்பட்டபோது எங்கள் அனைவருக்கும் படு குஷியாகிவிட்டது. 1938-ல் சகோதரர் ரதர்ஃபர்ட் வந்ததற்குப் பிறகு சகோதரர்கள் புரூக்ளினிலிருந்து வருவது இதுவே முதல் முறையாக இருந்தது. இவர்கள் வந்த சமயத்தில்தான் சிட்னியில் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மற்ற இளம் பயனியர்களைப் போல் நானும் மிஷனரி பயிற்சி பெற விரும்பினேன். அமெரிக்காவிலுள்ள நியு யார்க்கின் சவுத் லான்சிங்கில் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளி சற்று முன்னர்தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அங்கு மிஷனரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியில் சேருவதற்கு நிறைய படித்திருக்க வேண்டும் என்று சொன்னால் என்ன செய்வது என்று எங்களில் சிலர் யோசித்தோம். ஆனால் காவற்கோபுர பத்திரிகைகளை படித்து அதில் இருக்கும் முக்கிய குறிப்புகளை நினைவில் வைத்திருக்க முடிந்தால் கிலியட்டில் தேர்ச்சிபெற முடியும் என்று சகோதரர் நார் விளக்கினார்.
நான் அதிகம் படிக்காததால் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு கிலியட் பயிற்சிக்கு என்னை விண்ணப்பிக்கச் சொல்லி வந்திருந்த அழைப்பை பெற்றபோது திகைத்துப்போனேன். அதன்பிறகு நான் தெரிந்தெடுக்கப்பட்டு, 1950-ல் நடைபெற்ற 16-வது வகுப்பில் கலந்துகொண்டேன். இது என்னுடைய தன்னம்பிக்கையை பெருமளவு வளர்த்த ஓர் அருமையான அனுபவமாக இருந்தது. வெற்றி பெறுவதற்கு படிப்பில் சாதனை படைப்பது முக்கியமில்லை, ஊக்கமும் கீழ்ப்படிதலுமே அத்தியாவசியமானது என்பதை இந்த அனுபவம் உணர்த்தியது. எங்களாலான சிறந்ததை செய்யும்படி எங்களுடைய போதனையாளர்கள் உற்சாகப்படுத்தினார்கள். அவர்களுடைய அறிவுரைகளுக்கு இசைவாக நடந்தபோது நல்ல முன்னேற்றத்தை அடைந்தேன். அவர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களை நன்றாக புரிந்துகொள்ளவும் முடிந்தது.
வறண்ட கண்டத்திலிருந்து வளமான தீவுக்கு
பட்டம் பெற்ற கையோடு, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இரண்டு சகோதரர்களுக்கும் எனக்கும் சிலோனுக்குப் (தற்போதைய இலங்கை) போக நியமிப்பு கிடைத்தது. செப்டம்பர் 1951-ல் இலங்கையின் தலைநகரமாகிய கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். ஒரே புழுக்கம். புதுப்புது காட்சிகள், மூக்கைத் துளைக்கும் வாசனைகள், சப்தங்கள் இவையெல்லாம் கலந்து எங்களுடைய புலன்களை திணறடித்தன. நாங்கள் கப்பலைவிட்டு இறங்கியவுடன் அந்த நாட்டில் ஏற்கெனவே இருந்த மிஷனரிகளில் ஒருவர் எங்களிடம் ஒரு சின்ன அழைப்பிதழை கொடுத்து வரவேற்றார். அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று நகரத்தின் மையத்தில் ஒரு பொதுப் பேச்சு இருப்பதாக அந்த அழைப்பிதழில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில், பேச்சாளராக என்னுடைய பெயர் இருப்பதைப் பார்த்தேன். ஒரே ஆச்சரியம்! நான் எவ்வளவு பயந்திருப்பேன் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். ஆனால் எனக்கு எந்த நியமிப்பு கிடைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு ஆஸ்திரேலியாவில் நான் பயனியராக இருந்தபோதே கற்றுக்கொண்டிருந்தேன். எனவே யெகோவாவின் துணையுடன் நான் பொதுப் பேச்சை நல்லவிதமாக கொடுத்து முடித்தேன். நாங்கள் அங்கு போவதற்கு முன்பே கொழும்பு மிஷனரி ஹோமில் திருமணமாகாத நான்கு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் பங்குகொள்ள சிக்கலான சிங்கள மொழியை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் மூன்று பேரும் தீர்மானித்தோம். பெரும்பாலும் நாங்கள் தனியாகவே ஊழியம் செய்தோம். உள்ளூர் மக்கள் மரியாதையுடனும் உபசரிக்கும் தன்மையுடனும் நடந்துகொண்டதை பார்த்து எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. சீக்கிரத்திலேயே சபைக் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.
