மனசாட்சி—ஒரு சுமையா அல்லது ஓர் ஆஸ்தியா?
‘என்னுடைய மனசாட்சி என்னைத் தொந்தரவு செய்கிறது!’ அவ்வப்போது நாமனைவரும் நிஜமாகவே மனசாட்சியின் உறுத்தல்களை அனுபவிக்கிறோம். இப்படிப்பட்ட உணர்வுகள் இலேசான மன உளைச்சலிலிருந்து கடும் வேதனை வரையாக செல்லக்கூடும். பாதிப்புக்குள்ளான ஒரு மனசாட்சி மனச்சோர்வை அல்லது ஆழமான தோல்வி உணர்வையும்கூட ஏற்படுத்தலாம்.
அப்படியென்றால், இந்த நோக்குநிலையிலிருந்து காண்கையில் மனசாட்சி ஒரு சுமையாக இல்லையா? அது அவ்விதமாக இருப்பதாக சிலர் உணரலாம். மனிதர்கள் மனசாட்சியை அநேகமாக இயற்கையான, உடன்பிறந்த ஒரு திறமையாக கருதினார்கள் என்பதாக கடந்த கால சரித்திரம் காட்டுகிறது. கடவுள்தாமே நேரடியாக கொடுத்த ஒரு தார்மீக வழிகாட்டியாக அநேகர் இதை நினைத்தார்கள். இதன் காரணமாகவே மனசாட்சி “மனிதனில் குடியிருக்கும் கடவுள்,” “நம்முடைய இயல்பான குணம்,” “கடவுளின் குரல்” என்பதாகவும்கூட அழைக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், சமீப ஆண்டுகளில், மனசாட்சி என்பது பெரும்பாலும் பெற்றோரின் மற்றும் சமுதாயத்தின் செல்வாக்கின் விளைவால் சம்பாதித்துக்கொள்ளப்படும் ஒரு திறமையே என உறுதியாகக்கூறுவது பிரபலமாகிவருகிறது. உதாரணமாக, ஒரு பிள்ளை முக்கியமாக தண்டனைக்குப் பயந்தே விரும்பத்தகாத நடத்தையிலிருந்து விலகியிருக்க கற்றுக்கொள்ளுகிறது; அது நாம் மனசாட்சி என்றழைப்பதை, வெறுமனே நம்முடைய பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தனிப்பட்ட மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும்தான் என நம்பிக்கொள்கிறது என ஒரு சில மனநல நிபுணர்கள் விவாதிக்கிறார்கள். மற்றவர்கள், மதிப்பீடுகளையும் தராதரங்களையும் கடத்துவதில் பொதுவில் சமுதாயம் வகிக்கும் பங்கை சுட்டிக்காட்டுகிறார்கள். நாம் செய்ய விரும்புகிறவற்றுக்கும், கட்டுப்படுத்துகின்ற சமுதாயம் நம்மைச் செய்யும்படியாக வற்புறுத்துகிறவற்றுக்கும் இடையே உள்ள ஒரு மாறுபட்ட அபிப்பிராயமே மனசாட்சியின் உறுத்தல் என்பதாக சிலர் கருதுகிறார்கள்!
மனசாட்சியைப் பற்றி பல விளக்கங்கள் இருந்தபோதிலும் அடிக்கடி மக்கள் தங்களுடைய மனசாட்சி அவ்விதமாகச் செய்யும்படியாகச் சொன்ன காரணத்தால் பெற்றோர்கள், குடும்பங்கள், முழு சமுதாயங்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் உறுதியாக இருந்திருக்கிறார்கள். மனசாட்சிக்காக சிலர் தங்கள் உயிரையும்கூட தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள்! உலகிலுள்ள கலாச்சாரங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்தபோதிலும், கொலை, திருடு, வேசித்தனம், பொய் சொல்லுதல், முறைதகாப் புணர்ச்சி ஆகியவை பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தவறென கருதப்படுகிறது. மனசாட்சி இயற்கையான, உடன்பிறந்த குணமாக இருப்பதற்கு இது அத்தாட்சியாக இருக்கிறதல்லவா?
மனசாட்சி—பைபிளின் கருத்து
இந்த விஷயத்தின் பேரில் உண்மையில் அனைத்தையும் அறிந்தவர் யெகோவா தேவனே. என்னவிருந்தாலும், “நாம் அல்ல, அவரே [கடவுளே] நம்மை உண்டாக்கினார்.” (சங்கீதம் 100:3) நம்முடைய உருவமைப்பை அவர் முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறார். மனிதன் கடவுளுடைய ‘சாயலில்’ படைக்கப்பட்டான் என்பதாக கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் விளக்குகிறது. (ஆதியாகமம் 1:26) எது சரி எது தவறு என்ற உணர்வோடு மனிதன் படைக்கப்பட்டான்; ஆரம்பத்திலிருந்தே, மனசாட்சி மனித இயல்பில் இயற்கையாய் அமைந்த பாகமாக இருந்து வந்திருக்கிறது.—ஆதியாகமம் 2:16, 17-ஐ ஒப்பிடுக.
பவுல் அப்போஸ்தலன் ரோமர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் இதை உறுதிசெய்கிறார்: “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனசாட்சியும்கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.” (ரோமர் 2:14, 15) கடவுளால் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நியாயப்பிரமாணத்தின்கீழ் வளர்க்கப்பட்டிராத அநேகர் சமுதாயத்தின் அழுத்தத்தின் காரணமாக இல்லாமல், ஆனால் “சுபாவமாய்” கடவுளுடைய பிரமாணத்தின் சில நியமங்களை இன்னும் பின்பற்றிக்கொண்டிருந்தார்கள் என்பதைக் கவனியுங்கள்!
அப்படியென்றால் மனசாட்சி ஒரு சுமையாக இருப்பதற்குப் பதிலாக அது கடவுள் கொடுத்திருக்கும் ஒரு பரிசாக, ஒரு ஆஸ்தியாக இருக்கிறது. அது வேதனையை உண்டுபண்ணலாம் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் சரியாக அதற்கு செவிசாய்க்கும்போது, அதன் பலனாக ஆழ்ந்த திருப்தி உணர்வும் உள்ளான சமாதானமும்கூட கிடைக்கும். அது நம்மை வழிநடத்தி, பாதுகாத்து, உந்துவிக்க முடியும். தி இன்டர்பிரிட்டர்ஸ் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஒருவர் தான் என்ன செய்கிறார் என்பதற்கும் தான் என்ன செய்யவேண்டும் என்பதாக உணருகிறார் என்பதற்கும் இடையே உள்ள பிளவை மூடுவதற்கு முயற்சிசெய்தால்தானே மன நலனையும் உணர்ச்சிப்பூர்வமான நலனையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.” அந்தப் பிளவை ஒருவர் எவ்வாறு மூடமுடியும்? நம்முடைய மனசாட்சியை உருப்படுத்தி பயிற்றுவிப்பது கூடிய காரியமா? இந்தக் கேள்விகள் அடுத்தக் கட்டுரையில் சிந்திக்கப்படும்.