நிஜ இயேசு
தம்மை பற்றி ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அப்போஸ்தலர்களிடமிருந்து அறிந்தபின், இயேசு அவர்களிடம் இவ்வாறு கேட்டார்: “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்”? அப்போஸ்தலனாகிய பேதுருவின் பதிலை மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு பதிவு செய்கிறது: “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.” (மத்தேயு 16:15, 16) மற்ற அப்போஸ்தலர்களுடைய அபிப்பிராயமும் அதுவாகவே இருந்தது. பிற்பாடு அப்போஸ்தலர்களில் ஒருவராக மாறிய நாத்தான்வேல், “ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என இயேசுவிடம் சொன்னார். (யோவான் 1:49) இயேசுவே தமது ஸ்தானத்தின் முக்கியத்துவத்தை குறித்து இவ்வாறு சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர் தம்மை ‘தேவ குமாரன்’ என குறிப்பிட்டார். (யோவான் 5:24, 25; 11:4) இதற்கு ஆதாரமாக அற்புதங்களைச் செய்தார், மரித்தோரையும் உயிர்த்தெழுப்பினார்.
சந்தேகங்கள் ஆதாரப்பூர்வமானவையா?
ஆனால் இயேசுவைப் பற்றி சுவிசேஷ பதிவுகள் தரும் விவரிப்பை நாம் உண்மையில் நம்ப முடியுமா? அவை நிஜ இயேசுவை படம்பிடித்து காட்டுகின்றனவா? இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பைபிளின் திறனாய்வு மற்றும் விளக்கவுரை பேராசிரியராக இருந்த காலம்சென்ற ஃப்ரெட்ரிக் எஃப். ப்ரூஸ் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரு பழங்கால புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு நுணுக்க விவரமும்—அது பைபிள் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்—உண்மையானதா என்பதை சரித்திரப்பூர்வ தர்க்கங்களின் அடிப்படையில் மெய்ப்பித்துக் காட்டுவது பொதுவாக முடியாத விஷயம். ஓர் எழுத்தாளர் நம்பிக்கைக்கு பாத்திரராக இருந்தாலே போதுமானது, அவருடைய எழுத்துக்களை தாராளமாக நம்பலாம்; இது உறுதியானால் அவர் தரும் விவரங்களும் உண்மையாக இருக்கலாம் என்பதற்கு அதுவே அத்தாட்சியாக இருக்கிறது. . . . புதிய ஏற்பாட்டை கிறிஸ்தவர்கள் ‘பரிசுத்த’ புத்தகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காக அது சரித்திரப்பூர்வமானது அல்ல என்று சொல்லிவிட முடியாது.”
சுவிசேஷங்களில் வர்ணிக்கப்பட்டுள்ள இயேசு யார் என்பதைக் குறித்த சந்தேகங்களை ஆராய்ந்த பின்பு, அ.ஐ.மா., வட டகோடாவிலுள்ள ஜேம்ஸ்டவுன் கல்லூரியில் மத பேராசிரியராக பணிபுரியும் ஜேம்ஸ் ஆர். எட்வர்ட்ஸ் இவ்வாறு எழுதினார்: “உண்மையில் இயேசு யார் என்பதற்கு பலதரப்பட்ட முக்கிய சான்றுகள் சுவிசேஷங்களில் இருக்கின்றன என நாம் உறுதியுடன் கூறலாம். . . . இயேசுவைப் பற்றி சுவிசேஷங்கள் ஏன் அப்படி சொல்கின்றன என்ற கேள்விக்கு மிகவும் நியாயமான பதில், இயேசு உண்மையில் அப்படிப்பட்டவராகத்தான் இருந்தார் என்பதே. அவர் தம் சீஷர்களின் மனதில் பதித்துச் சென்றதை—அவர் உண்மையிலேயே கடவுளால் அனுப்பப்பட்டவர், கடவுளுடைய குமாரனும் ஊழியனுமாக இருப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டவர் என்பதை—சுவிசேஷங்கள் உண்மையோடு பாதுகாத்து வருகின்றன.”a
இயேசுவைத் தேடி
இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் சாராத பதிவுகள் என்ன சொல்கின்றன? அவை எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன? இயேசுவை பற்றிய அநேக குறிப்புகள், டாஸிடஸ், சுடோனியஸ், ஜொஸிஃபஸ், ப்ளைனி இளையவர், மற்றும் சில பண்டைய புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஆகியோரின் படைப்புகளில் காணப்படுகின்றன. அவற்றை குறித்து த நியூ என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (1995) இவ்வாறு கூறுகிறது: “பூர்வ காலத்தில், கிறிஸ்தவ மதத்தின் எதிரிகளும்கூட இயேசு உண்மையான ஆளா என ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்பதை இந்த ஒவ்வொரு பதிவுகளும் நிரூபிக்கின்றன; 18-ம் நூற்றாண்டின் முடிவிலும், 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலுமே முதன்முறையாக தகுந்த ஆதாரம் எதுவுமின்றி இது விவாதத்திற்கு உள்ளானது.”
