ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“எதிர்பாராதவை நிகழும் தேசத்தில்” சவால்களை மேற்கொள்ளுதல்
அப்போஸ்தலன் பவுல் கொரிந்துவிலிருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை இவ்வாறு கேட்டார்: “எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித் தெரியும்?”—1 கொரிந்தியர் 14:8, 9.
எதிர்பாராதவை நிகழும் தேசம் என்பதாக சில சமயங்களில் அழைக்கப்படும் பாப்புவா நியூ கினீயில், யெகோவாவின் சாட்சிகள் பைபிளின் தெளிவான செய்தியைப் பிரசங்கிப்பதில் அதைரியப்படுத்தும் இடையூறுகளை எதிர்ப்படுகிறார்கள். அவர்கள் 700-க்கும் மேலான வித்தியாசமான மொழிகளைப் பேசுகிற, பல்வேறு பழக்கவழக்கங்களை உடைய ஆட்களிடம் பிரசங்கிக்கிறார்கள். மலைப்பாங்கான நிலப்பகுதி, சாலைகள் இல்லாத குறை, அதிகரித்துவரும் குற்றச்செயல் ஆகியவையோடும் சாட்சிகள் போராட வேண்டியுள்ளது. இந்த எல்லா கஷ்டங்களையும் தவிர, சில மத தொகுதிகளிடமிருந்தும் சில சமயங்களில் பள்ளி அதிகாரிகளிடமிருந்தும்கூட எதிர்ப்பு வருகிறது.
இருந்தபோதிலும், நல்ல ஆவிக்குரிய போதனையும் உள்ளூர் மொழிகளில் பைபிள் படிப்புக்கான உதவி புத்தகங்களைக்கொண்ட நூலகத்தின் வளர்ச்சியும் தெளிவான எக்காள தொனியைப் போல நற்செய்தியை எடுத்துச்செல்ல சாட்சிகளை தயார் செய்துவருகிறது. பின்வரும் அறிக்கைகள் காட்டுவதைப் போலவே, அடிக்கடி நல்லவிதமான பிரதிபலிப்பு கிடைக்கிறது:
• புதிய பள்ளி ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு ஆசிரியர் யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகள் ஏன் கொடியை வணங்குவதோ அல்லது தேசிய கீதம் பாடுவதோ கிடையாது என்பதை அறிந்துகொள்ள விரும்பினார். அவர் முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருந்த 13 வயது மோளியைப் பார்த்து தன்னுடைய கேள்வியை கேட்டார். மோளி வேதவாக்கியங்களின் அடிப்படையில் தெளிவான விளக்கத்தைக் கொடுத்தாள். பைபிளிலிருந்து கொடுக்கப்பட்டதால் அவளுடைய ஆசிரியர் நியாயமான விவாதத்தை ஏற்றுக்கொண்டார். அவள் கொடுத்த விளக்கம் பள்ளியில் பணிபுரியும் மற்றவர்களுக்கும்கூட எடுத்துச்சொல்லப்பட்டது.
பின்னர், கட்டுரைகள் எழுதும்படியாக மாணவர்களுக்கு சொல்லப்பட்டபோது, மோளி திரித்துவம் என்ற தலைப்புப்பொருளைத் தெரிந்துகொண்டாள். அவளுடைய கட்டுரைக்கு வகுப்பில் முதல் மதிப்பெண் தரப்பட்டது, தகவலை அவள் எங்கிருந்து பெற்றுக்கொண்டாள் என்பதாக ஆசிரியர் அவளைக் கேட்டார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை ஆங்கில மொழியில் அவரிடம் காண்பித்தாள். ஆசிரியர் அந்தப் புத்தகத்தை முழு வகுப்புக்கும் காட்டினார், அநேகர் தங்கள் சொந்தப் பிரதியைப் பெற்றுக்கொள்ள விரும்பினார்கள். அடுத்த நாள், மோளி 14 புத்தகங்களையும் 7 பத்திரிகைகளையும் தன்னுடைய பள்ளி சகாக்களுக்கு அளித்தாள்; அவர்களில் மூன்று பேரோடு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தாள். ஒரு முழுநேர ஊழியக்காரியாக வேண்டும் என்பதே மோளியின் இலக்கு.
• போர்ட் மோர்ஸ்பி அருகே ஒரு கரையோர கிராமத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு தனித்தொகுதி, 1970-களின் ஆரம்பம் முதற்கொண்டு எதிர்ப்பை அனுபவித்து வந்திருக்கிறது. இருந்தபோதிலும், சமீபத்தில் அவர்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவியைப் பெற்றுக்கொண்டனர். பாப்புவா நியூ கினீயைச் சேர்ந்தவராகவும், அயல்நாட்டில் கல்வி கற்றவராகவும் இருந்த அங்குள்ள யுனைட்டட் சர்ச்சின் பிஷப், கேள்விகள் ஏதேனும் இருந்தால் கேட்குமாறு சர்ச்சில் இருந்த சபையாரிடம் ஒரு நாள் சொன்னார். ஒருவர் இவ்வாறு கேட்டார்: “நம்முடைய கிராமத்தில் இரண்டு மதங்கள் இருக்கின்றன—யுனைட்டட் சர்ச், யெகோவாவின் சாட்சிகள். சாட்சிகள் எங்கள் வீட்டுக்கு வரும்போது நாங்கள் என்ன செய்யவேண்டும்?” நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் பிஷப் இவ்வாறு பதிலளித்தார்: “உண்மையில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சமீபத்தில், இரண்டு இளம் சாட்சிகள் என்னுடைய வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் என்னிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள், எல்லா பல்கலைக்கழக பயிற்றுவிப்பும் இருந்தபோதிலும் எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் அவர்கள் மிகவும் சுலபமாக பைபிளிலிருந்து ஒரு பதிலை எனக்குத் தந்தார்கள். ஆகவே என்ன செய்யவேண்டும் என்று நான் உங்களுக்குச் சொல்லப்போவதில்லை—நீங்களே தீர்மானம் செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் கேட்கவேண்டாம், ஆனால் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்.”
உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரயாண கண்காணி இந்தச் சாட்சிகளின் தொகுதியை பின்பு சந்தித்தபோது, அவர் இவ்வாறு அறிக்கை செய்தார்: “சாட்சிகள் பிரசங்கிக்க சென்றபோது, ஏறக்குறைய எல்லாருமே செவிகொடுத்துக்கேட்டார்கள். சிலர் தங்களுடைய வீடுகளுக்குள்ளும்கூட அவர்களை வரவேற்றார்கள். அது பிரசங்கிப்பதற்கு இப்பொழுது ஒரு பரதீஸாக உள்ளது.”