யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றுங்கள்
“உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.”—லூக்கா 6:36.
1. பரிசேயர் தங்களை இரக்கமில்லாதவராக எப்படிக் காட்டினர்?
கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறபோதிலும், மனிதர்கள் அவருடைய இரக்கத்தை பின்பற்ற தவறி விடுகின்றனர். (ஆதியாகமம் 1:27) உதாரணமாக, பரிசேயரை எடுத்துக் கொள்ளுங்கள். ஓய்வுநாளில், இயேசு சூம்பின கையுடைய ஒரு மனிதனை குணப்படுத்தி தம் இரக்கத்தைக் காட்டியபோது, பரிசேயரின் தொகுதிக்கு துளிகூட மகிழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக, “அவரைக் கொலைசெய்யும்படி” அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள். (மத்தேயு 12:9-14) மற்றொரு சந்தர்ப்பத்தில், பிறவிக் குருடன் ஒருவனை இயேசு குணப்படுத்தினார். மறுபடியும், இயேசுவின் பரிவுணர்ச்சியைக் கண்டு, ‘பரிசேயரில் சிலரால்’ மகிழ்ச்சியடைய முடியவில்லை. மாறாக அவர்கள் இவ்வாறு குறைகூறினர்: “அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல.”—யோவான் 9:1-7, 16.
2, 3. ‘[பரிசேயரின்] புளித்த மாவைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?
2 பரிசேயரின் ஈவிரக்கமற்ற மனநிலை மனிதருக்கு எதிரான குற்றமாகவும் கடவுளுக்கு விரோதமான பாவமாகவும் இருந்தது. (யோவான் 9:39-41) இந்த சிறுபான்மை தொகுதியினர், சதுசேயரைப் போன்ற மற்ற மதத்தினர் ஆகியோரின் ‘புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்’ என்று இயேசு தம் சீஷர்களை எச்சரித்தது நல்ல காரணத்தோடுதான். (மத்தேயு 16:6) பைபிளில் புளித்த மாவு என்பது பாவத்தை அல்லது கறைபடுதலைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே ‘வேதபாரகர், பரிசேயர்’ ஆகியோரின் போதனைகள் உண்மை வணக்கத்தை கறைபடுத்தும் என்பதை இயேசு சொல்லிக் கொண்டிருந்தார். எவ்வாறு? தங்கள் இஷ்டப்படி ஏற்படுத்திய சட்டங்களையும் சடங்குகளையும் கடைப்பிடித்தாலே போதும், கடவுளுடைய சட்டத்தை கடைப்பிடித்ததற்கு சமம் என கருதும்படி மக்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், இரக்கம் உட்பட ‘முக்கிய போதனைகளை’ அசட்டை செய்தார்கள். (மத்தேயு 23:23, பொ.மொ.) இந்த சடங்காச்சார மதம் கடவுளின் வணக்கத்தை தாங்கமுடியாத சுமையைப்போல ஆக்கியது.
3 ஊதாரி மகனைப் பற்றிய நீதிக்கதையின் இரண்டாம் பாகத்தில், யூத மதத் தலைவர்களின் கறைபடிந்த சிந்தனையை இயேசு வெட்டவெளிச்சமாக்கினார். இந்த நீதிக்கதையில் வரும் தகப்பன் யெகோவாவுக்கு படமாக இருக்கிறார்; அவர் தன் மகனை மனப்பூர்வமாய் மன்னிக்கத் தயாராயிருந்தார். ஆனால் ‘பரிசேயரையும் வேதபாரகரையும்’ குறித்துக் காட்டிய ஊதாரியினுடைய அண்ணனின் உணர்ச்சிகள் அதற்கு நேர்மாறாக இருந்தன.—லூக்கா 15:2.
சகோதரனின் கோபம்
4, 5. எந்தக் கருத்தில் ஊதாரியின் அண்ணனுக்கும் பிரச்சினை இருந்தது?
4 “அவனுடைய மூத்தமகன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான்.”—லூக்கா 15:25-28.
