அந்தியோகியாவின் தியாஃபலஸ் யாராக இருந்தார்?
“சாபத்திற்குரிய பட்டப்பெயரை நான் கொண்டிருப்பதுபோல், என்னை ஒரு கிறிஸ்தவன் என்று நீ கூப்பிடுகிறாய். என்னுடைய பாகத்தில் நான் ஒரு கிறிஸ்தவன் என்று ஒப்புக்கொள்கிறேன். கடவுளின் அன்பிற்குரியவனாக ஆவதற்கும், அவருக்கு சேவைசெய்பவனாகும் நம்பிக்கையுடனும், இந்தப் பட்டத்தை கொண்டிருக்கிறேன்.”
தியாஃபலஸ் டு ஆட்டால்லகஸ் என்ற தலைப்புடைய தன்னுடைய மூன்று-பகுதிகளாலான புத்தகப்படைப்பை தியாஃபலஸ் இவ்வாறு ஆரம்பிக்கிறார். இரண்டாம் நூற்றாண்டு விசுவாசதுரோகத்திற்கு எதிரான அவருடைய வாதத்தின் ஆரம்பமாக இது இருக்கிறது. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவராக தன்னை தைரியமாக தியாஃபலஸ் அடையாளம் காட்டுகிறார். கிரேக்க மொழியில் அவருடைய பெயரின் அர்த்தத்திற்கு இசைவாக, “கடவுளின் அன்பிற்குரியவனாக” ஆவதற்கு தன்னுடைய காரியங்களை நடப்பிக்க உறுதியுள்ளவராக காணப்படுகிறார். யார்தான் இந்த தியாஃபலஸ்? அவர் எப்போது வாழ்ந்தார்? அவர் எதை நிறைவேற்றினார்?
சுயசரிதை
தியாஃபலஸின் சுயசரிதையைப்பற்றி சொற்பமே தெரியவந்திருக்கிறது. கிறிஸ்தவர் அல்லாத பெற்றோரால் அவர் வளர்க்கப்பட்டார். வேதவசனங்களைப்பற்றிய ஒரு கவனமான படிப்பிற்குப் பிறகே, தியாஃபலஸ் பின்னர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். ஆனால், துருக்கியில், இன்று அந்தாக்கியா எனப்படும், சீரிய அந்தியோகியாவின் சபைக்கு அவர் பேராயர் ஆனார்.
இயேசுவின் கட்டளைக்கு ஒத்திசைவாக, அந்தியோகியப் பிரஜைகளுக்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பிரசங்கித்தார்கள். அவர்களுடைய வெற்றியை லூக்கா பதிவுசெய்து, இவ்வாறு கூறுகிறார்: “யெகோவாவின் கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.” (அப்போஸ்தலர் 11:20, 21, NW) தெய்வீக வழிநடத்துதலின்படியே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறியப்பட ஆரம்பித்தார்கள். சீரிய அந்தியோகியாவில்தான் இந்தப் பெயர் முதலில் வழங்கப்பட்டது. (அப்போஸ்தலர் 11:26) பொ.ச. முதல் நூற்றாண்டில், சீரிய அந்தியோகியாவிற்கு அப்போஸ்தலனாகிய பவுல் பயணம் செய்தார். அது அவருடைய ஊழியத்தைத் தொடங்கும் இடமாக ஆனது. அந்தியோகியாவிலிருந்து, பர்னபாவும், பவுலும், யோவான் மாற்குடன் சேர்ந்து தங்களுடைய முதல் மிஷனரி பயணத்திற்குப் புறப்பட்டார்கள்.
தங்களுடைய நகரத்திற்கு அப்போஸ்தலர்கள் வருகைதந்ததினால், அந்தியோகியாவின் பூர்வ கிறிஸ்தவர்கள் நிச்சயமாக மிகவும் உற்சாகமடைந்திருப்பார்கள். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திற்கு அவர்கள் உற்சாகமாக பிரதிபலித்ததற்கு, சந்தேகமின்றி முதல் நூற்றாண்டு ஆளும் குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட வருகைகள் ஓரளவு காரணமாக இருந்தன. (அப்போஸ்தலர் 11:22, 23) யெகோவா தேவனுக்கு தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்த அந்தியோகிய வாசிகளில் அவ்வளவு அநேகம்பேரைக் காண அவர்களுக்கு எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்! ஆயினும், 100 வருடங்கள் கழித்துதான் தியாஃபலஸ் அந்தியோகியாவில் வாழ்ந்தார்.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களுடைய காலத்தில் இருந்து கணக்கிடுகையில், அந்தியோகியாவின் ஆறாவது பேராயராக தியாஃபலஸ் இருந்தார் என்று, யூசிபியஸ் என்ற சரித்திராசிரியர் கூறுகிறார். கொள்கை வேறுபாட்டுக்கு எதிராக தியாஃபலஸ் ஒரு கணிசமான எண்ணிக்கையுடைய வாய்மொழியான கலந்துரையாடல்களையும், மறுப்புரை வாதங்களையும் எழுதினார். அவருடைய நாளில் கிறிஸ்தவத்தின் ஆதரவாளர்களாக இருந்த ஒரு டஜன் ஆட்களில், அல்லது அதைவிட அதிகமானவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.
