குஷ்டரோகியாக என் வாழ்க்கை—மகிழ்ச்சியுள்ளதும் ஆவிக்குரிய பிரகாரமாய் ஆசீர்வதிக்கப்பட்டதும்
ஐசாயா ஆடக்போனே சொன்னபடி
நான் அக்கூரி, நைஜீரியாவில் வளர்ந்தேன். என் குடும்பத்தார், சேனைக்கிழங்குகள், வாழைப் பழங்கள், மரவள்ளிக்கிழங்குகள், கொக்கோ ஆகியவற்றை பயிரிட்டனர். என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப என் அப்பா விரும்பவில்லை. அவர் இவ்வாறு என்னிடம் சொன்னார்: “நீ ஒரு விவசாயி. சேனைக்கிழங்குகளை பயிர்செய்ய படிச்சு பட்டம் வாங்கியிருக்கியான்னு யாரும் உன்னை கேட்கப்போறதில்ல.”
இருப்பினும், நான் வாசிக்கக் கற்றுக்கொள்ளும்படி விரும்பினேன். சாயங்காலங்களில், ஒரு வீட்டில் ஒரு தனிப்பட்ட உபாத்தியாயர் சில பிள்ளைகளுக்குப் பாடம் கற்பித்துவந்தார்; அதை ஜன்னல் பக்கத்தில் நின்று கவனிப்பேன். அது 1940-ஆம் வருடம்; எனக்கு ஏறக்குறைய 12 வயதிருக்கும். அந்தப் பிள்ளைகளின் தகப்பன் என்னைப் பார்த்தால், திட்டி துரத்திவிடுவார். ஆனால் நான் விடாது போய்கொண்டேயிருந்தேன். சில சமயங்களில் அந்த உபாத்தியாயர் வராதபோது நான் மெள்ள பதுங்கி உள்ளேசென்று, அந்தப் பிள்ளைகளின் புத்தகங்களை அவர்களோடு சேர்ந்து பார்ப்பேன். தங்கள் புத்தகங்களை நான் கடன்வாங்கிச் செல்ல அவர்கள் சிலசமயங்களில் அனுமதிப்பார்கள். அவ்வாறே நான் வாசிக்கக் கற்றேன்.
கடவுளுடைய ஜனங்களை சேர்ந்துகொண்டேன்
காலப்போக்கில், ஒரு பைபிளை வாங்கி, படுக்கைக்குப் போவதற்கு முன்பாக அதைத் தவறாமல் வாசித்து வந்தேன். இயேசுவின் சீஷர்கள், மனிதரால் பகைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள் என்று காட்டுகிற, மத்தேயு 10-ம் அதிகாரத்தை ஒரு சாயங்காலத்தின்போது வாசித்தேன்.
யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வந்ததும் மோசமாக நடத்தப்பட்டதும் என் நினைவுக்கு வந்தது. இயேசு குறிப்பிட்டு பேசின ஜனங்கள் இவர்களாக இருக்கலாமென எனக்குத் தோன்றினது. அடுத்த தடவை அந்தச் சாட்சிகள் வந்தபோது, ஒரு பத்திரிகையை அவர்களிடமிருந்து வாங்கினேன். நான் அவர்களோடு கூட்டுறவுகொள்ள தொடங்கினபோது, கேலி பரியாசத்திற்கு ஆளானேன். எனினும், எவ்வளவு அதிகமாக என்னைத் தடைசெய்ய ஆட்கள் முயற்சி செய்தார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக உறுதியாய், நான் உண்மையான மதத்தைக் கண்டடைந்தேன் என்று நம்பி மகிழ்ச்சியடைந்தவனாக ஆனேன்.
சாட்சிகளைப்பற்றி உண்மையில் என்னைக் கவர்ந்தது என்னவென்றால், நான் வசித்தப் பகுதியிலுள்ள மற்ற மதத் தொகுதிகளைப்போல் அவர்கள், தங்கள் வணக்கத்தை அவ்விடத்து புறமத பழக்கவழக்கங்களோடும் பாரம்பரியங்களோடும் கலப்படம் செய்யவில்லை என்பதே. உதாரணமாக, என் குடும்பத்தார் ஆங்கிலிக்கன் சர்ச்சுக்குச் சென்றபோதிலும், என் அப்பா யொருபா தெய்வமாகிய ஓகூனுக்கு ஒரு கோயிலை கட்டியிருந்தார்.
