உங்கள் விசுவாசத்தின் தரம்—இப்பொழுது சோதிக்கப்படுகிறது
“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது [“சோதிக்கப்பட்ட தரம்,” NW] பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.”—யாக்கோபு 1:2, 3.
1. கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசம் சோதிக்கப்படுவதை ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
மெய் கிறிஸ்தவர்களுக்கு துன்பப்பட வேண்டுமென்ற ஆசையும் கிடையாது, வேதனையிலிருந்தோ அவமானத்திலிருந்தோ அவர்கள் எந்த சுகத்தையும் பெறுவது கிடையாது. இருப்பினும், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யாக்கோபு எழுதிய மேற்குறிப்பிடப்பட்ட வார்த்தைகளை தங்கள் மனதில் வைத்திருக்கின்றனர். கடவுளுடைய தராதரங்களைப் பின்பற்றுவதால் துன்புறுத்துதலையும் மற்ற கஷ்டங்களையும் எதிர்பார்க்கலாம் என்பதை கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு தெளிவாக்கினார். (மத்தேயு 10:34; 24:9-13; யோவான் 16:33) என்றபோதிலும், இப்படிப்பட்ட சோதனைகளிலிருந்து சந்தோஷம் உண்டாகலாம். எப்படி?
2. (அ) நம்முடைய விசுவாசத்தின் சோதனைகள் எவ்வாறு சந்தோஷத்தில் விளைவடையலாம்? (ஆ) பொறுமையானது நம்முடைய விஷயத்தில் எவ்வாறு அதன் கிரியையை செய்துமுடிக்கலாம்?
2 விசுவாசத்தின் சோதனைகளையோ பரீட்சைகளையோ அனுபவிக்கும்போது நாம் சந்தோஷத்தைக் கண்டடைய முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால், இவை நல்ல பலனைக் கொண்டுவரும் என்பதே. யாக்கோபு சொல்கிறபடி, சோதனைகளையோ கஷ்டங்களையோ எதிர்ப்படுகையில் உறுதியாயிருப்பது “பொறுமையை உண்டாக்கு”கிறது. மதிப்புமிக்க அந்தக் கிறிஸ்தவப் பண்பை வளர்த்துக்கொள்வதால் நாம் நன்மையடையலாம். யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4) பொறுமை செய்யவேண்டிய ஒரு வேலை, ஒரு “கிரியை” உள்ளது. எல்லா அம்சங்களிலும் நம்மை முழுமையாக்கி, கிறிஸ்தவர்களாக சமநிலையும் முதிர்ச்சியும் வாய்ந்தவர்களாவதற்கு உதவிசெய்வதே அதற்கு நியமிக்கப்பட்ட வேலை. ஆகவே, சோதனையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வேதவசனங்களுக்குப் புறம்பான வழிமுறைகளைப் பயன்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல் அது தானாகவே முடிவடைய அனுமதிப்பதன் மூலம், நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு புடமிடப்படுகிறது. சூழ்நிலைகளை சமாளிப்பதிலோ உடன் மானிடர்களுடன் தொடர்புகொள்வதிலோ சகிப்புத்தன்மை, இரக்கம், தயவு, அல்லது அன்பு நமக்கு குறைவுபட்டால், பொறுமை நம்மை அதிக முழுமையானவர்களாக்கும். ஆம், அந்த வரிசைக்கிரமம் இதுவே: சோதனைகள் பொறுமையை உண்டாக்குகின்றன; பொறுமை கிறிஸ்தவப் பண்புகளை அதிகரிக்கின்றன; இவை சந்தோஷத்திற்கு காரணமாக அமைகின்றன.—1 பேதுரு 4:14; 2 பேதுரு 1:5-8.
3. விசுவாசத்தின் சோதனைகளுக்கு அல்லது பரீட்சைகளுக்கு பயந்து நாம் ஏன் பின்வாங்கிவிடக் கூடாது?
