ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
பேய்களின் செல்வாக்கிலிருந்து விடுபடுதல்
கோடிக்கணக்கான ஆட்களின் வாழ்க்கையை ஆவிக்கொள்கை பழக்கம் வெகு காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. ஆனால், அதிலிருந்து விடுபடுவது சாத்தியமானதே! பூர்வ எபேசு பட்டணத்திலிருந்த அநேகருடைய காரியத்திலும் இதுவே சம்பவித்தது. பைபிள் பதிவின்படி, “மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, . . . சுட்டெரித்தார்கள்; . . . இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.”—அப்போஸ்தலர் 19:19, 20.
அதேவிதமாகவே இன்றும் கிறிஸ்தவ சபை, வளர்ச்சியை அனுபவிக்கிறது. எபேசுவிலிருந்ததைப் போலவே, விசுவாசிகளாக மாறுகிறவர்களின் மத்தியில், முன்பு பேய் வணக்கத்தைப் பின்பற்றியவர்களாய் இருந்தவர்கள் இருக்கின்றனர். இதை, ஜிம்பாப்வியிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் விளக்குகிறது.
காகா (பாட்டியம்மா) ம்டுபா, தன்னுடைய மாயமந்திர வல்லமைக்கு பேர்போனவராக இருந்தார். அவருடைய நாட்டு வைத்தியத்திலிருந்து சிகிச்சைப் பெற ஜாம்பியா, போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்கா என வெகு தொலைவிலிருந்தெல்லாம் மக்கள் வந்தனர். நாண்கா என அழைக்கப்படும் பில்லிசூனிய மருத்துவராக ஆவதற்கும் காகா ம்டுபா மற்றவர்களுக்குக் கற்பித்து வந்தார். அவர் சில சமயங்களில் மாயமந்திரத்தால் ஏவல் செய்தார்!
ஒரு ஞாயிறு காலை, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள் காகா ம்டுபாவை சந்தித்தனர். எல்லா விதமான கெட்ட செல்வாக்குகளிலிருந்தும் விடுபட்ட ஒரு உலகத்தை, நீதியுள்ள ஒரு புதிய உலகத்தைப் பற்றிய பைபிளின் வாக்குறுதியைக் குறித்து அவர்களோடு கொண்டிருந்த கலந்தாலோசிப்பை அவர் முழுமையாக அனுபவித்தார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை ஏற்றுக்கொண்டு ஒரு வீட்டு பைபிள் படிப்புக்கும் ஒப்புக்கொண்டார்.a வெறும் மூன்று படிப்புகளே முடிந்திருந்த போதிலும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்.
தனக்குக் கிடைத்திருக்கிற விசேஷித்த சக்திகள், யெகோவாவின் அரசதிகாரத்திற்கு எதிராக கலகம் செய்த பொல்லாத ஆவி சிருஷ்டிகளிடமிருந்து வந்திருப்பதை தன்னுடைய பைபிள் படிப்பின்மூலம் காகா ம்டுபா கற்றறிந்தார். (2 பேதுரு 2:4; யூதா 6) இந்தப் பேய்கள், தங்களால் முடிந்தவரைக்கும் எல்லாரையும் யெகோவாவுக்கும் உண்மை வணக்கத்திற்கும் எதிராக திருப்புவதில் தீர்மானமுள்ளவையாய் இருப்பதையும் அவர் கற்றறிந்தார். அவருடைய பிழைப்பே இந்தப் பொல்லாத ஆவிகளோடு மாயமந்திரம் செய்வதில் சார்ந்திருந்ததால் அவர் என்ன செய்யமுடியும்?
மாயமந்திரம் சார்ந்தவற்றையும் ஆவித்தொடர்புடைய தன்னுடைய பொருட்கள் எல்லாவற்றையும் காகா ம்டுபா அப்புறப்படுத்த இருக்கும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார். நாண்கா சுகப்படுத்துதலுக்கு அவர் உபயோகப்படுத்திய, அவருடைய விசேஷித்த தலைப்பாகையும் “பேசும் காளைக் கொம்புக”ளும் இவற்றில் அடங்கியிருந்தன. ஒரே உண்மையான, ஜீவனுள்ள கடவுளாகிய யெகோவாவை சேவிப்பதற்காக, காகா ம்டுபா, இப்படிப்பட்ட எல்லா பொருட்களையும் விட்டொழிக்க விரும்பினார்.
எனினும், அவருடைய உறவினர்களில் சிலரை பொருள் சம்பந்தமாக அவர் ஆதரித்துவந்ததால் அவர்கள் இச்செயலை ஆட்சேபித்தனர். தாங்கள் தொடர்ந்து லாபம் சம்பாதிப்பதற்கு அவருடைய மாய சக்திகளோடுகூட அந்தப் பொருட்கள் எல்லாவற்றையும் தங்களுக்குக் கொடுத்துவிடும்படி கெஞ்சினர். காகா ம்டுபா மறுத்துவிட்டார்.
யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையின் உதவியுடன், மூன்று பெரிய பைகளில் ஆவித்தொடர்புடைய பொருட்களைச் சேகரித்து, அவை எல்லாவற்றையும் எரித்துவிட்டார். பேய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட தன் பொருட்களைத் தீத்தணல்கள் சூழ்ந்து கொண்டிருக்கையில், “தன்னைத் தானே காப்பாத்திக்க முடியாத அந்தக் கொம்புகளை பாருங்களேன்!” என்று காகா ம்டுபா எக்களித்தார்.
காலப்போக்கில் காகா ம்டுபா தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் சந்தோஷத்தோடே அடையாளப்படுத்திக் காட்டினார். இப்போது அவர் எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்? காய்கறிகளை விற்பதன்மூலமாக. ஆம், கடவுளுடைய வார்த்தையின் வல்லமையால் ஒருவர் பேய் வணக்கத்திலிருந்து விடுபட முடியும். “இதுபோன்ற விடுதலை உணர்வை நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை” என காகா ம்டுபா சொல்கிறார்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.