என் அப்பா இறந்த பின்பு, அந்தக் கோயில் எனக்கு வந்துசேர வேண்டியிருந்தது. உருவ வணக்கத்தை பைபிள் கண்டனம் செய்கிறதென்று நான் அறிந்திருந்ததால், அதை ஏற்க எனக்கு இஷ்டமில்லை. யெகோவாவின் உதவியால் ஆவிக்குரியபிரகாரமாய் படிப்படியாய் முன்னேறி, டிசம்பர் 1954-ல் முழுக்காட்டப்பட்டேன்.
குஷ்டரோகத்தால் தாக்கப்படுதல்
அந்த ஆண்டின் தொடக்கத்தின்போது, என் பாதங்கள் வீங்கியும் உணர்ச்சியற்றும் இருப்பதை கவனித்தேன். சூடான எரிதழலின்மீது கால் வைத்தால், சூடு உறைக்கவில்லை. சிறிது காலத்திற்குப் பின்பு, சிவந்த சீழ்ப்புண்கள் என் நெற்றியிலும் உதடுகளிலும் தோன்றின. என்ன பிரச்சினையென்று நானோ என் குடும்பத்தாரோ அறியவில்லை; அது தோல்படை என்று நாங்கள் நினைத்தோம். சுகமடைவதற்காக, இயற்கை மருத்துவர்கள் 12 பேரிடம் சென்றேன். கடைசியாக அவர்களில் ஒருவர், அது குஷ்டரோகம் என்று எங்களிடம் சொன்னார்.
அது எவ்வளவாய்த் திடுக்கிடச் செய்தது! நான் நிம்மதி இழந்தேன்; தூக்கம் வரவில்லை. இரவில் பயங்கரமான கனவுகள் உண்டாயிற்று. ஆனால், பைபிள் சத்தியத்தைப் பற்றிய என் அறிவும் யெகோவாவின்மீது சார்ந்திருந்ததும் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்கும்படி எனக்கு உதவிசெய்தன.
பூசாரியினிடம் சென்று பலிகளைச் செலுத்தினால் சுகமடைவேன் என்று ஆட்கள் என் அம்மாவிடம் சொன்னார்கள். அத்தகைய செயல் யெகோவாவுக்குப் பிரியமாயிராது என்று நான் அறிந்து, அவ்வாறு செல்வதற்கு மறுத்துவிட்டேன். இந்தக் காரியத்தில் நான் மன உறுதியோடு இருந்ததை உணர்ந்து, என் அம்மாவின் நண்பர்கள், ஒரு கோலா கொட்டையால் என் நெற்றியை தொட்டு, பின்பு அதை எனக்காக பலிசெலுத்த பூசாரியினிடம் கொடுக்கலாம் எனவும் அவர்களுக்கு யோசனை கூறினார்கள். அதில் எந்தப் பங்கும் கொள்ள நான் விரும்பவில்லை; என் தாயினிடமும் அவ்வாறே சொன்னேன். புறதெய்வ மதத்தில் என்னை உட்படுத்துவதற்கு எடுத்த தன் முயற்சிகளை கடைசியாக நிறுத்திவிட்டார்கள்.
சிகிச்சைபெற மருத்துவமனைக்கு நான் செல்வதற்குள், என் குஷ்டரோகம் முற்றிவிட்டது. என் உடல் முழுவதிலும் புண்கள் இருந்தன. மருத்துவமனையில் எனக்கு மருந்துகள் கொடுத்தார்கள், படிப்படியாய் என் தோல் இயல்பான நிலைக்குத் திரும்பிற்று.
நான் இறந்துவிட்டதாக நினைத்தார்கள்
ஆனால் என் பிரச்சினைகள் அதோடு முடிவடையவில்லை. நோயால் என் வலது பாதம் மோசமாய்த் தாக்கப்பட்டு, 1962-ல் அதை வெட்டி எடுத்துவிட வேண்டியதாயிற்று. அந்த அறுவை சிகிச்சைக்குப் பின், மருத்துவ சிக்கல்கள் ஏற்பட்டன. நான் உயிரோடு இருப்பேன் என்று மருத்துவர்கள் எதிர்பார்க்கவில்லை. வெள்ளைக்கார மிஷனரி பாதிரி ஒருவர், இறுதி சடங்குகளை நிறைவேற்றுவதற்கு வந்தார். நான் பேசுவதற்கு முடியாமல் மிக பலவீனமாக கிடந்தேன்; இருப்பினும், நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன் என ஒரு நர்ஸ் அவரிடம் சொன்னார்.