அவருடைய எழுத்துக்களின் பேரில் ஒரு கண்ணோட்டம்
முந்திய உரையாடலுக்குப் பிரதிபலித்து, புறமதத்தினனான ஆட்டால்லகஸ்-க்கு பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு தியாஃபலஸ் எழுத ஆரம்பிக்கிறார்: “புத்திகெட்டுபோன பரிதாபமானவர்களுக்கு, ஒரு சரளமான நாவும், புகழ்ச்சிநயமிக்க பேச்சும் பிரியமளித்து, வீண்கர்வம் விரும்பும் இன்பத்தை அத்தகைய போற்றுதல் கொடுக்கிறது.” தியாஃபலஸ் இவ்வாறு விளக்குகிறார்: “சத்தியத்தை விரும்புபவர் சொல்நயமிக்க பேச்சுகளுக்கு கவனம் செலுத்தாமல், பேச்சின் உண்மையான கருத்தை ஆராய்கிறார் . . . நீ அர்த்தமில்லாத வார்த்தைகளால் என்னைத் தாக்கியிருக்கிறாய், சுத்தியாலடித்து, செதுக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்ட உன்னுடைய மரம் மற்றும் கல் தெய்வங்களைப் பற்றி பெருமைப்படுகிறாய். பார்க்கவும், பேசவும் இயலாதிருக்கிற மனுஷருடைய கைவேலையான விக்கிரகங்களாக அவை உள்ளன.”—ஒப்பிடுக: சங்கீதம் 115:4-8.
தியாஃபலஸ் விக்கிரகாராதனையின் தவறை வெளிப்படுத்துகிறார். உண்மை கடவுளின் சரியான தன்மையை மிகையாக இருந்தாலும், ஆற்றலுடன் தனக்கே உரிய எழுத்துப் பாணியில் விவரிக்க முயற்சிக்கிறார்: “கடவுளின் தோற்றம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாததாயும், மாம்ச கண்களால் பார்க்க முடியாததாயும் இருக்கிறது. மகிமையில் புரிந்துகொள்ளமுடியாதவராயும், மகத்துவத்தில் ஆழங்காணமுடியாதவராயும், உயரத்தில் நினைத்துப்பார்க்க முடியாதவராயும், வல்லமையில் ஒப்பிடக்கூடாதவராயும், ஞானத்தில் ஈடில்லாதவராயும், நற்குணத்தில் இணையற்றவராயும், இரக்கத்தில் வருணிக்கமுடியாதவராயும் இருக்கிறார்.”
கடவுளைப்பற்றிய இந்த விவரிப்பை விரிவாக்க, தியாஃபலஸ் தொடருகிறார்: “ஆனால் அவர் கர்த்தர், ஏனென்றால் பிரபஞ்சத்தை ஆளுகிறவர்; பிதா, ஏனென்றால் எல்லாவற்றுக்கும் ஆதியானவர்; படைப்பாளி மற்றும் சிருஷ்டிகர், ஏனென்றால் சர்வலோகத்தை உண்டாக்கி, சிருஷ்டித்தவர்; மிக உயர்ந்தவர் ஏனென்றால் எல்லாவற்றுக்கும் மேலானவர்; மற்றும் சர்வவல்லவர் ஏனென்றால் எல்லாவற்றையும் அவரே ஆட்சி செய்கிறவராயும், எல்லாவற்றையும் உள்ளடக்கியவராயும் இருக்கிறார்.”
