வாழ்க்கை சரிதை
ஊழியத்தைச் செய்து முடிக்க தீர்மானமாய் இருந்தோம்
லீனா டேவிசன் சொன்னபடி
“கண் இருட்டிக்கொண்டு வருகிறது, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.” இந்த வார்த்தைகள், எங்கள் சிறிய விமானத்தை ஓட்டி வந்த விமானியின் வாயிலிருந்து தெளிவற்றுப் பிறந்தன. சில நிமிடங்களில், அவருடைய கைகள் விமானத்தை இயக்க மறந்தன; தன் இருக்கையில் அவர் நிலைகுலைந்து சரிந்து, நினைவிழந்தார். விமானம் ஓட்டுவதைப்பற்றி ஒன்றுமே தெரியாத என் கணவர், விமானியை எழுப்பிவிட போராடினார். அந்தச் சமயத்தில் நாங்கள் மயிரிழையில் எப்படி உயிர் தப்பினோம் என்பதைச் சொல்வதற்கு முன்பு, பூமியின் கடைக்கோடியிலுள்ள இடங்களில் ஒன்றான பாப்புவா நியூ கினியில் இருக்கும்போது நாங்கள் ஏன் விமானத்தில் பயணித்தோம் என்பதைச் சொல்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் 1929-ஆம் வருடம் நான் பிறந்தேன். நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் வளர்ந்தேன். என் அப்பா பெயர் பில் மஸ்கட். இவர் ஒரு கம்யூனிஸவாதியாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர். 1938-ஆம் வருடம், சிட்னி டவுன் ஹாலில் பேச்சுக் கொடுக்க யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டை அனுமதிக்கும்படி கேட்டு தேசியளவில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் அப்பாவும் கையெழுத்திட்டார்.
“சொல்வதற்கு அவரிடம் ஏதோவொரு முக்கிய செய்தி இருக்கிறதென நினைக்கிறேன்” என அப்பா எங்களிடம் அப்போது கூறினார். அந்தச் செய்தியின் முக்கியக் குறிப்புகளை எட்டு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் புரிந்துகொண்டோம். பைபிளைக் கலந்தாலோசிப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகளில் பயனியராக முழுநேர ஊழியம் செய்துகொண்டிருந்த நார்மன் பெலாட்டி என்பவரை அப்பா எங்கள் வீட்டுக்கு அழைத்தார். நாங்கள் எல்லாரும் விரைவில் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டோம், சீக்கிரமே கிறிஸ்தவ ஊழியத்தில் வெகு மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தோம்.
1945 வாக்கில், என் அம்மா மிக மோசமாக வியாதிப்பட்டிருந்ததால், அவருக்கு உதவுவதற்காகப் பள்ளி படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். என்னுடைய செலவுகளைக் கவனித்துக்கொள்ள தையல் வேலையும் செய்தேன். சனிக்கிழமைதோறும் மாலை வேளையில் என் அக்கா ரோஸும் நானும் பயனியர்களுடன் சேர்ந்து, சிட்னி டவுன் ஹாலுக்கு வெளியே நின்றுகொண்டு தெரு ஊழியம் செய்தோம். 1952-ஆம் வருடம் என் அண்ணன் ஜான் அமெரிக்காவிலுள்ள கிலியட் மிஷனரி பள்ளியில் படித்து பட்டம் பெற்றார்; பாகிஸ்தானில் ஊழியம் செய்ய நியமிக்கப்பட்டார். ஊழியத்தை நானும் உயிருக்கு உயிராய் நேசித்ததால் அவரைப் போலவே மிஷனரியாக ஆசைப்பட்டேன். எனவே, அதற்கு அடுத்த வருடம் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்ய ஆரம்பித்தேன்.
திருமணமும் மிஷனரி ஊழியமும்
அதன் பிறகு சீக்கிரத்தில், ஜான் டேவிசன் என்பவரைச் சந்தித்தேன். இவர் ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் வேலை செய்தார். இவர் மனத்தாழ்மை உள்ளவராக, நெஞ்சுரம் மிக்கவராக, ஒழுக்கசீலராக இருந்தார்; இவருடைய குணாம்சங்கள் காந்தம்போல் என்னைச் சுண்டியிழுத்தன. இரண்டாம் உலகப் போரின்போது, இவர் கிறிஸ்தவ நடுநிலையை விட்டுக்கொடுக்காததால் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ ஊழியத்தைச் செய்ய தீர்மானித்தோம்.
