உங்கள் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையது எது?
“நான் நடக்கவேண்டிய வழியை எனக்குத் தெரிவித்தருளும்.”—சங்கீதம் 143:8, தி.மொ.
1. மனிதரின் நடவடிக்கைகளையும் சாதனைகளையும் குறித்து அரசன் சாலொமோன் என்ன முடிவுக்கு வந்தார்?
வாழ்க்கை நடவடிக்கைகளாலும் அக்கறைக்குரியவற்றாலும் நிரம்பியுள்ளதென்று எவரும் அறிந்திருப்பதுபோல் நீங்களும் அறிந்திருப்பீர்கள். அவற்றைப்பற்றி சிந்திக்கையில், அவற்றில் சிலவற்றை மிக முக்கியமானவையாக நீங்கள் குறிப்பிடலாம். மற்ற நடவடிக்கைகளும் அக்கறைகளும் குறைந்த முக்கியத்துவமுடையவையாக, அல்லது வீணாகவும் இருக்கின்றன. இதை நீங்கள் உணருவது, மிக அதிக ஞானமுள்ளோராக இருந்த மனிதரில் ஒருவரான, அரசன் சாலொமோன் சொன்னதற்கு ஒத்திசைவாக நீங்கள் இருப்பதைக் குறிக்கிறது. வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர சிந்தித்தாராய்ந்து பார்த்தபின், அவர் இந்த முடிவுக்கு வந்தார்: “உண்மையான கடவுளுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள். இதுவே மனிதனின் முழு கடமை.” (பிரசங்கி 2:4-9, 11; 12:13, NW) இன்று இது நமக்கு என்ன உட்கருத்துடையதாக இருக்கிறது?
2. என்ன அடிப்படையான கேள்வியைக் கடவுள்-பயமுள்ள ஆட்கள் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும், சம்பந்தப்பட்ட என்ன கேள்விகளுக்கு இது வழிநடத்த வேண்டும்?
2 ‘உண்மையான கடவுளுக்குப் பயந்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளளும்படி’ நீங்கள் விரும்பினால், இந்தச் சவாலான கேள்வியை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையது எது?’ இந்தக் கேள்வியின்பேரில் தினந்தோறும் சிந்தித்துக்கொண்டிருப்பதில்லை என்பது உண்மையே, ஆனால் இப்போது அதைச் சிந்திக்கலாமல்லவா? உண்மையில், இது, பின்வருபவற்றைப்போன்ற, சம்பந்தப்பட்ட சில கேள்விகளை மனதுக்குக் கொண்டுவருகிறது, ‘என் வேலைக்கு அல்லது வாழ்க்கைத் தொழிலுக்கு அல்லது பொருளாதாரங்களுக்கு மட்டுக்கு மிஞ்சிய முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கிறேனா? என் வீடும், குடும்பமும், எனக்கு அன்பானவர்களும் என் வாழ்க்கையில் எந்த இடத்தில் அமைகிறார்கள்?‘ ஒரு வாலிபன் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம், ‘எந்த அளவுக்கு என் கல்வி என் கவனத்தையும் நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது? உண்மையில், என் பொழுதுபோக்கு வேலை, போட்டி விளையாட்டு, ஏதோ வகையான இன்பப் பொழுதுபோக்கு, அல்லது தொழில்முறை என் முதன்மையான அக்கறையாக உள்ளதா?’ நம்முடைய வயது அல்லது சந்தர்ப்ப நிலை என்னவாக இருந்தாலும், நாம் சரியானபடி இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும், ‘கடவுளைச் சேவிப்பது என் வாழ்க்கையில் என்ன இடத்தைக் கொண்டுள்ளது?’ முதன்மையான முக்கியத்துவமுடையவற்றின் தேவையை நீங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வீர்கள். ஆனால், ஞானமாய், எவற்றிற்கு முதன்மையான முக்கியத்துவம் கொடுப்பது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான உதவியை நாம் எவ்வாறு, எங்கே கண்டடைவது?
3. முதன்மையான முக்கியத்துவமுடையவையாகத் தெரித்தெடுத்துத் தீர்மானிப்பது கிறிஸ்தவர்களுக்கு எதை உட்படுத்துகிறது?
