உங்கள்—மனசாட்சியைப் பயிற்றுவிக்கும் விதம்
“சுத்தமான மனசாட்சியே மென்மையான தலையணை.” இந்தப் பழமொழி முக்கியமான ஓர் உண்மையை உயர்த்திக்காட்டுகிறது: நாம் நம்முடைய மனசாட்சிக்கு செவிகொடுக்கும்போது, உள்ளான சமாதானத்தையும் அமைதியையும் அனுபவித்து மகிழ்வோம்.
என்றபோதிலும் எல்லாரும் இவ்விதம் செய்ய தெரிவுசெய்வது கிடையாது. மனசாட்சி என்றழைக்கப்படும், மதிப்பைக் குறைக்கும் ஒரு அசம்பாவிதமான எண்ணத்திலிருந்து அல்லது மாயையிலிருந்து மனிதனை விடுவிக்கும் ஒரு பொது சேவையை தான் செய்துவருவதாக அடால்ப் ஹிட்லர் வெளிப்படையாக கூறினான். மனசாட்சியைத் தள்ளிவிடும்போது மனிதர்கள் எத்தனைக் கொடூரமானவர்களாக இருக்கமுடியும் என்பதற்கு அவனுடைய கொடுங்கோலாட்சியே மனச்சோர்வுண்டாக்கும் ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. ஆனால் இன்றும்கூட வன்முறையில் ஈடுபடும் அநேக குற்றவாளிகளும்—துளிகூட இரக்கமின்றி கற்பழித்து கொலைசெய்பவர்களும்—அதே அளவு கொடூரமுள்ளவர்களாக இருக்கின்றனர். தீயச் செயல் புரியும் இவர்களில் அதிகரித்துவரும் எண்ணிக்கையானோர் இளம் வயதிலுள்ளவர்கள். இதன் காரணமாகவே இந்த அசாதாரணமான சம்பவங்களை ஆய்வு செய்யும் ஒரு புத்தகம் மனசாட்சியில்லாத பிள்ளைகள் என்ற உபதலைப்பைக் கொண்டிருந்தது.
பெரும்பாலான ஆட்கள் வன்முறையான ஒரு குற்றச்செயலில் ஈடுபடுவதைக் குறித்து ஒருபோதும் எண்ணிப்பார்க்காதவர்களாக இருந்தாலும், அநேகர் பாலியல் ஒழுக்கக்கேடு, பொய் சொல்லுதல் அல்லது ஏமாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபடுகையில் அவர்களுடைய மனசாட்சி அவர்களை உறுத்துவது கிடையாது. ஒழுக்கங்கள் உலகெங்கிலும் மோசமாகிக்கொண்டே வருகின்றன. மெய் வணக்கத்திலிருந்து ஏற்படவிருந்த பெரும் விசுவாசதுரோகத்தைக் குறிப்பிடுகிறவராய் அப்போஸ்தலன் பவுல், ஒரு சில கிறிஸ்தவர்கள் உலகின் செல்வாக்குகளுக்கு இடங்கொடுத்து, இதன் மூலமாக ‘மனசாட்சியில் சூடுண்டவர்களாகிவிடுகிறார்கள்’ என்பதாக எழுதினார். (1 தீமோத்தேயு 4:1) சீர்கெட்டுப்போவதற்கான ஆபத்து இன்று இந்தக் “கடைசிநாட்களில்” இன்னும் அதிகமாக உள்ளது. (2 தீமோத்தேயு 3:1) ஆகவே கிறிஸ்தவர்கள் தங்கள் மனசாட்சியைப் பாதுகாத்துக்கொள்வதற்கு கடுமையாக பிரயாசப்படவேண்டும். நாம் அதை பயிற்றுவித்து வளர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
மனதும், இருதயமும் உங்கள் மனசாட்சியும்
அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.” (ரோமர் 9:2) ஆகவே மனசாட்சி சாட்சியிடுகிற ஒன்றாக இருக்கமுடியும். ஒரு நடத்தைப்போக்கை ஆராய்ந்து அதை அங்கீகரிக்கவோ அல்லது கண்டனம் செய்யவோ முடியும். நம்முடைய படைப்பாளரே சரி மற்றும் தவறு பற்றி நாம் கொண்டிருக்கும் நம்முடைய உணர்வை நம்மில் வைத்திருக்கிறார். இருந்தபோதிலும் நம்முடைய மனசாட்சியை நாம் உருப்படுத்தி பயிற்றுவிக்கமுடியும். எவ்விதமாக? கடவுளுடைய வார்த்தையிலிருந்து திருத்தமான அறிவைப் பெற்றுவருவதன் மூலம். “தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்பதாக அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறார். (ரோமர் 12:2) உங்களுடைய மனதில் நீங்கள் கடவுளுடைய எண்ணங்களையும் சித்தத்தையும் ஊன்றவைக்கையில், உங்களுடைய மனசாட்சி அதிக தெய்வ பக்தியுடன் செயல்பட ஆரம்பிக்கிறது.