நானும் ஜானும் 1955-ஆம் வருடம் ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டோம். நடமாடும் வீடாக மாற்றும் எண்ணத்தில் ஒரு பஸ்ஸை விலைக்கு வாங்கினோம். ஆஸ்திரேலியாவில் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களுக்குச் சென்று பிரசங்கிப்பதற்கு அதைப் பயன்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. அதற்கு மறுவருடம், இதுவரை ராஜ்ய செய்தி பிரசங்கிக்கப்படாதிருந்த நியூ கினிக்குச் சென்று ஊழியம் செய்ய யெகோவாவின் சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அங்கு சென்று ஊழியம் செய்ய நாங்கள் முன்வந்தோம். இந்த நியூ கினி, ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள பெரிய தீவின் வடகிழக்குப் பகுதியாகும்.a
அப்போதெல்லாம் முழுநேரமும் வேலை செய்ய ஒப்புக்கொண்டால் மட்டுமே பாப்புவா நியூ கினிக்குள் நுழைய முடிந்தது. எனவே, ஜான் வேலை தேட ஆரம்பித்தார். சீக்கிரத்திலேயே, நியு பிரிட்டன் என்ற இடத்திலுள்ள மரம் அறுக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்தது; இந்த நியு பிரிட்டன், நியூ கினியைச் சேர்ந்த மிகச் சிறிய தீவாகும். பல வாரங்களுக்குப் பிறகு இந்தப் புதிய இடத்திற்கு நாங்கள் பயணப்பட்டோம்; 1956-ஆம் வருடம் ஜூலை மாதம் நியு பிரிட்டனிலுள்ள ரபல் என்ற இடத்தை அடைந்தோம். இங்கு, வாட்டர்ஃபால் பே என்ற இடத்திற்குச் செல்ல படகுக்காக நாங்கள் ஆறு நாட்கள் காத்திருந்தோம்.
வாட்டர்ஃபால் பே ஊரில் ஊழியம்
கொந்தளிக்கும் கடலில் பல நாட்கள் பயணப்பட்ட பிறகு வாட்டர்ஃபால் பே என்ற இடத்தை அடைந்தோம்; இது, ரபலுக்குத் தெற்கே சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெரிய கடற்கழியாகும். மரங்கள் அகற்றப்பட்ட காட்டுப் பகுதியில் இந்தப் பெரிய தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தது. அன்று மாலையில் தொழிலாளிகள் எல்லாரும் சாப்பாட்டு மேஜையைச் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள்; அப்போது மேனேஜர் இவ்வாறு சொன்னார்: “திருவாளர், திருமதி டேவிசன் அவர்களே, இந்த கம்பெனி வழக்கப்படி தொழிலாளிகள் எல்லாரும் தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்க வேண்டும்.”
அப்படி எந்தவொரு வழக்கமும் இருக்கவில்லை என்பது எங்களுக்குத் தெளிவாகவே தெரிந்தது; நாங்கள் புகைபிடிக்க மறுத்ததால் அவர்களுடைய சந்தேகப் பார்வை எங்கள்மீது விழுந்திருந்தது. எது எப்படியிருந்தாலும், “நாங்கள் யெகோவாவின் சாட்சிகள்” என ஜான் பதில் அளித்தார். உடனே எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள். அந்தத் தொழிலாளிகள் இரண்டாம் உலகப் போரில் கலந்துகொண்ட முன்னாள் வீரர்கள்; போர்க் காலத்தில் யெகோவாவின் சாட்சிகள் நடுநிலை வகித்ததால், சாட்சிகளைப் பற்றிய தப்பெண்ணம் அவர்களுக்கு இருந்தது. எனவே, அது முதற்கொண்டு, எப்படியெல்லாம் எங்களுக்குக் கஷ்டம் கொடுக்கலாமென அங்கிருந்த ஆண்கள் வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்தார்கள்.
