“தங்கள் மதம் சொல்கிறபடி வாழ்கின்றனர்”
அ.ஐ.மா., ஃப்ளாரிடாவிலுள்ள, மியாமியைச் சேர்ந்த ஒரு பெண், உள்ளூர் செய்தித்தாள் ஒன்றுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பினாள்: “டிசம்பர் 10-ம் தேதியன்று என் மகனுடைய பர்ஸ், பழைய பொருட்கள் விற்கப்படும் சந்தையில் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது. அதில் அவனுடைய ஓட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் அட்டை போன்றவையும், அதோடு 260 டாலரும் இருந்தன.
“அந்த மேனேஜரிடம் தான் இழந்ததைப் பற்றிப் புகார் செய்துவிட்டு, அவன் வீட்டுக்கு வந்தான். சாயங்காலம் ஆனபோது, ஸ்பானியமொழி பேசும் பெண்ணொருவரிடமிருந்து அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்தப்பெண் ஒரு [டெலிபோன்] ஆப்ரேட்டரை மொழிபெயர்ப்பாளராகப் பயன்படுத்துவதன் மூலம், தான் அவனுடைய பர்ஸை கண்டுபிடித்திருப்பதாக தெரிவித்தாள்.
“அந்தப்பெண் தன்னுடைய விலாசத்தை அவனுக்கு கொடுத்தாள். . . . 260 டாலர் உட்பட, வைத்தது வைத்தபடியிருந்த அந்தப் பர்ஸை அவனுக்கு கொடுத்தாள்.
“அவனுடைய பர்ஸை அந்தத் திருடன் உருவுவதைப் பார்த்து அவள் கத்தியிருக்கிறாள். அந்தத் திருடனோ அந்தப் பர்ஸை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டான். அதற்குள்ளாக என் மகன் அவளுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டதால், அவள் அந்தப் பர்ஸைத் தன்னுடன் எடுத்துச்சென்று அவனுக்கு போன் செய்திருக்கிறாள்.
“அந்தப்பெண்ணும் அவளுடைய குடும்பத்தினரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள். தெளிவாகவே அவர்கள் தங்கள் மதம் சொல்கிறபடி வாழ்கின்றனர்.”
யெகோவாவின் சாட்சிகள் மனிதர்களிடமிருந்து புகழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நேர்மையை வெளிக்காட்டுகிறதில்லை. (எபேசியர் 6:8) மாறாக, தங்களுடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிற்கு புகழைக் கொண்டுவர வேண்டுமென்றே மனமார விரும்புகிறார்கள். (1 கொரிந்தியர் 10:31) கடவுளுக்கும் அயலாருக்குமான அவர்களுடைய அன்பு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ‘சுவிசேஷத்தை’ பிரசங்கிக்கும்படி அவர்களைத் தூண்டுகிறது. (மத்தேயு 24:14) இந்த ராஜ்யத்தின் மூலமாகவே, கடவுள் இப்பூமியை அழகிய பரதீஸாக மாற்றுவதாக வாக்களித்திருக்கிறார். அப்போது இந்தப் பூமி வெளித்தோற்ற அழகில் மட்டுமின்றி ஒழுக்கத்திலும் உயர்ந்ததாக, நேர்மை என்றென்றும் வியாபித்திருக்கும் இடமாக இருக்கும்.—எபிரெயர் 13:18; 2 பேதுரு 3: 13.