5 தெளிவாகவே, இயேசுவின் நீதிக்கதையில் இந்த ஊதாரியிடம் மட்டுமே பிரச்சினை இருக்கவில்லை. “இதில் விவரிக்கப்பட்டுள்ள இரண்டு மகன்களிடமுமே பிரச்சினை இருந்தது; ஒருவன் அநீதியால் இழிவானவனானான், மற்றவன் சுயநீதியால் குருடனானான்” என்று ஒரு இணைக்குறிப்பு சொல்கிறது. ஊதாரியின் அண்ணன் மகிழ்ச்சியடைய மறுத்ததுமின்றி ‘கோபமுமடைந்தான்’ என்பதைக் கவனியுங்கள். “கோபம்” என்ற பதத்தின் கிரேக்க மூல வார்த்தை கோபத்தால் வெடித்தெழுந்து அடங்கிவிடுவதை அல்ல, ஆத்திரத்துடன் மனதுக்குள் வெம்பிக்கொண்டே இருப்பதைக் குறிக்கிறது. இந்த ஊதாரியின் அண்ணன் தன் மனதில் ஆழமான வெறுப்பை வளர்த்திருந்திருக்கலாம்; முதலில் வீட்டைவிட்டு சென்றதே தவறு; அப்படி இருக்கையில் அவன் திரும்பி வந்ததை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம் என இவன் நினைத்தான்.
6. மூத்தமகன் யாருக்கு படமாக இருக்கிறான், ஏன்?
6 இயேசு பாவிகளிடம் காட்டிய பரிவையும் கவனிப்பையும் கண்டு முகம் சுளித்தவர்களுக்கு இந்த ஊதாரியின் அண்ணன் நன்கு பொருந்துகிறான். இயேசுவின் இரக்கத்தைக் கண்டு இந்த சுயநீதிமான்கள் கொஞ்சம்கூட மனம் இளகவில்லை; ஒரு பாவி மனந்திரும்பும்போது பரலோகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியும் இவர்களுக்கு ஏற்படவில்லை. அதற்கு மாறாக, இயேசு காட்டிய இரக்கம் இவர்களுடைய கோபத்தைக் கிளறியது; தங்கள் இருதயங்களில் ‘பொல்லாதவைகளைச் சிந்திக்கத்’ துவங்கினார்கள். (மத்தேயு 9:2-4) ஒரு சந்தர்ப்பத்தில், பரிசேயர்கள் சிலரின் கோபம் தலைக்கேறியது. இயேசு குணப்படுத்தியிருந்த ஒரு மனிதனை வரச்சொல்லி உத்தரவிட்டு, அவனை ஜெப ஆலயத்தைவிட்டு “புறம்பே தள்ளிவிட்டார்கள்,” அதாவது சபைநீக்கம் செய்தார்கள்! (யோவான் 9:22, 34) “உள்ளே போக மனதில்லாதிருந்த” அந்த மூத்த குமாரனைப் போலவே, யூத மதத் தலைவர்கள் ‘சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுவதற்கு’ வாய்ப்பு கிடைத்தபோதும் பிடிவாதமாக மறுத்தார்கள். (ரோமர் 12:15) இயேசு தம் நீதிக்கதையை தொடர்ந்து சொல்கையில் அவர்களுடைய பொல்லாத வாதத்தையும் வெட்டவெளிச்சமாக்கினார்.
தவறான வாதம்
7, 8. (அ) மூத்தமகன் எவ்விதத்தில் மகனாய் இருப்பதன் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளத் தவறினான்? (ஆ) மூத்தமகன் எவ்வாறு தகப்பனிலிருந்து வேறுபட்டான்?
7 “தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.”—லூக்கா 15:28-30.