அடுத்து, கடவுளின் குறிப்பிட்ட சாதனைகளின்மேல் கவனத்தை ஒருமுகப்படுத்தி, செம்மையான, சற்றே திரும்பத்திரும்ப கூறும் தனக்கேயுரிய அடையாளமான பாணியில் தியாஃபலஸ் தொடர்கிறார்: “வானங்கள் அவருடைய வேலையாகவும், பூமி அவருடைய படைப்பாகவும், சமுத்திரம் அவருடைய கைவேலைப்பாடுமாக இருக்கின்றன; மனிதன் அவருடைய படைப்பாகவும், அவருடைய சாயலாகவும் இருக்கிறான். அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருடங்களையும் குறிக்கிறதற்காகவும், மனிதனுக்காக சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை சிருஷ்டித்திருக்கிறார்; அவருடைய படைப்புகளினால் அவருடைய மகத்துவம் அறியப்படவும், புரிந்துகொள்ளப்படவும், இல்லாதிருந்தவற்றிலிருந்து இருக்கிறவற்றையெல்லாம் கடவுள் உண்டாக்கினார்.”
அவருடைய நாட்களிலிருந்த பொய்கடவுட்களின் மேல் தியாஃபலஸ் செய்த தாக்குதல்களுக்கு மேலும் ஒரு மாதிரி, ஆட்டால்லகஸிற்கான பின்வரும் வார்த்தைகளிலிருந்து கவனிக்கப்படுகிறது: “நாங்கள் வணங்கிவருகிறோம் என்று நீ கூறுகிறவர்களின் பெயர்கள், இறந்துபோன மனிதர்களுடைய பெயர்கள். . . . பின்னும் அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள்? தன் சொந்த பிள்ளைகளையே கொன்று விழுங்குகிற நரமாமிசம் உண்ணும் தெய்வமல்லவோ சாட்டர்ன்? மேலும், அவனுடைய மகன் ஜூப்பிட்டரை எடுத்துக்கொண்டால், . . . எப்படி அவன் ஒரு ஆடால் பாலூட்டப்பட்டான் என்றும், . . . அவனுடைய முறைதகாப் புணர்ச்சி, விபசாரம், மற்றும் காமம் போன்ற அவனுடைய மற்ற செயல்களைக் குறித்தும் கேள்விப்படுகிறோம்.”
தன் விவாதத்தை விரிவுப்படுத்தி, புறமத விக்கிரகாராதனைக்கு எதிரான தன் நிலைநிற்கையை தியாஃபலஸ் பலப்படுத்துகிறார். “எகிப்தியர் வணங்கிவருகிற ஆற்றுமீன்கள், பறவைகள், காட்டுமிருகங்கள், கால்நடைகள், ஊரும்பிராணிகள் போன்ற திரளான மிருகங்களைப்பற்றி மேலும் விவரிக்க வேண்டுமா . . . கிரேக்கர்களும் மற்ற தேசத்தினரும் கற்களையும், மரங்களையும் மற்ற பொருட்களையும் வணங்கிவருகிறார்கள்.” “ஆனால், ஜீவனுள்ள, உண்மையான கடவுளைத்தான் நான் வணங்குகிறேன்,” என்று தியாஃபலஸ் அறிக்கையிடுகிறார். —2 சாமுவேல் 22:47; அப்போஸ்தலர் 14:15; ரோமர் 1:22, 23.
மதிப்புள்ள ஆதாரம்
ஆட்டால்லகஸ் தவறென நிரூபித்து தியாஃபலஸ் எழுதிய மூன்று பகுதிகளில் உள்ள கண்டிப்புகளும், புத்திமதிகளும் பல கோணங்கள் அடங்கினவையாயும், விளக்கமானவையாயும் உள்ளன. தியாஃபலஸின் மற்ற நூல்கள் ஹர்மாஜ்ஜனிஸ் மற்றும் மர்சீயனிற்கு எதிராக எழுதப்பட்டிருந்தது. சுவிசேஷத்தின்மேல் கூடுதலான விளக்கவுரையைச் சேர்த்து, போதனை மற்றும் உபதேச புத்தகங்களையும்கூட அவர் எழுதினார். இருந்தபோதிலும், ஆட்டால்லகஸிற்கு எழுதிய, ஒரு கையெழுத்துப்பிரதியில் உள்ள மூன்று புத்தகங்கள் மாத்திரம்தான் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன.
முதல் புத்தகம், கிறிஸ்தவ மதத்தின் சார்பாக ஆட்டால்லகஸிற்கு எழுதப்பட்ட ஒரு வாதவிளக்க ஆதாரம். ஆட்டால்லகஸிற்கு எழுதப்பட்ட இரண்டாம் புத்தகம், பிரபலமான புறமதம், ஊகங்கள் ஆகியவற்றிற்கு எதிராகவும், தத்துவஞானிகள், கவிஞர்கள் ஆகியோருக்கு எதிராகவும் விவாதிக்கிறது. தியாஃபலஸின் மூன்றாவது புத்தகத்தில் வேதவசனங்களோடு புறமத இலக்கியங்கள் ஒப்பிடப்படுகிறது.
