மதைகளின் கண்ணோட்டத்தில் சுவிசேஷம்
‘ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?’ (லூக்கா 9:18) இயேசு இதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தம்முடைய சீஷர்களிடத்தில் கேட்டார். அன்று இக்கேள்வி சர்ச்சைக்குள்ளானாதாக இருந்தது. இன்று இன்னும் அதிக சர்ச்சைக்குள்ளாகியிருப்பதாகத் தோன்றுகிறது, விசேஷமாக இயேசுவை மையங்கொண்டுள்ளதாக நம்பப்படும் கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் அவ்வாறு தோன்றுகிறது. மனிதவர்க்கத்தை மீட்பதற்கென்று பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்டவரே இயேசு என்பதாக பலர் நம்புகிறார்கள். நீங்களும் இவ்வாறு நம்புகிறீர்களா?
சில மேதைகள் வேறு கருத்தை முன்வைக்கின்றனர். மதம் மற்றும் பண்பாட்டின் பேராசிரியராய் இருக்கும் மார்கஸ் ஜே. பார்க் இவ்வாறு உரிமை பாராட்டுகிறார்: “இயேசு தம்மை உலக பாவங்களுக்காக இறக்க வேண்டிய கடவுளுடைய குமாரன் என்று கற்பித்தார் என்ற அவரைப்பற்றிய கருத்து வரலாற்றுப்பூர்வமான உண்மை அல்ல.”
நிஜ இயேசு வேறு, பைபிளில் நாம் படிக்கும் இயேசு வேறு என்பதாக மற்ற மேதைகள் சொல்லிக்கொள்கிறார்கள். சிலர் என்ன நம்புகிறார்கள் என்றால், இயேசு இறந்து நாற்பது ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்டுதான் சுவிசேஷங்கள் எழுதப்பட்டன, எனவே அதற்குள்ளாக இயேசுவின் உண்மையான அடையாளம் ஜோடிக்கப்பட்டாயிற்று. சுவிசேஷத்தை எழுதியவர்களின் ஞாபகசக்தி அல்ல பிரச்சினை, ஆனால் அவர்கள் தரும் விளக்கம்தான் பிரச்சினையே என்பதாக மேதைகள் அடித்து கூறுகிறார்கள். இயேசுவின் இறப்புக்குப்பின், அவருடைய சீஷர்கள் அவரை கடவுளின் குமாரன், இரட்சகர், மேசியா என வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். ஆனால் சிலர் இயேசுவை வெறுமனே சுற்றித்திரிந்த ஒரு யோகி, ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று தைரியமாக கூறுகிறார்கள். மேதைகள் சொல்வதுதான் சுவிசேஷ சத்தியம், அதாவது முற்றிலுமான உண்மை என்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
இயேசுவைப்பற்றி “மேதாவி” கருத்து
திறனாய்வாளர்கள் தங்களுடைய “மேதாவி” கருத்தை ஆதரிப்பதற்காக, இயேசுவைப்பற்றி இயற்கைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றும் எதையும் தள்ளிவிட ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என தோன்றுகிறது. உதாரணத்திற்கு, கன்னிக்குப் பிறந்ததாகச் சொல்வதெல்லாம் இயேசுவின் முறைகேடான பிறப்பை மூடிமறைக்கவே என சிலர் கூறுகின்றனர். இன்னும் மற்றவர்கள், எருசேலம் அழிவைக்குறித்த இயேசுவின் தீர்க்கதரிசனங்களைத் தள்ளிவிட்டு, அவை “நிறைவேறிய” பின்பே சுவிசேஷங்களில் புகுத்தப்பட்டன என்று ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். இயேசுவின் சுகப்படுத்துதல்கள் முழுக்கமுழுக்க மனோவியல் மூலம் சுகப்படுத்தப்பட்டவை என்பதாகவும்கூட சிலர் சொல்கிறார்கள். அத்தகைய கூற்றுகள் நியாயமானவையாக அல்லது அபத்தமானவையாக நீங்கள் காண்கிறீர்களா?
இயேசுவின் சீஷர்கள் தங்களுடைய இயக்கம் நசிந்துவிடாதிருக்கவே உயிர்த்தெழுதல் என்னும் கதையைக் கட்டிவிட்டார்கள் என்பதாகவும்கூட சில மேதைகள் உரிமை பாராட்டுகிறார்கள். பார்க்கப்போனால், இயேசுவின்றி அவரது சீஷர்கள் பலமற்று இருந்தார்கள், எனவேதான் அவர்கள் தங்களுடைய கதையில் மீண்டும் தங்களுடைய எஜமானரை புகுத்தினார்கள் என்பதாக மேதைகள் நியாயவிவாதம் செய்கிறார்கள். அடிப்படையில் அவர்கள் கூறுவது என்னவென்றால், உயிர்த்தெழுப்பப்பட்டது கிறிஸ்தவமே ஒழிய, கிறிஸ்து அல்ல. சரி, இவையெல்லாம் மேதாவி கருத்துரிமையாகவே தோன்றலாம், ஆனால் இயேசு கொல்லப்படவேயில்லை என்ற இறைமையியலாளர் பார்பார தியரிங்கின் கூற்றைப் பற்றியதென்ன? இயேசுவை கழுமரத்தில் அறைந்தபோது அவர் தப்பிவிட்டதாகவும், இரண்டு முறை திருமணம் செய்து, மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகி, தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருந்தார் என்பதாக பார்பார தியரிங் நம்புகிறார்.
