உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 10/15 பக். 3-4
  • மகிழ்ச்சி—கைநழுவி விடுகிறதே

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மகிழ்ச்சி—கைநழுவி விடுகிறதே
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மகிழ்ச்சியின்மைக்குரிய திறவுகோல்
  • நழுவிச்செல்லும் ஓர் இலக்கு
  • மகிழ்ச்சியைத் தேடி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • செல்வங்கள் உங்களை சந்தோஷப்படுத்துமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • உண்மையான மகிழ்ச்சியை எங்கே காணமுடியும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யெகோவாவைச் சேவிப்பதில் மெய்யான மகிழ்ச்சி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 10/15 பக். 3-4

மகிழ்ச்சி—கைநழுவி விடுகிறதே

கோபம், கவலை, மனச்சோர்வு ஆகியவை நீண்ட காலமாகவே விஞ்ஞான ஆராய்ச்சிக்குரிய பொருளாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால், சமீப ஆண்டுகளில், முன்னணி விஞ்ஞானிகள் தங்களுடைய ஆராய்ச்சியை நம்பிக்கையூட்டுவதும் விரும்பத்தக்கதுமான மனித அனுபவத்தின்மீது, அதாவது மகிழ்ச்சியின்மீது ஒருமுகப்படுத்தி வந்திருக்கின்றனர்.

மக்களை எது அதிகம் மகிழ்விக்கலாம்? அவர்கள் இளமையானவர்களாகவோ, செல்வந்தர்களாகவோ, ஆரோக்கியமுள்ளவர்களாகவோ, உயரமானவர்களாகவோ, அல்லது ஒல்லியானவர்களாகவோ இருந்தாலா? மெய்யான மகிழ்ச்சிக்கு திறவுகோல் எது? சாத்தியமற்றதாய் இல்லையென்றாலும், அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதை பெரும்பாலான மக்கள் கஷ்டமாக நினைக்கிறார்கள். மகிழ்ச்சியைக் கண்டடைவதில் பரவலாக காணப்படும் தோல்வியை கவனிக்கையில், ஒருவேளை மகிழ்ச்சிக்கு எது திறவுகோலாக இல்லை என்று சொல்வதை சிலர் அதிக சுலபமாக நினைப்பார்கள்.

சுயநலத்தை மையமாகக்கொண்ட தத்துவத்தை மகிழ்ச்சிக்குத் திறவுகோலாக முன்னணி மனோதத்துவ நிபுணர்கள் நீண்ட காலமாக சிபாரிசு செய்தார்கள். மகிழ்ச்சியற்ற மக்கள் தங்களுடைய சொந்த தேவைகளை திருப்திசெய்துகொள்வதிலேயே கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி அவர்கள் உற்சாகப்படுத்தினார்கள். “நீ நீயாகவே இரு,” “உன்னுடைய உணர்ச்சிகளை அறிந்துகொள்,” “உன்னை நீயே புரிந்துகொள்” போன்ற கவனத்தைக் கவரும் வாசகங்கள் மனோவியல் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தவித மனப்போக்கை ஊக்குவித்த சில நிபுணர்களே, இப்படிப்பட்ட தனிநபருக்குரிய மனநிலை நிரந்தர மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில்லை என இப்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள். ‘தான்’ என்ற கொள்கை வேதனையையும் மகிழ்ச்சியின்மையையும் கண்டிப்பாய் கொண்டுவரும். சுயநலம் மகிழ்ச்சிக்கு திறவுகோல் அல்ல.

மகிழ்ச்சியின்மைக்குரிய திறவுகோல்

இன்பத்தை நாடுவதன் மூலம் மகிழ்ச்சியைக் கண்டடையத் துடிப்பவர்கள் தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பண்டைய இஸ்ரவேலில் வாழ்ந்த ஞானமுள்ள அரசனாகிய சாலொமோனின் உதாரணத்தைக் கவனியுங்கள். பிரசங்கி என்ற பைபிள் புத்தகத்தில், அவர் இவ்வாறு விளக்குகிறார்: “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சி கொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன்.” (பிரசங்கி 2:10) சாலொமோன் தனக்காக வீடுகளைக் கட்டினார், திராட்சத் தோட்டங்களை நாட்டினார், தோட்டங்களையும் பூங்காக்களையும் உண்டாக்கினார், தனக்காக நீர் நிரம்பிய குளங்களை வெட்டினார். (பிரசங்கி 2:4-6) ஒருமுறை அவர் இவ்வாறு கேட்டார்: “என்னைப் பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்?” (பிரசங்கி 2:25) மிகச் சிறந்த பாடகர்களாலும் இசைக் கலைஞர்களாலும் மகிழ்விக்கப்பட்டார். அத்தேசத்திலிருந்த மிக அழகிய பெண்களின் கூட்டுறவையும் அனுபவித்து மகிழ்ந்தார்.—பிரசங்கி 2:8.

