சர்ச் ஃபாதர்க—பைபிள் சத்தியத்தை ஆதரிப்பவர்களா?
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பைபிளின் கடவுளையும், இயேசுவையும், கிறிஸ்தவத்தையும் பற்றி உங்களுக்கிருக்கும் கருத்துக்களுக்கு இவர்கள் காரணமாய் இருக்கலாம். இவர்களில் ஒருவர் சிறந்த சொல்லாற்றல் மிக்கவர் என்றும் இன்னொருவர் “மகா” என்றும் அழைக்கப்பட்டனர். மொத்தத்தில் இவர்கள், “கிறிஸ்துவைப் போல் வாழ்வதில் தலைசிறந்தவர்கள்” என்று வருணிக்கப்பட்டனர். இவர்கள் யார்? பண்டைய காலத்தில் வாழ்ந்த சமய சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், இறையியலர்கள், தத்துவஞானிகள். பெரும்பாலும் இந்த சர்ச் ஃபாதர்களே, இன்றைய “கிறிஸ்தவ” சிந்தனையை செதுக்கிய சிற்பிகள்.
“பைபிளில் கடவுளுடைய வார்த்தை முழுமை பெறவில்லை. பரிசுத்த ஆவி வெளிப்படுத்தும் கடவுளுடைய வார்த்தையை ஒரு புத்தகத்தில் அடக்கிவிட முடியாது” என டெமிட்ரியோஸ் ஜே. கான்ஸ்டான்டெல்லஸ் கூறுகிறார். இவர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மத ஆய்வு பேராசிரியர். அப்படியென்றால் கடவுள் வேறு எந்த நம்பத்தகுந்த வழியில் காரியங்களை வெளிப்படுத்துகிறார்? “பரிசுத்த பாரம்பரியமும் பரிசுத்த வேதாகமமும் கடவுளுடைய வெளிப்படுத்துதலின் இரண்டு அம்சங்கள்” என கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை புரிந்துகொள்ளுதல் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் கான்ஸ்டான்டெல்லஸ் உறுதியாக கூறுகிறார்.
சர்ச் ஃபாதர்களின் போதனைகளும் எழுத்துக்களும் அந்த “பரிசுத்த பாரம்பரியத்திற்கு” ஆதாரம். இவர்கள் பொ.ச. இரண்டாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த புகழ்பெற்ற இறையியலரும் “கிறிஸ்தவ” தத்துவஞானிகளுமாவர். இன்றைய “கிறிஸ்தவ” சிந்தனைக்கு அவர்கள் எந்தளவுக்கு பங்களித்திருக்கின்றனர்? பைபிள் போதனைகளை அவர்கள் விடாது பற்றிக்கொண்டிருந்தார்களா? இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றும் ஒருவருக்கு, கிறிஸ்தவ சத்தியத்தின் உறுதியான ஆதாரமாக எது இருக்க வேண்டும்?