3 நம்முடைய விசுவாசத்தின் சோதனைகளிலிருந்து பயமடையவோ பின்வாங்கவோ வேண்டிய அவசியமில்லை என்பதற்கான காரணத்தை அப்போஸ்தலன் பேதுருவும்கூட சிறப்பித்துக் காட்டினார். அவர் எழுதினார்: “இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” (1 பேதுரு 1:6, 7) இந்த வார்த்தைகள் முக்கியமாக இப்பொழுது உற்சாகமூட்டுவதாய் இருக்கின்றன, ஏனெனில் ‘மிகுந்த உபத்திரவம்’—துதிப்பதற்கு, மகிமைப்படுத்துவதற்கு, கனப்படுத்துவதற்கு, தப்பிப்பிழைப்பதற்கான காலம்—சிலர் நினைப்பதைக் காட்டிலும் வெகு அருகில் உள்ளது, நாம் விசுவாசிகளான சமயத்தில் இருந்ததைக் காட்டிலும் வெகு அருகில் உள்ளது.—மத்தேயு 24:21; ரோமர் 13:11, 12.
4. ஒரு சகோதரர் தானும் அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற கிறிஸ்தவர்களும் அனுபவித்த சோதனைகளைப் பற்றி எவ்வாறு உணர்ந்தார்?
4 முந்திய கட்டுரையில், 1914 முதற்கொண்டு அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் எதிர்ப்பட்ட சோதனைகளைப் பற்றி நாம் சிந்தித்தோம். இவை சந்தோஷத்திற்கு அடிப்படையாக இருந்தனவா? கடந்தகாலத்தை நினைத்துப்பார்த்து ஏ. எச். மாக்மில்லன் இந்தக் கருத்தை வெளியிட்டார்: “அமைப்புக்குப் பல கடுமையான சோதனைகள் ஏற்பட்டதையும் அதிலுள்ளவர்களுக்கு விசுவாச சோதனைகள் வந்ததையும் கண்டிருக்கிறேன். கடவுளுடைய ஆவியின் உதவியால் அது நிலைத்திருந்து தொடர்ந்து செழித்தோங்குகிறது. ஒரு புதிய கருத்தைக் குறித்து மன அமைதி குலைந்தவர்களாய் ஆகிவிடுவதற்குப் பதிலாக, வேதப்பூர்வமான காரியங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலை யெகோவா தெளிவாக்கும்படி அவருக்காக பொறுமையுடன் காத்திருப்பதன் ஞானத்தை நான் கண்டிருக்கிறேன். . . . அவ்வப்பொழுது நம்முடைய கருத்துக்களில் என்ன மாற்றங்களை நாம் செய்ய வேண்டியதாக இருந்தாலும் கவலையில்லை, இரக்கமுள்ள ஏற்பாடாகிய மீட்பின் கிரயபலியையும் கடவுளுடைய நித்திய ஜீவ வாக்குறுதியையும் அவை மாற்றிவிடாது. ஆகையால் நிறைவேறாத எதிர்பார்ப்புகளால் அல்லது கருத்து மாற்றங்களால் நம் விசுவாசம் பலவீனப்படும்படி விடுவதற்கு அவசியம் இல்லை.”—காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஆகஸ்ட் 15, 1966, பக்கம் 504.
5. (அ) மீதியானோர் அனுபவித்த சோதனைகளிலிருந்து என்ன நன்மைகள் விளைந்தன? (ஆ) சோதிக்கப்படுதல் என்ற இந்த விஷயம் இப்பொழுது நமக்கு ஏன் அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும்?
