இன்று நம்பிக்கைவாதத்திற்கு வலுவான அடிப்படை
சரித்திராசிரியரும் சமூகவியலாளருமான ஹெச். ஜி. வெல்ஸ் 1866-ம் ஆண்டு பிறந்தார்; 20-ம் நூற்றாண்டின் சிந்தனையில் பலமான செல்வாக்கு செலுத்தினார். அவருடைய எழுத்துக்களின் மூலமாக, விஞ்ஞான முன்னேற்றம் எந்தளவுக்கு செல்கிறதோ அந்தளவுக்கு மகிழ்ச்சியும் சுபிட்சமுமிக்க காலம் (millennium) இருக்கும் என்ற தன்னுடைய கருத்தை விளக்கினார். தன்னுடைய கருத்தை முன்னேற்றுவிக்க அவர் அயராது உழைக்கையில், கொல்லியர் என்ஸைக்ளோப்பீடியா வெல்ஸின் “பரந்த நம்பிக்கைவாதத்தை” இவ்வாறு நினைவுபடுத்துகிறது. ஆனால், இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது அவருடைய நம்பிக்கை சிதறிப்போனதையும்கூட அது குறிப்பிடுகிறது.
“விஞ்ஞானம் நன்மைக்கு மட்டுமல்ல தீமைக்கும் துணைப் போகிறது” என்பதை வெல்ஸ் உணரத் தொடங்கியபோது, “அவருடைய நம்பிக்கை தகர்ந்துபோனது, அதோடு அவர் சந்தேகவாதத்துக்குள் வீழ்ந்துபோனார்” என்று சேம்பர்ஸ் பையோகிராபிக்கல் டிக்ஷ்னரி குறிப்பிடுகிறது. ஏன் இவ்வாறு நடந்தது?
வெல்ஸின் திடநம்பிக்கையும் நம்பிக்கைவாதமும் மனித சாதனைகளிலேயே முழுமையாக சார்ந்திருந்தன. அவருடைய இலட்சிய உலகை மனிதவர்க்கம் கொண்டுவரத் தவறியதை உணர்ந்தபோது, அவருக்கு எந்தவொரு பிடிமானமும் இருக்கவில்லை. நம்பிக்கையற்ற மனநிலை எளிதில் சந்தேகவாதமாக மாறியது.
இன்றும், பெரும்பாலான மக்கள் இதே போன்ற காரணத்துக்காக இதே அனுபவத்தைக் கொண்டிருக்கின்றனர். இளமையில் நம்பிக்கையோடு துள்ளித்திரியும் இவர்கள் வயதாகும்போது சந்தேகவாதத்துக்குள் முடங்கிப்போகின்றனர். சில இளைஞரும்கூட இயல்பான வாழ்க்கையாக மக்கள் கருதுவதை விட்டுவிட்டு, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், வரைமுறையற்ற பாலுறவு, இன்னும் பிற அழிவுக்குரிய வாழ்க்கைப்பாணியில் ஈடுபடுகின்றனர். இதற்குரிய பதிலென்ன? பின்வருகிற பைபிள் கால உதாரணங்களை கவனித்து—கடந்த காலத்திலும், இன்றும், எதிர்காலத்திலும்—நம்பிக்கைவாதத்திற்கு என்ன அடிப்படை இருக்கிறது என்பதைப் பாருங்கள்.
ஆபிரகாமின் நம்பிக்கைவாதம் பலனளிக்கப்பட்டது
பொ.ச.மு. 1943-ம் ஆண்டில், ஆபிரகாம், ஆரான் தேசத்தைவிட்டு புறப்பட்டு, ஐபிராத்து நதியைக் கடந்து, கானான் தேசத்துக்குள் நுழைந்தார். ஆபிரகாம், ‘விசுவாசிக்கிற யாவருக்கும் . . . தகப்பன்’ என்று விவரிக்கப்பட்டிருக்கிறார்; அவர் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி வகித்தார்!—ரோமர் 4:11.
ஆபிரகாமோடுகூட, அனாதையாகிவிட்ட அவருடைய சகோதரரின் மகன் லோத்துவும் அவருடைய குடும்பத்தாரும் சேர்ந்துசென்றனர். பின்பு, பஞ்சம் அத்தேசத்தை பீடித்தபோது, இந்த இரண்டு குடும்பங்களும் எகிப்துக்கு சென்றன; சிறிதுகாலம் கழித்து இரு குடும்பத்தாருமே அங்கிருந்து திரும்பிவந்தனர். அதற்குள்ளாக, ஆபிரகாமும் லோத்தும் ஏராளமான ஆஸ்தியையும், அதோடு மந்தைகளையும் மிருகஜீவன்களையும் சம்பாதித்திருந்தனர். அவர்களுடைய மேய்ப்பர்களுக்கிடையே சண்டை மூண்டபோது, ஆபிரகாம் அதை தீர்ப்பதற்கு முன்முயற்சி எடுத்து இவ்வாறு சொன்னார்: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்.”—ஆதியாகமம் 13:8, 9.
