நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?
இந்த நவீன உலகிலும்கூட பைபிளை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு சுற்றாய்வு செய்யப்பட்டது; அதில் பைபிளை கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாக நம்புவதாய் 80 சதவீதத்தினர் தெரிவித்தார்கள். ஒருவேளை நீங்கள் வாழும் பகுதியில் இத்தனை அநேகர் பைபிளை நம்பாமல் இருக்கலாம்; ஆனால், அவ்வாறு நம்புகிறவர்கள் சர்ச்சுகள் பைபிளை கற்பிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயம்தான். ஆனால், பெரும்பாலும் அது நடப்பதே இல்லை. உதாரணமாக, இறப்புக்கு பின் தண்டனை என்ற கோட்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றியோ, எரிநரகத்தைப் பற்றியோ பைபிள் எந்த இடத்திலாவது கற்பிக்கிறதா? கிறிஸ்தவ மண்டலத்தை (பெயருக்கு கிறிஸ்தவர்களாய் இருப்போர்) சேர்ந்த அநேக நிபுணர்கள் இல்லை என இன்று பதிலளிப்பார்கள். நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “முடிவாக சொல்லவேண்டுமென்றால், உத்தரிக்கும் ஸ்தலத்தைப் பற்றிய கத்தோலிக்க கோட்பாட்டுக்கு பரிசுத்த வேதாகமம் அல்ல, பாரம்பரியம்தான் அடிப்படை.” நரகத்தைக் குறித்து, எ டிக்ஷ்னரி ஆஃப் கிறிஸ்டியன் தியாலஜி குறிப்பு சொல்கிறது: “பு[திய] ஏ[ற்பாட்டில்], பூர்வ கிறிஸ்தவர்கள் எரிநரகத்தைப் பற்றி பிரசங்கித்ததாய் பதிவே இல்லை.”
உண்மையில், எரிநரகம் என்ற கோட்பாட்டை ஒட்டுமொத்தமாக நீக்கும்படி சமீபத்தில் சர்ச் ஆஃப் இங்லண்டின் கோட்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர்; அந்த அறிக்கை செய்தித்தாளில் தலையங்கச் செய்தியாக வெளிவந்தது. லிச்பீல்ட் கத்தீட்ரலின் டீன் ரெவரண்ட் டாக்டர் டாம் ரைட், கடந்தகாலங்களில் நரகத்தைப் பற்றி விவரிக்கப்பட்ட மனக்காட்சி, “கடவுளை கொடிய இராட்சசனாக சித்தரித்து, அநேகருடைய மனதில் ஆழமான தழும்பை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிடுகிறார். நரகம் “என ஒன்று இல்லவே இல்லை” என அந்த குழுவின் அறிக்கை விவரிக்கிறது.a இதே விதமாகவே, கத்தோலிக்கரின் கருத்தைக் குறித்து நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “நரகம், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்துகிற ஒரு பிரச்சினை என்ற கோணத்தில் இறைமையியல் அதை அணுகுகிறது.”
இறந்தவர்களின் நிலையைப் பற்றி பைபிள் கற்பிப்பதும் உத்தரிக்கும் ஸ்தலம், எரிநரகம் ஆகிய போதனைகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன என்பதே உண்மை. பைபிள் சொல்கிற பிரகாரம், செத்தவர்கள் ஒன்றுமே அறியாத நிலையில் இருக்கிறார்கள்; வேதனையை உணர முடியாத மரத்துப்போன நிலைதான் அது. “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) இறந்து போனவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் உயிர்ப்பெற்று வருவார்கள் என்பதே பைபிள் தரும் நம்பிக்கை. இயேசுவின் நண்பர் லாசரு இறந்தபோது, அவர் மரணத்தை தூக்கத்திற்கு ஒப்பிட்டுப் பேசினார். லாசருவின் சகோதரியாகிய மார்த்தாள் பைபிளின் நம்பிக்கையை வெளிப்படுத்தினாள்; “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். இறந்த லாசருவை உயிரோடு எழுப்பியதன் மூலம், மனிதர்கள் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பதற்கு இயேசு வலுவான அஸ்திவாரம் போட்டார்.—யோவான் 5:28, 29; 11:11-14, 24, 44.
மனிதனுக்குள்ளே, தனித்து வாழும், ஓர் அழியாத ஏதோவொன்று இருக்கிறது என்ற போதனை பைபிளிலிருந்தல்ல, கிரேக்க தத்துவத்திலிருந்துதான் தோன்றியது என்று சரித்திர ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். பண்டையகால எபிரெயர்கள், காணக்கூடிய உடலும் காணமுடியாத ஏதோவொன்றையும் தனக்குள் உடையவனே மனிதன் என்பதாக கருதவில்லை என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது.