5 1914-19 வரையிலான இந்தச் சோதனை காலத்தைக் கடந்து வந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இவ்வுலகத்தின் அடக்கியாளும் செல்வாக்கிலிருந்தும் பாபிலோனிய மதப் பழக்கவழக்கங்கள் பலவற்றிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டனர். சுத்திகரிக்கப்பட்டு புடமிடப்பட்ட ஜனங்களாக, துதியின் பலிகளைக் கடவுளுக்கு மனப்பூர்வமாய்ச் செலுத்திக்கொண்டும், தாங்கள் அவருக்கு ஏற்கத்தகுந்த ஜனங்கள் என்ற உறுதியுடனும் இந்த மீதியானோர் முன்னேறிச் சென்றனர். (ஏசாயா 52:11; 2 கொரிந்தியர் 6:14-18) நியாயத்தீர்ப்பு கடவுளுடைய வீட்டில் முதலாவதாக துவங்கியது, ஆனால் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் அது முடிவடையாது. கடவுளுடைய ஜனங்களைப் புடமிடுவதும் புடைத்தெடுப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ‘திரள் கூட்டத்தின்’ பாகமாய் இருந்து நெருங்கிவரும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ தப்பிப்பிழைக்கும் நம்பிக்கையுடையோரின் விசுவாசமும் சோதிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் சோதிக்கப்பட்டவற்றிற்கு ஒப்பான வழிமுறைகளிலும் மற்ற வழிமுறைகளிலும் இது செய்யப்பட்டுவருகிறது.
நீங்கள் எவ்வாறு சோதிக்கப்படலாம்?
6. அநேகர் அனுபவித்திருக்கும் கடும் சோதனையில் ஒரு வகை என்ன?
6 நேரடி முன்னணித் தாக்குதல்களின் வடிவில் வரும் சோதனைகளை எதிர்த்து நிற்கும் சவாலைப் பற்றி அநேக கிறிஸ்தவர்கள் யோசித்திருக்கின்றனர். அவர்கள் இந்த அறிக்கையை மனதிற்கு கொண்டுவருகின்றனர்: “[யூத தலைவர்கள்] அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போ[னார்கள்].” (அப்போஸ்தலர் 5:40, 41) கடவுளுடைய ஜனங்களின் நவீனநாளைய சரித்திரம், முக்கியமாக உலகப் போர்களின் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் உண்மையிலேயே அடிக்கப்பட்டார்கள், துன்புறுத்துபவர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதை தெளிவாக்குகிறது.
7. விசுவாசத்தைக் காண்பிப்பதில் நவீனகால கிறிஸ்தவர்கள் எந்தளவுக்கு சென்றிருக்கின்றனர்?
7 கிறிஸ்தவர்கள் துன்புறுத்துதலுக்கு இலக்காவதைக் குறித்ததில், அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரையும் ‘வேறே ஆடுகளாகிய’ திரள் கூட்டத்தாரையும் இவ்வுலகம் வெவ்வேறாக நடத்துவதில்லை. (யோவான் 10:16) இந்நாள் வரை இருதொகுதிகளின் உறுப்பினரும், கடவுளின்மீதுள்ள தங்கள் அன்பின் நிமித்தமாகவும் அவர்மீது தாங்கள் வைத்துள்ள விசுவாசத்தின் நிமித்தமாகவும் சிறையிலிடப்படுவதனாலும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவதினாலும்கூட கடுமையாக சோதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கை எதுவாக இருப்பினும், இருதொகுதியினருக்கும் கடவுளுடைய ஆவி தேவைப்பட்டிருக்கிறது. (காவற்கோபுரம், ஜூன் 15, 1996, பக்கம் 31-ஐ ஒப்பிடுக.) 1930 மற்றும் 1940-களில் நாசி ஜெர்மனியில், சிறு பிள்ளைகள் உட்பட, யெகோவாவின் ஊழியர்கள் பலர் அசாதாரணமான விசுவாசத்தைக் காட்டினர்; பலர் சாவின் எல்லைக்கே கொண்டுசெல்லப்பட்டனர். வெகுசமீப காலங்களில், புருண்டி, எரிட்ரியா, எதியோபியா, மலாவி, மொஸாம்பிக், ருவாண்டா, சிங்கப்பூர், ஜயர் போன்ற இடங்களில் யெகோவாவின் ஜனங்கள் துன்புறுத்துதலை அனுபவித்திருக்கின்றனர். இதைப் போன்ற சோதனைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
8. அடிகளின் வடிவில் வரும் துன்புறுத்துதலை சகிப்பதைவிட நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படுவதில் அதிகம் உட்பட்டுள்ளது என்பதை எவ்வாறு ஆப்பிரிக்க சகோதரர் ஒருவரின் குறிப்புகள் காட்டுகின்றன?