முதலாவது, அடுப்பையும் ஃபிரிட்ஜையும் பெற எங்களுக்கு உரிமையிருந்தபோதிலும் அவற்றைத் தர மேனேஜர் மறுத்துவிட்டார். எனவே, சீக்கிரத்தில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பதார்த்தங்கள் வீணாயின; காட்டில் நாங்கள் கண்டெடுத்த உடைந்துபோன அடுப்பை வைத்துக்கொண்டு சமைக்க வேண்டியதாயிற்று. அடுத்து, சந்தையில் தளதளவென புதிதாய் வந்திறங்கிய காய்கறிகளை எங்களுக்கு விற்கக்கூடாதென அங்கிருந்த கிராமவாசிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்ததால், கிடைத்த காய்கறிகளை வைத்துக்கொண்டு காலம் தள்ளினோம். உளவாளிகள் எனவும் நாங்கள் முத்திரை குத்தப்பட்டோம், யாருக்காவது நாங்கள் பைபிளைக் கற்பிக்கிறோமாவென சதா கண்காணிக்கப்பட்டோம். அந்தச் சமயத்தில் எனக்கு மலேரியா காய்ச்சல் வந்தது.
எப்படியிருந்தபோதிலும், ஊழியத்தைச் செய்து முடிக்க தீர்மானமாய் இருந்தோம். மரம் அறுக்கும் பணி செய்துவந்த அந்த ஊர் இளைஞர்கள் இருவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது; தேசிய மொழியான மெலனீசியன் பிட்ஜின் மொழியை எங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படி அவர்களிடம் கேட்டோம். நாங்களோ அவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்தோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் “சுற்றுலா” என்ற பெயரில் பல இடங்களுக்குப் பயணித்தோம். போகும் வழியில், கிராமவாசிகள் யாரைச் சந்தித்தாலும் வெகு எச்சரிக்கையோடு சாட்சிகொடுத்தோம். அப்போது, எங்களிடம் பைபிளைக் கற்றுக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள் எங்கள் மொழிபெயர்ப்பாளர்களாகச் செயல்பட்டார்கள். கரைபுரண்டு ஓடிய ஆறுகளையும் கரைகளின் இருபுறமும் சூரிய ஒளியில் நனைந்துகொண்டிருந்த பெரிய பெரிய முதலைகளையும் கடந்துசென்றோம். தங்கள் எல்லைக்குள் நுழைகிற எதையும் எவரையும் இரையாக்கிக்கொள்கிற இந்த முதலைகள் அவ்வளவாக எங்களுக்குத் தொல்லை கொடுக்கவில்லை; ஒரேவொரு முறை மட்டுமே அவற்றிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
கற்பிக்க உபகரணங்களை உருவாக்குதல்
பல இடங்களில் பிரசங்கிக்க ஆரம்பித்தபோது, பைபிள் செய்திகளைச் சுருக்கமாக டைப் செய்து ஆர்வம் காட்டுபவர்களுக்கு வினியோகிக்கத் தீர்மானித்தோம். ஆரம்பத்தில் இந்தச் செய்திகளை மொழிபெயர்க்க எங்களிடம் பைபிளைக் கற்றுக்கொண்டிருந்த அந்த இளைஞர்கள் உதவினார்கள். பல நாட்கள் இரவு வேளைகளில் நூற்றுக்கணக்கான துண்டுப்பிரதிகளை டைப் செய்து கிராமவாசிகளுக்கும் அந்த வழியாகப் படகில் பயணிப்பவர்களுக்கும் வினியோகித்தோம்.
1957-ஆம் வருடம், அதிக அனுபவம் பெற்ற பயண ஊழியரான ஜான் கட்ஃபார்த் என்பவர் எங்களை உற்சாகப்படுத்துவதற்காக வந்தார்.b படிக்கத் தெரியாத ஜனங்களுக்கு பைபிள் சத்தியங்களைக் கற்பிப்பதற்குப் படங்களைப் பயன்படுத்துவது மிகச் சிறந்த வழியாக இருக்குமென அவர் ஆலோசனை கூறினார். அவரும் என் கணவரும் சேர்ந்து அடிப்படை பைபிள் போதனைகளை விளக்குகிற எளிய ஓவியங்களை வரிசையாக வரைந்தார்கள். பின்னர், பட வடிவிலிருந்த அந்தப் போதனைகளை நோட்டுப் புத்தகங்களில் மணிக்கணக்காக உட்கார்ந்து வரைந்தோம். பைபிளைக் கற்றுக்கொள்கிற ஒவ்வொரு மாணாக்கருக்கும் அதில் ஒரு பிரதியைக் கொடுத்தோம்; அதைப் பயன்படுத்தி அவர்கள் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தார்கள். கடைசியில், இந்தப் போதிக்கும் முறை அந்த நாடெங்கும் பின்பற்றப்பட்டது.