அந்தப் பாதிரி என்னிடம் இவ்வாறு கேட்டார்: “நீ பரலோகத்திற்குச் செல்வதைச் சாத்தியமாக்கும்படி, ஒரு கத்தோலிக்கனாக மாறிவிட விரும்புகிறாயா?” இது, மனதுக்குள் சிரிக்கும்படி என்னைச் செய்வித்தது. பதில் சொல்வதற்கான பலத்திற்காக நான் யெகோவாவிடம் ஜெபித்தேன். மிகுந்த முயற்சியோடு சமாளித்து “இல்லை!” என்றேன். அந்தப் பாதிரி திரும்பிச் சென்றுவிட்டார்.
நான் இறந்துவிட்டதாக மருத்துவ அலுவலர் குழு எண்ணுமளவுக்கு என் நிலைமை மோசமாகியது. அவர்கள் என் முகத்தை ஒரு போர்வையால் மூடினார்கள். எனினும், நான் இறந்துவிட்டதாக முதலில் ஒரு மருத்துவரோ நர்ஸோ எழுத்துமூலம் அறிவிக்க வேண்டியதாக இருந்ததால், பிணமனைக்கு அவர்கள் என்னைக் கொண்டுபோகவில்லை. டாக்டர் எவரும் வேலைக்கு வரவில்லை, நர்ஸுகள் எல்லாரும் ஒரு விருந்துக்குப் போய்விட்டிருந்தனர். ஆகையால் அந்த இரவு, மருத்துவமனைப் பகுதியில் என்னை கிடத்திவிட்டுச் சென்றனர். அடுத்தநாள் காலையில், மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிட்டு சுற்றிவருகையில், நான் இறந்தவனாகக் கருதி முகம் மூடப்பட்டு இன்னும் இருந்ததால் என் படுக்கை பக்கம் யாரும் வரவில்லை. கடைசியாக, போர்வைக்கு அடியில் இருந்த “பிணம்” அசைவதை எவரோ கவனித்தார்!
எப்படியோ தப்பித்தேன்; டிசம்பர் 1963-ல், தென்மேற்கு நைஜீரியாவில் இருந்த அபியோகுட்டா குஷ்டரோக மருத்துவமனை தனிக்குடியிருப்புத் தொகுதிக்கு மாற்றப்பட்டேன். அப்போது முதற்கொண்டு அங்கேயே வாழ்ந்துவருகிறேன்.
என் பிரசங்க ஊழியத்திற்கு எதிர்ப்பு
அந்தத் தனிக்குடியிருப்புக்கு நான் போய்ச் சேர்ந்தபோது அதில் ஏறக்குறைய 400 குஷ்டரோகிகள் இருந்தார்கள்; நான் மாத்திரமே சாட்சியாக இருந்தேன். சங்கத்திற்கு எழுதினேன், அவர்கள் உடனடியாக பதிலளித்து, என்னைச் சந்திக்கும்படி அக்கோமோஜே சபைக்கு தகவல் கொடுத்தனர். ஆகவே சகோதரரோடு தொடர்பில்லாமல் நான் ஒருபோதும் இல்லை.
அந்தத் தனிக்குடியிருப்புக்கு நான் போய்ச் சேர்ந்தவுடன் பிரசங்கிக்கத் தொடங்கினேன். அவ்விடத்து மதகுரு அதை விரும்பவில்லை; அந்தக் குடியிருப்பின் பொறுப்பாளராக இருந்த அதிகாரியினிடம் என்னைப் பற்றி புகார் செய்தார். அந்த நலத்துறை அதிகாரி ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு முதியவராக இருந்தார். பைபிளைப் போதிப்பதற்கு பள்ளிப் படிப்போ தகுதிச் சான்றிதழோ எனக்கு இல்லாததால் அவ்வாறு செய்ய எனக்கு உரிமை இல்லை என்று அவர் என்னிடம் சொன்னார்; நான், தகுதிபெற்றிராததனால் ஜனங்களுக்குத் தவறாகப் போதிப்பேன் என்றும், நான் பிடிவாதமாக தொடர்ந்தால், அந்தத் தனிக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டு மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுவேன் என்றும் சொன்னார். நான் பதில் எதுவும் சொல்ல அவர் அனுமதிக்கவில்லை.
அடுத்தபடியாக, ஒருவரும் என்னோடுகூட பைபிள் படிக்கக்கூடாது என்று கட்டளையிட்டார். இதன் விளைவாக, அக்கறை காட்டியவர்கள் என்னிடம் வருவதை நிறுத்திக்கொண்டார்கள்.