8 எனினும், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, நம்முடைய விசுவாசம் மிகவும் தந்திரமான வழிகளிலுங்கூட சோதிக்கப்படுகிறது. சோதனைகளில் சில அந்தளவு நேரடியாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளத்தக்கதாகவும் இருப்பதில்லை. பின்வரும் சூழ்நிலைகளில் நீங்கள் இருந்தால் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அங்கோலாவிலுள்ள ஒரு சகோதரருக்குப் பத்து பிள்ளைகள்; அவர் பொறுப்புள்ள சகோதரர்களின் தொடர்பில்லாமல் தனிப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த ஒரு சபையில் சில காலம் இருந்தார். பின்னால் மற்றவர்கள் அந்தச் சபைக்குப் போய்வருவது சாத்தியமாயிற்று. தன் குடும்பத்துக்கு உணவளிப்பதை அவர் எப்படி சமாளித்தார் என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளிப்பது அவருக்கு எளிதாக இருக்கவில்லை; நிலைமை கடினமாயிருந்தது என்று மாத்திரமே அவர் சொல்லி வந்தார். ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடாவது தன் பிள்ளைகளுக்கு அவரால் அளிக்க முடிந்ததா? அவருடைய பதில்: “பெரும்பாலும் முடியவில்லை. எங்களுக்கு இருப்பதைக்கொண்டு சமாளிக்க நாங்கள் கற்றுக்கொண்டோம்.” பின்பு முழு உறுதியான குரலில் அவர் சொன்னார்: “ஆனால் இந்தக் கடைசி நாட்களில் இதைத்தானே நாம் எதிர்பார்க்க வேண்டும்?” இவ்வுலகில் இப்படிப்பட்ட விசுவாசம் குறிப்பிடத்தக்கது. ஆனால் ராஜ்ய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று முழு நம்பிக்கையோடு இருக்கும் உண்மைப்பற்றுறுதியுள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் இது சாதாரணமானதுதான்.
9. 1 கொரிந்தியர் 11:3-ன் சம்பந்தமாக நாம் எவ்வாறு சோதிக்கப்படுகிறோம்?
9 தேவராஜ்ய வழிமுறைகள் சம்பந்தமாகவும் திரள் கூட்டத்தினர் சோதிக்கப்படுகின்றனர். உலகளாவிய கிறிஸ்தவ சபை தெய்வீக நியமங்கள் மற்றும் தேவராஜ்ய ஏற்பாடுகளுக்கு இசைவாக வழிநடத்தப்படுகிறது. இது, முதலாவதாக, சபையின் தலைவராக நியமிக்கப்பட்ட இயேசுவை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. (1 கொரிந்தியர் 11:3) அவருக்கும் அவருடைய பிதாவிற்கும் மனப்பூர்வமாய் கீழ்ப்படிவது, நாம் யெகோவாவின் சித்தத்தை ஒற்றுமையுடன் செய்வதோடு தொடர்புடைய தேவராஜ்ய நியமிப்புகளிலும் தீர்மானங்களிலும் நம்முடைய விசுவாசத்தின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் வழிநடத்துவதற்கு நியமிக்கப்பட்ட மனிதர் இருக்கின்றனர். அவர்கள் அபூரணர், அவர்களுடைய தவறுகளை நாம் உடனடியாக கண்டுகொள்ளலாம்; இருப்பினும் இப்படிப்பட்ட கண்காணிகளுக்கு மரியாதை காட்டும்படியும் கீழ்ப்படிந்து நடக்கும்படியும் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். (எபிரெயர் 13:7, 17) நீங்கள் சிலசமயங்களில் இதை சவாலாக நினைக்கிறீர்களா? இது உங்களுக்கு உண்மையிலேயே ஒரு சோதனையாக இருக்கிறதா? அப்படியென்றால், உங்களுடைய விசுவாசத்தின் இந்தச் சோதனையிலிருந்து நீங்கள் பலனடைகிறீர்களா?