யெகோவாவின் சாட்சிகள், உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோருக்கு ‘யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவைப் பெறுவதற்கு’ உதவியிருக்கின்றனர். (யோவான் 17:3) அவர்கள் தங்களுடைய இலவச வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாட்டின் மூலமாக, நேர்மையான இருதயமுள்ளவர்களுக்கு பாலியல், மதுபானங்கள், திருமணம், வியாபார செயல்தொடர்புகள், இன்னும் அநேக விஷயங்களின்பேரில் யெகோவா தேவனின் தராதரங்களைக் கற்பித்துவருகிறார்கள்.a (நீதிமொழிகள் 11:1; மாற்கு 10:6-12; 1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:28-33) இந்தத் ‘திருத்தமான அறிவை’ பெற்றுவருவது தேவபக்தியுள்ள ஒரு மனசாட்சியை வளர்த்துக்கொள்வதில் ஒரு முக்கியமான படியாகும். (பிலிப்பியர் 1:9) நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவன் பைபிளை முதிர்ச்சிவாய்ந்த முறையில் புரிந்துகொண்ட பிறகும்கூட அவருடைய மனசாட்சி சரியாக இயங்கவேண்டுமென்றால் அவர் தன்னுடைய மனதை கடவுளுடைய வார்த்தையால் தொடர்ந்து போஷித்துவரவேண்டும்.—சங்கீதம் 1:1-3.
நம்முடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உட்படுத்தும் அடையாளப்பூர்வமான இருதயத்தோடும்கூட மனசாட்சியை தொடர்புபடுத்தி பைபிள் பேசுகிறது. (ரோமர் 2:15) மனசாட்சி சரியாக இயங்கவேண்டுமென்றால் மனதும் இருதயமும் ஒத்திசைவாக செயல்படவேண்டும். அது வெறுமனே விஷயங்களை உங்கள் மனதிற்குள் போட்டுக்கொள்வதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. உங்கள் இருதயத்தையும்கூட—உங்கள் உள்ளான உணர்வுகள், ஆசைகள் மற்றும் ஏக்கங்களை—நீங்கள் உருப்படுத்தவேண்டும். இதன் காரணமாகவே நீதிமொழிகள் புத்தகம் ‘உன் இருதயத்தை சாய்’ ‘உன் இருதயத்தை அமையப்பண்ணு’ ‘உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து’ போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது. (நீதிமொழிகள் 2:2; 23:19; 27:23) அதைச் செய்வதற்கு ஒரு வழி வேதவாக்கியங்களை தியானம்செய்து அவற்றை எண்ணிப்பார்ப்பதாகும். “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்” என்பதாக சங்கீதம் 77:12 சொல்கிறது. தியானம் செய்வது நம்முடைய உள்ளான உணர்வுகளையும் உள்நோக்கங்களையும் சென்றெட்டுவதற்கு நமக்கு உதவிசெய்கிறது.
