“சிறியவன்” “பலத்த ஜாதி”யாவதை நான் கண்டேன்
வில்லியம் டிஹ்மென்வால் கூறப்பட்டது
ஆண்டு 1936; இடம் அ.ஐ.மா. ஆரிகானிலுள்ள சேலம். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு கூட்டத்தில் நான் ஆஜராயிருந்தேன். அப்போது “திரள் கூட்டம் எங்கே?” என்ற கேள்வி
கேட்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:9) நான் ஒருவன் மாத்திரமே அங்கிருந்ததால் அனைவரும் “அதோ, அங்கே இருக்கிறார்!” என்று என்னைச் சுட்டி காண்பித்தார்கள்.
ஒப்பிடுகையில், 1930-களின் மத்திப ஆண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் பூமியின்மீது பரதீஸில் என்றும் வாழும் பைபிள் நம்பிக்கை வெகு சிலருக்கு மாத்திரமே இருந்தது. (சங்கீதம் 37:29; லூக்கா 23:43) அப்போது முதற்கொண்டு காரியங்கள் வெகுவாக மாறிவிட்டிருக்கின்றன. ஆனால் ஆரிகானிலுள்ள சேலத்தில் அந்தக் கூட்டத்துக்குச் செல்வதற்கு வழிநடத்தின சம்பவங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
என்னுடைய அப்பா த கோல்டன் ஏஜ் என்ற பத்திரிகைக்கு சந்தா செய்திருந்தார், விழித்தெழு! பத்திரிகை முன்னதாக இப்படித்தான் அழைக்கப்பட்டது. பருவ வயதினனாய் இருந்தபோது அதை நான் அனுபவித்து வாசித்தேன், முக்கியமான பைபிள் சத்தியம் அதில் அடங்கியிருக்கிறது என்று உறுதியாக நம்பினேன். ஆகவே ஒரு கோல்டன் ஏஜ்-ன் பின்பக்கத்தில் இருந்த கூப்பனை ஒரு நாள் அனுப்பிவைத்தேன். அது வாசகருக்கு 20 சிறு புத்தகங்களையும் ஒரு புத்தகத்தையும் அருகிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் பெயரையும் அனுப்பிவைத்தது. பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டபோது, நான் வீட்டுக்கு வீடு சென்று எல்லா சிறு புத்தகங்களையும் புத்தகத்தையும்கூட அளித்துவிட்டேன்.
அந்தச் சமயம் யாரும் என்னோடு பைபிளை படித்துக் கொண்டிருக்கவில்லை. உண்மையில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு நான் ஒருபோதும் பேசியதுகூட இல்லை. ஆனால் இப்பொழுது அருகிலுள்ள ராஜ்ய மன்றத்தின் விலாசம் என் கையில் இருந்தபடியால் ஒரு கூட்டத்தில் ஆஜராவதற்காக ஆரிகானிலுள்ள சேலத்துக்கு சுமார் 40 கிலோமீட்டர் நான் பயணம் செய்தேன். அங்குதானே, நான் 18 வயது இருக்கையிலேயே “திரள் கூட்டம்” என்பதாக தனிப்படுத்தி பேசப்பட்டேன்.
உண்மையில் ஊழியத்துக்கு என்னை தயார் செய்துகொள்ளாதபோதிலும், நான் சேலம் சபையோடு சேர்ந்து பிரசங்கிக்க ஆரம்பித்தேன். சாட்சி கொடுக்கையில் மூன்று முக்கிய குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்பட்டேன். முதலாவது, யெகோவாவே கடவுள்; இரண்டாவது, இயேசு கிறிஸ்துவே அவருடைய நியமிக்கப்பட்ட ராஜா; மூன்றாவது, ராஜ்யமே உலகத்துக்கு ஒரே நம்பிக்கை. ஒவ்வொரு கதவண்டையிலும் நான் அந்தச் செய்தியை பகிர்ந்துகொள்ள முயற்சி செய்தேன்.