வருத்தகரமாக, நவீன அறிஞர்கள் “நிஜ” அல்லது “சரித்திரப்பூர்வ” இயேசுவைத் தேடும் முயற்சியில் அவருடைய உண்மையான அடையாளத்தை ஆதாரமற்ற ஊகம், பொருத்தமற்ற ஐயப்பாடு, அடிப்படையற்ற கோட்பாடு போன்ற அடுக்குகளின் கீழே புதைத்துவிட்டதுபோல் தோன்றுகிறது. கட்டுக்கதை உருவாக்கியதாக சுவிசேஷ எழுத்தாளர்களை தவறாக குற்றஞ்சாட்டும் அவர்களே ஒரு விதத்தில் அந்தக் குற்றத்தை சுமக்கிறார்கள். சிலரோ மற்றவர்கள் பார்வையில் பிரபலங்களாக வேண்டும் என்ற ஆர்வத்தாலும், ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு புதிய கோட்பாட்டை இயற்றிய பெருமை தங்களைச் சேரவேண்டும் என்பதாலும் இயேசுவை பற்றிய உண்மைகளை நேர்மையாக ஆராய தவறுகிறார்கள். காலப்போக்கில், புலமை வாய்ந்த கற்பனையில் புனையப்பட்ட ஒரு ‘இயேசுவை’ அவர்கள் உருவாக்குகிறார்கள்.
நிஜ இயேசுவை தேடிக் கண்டுபிடிக்க விரும்புகிறவர்களுக்கு அவர் பைபிளில் தென்படுவார். சரித்திரப்பூர்வ இயேசுவை பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் பைபிளின் குறிக்கோளை தவறவிடுகின்றன என எம்ரி பல்கலைக்கழகத்தின் கேன்ட்லர் இறையியல் பள்ளியில் புதிய ஏற்பாடு மற்றும் கிறிஸ்தவ ஆரம்பங்கள் என்ற பாடத்திற்கு பேராசிரியரான லூக் ஜான்ஸன் வாதிடுகிறார். இயேசுவின் வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலத்தின் சமுதாய, அரசியல், மனிதவியல் மற்றும் நாகரிகம் சார்ந்த சூழமைவுகளை ஆராய்வது ஆர்வமூட்டுவதாக இருக்கலாம் என அவர் கூறுகிறார். இருந்தாலும், சரித்திரப்பூர்வ இயேசு என அறிஞர்கள் அழைக்கும் அவரை கண்டுபிடிப்பது “பைபிளின் குறிக்கோளே அல்ல”; அது “இயேசுவின் இயல்பையும்” அவருடைய செய்தியையும் மீட்பராக அவர் வகித்த பங்கையும் “விவரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது” என அவர் மேலுமாக கூறுகிறார். அப்படியானால், இயேசுவின் உண்மையான இயல்பும் செய்தியும் என்னவாக இருந்தன?
