கிரேக்க தத்துவம்—கிறிஸ்தவத்திற்கு வளமூட்டியதா?
“கிறிஸ்தவம், புறமத கிரேக்க மற்றும் ரோம கலாச்சாரங்களை எதிர்த்தது உண்மையே என்றாலும் கிரேக்க, ரோம தத்துவங்களைப் பெருமளவில் தனதாக்கிக்கொண்டது.”—தி என்சைக்ளோபீடியா அமெரிக்கானா.
“கிறிஸ்தவ” கோட்பாட்டின் மீது செல்வாக்கு செலுத்திய அநேகருள் முக்கிய பங்கு வகிக்கும் ஒருவர் “புனிதர்” அகஸ்டீன் ஆவார். அகஸ்டீனின் “மனம் என்ற கலனில்தான் புதிய ஏற்பாட்டின் மதமும் கிரேக்க தத்துவத்தின் பிளேட்டோனிய மரபும் இரண்டறக் கலந்தன; இந்தக் கலப்பின் விளைபொருள், மத்திபகால கிறிஸ்தவமண்டலத்தின் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் மறுமலர்ச்சியடைந்த புராட்டஸ்டன்ட் மதத்திற்கும் கடத்தப்படுவதற்கு காரணமும் இவரது மனமே” என த நியூ என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது.
அகஸ்டீன் விட்டுச்சென்ற மனப்போக்கு நிலைத்திருக்கிறது. கிரேக்க தத்துவம் கிறிஸ்தவமண்டலத்தை எவ்வளவாய் பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி டக்லஸ் டீ. ஹோல்டன் இவ்வாறு கூறினார்: “கிறிஸ்தவ இறையியல், கிரேக்க தத்துவத்தோடு பிரிக்கமுடியாதபடி கலந்துவிட்டது. அதனால், ஒன்பது பகுதி கிரேக்க எண்ணமும் ஒரு பகுதி கிறிஸ்தவ எண்ணமும் கலந்த நபர்கள் உருவாவதில் விளைவடைந்திருக்கிறது.”
இந்தத் தத்துவத்தின் பாதிப்பு, தொட்டிலில் தவழ்ந்த கிறிஸ்தவத்திற்கு பாலூட்டி, அதன் போதகத்திற்கு வளமூட்டி, அதிக நம்பத்தக்கதாக ஆக்கியதென சில நிபுணர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனால் இது உண்மையா? கிரேக்க தத்துவத்தின் பாதிப்பு எப்போது, எப்படி ஏற்பட்டது? அது கிறிஸ்தவத்திற்கு பாலூட்டியதா அல்லது அதைப் பாழாக்கியதா?
பொ.ச.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பொ.ச. ஐந்தாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த அநேக காரியங்களின் முன்னேற்றத்தை ஆராய்வது அறிவொளியூட்டுவதாக இருக்கும். இதை, (1) “கிரேக்க மயமாக்கப்பட்ட யூதமதம்,” (2) “கிறிஸ்தவ மயமாக்கப்பட்ட கிரேக்க கலாச்சாரம்,” (3) “கிரேக்க மயமாக்கப்பட்ட கிறிஸ்தவம்,” (4) “கிறிஸ்தவ தத்துவம்” என்ற வினோதமான நான்கு வாசகங்களை ஆராய்வதன் மூலம் செய்யலாம்.
“கிரேக்க மயமாக்கப்பட்ட யூதமதம்”
“கிரேக்க மயமாக்கப்பட்ட யூதமதம்” என்ற முதல் வாசகம் உண்மையில் ஒரு முரண்பாடே. உண்மையான கடவுளாகிய யெகோவா ஆரம்பித்து வைத்த எபிரெயர்களின் மதம், பொய்மத கருத்துகளால் கறைப்படுவதை அவர் விரும்பவில்லை. (உபாகமம் 12:32; நீதிமொழிகள் 30:5, 6) இருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே வணக்க சுத்தம் அபாயத்திலிருந்தது. அருகிலிருந்த தேசங்களாகிய எகிப்து, கானான், பாபிலோன் போன்றவற்றின் பொய்மத பழக்கங்களும் எண்ணங்களும் அதைக் கறைப்படுத்தும் ஆபத்து இருந்தது. வருத்தகரமாக, உண்மை வணக்கம் அதிகளவு அசுத்தமாகும்படி இஸ்ரவேல் அனுமதித்துவிட்டது.—நியாயாதிபதிகள் 2:11-13.
பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில், பூர்வ பலஸ்தீனா மகா அலெக்ஸாண்டருடைய கிரேக்க சாம்ராஜ்யத்தின் பாகமானது. அப்போது இந்தச் சீர்கேடு உச்சக்கட்டத்தை அடைந்து, நிலைத்து நிற்கும், அரித்துத்தின்னும் மனப்போக்கை பின்வைத்துப் போனது. அலெக்ஸாண்டர் யூதர்களையும் தன் இராணுவத்தில் சேர்த்துக்கொண்டார். யூதர்களுக்கும் அவர்களைக் கைப்பற்றிய புதிய அரசனுக்கும் மத்தியில் ஏற்பட்ட இந்த உறவு யூதமத எண்ணங்களைப் பெருமளவு பாதித்தது. யூத போதனைகளில் கிரேக்க தத்துவங்கள் புகுந்தன. பிரதான ஆசாரியரான ஜேசன், ஹோமர் பற்றிய ஆராய்ச்சியை முன்னேற்றுவிப்பதற்காக பொ.ச.மு. 175-ல் ஒரு கிரேக்க கலைக்கழகத்தை நிறுவியதாக சொல்லப்படுகிறது.
பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய ஒரு சமாரியன், பைபிள் சரித்திரத்தை கிரேக்க மயமாக்கப்பட்ட சரித்திர பதிவுகள்போல் தோன்றும்படி செய்ய முயன்றார் என்பது ஆச்சரியமளிக்கிறதா என்ன? யூத இணைத் திருமுறை நூல்களான யூதித்து, தோபித்து போன்றவை உண்மையில் கிரேக்க சிற்றின்ப புராணக் கதைகளையே மறைமுகமாக குறிப்பிடுகின்றன. கிரேக்க எண்ணங்களை, யூத மதத்தோடும் பைபிளோடும் இசைவிக்க முயன்ற அநேக யூத தத்துவஞானிகளும் தோன்றினர்.
பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூதனாகிய பிலோ என்பவரே இவ்வாறு செய்ததற்கு அதிக பெயர்பெற்றவர். பிளேட்டோ (பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டு), பைதகாரஸ், ஸ்டோயீக் போன்றோரின் கோட்பாடுகளை அவர் களவாடினார். பிலோவின் கருத்துகளால் யூதர்கள் பெருமளவு கவரப்பட்டனர். இவ்விதமாக கிரேக்க கருத்துகள் யூத கலாச்சாரத்திற்குள் அறிவுப்பூர்வமாக நுழைந்ததைப் பற்றி யூத ஆசிரியர் மாக்ஸ் டைமன்ட் இவ்விதமாக கூறுகிறார்: “பிளேட்டோனிய கருத்து, அரிஸ்டாட்டிலின் தர்க்கவாதம், யூக்ளிட்டின் அறிவியல் போன்றவற்றால் வளமூட்டப் பெற்ற யூத நிபுணர்கள், இந்தப் புதிய கருவிகளின் உதவியோடு தோராவிற்கு விளக்கமளித்தனர். . . . யூதர்களுக்கு கிடைத்த வெளிப்படுத்துதல்களுக்கு கிரேக்க நியாயவிவாதத்தைக் கூட்டினர்.”