8 ஊதாரியின் அண்ணன் சொன்ன இந்த வார்த்தைகளிலிருந்து, மகனாய் இருப்பதன் உண்மையான அர்த்தத்தை அவன் புரிந்துகொள்ளவில்லை என்பது தெளிவாய் தெரிகிறது. ஒரு வேலையாள் தன் முதலாளியிடம் பணிபுரிவதுபோல அவன் தகப்பனிடம் வேலை செய்து வந்திருக்கிறான். ஏனென்றால், ‘நான் உமக்கு ஊழியம் செய்தேன்’ என்று அவன் தன் தந்தையிடம் சொன்னான். மூத்தமகன் வீட்டைவிட்டு ஓடவுமில்லை, தன் தகப்பனின் பேச்சை மீறவுமில்லை என்பது உண்மைதான். ஆனால் அவனுடைய கீழ்ப்படிதல் அன்பினால் தூண்டப்பட்ட ஒன்றா? தன் தகப்பனுக்காக வேலை செய்வதில் அவன் உண்மையான மகிழ்ச்சி கண்டடைந்தானா அல்லது ‘வயலில்’ தன் கடமைகளை செய்து வந்ததன் காரணமாக தானே நல்ல மகன் என மார்தட்டிக் கொண்டு மெதுமெதுவாய் ஒருவித சுயதிருப்திக்குள் விழுந்துவிட்டானா? அவன் உண்மையில் பற்றுமாறாத மகனாக இருந்திருந்தால், ஏன் தன் அப்பாவைப்போலவே சிந்திக்காமல் போனான்? தன் தம்பிக்கு இரக்கத்தைக் காட்ட வாய்ப்பு கிடைத்தபோது, ஏன் அவன் தன் இருதயத்தில் அதற்கு இடம் கொடுக்கவில்லை?—சங்கீதம் 50:20-22-ஐ ஒப்பிடுக.
9. யூத மதத் தலைவர்கள் எவ்வாறு மூத்தமகனைப் போலிருந்தார்கள் என்பதை விளக்குங்கள்.
9 யூத மதத் தலைவர்கள் அப்படியே இந்த மூத்தமகனைப் போலிருந்தார்கள். சட்டத்தொகுப்பை அச்சுப்பிசகாமல் பின்பற்றி வந்ததால் கடவுளுக்கு உண்மையோடு இருப்பதாக நம்பினார்கள். உண்மைதான், கீழ்ப்படிதல் மிக அவசியமானதே. (1 சாமுவேல் 15:22) சடங்குகளுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் கடவுளின் வணக்கத்தை இயந்திரத்தனமாக ஆக்கியது; இதனால் தெய்வபக்தி இருதயப்பூர்வமானதாய் இருக்கவில்லை, வெறுமனே மேற்பூச்சாக ஆனது. அவர்களுடைய மனதில் இருந்ததெல்லாம் பாரம்பரியங்கள்தான். அவர்களுடைய இருதயங்களில் அன்பு மருந்துக்குக்கூட இல்லை. அதுமட்டுமா, சாமானியர்களை தங்கள் கால் தூசிக்குச் சமமாகக் கருதினார்கள். ஏளனமாக, “சபிக்கப்பட்டவர்கள்” என்றும்கூட சொன்னார்கள். (யோவான் 7:49) மனதளவில் கடவுளிடமிருந்து தூர விலகியிருந்த இந்த மதத் தலைவர்கள் வெறும் செயல்களால் மட்டும் அவரைப் பிரியப்படுத்திவிட முடியுமா?—மத்தேயு 15:7, 8.
10. (அ) “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்” என்பது ஏன் பொருத்தமான ஆலோசனையாக இருந்தது? (ஆ) இரக்கமின்மை எந்தளவுக்கு கவனம் செலுத்தவேண்டிய ஒரு விஷயம்?
10 “பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு பரிசேயரிடம் சொன்னார். (மத்தேயு 9:13; ஓசியா 6:6) எதற்கெல்லாம் முதலிடம் தரவேண்டும் என்ற விஷயத்தில் அவர்கள் குழம்பிப்போயிருந்தார்கள்; ஏனென்றால் இரக்கம் இல்லாமல் அவர்களுடைய அனைத்து பலிகளுமே பிரயோஜனமற்றவையாக இருக்கும். இது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷயம். ஏனென்றால், ‘மரணத்திற்குப் பாத்திரராயிருப்பதாக’ கடவுள் கருதுவோரின் பட்டியலில் ‘இரக்கமில்லாதோரும்’ இருக்கிறார்கள் என்று பைபிள் காட்டுகிறது. (ரோமர் 1:31, 32) ஒரு தொகுதியாக இந்த மதத் தலைவர்கள் நிரந்தர அழிவுக்கு தகுதியானவர்களாய் இருக்கிறார்கள் என்று இயேசு சொன்னதில் ஆச்சரியமேதுமில்லை. இத்தகைய தீர்ப்பைப் பெறுவதற்கு இவர்களுடைய இரக்கமின்மையே பெரிதும் காரணமாயிருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. (மத்தேயு 23:33) ஆனால் ஒருவேளை இந்தத் தொகுதியிலுள்ள தனி நபர்களுக்கு உதவ முடியும். தம் நீதிக்கதையின் முடிவில், தகப்பன் மூத்த மகனிடம் சொன்ன வார்த்தைகளின் மூலம் இத்தகைய யூதர்களின் மனப்போக்கை சரிசெய்ய இயேசு முயன்றார். எவ்வாறு என்று பார்க்கலாம்.