இந்தக் காரியத்தை ஜெபத்தில் யெகோவாவிடம் நான் எடுத்துச் சென்று, ஞானத்திற்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கேட்டேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை, அந்தத் தனிக்குடியிருப்பில் இருந்த பாப்டிஸ்ட் சர்ச்சுக்குச் சென்றேன்; எனினும் அதன் மத ஆராதனைகளில் கலந்துகொள்ளவில்லை. அந்த ஆராதனையின்போது, அங்கிருப்போர் கேள்விகள் கேட்பதற்கான ஒரு சமயம் இருந்தது. நான் என் கையைத் தூக்கி இவ்வாறு கேட்டேன்: “நல்ல ஜனங்கள் எல்லாரும் பரலோகத்திற்குச் செல்கிறார்கள், கெட்ட ஜனங்கள் எல்லாரும் வேறு ஏதோ இடத்திற்குச் செல்கிறார்கள் என்றால், கடவுள் பூமியைக் குடியிருப்புக்காக உண்டாக்கினார் என்று ஏசாயா 45:8 ஏன் சொல்லுகிறது?”
சபையில் மிகுதியாக முணுமுணுவென்று பேச்சு இருந்தது. கடைசியாக, அந்த மிஷனரி பாதிரி, கடவுளுடைய வழிகளை நாம் கண்டறிய முடியாது என்றார். அப்போது, 1,44,000 பேர் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்றும், பொல்லாதவர்கள் அழிந்துபோவார்கள் என்றும் நீதியுள்ள ஜனங்கள் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் காட்டுகிற வேதவசனங்களை வாசிப்பதன்மூலம் என் சொந்த கேள்விக்கு நானே பதில் அளித்தேன்.—சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 14:1, 4.
உண்மையை உணர்ந்து போற்றுவோராய் அந்தப் பதிலுக்கு எல்லாரும் கைதட்டினார்கள். அப்போது அந்தப் பாதிரி இவ்வாறு சொன்னார்: “மறுபடியும் கைதட்டுங்கள், ஏனெனில் இவர் உண்மையில் பைபிளை அறிந்திருக்கிறார்.” அந்த ஆராதனைக்குப் பின், சிலர் என்னிடம் வந்து: “பாதிரியாரைப் பார்க்கிலும் உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறதே!” என்று சொன்னார்கள்.
என்னை வெளியேற்றுவதற்கான வற்புறுத்தல் தொடருகிறது
அது பேரளவான துன்புறுத்துதலைக் குறைத்தது, ஆட்கள் பைபிள் படிப்பதற்கு மறுபடியும் என்னோடு சேர்ந்தனர். எனினும், எதிரிகள் இருந்தனர், அவர்கள் என்னை வெளியேற்றும்படி நலத்துறை அதிகாரியை வற்புறுத்தினார்கள். அந்தச் சர்ச் ஆராதனை நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் சென்ற பின், அவர் என்னை அழைத்து இவ்வாறு சொன்னார்: “நீ ஏன் தொடர்ந்து பிரசங்கிக்கிறாய்? என் நாட்டிலும் யெகோவாவின் சாட்சிகளை ஜனங்கள் விரும்புகிறதில்லை, இங்கேயும் அப்படித்தான். எனக்கு ஏன் தொந்தரவை உண்டாக்குகிறாய்? நான் உன்னை வெளியேற்ற முடியும் என்று உனக்குத் தெரியாதா?”
நான் இவ்வாறு பதிலளித்தேன்: “பப்பா, மூன்று காரணங்களுக்காக நான் உமக்கு மரியாதை கொடுக்கிறேன். முதலாவதாக, நீர் என்னைவிட வயதில் மூத்தவர், நரைமயிருக்கு மரியாதை தரவேண்டுமென்று பைபிள் சொல்லுகிறது. நான் உமக்கு மரியாதை தருவதற்கான இரண்டாவது காரணம், நீர் எங்களுக்கு உதவிசெய்வதற்காக உம்முடைய நாட்டை விட்டு வந்திருக்கிறீர். மூன்றாவது காரணம், நீர் தயவாயும் தயாளமாயும் இருக்கிறீர், துன்பத்தில் இருப்போருக்கு உதவிசெய்கிறீர். ஆனால் எந்த உரிமையால் என்னை வெளியேற்ற முடியுமென நினைக்கிறீர்? இந்த நாட்டின் பிரெஸிடென்ட் யெகோவாவின் சாட்சிகளை வெளியேற்றுகிறதில்லை. இந்தப் பகுதியின் பாரம்பரிய ஆளுநர் எங்களை வெளியேற்றுகிறதில்லை. இந்த முகாமிலிருந்து நீர் என்னை வெளியே துரத்திவிட்டாலும்கூட, யெகோவா என்னை இன்னும் கவனித்துக் காப்பார்.”