வாட்டர்ஃபால் பே ஊரில் இரண்டரை வருடங்கள் தங்கிய பிறகு தொழில்ரீதியாக நாங்கள் செய்திருந்த ஒப்பந்தம் முடிவடைந்தது; அதன் பிறகு, அந்நாட்டில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது. எனவே, விசேஷ பயனியர் ஊழியம் செய்வதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டோம்.
மீண்டும் ரபலுக்கு
ரபலுக்குச் செல்ல வடக்கு நோக்கி படகில் பயணித்தபோது ஒருநாள் இரவில் வைட் பே என்ற இடத்தில் தங்கினோம்; அது கொப்பரை தேங்காயும் கோகோவும் பயிரிடப்படும் பண்ணையாக இருந்தது. அதன் உரிமையாளர்களாய் இருந்த வயதான தம்பதியர் ஆஸ்திரேலியாவிற்குப் போய் குடியேறிவிட விரும்பினார்கள்; எனவே, அந்தப் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி ஜானிடம் கேட்டார்கள். அது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தாலும், நாங்கள் இரவு முழுவதும் அதைக் குறித்துப் பேசினோம். எக்கச்சக்கமாய் பொருள் சேர்ப்பதற்காக நாங்கள் நியூ கினிக்கு வரவில்லை என்பதை நினைவுபடுத்திக் கொண்டோம். பயனியர்களாக இருந்து ஊழியத்தைச் செய்து முடிக்க தீர்மானித்திருந்தோம். எனவே, மறுநாள் அந்தத் தம்பதியரிடம் எங்கள் முடிவைச் சொல்லிவிட்டு, படகேறி பயணத்தைத் தொடர்ந்தோம்.
ரபல் வந்தடைந்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளுடைய சிறிய தொகுதியினரோடு சேர்ந்து ஊழியம் செய்தோம்; இவர்கள் ஊழியம் செய்வதற்காக வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தவர்கள். உள்ளூர்வாசிகள் ராஜ்ய செய்தியை அதிக ஆர்வத்துடன் கேட்டார்கள்; எனவே, அநேக பைபிள் படிப்புகளை நடத்த ஆரம்பித்தோம். இதற்கிடையில், அங்கிருந்த ஒரு மன்றத்தை வாடகைக்கு எடுத்து கிறிஸ்தவக் கூட்டங்களை நடத்தினோம்; 150 பேர்வரை கூட்டங்களுக்கு வந்தார்கள். அவர்களில் அநேகர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள், நாட்டின் பிற பகுதிகளிலும் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியைப் பரவுவதில் உதவினார்கள்.—மத்தேயு 24:14.
நாங்கள் வூனபல் என்ற கிராமத்திற்குச் சென்றோம். இது ரபலிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது; இங்கிருந்த சிலர் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார்கள். சீக்கிரத்தில் இவர்கள் அந்தப் பகுதியில் அதிக செல்வாக்குமிக்கவராய் இருந்த ஒரு கத்தோலிக்கரின் கண்களில் பட்டார்கள். அவர் தன் சர்ச்சிலிருந்த கூட்டாளிகளைக் கும்பலாகச் சேர்த்துக்கொண்டு வந்து வாராந்தர பைபிள் படிப்பை நடத்தவிடாமல் தடுத்து, கிராமத்தை விட்டே எங்களை விரட்டினார். மறுவாரம் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதை அறிந்தபோது போலீஸ் பாதுகாப்பை நாடினோம்.