குறிப்பு என்னவென்றால், இன்பமான பொழுதுபோக்குகளைப் பொருத்தவரையில் சாலொமோன் எதையும் விட்டுவைக்கவில்லை. வாழ்க்கையில் பொங்கிவழியும் இன்பங்களில் மூழ்கித் திளைத்த பிறகு அவர் என்ன முடிவுக்கு வந்தார்? அவர் சொன்னார்: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:11.

ஞானமுள்ள அரசனின் கண்டுபிடிப்புகள் இன்று வரைக்கும் இம்மி பிசகாமல் பொருந்துகின்றன. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களைப் போன்ற செல்வச் செழிப்புமிக்க நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த 30 ஆண்டுகளில், அமெரிக்கர்கள் தங்களுடைய ஆட்டோமொபைல்கள், டெலிவிஷன்கள் போன்ற சொத்துக்களை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்கியிருக்கிறார்கள். இருந்தபோதிலும், மனநல நிபுணர்கள் சொல்லுகிறபடி, அமெரிக்கர்கள் எந்தவிதத்திலும் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு செய்திமூலம் தெரிவிக்கிறபடி, “அதே காலப்பகுதியின்போது, மனச்சோர்வின் வீதம் கிடுகிடுவென்று உயர்ந்திருக்கிறது. பருவ வயது தற்கொலை மும்மடங்காகியிருக்கிறது. விவாகரத்து வீதம் இரட்டிப்பாகியிருக்கிறது.” பணத்துக்கும் மகிழ்ச்சிக்கும் இடையேயுள்ள தொடர்பை குறித்து வித்தியாசப்பட்ட சுமார் 50 நாடுகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஆராய்ந்த பிறகு, சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். சுருக்கமாய் சொல்லப்போனால், நீங்கள் மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்கமுடியாது.

அதற்கு மாறாக, செல்வத்தை நாடுவது மகிழ்ச்சியின்மைக்கே திறவுகோல் என அழைப்பது பொருத்தமாய் இருக்கும். அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:9, 10.

நிரந்தரமான மகிழ்ச்சிக்கு செல்வங்களோ ஆரோக்கியமோ இளமையோ அழகோ அதிகாரமோ எதுவுமே உத்தரவாதமளிக்க முடியாது, இவற்றில் சில அம்சங்கள் ஒன்றுசேர்ந்து இருந்தாலும்கூட உத்தரவாதம் அளிக்கமுடியாது. ஏன் முடியாது? ஏனென்றால் கெட்ட காரியங்கள் நடப்பதை தடுக்கும் வல்லமை நம் கையில் இல்லை. அரசனாகிய சாலொமோன் கச்சிதமாய் சொன்னார்: “தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.”—பிரசங்கி 9:12.

நழுவிச்செல்லும் ஓர் இலக்கு

எப்பேர்ப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியும், மகிழ்ச்சிக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட சூத்திரத்தையோ சூழ்ச்சித்திறத்தையோ அளிக்க முடியாது. இவ்வாறாகவும் சாலொமோன் சொன்னார்: “நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது: ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது.” “ஏனெனில் சமயமும் எதிர்பாராத சம்பவங்களும் எல்லாருக்கும் நேரிடுகின்றன.” (NW)—பிரசங்கி 9:11.

மேற்சொன்ன வார்த்தைகளுடன் ஒத்துப்போகும் அநேகர், உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கும் வாழ்க்கையை எதிர்பார்ப்பது ஆகாச கோட்டைதான் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். “மகிழ்ச்சி என்பது ஒரு கற்பனையான நிலைமை” என்று பிரபல கல்வியாளர் ஒருவர் குறிப்பிட்டார். மகிழ்ச்சிக்கான திறவுகோல் என்பது மனித அறிவுக்கு அப்பாற்பட்ட பரம இரகசியமாகவே இருக்கிறது, அந்த இரகசியத்தை வெளியிடும் திறமை அறிவுஜீவிய வரம்பெற்ற சில மறைஞானிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம் என மற்றவர்கள் நம்புகிறார்கள்.

இருப்பினும், மக்கள் தங்களுடைய மகிழ்ச்சிக்கான தேடலில், பல்வகை வாழ்க்கை பாணிகளைத் தொடர்ந்து முயன்றுபார்க்கிறார்கள். அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் தோல்வியடைந்தபோதிலும், இன்றைக்கு அநேகர் தங்களுடைய மகிழ்ச்சியின்மையை போக்க செல்வங்களையோ அதிகாரத்தையோ ஆரோக்கியத்தையோ இன்பத்தையோதான் இன்னும் நாடுகிறார்கள். இந்தத் தேடல் தொடர்ந்து நடைபெறுகிறது, ஏனெனில் நிரந்தரமான மகிழ்ச்சி என்பது வெறுமனே கற்பனையான ஒரு நிலைமை அல்ல என பெரும்பாலான மக்கள் ஆழமான அடிமனதில் நம்புகிறார்கள். மகிழ்ச்சி என்பது கலைந்துபோகும் கனவல்ல என்று நம்புகிறார்கள். அப்படியானால், நீங்கள் கேட்கலாம், ‘நான் அதை எப்படி கண்டடையலாம்?’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்