ஆபிரகாம் மூத்தவராக இருந்ததால், தனக்கு சாதகமான விதத்தில் காரியங்களை செய்திருக்கலாம்; லோத்தும் தன்னுடைய சித்தப்பாவின் மேலிருந்த மரியாதையால் ஆபிரகாமின் தெரிவுக்கு விட்டுக்கொடுத்திருக்கலாம். மாறாக, ‘லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டான்.’ இத்தகைய தெரிவின் காரணமாக, லோத்து நம்பிக்கையுடன் இருப்பதற்கு எல்லா காரணமும் இருந்தது. ஆனால், ஆபிரகாமைப் பற்றியென்ன?—ஆதியாகமம் 13:10, 11.
ஏதோ ஓர் அசட்டுத் தைரியத்தில் ஆபிரகாம், தன்னுடைய குடும்பத்தின் நலனை அபாயத்துக்குட்படுத்தினாரா? இல்லை, ஆபிரகாமின் நம்பிக்கையான மனநிலையும் பெருந்தன்மையான போக்கும் ஏராளமான ஆசீர்வாதங்களை கொண்டுவந்தன. யெகோவா ஆபிரகாமிடம் இவ்வாறு சொன்னார்: ‘உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுப்பேன்.’—ஆதியாகமம் 13:14, 15.
ஆபிரகாமின் நம்பிக்கைக்கு வலுவான அடிப்படை இருந்தது. “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் [ஆபிரகாமுக்குள்] ஆசீர்வதிக்கப்படு[வதற்காக]” அவர் மூலம் பெரிய ஜனக்கூட்டத்தை உண்டாக்கப் போவதாக கடவுள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் அது இருந்தது. (ஆதியாகமம் 12:2-4, 7) “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று” அறிந்திருப்பதால் நாமும் நம்பிக்கையுடன் இருப்பதற்கு காரணம் உள்ளது.—ரோமர் 8:28.
நம்பிக்கைவாதிகளான இரண்டு வேவுகாரர்கள்
நானூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து, இஸ்ரவேல் தேசத்தார் “பாலும் தேனும் ஓடுகிற” கானான் தேசத்துக்குள் நுழைவதற்கு தயாரான நிலையில் இருந்தனர். (யாத்திராகமம் 3:8; உபாகமம் 6:3) மோசே, ‘அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், அவர்கள் இன்னவழியாக அதில் சென்று, இன்ன பட்டணங்களுக்குப் போகலாம் என்று அவர்களுக்கு மறுசெய்தி கொண்டுவரவும்’ 12 பிரபுக்களை அனுப்பினார். (உபாகமம் 1:22; எண்ணாகமம் 13:2) அந்நாட்டின் செழிப்பைக் குறித்து வேவு பார்த்த 12 ஆட்களுமே ஒருமித்த கருத்துடையவர்களாய் இருந்தனர்; ஆனால், அவர்களில் 10 பேரோ மக்களுடைய மனதில் பயத்தை கிளப்பிய கெட்ட அறிக்கையை கொடுத்தனர்.—எண்ணாகமம் 13:31-33.
மறுபட்சத்தில் யோசுவாவும் காலேபும் நம்பிக்கையான செய்தியை மக்களுக்கு அளித்தனர்; அதோடு அவர்களுடைய பயத்தைத் தணிக்க தங்களாலான எல்லாவற்றையும் செய்தனர். அவர்களுடைய வார்த்தையும் அறிக்கையும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு அவர்களை திரும்பவும் கொண்டு செல்வதாக யெகோவா தேவன் சொல்லியிருந்த வார்த்தையை நிறைவேற்றுவதற்கு அவருக்கு இருந்த திறமையின்மீது முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்தியது; ஆனால், அது பலனளிக்கவில்லை. அதற்கு பதிலாக, “அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்.”—எண்ணாகமம் 13:30; 14:6-10.
யெகோவாவின் மேல் நம்பிக்கை வைக்கும்படி மோசே ஜனங்களை துரிதப்படுத்தினார்; ஆனால், அவர்கள் அவருக்கு செவிகொடுக்கவில்லை. தங்களுடைய நம்பிக்கையற்ற மனநிலையில் விடாப்பிடியாய் இருந்ததால், முழு தேசமும் 40 ஆண்டுகளுக்கு வனாந்தரத்தில் அலைந்து திரிய வேண்டியதாயிற்று. 12 வேவுகாரரில், யோசுவாவும் காலேபும் மட்டுமே தங்களுடைய நம்பிக்கையான மனநிலையால் ஆசீர்வாதங்களை அனுபவித்தனர். இதில் எது அடிப்படை பிரச்சினையாக இருந்தது? ஜனங்கள் தங்களுடைய சொந்த ஞானத்தில் சார்ந்திருந்ததால் வந்த விசுவாசக்குறைவே.—எண்ணாகமம் 14:26-30; எபிரெயர் 3:7-12.