தகப்பனின் இரக்கம்
11, 12. இயேசுவின் நீதிக்கதையில் வரும் தகப்பன் தன் மூத்த குமாரனுக்கு புரிய வைக்க எவ்வாறு முயலுகிறார், ‘உன் சகோதரன்’ என்று தகப்பன் சொன்னதில் என்ன முக்கியத்துவம் இருந்திருக்கலாம்?
11 “அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான்.”—லூக்கா 15:31, 32.
12 ‘உன் சகோதரன்’ என்று தகப்பன் சொன்னதைக் கவனியுங்கள். ஏன்? மூத்தமகன் ஆரம்பத்தில் தன் தகப்பனோடு பேசுகையில், ஊதாரியான தம்பியை “என் சகோதரன்” என்றல்ல, ‘உம்முடைய குமாரன்’ என்றே அழைத்தான் என்பது நினைவிருக்கிறதா. தனக்கும் தன் தம்பிக்கும் இருந்த இரத்த பந்தத்தை அவன் ஒத்துக்கொள்வதாக தெரியவில்லை. சொல்லப்போனால், இப்போது தந்தை தன் மூத்த மகனிடம் சொல்கிறார்: ‘இவன் என் மகன் மட்டுமல்ல, உன் சகோதரனும்தான். உன் சொந்த இரத்தம். அவன் திரும்பி வந்ததற்காக நீ சந்தோஷப்படவில்லை என்றால் வேறு யார் சந்தோஷப்படுவார்கள்!’ இயேசுவின் செய்தி யூத தலைவர்களுக்கு தெளிவாயிருந்திருக்க வேண்டும். அவர்கள் இழிவாக கருதிய பாவிகள் உண்மையில் அவர்களுடைய ‘சகோதரர்களாய்’ இருந்தார்கள். நிச்சயமாகவே, “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.” (பிரசங்கி 7:20) ஆகவே முதன்மை ஸ்தானத்தில் இருந்த யூதர்களுக்கு, பாவிகள் மனந்திரும்புவதைப் பார்த்து சந்தோஷப்பட எல்லா காரணமும் இருந்தது.
13. இயேசுவின் நீதிக்கதை பட்டென்று முடிவது என்ன முக்கியமான கேள்வியை நம்முன் வைக்கிறது?
13 தகப்பனின் இந்த மன்றாட்டுடன் நீதிக்கதை பட்டென்று முடிவடைகிறது. நீங்களே இதற்கு முடிவை எழுதிக்கொள்ளுங்கள் என இயேசு சொன்னதுபோல் தெரிகிறது. மூத்தமகன் திருந்தினானோ இல்லையோ, கேட்டுக் கொண்டிருந்த ஒவ்வொருவர் முன்பும் இந்த கேள்வி வைக்கப்பட்டது: ‘பாவி மனந்திரும்புகையில் பரலோகத்தில் ஏற்படுகிற மகிழ்ச்சியில் நீங்களும் சேர்ந்து கொள்வீர்களா?’ இன்று கிறிஸ்தவர்களுக்கும் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வாய்ப்பு இருக்கிறது. எவ்வாறு?
இன்று கடவுளின் இரக்கத்தைப் பின்பற்றுதல்
14. (அ) இரக்கத்தைப் பொருத்தமட்டில் எபேசியர் 5:1-ல் உள்ள பவுலின் புத்திமதியை நமக்கு எவ்வாறு பொருத்தலாம்? (ஆ) கடவுளுடைய இரக்கத்தை குறித்ததில் என்ன தவறான எண்ணத்தைப் பற்றி நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்?