3 “முதன்மையான முக்கியத்துவம்” என்பதானது, மற்ற எல்லாவற்றிற்கும் முன்னதாக வரும் ஒன்று, அல்லது முதலாவதாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று என்ற அடிப்படையானக் கருத்தை உடையதாக இருக்கிறது. நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தாலும் அல்லது அவர்களோடு கூட்டுறவுடையோராய், கடவுளுடைய வார்த்தையை மனமார்ந்து படிக்கும் லட்சக்கணக்கான மாணாக்கருள் ஒருவராக இருந்தாலும் சரி, இந்தச் சத்தியத்தைக் கவனியுங்கள்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு.” (பிரசங்கி 3:1) நேர்மையாகவே, அது, குடும்ப உறவுகளுக்கு நீங்கள் அன்புள்ள அக்கறை காட்டுவதை உட்படுத்துகிறது. (கொலோசெயர் 3:18-21) உலகப்பிரகாரமான வேலை செய்து உங்கள் குடும்பத்தாரின் பராமரிப்புக்குத் தேவைப்பட்ட பொருட்களை நேர்மையாய் அளிப்பதை இது உட்படுத்துகிறது. (2 தெசலோனிக்கேயர் 3:10-12; 1 தீமோத்தேயு 5:8) இடையில் சிறிது மாற்றமாக ஒரு பொழுதுபோக்கு வேலைக்காயினும் அல்லது அயர்வகற்றும் இன்பக்கேளிக்கைக்காயினும் அல்லது மகிழ்வளிக்கிற நேரப்போக்குக்காயினும் நீங்கள் நேரம் செலவிடலாம். (மாற்கு 6:31-ஐ ஒப்பிடுக.) எனினும், பொறுப்புணர்ச்சியுடன் சிந்தித்தால், இவற்றில் எதுவும் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையென நீங்கள் காண்கிறீர்களல்லவா? வேறு ஏதோவொன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
4. முதன்மையான முக்கியத்துவமுடையவையென நாம் தெரிந்தெடுத்து இடமளிப்பதில் பிலிப்பியர் 1:9, 10 எவ்வாறு சம்பந்தப்படுகிறது?
4 முதன்மையான முக்கியத்துவமுடையவையாகத் தெரிந்தெடுத்து இடமளிப்பதிலும், ஞானமானத் தீர்மானங்களைச் செய்வதிலும் பைபிளின் வழிநடத்தும் நியமங்கள் பயனுள்ள உதவிகளாக உள்ளன என்பதை நீங்கள் தெரிந்திருக்கலாம். உதாரணமாக, பிலிப்பியர் 1:9, 10-ல் (NW), ‘திருத்தமான அறிவிலும் பூரண தெளிந்துணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகும்படி’ கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். என்ன நோக்கத்திற்காக? ‘அதிக முக்கியமான காரியங்களை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளும்படி,’ அப்போஸ்தலன் பவுல் மேலும் தொடர்ந்து சொன்னார். இது கருத்துள்ளதாக இருக்கிறதல்லவா? திருத்தமான அறிவின் ஆதாரத்தின்பேரில், தெளிந்தறியும் ஒரு கிறிஸ்தவன், வாழ்க்கையில் எது முதன்மையான அக்கறைக்குரியதாக—முதன்மையான முக்கியத்துவமுடையதாக—இருக்க வேண்டுமென்பதைத் தீர்மானிக்க முடியும்.
முதன்மையான முக்கியத்துவமுடையது எது என்பதற்கு ஒரு மாதிரி
5. கிறிஸ்தவர்களுக்காக வைத்துச் சென்ற மாதிரியை விவரிப்பதில், இயேசுவின் வாழ்க்கையில் எது முதன்மையான முக்கியத்துவமுடையதாக இருந்ததென்று வேதவசனங்கள் காட்டுகின்றன?
5 அப்போஸ்தலன் பேதுருவின் இவ்வார்த்தைகளில், அறிவுக்குரிய அருமையான ஒரு கருத்தை நாம் காண்கிறோம்: “இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.” (1 பேதுரு 2:21) ஆம், வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையது என்ன என்பதை அறிய உதவிசெய்யும் குறிப்புகளைக் காண்பதற்கு, அதைப் பற்றிய இயேசு கிறிஸ்துவின் சிந்தனையை நாம் ஆராயலாம். அவரைப் பற்றி சங்கீதம் 40:8 இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தது: “என் கடவுளே, உமது சித்தத்தைத் செய்வதே என் பிரியம், உமது பிரமாணம் என் உள்ளத்தில் இருக்கிறது.” அதே எண்ணத்தை அவர் இவ்வாறு கூறினார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.”—யோவான் 4:34; எபிரெயர் 12:2.
6. கடவுளுடைய சித்தத்தை முதலாவதாக வைத்ததில் இயேசுவுக்குக் கிடைத்த அதே பலன்களை நாம் எவ்வாறு அடையலாம்?
