“உங்களால் புதுவாழ்வு பெற்ற பலருள் நானும் ஒருவன்”
ஜனவரி 1996-ல் கேரல் ஒரு மூளைக் கட்டியின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அவர்கள் தன்னுடைய 60-களில் இருந்தார்கள், அதுவரையாக அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், எல்லாரிடமும் பேசுவதற்கு உற்சாகமான ஏதாவது ஒரு விஷயத்தை உடையவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதோ மருத்துவர்கள் சாவுக்கேதுவான இந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய போராட்டத்தின் மத்தியில், கேரல் பின்வரும் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்கள்:
“அன்புள்ள கேரலுக்கு:
“உங்கள் உடல்நலக் குறைவு குறித்து அறிந்து நான் வருந்துகிறேன். நல்லவேளையாக, நாம் அறிந்துகொள்ளவும் நேசிக்கவும் பைபிள் உதவிசெய்யும் அந்த உண்மையான நம்பிக்கை நமக்கிருக்கிறது. நாம் ஒரு பரதீஸிய நிலைமையில் வாழும்பொருட்டு பூமியின்மீது யெகோவாவின் ராஜ்யம் ஆளுகைச் செய்யும் என்பதே அந்த நம்பிக்கையாகும்; நாம் அனைவரும் ஆவலாக எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் ஒரு சமயமாக அது இருக்கிறது.
“தனிப்பட்ட உங்களுடைய பிரசங்க வேலை அநேக ஆட்களை நித்திய மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்படிப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். நாம் முதல் முறையாக சந்தித்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று எனக்கு நிச்சயமாய் தெரியவில்லை. அந்தச் சமயத்தில் எனக்கு 20 வயது. நான் தலைமயிரை நீளமாக வளர்த்திருந்தேன், போதைப்பொருட்களை விற்றுக்கொண்டு போக்கிரிகளோடு சேர்ந்து நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தேன். நாங்கள் அனைவரும் துப்பாக்கி வைத்திருந்தோம், எங்களைத் தவிர யாரிடமும் எங்களுக்கு உண்மையான அன்பு இல்லாமல் இருந்தது.
“நீங்கள் மற்றொரு சாட்சியோடுகூட வந்து என்னுடைய கதவைத் தட்டி காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளித்தீர்கள். நான் ஒரு டாலர் பணத்தை உங்களுக்கு கொடுக்க முயற்சிசெய்து எனக்கு பத்திரிகைகள் வேண்டாம் என்று சொன்னேன். நீங்கள் வெறுமனே நன்கொடைகளை வாங்குவதற்காக வரவில்லை என்பதை எனக்கு எடுத்து சொன்னீர்கள். பைபிளை வாசிப்பதற்கு மக்களுக்கு உதவிசெய்யும் ஒரு வேலையை நீங்கள் செய்துகொண்டிருப்பதாக என்னிடம் சொன்னீர்கள். பத்திரிகைகளை நான் எடுத்துக்கொண்டேனா அல்லது அவற்றை வாசித்தேனா என்பது எனக்கு நிச்சயமாக ஞாபகம் இல்லை. என்றபோதிலும், என்னுடைய வாழ்க்கையில் சத்தியத்தின் விதையை நீங்கள் விதைத்தீர்கள்.
“சில வருடங்களுக்குப் பிறகு கேரி என்ற மற்றொரு சாட்சி என்னுடைய அம்மாவின் வீட்டுக்கு வந்திருந்தார், அப்போது நான் அங்கிருந்தேன். சில வருடங்களுக்கு முன்பாக நீங்கள் சந்தித்ததைப் பற்றி அவரிடம் சொன்னேன். கேரி என்னுடன் நீண்ட காலமாக, 1984-ல் கடைசியாக நான் முழுக்காட்டுதல் பெறும்வரையாக பைபிளைப் படித்தார். இப்பொழுது நான் என்னுடைய பிள்ளைகளுக்கு கடவுளுடைய ராஜ்யத்தின் சத்தியத்தை கற்றுக்கொடுக்கிறேன்.
“உண்மையுள்ள உங்களுடைய பல ஆண்டுகால ஊழியத்தில் உங்களால் புதுவாழ்வு பெற்ற பலரில் நானும் ஒருவன் என்பதில் நிச்சயமாக இருக்கிறேன். என்றபோதிலும், இந்த அன்புள்ள தயவின் மூலமாக, மகா உன்னதக் கடவுளாகிய யெகோவாவையும் அவருடைய குமாரன் கிறிஸ்து இயேசுவையும் நானும் என்னுடைய குடும்பத்தாரும் அறிந்துகொள்ள உதவிசெய்திருக்கிறீர்கள். யெகோவா நம்முடைய கண்ணீர் யாவையும் துடைத்து, மரணமும் இனி இல்லாமல் போகும் அந்தச் சமயத்தில் புதிய ஒழுங்குமுறையில் உங்களைக் காணும் அந்த நாளுக்காக நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.—வெளிப்படுத்துதல் 21:4.
“என்னையும் என் குடும்பத்தையும் பொறுத்தவரையில், உங்களைத் தெரிந்துகொள்ளவும் உங்கள் சாட்சிகொடுத்தலின் பலனின் ஒரு பாகமாக இருந்த இந்த வாய்ப்புக்காகவும் நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். உங்களுக்கு நன்றி.
“சகோதர அன்புடன்,
பீட்டர்”
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த பின்பு, கேரல் மார்ச் 1996-ல் மரித்துப்போனார்கள். 35 ஆண்டு காலமாக வைராக்கியமுள்ள ஒரு சுவிசேஷகராக அவர்கள் சத்தியத்தின் விதைகளை ஏராளமாக விதைத்திருக்கிறார்கள். பல வருடங்களுக்குப் பின்னும்கூட ஒரு விதை எப்பொழுது வளர்ந்து அது கனி தரும் என்பது ஒருவருக்கு ஒருபோதும் தெரியாது என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள்.—மத்தேயு 13:23.