வரலாற்றுப் பின்னணி
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில், கிறிஸ்தவர்களென்று அழைத்துக்கொண்டவர்கள், துன்புறுத்தி வந்த ரோமர்களிடமிருந்தும் முரண் சமய கோட்பாட்டாளர்களிடமிருந்தும் தங்கள் மதத்தைக் காக்க போராடி வந்தனர். ஆனால் எக்கச்சக்கமான இறையியல் கருத்துக்கள் எங்கும் நிலவி வந்த சமயம் அது. இயேசுவின் “தெய்வத்தன்மை,” பரிசுத்த ஆவி எப்படிப்பட்டது, எவ்வாறு செயல்படுகிறது ஆகியவற்றைப் பற்றி மத சர்ச்சைகள் எழுந்தன. இதனால் அறிவுப்பூர்வமான பிரிவினை மட்டுமே ஏற்படவில்லை. “கிறிஸ்தவ” கோட்பாட்டைப் பற்றிய பலமான கருத்து வேறுபாடுகளும் சரிசெய்ய முடியாத பிரிவினைகளும் சீக்கிரத்தில் அரசியலுக்குள்ளும் கலாச்சாரத்துக்குள்ளும் கோரமுகம் காட்டின. இதனால் சில சமயங்களில் குழப்பங்களும் கலகங்களும் உள்நாட்டு சண்டைகளும் போரும் நிகழ்ந்தன. வரலாற்றாசிரியர் பால் ஜான்சன் இவ்வாறு எழுதுகிறார்: “[விசுவாசதுரோக] கிறிஸ்தவம் குழப்பத்திலும் கருத்துவேறுபாட்டிலும் பிரிவினையிலும் பிறந்து, அது அவ்வாறே தொடர்ந்தது. . . . முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில், மத்திய, கிழக்கத்திய மத்தியத்தரைக் கடல் பகுதிகளில் நிலவிய மத கருத்துக்களுக்கு குறைவே இல்லை, போட்டிபோட்டுக் கொண்டு இவை பரப்பப்பட்டன. . . . ஆகவே ஆரம்பம் முதலே, பொதுவான கருத்துக்கள் அதிகமில்லாத எண்ணற்ற பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் இருந்து வந்தன.”
அந்தச் சமயத்தில், தத்துவஞான வார்த்தைகளை பயன்படுத்தியே “கிறிஸ்தவ” உபதேசங்களை விளக்க வேண்டும் என்று நினைத்த எழுத்தாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. புதிதாக “கிறிஸ்தவத்துக்கு” மதம் மாறியிருந்த கல்வியறிவுடைய புறமதத்தினரைத் திருப்திப்படுத்துவதற்கு இந்த மத எழுத்தாளர்கள் பண்டைய கிரேக்க, யூத இலக்கியங்களையே நம்பியிருந்தனர். கிரேக்க மொழியில் எழுதிய ஜஸ்டின் மார்டரில் தொடங்கி (சுமார் பொ.ச. 100-165), கிறிஸ்தவர்களென்று சொல்லிக்கொண்டவர்கள் கிரேக்க கலாச்சாரத்தின் தத்துவஞானத்தை ஏற்றுக்கொள்வதில் நாளுக்குநாள் அதிக ஆர்வம் காட்டினர்.
அலெக்ஸாண்டிரியாவை சேர்ந்த கிரேக்க நூலாசிரியர் ஆரஜனின் (சுமார் பொ.ச. 185-254) புத்தகங்களில் இந்தப் போக்கைக் காண முடிகிறது. ஆரஜன் எழுதிய ஆன் ஃபர்ஸ்ட் பிரின்ஸிப்பில்ஸ் என்ற ஆய்வு கட்டுரை “கிறிஸ்தவ” இறையியலின் முக்கிய கோட்பாடுகளை கிரேக்க தத்துவஞானத்தின் அடிப்படையில் முறைப்படி விளக்குவதற்கு செய்யப்பட்ட முதல் முயற்சியாகும். நைசியா குழு (பொ.ச. 325), “கிறிஸ்தவ” கொள்கையை விளக்குவதற்கு புதிய உத்வேகத்தை அளித்த ஒரு மைல்கல்லாக இருந்தது. இதில்தான் கிறிஸ்து “கடவுள்” என்ற கருத்தை விளக்கவும் உறுதி செய்யவும் முயற்சி எடுக்கப்பட்டது. இது ஆரம்பம் மட்டுமே. இதற்குப் பின்னான காலங்களில் பொது சர்ச் கவுன்சில்கள் கொள்கையை இன்னும் துல்லியமாக விளக்க முயன்றிருக்கின்றன.