6 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே—அடிப்படையான முக்கிய குறிப்பு என்பதைக் கவனியுங்கள். இயேசுவின் சீஷர்கள், தங்கள் வாழ்க்கையில் சரியாகவே, எதை முதன்மையான முக்கியத்துவமுடையதாக வைக்க வேண்டுமென்பதை அவருடைய மாதிரி அறிவுறுத்துகிறது. ஏனெனில் “தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்,” என்று அவர் சொன்னார். (லூக்கா 6:40) தம்முடைய பிதா நோக்கங்கொண்ட வழியில் இயேசு நடந்தபோது, கடவுளுடைய சித்தத்தை முதன்மையான முக்கியத்துவமுடையதாக வைத்ததில் “பரிபூரண ஆனந்தம்” இருந்ததென்று காட்டினார். (சங்கீதம் 16:11; அப்போஸ்தலர் 2:28) அது உணர்த்துவது எது என்பதைக் காண்கிறீர்களா? கடவுளுடைய சித்தத்தைச் செய்வதையே முதன்மையான முக்கியத்துவமுடையதாக, இயேசுவைப் பின்பற்றுவோர் தெரிந்தெடுக்கையில், ‘பரிபூரண ஆனந்தத்தையும்’ உண்மையான வாழ்க்கையையும் அனுபவித்து மகிழ்வார்கள். (1 தீமோத்தேயு 6:19) ஆகையால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே நம்முடைய வாழ்க்கையில் முதன்மையாக இருப்பதற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
7, 8. என்ன இக்கட்டுகளை இயேசு எதிர்ப்பட்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு தம்மை முன்வந்து அளித்ததை இயேசு அடையாளப்படுத்தின பின்பு உடனடியாக, பிசாசானவன் அவரை அதிலிருந்து விலகச் செய்ய வகைதேடினான். எவ்வாறு? மூன்று அம்சங்களில் சோதனையைக் கொண்டுவருவதன் மூலம். அந்த ஒவ்வொரு சமயத்திலும் இயேசு, வேதவசனங்களைக் கொண்டு, சந்தேகத்துக்கு இடமில்லாதத் தெளிவான வார்த்தைகளில் பதிலளித்தார். (மத்தேயு 4:1-10) ஆனால் மேலுமான பரீட்சைகள்—துன்புறுத்தல், பரிகசித்தல், யூதாஸால் காட்டிக்கொடுக்கப்படுதல், பொய்க் குற்றச்சாட்டுகள், பின்பு வாதனைக்குரிய கழுமரத்தில் மரணம்—அவருக்குக் காத்திருந்தன. இருப்பினும், இந்த இக்கட்டுகள் எதுவும், கடவுளுடைய உண்மைத்தவறாத குமாரனை அவருடைய உறுதிநிலையிலிருந்து விலகச் செய்யவில்லை. நெருக்கடியான ஒரு நிலையில், இயேசு: “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது,” என்று ஜெபித்தார். (மத்தேயு 26:39, 42) இயேசு நமக்காக விட்டுச் சென்ற மாதிரியின் இந்த அம்சத்தால் நாம் ஒவ்வொருவரும் உள்ளாழத்தில் தூண்டுவிக்கப்பட்டு, ‘ஜெபத்தில் உறுதியாய்த் தரித்திருக்கும்படி’ நம்மைச் செய்விக்க வேண்டுமல்லவா?—ரோமர் 12:12.
8 ஆம், வாழ்க்கையில் நமக்கு முதன்மையான முக்கியத்துவமுடையவை எவையென நாம் தீர்மானிக்கையில், கடவுளுடைய வழிநடத்துதல் முக்கியமாய் உதவியாக உள்ளது. சத்தியத்தின் பகைஞர்களையும் கடவுளுடைய சித்தத்தை எதிர்ப்போரையும் நாம் எதிர்ப்படுகையில் முக்கியமாய் அவ்வாறுள்ளது. உண்மையுள்ள அரசனான தாவீது, பகைஞரின் எதிர்ப்பை அனுபவித்தபோது வழிநடத்துதலுக்காக மன்றாடினதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். சங்கீதம் 143-ன் ஒரு பகுதியை நாம் சிந்திக்கையில் இதை நாம் காண்போம். யெகோவாவுடன் நம்முடைய சொந்த உறவை நாம் எவ்வாறு பலப்படுத்தலாம் என்பதையும், கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்துவருவதை நம் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் முற்பட்டதாக வைப்பதற்கு எவ்வாறு திடப்படுத்தப்படலாம் என்பதையும் தெளிவாக உணர்ந்தறிய இது நமக்கு உதவிசெய்ய வேண்டும்.
யெகோவா செவிகொடுத்துக் கேட்டு நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார்
9. (அ) தாவீது ஒரு பாவியாக இருந்தபோதிலும் அவருடைய வார்த்தைகளும் செயல்களும் எதை வெளிப்படுத்துகின்றன? (ஆ) சரியானதைச் செய்வதை நாம் ஏன் விட்டுவிடக்கூடாது?