இதற்கு முன் ஒருபோதும் நான் இவ்வளவு நேர்முகமான முறையில் அவரிடம் பேசினதில்லை; இது அவருடைய மனதில் பதிந்து விட்டதை நான் காண முடிந்தது. பதிலேதும் சொல்லாமல் அவர் சென்றுவிட்டார். பின்னொரு சமயத்தில், ஒருவர் என்னைப்பற்றி குறைகூறியபோது, அவர் எரிச்சலுடன்: “இந்தக் காரியத்தில் நான் இனிமேலும் தலையிடப்போவதில்லை. அவனுடைய பிரசங்கிப்பினால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் நேரடியா அவனுடனேயே கலந்துபேசுங்கள்!” என்று பதிலளித்தார்.
எழுத்தறிவு புகட்டும் வகுப்பு
முகாமில் பாப்டிஸ்ட் சர்ச்சுக்கு செல்வோரிடமிருந்து என் பிரசங்க ஊழியத்திற்கான எதிர்ப்பு விடாமல் தொடர்ந்தது. பின்பு எனக்கு ஒரு யோசனை வந்தது. அந்த நலத்துறை அதிகாரியினிடம் நான் சென்று, எழுத்தறிவு புகட்டும் வகுப்பு ஒன்றை நான் நடத்தலாமா என்று கேட்டேன். எவ்வளவு சம்பளம் எனக்கு வேண்டும் என்று அவர் கேட்டபோது, இலவசமாகப் போதிப்பேன் என்று சொன்னேன்.
ஒரு வகுப்பறையையும், கரும்பலகையையும், சாக் பீஸையும் எனக்கு கொடுத்தார்கள். ஆகையால், உடனிருந்தவர்கள் சிலருக்கு வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு நாளும் வகுப்புகள் நடத்தினோம். முதல் 30 நிமிடங்கள், வாசிக்க கற்றுக்கொடுப்பேன், பின்பு பைபிளிலிருந்து ஒரு கதையைச் சொல்லி விளக்குவேன். அதன்பின், அந்த விவரத்தை பைபிளிலிருந்து நாங்கள் வாசிப்போம்.
நிமோட்டா என்ற பெயருடைய பெண் ஒரு மாணவியாக இருந்தாள். ஆவிக்குரிய காரியங்களில் அவளுக்கு அதிக ஆர்வம் இருந்தது. சர்ச்சிலும் மசூதியிலும் மதசம்பந்தமான கேள்விகளைக் கேட்பாள். தன்னுடைய கேள்விகளுக்கு பதில் அவளுக்கு அங்கே கிடைக்கவில்லை, ஆகையால் என்னிடம் வந்து கேட்பாள். கடைசியாக, தன் வாழ்க்கையை யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டாள். 1966-ல் நாங்கள் மணம் செய்துகொண்டோம்.
இன்று எங்கள் சபையில் இருக்கும் பெரும்பான்மையர் அந்த எழுத்தறிவு புகட்டின வகுப்பில் வாசிக்கவும் எழுதவும் கற்றவர்கள். அந்த வகுப்பை ஏற்பாடு செய்யும்படி யோசனைக்கான ஞானம் என்னுடையதாக இருக்கவில்லை; யெகோவா ஆசீர்வதித்தார் என்பது தெளிவாய் தெரிந்தது. அதன் பின்பு பிரசங்கிப்பதிலிருந்து ஒருவரும் என்னைத் தடுக்க முயற்சி செய்யவில்லை.
அந்த முகாமில் ஒரு ராஜ்ய மன்றம்
நிமோட்டாவும் நானும் மணம் செய்துகொண்ட சமயத்திற்குள்ளாக, த உவாட்ச்டவர் பத்திரிகையை ஒன்றுசேர்ந்து படிப்பதற்கு எங்களில் நான்கு பேர் தவறாமல் கூடினோம். ஏறக்குறைய ஓர் ஆண்டு காலமாக, குஷ்டரோக காயங்கள் கழுவப்படும் அறையில் நாங்கள் ஒன்றுகூடினோம். பின்பு, என் நண்பராக இப்போது ஆகியிருந்த நலத்துறை அதிகாரி என்னிடம்: “சிகிச்சை அறையில் உங்கள் கடவுளை நீங்கள் வணங்குவது நல்லதல்ல” என்று சொன்னார்.