14 ‘நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்’ என்று எபேசியர்களுக்கு பவுல் ஆலோசனைக் கூறினார். (எபேசியர் 5:1) எனவே, கிறிஸ்தவர்களாக நாம் கடவுளுடைய இரக்கத்தை நன்றியோடு மதிக்க வேண்டும்; அதை நம் மனதில் ஆழமாகப் பதிய வைக்க வேண்டும்; பின்பு மற்றவர்களிடம் அதைக் காட்ட வேண்டும். இருந்தாலும், இதில் எச்சரிக்கையாயும் இருக்க வேண்டும். கடவுள் மிகவும் இரக்கப்பட்டு பாவத்தை சற்று கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார் என தவறாய் புரிந்துகொள்ளக்கூடாது. உதாரணமாக சிலர், “நான் ஏதாவது தப்பு செஞ்சுட்டு, கடவுள்கிட்ட ஜெபம் பண்ணினால் போதும், அவர் இரக்கப்பட்டு மன்னிச்சுடுவார்” என்று சர்வசாதாரணமாக சொல்லக்கூடும். இத்தகைய மனநிலை, ‘கடவுளுடைய தகுதியற்ற தயவை கெட்ட நடத்தைக்கு சாக்குப்போக்காக பயன்படுத்துவது’ என்று பைபிள் எழுத்தாளராகிய யூதா அழைத்ததற்கு சமமாக உள்ளது. (யூதா 4, NW) யெகோவா இரக்கமுள்ளவராக இருந்தாலும்கூட, மனந்திரும்பாமல் தவறுசெய்கிறவர்களைப் பொருத்தமட்டில், ‘குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடமாட்டார்.’—யாத்திராகமம் 34:7; யோசுவா 24:19-ஐ ஒப்பிடுக; 1 யோவான் 5:16.
15. (அ) மூப்பர்கள் ஏன் குறிப்பாக இரக்கத்தைப் பற்றிய சமநிலையான கருத்தை உடையவர்களாய் இருப்பது அவசியம்? (ஆ) வேண்டுமென்று செய்யப்படும் தவறைப் பொறுத்துக்கொள்ளாதபோதிலும், மூப்பர்கள் என்ன செய்ய முயல வேண்டும், ஏன்?
15 மறுபட்சத்தில், ஒரேயடியாக அதற்கு எதிர்மாறாக செல்வதைக் குறித்தும் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்; அதாவது, தங்களுடைய பாவத்தைக் குறித்து மெய்யான மனந்திரும்புதலையும் தேவனுக்கேற்ற துக்கத்தையும் காட்டுவோரிடம் விடாப்பிடியாகவும் நியாயந்தீர்ப்பவர்களாகவும் இருக்கும் மனநிலை. (2 கொரிந்தியர் 7:11) மூப்பர்களிடம் கடவுளுடைய மந்தையைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பதால், முக்கியமாக நியாயவிசாரணை சம்பந்தப்பட்ட காரியங்களைக் கையாளுகையில் சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். கிறிஸ்தவ சபை சுத்தமாக வைக்கப்பட வேண்டும். சபைநீக்கம் செய்வதன் மூலம் ‘பொல்லாதவனை . . . தள்ளிப்போடுவது’ வேதப்பூர்வமாக சரியானதே. (1 கொரிந்தியர் 5:11-13) அதே சமயத்தில் நியாயமான காரணங்கள் இருக்கும்போது இரக்கம் காட்டுவது சிறந்ததே. எனவே வேண்டுமென்றே செய்யும் தவறை மூப்பர்கள் கண்டும் காணாமல் விடாதபோதிலும், நீதியின் எல்லைக்குள் அன்போடும் இரக்கத்தோடும் உதவ முயலுகின்றனர். “இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” என்ற பைபிள் நியமத்தை அவர்கள் எப்போதும் மனதில் கொள்கிறார்கள்.—யாக்கோபு 2:13; நீதிமொழிகள் 19:17; மத்தேயு 5:7.
16. (அ) தவறு செய்தவர்கள் திரும்பி வரவேண்டுமென்று எவ்வாறு யெகோவா உண்மையிலேயே விரும்புகிறார் என்பதை பைபிளை உபயோகித்து காட்டுங்கள். (ஆ) மனந்திரும்பிய பாவிகளை வரவேற்கிறோம் என்று நாமும்கூட எவ்வாறு காட்டலாம்?
