ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“உம்முடைய மக்கள் தங்களை மனப்பூர்வமாய் அளிப்பார்கள்”
வலிமை வாய்ந்த சீரிய நாட்டின் படைத்தலைவர் நாகமான் குஷ்டரோகியாயிருக்கிறார். இந்த அருவருப்பான வியாதியை குணப்படுத்தாமல் விட்டால் அது உருக்குலைவிலும் மரணத்திலும் விளைவடையலாம். நாகமான் என்ன செய்யப் போகிறார்? நாகமானின் வீட்டில், “இஸ்ரவேல் தேசத்திலிருந்து . . . சிறைபிடித்துக்கொண்டு” வரப்பட்ட ஒரு சிறு பெண் இருக்கிறாள். எலிசா தீர்க்கதரிசியால்தான் நாகமானை சுகப்படுத்த முடியுமென்ற தன் கருத்தை அவள் தைரியமாக தெரிவிக்கிறாள்.—2 இராஜாக்கள் 5:1-3.
அவளுடைய தைரியமான நிலைநிற்கையால், நாகமான் எலிசாவை நாடிச் சென்று குணமடைகிறார். இன்னும் கூடுதலாக, நாகமான் யெகோவாவின் வணக்கத்தாராகவும் ஆகிறார்! பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த அனுபவம் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் நடைபெற்றது. (2 இராஜாக்கள் 5:4-15) இன்றும், ராஜ்ய அக்கறைகளின் சார்பான தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து தைரியமாக பேசுவதற்கு அநேக இளைஞர்களுக்கு இதைப் போன்ற தைரியம் இருக்கிறது. மொஸாம்பிக்கிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் இதை உறுதிப்படுத்துகிறது.
ஆறு வயது நூனூ நற்செய்தியின் பிரஸ்தாபி, இன்னும் முழுக்காட்டப்படவில்லை. அவன் பிரஸ்தாபியாவதற்கு முன்பாகவேகூட, அண்டை அயலில் வசிக்கிற பிள்ளைகளை கூட்டி வைத்து, ஒரு ஜெபம் செய்து, என்னுடைய பைபிள் கதை புத்தகம் என்ற பிரசுரத்தை பயன்படுத்தி பைபிளைக் கற்பித்தான்.
நூனூ அநேக சமயங்கள் சனிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து தன்னுடைய குடும்பத்தாரிடம், “நாம இன்னைக்கு வெளி ஊழியத்துக்கு போகணும்” என்று நினைப்பூட்டுகிறான். ஊழியத்தினிடமான அவனுடைய வைராக்கியம் மற்ற வழிகளிலும்கூட வெளிப்படுத்தப்படுகிறது. மபூடோவில் அவனுடைய பெற்றோருடன் தெரு ஊழியத்திற்கு செல்லுகையில், நூனூ பெரும்பாலும் தனியாகவே சென்று மக்களை அணுகுகிறான். அத்தகைய ஒரு சமயத்தில், ஒரு தொழில் அதிபர் அவனிடம் இவ்வாறு கேட்டார்: “நீ ஏன் இந்தப் பத்திரிகைகள விக்கிறே?” நூனூ சொன்னான்: “நான் இந்தப் பத்திரிகைகள விக்கலேங்க, ஆனா பிரசங்க வேலைக்கு பண உதவி செய்யறதுக்கான நன்கொடைகளை வாங்கிக்கிறேன்.” அந்த தொழில் அதிபர் இவ்வாறு பதிலளித்தார்: “எனக்கு இதுல விருப்பமில்லேனாலும்கூட, உன்னுடைய மனநிலையும் திறமையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த வேலைக்கான நன்கொடை கொடுக்க விரும்புறேன்.”
இன்னொரு சமயத்தில், நூனூ தெருவில் ஒரு மனிதனை அணுகி அவரிடம் உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்? என்ற புத்தகத்தை அளித்தான். அந்த மனிதர் கேட்டார்: “அங்கிருக்கிற அந்தப் பள்ளிக்கூடத்துக்கு நீ போகறதில்லையா?” நூனூ இவ்வாறு பதிலளித்தான்: “போறேனே, நான் அந்தப் பள்ளிக்கூடத்துல தான் படிக்கிறேன். ஆனா இன்னைக்கு இந்தப் புஸ்தகத்திலிருந்து ஒரு முக்கியமான செய்தியை சொல்றேன். இந்தப் புஸ்தகத்திலுள்ள படத்தில இருக்கிற மாதிரி, கடவுள் கொண்டுவரப் போகிற புதிய உலகத்தில நாம வாழலாம்னு இது காட்டுது.” தான் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் தன்னுடைய பள்ளியிலுள்ள ஒரு ஆசிரியர் என்பதை நூனூ அறியவில்லை. அந்த ஆசிரியர் புத்தகத்தை பெற்றுக் கொண்டதோடு, இப்போது நூனூவிடமிருந்து காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும்கூட தவறாமல் பெற்றுக் கொள்கிறார்.
நூனூ ஏன் பிரசங்க வேலை செய்ய விரும்புகிறான் என்று கேட்டபோது, அவன் இவ்வாறு பதிலளிக்கிறான்: “யெகோவா தேவனைப் பத்தியும் அவரோட மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பத்தியும் ஆட்கள் கிட்ட பேசவும், அவங்களைப் பத்தி சொல்லிக் கொடுக்கவும் ஆசைப்படறேன்.” அவன் இவ்வாறும் சொல்கிறான்: “மக்கள் நான் பேசறத கேட்க விரும்பலேனாகூட, அதுக்காக நான் எதுக்கு வருத்தப்படணும்.”
உலகமுழுவதும் நூனூவைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசவும் கற்றுக் கொடுக்கவும் ‘தங்களை மனப்பூர்வமாய் அளிக்கிறார்கள்.’ (சங்கீதம் 110:3, NW) ஆனால், இது தற்செயலாக நடப்பதில்லை. தங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி சிசுப்பருவத்திலிருந்தே கற்றுக் கொடுத்து, ஊழியத்தில் நல்ல முன்மாதிரி வைத்து, ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் வைக்கும் பெற்றோர் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள்.