9 தாவீது, பாவியாக சாகும் தன்மையுள்ளவராக இருந்தபோதிலும், தன் மன்றாட்டுக்கு யெகோவா செவிகொடுப்பாரென்ற விசுவாசமுடையவராக இருந்தார். அவர் மனத்தாழ்மையுடன் இவ்வாறு கெஞ்சினார்: “யெகோவா, என் ஜெபத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்தருளும்; உமது நீதிக்கிசைய உமது உண்மையின்படியே எனக்கு மறுமொழி அருளும். அடியேனை நியாய விசாரணைக்குட்படுத்தாதேயும். ஜீவனுள்ள ஒருவனும் உமது சந்நிதியில் நீதிமான் அல்லவே.” (சங்கீதம் 143:1, 2, தி.மொ.) தன் அபூரணத்தைப் பற்றி தாவீது உணர்வுள்ளவராக இருந்தார், எனினும் அவருடைய இருதயம் கடவுளிடம் முழுமையாகப் பற்றுதலாயிருந்தது. ஆகையால், நீதியில் ஒரு பதில் தனக்குக் கிடைக்குமென்று அவர் திடநம்பிக்கையுடையவராக இருந்தார். இது நம்மை ஊக்குவிக்கிறதல்லவா? கடவுளுடைய நீதியில் நாம் குறைவுபட்டவர்களாக இருக்கிறபோதிலும், நம்முடைய இருதயங்கள் அவரிடமாக முழுமையாய் ஊன்றியிருந்தால் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் நம்பிக்கையுடையோராக இருக்கலாம். (பிரசங்கி 7:20; 1 யோவான் 5:14) ஜெபத்தில் நாம் விடாது தரித்திருக்கையில், இந்தப் பொல்லாத நாட்களின்போது, ‘தீமையை நன்மையினாலே வெல்லும்’ நோக்கமுடையோராக நாம் இருக்க வேண்டும்.—ரோமர் 12:20, 21; யாக்கோபு 4:7.
10. தாவீதுக்கு ஏன் கவலைக்கிடமான காலங்கள் இருந்தன?
10 நமக்கு இருப்பதுபோல், தாவீதுக்குச் சத்துருக்கள் இருந்தார்கள். சவுலிடமிருந்து தப்பியோடி அகதியாக, அணுகமுடியாதத் தனிமையான இடங்களில் அடைக்கலத்தைத் தேடும்படி வற்புறுத்தப்பட்ட நிலையிலோ, அல்லது சத்துருக்களால் தொல்லைகொடுக்கப்பட்ட ஓர் அரசராயிருந்த நிலையிலோ, தாவீதுக்குக் கவலைக்கிடமான காலங்கள் இருந்தன. இது தன்னை எவ்வாறு பாதித்ததென்று அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, . . . என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். . . . என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.” (சங்கீதம் 143:3, 4) இவ்வாறு உணர உங்களுக்குக் காரணம் இருந்திருக்கிறதா?
11. கவலைக்கிடமான என்ன காலங்களை, கடவுளுடைய தற்கால ஊழியர்கள் எதிர்ப்பட்டிருக்கிறார்கள்?
11 சத்துருவின் தொல்லை, கடுமையான வறுமை, மோசமான நோய், அல்லது கவலையுண்டாக்கும் மற்ற பிரச்சினைகளினால் உண்டான இக்கட்டுகள், தங்கள் ஆவி தோய்ந்துபோவதாக உணரும்படி கடவுளுடைய ஜனங்களில் சிலரைச் செய்வித்திருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் அவர்களுடைய இருதயங்களும் கவலைகளால் தோய்ந்து போனதுபோல் இருந்திருக்கின்றன. தனிப்பட்ட நபர்களாக அவர்கள் இவ்வாறு மன்றாடியிருப்பது போல் இருக்கிறது: “அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, . . . என்னை மறுபடியும் தேற்றுவீர்.” (சங்கீதம் 71:20, 21) அவர்கள் எவ்வாறு உதவிசெய்யப்பட்டிருக்கிறார்கள்?
சத்துருவின் முயற்சிகளை எதிர்ப்பது எவ்வாறு
12. ஆபத்தையும் இக்கட்டுகளையும் அரசன் தாவீது எவ்வாறு சமாளித்தார்?