10. வெளி ஊழியம் சம்பந்தமாக நாம் என்ன சோதனையை எதிர்ப்படுகிறோம்?
10 வெளி ஊழியத்தில் தவறாமல் ஈடுபடும் சிலாக்கியம் மற்றும் அதன் அவசியம் சம்பந்தமாகவும் நாம் சோதிக்கப்படுகிறோம். இந்தச் சோதனையில் நாம் தேறுவதற்கு, ஊழியத்தில் முழுமையாக பங்குகொள்வது என்பது குறைந்தளவுக்கு அல்லது பெயரளவுக்கு பிரசங்கிப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது என்பதை உணர வேண்டும். தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்த ஏழை விதவையை இயேசு அங்கீகரித்ததையும் நினைவிற்கொள்ளுங்கள். (மாற்கு 12:41-44) ‘என்னுடைய வெளி ஊழியத்தைக் குறித்ததில் இதைப்போன்று என்னையே நான் அளிக்கிறேனா?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம். நாமனைவரும் எல்லா சமயங்களிலும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்க வேண்டும், நம்முடைய ஒளியை பிரகாசிக்கச் செய்வதற்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்க வேண்டும்.—மத்தேயு 5:16.
11. புரிந்துகொள்ளுதலில் மாற்றங்கள் அல்லது நடத்தை சம்பந்தமான அறிவுரைகள் எவ்வாறு ஒரு சோதனையாக அமையலாம்?
11 நாம் எதிர்ப்படும் மற்றொரு சோதனை, அதிகரித்துவரும் சத்தியத்தின் ஒளிக்காகவும் உண்மையுள்ள அடிமை வகுப்பின் மூலம் கொடுக்கப்படும் அறிவுரைக்காகவும் நாம் எந்தளவு போற்றுதல் காட்டுகிறோம் என்பதோடு தொடர்புடையது. (மத்தேயு 24:45, NW) இது, சிலசமயங்களில் தனிப்பட்ட நடத்தையில் மாற்றம் செய்வதை தேவைப்படுத்துகிறது; உதாரணமாக, சபையில் தொடர்ந்திருக்க விரும்பினால் புகையிலை பயன்படுத்துபவர்கள் அதை விட்டுவிட வேண்டியதாயிருந்தது. a (2 கொரிந்தியர் 7:1) அல்லது இசையிலோ பொழுதுபோக்கு சம்பந்தப்பட்ட மற்ற காரியங்களிலோ நம்முடைய விருப்பத்தை மாற்றிக்கொள்வதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வது சோதனையாக இருக்கலாம். b கொடுக்கப்படும் ஆலோசனையின் ஞானத்தை நாம் சந்தேகிப்போமா? அல்லது நம்முடைய சிந்தனையை கடவுளுடைய ஆவி உருப்படுத்தி, புதிய கிறிஸ்தவ ஆளுமையைத் தரித்துக்கொள்ள நம்மை அனுமதிப்போமா?—எபேசியர் 4:20-24; 5:3-5.
12. ஒருவர் முழுக்காட்டப்பட்ட பிறகு விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு என்ன தேவைப்படுகிறது?
12 சில பத்தாண்டுகளாக, திரள் கூட்டத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வந்திருக்கிறது; முழுக்காட்டுதலுக்குப் பின்பு யெகோவாவுடன் தங்களுடைய உறவை அவர்கள் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றனர். இது, கிறிஸ்தவ மாநாட்டில் ஆஜராவதையோ ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் சில கூட்டங்களுக்கு போவதையோ அல்லது எப்பொழுதாவது வெளி ஊழியத்தில் பங்குகொள்வதையோ காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. உதாரணமாக: ஒருவர் உடல்ரீதியில் பொய்மத உலக பேரரசாகிய மகா பாபிலோனுக்கு வெளியில் இருக்கலாம், ஆனால் உண்மையில் அவர் அதை பின்னாக விட்டு வந்துவிட்டாரா? மகா பாபிலோனின் மனப்பான்மையை—கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களை அவமதிக்கும் மனப்பான்மையை—பிரதிபலிக்கும் காரியங்களை அவர் இன்னும் விடாமல் பற்றிக்கொண்டிருக்கிறாரா? ஒழுக்கநெறியையும் திருமண வாழ்க்கையில் உண்மைத்தன்மையையும் அவர் அலட்சியம் செய்துவருகிறாரா? ஆவிக்குரிய அக்கறைகளைப் பார்க்கிலும் தனிப்பட்ட மற்றும் பொருள் சம்பந்தமான அக்கறைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறாரா? ஆம், இந்த உலகத்தால் கறைபடாமல் நிலைத்திருக்கிறாரா?—யாக்கோபு 1:27.
