உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 12/15 பக். 5-8
  • இயேசுவைப்பற்றிய உண்மை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவைப்பற்றிய உண்மை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் சொல்வது
  • நம்புவதற்கான ஆதாரங்கள்
  • எதற்காக அவர்கள் நம்புவதில்லை
  • உண்மையான இயேசுவை கண்டுபிடித்தல்
  • நிஜ இயேசு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • 10. கிறிஸ்தவம்—கடவுளிடம் செல்ல இயேசு வழியாக இருந்தாரா?
    கடவுளைத் தேடி
  • அது நிஜமாகவே நடந்ததா?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • பைபிள் புத்தக எண் 40—மத்தேயு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 12/15 பக். 5-8

இயேசுவைப்பற்றிய உண்மை

இயேசு யர், அவர் எதை சாதித்தார் என்பதற்கான கற்பனைகளுக்கும் ஊகங்களுக்கும் பஞ்சமே இல்லையென தோன்றுகிறது. ஆனால் பைபிளைப் பற்றி என்ன? அது இயேசு கிறிஸ்துவைப்பற்றி என்ன சொல்கிறது?

பைபிள் சொல்வது

பைபிளை கவனமாகப் படிப்பதன்மூலம், இந்த முக்கிய உண்மைகளை உங்களால் காண முடியும்:

◻ இயேசு கடவுளுடைய ஒரேபேறான குமாரனும், சகல சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்—யோவான் 3:16; கொலோசெயர் 1:15.

◻ சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்குமுன், மனிதனாக பிறக்கவேண்டும் என்பதற்காக கடவுள் இயேசுவின் உயிரை ஒரு யூத கன்னியின் கர்ப்பத்திற்கு மாற்றினார்.—மத்தேயு 1:18; யோவான் 1:14.

◻ வெறும் ஒரு நல்ல மனிதரைவிட இயேசு அதிக மேன்மையானவர். அவர் ஒவ்வொரு அம்சத்திலும் தமது தகப்பனாகிய யெகோவா தேவனின் அழகான ஆளுமையின் உண்மையான பிரதிபிம்பமாக இருந்தார்.—யோவான் 14:9, 10; எபிரெயர் 1:3.

◻ தமது பூமிக்குரிய ஊழியத்தில், ஒடுக்கப்பட்டோரின் தேவைகளை இயேசு அன்பாக கவனித்தார். அவர் அற்புதகரமாக நோயாளிகளைக் குணமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினார்.—மத்தேயு 11:4-6; யோவான் 11:5-45.

◻ கவலைதோய்ந்த மனிதவர்க்கத்திற்கு ஒரே தீர்வு கடவுளுடைய ராஜ்யம்தான் என்று இயேசு அறிவித்தார், இந்தப் பிரசங்கவேலையைத் தொடர்ந்து செய்ய தம்முடைய சீஷர்களைப் பயிற்றுவித்தார்.—மத்தேயு 4:17; 10:5-7; 28:19, 20.

◻ நிசான் 14-ல் (ஏறக்குறைய ஏப்ரல் 1), பொ.ச. 33-ல் இயேசு கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டார். தேச துரோகம் என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.—மத்தேயு 26:18-20, மத்தேயு 26:48-27:50.

◻ இயேசுவின் மரணம் மீட்கும்பொருளாக சேவிக்கிறது, இதை நம்பும் மனித வர்க்கத்தை பாவத்தன்மையிலிருந்து விடுதலையாக்குகிறது; இவ்வாறாக அவரில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் நித்திய ஜீவனுக்கான வழியைத் திறக்கிறது.—ரோமர் 3:23, 24; 1 யோவான் 2:2.

◻ நிசான் 16-ல் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார். அதற்குப்பின், வெகுவிரைவிலேயே, தம்முடைய பரிபூரண மனித உயிரினுடைய மீட்பின் மதிப்பை தமது தந்தையிடம் சமர்ப்பிப்பதற்காக பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றார்.—மாற்கு 16:1-8; லூக்கா 24:50-53; அப்போஸ்தலர் 1:6-9.