காலப்போக்கில் ரோமர்கள் கிரேக்க சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றி எருசலேமையும் பிடித்தனர். இதனால் இன்னும் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகரித்தது. பொ.ச. மூன்றாம் நூற்றாண்டிற்குள், பிளேட்டோவின் எண்ணங்களை வளர்த்து, அவற்றை ஒன்றிணைக்க முயன்ற சிந்தனையாளர்களின் தத்துவ மற்றும் மத கோட்பாடுகள் அதன் முடிவான வடிவத்தைப் பெற்றன. இன்று ஒரு தொகுதியாக இவை நியோபிளேட்டோனிஸம் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் கருத்துகள் விசுவாசதுரோக கிறிஸ்தவத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தவிருந்தன.
“கிறிஸ்தவ மயமாக்கப்பட்ட கிரேக்க கலாச்சாரம்”
நமது பொது சகாப்தத்தின் முதல் ஐந்து நூற்றாண்டுகளில், கிரேக்க தத்துவத்திற்கும் பைபிளில் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்திற்கும் இடையில் சம்பந்தம் இருப்பதாக நிரூபிக்க முயன்றனர் சில அறிஞர்கள். கிறிஸ்தவத்தின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது: “கிறிஸ்துவிற்கு முன்னான காலத்திய கிரேக்கர்களைப் பற்றி கிறிஸ்தவ கோட்பாட்டியலாளர்களின் கருத்து இதுவே: அவர்கள், தேவனைப் பற்றிய அறிவைப் பெற தைரியமாக ஆனால் குருட்டுத்தனமாக போராடினார்கள் என்று நினைத்தனர். இதன் காரணமாக ஒன்றுமில்லாமையிலிருந்து இயேசுவைக் கற்பனை செய்யவும் குறைபாடுள்ள அவர்களுடைய சொந்த எண்ணங்களில் கிறிஸ்தவத்தை தோற்றுவிக்கவும் முயன்றனர்.”
இப்படிப்பட்ட சிந்தனையாளர்களுக்கு முன்னோடியாயிருந்த ப்ளோடைனஸ் (பொ.ச. 205-270), பிளேட்டோவின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஏற்பாட்டை உருவாக்கினார். சரீரத்திலிருந்து பிரிந்திருக்கும் ஓர் ஆத்துமா என்ற கோட்பாட்டை அவர் அறிமுகப்படுத்தினார். ப்ளோடைனஸ் பற்றி, “அவருடைய கோட்பாடு . . . கிறிஸ்தவத்தின் தலைவர்கள் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது” என பேராசிரியர் ஈ. டபிள்யூ. ஹாப்கின்ஸ் கூறினார்.
“கிரேக்க மயமாக்கப்பட்ட கிறிஸ்தவம்,” “கிறிஸ்தவ தத்துவம்”
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டு துவங்கி, புறமத ஞானிகளை கவர்ந்திழுப்பதற்காக “கிறிஸ்தவ” சிந்தனையாளர்கள் கடின முயற்சி செய்தனர். “சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கை”களுக்கும் விலகியிருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் தெளிவாகவே எச்சரித்திருந்தார். (1 தீமோத்தேயு 6:20) ஆனாலும் இந்தப் போதகர்கள், தங்களைச் சுற்றியிருந்த கிரேக்க கலாச்சாரத்தின் தத்துவங்களைத் தங்களுடைய போதகங்களில் கலந்தனர். பைபிளையும் பிளேட்டோனிய கருத்துகளையும் ஒத்திசைவிக்க முடியலாம் என பிலோவின் உதாரணம் காண்பித்ததுபோல் தோன்றியது.—2 பேதுரு 1:16-ஐ ஒப்பிடுக.
இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது பைபிள் சத்தியமே. கிறிஸ்தவம் என்பது கிரேக்க-ரோம மனிதநலக் கோட்பாட்டுடன் ஒத்திருக்கிறது என்று “கிறிஸ்தவ” போதகர்கள் காட்ட முயன்றனர். அலெக்ஸாண்டிரியாவின் கிளேமண்ட், ஆரிகன் (பொ.ச. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகள்) ஆகியோர் நியோபிளேட்டோனிஸத்தை “கிறிஸ்தவ தத்துவம்” என பின்னர் அறியப்படலான கோட்பாட்டின் அஸ்திவாரமாக்கினர். மிலனின் பிஷப்பான அம்புரோஸ் (பொ.ச. 339-397), “கிறிஸ்தவ மற்றும் புறமத தோற்றத்தையுடைய அதிநவீன கிரேக்க போதகத்தைக் கரைத்துக் குடித்திருந்தார்; முக்கியமாய் . . . பிளேட்டோவை நம்பிய புறமத ப்ளோடைனஸ்ஸின் புத்தகங்கள் அவருக்கு அத்துப்படி.” மெத்தப்படித்த ரோமர்களுக்கு கிறிஸ்தவத்தை கிரேக்க-ரோம போர்வையில் அவர் அளிக்க முயன்றார். அகஸ்டீனும் அவருடைய மாதிரியை பின்தொடர்ந்தார்.
ஒரு நூற்றாண்டிற்கு பிறகு கிரேக்க உயர்நீதி மன்றத்தைச் சேர்ந்த (சூடோ-டையோனீஷியஸ் என்றும் அழைக்கப்பட்ட) டையோனீஷியஸ், நியோபிளேட்டோனிய தத்துவத்தையும் “கிறிஸ்தவ” இறையியலையும் இணைக்க முற்பட்டார்; இவர் ஒருவேளை சிரியா நாட்டு துறவியாக இருந்திருக்கலாம். அவருடைய “எழுத்துகள் மத்திபகால கிறிஸ்தவ கோட்பாட்டின் மற்றும் ஆவிக்குரியத்தன்மையின் பெரும்பகுதியில் நிலையான நியோபிளேட்டோனிய போக்கை ஸ்தாபித்தன . . . அதனால் இன்றுவரை அதன் மதப் பண்பும் பக்தியும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று ஒரு என்சைக்ளோபீடியா கூறுகிறது. ‘லௌகீக ஞானம், மாயமான தந்திரம், மனுஷர்களின் பாரம்பரிய நியாயம்’ ஆகியவற்றிற்கு எதிராக அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையை அவர்கள் எவ்வளவு மோசமாக அவமதித்திருக்கிறார்கள்!—கொலோசெயர் 2:8.
கறைப்படுத்தும் மாசு
“பிளேட்டோவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் தெய்வீக வெளிப்படுத்துதல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். வேதாகமத்தின் போதகங்களையும் சர்ச் மரபையும் புரிந்துகொள்வதற்கும் பாதுகாப்பதற்கும் உள்ளதிலேயே மிகச் சிறந்த உபகரணம் பிளேட்டோனிய தத்துவம்தான் என்றும் உணர்ந்தார்கள்” என சொல்லப்படுகிறது.
அழிவில்லாத ஆத்துமா உண்டு என பிளேட்டோ உறுதியாக நம்பினார். ‘கிறிஸ்தவ இறையியலில்’ புகுந்த பொய் போதகங்களில் மிக முக்கியமானது அழியாமையுள்ள ஆத்துமா என்பதும் குறிப்பிடத்தக்கது அல்லவா? கிறிஸ்தவத்தைப் பொதுமக்களுக்கு அதிக கவர்ச்சியூட்டுவதாய் ஆக்குவதற்காக இந்தப் போதகம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற நொண்டிச் சாக்கு சொல்வது முற்றிலும் தவறானது. கிரேக்க கலாச்சாரத்தின் மையமான அத்தேனே பட்டணத்தில் பிரசங்கிக்கையில் அப்போஸ்தலன் பவுல், ஆத்துமா பற்றிய பிளேட்டோனிய கோட்பாட்டை போதிக்கவில்லை. மாறாக கிறிஸ்தவ கோட்பாடான உயிர்த்தெழுதலையே பிரசங்கித்தார். அவருக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்த கிரேக்கர்களில் அநேகர் அதை நம்புவதைக் கடினமாக கண்டபோதிலும் அதையே பிரசங்கித்தார்.—அப்போஸ்தலர் 17:22-32.