சமீபத்தில் கத்தோலிக்க நிபுணர்கள், ‘ஆத்துமா அழியாது என்ற கிரேக்க தத்துவத்தின் கருத்தில் பு[திய] ஏ[ற்பாடு] கற்பிக்கவில்லையென சொல்லுகிறார்கள்’ என்று அதே என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது. அது இவ்வாறு முடிக்கிறது: “இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைத் தீர்வு தத்துவங்களின் ஊகத்தில் அல்ல, இயற்கைக்கும் அப்பாற்பட்ட பரிசாகிய உயிர்த்தெழுதலில்தான் காண முடியும்.”
பைபிளா பாரம்பரியமா?
அப்படியானால், பைபிளில் இல்லாத கருத்துக்கள் எவ்வாறு சர்ச் போதனைகளில் நுழைந்தன? பைபிளுக்கே எல்லாவற்றுக்கும் மேலான முக்கியத்துவம் கொடுப்பதாக அநேக சர்ச்சுகள் உரிமைப் பாராட்டுகின்றன. உதாரணமாக, பைபிளை, “முழுவதும் சத்தியமாகவும், நம்முடைய விசுவாசத்திற்கான உயர்ந்த தராதரத்தை நிர்ணயிக்கும் ஒன்றாகவும் விசுவாசிகள் ஏற்றுக்கொள்வது” அவசியம் என சமீபத்தில் இரண்டாம் போப் ஜான் பால் பேசினார். இன்று கிறிஸ்தவமண்டலத்தின் போதனைகள் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் போதனைகளுக்கு ஒத்ததாக இல்லை என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சர்ச்சின் கோட்பாடுகள் படிப்படியாக உருப்பெறுகையில் இத்தகைய மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவையே என பெரும்பாலான சர்ச்சுகள் கருதுகின்றன. அதுமட்டுமல்லாமல், பைபிளுக்கு இணையான முக்கியத்துவம் சர்ச் பாரம்பரியங்களுக்கும் இருக்கிறது என்பது கத்தோலிக்க சர்ச்சின் கருத்து. சர்ச், “எந்த கோட்பாடாய் இருந்தாலும்சரி, அதை பைபிளின் அடிப்படையில் மாத்திரமோ அல்லது பாரம்பரியங்களின் அடிப்படையில் மாத்திரமோ அல்ல, இவை இரண்டின் அடிப்படையில்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறது” என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது.
சர்ச்சுகள் பைபிள் போதனைகளை, பாரம்பரியத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட போதனைகளால் மாற்றீடு செய்திருக்கின்றன என்பதற்கு சரித்திரமும் அத்தாட்சி அளிக்கிறது. உண்மையில், பைபிளின் போதனைகள் தவறென்று அநேக சர்ச்சுகள் இன்று கற்பிக்கின்றன. உதாரணமாக, “விஞ்ஞானம் மற்றும் சரித்திரத்தின் நவீன அறிவின்படி மதிப்பிட்டால் அநேக பைபிள் சார்ந்த கருத்துக்கள் சிறிதும் உண்மையாக இல்லை என்பது தெளிவாயிருக்கிறது” என நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா தெரிவிக்கிறது. இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்ற பைபிளின் போதனையைக் குறித்துப் பேசும்போது, அது இவ்வாறு குறிப்பிடுகிறது: “மதசம்பந்தமான விஷயங்களிலும்கூட, ப[ழைய] ஏ[ற்பாடு] . . . மரணத்துக்கு பின்பான வாழ்க்கையைப் பற்றி தெளிவற்ற புரிந்துகொள்ளுதலை கொடுக்கிறது.” அந்த என்ஸைக்ளோப்பீடியா சங்கீதம் 6:5-ஐ (சில பைபிள்களில் வசனம் 6) இதற்கு ஒரு உதாரணமாக மேற்கோள் காட்டுகிறது: “மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்?” பைபிளில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாம் உண்மை என சில புராட்டஸ்டண்ட் செமினரிகளும் கல்லூரிகளும் இனியும் கற்பிப்பதில்லை. மறுபட்சத்தில் கத்தோலிக்க சர்ச், போதிக்கும் அதிகாரம் தனக்கே உள்ளது என உரிமைப் பாராட்டுகிறது; அதனால் பைபிளுக்கு அது தன் சொந்த விளக்கத்தை கொடுக்கிறது. ஆனால், ‘அவ்விளக்கங்கள் பைபிளுக்கு முரணாகத் தோன்றினால் அப்போது என்ன செய்வது?’ என நீங்கள் யோசிக்கலாம்.