அன்று கத்தோலிக்கர்கள் வழிநெடுக பல கிலோமீட்டர் தூரத்திற்கு நின்றுகொண்டு கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பலர் எங்கள்மீது கற்களை எறியவும் தயாராய் இருந்தார்கள். இதற்கிடையில், ஒரு பாதிரியார் அந்த இனப்பிரிவினரில் நூற்றுக்கணக்கானோரைக் கிராமத்தில் கூட்டியிருந்தார். கூட்டங்களை நடத்த எங்களுக்கு உரிமை இருப்பதாக போலீஸார் உறுதி அளித்திருந்தார்கள்; எனவே, ஜனக்கூட்டத்தின் மத்தியில் செல்வதற்கு வழியை உண்டாக்கினார்கள். எனினும், நாங்கள் கூட்டத்தை ஆரம்பித்த உடனேயே, கலகத்தில் குதிக்கும்படி அந்தக் கூட்டத்தாரை பாதிரியார் தூண்டிவிட்டார். போலீஸாரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது; எனவே, அங்கிருந்து கிளம்பும்படி போலீஸ் உயரதிகாரி ஒருவர் எங்களை அவசரப்படுத்தினார்; அதோடு, காரில் ஏறும்வரை துணைக்கு வந்தார்.
அந்தக் கலகக்காரர்கள் எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி திட்டினார்கள், துப்பினார்கள், முஷ்டியை ஆட்டி மிரட்டினார்கள்; இதையெல்லாம் அந்தப் பாதிரியார் கையைக் கட்டிக்கொண்டு பார்த்து ரசித்தார். ஒருவழியாக நாங்கள் தப்பி வந்தபோது, இதுபோன்ற மோசமான சூழ்நிலையைப் பார்த்ததே இல்லையென அந்தப் போலீஸ் உயரதிகாரி சொன்னார். அந்தக் கலகக் கூட்டத்தின் அடாவடித்தனத்தைக் கண்டு வூனபல் கிராமத்திலிருந்த பெரும்பாலோர் பயந்திருந்தாலும், பைபிள் மாணாக்கர் ஒருவர் தைரியமாக ராஜ்ய சத்தியத்தை ஏற்றுக்கொண்டார். அதுமுதற்கொண்டு, நியு பிரிட்டன் எங்குமுள்ள நூற்றுக்கணக்கானோர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
நியூ கினியில் ஊழியம் ஆரம்பம்
நவம்பர் 1960-ல், முக்கியத் தீவான நியூ கினியின் வடக்குக் கரையோரமிருந்த மாடாங் என்ற பெரிய நகரத்தில் ஊழியம் செய்ய நாங்கள் நியமிப்பைப் பெற்றோம். இந்த இடத்தில் முழுநேரம் வேலை பார்ப்பதற்கு எனக்கும் ஜானுக்கும் அநேக வாய்ப்புகள் கிடைத்தன. ஒரு நிறுவனம் அதன் துணிக் கடையை நிர்வகிக்கிற பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி என்னை கேட்டுக்கொண்டது. மற்றொரு நிறுவனம் துணிகளைத் திருத்தித் தைக்கும் வேலைக்கு அழைத்தது. வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறிய பெண்கள் சிலர், துணிகளைத் தைத்து விற்கும் கடையை சொந்தமாக ஆரம்பிக்க எனக்குப் பண உதவி அளிக்கவும் முன்வந்தார்கள். எந்த நோக்கத்தோடு இந்தத் தீவில் காலடி பதித்தோம் என்பதை எப்போதும் மனதில் வைத்திருந்தோம். எனவே, எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பணிவோடு நிராகரித்தோம்.—2 தீமோத்தேயு 2:4.
மாடாங்கிலிருந்தவர்களில் அநேகர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டார்கள்; இதன் விளைவாக, சபை ஒன்று உருவாகி மளமளவென வளர்ந்தது. தொலைதூரத்திலிருந்த கிராமங்களுக்குப் போய் பிரசங்கிப்பதற்கு நடந்தோ, மோட்டார்பைக்கிலோ நாட்கணக்கில் பயணித்தோம். வழியிலே இருந்த புறக்கணிக்கப்பட்ட குடிசைகளில், புதர்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்களை அடுக்கி வைத்து படுக்கையாக்கி தூங்கினோம். டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவையும், பிஸ்கெட்டுகளையும், ஒரு கொசுவலையையும் மட்டுமே எங்களுடன் எடுத்துச் சென்றோம்.