◻ உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, யெகோவாவின் நியமிக்கப்பட்ட அரசராய் மனிதனுக்கான கடவுளின் ஆதி நோக்கத்தை நிறைவேற்ற முழு அதிகாரத்தையும் உடையவராக இருக்கிறார்.—ஏசாயா 9:6, 7; லூக்கா 1:32, 33.

இவ்வாறாக, கடவுளின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய நபராக இயேசுவை பைபிள் விவரிக்கிறது. ஆனால் இவர்தான் உண்மையான இயேசு—வரலாறு கூறும் இயேசு, சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் பெத்லகேமில் பிறந்து, பூமியில் கால் பதித்தவர் என்று நீங்கள் எப்படி நிச்சயமாக இருக்கலாம்?

நம்புவதற்கான ஆதாரங்கள்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை வெறுமனே திறந்த மனதுடன் படித்தாலே போதும், பல சந்தேகங்கள் பறந்துவிடும். அவ்வாறு செய்யும்போது பைபிள் விவரப்பதிவு, புனைக்கதைகளில் நடப்பதுபோல், நிகழ்ச்சிகள் ஏதோ மனதில் நிழலாடியதால் ஒப்பிக்கப்பட்டவை அல்ல என்பதை நீங்கள் கண்டுணருவீர்கள். அதற்கு மாறாக, பெயர்கள், குறிப்பான காலங்கள், சரியான இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. (உதாரணத்திற்கு லூக்கா 3:1, 2-ஐக் காண்க.) மேலுமாக, இயேசுவின் சீஷர்கள் மெச்சத்தக்க நேர்மை உள்ளவர்களாகவும், ஒளிவுமறைவு அற்றவர்களாகவும் விவரிக்கப்பட்டுள்ளனர். இது வாசகரின் மனதில் நம்பிக்கையை வளர்க்கிறது. உண்மையான பதிவை தயாரிக்கவேண்டும் என்ற அக்கறையின் காரணமாக எவருடைய தவறையும், ஏன் தங்கள் சொந்த தவறையும்கூட எழுத்தாளர்கள் மறைக்கவில்லை. ஆம், சத்தியத்தின் மேன்மை பைபிள் முழுவதும் இழையோடுவதை நீங்கள் காண்பீர்கள்.—மத்தேயு 14:28-31; 16:21-23; 26:56, 69-75; மாற்கு 9:33, 34; கலாத்தியர் 2:11-14; 2 பேதுரு 1:16.

இருப்பினும், இன்னும் அதிகமுள்ளது. பைபிளின் விவரப்பதிவு உண்மை என்பதை புதைபொருள் கண்டுபிடிப்புகள் அடிக்கடி உறுதிசெய்கின்றன. உதாரணத்திற்கு, ஒருவேளை நீங்கள் இஸ்ரேலுக்கு போய், ஜெரூசலமில் உள்ள அருங்காட்சியகத்திற்குச் செல்வீர்களானால், பொந்திய பிலாத்துவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ள ஒரு கல்லை அங்கே காணலாம். பைபிள் குறிப்பிடும் லிசானியாவும், செர்கியு பவுலும் உண்மையில் வாழ்ந்த மனிதர்களே அன்றி, ஆரம்ப கிறிஸ்தவர்களால் ஜோடிக்கப்பட்ட நபர்கள் அல்ல என்பதை மற்ற புதைபொருள் ஆராய்ச்சிகள் உறுதிசெய்கின்றன. ஜூவனல், டாஸிடஸ், செனிக்கா, சுடோனியஸ், இளைய பிளினி, லூஷன், கெல்சஸ், யூத வரலாற்று ஆசிரியர் ஜொஸிஃபஸ் உள்ளிட்ட பழைய எழுத்தாளர்களின் மேற்கோள்களில், கிரேக்க வேதாகமத்தில் (புதிய ஏற்பாட்டில்) அறிவிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் திரளான அத்தாட்சிகளைக் காணலாம்.a