16 தவறு செய்தவர்கள் தம்மிடம் திரும்பி வரவேண்டுமென்றுதான் யெகோவா விரும்புகிறார் என்று ஊதாரியைப் பற்றிய நீதிக்கதை தெளிவாக்குகிறது. உண்மையில், திருந்தவே வாய்ப்பில்லை என்ற நிலை ஏற்படும் வரையாக இத்தகைய அழைப்பை தொடர்ந்து கொடுக்கிறார். (எசேக்கியேல் 33:11; மல்கியா 3:7; ரோமர் 2:4, 5; 2 பேதுரு 3:9) ஊதாரியின் அப்பாவைப்போல், யெகோவா திரும்பி வருகிறவர்களை மதிப்புடன் நடத்துகிறார்; குடும்ப அங்கத்தினருக்குரிய முழு அந்தஸ்துடன் ஏற்றுக் கொள்கிறார். இவ்விஷயத்தில் யெகோவாவை பின்பற்றுகிறீர்களா? சில காலத்துக்கு சபை நீக்கம் செய்யப்பட்ட உடன் விசுவாசி ஒருவர் மீண்டும் சபைக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டால், நீங்கள் எப்படி செயல்படுவீர்கள்? “பரலோகத்தில் . . . சந்தோஷம் உண்டாயிருக்கும்” என்று நமக்கு ஏற்கெனவே தெரியும். (லூக்கா 15:7) ஆனால், இங்கே பூமியில், உங்களுடைய சபையில், உங்கள் இருதயத்தில் சந்தோஷம் இருக்கிறதா? அல்லது நீதிக்கதையில் வந்த மூத்த மகனைப்போல, முதலாவதாக, கடவுளின் மந்தையை விட்டுச் சென்ற இவரை எதற்காக வரவேற்க வேண்டும் என்ற ஒருவித வெறுப்பு மேலிடுகிறதா?
17. (அ) முதல் நூற்றாண்டு கொரிந்து சபையில் என்ன சூழ்நிலை உருவானது, சபையிலிருந்தவர்கள் இந்த விஷயத்தை எவ்வாறு கையாள வேண்டுமென பவுல் ஆலோசனை கொடுத்தார்? (ஆ) பவுலின் புத்திமதி ஏன் நடைமுறையானது, அதை நாம் இன்று எவ்வாறு பொருத்தலாம்? (வலது பக்கத்திலுள்ள பெட்டியையும் காண்க.)
17 இந்த விஷயத்தில் நம்மைநாமே சோதிப்பதற்கு உதவியாக, பொ.ச. 55-ம் வருடத்தில் கொரிந்து பட்டணத்தில் என்ன நடந்ததென்பதைக் கவனியுங்கள். அங்கே, சபை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒரு மனிதன் கடைசியில் தன் வாழ்க்கையில் மாற்றம் செய்தான். சகோதரர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அவர் உண்மையிலே மனந்திரும்பி விட்டாரா என சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டு தொடர்ந்து அறவே ஒதுக்குவார்களா? மாறாக, பவுல் கொரிந்தியர்களை இவ்வாறு துரிதப்படுத்தினார்: “அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும். அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி [“உறுதிப்படுத்தும்படி,” NW] உங்களை வேண்டிக்கொள்கிறேன்.” (2 கொரிந்தியர் 2:7, 8) தவறு செய்வோர் மனந்திரும்பும்போது பெரும்பாலும் அவமானத்தால் கூனிக்குறுகியும் மனமுடைந்த நிலையிலும் இருப்பர். எனவே, யெகோவாவும் உடன் விசுவாசிகளும் நேசிக்கிறார்கள் என்று நம்பிக்கை ஊட்டப்பட வேண்டிய தேவையிலிருப்பார்கள். (எரேமியா 31:3; ரோமர் 1:12, NW) இது மிக அவசியம். ஏன்?
18, 19. (அ) கொரிந்து கிறிஸ்தவர்கள் ஆரம்பத்தில் எவ்வாறு தவறைக் கண்டும் காணாதவர்கள்போல் இருந்தனர்? (ஆ) இரக்கமற்ற மனநிலை, ‘சாத்தானால் வஞ்சிக்கப்படும்படி’ எவ்வாறு கொரிந்தியர்களை வழிநடத்தியிருக்கும்?
