கெட்ட செய்தியின் சம்பவங்கள் அதிகரிப்பு
கெட்ட செய்தியை அறிவிக்கும் தலைப்புச்செய்திகள், நற்செய்தி தெரிவிப்பவற்றைக் காட்டிலும் வாசகரின் அக்கறையை அதிகமாக எழுப்புகின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? அது இயற்கைச் சேதம் ஒன்றைக் குறித்த செய்தித்தாள் தலைப்புச்செய்தியாக இருந்தாலும்சரி அல்லது வழுவழுப்பான பத்திரிகை ஒன்றின் முன்னட்டையில் வரும் ஏதோவொரு சுவாரஸ்யமான அறிக்கையாக இருந்தாலும்சரி, கெட்ட செய்தி நற்செய்தியைவிட அதிகமாக விற்பனையாவதாகத் தோன்றுகிறது.
கெட்ட செய்திக்கு இன்று பஞ்சமே இல்லை. ஆனால், எந்த விதமான நற்செய்தியையும் தவிர்த்து, கெட்ட செய்தியை மாத்திரமே நாடும்படியும், தேடிக் கண்டுபிடிக்கும்படியும்தான் நிருபர்களும் பத்திரிகையாளர்களும் பயிற்றுவிக்கப்படுகிறார்களா என்று ஒருவர் சில சமயங்களில் சிந்திக்கக்கூடும்.
சரித்திரம் முழுவதுமாக பெருமளவில்
உண்மையில், நூற்றாண்டுகள் முழுவதிலும், எந்த நற்செய்தியையும் மிஞ்சக்கூடிய விதத்தில் கெட்ட செய்தி பெருமளவில் இருந்திருக்கிறது. சரித்திரப் பதிவுகளில், மனிதவர்க்கத்திற்கு கிடைத்த பங்குகளாக இருந்திருக்கும் மனித துன்பம், ஏமாற்றம், மனமுறிவு ஆகியவற்றினிடமாக தராசு வெகுவாக சாய்ந்திருக்கிறது.
வெறுமனே ஒருசில உதாரணங்களை நாம் சிந்திப்போமாக. ஷாக் லக்ரான் என்பவரால் உருவாக்கப்பட்ட உலகத்தின் செய்திப் பட்டியல் என்ற ஆங்கில புத்தகம் பல்வேறு விவரத்தொகுப்புகளை அளிக்கிறது. அவை ஒவ்வொன்றும் சம்பவம் நடந்த அந்தக் குறிப்பிட்ட தேதிக்காக எழுதப்பட்டன, ஆனால் சம்பவத்தை அறிக்கை செய்யும் ஒரு நவீனநாளைய பத்திரிகையாளர் சொல்வதைப்போல அவை எழுதப்பட்டிருக்கின்றன. நன்கு ஆராயப்பட்டிருக்கும் இந்த அறிக்கைகளிலிருந்து, இந்தக் கிரகமான பூமியிலே மனிதன் தன்னுடைய தொந்தரவு மிகுந்த வாழ்நாட்காலம் முழுவதுமாக கேள்விப்பட்டிருக்கும் மிகப் பரவலாயுள்ள கெட்ட செய்தியைக் குறித்து ஒரு அனுகூலமான நோக்குநிலையை நாம் பெறுகிறோம்.
முதலில், பொ.ச.மு. 429-ல் கிரீஸிலிருந்து வந்த இந்த ஆரம்பகால அறிக்கையைக் கவனியுங்கள். அத்தேனேயுக்கும் ஸ்பார்டாவிற்கும் இடையே அப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருந்த போரைக் குறித்து இது அறிக்கை செய்கிறது: “பாடடியா என்ற நகர நாடு, இறந்தவர்களின் உடல்களை அதன் ஜனங்கள் சாப்பிடும் அளவுக்கு பசியின் ஒரு நிலைக்கு தாழ்த்தப்பட்டபிறகு, முற்றுகையிட்டிருக்கும் அத்தேனேயர்களிடம் சரணடைய வற்புறுத்தப்பட்டிருக்கிறது.” உண்மையிலேயே ஒரு கெட்ட செய்தி!