நிஜ இயேசு
சுவிசேஷங்கள்—இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி கூறும் நான்கு பைபிள் பதிவுகள்—மிகுந்த அனுதாபத்தைக் காண்பித்த ஒரு மனிதரை சித்தரித்துக் காட்டுகின்றன. நோயுற்றோருக்கும், குருடருக்கும், இன்னும் பல இன்னல்களை அனுபவித்தவர்களுக்கும் உதவுவதற்கு பரிவும் இரக்கமும் இயேசுவை உந்துவித்தன. (மத்தேயு 9:36; 14:14; 20:34) தம்முடைய சிநேகிதன் லாசருவின் மரணத்தாலும் லாசருவின் சகோதரிகளின் துக்கத்தாலும் இயேசு ‘கலங்கி கண்ணீர் விட்டார்.’ (யோவான் 11:32-36) சொல்லப்போனால், சுவிசேஷங்கள் இயேசுவின் பலதரப்பட்ட உணர்ச்சிகளை—குஷ்டரோகியிடம் காட்டிய ஆழ்ந்த அனுதாபம், சீஷர்கள் ஊழியத்தில் பெற்ற பலன்களை அறிந்தபோது அடைந்த உற்சாகம், சட்டத்தை நுணுக்கமாக கடைப்பிடித்த ஈவிரக்கமற்ற ஆட்கள்மீது காட்டிய கோபம், மேசியாவை எருசலேம் புறக்கணித்ததால் அடைந்த மனவேதனை ஆகியவற்றை—வெளிப்படுத்துகின்றன.
இயேசு அற்புதத்தை செய்கையில், அதில் அந்த நபருடைய பங்கு என்ன என்பதற்கு அடிக்கடி கவனத்தை திருப்பினார்: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என கூறினார். (மத்தேயு 9:22) அவர் நாத்தான்வேலை “கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என புகழ்ந்து கூறினார். (யோவான் 1:47) ஒரு ஸ்திரீ நன்றியறிதலுடன் அளித்த பரிசை சிலர் வீண் செலவாக கருதியபோது இயேசு அவளுக்கு ஆதரவாக பேசி, அவளுடைய தாராள மனப்பான்மை நீண்ட காலத்திற்கு நினைவுகூரப்படும் என கூறினார். (மத்தேயு 26:6-13) தம் சீஷர்களுக்கு அவர் உண்மையான சிநேகிதனாகவும் பிரியமான கூட்டாளியாகவும் இருந்து “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.”—யோவான் 13:1; 15:11-15.
அவர் சந்தித்த பெரும்பாலானோரின் தேவைகளையும் மனப்பான்மைகளையும் உடனடியாக உணர்ந்துகொண்டார் எனவும் சுவிசேஷங்கள் காட்டுகின்றன. கிணற்றருகே ஒரு பெண்ணிடமோ தோட்டத்தில் ஒரு மதப்போதகரிடமோ அல்லது ஏரியருகே மீன்பிடிப்பவரிடமோ யாரிடமானாலும் சட்டென அவர்களுடைய மனதைத் தொடும் வண்ணம் பேசினார். இயேசு பேச ஆரம்பித்தபின், இவர்களில் பலரும் தங்களுடைய அடிமனதிலிருந்த எண்ணங்களையெல்லாம் அவரிடம் தெரியப்படுத்தினார்கள். அவருடைய வார்த்தைகள், அவர்களின் இதயத்தை தொட்டன. அவருடைய காலத்து ஜனங்கள் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களோடு ஒட்டாமல் இருந்தனர், ஆனால் இயேசுவைக் குறித்ததிலோ ஜனங்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இயேசுவுடன் இருக்கவே அவர்கள் விரும்பினர்; அவரிடம் அவர்கள் தயக்கமின்றி அணுகினர். பிள்ளைகள் அவரிடம் பயப்படாமல் சென்றனர்; ஒரு சிறுபிள்ளையை உதாரணமாக காண்பிக்கையில் அவர் வெறுமனே அப்பிள்ளையை சீஷர்களுக்கு முன்பாக நிறுத்தவில்லை; அவர் ‘அதை அணைத்துக்கொண்டார்.’ (மாற்கு 9:36; 10:13-16) சொல்லப்போனால் மிகுந்த வசீகர சக்திபடைத்த மனிதராக இயேசுவை சுவிசேஷங்கள் படம்பிடித்துக் காட்டுகின்றன; ஆகவேதான் ஜனங்கள், மனதை கொள்ளை கொள்ளும் அவருடைய வார்த்தைகளை கேட்பதற்காகவே மூன்று நாட்கள் அவருடன் தங்கினர்.—மத்தேயு 15:32.