எழுத்தாளர்களும் மேடை பேச்சாளர்களும்
நைசியா குழு முதன்முறையாக கூடிய சமயத்தில், எழுத்தாளராக இருந்த சிசெரியாவைச் சேர்ந்த யூசிபியஸ், கான்ஸ்டன்டைன் பேரரசரை தன் நண்பனாக குறிப்பிட்டார். நைசியா குழு கூடியதற்கு 100-க்கும் அதிக ஆண்டுகளுக்குப்பின், பெரும்பாலும் கிரேக்க மொழியில் எழுதிய இறையியலர்கள், விரிவாகவும் கடுமையாகவும் விவாதித்தபின் கிறிஸ்தவமண்டலத்தின் பிரபல கோட்பாடாகவிருந்த திரித்துவ கோட்பாட்டை உருவாக்கினர். இவர்களில் முக்கியமானவர்கள், அலெக்ஸாண்டிரியாவின் பிடிவாத பிஷப் அதெனேஷியஸ், ஆசியா மைனரிலுள்ள கப்பத்தோக்கியாவிலிருந்து வந்த மூன்று சர்ச் தலைவர்களான மகா பேஸில், அவருடைய சகோதரர் நைசாவை சேர்ந்த கிரகோரி, அவர்களுடைய நண்பர் நேசியான்சஸை சேர்ந்த கிரகோரி.
அந்தச் சமயத்தில் எழுத்தாளர்களும் பிரசங்கிப்பவர்களும் சிறந்த பேச்சாளர்களாக திகழ்ந்தனர். கிரேக்க மொழியில் நேசியான்சஸை சேர்ந்த கிரகோரியும் ஜான் கிறிஸோஸ்டமும் (“சொல்லாற்றல் மிக்கவர்” என்று அர்த்தம்) லத்தீன் மொழியில் மிலனை சேர்ந்த அம்ப்ரோஸும் ஹிப்போவை சேர்ந்த அகஸ்டீனும் மிகச் சிறந்த மேடை பேச்சாளர்கள். அந்தச் சமயத்தில் இதுவே மிகவும் மதிக்கப்பட்ட, பிரசித்திப்பெற்ற கலையாக இருந்தது. அப்போது அகஸ்டீன் தலைசிறந்த எழுத்தாளர். அவருடைய இறையியல் ஆய்வுக்கட்டுரைகளே இன்று எங்கும் பரவியிருக்கும் “கிறிஸ்தவ” சிந்தனைகளுக்கு அடிகோலின. அப்போது வாழ்ந்த ஜெரோம் என்ற பிரபல கல்விமானே பைபிளை மூலமொழிகளிலிருந்து லத்தீனுக்கு மொழிபெயர்ப்பதற்கு முக்கிய காரணமானவர்.
ஆனால் முக்கியமான கேள்விகள்: அந்த சர்ச் ஃபாதர்கள் பைபிளை அப்படியே பின்பற்றினார்களா? ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட பைபிளை உறுதியாக பற்றிக்கொண்டு அதன்படி உபதேசித்தார்களா? கடவுளைப் பற்றி திருத்தமான அறிவை பெறுவதற்கு அவர்களுடைய எழுத்துக்கள் சரியான வழிகாட்டியாய் இருக்கின்றனவா?
கடவுளின் போதனைகளா, மனிதரின் போதனைகளா?
நவீன “கிறிஸ்தவ” சிந்தனைக்கு கிரேக்க கலாச்சாரமும் தத்துவஞானமுமே அடிப்படை அல்லது ஆதாரம் என்பதை காண்பிக்க சமீபத்தில் பிசிதியாவைச் சேர்ந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி மெத்தோடியஸ் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதினார். அந்த ஆங்கில புத்தகத்தின் பெயர் கிறிஸ்தவம் கிரேக்க அடிக்கல்லின்மேல். அந்தப் புத்தகத்தில் இவர் தயக்கமின்றி இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “பெரும்பாலும் எல்லா முக்கிய சர்ச் ஃபாதர்களுமே கிரேக்க நியமங்களை மிகவும் பயனுள்ளவையாய் கண்டனர்; அவற்றை பண்டைய கிரேக்க இலக்கியங்களிலிருந்து கடன்வாங்கி, கிறிஸ்தவ சத்தியங்களை புரிந்துகொண்டு சரியாக விளக்குவதற்கு பயன்படுத்தினர்.”