யோனாவின் ஊசலாடுகிற மனம்
யோனா பொ.ச.மு. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். இரண்டாம் யெரொபெயாமின் ஆட்சியின், ஏதோவொரு காலப்பகுதியில், இஸ்ரவேலின் பத்துக் கோத்திரத்திற்கு யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசியாக சேவித்தார் என்று பைபிள் அவரைப் பற்றி சொல்கிறது. ஆனாலும்கூட நினிவே பட்டணத்தின் மக்களுக்கு எச்சரிப்பின் செய்தியை கொண்டு செல்லும் வேலையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். யோனா “அவ்விடம் விட்டு ஓடிப்போவது நல்லதென்றும்” யோப்பா பட்டணத்துக்கு போய்விடலாம் என்றும் “நினைத்ததாக” சரித்திராசிரியரான ஜோசிபஸ் கூறுகிறார். அங்கிருந்து அவர் தர்ஷீஸ் பட்டணத்துக்கு, அதாவது நவீன கால ஸ்பெய்னுக்கு செல்ல கப்பல் ஏறினார். (யோனா 1:1-3) யோனா இந்த வேலையை ஏன் இத்தகைய அவநம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்த்தார் என்பது யோனா 4:2-ல் விளக்கப்பட்டிருக்கிறது.
கடைசியாக, யோனா தன்னுடைய பொறுப்பை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்; ஆனால், நினிவேயின் மக்கள் மனந்திரும்பியபோது அவர் கோபமடைந்தார். ஆகவே, யோனா இளைப்பாறிக் கொண்டிருந்த ஆமணக்கு செடியை பட்டுப்போகச் செய்து அழிப்பதன் மூலம் இரக்கத்தைப் பற்றி ஒரு சிறந்த பாடத்தை யெகோவா அவருக்கு கற்பித்தார். (யோனா 4:1-8) செடி பட்டுப்போனதை நினைத்து வருத்தப்பட்ட யோனாவின் மனம் நினிவே பட்டணத்திலிருந்த “வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத” 1,20,000 மனிதர்களைக் குறித்ததிலும் அவ்வாறே உணருவதற்கு வழிநடத்தியிருக்கவேண்டும்.—யோனா 4:11.
யோனாவின் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? பரிசுத்த சேவை சந்தேகவாதத்திற்கு எவ்விதத்திலும் இடமளிப்பதில்லை. நாம் யெகோவாவின் வழிநடத்துதலை உணர்ந்து, முழு நம்பிக்கையுடன் பின்பற்ற முயலுவோமானால், வெற்றி பெறுவோம்.—நீதிமொழிகள் 3:5, 6.
இன்னல்களின் மத்தியிலும் நம்பிக்கைவாதம்
தாவீது ராஜா இவ்வாறு அறிவித்தார்: “பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடு செய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.” (சங்கீதம் 37:1) இன்று நம்மைச் சுற்றி அநீதியும் நேர்மையின்மையும் மலிந்து கிடப்பதால் இது உண்மையில் ஞானமான ஆலோசனை.—பிரசங்கி 8:11.
நாம் அக்கிரமக்காரரைப் பார்த்து பொறாமைப்படாவிட்டாலும்கூட, ஒன்றுமறியாத மக்கள் அவர்களால் துன்புறுகையில் அல்லது நாம்தாமே அவர்களால் அநியாயமாக நடத்தப்படுகையில், நம்பிக்கை இழப்பது மிக எளிது. அத்தகைய அனுபவங்கள் மனச்சோர்வையோ நம்பிக்கையற்ற மனநிலையையோ நம்மில் வளரச் செய்யலாம். நாம் அவ்விதம் உணர்ந்தால் என்ன செய்யலாம்? அக்கிரமக்காரர் தங்களுக்கு தண்டனை ஒருபோதும் வராது என்று மெத்தனமாக எண்ணிக்கொள்ள முடியாது என்பதை நாம் முதலில் மனதில் கொள்ளவேண்டும். சங்கீதம் 37-ம் அதிகாரம் வசனம் 2 நமக்கு இவ்விதமாக உறுதியளிக்கிறது: “அவர்கள் [அக்கிரமக்காரர்] புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.”
கூடுதலாக, நாம் தொடர்ந்து நன்மை செய்து நம்பிக்கைவாதிகளாக நிலைத்திருந்து, யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். சங்கீதக்காரன் இவ்விதமாக தொடர்கிறார்: “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை.”—சங்கீதம் 37:27, 28.