முதல் நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரப்பதிவுகளை எந்தவித கேள்விக்கிடமின்றி ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்தவத்தின் எதிரிகள்கூட இயேசு சொன்னதாகவும் செய்ததாகவும் அறிவித்ததன் உண்மைத்தன்மையை மறுக்கவில்லையே. இயேசுவின் இறப்புக்குப் பின்பே அவருடைய சீஷர்கள் இயேசு என்னும் ஒரு கதாபாத்திரத்தை ஜோடித்திருக்கலாம் என்பதற்கு இதோ பேராசிரியர் எஃப். எஃப்: புருஸ் சொல்லும் குறிப்புகள்: “சில எழுத்தாளர்கள் நினைப்பதுபோல், இயேசு சொன்னவையாகவும் செய்தவையாகவும் ஜோடிப்பது அக்காலத்தில் நிச்சயம் அவ்வளவு சுலபமல்ல, ஏனென்றால் அச்சமயத்தில் அவருடைய சீஷர்கள் அத்தனைபேர் உயிரோடு இருந்தார்கள், என்ன நடந்தன என்ன நடக்கவில்லை என்று அவர்களுக்கு ஞாபகம் இருந்தது. . . . (வேண்டுமென்றே உண்மைகளைப் புரட்டுவது என்பது ஒருபுறம் இருக்கட்டும்), பிழையானவற்றை சீஷர்களால் புகுத்தவும் முடியாது, ஏனென்றால் அவற்றை உடனே பகிரங்கமாக்கி, அதில் அடக்கமுடியாத மகிழ்ச்சிகொள்ளும் ஆட்களும் இருந்தார்களே.”

எதற்காக அவர்கள் நம்புவதில்லை

இருந்தபோதிலும், மேதைகள் சிலர் சந்தேகம் என்னும் வட்டத்திலிருந்து வெளிவருவதில்லை. ஒருபுறம் வேதாகம பதிவை கட்டுக்கதை என்று ஊகிக்கும் அவர்கள், மறுபுறம் ஐயத்துக்கிடமான எழுத்துகளையெல்லாம் நம்பத்தக்கவை என்று ஏற்றுக்கொள்கிறார்களே! ஏன்? தெரிந்தவிதமாகவே, பைபிள் பதிவு நவீன மேதைகள் ஏற்றுக்கொள்ள விரும்பாத காரியங்களைக் கொண்டுள்ளது.

எஸ். அகஸ்டீன் அலபோன் 1871-ல் தான் பிரசுரித்த யூனியன் பைபிள் கம்பானியன்-ல் சந்தேகவாதிகளுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். அவர் எழுதினார்: “சுவிசேஷ வரலாற்றைச் சந்தேகிப்பதாக உரிமை பாராட்டும் எவரிடத்திலும் பின்வரும் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ஆட்சிமன்ற மண்டபத்தில் சீசர் இறந்தார், அல்லது 800-ல் சார்லமென் மேற்கே பேரரசராக போப்பு மூன்றாம் லியோவால் முடிசூட்டப்பட்டார் என்று அவர் நம்புவதற்கு கரணம் என்ன? . . . இந்த மனிதர்களைக்குறித்து . . . உறுதியாகக் கூறப்பட்ட இவை அனைத்தையும் நம்புகிறோம்; . . . ஏனென்றால் அவை உண்மை என்பதற்கு வரலாற்று சான்றுகள் நமக்கு இருக்கின்றன. இத்தகைய சான்றை அளிக்கும்போதும், எவரேனும் நம்ப மறுத்தால், அவர்கள் முட்டாள்தனமாக உண்மைக்கு முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள் அல்லது ஐயோ அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்று கூறி விட்டுவிடுவோம். அப்படியென்றால், பரிசுத்த வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கு அளிக்கப்படும் ஏராளமான சான்றுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களை, தங்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை என்று உரிமை பாராட்டுபவர்களைப் பற்றி என்னவென்று சொல்ல? . . . அவர்களது கர்வத்தை அடக்கிவிடும் ஒன்றை, அவர்களை வேறொரு வாழ்க்கை வாழ வற்புறுத்தும் ஒன்றை நம்ப அவர்களுக்கு விருப்பம் இல்லை.”