காலியாக இருந்த தச்சுப் பட்டறையில் நாங்கள் கூடலாம் என்று அவர் சொன்னார். காலப்போக்கில் அந்தப் பட்டறை ராஜ்ய மன்றமாக மாற்றப்பட்டது. 1992-ல் அந்தப் பட்டணத்திலிருந்த சகோதரரின் உதவியால், அதைக் கட்டி முடித்தோம். பக்கம் 24-ல் உள்ள படத்தில் நீங்கள் காண்கிறபடி, எங்கள் மன்றம் நல்ல பலமான கட்டடம்—காங்கிரீட் தரையும் நல்ல உறுதியான கூரையும் உடையதாய் காரை பூசி, வண்ணம் அடிக்கப்பட்டிருக்கிறது.
குஷ்டரோகிகளுக்குப் பிரசங்கித்தல்
அந்தக் குஷ்டரோக தனிக்குடியிருப்பே 33 ஆண்டுகளாக என் பிராந்தியமாக இருந்திருக்கிறது. குஷ்டரோகிகளுக்குப் பிரசங்கிப்பது எவ்வாறுள்ளது? எல்லா காரியங்களும் கடவுளிடமிருந்து வருகிறதென்று, இங்கே ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையான ஜனங்கள் நம்புகிறார்கள். ஆகையால் குஷ்டரோகத்தால் தாங்கள் பீடிக்கப்படுகையில், கடவுளே ஏதோ ஒரு வகையில் அதற்குப் பொறுப்புள்ளவர் என்று நம்புகிறார்கள். சிலர், தங்கள் நிலைமையைப் பற்றி கடும் மனச்சோர்வுற்றோராக இருக்கிறார்கள். மற்றவர்கள் கோபமடைந்து: “அன்பும் இரக்கமுமுள்ள ஒரு கடவுளைப் பற்றி எங்களிடம் பேசாதே. அது உண்மையாக இருந்தால், இந்த நோய் ஒழிந்துபோயிருக்கும்!” என்று சொல்கிறார்கள். அப்போது, ‘தேவன் பொல்லாங்கினால் சோதிக்கிறவரல்ல’ என்று சொல்கிற யாக்கோபு 1:13-ஐ நாங்கள் வாசித்து காரணம் காட்டி விளக்குகிறோம். அடுத்தபடியாக, நோய் ஜனங்களைத் தாக்கும்படி யெகோவா ஏன் அனுமதிக்கிறார் என்பதை நாங்கள் விளக்கி, ஒருவருமே நோயுறாத பரதீஸ் பூமியைப் பற்றிய அவருடைய வாக்குறுதியை குறிப்பிட்டுக் காட்டுகிறோம்.—ஏசாயா 33:24.
பலர் நற்செய்தியை நம்பிக்கையோடு ஏற்றிருக்கின்றனர். இந்த முகாமுக்கு நான் வந்ததிலிருந்து, 30-க்கும் மேற்பட்ட ஆட்கள், ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படும்படி உதவிசெய்வதற்கு யெகோவா என்னைப் பயன்படுத்தியிருக்கிறார், இவர்கள் எல்லாரும் குஷ்டரோகிகளே. பலர் சுகமடைந்த பின்பு தங்கள் வீடுகளுக்குத் திரும்பி சென்றிருக்கின்றனர், சொற்பப்பேர் இறந்துவிட்டனர். இப்போது ராஜ்ய பிரஸ்தாபிகளாக 18 பேர் நாங்கள் இருக்கிறோம்; ஏறக்குறைய 25 ஆட்கள் கூட்டங்களுக்குத் தவறாமல் வருகிறார்கள். எங்களில் இருவர் மூப்பர்களாகச் சேவிக்கிறோம், ஒரு உதவி ஊழியரும் ஒரு பயனியரும் எங்களுள் இருக்கிறார்கள். இந்த முகாமில் இத்தனை பலர் இப்போது யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதைக் காண்பதில் நான் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறேன்! நான் இங்கு வந்தபோது, தனியாக இருப்பேன் என்று பயந்தேன், ஆனால் அதிசயமான ஒரு முறையில் யெகோவா என்னை ஆசீர்வதித்திருக்கிறார்.
என் சகோதரரைச் சேவிப்பதன் மகிழ்ச்சி
1960-ல் இருந்து, இப்போது ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குமுன் வரையில் குஷ்டரோகத்திற்காக மருந்து சாப்பிட்டு வந்தேன். இப்போது நான், சபையிலுள்ள மற்றவர்களைப்போல், பூரணக் குணம் அடைந்திருக்கிறேன். குஷ்டரோகம் அதன் வடுவை விட்டு சென்றிருக்கிறது—என் காலின் கீழ்ப்பாகத்தை இழந்துவிட்டேன், என் கைகளை நான் நிமிர்த்த முடியாது—ஆனால் நோய் நீங்கிவிட்டது.