நாட்கள் செல்லச்செல்ல சிபல் என்ற ஓர் அழகான பயனியர் சகோதரியை திருமணம் செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள கப்பலில் பயணம் செய்தபோது அவளை முதன்முதல் சந்தித்தேன். அப்போது அவள் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியு யார்க்குக்கு பயணம் செய்துகொண்டிருந்தாள். பின்னர் கிலியட்டின் 21-வது வகுப்பில் கலந்துகொண்டு ஹாங்காங்கில் ஊழியம் செய்ய 1953-ல் நியமிப்பை பெற்றாள். சிபலுக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தேன்; 1955-ம் ஆண்டில் சிலோனுக்கு அவள் வந்தபோது நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
நாங்கள் இருவரும் முதன்முதலில் மிஷனரி தம்பதியாக ஊழியம் செய்தது யாழ்ப்பாணத்தில். இந்நகரம் இலங்கையின் வடகோடியில் அமைந்திருக்கிறது. 1950-களின் இடைப்பகுதிகளில் அரசியல் வேறுபாடுகளால், சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டது. இதுவே பின்னர் பல பத்தாண்டுகளாக நடந்துவரும் போருக்கும் வழிவகுத்தது. அந்தக் கடுமையான வருடங்களின்போதுகூட சிங்கள சாட்சிகளும் தமிழ் சாட்சிகளும் ஒருவரையொருவர் பல மாதங்களுக்கு பாதுகாத்துக்கொண்டார்கள். அதைப் பார்த்து மனம் நெகிழ்ந்து போனோம்! அந்த சோதனைகள் நம்முடைய சகோதரர்களின் விசுவாசத்தை புடமிட்டு பலப்படுத்தின.
இலங்கையில் பிரசங்கித்தலும் கற்பித்தலும்
இந்து, முஸ்லிம் சமுதாயத்தினரோடு அனுசரித்துப்போக பொறுமையும் விடாமுயற்சியும் தேவைப்பட்டன. ஆனாலும்கூட இவர்களின் கலாச்சாரங்களையும் விரும்பத்தக்க குணங்களையும் நாங்கள் புரிந்துகொண்டு போற்ற ஆரம்பித்தோம். இலங்கையில் வெளிநாட்டு மக்களை பஸ்ஸில் பார்ப்பது அரிதாயிருந்த காரணத்தினால் நாங்கள் பஸ்ஸில் பயணம் செய்தபோது அநேகர் எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். மலர்ந்த புன்சிரிப்புடன் அவர்களையெல்லாம் பார்ப்பதற்கு சிபல் முடிவுசெய்தாள். விசித்திரமாக பார்த்தவர்களெல்லாரும் பதிலுக்கு சிபலை பார்த்து சிநேகப் புன்முறுவல் பூத்தது எப்பேர்ப்பட்ட சந்தோஷம்!
ஒரு சமயம் நாங்கள் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது நிறுத்தி சோதனை செய்யப்பட்டோம். அங்கிருந்த காவலாளி நாங்கள் எங்கிருந்து வருகிறோம் எங்கு போகிறோம் என்றெல்லாம் விசாரித்தான். அதன்பிறகு எங்களுடைய சொந்த விஷயத்தில் தலையிட்டு கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“யார் இந்தப் பெண்?”
“என் மனைவி” என்று பதிலளித்தேன்.
“உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருடம் ஆகிறது?”
“எட்டு வருடம்.”
“உங்களுக்கு பிள்ளைகள் இருக்கிறார்களா?”
“இல்லை.”
“ஐயையோ! இன்னுமா நீங்க டாக்டரை கன்ஸல்ட் பண்ணல?”
இப்படியெல்லாம் அவன் துருவித் துருவி கேள்விகள் கேட்டது முதலில் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்த ஊர் மக்கள் மற்றவர்கள் மீதுள்ள உண்மையான அக்கறையினால்தான் இப்படியெல்லாம் கேட்கிறார்கள் என்பதை நாட்கள் செல்லச்செல்ல புரிந்துகொண்டோம். சொல்லப்போனால் அவர்களுடைய விரும்பத்தக்க குணங்களில் இதுவும் ஒன்று. ஒரு நபர் பொதுவிடத்தில் ஒருசில வினாடிகளுக்கு நின்றாலே போதும், உடனே யாராவது ஒருத்தர் அன்பாக வந்து ‘உங்களுக்கு நான் உதவட்டுமா’ என்று கேட்பார்.