பைபிளின் முக்கியத்துவம்
இயேசு வேதவசனங்களை மட்டுமே நம்பத்தக்கவையாக கருதினார்; அதனால்தான் மீண்டும் மீண்டுமாக, “ . . . என்று எழுதியிருக்கிறதே” என அவற்றிலிருந்து மேற்கோள் காட்டினார். (மத்தேயு 4:4, 7, 10; லூக்கா 19:46) திருமண பந்தத்தைக் குறித்துப் பேசுகையில், கிரேக்க தத்துவ ஊகங்களுக்கு அவர் கவனத்தைத் திருப்பவில்லை; மாறாக ஆதியாகமத்தில் உள்ள சிருஷ்டிப்பின் விவரப்பதிவிற்கு கவனத்தை திருப்பினார். (ஆதியாகமம் 1:27; 2:24; மத்தேயு 19:3-9) தெளிவாகவே, இயேசு வேதவசனங்களை கடவுளால் ஏவப்பட்டவையாகவும் உண்மையுள்ளவையாகவும் கருதினார். கடவுளிடம் ஜெபிக்கையில், “உம்முடைய வசனமே சத்தியம்” என்று அவர் சொன்னார்.—யோவான் 17:17.b
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்களை அவர் கண்டனம் செய்ததைக் குறித்து பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தை நிலைநாட்ட கடவுளுடைய கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். . . . உங்கள் பாரம்பரியத்தினால் கடவுளின் வார்த்தையை பயனற்றதாக்குகிறீர்கள்.” (மாற்கு 7:6-13, NW) அதைப்போலவே, அப்போஸ்தலனாகிய பவுலும்கூட கிரேக்க தத்துவமோ தவறான பாரம்பரியங்களோ தான் போதித்த விஷயங்களில் கலந்துவிடாதபடிக்கு அதன் செல்வாக்கை எதிர்த்தார். ‘தத்துவ சாஸ்திரம், மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளை கொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரை முறைமைக்கு . . . இசைந்தவைகளே’ என அவர் எச்சரித்தார். (கொலோசெயர் 2:8, திருத்திய மொழிபெயர்ப்பு; 1 கொரிந்தியர் 1:22, 23; 2:1-13) கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமென பவுல் வற்புறுத்திய சில பாரம்பரியங்கள் அல்லது போதனைகள் இருந்தன; ஆனால் அவை பைபிளின் அடிப்படையிலும், அவற்றிற்கு முற்றிலும் இசைவாகவும் இருந்தன. (2 தெசலோனிக்கேயர் 2:13-15) “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் [“முற்றிலும்,” NW] தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக . . . பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
பைபிளிலிருந்து வழிவிலகிச் செல்லும் ஒரு காலம் வரும் என்பதை பவுல் முன்னரே உணர்ந்தார். அவர் தீமோத்தேயுவை இவ்வாறு எச்சரித்தார்: ‘ஒரு காலம் வரும், அப்போது மக்கள் நலந்தரும் போதனையைத் தாங்கமாட்டார்கள், . . . உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பார்கள்.’ ஆனால் அவர் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீயோ அனைத்திலும் அறிவுத் தெளிவோடிரு.” (2 தீமொத்தேயு 4:3-5, பொது மொழிபெயர்ப்பு) ஆனால் எவ்வாறு? “பரந்த மனப்பான்மை”யுள்ளவர்களாய் இருப்பதன் மூலம். “எதையும் கற்றுக்கொண்டு, நியாயமாக மதிப்பிடுவதற்கான விருப்பம்” என இந்த பைபிள் வார்த்தையை கிரேக்க லெக்ஸிகன் வரையறுக்கிறது. முதல் நூற்றாண்டில் பவுல் பேசுவதை செவிகொடுத்துக் கேட்ட பெரோயா நாட்டவரை விவரிக்க லூக்கா இந்தப் பதத்தைப் பயன்படுத்தினார். பவுலின் போதனை அவர்களுக்கு புதியதாக இருந்தது; அவர்கள் தவறாக வழிநடத்தப்படவும் விரும்பவில்லை. அவர்களைப் பாராட்டி, லூக்கா இவ்வாறு எழுதினார்: “அங்கு இருந்தவர்கள் [பெரோயா நாட்டவர்] தெசலோனிக்காவில் உள்ளவர்களைவிடப் பரந்த மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் முழு ஆர்வத்துடன் இறை வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறுவன மறைநூலுடன் ஒத்துள்ளதா என நாள்தோறும் ஆய்ந்து வந்தார்கள்.” பரந்த மனப்பான்மை பெரோயா மக்களை சந்தேகப்பிராணிகளாகவோ எதையும் உடனடியாக நம்பாதவர்களாகவோ ஆக்கவில்லை. அவர்களுடைய இத்தகைய நேர்மையான ஆய்வின் விளைவாக “பலரும் நம்பிக்கை கொண்டனர்.”—அப்போஸ்தலர் (திருத்தூதர் பணிகள்) 17:11, 12, பொ.மொ.