சுகமாகியும் நான் இந்த முகாமை விட்டு வீட்டுக்கு ஏன் திரும்பிச்செல்லவில்லை என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். நான் இங்கு தங்கியிருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன; ஆனால் அவற்றில் முதன்மையானது, இங்குள்ள என் சகோதரருக்குத் தொடர்ந்து உதவிசெய்ய நான் விரும்புவதேயாகும். யெகோவாவின் செம்மறியாடுகளைக் கவனித்துவருவதன் மகிழ்ச்சி, என் குடும்பத்தினரிடம் நான் திரும்பிச் சென்றால் அவர்கள் எனக்கு அளிக்கவிருக்கும் எதைப் பார்க்கிலும் மிக மேம்பட்டதாக இருக்கிறது.
எனக்கு குஷ்டரோகம் இருந்ததைப்பற்றி நான் தெரிந்துகொண்டதற்கு முன்பாகவே யெகோவாவை அறிந்ததற்காக மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டிருப்பேன். ஆண்டுகளினூடே பல இக்கட்டுகளும் பிரச்சினைகளும் இருந்திருக்கின்றன, ஆனால், என்னை மருந்து அல்ல, யெகோவாவே காத்தார். கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்கையில் மகிழ்ச்சியடைகிறேன்; கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கையில், இன்னும் அதிக மகிழ்ச்சியடைகிறேன்.
[பக்கம் 25-ன் பெட்டி]
குஷ்டரோகம் பற்றிய தகவல்
அது என்ன?
நவீனகால குஷ்டரோகம், ஒரு நோய்நுண்மத்தால் (bacillus) வரும் வியாதி; இந்த நோய்நுண்மத்தை 1873-ல் ஆர்மர் ஹேன்சன் என்பவர் அடையாளம் கண்டுபிடித்தார். அவருடைய சேவையை அங்கீகரிக்கும் வண்ணமாக, மருத்துவர்கள் குஷ்டரோகத்தை ஹேன்சன் நோய் (Hansen’s disease) என்றும்கூட குறிப்பிடுகின்றனர்.
இந்நோய்நுண்மம், நரம்புகள், எலும்புகள், கண்கள், மற்றும் குறிப்பிட்ட சில உறுப்புகளை பாதிக்கிறது. பெரும்பாலும் கைகளும் கால்களும் மரத்துப் போகின்றன. கவனிக்காமல் விட்டுவிட்டால், முகத்தையும் கை கால் நுனிகளையும் அதிகம் சிதைவுறச் செய்யலாம். அது அபூர்வமாகவே உயிரைப் பறிக்கிறது.
நிவாரணம் உண்டா?
சிறிதே குஷ்டரோகம் உள்ளவர்கள் எந்தவித சிகிச்சையுமின்றி குணமடைந்துவிடுகிறார்கள். முற்றிய நிலையில் உள்ளவர்களை மருந்துகளால் குணப்படுத்தலாம்.
குஷ்டரோகத்தை எதிர்க்கும் மருந்து முதலாவதாக 1950-களில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது மெதுவாக செயல்பட்டது; அதனால் அதிக திறனற்றதாய் ஆனது, ஏனெனில் குஷ்டரோக நோய்நுண்மம் அதற்கு எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டது. புதிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன, 1980-களின் ஆரம்பம் முதற்கொண்டு, பன்மருந்து சிகிச்சைமுறை (Multi-Drug Therapy [MDT]) உலகமுழுவதும் தரமான சிகிச்சையாக ஆனது. இந்தச் சிகிச்சையில் மூன்று மருந்துகள்—டேப்சோன், ரைஃபம்பிசின், குளோஃபாசிமின் ஆகியவை—கூட்டாக பயன்படுத்தப்படுகின்றன. நோய்நுண்மத்தை MDT முறியடிக்கிறபோதிலும், ஏற்கெனவே உண்டான சேதத்தை அது சரிசெய்வதில்லை.
நோயை குணப்படுத்துவதில் MDT மிகவும் பலனுள்ளதாய் இருக்கிறது. அதன் விளைவாக, குஷ்டரோகமுடைய ஆட்களின் எண்ணிக்கை, 1985-ல் 1.2 கோடியிலிருந்து 1996-ன் மத்திபத்திற்குள்ளாக கிட்டத்தட்ட 13 லட்சத்திற்கு குறைந்துவிட்டது.
அது எந்தளவுக்கு தொற்றக்கூடியது?