இந்தக் கூற்றுகள் அனைத்தும் அறிஞர்கள் பலர் இயேசுவை தாழ்வாக ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலைக்கே, அதாவது அவரை ஒரு ஞானியாக, ஒரு சராசரி யூதனாக, சமூக சீர்திருத்தவாதியாக, ஆனால் அவர் ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வந்த’ கடவுளின் குமாரன் என்பதைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் சரி என்ற ஒரு நிலைக்கே அவரைக் கொண்டுவருகின்றன.—மத்தேயு 20:28.
பண்டிகைகாலத்தின் இச் சமயத்தில், தொழுவத்தில் இயேசு பிறந்தது போன்ற பகுதிகளை சுவிசேஷங்களிலிருந்து நீங்கள் அநேகமாக வாசித்திருக்கலாம். அல்லது அவற்றை சர்ச்சில் கேட்டிருக்கலாம். சுவிசேஷ விவரப்பதிவுகளை மதிப்புள்ளவையாகவும் நம்பத்தகுந்தவையாகவும் நீங்கள் ஏற்றுக்கொண்டீர்களா? அப்படியென்றால், இந்த அதிர்ச்சிதரும் நிலைமையைக் கொஞ்சம் கவனியுங்கள். பெயரளவில் இயேசுவைப்பற்றிய கருத்தரங்கு எனப்பட்ட ஒன்றில், மேதைகளின் குழு ஒன்று இயேசுவினுடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையைத் தீர்மானிக்க 1985-லிருந்து வருடத்திற்கு இருமுறை கூடுகிறது. இயேசு கூறியதாக பைபிள் சொல்பவை உண்மையில் அவர் கூறியவைதானா? ஒவ்வொரு வார்த்தையின்பேரில் கருத்தரங்கின் அங்கத்தினர்கள் வண்ண மணிகளால் வாக்களித்தார்கள். அந்தக் கூற்று நிச்சயமாகவே கூறப்பட்டது என்பதற்கு சிகப்பு மணியும்; அநேகமாக இயேசு சொல்லியிருக்கலாம் என்பதற்கு இளஞ்சிவப்பு நிற மணியும்; சந்தேகமாக இருப்பதைக் குறிக்க சாம்பல் நிற மணியும்; பொய் என்பதைக் குறிப்பிட கறுப்பு மணியும் பயன்படுத்தப்பட்டன.
இயேசு கூறியதாக கூறப்படுபவையில் 82 சதம் அவர் அநேகமாக சொல்லியிருக்கலாம் என இயேசுவைப்பற்றிய கருத்தரங்கம் தெரிவித்ததை அறிவது ஒருவேளை உங்களை கலக்கமடைய செய்யும். மாற்கு சுவிசேஷத்திலிருந்து ஒரேவொரு மேற்கோள் மாத்திரம் நம்பகமானது என தீர்மானிக்கப்பட்டது. லூக்காவின் சுவிசேஷம் முழுக்கமுழுக்க “உண்மையைத் தீர்மானிக்க முடியாத” பிரச்சாரம் அடங்கியுள்ளதாகச் சொல்லப்பட்டது. யோவானின் சுவிசேஷத்தில் மூன்று வரிகளைத் தவிர, மற்ற அனைத்தும் பொய் என குறித்துக்காட்டும் கறுப்பு மணிகளையே வாக்குகளாக பெற்றன, மீதமிருந்த அந்த மூன்று வரிகளுக்குச் சந்தேகத்தைக் குறிக்கும் சாம்பல் நிற மணிகள் கிடைத்தன.
கல்வி அறிவைவிட அதிகமானது
இந்த மேதைகள் சொல்வதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? இயேசுவைப்பற்றிய விவரிப்பு பைபிளில் காணப்படுவதைவிட அதிக திருத்தமாக நமக்கு அவர்கள் அளிக்கிறார்களா? இந்தக் கேள்விகள் மேதாவித்தன சொற்போரைக் காட்டிலும் அதிகமானவை. பைபிளின்படி, இயேசுவை “விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” அவரை கடவுள் அனுப்பிவைத்தார் என்று வருடத்தின் இக் காலப்பகுதியில் நீங்கள் நினைப்பூட்டப்படுவீர்கள்.—யோவான் 3:16.
இயேசு வெறுமனே சுற்றித்திரிந்த ஒரு யோகி, அவரைப்பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது என்றால் அவரில் ‘விசுவாசிப்பது’ அர்த்தமற்றது. அதற்கு மாறாக, இயேசுவைப்பற்றிய பைபிளின் விவரிப்பு உண்மையென்றால், அதில் நம்முடைய நித்திய இரட்சிப்பு அடங்கியுள்ளது. எனவே, நாம் அறிந்துகொள்ள வேண்டியது—இயேசுவைப்பற்றிய உண்மை பைபிளில் அடங்கியுள்ளதா?