உதாரணத்துக்கு, பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியும் சேர்ந்து திரித்துவமாக இருப்பதாக கூறப்படும் கருத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நைசியா குழு கூடிய பிறகு அநேக சர்ச் ஃபாதர்கள் தீவிர திரித்துவவாதிகளாக ஆனார்கள். திரித்துவம் கிறிஸ்தவமண்டலத்தின் முக்கிய கோட்பாடாக ஆவதற்கு இவர்களுடைய எழுத்துக்களும் விளக்கங்களுமே காரணம். ஆனால் திரித்துவம் பைபிளில் காணப்படுகிறதா? இல்லை. அப்படியென்றால் சர்ச் ஃபாதர்களுக்கு இது எங்கிருந்து கிடைத்தது? சமய அறிவு அகராதி (ஆங்கிலம்) ஒன்று, “திரித்துவம் பிற மதங்களிலிருந்து கடன்வாங்கப்பட்ட பிழையான கோட்பாடு, இது கிறிஸ்தவ மதத்தில் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது” என்று பலர் சொல்வதாக குறிப்பிடுகிறது. நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமத நம்பிக்கைகள் (ஆங்கிலம்) இதை உறுதிசெய்கிறது: “[திரித்துவம்] முழுவதும் புறச்சமயத்திலிருந்தே ஆரம்பமானது.”a—யோவான் 3:16; 14:28.
மற்றொரு உதாரணத்திற்கு ஆத்துமா அழியாது, சரீரம் செத்தப் பின்னும் மனிதனின் ஏதோ ஒரு பாகம் தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்ற போதனையை எடுத்துக்கொள்ளுங்கள். இதிலும்கூட, மரணத்துக்குப்பின் உயிர்வாழும் ஆத்துமாவைப் பற்றி எந்த போதனையும் இல்லாத ஒரு மதத்தில், இந்தக் கருத்தை அறிமுகப்படுத்தியவர்களும் இந்தச் சர்ச் ஃபாதர்களே. ஆத்துமா மரிக்கிறது என்பதாக பைபிள் மிகவும் தெளிவாக கூறுகிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) ஆத்துமா அழியாது என்று சர்ச் ஃபாதர்கள் எதை வைத்து சொன்னார்கள்? “மனிதன் முழுமையானவனாக வாழ ஆரம்பத்தில் கடவுள் ஒரு ஆன்மீக ஆத்துமாவைப் படைத்து அதை கருவுறும்போது உடலுக்குள் புகுத்தினார் என்ற கிறிஸ்தவ கருத்து, பல காலமாக கிறிஸ்தவ தத்துவஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சியின் விளைவே ஆகும். கிழக்கே ஆரஜனும் மேற்கே செய்ன்ட் அகஸ்டினுமே ஆத்துமா என்பது ஒரு ஆன்மீக வஸ்து என்றும் அதன் தன்மையைப் பற்றிய தத்துவஞான கருத்தையும் நிலைநாட்டினர், இது பொதுவாக ஒரு கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. . . . [அகஸ்டீனின் கோட்பாட்டுக்கு] . . . (அதனுடைய சில குறைகள் உட்பட) ஆதாரமாக இருந்தது நியோபிளேட்டோனிஸம்” என்று நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. மேலும் பிரிஸ்பிட்டேரியன் லைஃப் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “ஆத்துமா அழியாது என்பது, பண்டையகால மர்மமான சமய வழிபாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்டு, தத்துவஞானி பிளேட்டோவால் விவரிக்கப்பட்ட கிரேக்க கருத்து.”b
கிறிஸ்தவ சத்தியத்துக்கு உறுதியான ஆதாரம்
சர்ச் ஃபாதர்களின் பின்னணியையும் அவர்களுடைய போதனைகளின் ஆரம்பங்களையும் பற்றி சுருக்கமாக ஆராய்ந்தப் பின்னர்கூட, உண்மை மனதுள்ள கிறிஸ்தவர் ஒருவரின் நம்பிக்கைகள் சர்ச் ஃபாதர்களின் போதனைகளை சார்ந்ததாக இருக்கலாமா? என்று கேட்பது பொருத்தமானதே. பைபிள் இதற்கு விடையளிக்கட்டும்.