தியாஃபலஸ் தன் மூன்றாவது புத்தகத்தை தொடங்கும்போதும், ஆட்டால்லகஸ் சத்தியத்தின் வார்த்தை ஒரு கட்டுக்கதை என்ற தெளிவான அபிப்பிராயத்தில் இன்னும் இருந்தார். தியாஃபலஸ் ஆட்டால்லகஸை இவ்வாறு குற்றஞ்சாட்டுகிறார்: “முட்டாள்களை நீ சகித்துக்கொள்கிறாய். இல்லாவிட்டால், புத்தியில்லா மனிதர்களின் அர்த்தமில்லா வார்த்தைகளுக்கு நீ இணங்கி, பரவியிருக்கிற வதந்தியை நம்பியிருக்கமாட்டாய்.”
‘அந்த பரவியிருந்த வதந்தி’ என்ன? தியாஃபலஸ் மூலகாரணத்தை வெளிப்படுத்துகிறார். “கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிற, கடவுளின் வணக்கத்தாராகிய எங்களை, இழிவுபடுத்துகிற நாஸ்திக நாவுடையவர்கள், எங்கள்மேல் பொய்குற்றஞ்சாட்டுகிறார்கள். எங்களுடைய மனைவிமார் எல்லாரையும் பொதுவில், ஒழுங்கற்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், எங்கள் சொந்த சகோதரிகளுடனே நாங்கள் முறைதவறி நடப்பதாகவும், எல்லாவற்றையும்விட எது மிகவும் நிந்தனையான, காட்டுமிராண்டித்தனமானது என்றால் நாங்கள் நரமாமிசம் உண்கிறோம் என்றும் அவர்கள் உறுதியுடன் கூறுவதுதான்.” வெளிப்படையாக இருந்த இரண்டாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப்பற்றிய இந்த முழுவதும் தவறான புறமத நோக்கை எதிர்த்துப் போராட தியாஃபலஸ் பிரயாசப்பட்டார். கடவுளின் ஏவப்பட்ட வார்த்தைகளிலுள்ள சத்தியத்தின் வெளிச்சத்தை அவர் பயன்படுத்தினார்.—மத்தேயு 5:11, 12.
எபிரெய மற்றும் கிரேக்க வேதவசனங்களை அடிக்கடி பயன்படுத்தியதாலும், சுட்டிக்காட்டியதாலும் கடவுளுடைய வார்த்தைக்கு அவர் பழக்கப்பட்டவர் என்று நிரூபணமாகிறது. ஆரம்பத்தில் இருந்த சுவிசேஷ விளக்கவுரையாளர்களில் அவர் ஒருவராக இருந்தார். தியாஃபலஸின் பல வேதவசன குறிப்பீடுகள், அவருடைய காலத்தில் பரவியிருந்த எண்ணங்களுக்கு ஒரு மிகுதியான உட்பார்வையைக் கொடுக்கின்றன. புறமத தத்துவங்களைவிட ஏவப்பட்ட எழுத்துக்களின் மேம்பட்ட தன்மையைக் காட்ட, அவற்றோடிருந்த தன் பரிச்சயத்தைப் பயன்படுத்தினார்.
தியாஃபலஸ் எழுதிய பொருட்களின் சீரமைப்பு, அவருடைய போதனைப்பாணி மற்றும் திரும்பத்திரும்பக் கூறும் எழுத்துநடை போன்றவை சிலரின் கவனத்தைக் கவராமல் இருக்கலாம். அவருடைய கருத்துக்களின் துல்லியத்தை, முன்னறிவிக்கப்பட்ட விசுவாசதுரோகம் எந்தளவுக்கு பாதித்திருக்கலாம் என்று தற்போது நாம் கூறமுடியாது. (2 தெசலோனிக்கேயர் 2:3-12) இருந்தபோதிலும், சுமார் பொ.ச. 182-ல் அவர் இறப்பதற்குள், தியாஃபலஸ் ஒரு சோர்ந்துபோகாத ஆதரவாளராக தெளிவாக ஆகிவிட்டிருந்தார். நம் நவீன காலத்திலிருக்கும் உண்மை கிறிஸ்தவர்களுக்கு அவருடைய எழுத்துக்கள் ஆர்வம் உண்டாக்குகின்றன.
[பக்கம் 30-ன் படம்]
ஆட்டால்லகஸின் தர்க்கங்களை தவறென தைரியமாக தியாஃபலஸ் நிரூபித்தார்
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
lllustrations on pages 28 and 30 reproduced from lllustrirte pracht-Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s