12 ஆபத்துக்கும் மிகுந்த இக்கட்டுகளுக்கும் உட்பட்டிருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை சங்கீதம் 143:5 காட்டுகிறது: “பூர்வ நாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன்.” தம்முடைய ஊழியருடன் கடவுளுடைய செயல்தொடர்புகளையும், அவர்தானே எவ்வாறு விடுவிப்பை அனுபவித்தார் என்பதையும் தாவீது நினைவுக்குக் கொண்டுவந்தார். தம்முடைய மகா பெயரினிமித்தமாக யெகோவா செய்திருந்தவற்றின்பேரில் அவர் தியானித்தார். ஆம், தாவீது, கடவுளுடைய கிரியைகளில் அக்கறையுடையவராகத் தன்னை வைத்துவந்தார்.
13. இக்கட்டுகளை நாம் எதிர்ப்படுகையில், பூர்வகாலத்திலிருந்தவர்களும் தற்காலத்தில் இருப்போருமான உண்மையுள்ள ஊழியர்களின் முன்மாதிரிகளின்பேரில் சிந்தனை செலுத்துவது, நாம் சகித்து நிலைத்திருப்பதற்கு எவ்வாறு உதவிசெய்யும்?
13 தம்முடைய ஜனத்துடன் கடவுளுடைய செயல்தொடர்புகளை நாம் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவந்திருக்கிறோம் அல்லவா? நிச்சயமாகவே நினைவுபடுத்தியிருக்கிறோம்! கிறிஸ்தவத்துக்கு முந்திய காலங்களில் இருந்த ‘‘மேகம்போன்ற திரளான சாட்சிகள்” உண்டாக்கியிருந்த பதிவு இதில் உட்படுகிறது. (எபிரெயர் 11:32-38; 12:1) ‘முந்தின நாட்களையும்’ தாங்கள் சகித்திருந்தவற்றையும், ‘தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டிருக்கும்படி,’ முதல் நூற்றாண்டிலிருந்த, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் ஊக்குவிக்கப்பட்டார்கள். (எபிரெயர் 10:32-34, NW) யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தின் அறிவிப்பாளர்a (ஆங்கிலம்) புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பவற்றைப் போன்ற, கடவுளுடைய ஊழியரின் தற்கால அனுபவங்களைப் பற்றியதென்ன? அதிலும் மற்ற பிரசுரங்களிலும் பதிவுசெய்யப்பட்ட விவரங்கள், தம்முடைய ஜனங்கள், தடையுத்தரவுகளையும், சிறையிருப்புகளையும், கலகக் கும்பல்களின் தொல்லைகளையும், கான்சன்ட்ரேஷன் மற்றும் அடிமை உழைப்பு முகாம்களையும் சகிப்பதற்கு யெகோவா எவ்வாறு உதவிசெய்தார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள நமக்கு உதவிசெய்கின்றன. புரூண்டி, ருவாண்டா, லைபீரியா, மற்றும் முந்திய யுகோஸ்லாவியா போன்ற, போரால் தாக்கப்பட்ட நாடுகளில் இக்கட்டுகள் இருந்திருக்கின்றன. கடவுளுடைய ஊழியர்கள், யெகோவாவுடன் உறுதியான உறவைக் காத்துவந்ததனால், எதிர்ப்பு ஏற்பட்டபோது சகித்து நிலைத்திருந்தார்கள். அவருடைய சித்தத்தைச் செய்வதைத் தங்கள் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையதாக்கினவர்களை அவருடைய கரம் தளராமல் தாங்கினது.
14. (அ) நம்முடையதைப்போன்ற சூழ்நிலைமையில் ஒருவரை நிலைகுலையாதபடி கடவுள் தாங்கினதற்கு ஓர் உதாரணம் என்ன? (ஆ) அந்த உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
14 எனினும், அத்தகைய கொடுமையான துன்புறுத்தலை நீங்கள் அனுபவிக்கவில்லை என்று சொல்லலாம், மேலும் எப்போதாவது அனுபவிக்கவும் போவதில்லை என்றும் நீங்கள் உணரலாம். தம்முடைய ஜனங்களுக்குக் கடவுள் உதவியளிப்பது, அசாதாரணமான சூழ்நிலைமைகளாகச் சிலர் கருதுவதில்தானே எப்போதும் இருக்கவில்லை. “சாதாரண” சூழ்நிலைமைகளில் “பொதுப்படையான” ஆட்கள் பலருக்கு அவர் உதவியளித்திருக்கிறார். பின்வருவது பல உதாரணங்களில் ஒன்றே: மேலுள்ள நிழற்படத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டீர்களா, தம்முடைய ஜனங்களுடன் கடவுளுடைய செயல்தொடர்பை நினைவுபடுத்திக்கொள்ள இது உங்களுக்கு உதவிசெய்கிறதா? இது டிசம்பர் 1, 1996-ன் காவற்கோபுரத்தில் தோன்றினது. பெனெலேப்பீ மாக்ரீஸால் சொல்லப்பட்ட விவரத்தை நீங்கள் வாசித்தீர்களா? கிறிஸ்தவ உத்தமத்தன்மைக்கு என்னே ஓர் சிறந்த முன்மாதிரி! அவர்கள் சகித்த, அயலாரிடமிருந்து உண்டான தொந்தரவுகள், கடுமையான உடல்நலக்கேடுகளோடு அவர்கள் போராடினது, முழுநேர ஊழியத்தில் நிலைத்திருக்கும்படி அவர்கள் எடுத்த முயற்சிகள் ஆகியவற்றை நீங்கள் நினைவுக்குக் கொண்டுவர முடிகிறதா? மிட்டிலீனியில் அவர்களுடைய பயனுள்ள அனுபவத்தைப் பற்றியதென்ன? முதன்மையான முக்கியத்துவமுடையவற்றைத் தெரிந்தெடுப்பதில், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை நம்முடைய வாழ்க்கையில் முதலாக வைப்பதில், அத்தகைய முன்மாதிரிகள் நமக்கு உதவியாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்களா என்பதே முக்கியமானக் குறிப்பாக உள்ளது.