சேலத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு இரண்டு ஆண்டுகால கூட்டுறவுக்குப்பின், ஏப்ரல் 3, 1938-ல் நான் முழுக்காட்டப்பட்டேன். சேலத்திலிருந்த நண்பர்கள், ‘திரள் கூட்டத்தைச்’ சேர்ந்த அநேகர் முழுக்காட்டப்படுவதைக் கண்டு மகிழ்ந்தனர். பிப்ரவரி 1939-ல் ஒரு பயனியராக அல்லது ஒரு முழுநேர ஊழியரானேன். அந்த ஆண்டில் டிசம்பர் மாதம், ராஜ்ய அறிவிப்பாளர்களின் தேவை அதிகமாக இருந்த இடமாகிய அரிஜோனாவுக்கு செல்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.
அரிஜோனாவில் பயனியர் ஊழியம் செய்தல்
அரிஜோனாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை புதியதாக இருந்த காரணத்தால் எங்களைப் பற்றி அதிகமான தப்பெண்ணங்கள் இருந்தன, ஆகவே இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய மாகாணங்கள் நுழைந்தபோது நாங்கள் அதிகமாக துன்புறுத்துதலை அனுபவித்தோம். உதாரணமாக, அரிஜோனாவிலுள்ள ஸ்டஃபோர்டில் 1942-ல் நான் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது, மார்மன்களின் ஒரு கும்பல் எங்களைத் தாக்கப்போவதாக பேச்சு அடிப்பட்டது. என்னுடைய பயனியர் கூட்டாளிகளும் நானும் ஒரு மார்மன் பிஷப்பினுடைய வீட்டுக்கு அருகில் வசித்துவந்தோம்; எங்கள்மீது மதிப்பு வைத்திருந்த அவர் இவ்வாறு சொன்னார்: “மார்மன் மிஷனரிகள் சாட்சிகளைப்போல அந்தளவு சுறுசுறுப்பாயிருந்தால் மார்மன் சர்ச்சிலும் அதிகரிப்பு இருக்கும்.” ஆகவே சர்ச்சில் அவர் தைரியமாக பின்வருமாறு கூறினார்: “சாட்சி பையன்கள்மீது கும்பல் தாக்குதல் நடத்தப்போவதாக பேச்சு அடிப்படுவதை கேள்விப்படுகிறேன். அந்தப் பையன்கள் இருக்கும் இடத்துக்கு வெகு அருகில்தான் நான் வசிக்கிறேன், கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டால் வேலிக்கப்பால் என்னுடைய துப்பாக்கியின் குண்டு வெடிக்கும். அந்தத் துப்பாக்கி குண்டு சாட்சிகளுக்கு எதிராக அல்ல, ஆனால், கும்பலாக வந்து தாக்குபவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். கும்பல் தாக்குதல் நடத்த நீங்கள் விரும்பினால் எதை எதிர்பார்க்கலாம் என்பது உங்களுக்கு தெரியும்.” கும்பல் தாக்குதல் நடத்தப்படவேயில்லை.
அரிஜோனாவில் நானிருந்த மூன்று ஆண்டுகளின்போது, பல தடவை நாங்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் போடப்பட்டோம். ஒரு சமயத்தில் 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டேன். எங்களுடைய ஊழியத்தில் போலீஸாரின் தொல்லையைச் சமாளிப்பதற்காக பறக்கும் படை என்பதாக நாங்கள் அழைத்த ஒன்றை ஏற்படுத்திக்கொண்டோம். பொறுப்பிலிருந்த சாட்சி எங்களிடம் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய பெயருக்கு ஏற்றாற்போல நாம் செயல்படுகிறோம். காலை ஐந்து அல்லது ஆறு மணி போல் நாங்கள் ஆரம்பித்து ஒவ்வொரு கதவண்டையிலும் ஒரு துண்டுப்பிரதி அல்லது சிறு புத்தகத்தை விட்டுவிட்டு நாங்கள் அங்கிருந்து பறந்துவிடுவோம்.” அரிஜோனா மாநிலத்தின் பெரும்பகுதி எங்களுடைய “பறக்கும் படை”யினரால் செய்துமுடிக்கப்பட்டது. என்றபோதிலும் இது கடைசியாக கலைக்கப்பட்டது, ஏனென்றால் இம்முறையில் பிரசங்கிப்பது அக்கறையுள்ளவர்களுக்கு உதவிசெய்ய எங்களை அனுமதிக்கவில்லை.