உதாரணத்துக்கு புகையிலைக்கு அடிமையாக இருக்கும் அசுத்தமான பழக்கம் உங்களுக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். பெரும்பாலான ஆட்கள் அறிந்திருப்பது போலவே, அதிலிருக்கும் உடல்நல ஆபத்துக்களை நீங்களும் நன்றாகவே அறிந்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், நண்பர்களும் குடும்பத்தாரும் இதை விட்டுவிடும்படியாக உங்களுக்குச் சொல்லியிருந்தபோதிலும் அதைவிட்டுவிடுவது உங்களுக்குக் கடினமாக இருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இந்த விஷயத்தில் பைபிள் செய்தியை தியானம் செய்வது உங்கள் மனசாட்சியை எவ்வாறு பலப்படுத்தமுடியும்?
ஒரு உதாரணத்துக்கு 2 கொரிந்தியர் 7:1-ல் காணப்படும் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளின்பேரில் தியானம் செய்ய முயற்சித்துப் பாருங்கள்: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” இந்த வார்த்தைகளின் கருத்தை உணர்ந்துகொள்ளுங்கள். ‘பவுல் இங்கே குறிப்பிடும் “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள்”தான் என்ன?’ என்பதாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சூழமைவை வாசித்துப் பார்ப்பதன் மூலம் அதற்கு முந்தின வசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை நீங்கள் கவனிப்பீர்கள்: “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.”—2 கொரிந்தியர் 6:17, 18.
‘அசுசி நீங்க நம்மைச் சுத்திகரித்துக்கொள்ளும்படியான’ பவுலின் கட்டளை இப்பொழுது கூடுதலான வலிமையுள்ளதாக இருக்கிறது! இப்படிச் செய்வதற்கு நம்மை பலமாக ஊக்குவிப்பதற்காக, கடவுள் நம்மை ‘ஏற்றுக்கொள்வதாக’, பாதுகாப்புள்ள அவருடைய கவனிப்பின்கீழ் வைத்துக்கொள்வதாக, நமக்கு வாக்களிக்கிறார். ‘ஒரு அப்பாவோடு ஒரு மகனோ அல்லது மகளோ கொண்டிருக்கக்கூடியது போன்ற ஒரு நெருக்கமான உறவை நான் அனுபவித்து மகிழ்வேனா?’ என்பதாக நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளலாம். ‘ஏற்றுக்கொள்ளப்படுவது’ அல்லது ஞானமுள்ள அன்புள்ள ஒரு கடவுளால் நேசிக்கப்படுவது என்ற எண்ணமே மிகவும் கவர்ந்திழுப்பவையாக இல்லையா? அந்த எண்ணம் உங்களுக்கு பொருத்தமாக தோன்றவில்லையென்றால், அன்புள்ள தந்தைமார் தங்கள் பிள்ளைகளிடமாக அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் விதத்தைக் கவனித்துப்பாருங்கள். இப்பொழுது உங்களுக்கும் யெகோவாவுக்குமிடையே அப்படிப்பட்ட ஒரு பிணைப்பை கற்பனைச் செய்துபாருங்கள்! அதைக் குறித்து நீங்கள் அதிகமாக தியானம் செய்யச் செய்ய, இப்படிப்பட்ட ஒரு உறவுக்காக உங்களுடைய ஆசை அதிகமதிகமாக வளரும்.