18 மன்னிப்பு வழங்கும்படி கொரிந்தியர்களை உற்சாகப்படுத்திய பிறகு, பவுல் அதற்கான ஒரு காரணத்தைக் கொடுத்தார். “இவ்வாறு சாத்தான் நம்மை வஞ்சிக்க இடம் கொடுக்க மாட்டோம். அவனது சதித்திட்டம் நமக்குத் தெரியாதது அல்ல” என்றார். (2 கொரிந்தியர் 2:11, பொ.மொ.) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? ஆரம்பத்தில் கொரிந்து சபையிலுள்ளவர்கள் தவறை கண்டும் காணாதவர்கள்போல் இருந்தனர்; எனவே பவுல் அவர்களை கண்டிக்க வேண்டியிருந்தது. தவறு செய்த அதே நபரை கண்டிக்காமல் தொடர்ந்து பாவம் செய்ய அனுமதித்தனர். அவ்வாறு செய்வதன் மூலம், சபை, குறிப்பாக அதன் மூப்பர்கள், சபையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க விரும்புகிற சாத்தானின் கைப்பாவைகளாக நடந்து கொண்டனர்.—1 கொரிந்தியர் 5:1-5.
19 இப்போதோ, மூப்பர்கள் அதற்கு எதிர்மாறாக செயல்பட்டால், அதாவது, மனந்திரும்புகிற அந்நபரை மன்னிக்க மறுத்தால், சாத்தான் மற்றொரு விதத்தில் அவர்களை மோசம் போக்குவான். எவ்வாறு? அவர்கள் கொடூரமானவர்களாகவும் இரக்கமில்லாதவர்களாகவும் இருப்பதை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். மனம்திரும்பிய பாவி, ‘அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோனால்’ அல்லது டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் குறிப்பிடுகிறபடி, “சோகத்தால் ஒரேடியாக விழுந்துவிட்டால்,” யெகோவாவுக்கு முன்பு மூப்பர்கள் என்னே பெரும் பொறுப்புள்ளவர் ஆவார்கள்! (ஒப்பிடுக: எசேக்கியேல் 34:6; யாக்கோபு 3:1.) ‘சிறியோருள் எவராவது’ இடறி விழுவதற்கு காரணமாக இருப்பதற்கெதிராக எச்சரித்த பிறகு, நல்ல காரணத்துடனேயே இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதர சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள்.”a—லூக்கா 17:1-4, பொ.மொ., நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
20. பாவி மனந்திரும்புகையில் எவ்வழியில் பரலோகத்திலும் பூமியிலும் சந்தோஷம் உண்டாகும்?
20 ஒவ்வொரு வருடமும், மனந்திரும்பி மீண்டும் தூய வணக்கத்துக்குள் வரும் ஆயிரக்கணக்கானோர் யெகோவா தங்களுக்கு காட்டியிருக்கும் இரக்கத்துக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். திரும்பவும் சேர்த்துக் கொள்ளப்பட்ட பிறகு ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு சொல்கிறாள்: “என் வாழ்க்கையில எதுவுமே எனக்கு இந்தளவுக்கு சந்தோஷத்த கொடுத்ததில்ல.” உண்மைதான், அவளுடைய சந்தோஷத்தில் தூதர்களும் சேர்ந்து கொள்கின்றனர். பாவி மனந்திரும்புகையில் ‘பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷத்தில்’ நாமும் சேர்ந்துகொள்வோமாக. (லூக்கா 15:7) அவ்வாறு செய்வதன் மூலம் நாம் யெகோவாவின் இரக்கத்தைப் பின்பற்றலாம்.
[அடிக்குறிப்புகள்]
a கொரிந்து சபையில், தவறு செய்தவர் சீக்கிரத்திலேயே திரும்ப சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டதாக தோன்றினாலும்கூட, சபை நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் இதையே அடிப்படையாக வைத்து தீர்ப்பு செய்யக்கூடாது. ஒவ்வொருவரது விஷயத்திலும் இது வித்தியாசப்படுகிறது. தவறு செய்த சிலர் சபை நீக்கம் செய்யப்பட்ட உடனேயே உண்மையான மனந்திரும்புதலை காட்டத் தொடங்குவார்கள். மற்றவர்களுக்கோ அத்தகைய மனநிலையைக் காட்டுவதற்கு சில காலம் ஆகலாம். என்றாலும் இவர்கள் எல்லாருமே, தேவனுக்குரிய துக்கத்தை முதலில் காட்ட வேண்டும்; பிறகு, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் மனந்திரும்புதலுக்கேற்ற செயலை வெளிக்காட்ட வேண்டும். அப்போதுதான் சபையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட முடியும்.—அப்போஸ்தலர் 26:20; 2 கொரிந்தியர் 7:11.