கிலியட் பள்ளியும் விசேஷ சேவையும்
டிசம்பர் 1942-ல் யெகோவாவின் சாட்சிகளால் நிறுவப்பட்ட புதிய மிஷனரி பள்ளிக்கு வரும்படி அழைப்பு கடிதத்தைப் பெற்றுக்கொண்ட அநேக பயனியர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். இப் பள்ளி ஆரம்பத்தில் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் கல்லூரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி என்பதாக பெயர் மாற்றப்பட்டது. கல்லூரி வளாகம் சுமார் 4,800 கிலோமீட்டர் தள்ளி நியூ யார்க்கின் கிராமப் புறத்தே இத்தாக்கா நகரின் அருகே அமையப்பெற்றிருந்தது.
ஜனவரி 1943-ல் ஆரிகானுக்கு கொஞ்ச நாட்கள் சென்று வந்தபின்பு பயனியர்களாகிய எங்களில் அநேகர் அரிஜோனாவின் பாலைவன உஷ்ணத்தைவிட்டு கிரேஹொண்ட் பேருந்தில் புறப்பட்டோம். பல நாட்களுக்குப்பின் நாங்கள் வந்துசேர வேண்டிய இடத்தை அடைந்து அங்கே கிராமப்புற நியூ யார்க்கில் பனிமழை பொழிவதைக் கண்டோம். பள்ளி 1943, பிப்ரவரி 1 அன்று துவங்கியது; அதன் தலைவர் நேதன் ஹெச். நார் தன்னுடைய துவக்க உரையில் நூறு மாணவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “நியமிக்கப்பட்ட ஊழியர்களாக உங்களைத் தயார்படுத்துவது இந்தக் கல்லூரியின் நோக்கம் இல்லை. நீங்கள் ஏற்கெனவே ஊழியர்களாகவும் பல ஆண்டுகளாக ஊழியத்தில் சுறுசுறுப்பாகவும் இருந்துவருகிறீர்கள். . . . நீங்கள் செல்லும் பிராந்தியங்களில் அதிக தகுதியுள்ள ஊழியர்களாக ஆவதற்கு உங்களைத் தயார் செய்வதே கல்லூரியில் இந்தப் படிப்பின் பிரத்தியேகமான நோக்கமாகும்.”
உலகப்பிரகாரமான கல்வி ஓரளவு மாத்திரமே எனக்கு இருந்தபடியால் கிலியட்டில் ஆரம்பத்தில் எனக்கு சங்கடமாக இருந்தது. ஆனால் போதனையாளர்கள் மிகவும் புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொண்டார்கள், நான் படிப்பை மிகவும் அனுபவித்து மகிழ்ந்தேன். தீவிரமான ஐந்து மாத கால பயிற்றுவிப்புக்குப்பின் எங்கள் வகுப்புக்கு பட்டம் அளிக்கப்பட்டது. அதற்குப்பிறகு, எங்களில் சிலரை நியூ யார்க் புரூக்ளினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பிவைத்தார்கள்; இங்கே வட்டாரக் கண்காணிகளாக பிரயாண வேலையில் சேவிப்பதற்காக எங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு கூடுதலான பயிற்சியைப் பெற்றோம். என்னுடைய முதல் நியமனம் வட மற்றும் தென் கரோலினாவாக இருந்தது.
