நமக்குத் தேவை உண்மையான நண்பர்கள்
ஜென்னியும் சூவும் உயிர்த்துடிப்புள்ள உரையாடலை கொண்டிருக்கிறார்கள். புன்னகை வீசுகிறது, கண்கள் பளிச்சிடுகின்றன—அவர்களின் தோரணை ஒவ்வொன்றும், ஒருவர் சொல்லவிருக்கும் விஷயத்தில் மற்றவருக்கிருக்கும் ஆழ்ந்த ஆர்வத்தை வெளிக்காட்டுகின்றன. வித்தியாசமான பின்னணிகளைக் கொண்டிருந்தபோதிலும், ஐயத்திற்கிடமின்றி, பல காரியங்களில் பொதுவான ஆர்வங்களையும், ஒருவருக்கொருவர் அதிக மதிப்பையும் வைத்திருக்கிறார்கள்.
மற்றொரு இடத்தில், பல வருடங்களாக பல திட்ட செயல்களில் இணைந்தே பணியாற்றிய எரிக் என்பவரும் டென்னிஸ் என்பவரும் ஒரு திட்ட செயலை ஒன்றாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். சாவகாசமாக இருக்கும் அவர்களிடத்தில் தங்குதடையின்றி சிரிப்பு வருகிறது. அப்படியே உரையாடல் ஆழ்ந்த கவனத்திற்குரிய தலைப்புகளிடமாகத் திரும்புகையில் நேர்மையான கருத்துக்களை அவர்கள் பரிமாற்றம் செய்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள். ஜென்னியையும் சூவையும் போலவே எரிக்கும் டென்னிஸும் உண்மையான நண்பர்கள்.
இந்த விவரிப்புகள் உங்கள் இருதயத்துக்கு அனலூட்டலாம், உங்களுடைய சொந்த நண்பர்களைப்பற்றி சிந்திக்க வைக்கலாம். மறுபட்சத்தில், அத்தகைய நட்புறவுகளுக்காக உங்களை ஏங்கும்படி அவை செய்யலாம். உங்களால்கூட அவற்றை கொண்டிருக்க முடியும்!
ஏன் நமக்கு உண்மையான நண்பர்கள் தேவை
நம் மனம் மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான நட்புறவுகள் மிகவும் அவசியம். இருப்பினும், நாம் தனிமையை உணரும்போது, நம்மிடத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. தனிமை என்பது ஒரு பசி, தோழமை தேவை என்பதை இயற்கையாக சுட்டிக்காட்டும் கருவி என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். எப்படியிருப்பினும், எவ்வாறு உணவானது பசியைக் குறைத்திடுமோ அல்லது அகற்றிடுமோ, அதேபோல் சரியான நட்புறவுகள் தனிமையைக் குறைத்திடலாம் அல்லது அதனை மறைந்துபோகவும் செய்யலாம். மேலுமாக, நம்மை மதிக்கும் நல்ல நண்பர்களை அடைவது சாத்தியமே.
தோழமை கொள்வதற்கான தேவையுடன் மனிதர்கள் படைக்கப்பட்டனர். (ஆதியாகமம் 2:18) ஒரு நண்பன் அல்லது கூட்டாளி “இடுக்கணில் உதவவே . . . பிறந்திருக்கிறான்,” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:17) இவ்வாறாக, தேவைப்படுகையில் ஒருவருக்கொருவர் உதவியைக் கேட்கும் நிலையில் உண்மையான நண்பர்கள் இருக்கவேண்டும். ஆனால், நட்புறவு என்பது வெறுமனே உதவியை நாட ஒருவரை கொண்டிருப்பது அல்லது வேலையிலோ விளையாட்டிலோ ஒரு கூட்டாளியாக இருப்பதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. நல்ல நண்பர்கள் தங்களில் இருக்கும் மிக சிறந்த குணங்களை ஒருவருக்கொருவர் வளர்க்கிறார்கள். நீதிமொழிகள் 27:17 சொல்கிறது: “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” சிறிய துண்டு இரும்பை, அதே உலோகத்தாலான வெட்டுவாய்ப்பகுதியைக் கூர்மையாக்க பயன்படுத்துவதைப்போல் ஒரு நண்பனால் மற்றவனின் அறிவார்ந்த மற்றும் ஆவிக்குரிய நிலையைக் கூர்மைப்படுத்துவதில் வெற்றியடைய முடியும். நிறைவேறாத எதிர்பார்ப்புகளால் நாம் மனச்சோர்வடைந்திருக்கையில், ஒரு நண்பனின் இரக்கமும் இழையோடும் பார்வையும் ஆவிக்குரிய உற்சாகமும் தூக்கிநிறுத்துவதாய் இருக்கின்றன.
பைபிளில் நட்புறவு நேசத்துடனும், நெருங்கிய நட்புடனும், இரகசியத்துடனும், தோழமையுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. நட்புறவுகளில் அயலவர், உடன் வேலைசெய்வோர் என பலர் அடங்குவர். சிலர் தங்கள் உறவினர்களில் சிலரை மிக நெருங்கிய நண்பர்களாக பாவிக்கிறார்கள். இருப்பினும், உண்மையான நண்பர்களை அடைவதும் தக்கவைத்து கொள்வதும் இன்று பலருக்குக் கடினமாக இருக்கிறது. ஏன் அவ்வாறு? உண்மையான, நிலையான நட்புறவுகளை உங்களால் அனுபவிக்க முடியுமா?