உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• நாம் கடவுளுக்கு உத்தமமாய் நடப்பது ஏன் மிக முக்கியம்?
நாம் உத்தமமாய் நடக்கும்போது யெகோவாவின் அரசதிகாரத்தை அன்போடு ஏற்றுக்கொள்ளவும் சாத்தானை ஒரு பொய்யன் என நிரூபிக்கவும் முடிகிறது. நம்முடைய உத்தமத்தின் அடிப்படையிலேயே கடவுள் நம்மை நியாயந்தீர்க்கிறார் என்பதால், அது நம் எதிர்கால நம்பிக்கைக்கு அத்தியாவசியமானது.—12/15, பக்கங்கள் 4-6.
• கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் ஸ்தானத்தைச் சுட்டிக்காட்டும் சில பட்டப்பெயர்கள் யாவை?
ஒரேபேறான குமாரன். வார்த்தை. ஆமென். புது உடன்படிக்கையின் மத்தியஸ்தர். பிரதான ஆசாரியர். வாக்குப்பண்ணப்பட்ட வித்து.—12/15, பக்கம் 15.
• எலியா தீர்க்கதரிசி மழைக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தபோது தன்னுடைய ஊழியக்காரனிடம் ஏன் கடல் பக்கமாய்ப் பார்க்கச் சொன்னார்? (1 இரா. 18:43-45)
நீர் சுழற்சியைப் பற்றி எலியா அறிந்திருந்தார். கடலுக்கு மேல் உருவாகும் மேகங்கள் நிலப்பகுதியை நோக்கி நகர்ந்து அங்கே மழையாகப் பெய்யும் என்பதை அவர் அறிந்திருந்தார்.—4/1, பக்கங்கள் 26, 27.
• ஊழியத்தில் நாம் எவ்வாறு அதிக சந்தோஷத்தைப் பெறலாம்?
நாம் நம்முடைய இருதயத்தைப் பக்குவப்படுத்தி, மற்றவர்களுக்கு எந்தளவு உதவலாம் என்பதற்குக் கவனம் செலுத்தலாம். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் பிரசங்கிக்கலாம். பிராந்தியத்திலுள்ளவர்கள் அலட்சிய மனப்பான்மை காட்டினால், அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதற்கேற்ப நம் அணுகுமுறைகளை மாற்றலாம்.—1/15, பக்கங்கள் 8-10.
• சவ அடக்கம் சம்பந்தமாக பைபிள் போதிக்கும் விஷயங்கள் ஒரு கிறிஸ்தவரின் மனநிலையையும் சம்பிரதாயத்தையும் எப்படிப் பாதிக்க வேண்டும்?
அன்புக்குரியவர்கள் இறக்கும்போது ஒரு கிறிஸ்தவர் துக்கித்தாலும், இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்பதை அவர் தெரிந்திருக்கிறார். இறந்தவர்களால் உயிருடன் இருப்பவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்ய முடியுமென்ற நம்பிக்கையோடு செய்யப்படும் சடங்குகளில் அவர் ஈடுபடுவதில்லை; சத்தியத்தில் இல்லாதவர்கள் அதற்காக அவரைக் குறைகூறினாலும் அவர் அவற்றில் ஈடுபடுவதில்லை. பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய சவ அடக்க ஏற்பாடுகளை எப்படிச் செய்ய வேண்டுமென முன்கூட்டியே எழுதி வைக்கிறார்கள்.—2/15, பக்கங்கள் 29-31.
• ‘யாசேரின் புஸ்தகமும்’ ‘கர்த்தருடைய யுத்த புஸ்தகமும்’ பைபிளிலிருந்து காணாமல்போன புஸ்தகங்களா? (யோசு. 10:13; எண். 21:15)
இல்லை, பைபிள் காலங்களில் இருந்த அந்தப் புஸ்தகங்கள் கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்படாதவை, ஆனால் பைபிள் எழுத்தாளர்களால் மேற்கோள் காட்டப்பட்டவை என்று தெரிகிறது.—3/15, பக்கம் 32.