ஆனால் இதை கவனியுங்கள்: நீங்கள் ‘அசுத்தமானதைத் தொடாதிருந்தால்’ மட்டுமே கடவுளோடு நெருக்கமாக இருப்பது சாத்தியமாகும். உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘புகையிலைக்கு அடிமையாயிருப்பது கடவுள் கண்டனம் செய்யும் ‘அசுத்தமான காரியங்களில்’ ஒன்றாக இல்லையா? அதைப் பயன்படுத்துவது ‘மாம்சத்தை அசுத்தப்படுத்துவதாக’ இருந்து எல்லாவிதமான உடல் நல ஆபத்துக்களும் தாக்கும் நிலையில் என்னை வைக்குமா? யெகோவா சுத்தமுள்ள அல்லது “பரிசுத்த” கடவுளாக இருப்பதன் காரணமாக, வேண்டுமென்றே என்னை இப்படியாக அசுத்தப்படுத்திக்கொள்வதை அவர் அங்கீகரிப்பாரா?’ (1 பேதுரு 1:15, 16) ஒருவருடைய ‘ஆவி’ அல்லது மனசாய்வு அசுத்தப்படுத்தப்படுவதைப் பற்றியும்கூட பவுல் எச்சரித்தார் என்பதைக் கவனியுங்கள். உங்களை நீங்களே இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அடிமைப்படுத்தும் இந்தப் பழக்கம் என் சிந்தனையில் மேலோங்கியிருக்கிறதா? ஒருவேளை என்னுடைய இந்த அடங்காத ஆசையை திருப்திபடுத்திக்கொள்ள, என்னுடைய உடல்நலத்தையும் என்னுடைய குடும்பத்தையும் அல்லது கடவுளோடு என்னுடைய நிலைநிற்கையையும்கூட ஆபத்தில் வைக்குமளவிற்கும் நான் செல்வேனா? புகையிலைக்கு அடிமைபட்ட என்னுடைய பழக்கம் எந்த அளவுக்கு என்னுடைய வாழ்க்கையை பாழாக்க அனுமதித்திருக்கிறேன்?’ அமைதியைக் குலைக்கும் இந்தக் கேள்விகளை எதிர்ப்படுவது அதை விட்டுவிடுவதற்கு தேவைப்படும் தைரியத்தை உங்களுக்குக் கொடுக்கும்!
நிச்சயமாகவே, புகையிலைப் பழக்கத்தை மேற்கொள்வதற்கு மற்றவர்களுடைய உதவியும் ஆதரவும் உங்களுக்கு ஒருவேளை தேவைப்படலாம். இருந்தாலும், பைபிளின்பேரில் தியானம் செய்வது அடிமைப்படுத்தும் இந்தப் பழக்கத்திலிருந்து விடுதலைப்பெறுவதற்காக உங்களுடைய மனசாட்சியை பயிற்றுவிக்கவும் பலப்படுத்தவும் அதிகத்தைச் செய்யமுடியும்.
நாம் தவறுசெய்யும்போது
சரியானதைச் செய்வதற்கு நாம் சிறந்த முயற்சிகளை எடுத்தபோதிலும், சில சமயங்களில் நம்முடைய அபூரணம் நம்மை மேற்கொண்டுவிடுகிறது, நாம் தவறிவிடுகிறோம். அப்போது நம்முடைய மனசாட்சி நம்மைத் தொந்தரவு செய்யும், ஆனால் அதை அசட்டைசெய்துவிட முயலும்படி நாம் தூண்டப்படலாம். அல்லது அதிக சோர்வடைந்தவர்களாகி கடவுளைச் சேவிப்பதற்கு எடுக்கும் எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட விரும்பலாம். என்றபோதிலும், தாவீது ராஜாவின் விஷயத்தை சிந்தித்துப்பாருங்கள். அவர் பத்சேபாளுடன் வேசித்தனம் செய்துவிட்ட பிறகு, அவருடைய மனசாட்சி அவரை வாதித்தது. அவர் உணர்ந்த வேதனையை அவர் விவரிக்கிறார்: “இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.” (சங்கீதம் 32:4) மனத்துயரை ஏற்படுத்துவதாக இருந்ததா? ஆம்! இருந்தபோதிலும் தேவனுக்கேற்ற இந்தத் துக்கம் மனந்திரும்பவும் கடவுளோடு ஒப்புரவாகவும் தாவீதை உந்துவித்தது. (2 கொரிந்தியர் 7:10-ஐ ஒப்பிடுக.) மன்னிப்புக்காக தாவீது மனவேதனையோடு செய்த வேண்டுகோள் அவருடைய உண்மையான மனந்திரும்புதலுக்கு போதிய அத்தாட்சியைக் கொடுக்கிறது. தாவீது தன்னுடைய மனசாட்சி சொன்னபடி கேட்டு மாற்றம் செய்த காரணத்தால், கடைசியில் தன்னுடைய சந்தோஷத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு உதவிசெய்யப்பட்டார்.—சங்கீதம் 51.