இயேசு பரிபூரணராதலால், அபூரணரும் பாவிகளுமான ஜனங்கள் மத்தியில் வாழ்ந்த போதும், அவர்களிடத்தில் பிரசங்கித்த போதும் குற்றம் குறை கண்டுபிடிப்பவராகவோ தற்பெருமையுள்ளவராகவோ சர்வாதிகாரியாகவோ நடந்துகொள்ளவில்லை. (மத்தேயு 9:10-13; 21:31, 32; லூக்கா 7:36-48; 15:1-32; 18:9-14) இயேசு ஒருபோதும் மற்றவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பவராக இருக்கவில்லை. ஜனங்களின் சுமையை கூட்டவுமில்லை. மாறாக, அவர் இவ்வாறு சொன்னார்: “சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” அவருடைய சீஷர்கள் அவரை “கனிவும் மனத்தாழ்மையும்” உடையவராக கண்டார்கள்; அவருடைய நுகம் மெதுவாயும் அவருடைய சுமை இலகுவாயும் இருந்தது.—மத்தேயு 11:28-30, பொது மொழிபெயர்ப்பு.
சுவிசேஷ பதிவுகள் இயேசுவின் உண்மையான இயல்பை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன. ஓர் அசாதாரண நபரை நான்கு வித்தியாசப்பட்டவர்கள் உருவாக்கி, பின் நான்கு வித்தியாசப்பட்ட பதிவுகளில் அவரை பற்றி ஒரேவிதமாக ஒத்திசைவுடன் எழுதுவது எளிதல்ல. அப்படிப்பட்ட ஒருவர் உண்மையில் வாழவில்லை என்றால் நான்கு வித்தியாசப்பட்ட எழுத்தாளர்களால் ஒரே நபரைப் பற்றி முரண்பாடில்லாமல் ஒரேவிதமாக விவரிப்பது முடியாத விஷயமாக இருக்கும்.
சரித்திராசிரியர் மைக்கேல் க்ரான்ட் சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வியை கேட்கிறார்: “எவ்வித உணர்ச்சிவயப்படுதலோ பாசாங்குத்தனமோ கூச்சவுணர்வோ இல்லாமல், அதே சமயத்தில் எல்லா சந்தர்ப்பத்திலும் பலதரப்பு பெண்களோடு—ஊரறிந்த ஒழுக்கங்கெட்ட பெண்களோடும்—விகற்பமின்றி சகஜமாக பழகும் தனித்தன்மை வாய்ந்த கவர்ச்சிமிக்க இளம் மனிதரை பற்றி எல்லா சுவிசேஷங்களிலும் குறிப்பிடத்தக்க விதத்தில் சொல்லப்பட்டிருப்பது எப்படி சாத்தியம்?” அப்படிப்பட்ட ஒருவர் உண்மையிலேயே வாழ்ந்தார் என்பதும் பைபிள் கூறுகிறபடியே நடந்துகொண்டார் என்பதுமே அதற்கு நியாயமான பதில்.