மெய் நம்பிக்கைவாதம் வெற்றிபெறுகிறது!
அப்படியென்றால், நம்முடைய எதிர்காலத்தைப் பற்றியதென்ன? “சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளை” பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் நமக்கு தெரிவிக்கிறது. அவற்றில், யுத்தத்தை அர்த்தப்படுத்தும் சிவப்பு நிறக் குதிரையின் சவாரியாளன், “சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப்போடு[வதாக]” காட்டப்படுகிறது.—வெளிப்படுத்துதல் 1:1; 6:4.
முதல் உலகப் போர் நடந்தபோது, அதுவே கடைசி மிகப்பெரிய யுத்தமாக இருக்கும் என்ற பிரபலமான, நம்பிக்கைவாத கருத்து பிரிட்டனில் நிலவியது. 1916-ல் பிரிட்டிஷ் அரசியல் அறிஞர் டேவிட் லாய்ட் ஜார்ஜ் இவ்விஷயத்தில் மிகவும் எதார்த்தமாக இருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “இந்த யுத்தமும், அடுத்த யுத்தத்தைப் போன்று யுத்தத்தை ஒழிப்பதற்கான யுத்தமே.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) அவர் சொன்னது சரியே. இரண்டாம் உலகப் போர், பெருமளவில் அழிப்பதற்கான அதிக கொடூரமான செயல்முறைகளின் உற்பத்தியை அதிகரிக்கவே செய்தது. அதிலிருந்து 50-க்கும் அதிகமான ஆண்டுகள் கழித்து இன்றும்கூட, யுத்தம் ஒழிக்கப்படுவதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை.
அதே வெளிப்படுத்துதல் புத்தகத்தில்—பஞ்சம், கொள்ளைநோய், மரணம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும்—மற்ற குதிரை சவாரியாளர்களைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். (வெளிப்படுத்துதல் 6:5-8) இக்காலத்துக்குரிய அடையாளங்களின் கூடுதலான அம்சங்களே இவை.—மத்தேயு 24:3-8.
இவை சந்தேகவாதத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களா? ஒருகாலும் இல்லை, ஏனெனில், “ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்” என்றும் அத்தரிசனம் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 6:2) இங்கே பரலோக அரசராகிய இயேசு கிறிஸ்து, எல்லாவிதமான துன்மார்க்கத்தையும் ஒழித்துக்கட்டி, உலகமுழுவதும் சமாதானத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டுபவராய் சவாரி செய்வதை நாம் காண்கிறோம். a
நியமிக்கப்பட்ட அரசராக, இயேசு கிறிஸ்து பூமியிலிருந்தபோது, இந்த அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படி தம்முடைய சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ‘பரமண்டல’ அல்லது கர்த்தருடைய ஜெபத்தை சொல்வதற்கு நீங்களும்கூட ஒருவேளை கற்பிக்கப்பட்டிருப்பீர்கள். அதில் கடவுளுடைய ராஜ்யம் வருவதற்கும், அவருடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல பூமியிலும் செய்யப்படுவதற்கும் நாம் ஜெபிக்கிறோம்.—மத்தேயு 6:9-13.
இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையை ஒட்டுப் போட முயலுவதற்கு பதிலாக, யெகோவா தேவன் தம்முடைய மேசியானிய அரசராகிய கிறிஸ்து இயேசுவைக் கொண்டு செயல்படுபவராக, அதை முற்றிலுமாக நீக்கிப் போடுவார். அதனிடத்தில், “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை” என்று யெகோவா சொல்கிறார். பரலோக ராஜ்ய அரசாங்கத்தில், பூமி மனிதவர்க்கத்துக்கு அமைதிதவழுகிற, மகிழ்ச்சியான வீடாக ஆகும்; அங்கே வாழ்க்கையும் வேலையும் நிரந்தர சந்தோஷமுள்ளவையாக இருக்கும். யெகோவா சொல்கிறார்: “நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; . . . நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:17-22) எதிர்காலத்துக்கான உங்களுடைய நம்பிக்கையை தவறிப்போகாத இந்த வாக்குறுதியில் வைப்பீர்களென்றால்—இன்றும் என்றும்—நம்பிக்கைவாதிகளாக இருப்பதற்கு உங்களுக்கு எல்லா காரணமும் இருக்கும்!
[அடிக்குறிப்பு]
a இத்தரிசனத்தின் கூடுதலான விளக்கத்திற்காக, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில் அதிகாரம் 16-ஐத் தயவுசெய்து பாருங்கள்.
[பக்கம் 4-ன் படம்]
ஹெச். ஜி. வெல்ஸ்
[படத்திற்கான நன்றி]
Corbis-Bettmann