ஏன் இயேசு கிறிஸ்துவை நம்பலாம்?
“கிறிஸ்தவர்கள் அல்லாத அநேகரும்கூட அவர் பெரிய போதகர், ஞானி என நம்புகின்றனர். இதுவரை வாழ்ந்தவர்களிலேயே மக்கள்மீது அதிக செல்வாக்கு செலுத்தியவர்களில் நிச்சயமாகவே இவரும் ஒருவர்.” (த உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா) “அவர்” யார்? அவர்தான் கிறிஸ்தவ மத ஸ்தாபகராகிய இயேசு கிறிஸ்து.
ஆனால் என்ஸைக்ளோப்பீடியா இப்படி சொன்னபோதிலும், கோடிக்கணக்கான கீழை நாட்டவருக்கும் பிறருக்கும் இயேசு கிறிஸ்து ஓர் அந்நியராகவே தெரிகிறார். இவருடைய பெயர் ஏதோ பள்ளி பாட நூல்களில் படித்த ஒரு பெயராகவே அவர்களுடைய ஞாபகத்திற்கு வருகிறது. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளிலும்கூட, இயேசுவைப் பற்றி உண்மையிலேயே எங்களுக்கு தெரியாது என்று சொல்கிற இறையியலாளர்களும் பாதிரிமார்களும் இருக்கின்றனர். பைபிளில் காணப்படும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றின் (நான்கு சுவிசேஷங்கள்) உண்மைத் தன்மையைக் குறித்து அவர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.
இயேசுவின் வாழ்க்கை சரிதையை சுவிசேஷ எழுத்தாளர்கள் கற்பனையாக புனைந்திருக்கக் கூடுமா? அப்படி செய்திருக்கவே முடியாது! அந்தச் சுவிசேஷ பதிவுகளை ஆராய்ந்தபின் பிரபல சரித்திர ஆசிரியர் வில் டியூரன்ட் இவ்வாறு எழுதினார்: “சாதாரண மனிதர்கள் சிலர் அத்தனை வல்லமையும் கவர்ச்சியுமிக்க ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த நன்னெறியையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை ஊக்கமூட்டும் ஒரு காட்சியையும் ஒரே சந்ததிக்குள் உருவாக்கிட முடியும் என்றால், அது சுவிசேஷங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் நம்ப முடியாத ஓர் அற்புதமாகவே இருக்கும். நுட்பப்பிழை காண்போருடைய இரண்டு நூற்றாண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்துவின் வாழ்க்கை, பண்பு, அவருடைய போதனை ஆகியவற்றை பற்றிய குறிப்புரைகள் தெளிவாக இருக்கின்றன. இந்த மேலை நாட்டு மனிதரைப் பற்றிய சரித்திரத்தில் மனதைக் கவரத்தக்க அம்சம் அடங்கியுள்ளது.”
இருப்பினும், இயேசு கிறிஸ்து முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு லாயக்கற்றவர் என்று அவரை ஒதுக்கிவிடுகிறவர்கள் இருக்கின்றனர். அவரை பின்பற்றுவதாக உரிமை பாராட்டுகிறவர்களுடைய செயலே இதற்கு காரணம். ‘நாகசாகியில் அணுகுண்டு போட்டவர்களே இவர்கள்தான்’ என ஜப்பானிலுள்ள சிலர் காரணம் காட்டுகின்றனர். ஆனால் ‘ஜப்பானிலுள்ள வேறெந்த நகரங்களையும்விட நாகசாகியில் நிறைய கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள்.’ மருத்துவருடைய ஆலோசனையை நோயாளி பின்பற்ற தவறினால், மருத்துவரை நீங்கள் குற்றம் சாட்டுவீர்களா? மனிதவர்க்கத்தின் நோய்களை குணமாக்குவதற்கு இயேசு கொடுத்த ‘மருந்துசீட்டை’ கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டுகிறவர்கள் கிழித்தெறிந்துவிட்டார்கள். ஆனால், உலகிலுள்ள அனைத்து மக்களின் அன்றாட அல்லல்களுக்கும் அவலங்களுக்கும் பரிகாரத்தை இயேசு கொடுத்தார். அதனால்தான் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதை நீங்களே ஆராய்ந்து பார்ப்பதற்கு பின்வரும் கட்டுரையை வாசிக்கும்படி உங்களை அழைக்கிறோம்.