இப்படி பயணிக்கும்போது ஒருமுறை, மாடாங்குக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டாலீடிக் என்ற கிராமத்தில் ஆர்வம் காட்டிய ஒரு தொகுதியினரைச் சந்தித்தோம். அவர்கள் சத்தியத்தில் முன்னேற்றம் செய்தார்கள்; அச்சமயத்தில், அவர்கள் பொதுவிடத்தில் கூடிவந்து பைபிள் படிப்பதை அங்கிருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தடைசெய்தார். பின்னர், அவர்களுடைய வீடுகளை சேதப்படுத்தவும், அவர்களைப் புதர்ப்பகுதிக்கு விரட்டியடிக்கவும் போலீஸாரைத் தூண்டிவிட்டார். எனினும், பக்கத்துக் கிராமத்தின் தலைவர் தன்னுடைய இடத்தில் அவர்கள் எல்லாரும் குடியிருப்பதற்கு அனுமதி அளித்தார். சீக்கிரத்திலேயே, பரிவுமிக்க இந்தத் தலைவர் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்; இந்தப் பகுதியில் நவீன ராஜ்ய மன்றம் ஒன்று கட்டப்பட்டது.
மொழிபெயர்ப்பும் பயண வேலையும்
1956-ல் நியு பிரிட்டனில் கால்பதித்து இரண்டே வருடங்களுக்குப் பிறகு, மெலனீசியன் பிட்ஜின் மொழியில் பல்வேறு பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்க்கும்படி நானும் ஜானும் கேட்டுக்கொள்ளப்பட்டோம். பல வருடங்களுக்கு இந்த வேலையைச் செய்து வந்தோம். பிறகு, 1970-ல் பாப்புவா நியூ கினியின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலுள்ள கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பாளர்களாய் முழுநேர சேவைசெய்ய அழைப்பைப் பெற்றோம். அங்கு மொழிப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தினோம்.
1975-ல் பயண ஊழியம் செய்வதற்காக நியு பிரிட்டனுக்குத் திரும்பிச் சென்றோம். அடுத்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அத்தீவின் எல்லா பகுதிகளுக்கும் விமானத்திலோ படகிலோ காரிலோ நடந்தோ சென்றோம். இப்படிச் செல்கிறபோது அநேக முறை மயிரிழையில் உயிர் தப்பினோம்; அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் விவரிக்கப்பட்டது. நியு பிரிட்டனில், கண்டிரீயன் நகரில் உள்ள தற்காலிக ஓடுதளத்தை எங்கள் விமானம் நெருங்கிய சமயத்தில் விமானி இரைப்பை அழற்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். ஆட்டோபைலட் எனப்படும் தானியங்கியின் கட்டுப்பாட்டில் விமானம் இயங்க, செய்வதறியாது காட்டின்மீது வட்டமடித்துக்கொண்டிருந்தோம்; அந்தச் சமயத்தில் நினைவிழந்து கிடந்த விமானியை எழுப்புவதற்கு ஜான் பெரும் முயற்சி செய்தார். ஒருவழியாக அவருக்கு நினைவு திரும்பியது; எதன்மீதும் மோதிவிடாமல் எப்படியோ விமானத்தைத் தரையிறக்கும் அளவுக்கு அவரால் பார்க்க முடிந்தது. பிறகு மீண்டும் நினைவிழந்தார்.
ஊழியத்தின் புதிய அத்தியாயம்
1988-ல் கிளை அலுவலகத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் வேலை அதிகம் இருந்ததால் அதில் உதவுவதற்கு நாங்கள் மீண்டும் போர்ட் மோர்ஸ்பிக்கு அனுப்பப்பட்டோம். கிளை அலுவலகத்தில் கிட்டத்தட்ட 50 பேர் ஒரே இடத்தில் குடும்பமாக வசித்தோம், வேலை செய்தோம்; அதோடு, மொழிபெயர்ப்பு செய்ய புதியவர்களுக்கு நாங்கள் பயிற்சியும் அளித்தோம். ஒரு கட்டடத்தில், எங்கள் ஒவ்வொருவருக்கும் தங்குவதற்குச் சிறிய அறை கொடுக்கப்பட்டது. குடும்பத்தாரும் நண்பர்களும் எங்களை வந்து சந்திப்பதற்கும் எங்களோடு பழகுவதற்கும் வசதியாக எங்களுடைய அறை கதவை சற்று திறந்தே வைக்க நானும் ஜானும் தீர்மானித்தோம். இவ்வாறு எங்கள் குடும்பத்தில் இருந்தவர்களோடு நெருக்கமான நட்புறவை அனுபவித்தோம்; ஒருவருக்கொருவர் அன்பையும் ஆதரவையும் பரிமாறிக்கொண்டோம்.