குஷ்டரோகம் அதிகம் தொற்றக்கூடியதல்ல; அதை எதிர்ப்பதற்குப் போதுமான நோய்த் தடுப்பாற்றல் முறைகள் பெரும்பாலான மக்களுடைய உடலில் இருக்கின்றன. அப்படி வந்தாலும், நோய் தொற்றியவர்களுடன் அதிக காலமாக நெருங்கி வாழும் ஆட்களுக்கே பொதுவாக வருகிறது.
மனித உடலில் எப்படி இந்த நோய்நுண்மம் நுழைகிறது என்பது மருத்துவர்களுக்கு நிச்சயமாக தெரியாது, ஆனால் தோல் அல்லது மூக்கு வழியாக நுழையலாம் என அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
எதிர்கால நம்பிக்கைகள்
2000-ம் ஆண்டுக்குள், குஷ்டரோகத்தை “பொதுமக்களுடைய சுகாதாரப் பிரச்சினையாக இல்லாமல் ஒழிப்பது” இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இது எந்தவொரு சமுதாயத்திலும் குஷ்டரோகிகளின் எண்ணிக்கை 10,000 பேருக்கு 1 என்ற வீதத்தை விஞ்சாது என்பதைக் குறிக்கிறது. கடவுளுடைய ராஜ்யத்தில் அது முழுமையாக ஒழிக்கப்படும்.—ஏசாயா 33:24.
தகவல்மூலம்: உலக சுகாதார நிறுவனம்; இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ஆன்ட்டி-லெப்ரஸி அஸோசியேஷன்ஸ்; மற்றும் மேன்சன்ஸ் டிராஃபிக்கல் டிசீசஸ், 1996-ன் பதிப்பு.
[பக்கம் 27-ன் பெட்டி]
இன்றுள்ள குஷ்டரோகமும் பைபிள் காலங்களில் இருந்ததும் ஒன்றா?
இன்று மருத்துவ நூல்கள் குஷ்டரோகத்தை துல்லியமான பதங்களில் வரையறுக்கின்றன; இதில் உட்பட்டுள்ள நுண்ணுயிரிக்கான விஞ்ஞான பெயர் மைக்கோபேக்டீரியம் லெப்ரே. நிச்சயமாகவே, பைபிள் ஒரு மருத்துவ நூல் அல்ல. அநேக பைபிள் மொழிபெயர்ப்புகளில், “குஷ்டரோகம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய மற்றும் கிரேக்க வார்த்தைகள் அதிக பொருள் பொதிந்தவை. உதாரணமாக, பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள குஷ்டரோகம், மனிதர்களில் மட்டுமல்ல, உடையிலும் வீடுகளிலும் கவனிக்கத்தக்க அறிகுறிகளை உண்டாக்கியது; இது, ஒரு நோய்நுண்மம் உண்டாக்காத ஒன்றாகும்.—லேவியராகமம் 13:2, 47; 14:34.
மேலும், இன்று மனிதர்களில் காணப்படும் குஷ்டரோகத்திற்கான அறிகுறிகள், பைபிள் காலங்களில் இருந்த குஷ்டரோக விவரிப்பிற்கு துல்லியமாக பொருந்துவதில்லை. கால ஓட்டத்தில் இந்த வியாதிகளின் தன்மை மாறுவது காரணமாக இருக்கலாமென சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள குஷ்டரோகம், பல்வேறு நோய்களை குறிப்பிடுகிறது என மற்றவர்கள் கருதுகின்றனர்; இது மைக்கோபேக்டீரியம் லெப்ரே-யினால் வரும் நோயை உட்படுத்தலாம் அல்லது உட்படுத்தாமலும் இருக்கலாம்.
பொதுவாக குஷ்டரோகம் என மொழிபெயர்க்கப்படும் கிரேக்க வார்த்தையும் எபிரெய வார்த்தையும், “ஒரேவித வியாதியை, அல்லது வியாதிகளின் தொகுதியை குறிக்கின்றன . . . இந்நோய், குஷ்டரோகம் என்று நாம் இப்பொழுது அழைக்கிற ஒன்றா என்பது ஆட்சேபிக்கப்படலாம். ஆனால் இந்நோயின் துல்லியமான மருத்துவ கண்டுபிடிப்பு [இயேசுவும் அவருடைய சீஷர்களும்] குணப்படுத்தியதைப் பற்றிய விவரப்பதிவின் நம்முடைய மதிப்பீட்டை பாதிப்பதில்லை” என புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது.
[பக்கம் 24-ன் படம்]
குஷ்டரோக முகாமிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு வெளியில், சபையினர்
[பக்கம் 26-ன் படம்]
ஐசாயா ஆடக்போனேயும் அவருடைய மனைவி நிமோட்டாவும்