வேதவாக்கியம் போதிப்பது கிரேக்க தத்துவத்திற்கு நேர் எதிரானது. ஆத்துமா என்பது ஓர் ஆளுக்குள் இருக்கும் ஒன்றல்ல, ஆனால் அவனே என அது தெளிவாக கூறுகிறது. (ஆதியாகமம் 2:7) மரணத்தின்போது ஆத்துமா இல்லாமல் போகிறது. (எசேக்கியேல் 18:4) “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது” என பிரசங்கி 9:5 கூறுகிறது. ஆக, அழியாமையுள்ள ஆத்துமா என்ற கோட்பாடு பைபிளில் போதிக்கப்படுவதில்லை.
தவறாக வழிநடத்தும் மற்றொரு போதகம், மனிதனாக வருவதற்கு முன் இயேசுவின் ஸ்தானம் சம்பந்தப்பட்டது; அதாவது அவர் தம்முடைய தகப்பனுக்கு சமமானவர் என்ற கருத்து. “திரித்துவ கோட்பாடு . . . யூத மற்றும் கிறிஸ்தவ வேதாகமங்களுக்கு முற்றிலும் சம்பந்தப்படாத ஊற்றுமூலத்திலிருந்து தோன்றியது” என முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. அது எந்த ஊற்றுமூலம்? இந்தக் கோட்பாடு, “பிளேட்டோவை ஏற்றுக்கொண்ட சர்ச் மூதாதையர்களால் வளர்க்கப்பட்டு கிறிஸ்தவத்திற்குள் ஒட்டவைக்கப்பட்டது.”
காலப்போக்கில் சர்ச் பிதாக்கள் நியோபிளேட்டோனிய கோட்பாட்டால் அதிகமதிகமாக பாதிக்கப்பட்டபோது திரித்துவ கோட்பாட்டாளர்களின் பிடி உறுதியானது. சாத்தியமற்றது என அவர்கள் நினைத்ததை சாத்தியமாக்க மூன்றாம் நூற்றாண்டின் நியோபிளேட்டோனிய தத்துவம் உதவியது. அது மூன்று கடவுட்களை ஒன்றாக தோன்றச் செய்தது. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருந்தபோதும் மூன்று பேரும் ஒரு கடவுளாக இருக்க முடியும், தத்துவரீதியான நியாயவிவாதத்தில் அது சாத்தியம் என்று கூறினர்!
ஆனால் பைபிளின் சத்தியம் முற்றிலும் வேறு. யெகோவா மட்டுமே சர்வவல்லமையுள்ள கடவுள், இயேசு கிறிஸ்து அவருக்கும் கீழான, அவரால் படைக்கப்பட்ட குமாரன், பரிசுத்த ஆவி என்பது அவருடைய செயல்நடப்பிக்கும் சக்தி என அது தெளிவாக கூறுகிறது. (உபாகமம் 6:4; ஏசாயா 45:5; அப்போஸ்தலர் 2:4; கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14) திரித்துவ கோட்பாடானது, ஒரே உண்மையான கடவுளை அவமதிக்கிறது, மேலும் மக்களை குழப்புகிறது. அவர்கள் புரிந்துகொள்ள முடியாத ஒரு கடவுளிடமிருந்து அவர்களை தூரமாக விலக்குகிறது.
நியோபிளேட்டோனிய தத்துவத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கிறிஸ்தவ கருத்து, வேதவாக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆயிர வருட ஆட்சி பற்றியதாகும். (வெளிப்படுத்துதல் 20:4-6) ஆயிர வருட ஆட்சியில் நம்பிக்கை வைத்தவர்களை ஆரிகன் வெளிப்படையாக கண்டனம் செய்தார். கிறிஸ்து ஆயிரம் வருடம் அரசாளுவார் என்ற பைபிளில் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையை அவர் ஏன் அவ்வளவு கடுமையாக எதிர்த்தார்? “அவருடைய கோட்பாடுகள் நியோபிளேட்டோனிய கொள்கையில் சார்ந்திருந்ததால் . . . , [ஆரிகனால்] ஆயிர வருட ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போக முடியவில்லை” என த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா பதிலளிக்கிறது.