ஆம், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் புறக்கணிக்க சந்தேகவாதிகள் சிலருக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. அதன் நம்பகத்தன்மை அல்ல அவர்களது பிரச்சினை, ஆனால் அதன் தராதரமே. உதாரணத்திற்கு, இயேசு தம்மை பின்பற்றினோரிடத்தில் இவ்வாறு கூறினார்: “நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல.” (யோவான் 17:14) இருப்பினும், கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டும் பலரும், இவ்வுலக அரசியல் விவகாரங்களில் மும்முரமாக பங்கெடுத்து, இரத்தம் சிந்தும் போர்களிலும் ஈடுபட்டுள்ளனர். பைபிளின் தராதரங்களின்படி தங்களுடைய வாழ்க்கையை மாற்றுவதற்கு பதிலாக, அவர்களுடைய தராதரங்களின்படி பைபிள் மாறவேண்டும் என அநேகர் விரும்புகிறார்கள்.

ஒழுக்க சம்பந்தமான விஷயத்தையும் சற்று சிந்தித்துப்பாருங்கள். விபச்சாரம் செய்தலை பொறுத்துக்கொண்டிருந்த தியத்தீரா சபையை இயேசு கடுமையாக கண்டித்து அறிவுரை கொடுத்தார். ‘நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவன் . . . அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்’ என்று அவர்களிடம் கூறினார். (வெளிப்படுத்துதல் 2:18-23) இருப்பினும், கிறிஸ்தவர்களென சொல்லிக்கொள்ளும் பலர் ஒழுக்க தராதரங்களை புறம்பே தள்ளிவிடுவது உண்மைதானே? அவர்கள் தங்களுடைய ஒழுக்கங்கெட்ட நடத்தையை விட்டுவிலகுவதற்கு பதிலாக இயேசு சொன்னவற்றைக் காற்றிலே பறக்க விடுவார்கள்.

பைபிளின் இயேசுவை ஏற்க மனமில்லாதவர்களாய், மேதைகள் தங்களின் சொந்த கற்பனையால் ஒரு இயேசுவை உருவாக்கியுள்ளனர். சுவிசேஷக எழுத்தாளர்கள் மீது கட்டுக்கதை கட்டியதாக பொய் குற்றம் சுமத்திய அவர்கள், அதே குற்றத்திற்குக் குற்றவாளிகளாக நிற்கிறார்கள். இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தங்களுக்கு விருப்பமான பகுதிகளை ஏற்றுக்கொண்டு, மற்றதை ஒதுக்கிவிடுகிறார்கள், மேலும் தங்களுடைய சொந்த சங்கதிகளைச் சேர்த்துவிடுகிறார்கள். நிஜத்தில், அவர்கள் தேடுவதாகச் சொல்லிக்கொள்ளும் சுற்றித்திரிந்த யோகி அல்லது சீர்த்திருத்தவாதி, வரலாற்று இயேசு அல்ல; மாறாக கர்வம்பிடித்த மேதாவித்தன கற்பனைகளின் மொத்த உருவம்தான் அவர்கள் உருவாக்கிய இயேசு.

உண்மையான இயேசுவை கண்டுபிடித்தல்

சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் உண்மையில் பசியாய் இருந்தோரின் இருதயங்களைத் தட்டியெழுப்பவே இயேசு முயன்றார். (மத்தேயு 5:3, 6; 13:10-15) அத்தகைய ஆட்கள் இயேசுவின் அழைப்புக்குப் பிரதிபலிப்பார்கள்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.