சோதிக்கப்பட்ட விசுவாசத்தால் வரும் நன்மை
13, 14. மெய் வணக்கத்தின் பாதையில் நடக்க ஆரம்பித்தபின் சிலர் என்ன செய்திருக்கின்றனர்?
13 நாம் உண்மையிலேயே மகா பாபிலோனையும் இவ்வுலகையும் விட்டு வெளியே ஓடிவந்திருந்தால், பின்னால் விட்டுவந்த காரியங்களைத் திரும்பி பார்க்காமல் இருப்போமாக. லூக்கா 9:62-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள நியமத்திற்கு இசைவாக, நம்மில் எவராவது பின்னோக்கி பார்ப்பது கடவுளுடைய ராஜ்யத்தின் பிரஜைகளாக இருப்பதை இழந்துவிடுவதை அர்த்தப்படுத்தலாம். இயேசு சொன்னார்: “கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல.”
14 ஆனால், கடந்தகாலத்தில் கிறிஸ்தவர்களாக மாறியவர்களில் சிலர் இந்தக் காரிய ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதற்கு தங்களை அனுமதித்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுலகத்தின் மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. (2 பேதுரு 2:20-22) உலகப்பிரகாரமான கவனச்சிதறல்கள் அவர்களுடைய அக்கறையையும் நேரத்தையும் எடுத்துக்கொண்டு, இவ்வாறு அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடைசெய்து வருகின்றன. தங்கள் மனதையும் இருதயத்தையும் கடவுளுடைய ராஜ்யத்தின்மீதும் அவருடைய நீதியின்மீதும் உறுதியாய் ஊன்றவைத்து அவற்றை வாழ்க்கையில் முதலாவதாக வைப்பதற்குப் பதிலாக, பொருளாதார இலக்குகளை நாடித்தொடரும்படி தங்கள் மனதைத் திருப்பியிருக்கின்றனர். தங்கள் பலவீனமான விசுவாசத்தையும் அக்கறையற்ற நிலையையும் ஒப்புக்கொண்டு கடவுளுடைய அறிவுரையை நாடித்தேடி தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள தூண்டப்படவில்லையென்றால், அவர்கள் யெகோவாவுடனும் அவருடைய அமைப்புடனும் இருக்கும் தங்கள் அருமையான உறவை இழக்கும் ஆபத்தில் இருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 3:15-19.
15. கடவுளுக்கு ஏற்கத்தகுந்தவர்களாய் நிலைத்திருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
15 நாம் அங்கீகரிக்கப்பட்டவர்களாயும் விரைவாய் நெருங்கிவந்துகொண்டிருக்கும் மகா உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதற்குப் பாத்திரராயும் இருப்பது, நம்மை சுத்தமாய் வைத்துக்கொள்வதன் பேரிலும் நம்முடைய அங்கிகளை ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்திருப்பதன்’ பேரிலுமே சார்ந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9-14; 1 கொரிந்தியர் 6:11) கடவுளுக்கு முன்பாக சுத்தமான, நீதியுள்ள நிலைநிற்கையை நாம் காத்துவராவிட்டால், நம்முடைய பரிசுத்த ஊழியம் ஏற்கத்தகுந்ததாக இருக்காது. நிச்சயமாகவே, விசுவாசத்தின் சோதிக்கப்பட்ட தரம், நாம் தொடர்ந்து நிலைத்திருக்கவும் கடவுளுக்குப் பிரியமில்லாதவர்களாக ஆவதை தவிர்க்கவும் நமக்கு உதவி செய்யும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
16. என்ன வழிகளில் பொய்கள் நம்முடைய விசுவாசத்திற்கு சோதனையாக அமையலாம்?