பொது சகாப்தத்திற்கு முன்பு முதலாம் நூற்றாண்டில், ஜூலியஸ் ஸீஸரின் மரணத்தைக் குறித்து, ரோம், பொ.ச.மு. 44, மார்ச் 15, என்ற தேதியிடப்பட்ட ஒரு தெளிவான அறிக்கையை நாம் காண்கிறோம். “ஜூலியஸ் ஸீஸர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். மார்ச் 15, சட்டமாமன்ற மேலவையில் தன்னுடைய இருக்கையில் அவர் இன்று அமர்ந்தபோது, சதிகாரக் கும்பல் ஒன்றினால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அந்தக் கும்பலிலிருந்த சிலர் அவருடைய மிக நெருங்கிய நண்பர்கள்.”
அதைப் பின்தொடர்ந்த நூற்றாண்டுகளில், கெட்ட செய்தி தொடர்ந்து பெருகியவண்ணமிருந்தது. 1487-ல் மெக்ஸிகோவிலிருந்து வந்த இந்தச் செய்தி வருத்தமூட்டும் ஒரு உதாரணமாகும்: “ஆஸ்டெக்கின் தலைநகரமான டேனோச்டைட்லானில் இதுவரை பார்த்திராத மிகப் பிரமிக்கத்தக்க உயிர்பலிக்குரிய காட்சியில், இட்ஸிலோபோச்டிலி என்ற போர்கடவுளுக்கு 20,000 ஜனங்களுடைய இருதயங்கள் பலியிடப்பட்டிருக்கின்றன.”
மனிதனுடைய குரூரம் மாத்திரம் கெட்ட செய்தியை அளித்திருப்பதில்லாமல் அவனுடைய அஜாக்கிரதையும் நீண்ட பட்டியலில் இன்னும் அதிகத்தை சேர்த்திருக்கிறது. லண்டனின் மிகப் பெரிய தீ விபத்து அப்படிப்பட்ட சேதத்தில் ஒன்றாக இருந்திருப்பதாகத் தோன்றுகிறது. செப்டம்பர் 5, 1666 என்று தேதியிடப்பட்ட, இங்கிலாந்தில் உள்ள லண்டனிலிருந்து வந்த அந்த அறிக்கை இவ்வாறு வாசிக்கிறது: “கடைசியாக, நான்கு பகலுக்கும் இரவுக்கும் பிறகு, யார்க்கின் சிற்றறசரால் லண்டனின் தீ அணைக்கப்பட்டிருக்கிறது. நெருப்பு பரவிக்கொண்டேபோகும் தடத்தில் உள்ள கட்டிடங்களைத் தகர்ப்பதற்காக வெடிமருந்தைப் பயன்படுத்தும் கப்பற்படை அணிகளை அவர் வரவழைத்தார். 87 சர்ச்சுகளும் 13,000-க்கும் மேலான வீடுகளும் அழிக்கப்பட்டு, கிட்டத்தட்ட 400 ஏக்கர் நிலம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. அதிசயிக்கத்தக்க விதத்தில், வெறுமனே ஒன்பது உயிர்கள் மட்டும்தான் இழக்கப்பட்டன.”
கெட்ட செய்தியின் இந்த உதாரணங்களோடு, அநேக கண்டங்களில் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு மேலோங்கியிருக்கும் கொள்ளை நோய்களையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்—உதாரணத்திற்கு, 1830-ன் ஆரம்ப காலத்திலிருந்த காலரா கொள்ளை நோய். இதை அறிக்கை செய்யும் அச்சிடப்பட்ட தலைப்பு இவ்வாறு வாசிக்கிறது: “காலராவின் அச்சுறுத்தல் ஐரோப்பாவை பீதியடையச் செய்கிறது.” அதைப் பின்தொடரும் உயிர்த்தோற்றம் குன்றாத அறிக்கை, கெட்ட செய்தியை முற்றிலும் பீதியுண்டாக்கும் விதத்தில் இவ்வாறு விளக்குகிறது: “1817 வரையாக ஐரோப்பாவில் அறியப்படாத காலரா, ஆசியாவிலிருந்து மேற்கைநோக்கி பரவுகிறது. மாஸ்கோ மற்றும் செ. பீட்டர்ஸ்பர்க் போன்ற ரஷ்ய நகரங்களில் உள்ள ஜனங்கள் ஏற்கெனவே பேரளவில் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் நகரில் வாழ்கிற ஏழை மக்கள்.”