மறுபார்வை
◻ ஊதாரியின் அண்ணன் எவ்வழியில் யூத மதத் தலைவர்களைப் போல இருக்கிறான்?
◻ மகனாய் இருப்பதன் உண்மையான அர்த்தத்தை ஊதாரியின் அண்ணன் எந்த வழிகளில் புரிந்துகொள்ளத் தவறினான்?
◻ கடவுளைப் போல் இரக்கம் காட்டுகையில், என்ன இரண்டு விதங்களில் மிதமிஞ்சிச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்?
◻ இன்று நாம் எவ்வாறு கடவுளுடைய இரக்கத்தை பின்பற்றலாம்?
[பக்கம் 17-ன் பெட்டி]
‘உங்களுக்கு அவன் மீதிருக்கும் அன்பை உறுதிப்படுத்துங்கள்’
சபைநீக்கம் செய்யப்பட்டு பின் மனந்திரும்புதலைக் காட்டிய நபரைக் குறித்து பவுல் கொரிந்து சபையிலிருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “உங்களுக்கு அவன் மீதிருக்கும் அன்பை உறுதிப்படுத்தும்படி உங்களுக்கு புத்தி சொல்கிறேன்.” (2 கொரிந்தியர் 2:8, NW) “உறுதிப்படுத்து” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை சட்டத்துறையில் பயன்படுத்தப்படும் வழக்கு; அதன் அர்த்தம் “செல்லத்தக்கதாக்கு” என்பதே. மனந்திரும்புவோர் நிலைநாட்டப்படும்போது, தாங்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்றும் சபையின் அங்கத்தினர்களாக மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் உணர வேண்டியது அவசியம்.
சபையிலுள்ள பெரும்பாலானோருக்கு ஏன் ஒரு நபர் சபைநீக்கம் செய்யப்பட்டார் என்றோ, ஏன் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்றோ தெரியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கூடுதலாக, மனந்திரும்பிய நபர் செய்திருந்த தவறால் சிலர் தனிப்பட்ட விதமாக பாதிக்கப்பட்டோ புண்படுத்தப்பட்டோ இருக்கலாம்; ஒருவேளை நீண்ட காலத்துக்குக்கூட அதன் பாதிப்பு இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் சிலருக்கு உள்ள மனநிலை புரிந்துகொள்ளத்தக்கதே; தனிப்பட்ட விதமாக, அவர்களை வரவேற்றாலொழிய ஒருவர் திரும்ப சேர்த்துக் கொள்ளப்பட்டதைக் குறித்து அறிவிப்பு செய்யப்படும்போது, அவரை வரவேற்பது கடினமாக இருக்கும்.
நிலைநாட்டப்பட்டவர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாக மீண்டும் வரவேற்கப்படுகிறார்கள் என்பதை அறியும்போது அது அவர்களின் விசுவாசத்தை எந்தளவுக்கு பலப்படுத்துகிறது! மனந்திரும்பிய அத்தகைய நபர்களுடன் உரையாடுவதன் மூலமும், ராஜ்ய மன்றத்திலும், வெளி ஊழியத்திலும், மற்ற பொருத்தமான சந்தர்ப்பங்களிலும் அவர்களுடைய கூட்டுறவை அனுபவிப்பதன் மூலமும் நாம் அவர்களை உற்சாகப்படுத்த முடியும். இவ்விதமாக நம் பிரியத்துக்குரியோரான இவர்களுக்கு நம் அன்பை உறுதிப்படுத்துவதன் அல்லது செல்லத்தக்கதாக்குவதன் மூலம் அவர்கள் செய்த பாவத்தின் கடுமையை நாம் எவ்விதத்திலும் குறைத்துப் போடுவதில்லை. மாறாக, பாவமுள்ள வழியை விட்டு யெகோவா தேவனிடம் திரும்பி வந்ததற்காக பரலோக தூதர்களுடன் சேர்ந்து நாமும் மகிழ்கிறோம்.—லூக்கா 15:7.
[பக்கம் 15-ன் படம்]
தம்பி திரும்பி வந்ததைக் குறித்து அண்ணன் மகிழ்ச்சியடையவில்லை