அந்நாட்களில் வட்டாரக் கண்காணி இடைவிடாமல் எப்போதும் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்துகொண்டே இருந்தார். சிறிய சபையில் ஒரு நாளும் பெரிய சபையாக இருந்தால் அங்கே இரண்டு நாட்களும் நாங்கள் தங்கியிருப்போம். அந்தச் சமயத்தில் பெரும்பாலான சபைகள் சிறியவையாக இருந்தன. ஆகவே ஒரு முழு நாளையும் செலவிட்ட பின்பு, அநேகமாக சந்திப்புகளைச் செய்வதும் கேள்விகளுக்கு பதிலளிப்பதுமாக நள்ளிரவு வரையாக விழித்திருந்தப் பின்பு, அடுத்த சபைக்குச் செல்வதற்காக அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவேன். சுமார் ஓராண்டு காலம் நான் வட்டார வேலையில் இருந்தேன், பின்னர் டென்னெஸீயிலும் நியூ யார்க்கிலும் கொஞ்ச காலம் பயனியர் ஊழியம் செய்துவந்தேன்.
கியூபாவுக்கும் போர்டோ ரிகோவுக்கும்
மே 1945-ல், என்னுடைய முதல் அயல்நாட்டு மிஷனரி நியமனமாகிய கியூபாவுக்கு இன்னும் மற்ற அநேகரோடும் சேர்ந்து அனுப்பப்பட்டேன்! க்யூபாவின் தலைநகரமான ஹவானாவுக்கு வந்திறங்கிய அதே இரவில் நாங்கள் பத்திரிகை ஊழியத்துக்காக சென்றோம். சான்டா க்ளாராவில் ஒரு வீடு கிடைக்கும் வரை நாங்கள் ஹவானாவிலேயே தங்கினோம். சாப்பாடு, வாடகை உட்பட எங்களுடைய எல்லா தேவைகளுக்கும் கொடுக்கப்பட்ட மாத உதவித்தொகை ஆளுக்கு 25 டாலர் மாத்திரமே. கிடைத்தப் பொருட்களை வைத்து படுக்கையையும் தட்டுமுட்டு சாமான்களையும் செய்துகொண்டு ஆப்பிள் பெட்டிகளை இழுப்பறைப் பெட்டிகளாக பயன்படுத்திக்கொண்டோம்.
அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் வட்டார வேலைக்கு நியமனத்தை பெற்றேன். அந்தச் சமயத்தில் கியூபா முழுவதும் ஒரே வட்டாரமாக, இருந்தது. எனக்கு முன்பிருந்த வட்டாரக் கண்காணிக்கு நீளமான கால்களும் நடப்பதில் விருப்பமும் இருந்ததால் சகோதர சகோதரிகள் அவரோடு நடந்துசெல்வதற்கு உண்மையில் ஓடவேண்டியதாக இருந்தது. நானும் அப்படியே இருப்பேன் என்பதாக அவர்கள் கற்பனை செய்துகொண்டு, என்னுடைய சந்திப்புக்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். ஒரே நாளில் அவர்கள் எல்லாரும் ஊழியத்துக்குச் செல்லாமல் தொகுதிகளாக பிரித்துக்கொண்டு மாறி மாறி என்னோடு ஊழியம் செய்தார்கள். முதல் நாள் ஒரு தொகுதி என்னை தூரமான ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றது; அடுத்த நாள் மற்றொரு தொகுதி மற்றொரு தூரமான இடத்துக்கு அழைத்துச் சென்றது, இப்படியாக கழிந்தது. சந்திப்பின் முடிவில் நான் மிகவும் களைத்துப்போனேன், ஆனால் நான் அதை அனுபவித்தேன். அந்தச் சபையை நான் பிரியத்தோடு நினைவுகூருகிறேன்.
1950-க்குள் கியூபாவில் 7,000-க்கும் அதிகமான ராஜ்ய பிரஸ்தாபிகள் இருந்தார்கள்; மெக்ஸிகோவில் இருந்த அதே எண்ணிக்கை. அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நியூ யார்க் நகரில் யாங்கி ஸ்டேடியத்தில் தேவாட்சியின் அதிகரிப்பு சர்வதேச மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அதற்குப்பின் போர்டோ ரிக்கோவுக்கு நான் புதிய மிஷனரி நியமனத்தைப் பெற்றுக்கொண்டேன். 12-ஆவது கிலியட் வகுப்பிலிருந்த புதிய மிஷனரிகளான எஸ்டலும் தெல்மா வெக்லியும் போர்டோ ரிக்கோவுக்கு என்னோடு விமானத்தில் வந்தார்கள்.