சமீப ஆண்டுகளில் உயர்வு
பதிவு செய்யப்பட்டிருக்கும் சரித்திரம் முழுவதிலுமான கெட்ட செய்தி வாழ்க்கையின் ஒரு மெய்ம்மையாக இருந்திருப்பது உண்மையாய் இருக்கிறபோதிலும், கெட்ட செய்தி அதிகரித்து வருவதற்கான, உண்மையில் வேகமாக பெருகி வருவதற்கான அத்தாட்சியை இந்த 20-ம் நூற்றாண்டின் சமீபத்திய பத்தாண்டுகள் கொடுக்கின்றன.
சந்தேகமில்லாமல், நம்முடைய தற்போதைய நூற்றாண்டு இதுவரைக் கேள்விப்பட்டிருக்கும் கெட்ட செய்திகளிலேயே படுமோசமானது போர்செய்தியாகத்தான் இருந்திருக்கிறது. முதலாவது உலகப்போர் மற்றும் இரண்டாவது உலகப்போர் என்பதாக சரியாகவே அழைக்கப்படும் சரித்திரத்தின் இரண்டு மிகப் பெரிய போர்கள் பயங்கரமான அளவில் கெட்ட செய்திகள் அறிக்கை செய்யப்பட்டதை நிச்சயமாகவே கண்டன. ஆனால் இந்த சந்தோஷமற்ற நூற்றாண்டு ஏற்படுத்தியிருக்கும் கெட்ட செய்தி எல்லாவற்றிலும் அது ஒரு சிறிய பகுதியாகத்தான் உண்மையில் இருந்திருக்கிறது.
அங்குமிங்குமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில தலைப்புச்செய்திகளை மட்டும் கவனியுங்கள்:
செப்டம்பர் 1, 1923: பூமியதிர்ச்சி டோக்கியோவை தரைமட்டமாக்கியது—3,00,000 பேர் சாவு; செப்டம்பர் 20, 1931: நெருக்கடியான நிலை—பவுண்டின் மதிப்பை பிரிட்டன் குறைக்கிறது; ஜூன் 25, 1950: வடகொரியா தென்கொரியாவிற்குள் புகுந்திருக்கிறது; அக்டோபர் 26, 1956: ஹங்கேரியர்கள் சோவியத் ஆட்சிக்கு எதிராக எழும்புகிறார்கள்; நவம்பர் 22, 1963: ஜான் கென்னடி டல்லாஸில் சுட்டுக் கொல்லப்பட்டார்; ஆகஸ்ட் 21, 1968: பிரேக் எழுச்சியை முறியடிக்க ரஷ்ய பீரங்கிகள் நுழைகின்றன; செப்டம்பர் 12, 1970: கடத்தப்பட்ட விமானங்கள் காட்டில் வெடித்து சிதறின: டிசம்பர் 25, 1974: ட்ரேஸி என்ற புயல் டார்வினை நாசமாக்குகிறது—66 பேர் சாவு; ஏப்ரல் 17, 1975: கம்யூனிஸ படையிடம் கம்போடியா வீழ்ச்சி; நவம்பர் 18, 1978: கயானாவில் கும்பல் தற்கொலை; அக்டோபர் 31, 1984: திருமதி காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்; ஜனவரி 28, 1986: விண்வெளி ஓடம் புறப்பட்ட உடனே வெடித்தது; ஏப்ரல் 26, 1986: சோவியத் ரியாக்டர் பற்றியெரிகிறது; அக்டோபர் 19, 1987: பங்குச் சந்தை வீழ்ச்சி; மார்ச் 25, 1989: எண்ணெய்க் கசிவினால் அலாஸ்கா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது; ஜூன் 4, 1989: டியன்-அன்மன் சதுக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்களை படைப்பிரிவு படுகொலை செய்தது.
ஆம், கெட்ட செய்தி எப்போதுமே அதிகமாக இருந்திருப்பதாகவும், அதோடு ஒப்பிடுகையில் நற்செய்தி குறைவாகவே இருந்திருப்பதாகவும் சரித்திரம் காண்பிக்கிறது. சமீப பத்தாண்டுகளில் கெட்ட செய்தி உயர்ந்து வந்திருக்கிறபோது, ஒவ்வொரு வருடமும் செல்லச்செல்ல நற்செய்தி குறைந்துகொண்டு வந்திருக்கிறது.
இது ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? எப்போதுமே இது இவ்வாறுதான் இருக்குமா?
அடுத்த கட்டுரை இந்த இரண்டு கேள்விகளையும் கலந்தாலோசிக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
WHO/League of Red Cross