பிறகு, 1993-ல், மாரடைப்பால் ஜான் இறந்துபோனார். என் உடலில் பாதி இறந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன். 38 வருட மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்தே ஊழியத்தில் காலத்தைக் கழித்திருந்தோம். பிரிவுத் துயரின் மத்தியிலும், யெகோவா தரும் பலத்தில் தொடர்ந்து ஊழியம் செய்யவே தீர்மானமாய் இருந்தேன். (2 கொரிந்தியர் 4:7) அதன் பிறகும், என்னுடைய அறையின் கதவு சற்று திறந்தே இருந்தது; இளம் சகோதர சகோதரிகள் தவறாமல் என்னைச் சந்திக்க வந்தார்கள். உற்சாகம் அளித்த அத்தகைய கூட்டுறவு, நம்பிக்கையான மனநிலையோடு எப்போதும் இருக்க எனக்கு உதவியது.
2003-ல் என் உடல்நிலை மோசமானதால் ஆஸ்திரேலியாவில் சிட்னியிலுள்ள கிளை அலுவலகத்திற்கு மீண்டும் அனுப்பப்பட்டேன். இப்போது எனக்கு 77 வயது; இன்னமும் மொழிபெயர்ப்பு இலாகாவில் முழுநேரம் வேலை செய்கிறேன்; அதோடு, சுறுசுறுப்பாய் பிரசங்க வேலையிலும் ஈடுபடுகிறேன். என் நண்பர்களும் ஆன்மீக பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் எனக்குச் சந்தோஷத்தை அளித்து வருகிறார்கள்.
இப்போதும் பெத்தேலில் என் அறை கதவு சற்று திறந்தே இருக்கிறது, என்னைச் சந்திக்க கிட்டத்தட்ட எல்லா நாட்களும் யாராவது வருகிறார்கள். சொல்லப்போனால், என் அறை கதவு மூடியிருந்தால்போதும் எனக்கு என்னமோ ஏதோவென நினைத்து மற்றவர்கள் பெரும்பாலும் கதவைத் தட்டி விசாரிப்பார்கள். என் உயிர்மூச்சு இருக்கும்வரை என் ஊழியத்தைச் செய்து முடிக்கவும் என் தேவனைச் சேவிக்கவும் நான் தீர்மானமாகவே இருப்பேன்.—2 தீமோத்தேயு 4:5.
[அடிக்குறிப்புகள்]
a அந்தச் சமயத்தில், இந்தத் தீவின் கிழக்குப் பகுதி தெற்கே பாப்புவா என்றும் வடக்கே நியூ கினி என்றும் பிரிக்கப்பட்டிருந்தது. இன்று இந்தோனேஷியாவைச் சேர்ந்த இந்தத் தீவின் மேற்குப் பகுதி பாப்புவா என்றும் கிழக்குப் பகுதி பாப்புவா நியூ கினி என்றும் அழைக்கப்படுகிறது.
b ஜான் கட்ஃபார்த்தின் வாழ்க்கை சரிதையை, ஜூன் 1, 1958 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 333-6-ல் காண்க.
[பக்கம் 18-ன் தேசப்படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நியூ கினி
ஆஸ்திரேலியா
சிட்னி
இந்தோனேஷியா
பாப்புவா நியூ கினி
டாலீடிக்
மாடாங்
போர்ட் மோர்ஸ்பி
நியு பிரிட்டன்
ரபல்
வூனபல்
வைட் பே
வாட்டர்ஃபால் பே
[படத்திற்கான நன்றி]
வரைபடமும் பூமி கோளமும்: Based on NASA/Visible Earth imagery
[பக்கம் 17-ன் படம்]
1973-ல் நியூ கினியிலுள்ள லே என்ற இடத்தில் நடந்த மாவட்ட மாநாட்டில் ஜானுடன்
[பக்கம் 20-ன் படம்]
2002, பாப்புவா நியூ கினியிலுள்ள கிளை அலுவலகத்தில்