மாற்றங்களும் இனிய நினைவுகளும்
கடந்த ஆண்டுகளாக இலங்கையில் மிஷனரி ஊழியத்தோடு வேறு பல நியமிப்புகளையும் பெற்று மகிழ்ந்திருக்கிறோம். வட்டார மற்றும் மாவட்ட ஊழியம் செய்ய எனக்கு நியமிப்பு கிடைத்தது. மேலும் கிளை அலுவலக குழுவின் அங்கத்தினராக சேவை செய்யவும் சொன்னார்கள். 1996-ல் நான் 74 வயதாயிருந்தேன். இலங்கையில் 45 வருடங்களுக்கும் மேலாக ஒரு மிஷனரியாக சந்தோஷத்தோடு ஊழியம் செய்திருந்தேன். கொழும்பில் நான் முதன்முதலாக சென்றிருந்த கூட்டத்துக்கு 20 பேர் மட்டுமே வந்திருந்தார்கள். ஆனால் இன்றோ அந்த எண்ணிக்கை 3,500 என உயர்ந்திருக்கிறது. இந்த அருமையான சகோதரர்களில் அநேகர் சிபலுக்கும் எனக்கும் ஆவிக்குரிய பிள்ளைகளாகவும் பேரப்பிள்ளைகளாகவும் இருக்கிறார்கள். அப்போது அந்த நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்னும் நிறைய வேலை இருந்தது; அந்த வேலையை செய்வதற்கு எங்களைவிட வயதில் இளையவர்களின் சக்தியும் திறமையும் தேவைப்பட்டன. இதை நினைவில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பும்படி ஆளும் குழு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டோம். தகுதிவாய்ந்த இளம் தம்பதிகள் எங்களுக்கு பதிலாக இலங்கைக்குள் மிஷனரிகளாக நுழைய அது வழிவகுத்தது.
எனக்கு இப்போது 82 வயதாகிறது. இந்த வயதிலும் ஆரோக்கியமாக என்னுடைய பழைய இடமாகிய அடிலெய்ட்டிலேயே சிபலும் நானும் இன்றுவரை விசேஷித்த பயனியர்களாக சேவை செய்வது எங்களுக்கு சந்தோஷத்தை தருகிறது. எந்த சூழ்நிலையை சந்திக்கவும் சமாளிக்கவும் ஊழியம் எங்களை மனதளவில் பயிற்றுவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல இலங்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த ஆஸ்திரேலியாவின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு எங்களை மாற்றியமைத்துக்கொள்ளவும் எங்களுடைய ஊழியம் உதவிசெய்திருக்கிறது.
இந்நாள் வரையாக எங்களுடைய பொருளாதார தேவைகளையெல்லாம் யெகோவா தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார். மேலும் சபையிலுள்ள சகோதர சகோதரிகள் எங்களிடம் அன்பையும் ஆதரவையும் பொழிகிறார்கள். சமீபத்தில் எனக்கு ஒரு புது நியமிப்பு கிடைத்தது. சபையின் செயலராக செயல்படுவதற்கான நியமிப்பே அது. யெகோவாவை உண்மையுடன் சேவிக்க முயற்சி செய்யும்போது என்னுடைய பயிற்சி தொடரும் என்பதை தெரிந்துகொண்டேன். என்னுடைய நாட்களை சற்று திரும்பிப்பார்த்தால் எதையும் ரொம்ப லேசாக எடுத்துக்கொள்ளும் சாதாரண பையனாக ஒதுக்குப்புறத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் எப்படி இவ்வளவு அருமையான கல்வியை அதாவது வாழ்நாள் முழுக்க நீடித்துவரும் கல்வியை என்னால் பெற முடிந்திருக்கிறது என்பதை அடிக்கடி நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு.
[பக்கம் 26-ன் படம்]
1955-ல் எங்களுடைய கல்யாண நாளன்று
[பக்கம் 27-ன் படம்]
1957-ல் ராஜன் கதிர்காமர் என்ற உள்ளூர் சகோதரருடன் வெளி ஊழியத்தில்
[பக்கம் 28-ன் படம்]
நானும் சிபலும் இன்று