ஒரு குறிப்பு, “தந்தை [ஃபாதர்]” என்ற மத சம்பந்தமான பட்டப்பெயரை பயன்படுத்தக்கூடாது என்று இயேசு கிறிஸ்துவே கூறியுள்ளார். அவர் இவ்வாறு சொன்னார்: “இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். (மத்தேயு 23:9, பொ.மொ.) மத சம்பந்தமான எவரையும் “ஃபாதர்” என்றழைப்பது கிறிஸ்தவமற்றது, பைபிளுக்கு மாறானது. கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தை, அப்போஸ்தலன் யோவான் சுமார் பொ.ச. 98-ல் எழுதியதோடு முடிவுற்றது. ஆகவே ஆவியால் ஏவப்படும் வெளிப்படுத்துதல்களைப் பெற்றுக்கொள்ள உண்மை கிறிஸ்தவர்கள் எந்த மனிதனையும் நம்பி இருக்க வேண்டியதில்லை. மனிதரின் பாரம்பரியத்தினாலே ‘தேவனுடைய கற்பனையை அவமாக்கி’ப்போடாதபடிக்கு அவர்கள் கவனமாய் இருக்கின்றனர். கடவுளுடைய வார்த்தையின் இடத்தை மனிதரின் பாரம்பரியங்கள் பிடித்துக்கொள்வதை அனுமதிப்பது ஆவிக்குரிய மரணத்தைக் கொண்டுவரும். இயேசு இவ்வாறு எச்சரித்துள்ளார்: “குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே.”—மத்தேயு 15:6, 14.
பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதைத் தவிர ஒரு கிறிஸ்தவனுக்கு வேறு ஏதாவது வெளிப்படுத்துதல்கள் தேவையா? இல்லை. ஏவப்பட்ட பதிவோடு எதையும் கூட்டக்கூடாதென்று வெளிப்படுத்துதல் புத்தகம் எச்சரிக்கிறது: “ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.”—வெளிப்படுத்துதல் 22:18.
கிறிஸ்தவ சத்தியம் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் அடங்கியுள்ளது. (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16; 2 யோவான் 1-4) இதை சரியாக புரிந்துகொள்ள உலக தத்துவம் நமக்குத் தேவையில்லை. தெய்வீக வெளிப்படுத்துதல்களை விளக்குவதற்கு மனித ஞானத்தைப் பயன்படுத்த முயன்ற ஆட்களைப் பற்றி சொல்ல, அப்போஸ்தலன் பவுலின் கேள்விகளையே நாம் திரும்பவும் கேட்பது பொருத்தமாக இருக்கும்: “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?”—1 கொரிந்தியர் 1:20.
அது மட்டுமல்ல, உண்மையான கிறிஸ்தவ சபை “சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 3:15) அதன் கண்காணிகள் சபைக்குள்ளே தூய்மையான போதனையைக் காத்துக்கொள்கிறார்கள்; கறைபடுத்தும் எந்தவொரு கோட்பாடும் உள்ளே நுழைந்துவிடாதபடிக்கு பார்த்துக்கொள்கிறார்கள். (2 தீமோத்தேயு 2:15-18, 25, 26) ‘கள்ளத்தீர்க்கதரிசிகளையும் கள்ளப்போதகர்களையும் வேதப்புரட்டுக்காரர்களையும்’ அவர்கள் உள்ளே நுழையவிடுவதில்லை. (2 பேதுரு 2:1) அப்போஸ்தலரின் மரணத்துக்குப்பின், சர்ச் ஃபாதர்கள் ‘வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும்’ இடங்கொடுத்து அவை கிறிஸ்தவ சபையில் வேர்கொள்ள அனுமதித்துவிட்டனர்.—1 தீமோத்தேயு 4:1.