சத்தியம் இதுவே
மேலே விவரிக்கப்பட்ட வளர்ச்சிகளுக்கும் சத்தியத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சத்தியம் என்பது பைபிளில் காணப்படும் கிறிஸ்தவ போதகங்களின் முழு தொகுதியே ஆகும். (2 கொரிந்தியர் 4:2; தீத்து 1:1, NW, 13; 2 யோவான் 1-4) சத்தியத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒரே ஒரு இடம் பைபிள் மட்டுமே.—யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16.
ஆனால், ‘மனுஷ கொலைபாதகனும்,’ “பொய்க்குப் பிதாவுமாயிருக்கிற” பிசாசாகிய சாத்தான் அந்தச் சத்தியத்தைக் கலப்படம் செய்ய அநேக தந்திரமான வழிகளை உபயோகித்திருக்கிறான். அவனே யெகோவாவுக்கும் சத்தியத்திற்கும் மனிதவர்க்கத்திற்கும் நித்திய ஜீவனுக்கும் எதிரி. (யோவான் 8:44; ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 11:3.) கிறிஸ்தவ போதகங்களின் பொருளையும் தன்மையையும் கெடுக்க அவன் உபயோகித்திருக்கும் மிகவும் வல்லமையான கருவிகளில் ஒன்று புறமத கிரேக்க தத்துவ ஞானிகளின் போதகங்களாகும். அவை அவனுடைய சொந்த எண்ணங்களின் பிம்பமே.
இவ்வாறு கிறிஸ்தவ போதகத்தை கிரேக்க தத்துவத்தோடு கலப்பது இயற்கைக்கு மாறானது. இது, பைபிள் சத்தியத்தை வலுவிழக்கச் செய்து, சத்தியத்தைத் தேடும் மனத்தாழ்மையான, நேர்மையான, எளிதில் கற்றுக்கொள்ளும் ஆட்களுக்கு அதன் வல்லமையையும் வசீகரிக்கும் தன்மையையும் குறைத்துப்போடும் ஒரு முயற்சியாகும். (1 கொரிந்தியர் 3:1, 2, 19, 20) அதுமட்டுமல்ல, தெள்ளத்தெளிவான பைபிள் போதகத்தின் சுத்தத்தை மாசுபடுத்தி, சத்தியத்திற்கும் பொய்க்கும் மத்தியிலுள்ள வித்தியாசத்தையும் தெளிவற்றதாக்குகிறது.
இன்று கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதல் இருப்பதால் உண்மையான கிறிஸ்தவ போதகங்கள் மறுபடியும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. நேர்மை இருதயத்தோடு சத்தியத்தைத் தேடுபவர்கள் உண்மைக் கிறிஸ்தவ சபையை அதின் கனிகளை வைத்து மிக எளிதில் அடையாளம் கண்டுகொள்ளவும் முடியும். (மத்தேயு 7:16, 20) சத்தியத்தின் மாசற்ற தண்ணீர்களை மொண்டெடுக்க அப்படிப்பட்டவர்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் எப்பொழுதும் தயார். நம் தகப்பனாகிய யெகோவா கொடுக்கும் சொத்தாகிய நித்திய ஜீவனை உறுதியாக பற்றிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவ ஆர்வத்துடனும் இருக்கிறார்கள்.—யோவான் 4:14; 1 தீமோத்தேயு 6:19.
[பக்கம் 11-ன் படம்]
அகஸ்டீன்
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
கிரேக்க எழுத்துக்கள்: From the book Ancient Greek Writers: Plato’s Phaedo, 1957, Ioannis N. Zacharopoulos, Athens; பிளேட்டோ: Musei Capitolini, Roma