15. நாம் தியானிக்க வேண்டிய யெகோவாவின் செயல்களில் சில எவை?
15 தாவீது செய்ததைப்போல், யெகோவாவின் நடவடிக்கைகளின்பேரில் தியானிக்கும்படி இது நம்மைப் பலப்படுத்துகிறது. தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில், யெகோவா, தம்முடைய குமாரனின் மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் மகிமைப்படுத்தப்படுதலின் மூலம் இரட்சிப்புக்கான ஏற்பாட்டைச் செய்தார். (1 தீமோத்தேயு 3:16) அவர் தம்முடைய பரலோக ராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறார், சாத்தானையும் அவனுடைய பேய்களையும் பரலோகங்களிலிருந்து நீக்கிவிட்டார், மற்றும் பூமியில் உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 12:7-12) ஆவிக்குரிய ஒரு பரதீஸை அவர் கட்டியெழுப்பி, தம்முடைய ஜனங்களுக்கு அதிகரிப்பளித்து ஆசீர்வதித்திருக்கிறார். (ஏசாயா 35:1-10; 60:22) மகா உபத்திரவம் தொடங்குவதற்கு முன்பாக, அவருடைய ஜனங்கள் இப்பொழுது ஒரு கடைசி சாட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6, 7, NW) ஆம், தியானிக்க நமக்கு மிகுதியானவை உள்ளன.
16. எவற்றில் அக்கறையூன்றியவர்களாக இருக்கும்படி நாம் ஊக்குவிக்கப்படுகிறோம், இது நமக்கு எதை அறிவுறுத்தும்?
16 மனிதரின் பெருமுயற்சிகளின்பேரில் கவனத்தை ஊன்ற வைப்பதைப் பார்க்கிலும் கடவுளுடைய கரங்களின் செயல்களில் அக்கறையூன்றியவர்களாக நம்மை வைத்துக்கொள்வது, யெகோவாவின் செயல்முறை வல்லமை எதிர்க்க முடியாதது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது. எனினும், இந்தச் செயல்கள், வானங்களிலும் இங்கே பூமியின்மீதும் உள்ள அதிசயமான இயற்கை சிருஷ்டிப்பு செயல்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டில்லை. (யோபு 37:14; சங்கீதம் 19:1; 104:24) தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட பூர்வ ஜனங்களின் அனுபவங்களில் மெய்ப்பித்துக் காட்டப்பட்டபடி, ஒடுக்கும் சத்துருக்களிடமிருந்து தம்முடைய ஜனங்களை விடுவித்த நடவடிக்கைகளும் அவருடைய அதிசயமானச் செயல்களில் அடங்கியிருக்கின்றன.—யாத்திராகமம் 14:31; 15:6.
நடக்க வேண்டிய வழியை அறிதல்
17. தாவீதுக்கு யெகோவா எவ்வகையில் மெய்ம்மையானவராக இருந்தார், இதால் நாம் எவ்வாறு திரும்ப உறுதிப்படுத்தப்படலாம்?