எட்டு ஆண்டுகளுக்கு பிற்பாடு எஸ்டலும் நானும் போர்டோ ரிக்கோவிலுள்ள பேயமானில் எளிமையான முறையில் மேடையில் எங்களுடைய வட்டார மாநாட்டின் இடைவேளை நேரத்தின் போது திருமணம் செய்துகொண்டோம். எங்களுடைய திருமணத்துக்கு முன்பும் அதற்கு பின்பும் நான் வட்டார வேலை செய்துகொண்டிருந்தேன். பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போர்டோ ரிக்கோவில் இருந்த சமயத்தில் எஸ்டலும் நானும் மிகுதியான அதிகரிப்புகளைப் பார்த்தோம்—500-க்கும் குறைவாக இருந்த பிரஸ்தாபிகள் 2,000-க்கும் அதிகமானோராக ஆனார்கள். அநேகர் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும் நிலையை அடைவதற்கு எங்களால் உதவிசெய்ய முடிந்திருக்கிறது; பல புதிய சபைகளை ஸ்தாபிப்பதிலும் எங்களுக்குப் பங்கு இருந்திருக்கிறது.
டிசம்பர் 1960-ல் நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் உலக தலைமை காரியாலயத்திலிருந்து போர்டோ ரிக்கோவுக்கு வந்திருந்த மில்டன் ஹென்ஷல் மிஷனரிகளிடம் பேசினார். வேறு ஒரு நியமிப்புக்கு தாங்களாக சிலர் முன்வர முடியுமா என்பதாக அவர் கேட்டார். இதற்கு முன் வந்தவர்களில் எஸ்டலும் நானும் இருந்தோம்.
டொமினிகன் குடியரசில் எங்கள் வீடு
எங்கள் புதிய நியமனம் டொமினிகன் குடியரசாக இருந்தது; ஜூன் 1, 1961-ல் மாறிச் செல்வதற்கு தீர்மானித்தோம். மே 30 அன்று டொமினிகன் சர்வாதிகாரி ரஃபேல் ட்ருஜெல்லோ கொல்லப்பட்டதால் அந்நாட்டுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விரைவில் டொமினிகன் குடியரசுக்கு விமானங்கள் போக ஆரம்பித்தன, திட்டமிட்டபடியே ஜூன் 1 அன்று நாங்கள் விமானத்தில் சென்றோம்.
நாங்கள் இங்கே வந்திறங்கியபோது நாட்டில் பதற்றமான நிலைமை இருந்தது; இராணுவத்தினரின் நடமாட்டமும் அதிகம் இருந்தது. புரட்சி ஏற்படக்கூடும் என்ற பயம் நிலவியதால் போர்வீரர்கள் நெடுஞ்சாலையில் அனைவரையும் சோதனை செய்தார்கள். பல்வேறு சோதனை சாவடிகளில் நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் எங்கள் சாமான்கள் சோதனை போடப்பட்டன. மிகச் சிறிய பொருட்கள் உட்பட எங்கள் பெட்டிகளிலிருந்து எல்லாம் வெளியே எடுக்கப்பட்டன. டொமினிக்கன் குடியரசில் எங்களுடைய முதல் அனுபவம் இதுவே.
லா ரோமானாவில் எங்களுடைய முதல் நியமனத்திற்கு செல்வதற்கு முன்பாக பல வாரங்கள் தலைநகரமான சான்டோ டொமிங்கோவில் தங்கினோம். ட்ருஜெல்லோவின் சர்வாதிகார ஆட்சியின்போது, யெகோவாவின் சாட்சிகள் கம்யூனிஸ்ட்டுகள் என்றும் அவர்கள் மிக மோசமான ஆட்கள் என்றும் பொதுமக்களுக்கு சொல்லப்பட்டிருந்தது. இதன் காரணமாக சாட்சிகள் மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டுவந்தார்கள். ஆனால் படிப்படியாக எங்களால் அந்தத் தப்பெண்ணத்தை தகர்த்துவிட முடிந்தது.