நிஜ இயேசுவும் உங்கள் எதிர்காலமும்
இயேசுவின் பூமிக்குரிய வாழ்க்கையின் உண்மையான சரிதையை பைபிள் சொல்கிறது. அதோடு, “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமான” கடவுளுடைய ஒரேபேறான குமாரன் மனிதனாக வருவதற்கு முன்பே வாழ்ந்தவர் எனவும் அது காட்டுகிறது. (கொலோசெயர் 1:15) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் தம்முடைய பரலோக குமாரன் மனிதனாக பிறப்பதற்காக அவருடைய உயிரை ஒரு யூத கன்னியின் வயிற்றிற்கு மாற்றினார். (மத்தேயு 1:18) தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின்போது, அவதியுறும் மனிதகுலத்திற்கு ஒரே நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமே என இயேசு பிரசங்கித்தார்; இந்தப் பிரசங்க வேலையை தொடர்ந்து செய்வதற்கு தம் சீஷர்களுக்கும் பயிற்சியளித்தார்.—மத்தேயு 4:17; 10:5-7; 28:19, 20.
பொ.ச. 33, நிசான் 14 (சுமார் ஏப்ரல் 1) அன்று இயேசு கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டு, ராஜதுரோக பொய் குற்றத்தின் பேரில் கொலை செய்யப்பட்டார். (மத்தேயு 26:18-20, மத்தேயு 26:48–27:50) இயேசுவின் மரணம் மீட்பை அளிக்கிறது, விசுவாசமுள்ள மனிதகுலத்தை அவர்களுடைய பாவமுள்ள நிலையிலிருந்து விடுவிக்கிறது, இவ்வாறு அவரில் விசுவாசத்தைக் காண்பிக்கும் அனைவரும் நித்திய ஜீவனை பெறுவதற்கு வழியை திறந்து வைக்கிறது. (ரோமர் 3:23, 24; 1 யோவான் 2:2) நிசான் 16 அன்று இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார்; அதற்குப்பின் சில நாட்களில் அவர் பரலோகத்திற்கு திரும்பச் சென்றார். (மாற்கு 16:1-8; லூக்கா 24:50-53; அப்போஸ்தலர் 1:6-9) யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜா என்ற நிலையில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கு மனிதன் பேரில் கடவுள் கொண்டிருந்த ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முழு அதிகாரமும் இருக்கிறது. (ஏசாயா 9:6, 7; லூக்கா 1:32, 33) ஆம், கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிப்பவர் இயேசுவே என பைபிள் காட்டுகிறது.
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த எண்ணற்றோர், இயேசு உண்மையில் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை ஏற்றுக்கொண்டனர். அதாவது, வாக்குபண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து என்றும், யெகோவாவின் அரசதிகாரத்தை நிரூபிப்பதற்கும் மனிதகுலத்திற்காக மீட்கும்பொருளாக மரிப்பதற்கும் பூமிக்கு அனுப்பப்பட்டவர் என்றும் ஏற்றுக்கொண்டனர். (மத்தேயு 20:28; லூக்கா 2:25-32; யோவான் 17:25, 26; 18:37) கடுமையான துன்புறுத்தலின் மத்தியில், ஜனங்கள் இயேசுவை சரியாக அடையாளம் கண்டுகொண்டிருக்கவில்லை என்றால் அவரது சீஷர்களாவதற்கு அவர்கள் உந்துவிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள். ‘சகல ஜாதிகளையும் சீஷராக்கும்படி’ அவர்களுக்கு கொடுத்த வேலையை தைரியத்துடனும் வைராக்கியத்துடனும் செய்தனர்.—மத்தேயு 28:19.
விஷயம் தெரிந்த நல்மனம் படைத்த லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், இயேசு கட்டுக்கதைகளில் வரும் கதாபாத்திரம் அல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள். பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கடவுளுடைய ராஜ்யத்தின் முடிசூட்டப்பட்ட ராஜா அவரே எனவும் விரைவில் பூமியையும் அதன் விவகாரங்களையும் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவார் எனவும் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி எல்லாராலும் வரவேற்கப்படுகிற செய்தி, ஏனெனில் உலக பிரச்சினைகளிலிருந்து விடுதலையை இது வாக்குறுதி அளிக்கிறது. “ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை” மற்றவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவின் தெரிந்தெடுக்கப்பட்ட ராஜாவுக்கு உண்மைப்பற்றுறுதியுடன் ஆதரவு கொடுப்பதை காட்டுகிறார்கள்.—மத்தேயு 24:14, NW.