17 தன்னுடைய உயிரின் ஈரம் வறண்டுவிடாதபடி உதவிக்காக தாவீது ஜெபித்தார்: “என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன், விடாய்த்துப்போன நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மைநோக்கிக் காத்திருக்கிறது. யெகோவா, எனக்கு உத்தரவு கொடுக்க விரைந்தருளும்; என் ஆவி தியங்குகிறது; உமது திருமுகத்தை எனக்கு மறையாதேயும், மறைத்தால் நான் குழியில் இரங்குகிறவர்கள்போல் ஆகிவிடுவேன்.” (சங்கீதம் 143:6, 7, தி.மொ.) பாவியாகிய தாவீது, தான் இருந்த நிலைமை கடவுளுக்குத் தெரியுமென்று அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 31:7, தி.மொ.) சில சமயங்களில் நாமுங்கூட, நம்முடைய ஆவிக்குரிய தன்மை மிகத் தாழ்ந்த நிலைக்கு இறங்கிவிட்டதென்று உணரலாம். ஆனால் நிலைமை நம்பிக்கையற்றதாக இல்லை. நம்முடைய ஜெபங்களைக் கேட்கிற யெகோவா, அன்புள்ள மூப்பர்களின் மூலமாக, காவற்கோபுர கட்டுரைகளின் மூலமாக, அல்லது நமக்கென்றே திட்டமிட்டதுபோல் தோன்றும் கூட்டத்தில் அளிக்கப்படும் பாகங்களின் மூலமாக நம்மை உயிர்ப்பிப்பதனால் நாம் திரும்ப நிலைநிறுத்தப்படுதலை விரைவுபடுத்தலாம்.—ஏசாயா 32:1, 2.
18, 19. (அ) யெகோவாவிடம் நம்முடைய ஊக்கமான மன்றாட்டு என்னவாக இருக்க வேண்டும்? (ஆ) எதைக் குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்?
18 யெகோவாவில் நம்முடைய நம்பிக்கை அவரை நோக்கி இவ்வாறு மன்றாடும்படி நம்மைத் தூண்டுவிக்கிறது: “உமது கிருபையைக் கேட்கப்பண்ணும்; உம்மில் நம்பிக்கைவைத்திருக்கிறேன்; நான் நடக்கவேண்டிய வழியை எனக்குத் தெரிவித்தருளும்.” (சங்கீதம் 143:8, தி.மொ.) கிரேக்கத் தீவு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சகோதரி மாக்ரிஸை அவர் கைவிட்டாரா? ஆகவே, அவருடைய சித்தத்தைச் செய்வதை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதன்மையான முக்கியத்துவமுடையதாக்கி வருகையில் அவர் உங்களைக் கைவிடுவாரா? கடவுளுடைய ராஜ்யத்தை யாவரறிய அறிவிக்கும் நம் ஊழியத்தைத் தடைசெய்ய அல்லது முற்றிலும் நிறுத்திப்போட பிசாசானவனும் அவனுடைய கையாட்களும் விரும்புவர். உண்மையான வணக்கம் பொதுவாக அனுமதிக்கப்படுகிற நாடுகளில் நாம் சேவித்தாலும் அல்லது அது தடுக்கப்படுகிற இடத்தில் சேவித்தாலும் நம்முடைய ஒன்றுபட்ட ஜெபங்கள் தாவீதின் விண்ணப்பத்திற்கு ஒத்திசைவாக இருக்கின்றன: “யெகோவா, என் சத்துருக்களினின்று என்னை விடுவித்தருளும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.” (சங்கீதம் 143:9, தி.மொ.) ஆவிக்குரிய பேரிழப்புக்கு எதிரான நம்முடைய பாதுகாப்பு, மகா உன்னதமானவரின் மறைவில் தங்குவதன்பேரில் சார்ந்திருக்கிறது.—சங்கீதம் 91:1.
19 முதன்மையான முக்கியத்துவமுடையது எது என்ற நம்முடைய முடிவு, உறுதியான ஆதாரத்தின்பேரில் செய்யப்பட்டிருக்கிறது. (ரோமர் 12:1, 2) அப்படியானால், காரியங்களைப் பற்றிய மனிதத் திட்டங்களில் முக்கியமாயிருப்பதாக இந்த உலகம் கருதுவதை நீங்கள் ஏற்கும்படி செய்யும் அதன் முயற்சிகளுக்கு எதிர்த்து நில்லுங்கள். முதன்மையான முக்கியத்துவமுடையது எதுவென்று நீங்கள் அறிந்திருப்பது—கடவுளுடைய சித்தத்தைச் செய்வது—உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கும்படி செய்யுங்கள்.—மத்தேயு 6:10; 7:21.
20. (அ) சங்கீதம் 143:1-9-ல் தாவீதைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? (ஆ) இன்று கிறிஸ்தவர்கள், எவ்வாறு தாவீதின் மனப்பான்மையைக் காட்டுகிறார்கள்?