இதுவே இன்றும் சம்பவிக்கக்கூடும். கடந்த காலங்களில் சிலர் பைபிளை யெகோவாவின் சாட்சிகளோடு படித்திருக்கிறார்கள், ஆனால் கடவுளுடைய உயர்ந்த தராதரங்களுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கை இல்லை என்பதைக் கற்றுக்கொண்டபோது படிப்பதை அவர்கள் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளாமலே எதிர்பாலர் ஒருவரோடு வாழ்ந்துவந்திருக்கலாம் அல்லது அசுத்தமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கலாம். அவர்களுடைய மனசாட்சி அவர்களை வாதித்திருக்கிறது!
இப்படிப்பட்ட ஒரு நிலையில் நீங்கள் இருந்தால், பெந்தெகொஸ்தே நாளின்போது அப்போஸ்தலன் பேதுரு சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள். யூத தேசத்தாரின் பாவங்களை அவர் வெளிப்படுத்திக் கூறியபோது, அவர்கள் ‘இருதயத்திலே குத்தப்பட்டவர்களானார்கள்.’ சோர்ந்துவிடுவதற்குப் பதிலாக, மனந்திரும்பும்படியான பேதுருவின் ஆலோசனைக்குச் செவிசாய்த்தார்கள், மேலும் அவர்கள் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:37-41) நீங்களும் அதையே செய்யலாம்! உங்கள் மனசாட்சி உங்களை வாதித்தால் சத்தியத்தைவிட்டு விலகிசெல்வதற்குப் பதிலாக ‘மனந்திரும்பி குணப்படுவதற்கு’ உங்களுடைய மனசாட்சியைத் தூண்டவிடுங்கள். (அப்போஸ்தலர் 3:19) திட தீர்மானமும் முயற்சியும் இருந்தால், கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்ள தேவைப்படும் மாற்றங்களை உங்களால் செய்யமுடியும்.
“நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்”
நீங்கள் இப்பொழுதுதானே யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாலும் சரி அல்லது முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனாக அநேக வருட அனுபவங்கள் பெற்றிருந்தாலும் சரி, பேதுருவின் புத்திமதி பொருத்தமானதாக உள்ளது: “நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.” (1 பேதுரு 3:16) அது ஒரு சுமை அல்ல, ஒரு ஆஸ்தியே. உங்கள் மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் அடங்கியிருக்கும் ஞானத்தினால் போஷிப்பதன் மூலமாக அதை பயிற்றுவியுங்கள். உங்கள் மனசாட்சி உங்களை எச்சரிக்கையில் அதற்கு செவிகொடுங்கள். உங்களுடைய மனசாட்சிக்குக் கீழ்ப்படிந்திருப்பதால் கிடைக்கும் உள்ளான மன சமாதானத்தை அனுபவித்து மகிழுங்கள்.
உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவித்து உருப்படுத்துவது சுலபமான ஒரு வேலை அல்ல என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இருப்பினும், உங்களுக்கு உதவிசெய்யும்படியாக நீங்கள் யெகோவா தேவனிடம் ஜெபிக்கலாம். அவருடைய உதவியோடு உங்களால் “நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும்” கடவுளைச் சேவிக்கமுடியும்.—1 தீமோத்தேயு 1:5.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு இலவச வீட்டு பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபையோடு தொடர்புகொள்ள அல்லது இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போருக்கு எழுத தயங்கவேண்டாம்.
[பக்கம் 6-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும் தியானம் செய்வதும் நம்முடைய மனசாட்சியைப் பயிற்றுவிக்க நமக்கு உதவுகிறது