ஜீவனுள்ள கடவுளின் குமாரனாகிய கிறிஸ்து மூலமாக செய்யப்பட்டுள்ள ராஜ்ய ஏற்பாட்டிற்கு ஆதரவு காட்டுபவர்கள் நித்திய ஆசீர்வாதங்களை அனுபவித்து வாழ்வர். நீங்களும் இத்தகைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கலாம்! இந்தப் பிரசுரத்தை பிரசுரிப்போர் நிஜ இயேசுவை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவுவதில் அதிக மகிழ்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள்.
[அடிக்குறிப்பு]
a சுவிசேஷ பதிவுகளைப் பற்றிய கூடுதலான விளக்கத்திற்கு யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தின் 5 முதல் 7 அதிகாரங்களைக் காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
மற்றவர்களின் கருத்துக்கள்
“நசரேயனாகிய இயேசுவை இவ்வுலகில் வாழ்ந்த புகழ்பெற்ற போதகர்களில் ஒருவராக நான் கருதுகிறேன். . . . நீங்கள் இயேசுவின் போதனைகளை பயபக்தியுடன் படிக்காதவரையில் உங்களுடைய வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல என நான் இந்துக்களிடம் சொல்வேன்.” மோஹன்தாஸ் கே. காந்தி, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தி (ஆங்கிலம்).
“நிஜமானவரும், முழுநிறைவானவரும், இயல்பு மாறாதவரும், பூரணரும், மனித இயல்புடையவரும் அதேசமயத்தில் எல்லா மனிதரையும்விட உயர்ந்தவருமான ஒருவர் ஒரு போலி நபராகவோ கட்டுக்கதை கதாபாத்திரமாகவோ இருக்க முடியாது. . . . இயேசுவுக்கும் மேலான ஒருவராலேயே ஓர் இயேசுவை உருவாக்க முடியும்.” ஃபிலிப் ஷேஃப், கிறிஸ்தவ சர்ச்சின் வரலாறு (ஆங்கிலம்).
“சாதாரண மனிதர்கள் சிலர் ஒரு சந்ததிக்குள் அத்தனை வல்லமையும், கவர்ச்சியும் வாய்ந்த ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் உருவாக்கிட முடியும் என்பது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தையும்விட நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும்.” வில் டூரன்ட், ராயனும் கிறிஸ்துவும் (ஆங்கிலம்).
“நல்மனம் படைத்த அநேகர் மதங்களை ஸ்தாபிக்க முயன்றும் தோல்வியடைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை; அப்படியிருக்க உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு மதம், எங்குமே இல்லாத கற்பனையில் புனையப்பட்ட நபரால் உருவானது என்பதும் அதை ஸ்தாபிப்பதற்கு பழங்கால மக்கள் சிலர் அவரை பயன்படுத்தினர் என்பதும் அறிவிற்கு அப்பாற்பட்டதாக தோன்றலாம்.” க்ரெக் ஈஸ்டர்ப்ருக், அமைதலான தண்ணீரண்டையில் (ஆங்கிலம்).
‘ஒரு இலக்கிய சரித்திராசிரியனாக, சுவிசேஷங்கள் எவையானாலும் சரி, அவை கட்டுக்கதைகள் அல்ல என்பதை நான் முழுமையாக நம்புகிறேன். அவற்றை கட்டுக்கதை என சொல்லும் அளவுக்கு அவற்றில் சூழ்ச்சிகள் எதுவும் இல்லை. இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய பெரும்பாலான விஷயங்கள் நமக்குத் தெரியாது; கட்டுக்கதையை புனையும் எவருமே இப்படிப்பட்ட விஷயங்களை சேர்க்காமல் விடமாட்டார்கள்.’ சி. எஸ். லூயிஸ், குற்றவாளிக் கூண்டில் கடவுள் (ஆங்கிலம்).
[பக்கம் 7-ன் படங்கள்]
இயேசுவின் பலதரப்பட்ட உணர்ச்சிகளை சுவிசேஷங்கள் வெளிப்படுத்துகின்றன