லா ரோமானாவில் சிறிது காலம் ஊழியம் செய்தபின்பு, மறுபடியுமாக வட்டார வேலையை ஆரம்பித்துவிட்டோம். பின்னர், 1964-ல் சான்டியாகோ நகரத்துக்கு மிஷனரிகளாக நியமனம் பெற்றோம். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டில் டொமினிகன் குடியரசில் ஒரு புரட்சி ஏற்பட்டது, மறுபடியுமாக நாட்டில் பதற்றம் நிலவியது. அந்தச் சண்டையின்போது அரசியல் நடவடிக்கைகளுக்கு பெயர்போன பட்டணமாகிய சான் பிரான்சிஸ்கோ டி மக்காரஸ் என்ற இடத்துக்கு மாற்றலாகிப் போனோம். இருந்தபோதிலும் எந்த இடையூறுமின்றி சுதந்திரமாக பிரசங்கித்தோம். அரசியல் குழப்பம் இருந்தபோதிலும் நாங்கள் ஒரு புதிய சபையைக்கூட ஏற்படுத்தினோம். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளின் போது தற்போது நாங்கள் இருக்கும் சான்டியாகோவுக்கு திரும்பவும் நியமிக்கப்படுவதற்கு முன்பாக இன்னும் பல இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறோம்.
இங்கே டொமினிகன் குடியரசில் செய்யப்பட்ட வேலையின்மீது யெகோவாவின் ஆசீர்வாதத்தை நிச்சயமாகவே நாங்கள் பார்த்திருக்கிறோம். 1961-ல் நாங்கள் வந்திறங்கிய போது சுமார் 600 சாட்சிகளும் 20 சபைகளுமே இருந்தன. இப்பொழுது 300-க்கும் மேற்பட்ட சபைகளில் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை ஏறக்குறைய 20,000 பிரஸ்தாபிகள் பிரசங்கிக்கிறார்கள். 1996-ல் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கையான 69,908 காட்டுகிறபடி இன்னும் அதிகமான வளர்ச்சிக்கு சாத்தியம் இருக்கிறது. பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட இது மூன்றரை மடங்கு அதிகமாகும்!
இப்பொழுது ஒரு பலத்த ஜாதி
உலகத்தின் காட்சி தொடர்ந்து மாறிக்கொண்டு வந்தபோதிலும் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கித்துவரும் செய்தி மாறாமலே இருக்கிறது. (1 கொரிந்தியர் 7:31) யெகோவா இன்னும் கடவுளாகவும் கிறிஸ்து இன்னும் ராஜாவாகவும் ராஜ்யமே இன்னும் தெளிவாக எப்போதிருந்ததைக் காட்டிலும் உலகத்துக்கு ஒரே நம்பிக்கையாகவும் இருந்து வருகிறது.
அதே சமயத்தில், ஆரிகானிலுள்ள சேலத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அந்தக் கூட்டத்தில் ஆஜராயிருந்தது முதற்கொண்டு யெகோவாவின் மக்கள் மத்தியில் மகத்தான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. திரள் கூட்டம் அல்லது திரள் கூட்டத்தார் பெரியதாகி 50 லட்சத்துக்கும் அதிகமானவர்களாக ஆகியிருக்கின்றனர். யெகோவா தம்முடைய மக்களைக் குறித்து முன்னுரைத்த விதமாகவே இது இருக்கிறது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.”—ஏசாயா 60:22.
முழுநேர ஊழியத்தில் ஏறக்குறைய 60 ஆண்டுகள் ஆனபின்பும், என்னுடைய மிஷனரி நியமிப்பில் தொடர்ந்து பிரசங்கித்தும் கற்பித்தும் வரும் சந்தோஷத்தை பெற்றிருப்பதற்காக நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். அந்த வேலையில் ஒரு பங்கைக் கொண்டிருந்து “சிறியவன்” “பலத்த ஜாதி”யாவதைக் காண்பது என்னே மகத்தான ஒரு சிலாக்கியமாக உள்ளது!
[பக்கம் 21-ன் படம்]
டொமினிகன் குடியரசில் என் மனைவியோடு