பைபிளின்படி வாழ்வதன் பயன்கள்
பூர்வ கிறிஸ்தவர்கள் பைபிளைப் புள்ளிமாறாமல் பின்பற்றியதற்காகவும், தங்களையே தியாகம் செய்யும் அன்பிற்காகவும் புகழ் பெற்றவர்கள். ஆனால், இன்றோ, அநேக ஆட்கள், ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:5) பூர்வ கிறிஸ்தவத்திற்கு இசைவாக இல்லாத இன்றைய எந்த கிறிஸ்தவமும் மக்களின் வாழ்க்கையில் நல்ல செல்வாக்கை ஏற்படுத்த முடியாது. கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பாலோர் மத்தியில், வன்முறை, ஒழுக்கக்கேடு, குடும்ப சீர்குலைவு, பொருளாசை ஆகியவை அதிகரித்து வருவது ஏன் என்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? சில “கிறிஸ்தவ” நாடுகளில், கிறிஸ்தவ பிரிவுக்குள்ளேயே மிருகத்தனமான இனக் கலவரங்கள் நடைபெறுகின்றன.
பெரோயா மக்களைப்போல பரந்த மனப்பான்மை உள்ளவர்கள் இன்று எங்குமே இல்லையா? பைபிளை விசுவாசித்து, அதற்கு இசைவாக வாழும் மக்கள் தொகுதியினர் இன்று உள்ளனரா?
என்ஸைக்ளோப்பீடியா கனடியானா குறிப்பிடுகிறது: “யெகோவாவின் சாட்சிகள், நம் சகாப்தத்தின் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயேசுவாலும் அவருடைய சீஷர்களாலும் கடைப்பிடிக்கப்பட்ட பண்டைய கிறிஸ்தவத்தை மீண்டும் நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களது வேலையை அதன் மறுமலர்ச்சி எனலாம்.” சாட்சிகளைக் குறித்து நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா குறிப்பிடுகிறது: “அவர்களுக்கு பைபிள்தான் நம்பிக்கையின் ஒரே ஆதாரம்; அவர்களுடைய நடத்தைக்குரிய விதிமுறையும் இதுவே.”
உலக முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ஆவிக்குரிய செழுமைக்காகவும் சமாதானத்திற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பிரபலமாயிருப்பதற்கு இதுவே முக்கியமான காரணம் என்பதில் சந்தேகமில்லை. பைபிளின் ஆவிக்குரிய ஆரோக்கியமான போதனைகளை அதிகம் கற்றுக்கொள்ளும்படி எங்களுடைய வாசகர்களை உற்சாகப்படுத்துகிறோம். அறிவு பெருகப்பெருக பைபிளில் நம்பிக்கை வலுப்படலாம்; கடவுள்மீதுள்ள விசுவாசத்தில் பலப்படலாம். இத்தகைய விசுவாசத்தின் நிரந்தர பலன்களை கருத்தில் எடுத்துக்கொண்டால், இதற்காக எடுக்கும் எந்த முயற்சியும் தகுந்ததே என அறிவோம்.
[அடிக்குறிப்புகள்]
a நேஷனல் பப்ளிக் ரேடியோ—“மார்னிங் எடிஷன்”
b பைபிளின் நம்பகத்தன்மையின் பேரிலான கூடுதல் தகவல்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கும் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைக் காண்க.
[பக்கம் 6-ன் படம்]
அப்போஸ்தலர் பவுலும் மற்றவர்களும் கடைத்தெருக்களில் பிரசங்கித்தனர்
[பக்கம் 7-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகளுக்கு, “பைபிள்தான் நம்பிக்கையின் ஒரே ஆதாரம்; அவர்களுடைய நடத்தைக்குரிய விதிமுறையும் இதுவே”