உண்மையான இயேசுவை இக்கால மேதைகள் எழுதிய புத்தகங்களால் மறைத்துவிட முடியாது; அல்லது மனித பாரம்பரியங்களுக்குப் வளர்ப்பிடமாக மாறியுள்ள சர்ச்சுகளிலும் அவரைக் காண முடியாது. உங்களுடைய சொந்த பைபிளில் வரலாற்று இயேசுவை நீங்கள் காணலாம். அவரைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அவ்வாறு செய்ய உங்களுக்கு உதவுவதில் யெகோவாவின் சாட்சிகளுக்கு சந்தோஷமே.

[அடிக்குறிப்புகள்]

a இன்னும் கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின் 5-ம் அதிகாரம், பக்கங்கள் 55-70-ஐக் காண்க.

[பக்கம் 6-ன் பெட்டி]

நூற்றாண்டுகளாக குறைகூறுதல்

கிரேக்க வேதாகமத்தை குறைகூறுதல் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே ஜெர்மன் தத்துவஞானி ஹர்மான் சாமுவேல் ரிமாரூஸ் (1694-1768) கீழ்க்கண்டவாறு உறுதியாக கூறுகையில் ஆரம்பமானது: “இயேசு தாம் உயிரோடிருக்கையில் பிரசங்கித்தற்கும் போதித்ததற்கும், அப்போஸ்தலர் எழுதியவற்றில் உள்ள போதனைக்கும் இடையே முழுமையான ஒரு வித்தியாசத்தை பிரிப்பது எங்களுக்கு நியாயமெனப்பட்டது.” அன்றையிலிருந்து மேதைகள் பலரும் அவ்வாறே உணர கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

அந்நாளைய திறனாய்வாளர்கள் பலர் தங்களை விசுவாசத்துரோகிகளாகக் கருதவில்லை என்று தி ரியல் ஜீஸஸ் என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அதற்கு மாறாக, “சுதந்திரமாக நடமாடவிடாமல் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் கோட்பாட்டிலிருந்தும் மூடநம்பிக்கையிலிருந்தும் விடுவித்ததற்காக, அதிக உண்மையோடு இருக்கும் கிறிஸ்தவர் என அவர்களாகவே மனதில் நினைத்துக்கொண்டனர். கிறிஸ்தவத்தின் தூய்மையாக்கப்பட்ட வடிவமே” உயர்ந்த திறனாய்வு (Higher criticism) என அவர்கள் உணர்ந்தார்கள்.

கவலைதரும் உண்மை என்னவென்றால், கிறிஸ்தவமண்டலம் மனித பாரம்பரியங்களின் வளர்ப்பிடமாக ஆகியுள்ளது. ஆத்துமா சாவாமை, திரித்துவம், எரிநரகம் என்பன பைபிளிலிருந்து முரண்படும் போதனைகளில் வெகு சில. ஆனால் சத்தியத்தை இவ்வாறு கெடுத்ததற்கு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் அல்ல கரணம். அதற்கு மாறாக, கிறிஸ்தவர்களாக சொல்லிக்கொள்பவர்களிடையே விசுவாசத்துரோகம் “இப்பொழுதே கிரியைசெய்கிறது” என்று பவுல் எழுதியபோது, பொய்போதனைகளின் தடயங்களை எதிர்த்து அவர்கள் முதல் நூற்றாண்டின் மத்தியில் போரிட்டனர். (2 தெசலோனிக்கேயர் 2:3, 7) வரலாற்றுப்பூர்வமான மற்றும் கோட்பாடுசம்பந்தமான உண்மையின் ஒரு பதிவுதான் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் அடங்கியிருக்கிறது என்பதில் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம்.

[பக்கம் 7-ன் பெட்டி]

சுவிசேஷங்கள் எப்போது எழுதப்பட்டன?