16 சில சமயங்களில் செய்தி துறைகளும் அதிகாரிகளும் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் வாழ்க்கை முறைகளையும் திரித்துக்கூறி தவறாக முத்திரை குத்திவிடுகின்றனர். இது நமக்கு ஆச்சரியமுண்டாக்க வேண்டியதில்லை, ஏனெனில் ‘நாம் உலகத்தின் பாகமாக இல்லாததனால் உலகம் நம்மைப் பகைக்கும்’ என்று இயேசு தெளிவாக காண்பிக்கிறார். (யோவான் 17:14, NW) சாத்தானால் குருடாக்கப்பட்டிருக்கிறவர்கள் நம்மை பயமுறுத்தி நம்பிக்கையை இழக்கச் செய்யவும் நற்செய்தியைக் குறித்து வெட்கப்பட செய்யவும் நாம் அனுமதிப்போமா? சத்தியத்தைப் பற்றி சொல்லப்படும் பொய்கள், நாம் கூட்டங்களுக்குத் தவறாமல் செல்வதையும் நம்முடைய பிரசங்க நடவடிக்கையையும் பாதிக்க நாம் அனுமதிப்போமா? அல்லது நாம் உறுதியாக நின்று, யெகோவாவையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய சத்தியத்தைத் தொடர்ந்து அறிவித்து வருவதற்கு தைரியமுள்ளோராயும் எப்பொழுதும் இருந்ததைவிட அதிக திடதீர்மானத்துடனும் இருப்போமா?
17. தொடர்ந்து விசுவாசத்தைக் காண்பிப்பதற்கு என்ன உறுதிப்பாடு நம்மைத் தூண்டலாம்?
17 நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனங்களின்படி, இந்த முடிவு காலத்தின் கடைசிக்கட்டத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். நீதியுள்ள புதிய உலகிற்கான நம்முடைய பைபிள் அடிப்படையிலான எதிர்பார்ப்புகள் இன்பம் பொங்கும் நிஜவுலகமாய் ஆவது நிச்சயம். அந்நாள் வரும்வரை, நாமனைவரும் கடவுளுடைய வார்த்தையில் நம்முடைய அசைக்கமுடியாத விசுவாசத்தைக் காண்பித்து, ராஜ்யத்தின் நற்செய்தியை உலகமுழுவதும் பிரசங்கிப்பதில் இடைவிடாமல் செயல்படுவதன் மூலம் நம்முடைய விசுவாசத்தை நிரூபிப்போமாக. ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான புதிய சீஷர்கள் முழுக்காட்டப்படுவதை சிந்தித்துப் பாருங்கள். யெகோவா தம்முடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதன் சம்பந்தமாக பொறுமையாக இருப்பது அநேக மக்கள் இரட்சிப்படைவதில் விளைவடையும் என்பதை மதித்துணருவதற்குப் போதுமான காரணமாய் அது இருக்கிறது அல்லவா? ஜீவனைக் காக்கும் ராஜ்ய பிரசங்க வேலை தொடர்ந்து நடைபெற கடவுள் அனுமதித்திருப்பதற்காக நாம் சந்தோஷமுள்ளவர்களாய் இல்லையா? லட்சக்கணக்கானோர் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தங்களுடைய விசுவாசத்தை செயலில் காண்பிப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லையா?
18. யெகோவாவை சேவிப்பதன் சம்பந்தமாக உங்களுடைய திடதீர்மானம் என்ன?