20 சங்கீதம் 143-ன் முதல் ஒன்பது வசனங்கள், யெகோவாவுடன் தாவீதின் தனிப்பட்ட சொந்த உறவை அறிவுறுத்துகின்றன. சத்துருக்களால் சூழ்ந்து நெருக்கப்படுகையில், வழிநடத்துதலுக்காக அவர் தடங்கலில்லாமல் கடவுளிடம் மன்றாடினார். தன் இருதயத்திலுள்ளதை அவரிடம் ஊற்றி, சரியான வழியில் நடப்பதற்கு உதவியை நாடினார். இன்று பூமியில் இருக்கும், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேரையும் அவர்களுடைய தோழர்களையும் குறித்ததில் அவ்வாறே உள்ளது. வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் அவர்கள் மன்றாடுகையில், அவருடன் இருக்கும் தங்கள் உறவை மிக அருமையானதாகக் கருதுகிறார்கள். பிசாசும் இந்த உலகமும் கொண்டுவரும் நெருக்கடிகளின் மத்தியிலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை முதன்மையான முக்கியத்துவமுடையதாக வைக்கிறார்கள்.
21. தங்கள் வாழ்க்கையில் எது முதன்மையான முக்கியத்துவமுடையதாக இருக்க வேண்டுமென்று மற்றவர்களுக்கு நாம் போதிக்க வேண்டுமானால், நாம்தாமே நல்ல முன்மாதிரியை வைப்பது ஏன் முக்கியம்?
21 யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கும் லட்சக்கணக்கானோரும், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதே முதன்மையான முக்கியத்துவமுடையது என்பதைத் தெரிந்துணர்வது அவசியம். நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தின் 13-ம் அதிகாரத்தை நாம் கலந்தாலோசிக்கையில், இதைப் புரிந்துகொள்ள நாம் அவர்களுக்கு உதவிசெய்யலாம்.b வார்த்தைக்கு கீழ்ப்படிவோராக இருப்பதில் உட்பட்டுள்ள நியமங்களை அந்த அதிகாரம் அறிவுறுத்துகிறது. நிச்சயமாகவே, அவர்களுக்கு நாம் கற்பிப்பது, நம்மில் முன்மாதிரியாக இருப்பதை அவர்கள் காண வேண்டும். பெரும்பாலும் சிறிது காலத்திற்குப் பின், அவர்களும், தாங்கள் நடக்க வேண்டிய வழியை அறிந்துகொள்வார்கள். தங்கள் வாழ்க்கையில் எது எல்லாவற்றிற்கும் மேலாக முக்கியத்துவமுடையதாய் இருக்க வேண்டுமென்பதை இந்த லட்சக்கணக்கானோர் தாங்களே உணருகையில், ஒப்புக்கொடுத்தலின் மற்றும் முழுக்காட்டப்படுதலின் படிகளை ஏற்கும்படி உள்ளத்தில் பலர் தூண்டுதலளிக்கப்படுவார்கள். அதன்பின், ஜீவனுக்குரிய வழியில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும்படி சபை அவர்களுக்கு உதவிசெய்யலாம்.
22. பின்வரும் கட்டுரையில் என்ன கேள்விகள் ஆலோசிக்கப்படும்?
22 கடவுளுடைய சித்தமே தங்களுடைய வாழ்க்கையில் உச்ச அளவான முக்கியத்துவமுடையதாக இருக்க வேண்டுமென்பதைப் பலர் மனமார ஒப்புக்கொள்கின்றனர். தம்முடைய சித்தத்தைச் செய்வதற்குத் தம் ஊழியர்களை யெகோவா எவ்வாறு படிப்படியாய்ப் போதித்து வருகிறார்? இது அவர்களுக்கு என்ன நன்மைகளைக் கொண்டுவருகிறது? இந்தக் கேள்விகள், சங்கீதம் 143:10 ஆகிய இந்த முக்கிய வசன ஆராய்ச்சியோடு, அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.
உங்கள் பதில் என்ன?
◻ பிலிப்பியர் 1:9, 10-ஐ பொருத்திப் பயன்படுத்துவதன்முலம் முதன்மையான முக்கியத்துவமுடையவற்றை நாம் எவ்வாறு தீர்மானிக்கலாம்?
◻ தம்முடைய வாழ்க்கையில் எது முதன்மையான முக்கியத்துவமுடையதாக இருந்ததென்பதை இயேசு எவ்வாறு காட்டினார்?
◻ தாவீது இக்கட்டின்கீழ் இருக்கையில் அவருடைய செயல்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
◻ எவ்வகையில் சங்கீதம் 143:1-9 இன்று நமக்கு உதவிசெய்கிறது?
◻ நம்முடைய வாழ்க்கையில் எது முதன்மையான முக்கியத்துவமுடையதாக இருக்க வேண்டும்?
[அடிக்குறிப்புகள்]
a 1993-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்தது.
b 1995-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின்பேரில் தாவீதின் திடநம்பிக்கையை அவருடைய செயல்கள் நிரூபித்தன
[படத்திற்கான நன்றி]
Reproduced from Illustrirte Pracht - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s