புதிய ஏற்பாட்டின் திறனாய்வாளர் பலர், சுவிசேஷங்களில் விவரிக்கப்பட்ட காரியங்கள் நடந்து, வெகுநாட்களுக்குப் பின்னரே, அவை எழுதப்பட்டன, எனவே அவற்றில் தப்பும்தவறும் அடங்கியிருக்கும் என்பதில் ஏறக்குறைய நிச்சயமாய் இருக்கலாம் என்று வலியுறுத்துகிறார்கள்.

இருப்பினும், மத்தேயு, மாற்கு, லூக்கா இன்னும் முன்னதாக எழுதப்பட்ட தேதியைச் சான்று குறிப்பிடுகிறது. மத்தேயு கையெழுத்துப் பிரதிகள் சிலவற்றிலுள்ள கிரேக்க அடியெழுத்துகள் (Subscripts), அசல் பிரதி பொ.ச. 41-ன் ஆரம்பத்திலேயே எழுதப்பட்டதைச் சுட்டிக்காட்டுகின்றன. லூக்கா அநேகமாக பொ.ச. 56-க்கும் 58-க்கும் இடையே எழுதப்பட்டிருக்கலாம், ஏனென்றால் (அநேகமாக பொ.ச. 61-க்குள்ளாக எழுதி முடிக்கப்பட்ட) அப்போஸ்தலர் புத்தகத்தின் எழுத்தாளர் லூக்கா தன்னுடைய “முதலாம் பிரபந்தமாகிய” சுவிசேஷத்தை ஏற்கெனவே எழுதிவிட்டார். (அப்போஸ்தலர் 1:2) பவுல் முதல் முறையாக அல்லது இரண்டாம் முறையாக சிறைப்பட்டபோது மாற்கு சுவிசேஷம் அநேகமாக பொ.ச. 60-க்கும் 65-க்கும் இடையே ரோமில் எழுதப்பட்டதாக கருதப்படுகிறது.

இந்தச் சுவிசேஷங்கள் முன்னதாக எழுதப்பட்ட தேதியை பேராசிரியர் கரேக் எல். பலாம்பர்க் ஒத்துக்கொள்கிறார். இவற்றுடன் நாம் முதல் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்ட யோவான் சுவிசேஷத்தை சேர்த்தாலும்கூட அது “பழைய வாழ்க்கை வரலாறுகள் பலவற்றோடு ஒப்பிடப்படுகையில் நிகழ்ச்சிகள் உண்மையில் நடந்தேறிய காலத்திற்கு மிக அருகில் உள்ளது. மகா அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றை வெகு முந்தி படைத்த எழுத்தாளர்களான ஆரியனும் புளுடார்க்கும் அலெக்சாண்டர் கி. மு. 323-ல் இறந்து, நானூறு வருடங்களுக்கும் அதிகமான வருடங்களுக்குப் பின்னர் எழுதினார்கள், அப்படி இருந்தும் அவற்றை நம்பகமானவை என்று வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அலெக்சாண்டரின் வாழ்க்கையைப்பற்றிய வியப்பூட்டும் கட்டுக்கதைகளெல்லாம் நாள்பட நாள்பட உருவாக்கப்பட்டன, ஆனால் இவற்றில் பெரும்பகுதி அந்த இரண்டு எழுத்தாளர்கள் மறைந்து, பல நூற்றாண்டுகள் சென்ற பின்பே உருவாக்கப்பட்டன. உலகப்பிரகாரமான வரலாறுக்கு எந்த அளவுக்கு நம்பகத்தன்மை உள்ளதோ குறைந்தபட்சம் அந்த அளவுக்காவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் வரலாற்று பகுதிகள் தகுதியானவையே.

[பக்கம் 8-ன் படம்]

வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் அனைவர்மேலும் சந்தோஷமே மேலோங்கி ஆதிக்கம் செலுத்தும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்