18 நம்முடைய விசுவாசம் தற்போது சோதிக்கப்பட்டு வருவது எவ்வளவு காலம் தொடரும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் இது மட்டும் நிச்சயம்: தற்போதைய பொல்லாத வானங்களையும் பூமியையும் கணக்குக் கேட்பதற்கான நாளை யெகோவா குறித்துவிட்டார். இதற்கிடையில், நம்முடைய விசுவாசத்தைப் பூரணப்படுத்துகிறவராகிய இயேசு காண்பித்த சோதிக்கப்பட்ட விசுவாசத்தின் மிகச் சிறந்த பண்பை பின்பற்றும்படி நாம் திடதீர்மானமாய் இருப்போமாக. வயதாகிவரும் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரின் முன்மாதிரியையும் நம் மத்தியில் தைரியமாய் சேவைசெய்து வருகிற மற்றவர்களுடைய முன்மாதிரியையும் நாம் பின்பற்றுவோமாக.
19. எது இவ்வுலகை வெல்லும் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்?
19 நடுவானத்தில் பறக்கும் தூதனோடு ஒத்துழைப்போராய், நாம் எல்லா தேசத்தாருக்கும் கோத்திரத்தாருக்கும் பாஷைக்காரருக்கும் ஜனத்தாருக்கும் நித்திய சுவிசேஷத்தை விடாமல் தொடர்ந்து அறிவிப்பதற்கு திடதீர்மானமாய் இருக்க வேண்டும். “கடவுளுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புச்செய்யும் வேளை வந்துவிட்டது” என்று சொல்லும் தூதனின் அறிவிப்பை அவர்கள் கேட்கட்டும். (வெளிப்படுத்துதல் 14:7, தி.மொ.) கடவுளுடைய அந்த நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகையில், நம்முடைய விசுவாசத்தின் சோதிக்கப்பட்ட தரத்தைக் குறித்ததில் பலன் என்னவாயிருக்கும்? அது மகிமையான வெற்றியாக—தற்போதைய காரிய ஒழுங்குமுறையிலிருந்து விடுதலையாகி, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகுக்குள் செல்வதாக—இருக்கும் அல்லவா? நம்முடைய விசுவாசத்தின் சோதனைகளை பொறுமையோடே சகித்து நிலைத்திருப்பதன் மூலம், அப்போஸ்தலன் யோவான் சொன்னபடி, “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்று நம்மால் சொல்ல முடியும்.—1 யோவான் 5:4.
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 1, 1973, பக்கங்கள் 336-43 மற்றும் ஜூலை 1, 1973, பக்கங்கள் 409-11-ஐக் காண்க.
b ஆங்கில காவற்கோபுரம், ஜூலை 15, 1983, பக்கங்கள் 27-31-ஐக் காண்க.
தரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர்
உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?
◻ நம்முடைய விசுவாசத்தின் சோதனைகள் எவ்வாறு மகிழ்ச்சிக்கான ஒரு காரணமாக இருக்கலாம்?
◻ எளிதில் உணரமுடியாத நம்முடைய விசுவாசத்தின் சோதனைகளில் சில யாவை?
◻ நம்முடைய விசுவாசத்தின் சோதனைகளை சமாளிப்பதன் மூலம் நாம் எவ்வாறு நித்தியகாலமாய் பயனடையலாம்?
[பக்கம் 17-ன் படங்கள்]
ஏ. எச். மாக்மில்லனும் (முன்வரிசையில் இடப்பக்கம்) உவாட்ச் டவர் சொஸைட்டியின் அதிகாரிகளும் நியாயமில்லாமல் சிறையிலிடப்பட்ட சமயத்தில்
1928-ல், மிச்சிகனிலுள்ள டெட்ராய்ட்டில் நடந்த மாநாட்டில் அவர் ஒரு பிரதிநிதி
சகோதரர் மாக்மில்லன் அந்திமகாலத்திலும் தொடர்ந்து விசுவாசத்தைக் காண்பித்தார்
[பக்கம் 18-ன் படங்கள்]
இந்தக் குடும்பத்தாரைப் போல, ஆப்பிரிக்காவிலுள்ள அநேகர் விசுவாசத்தின் சோதிக்கப்பட்ட