இந்த விசுவாசதுரோகத்தினால் வந்த விளைவை இன்று கிறிஸ்தவமண்டலத்தில் தெளிவாக காண முடிகிறது. அதன் நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் பைபிள் சத்தியத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a திரித்துவ கோட்பாட்டைப் பற்றிய விரிவான கலந்தாலோசிப்பை யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டில் காணலாம்.
b ஆத்துமா பற்றி பைபிள் என்ன போதிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 98-104 மற்றும் 375-80-ஐக் காண்க.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
கப்பத்தோக்கியா ஃபாதர்கள்
“ஆர்த்தடாக்ஸ் சர்ச் . . . நான்காவது நூற்றாண்டு எழுத்தாளர்கள் மீது, குறிப்பாக ‘மூன்று மகா உயர் சமய குருக்கள்’ என்று அது அழைக்கும் நேசியான்சஸை சேர்ந்த கிரகோரி, மகா பேஸில், ஜான் கிறிஸோஸ்டம் ஆகியோர் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தது” என ஆசிரியர் காலிஸ்டோஸ் கூறுகிறார்; இவர் ஒரு துறவி. சர்ச் ஃபாதர்கள் ஏவப்பட்டெழுதப்பட்ட வேதாகமத்தின் அடிப்படையில் போதித்தார்களா? மகா பேஸிலைக் குறித்து த ஃபாதர்ஸ் ஆஃப் த கிரீக் சர்ச் இவ்வாறு கூறுகிறது: “இவர் வாழ்நாள் முழுவதும் பிளேட்டோ, ஹோமர், வரலாற்றாசிரியர்கள், பேச்சாளர்கள் ஆகியோரிடம் ஈர்க்கப்பட்டிருந்ததை அவருடைய எழுத்துக்கள் காட்டுகின்றன, இவருடைய எழுத்து பாணி அவர்களுடையதைப் போலவே இருந்தது. . . . பேஸில் ஒரு ‘கிரேக்க’ராகவே இருந்துவிட்டார்.” நேசியான்சஸின் கிரகோரியும் அப்படித்தான். “கிரேக்க கலாச்சாரத்தின் பாரம்பரியங்களை முழுமையாக ஏற்றுக்கொள்வதில்தான் சர்ச்சின் வெற்றியும் உயர்வும் சிறப்பாக காட்டப்படும் என்பது அவர் கருத்து.”
இவர்கள் மூவரையும் பற்றி பேராசிரியர் பானாயீயோட்டிஸ் கே. கிறிஸ்டூ இவ்வாறு எழுதுகிறார்: “புதிய ஏற்பாட்டின் கட்டளைக்கு இணங்க இருப்பதற்காக அவர்கள் ‘லெளகிக ஞானத்தையும் மாயமான தந்திரத்தையும்’ [கொலோசெயர் 2:8] குறித்து எப்போதாவது எச்சரித்தாலும், தத்துவஞானத்தையும் அது சம்பந்தப்பட்ட விதிமுறைகளையுமே மிகுந்த ஆர்வத்தோடு படித்தார்கள், அவற்றை மற்றவர்களும் படிப்பதற்கு சிபாரிசு செய்தார்கள்.” ஆகவே, தங்கள் கருத்துக்களை ஆதரிக்க பைபிள் மட்டுமே போதாது என்று இந்த சர்ச் போதகர்கள் நினைத்தார்கள். தங்கள் கருத்துக்களுக்கு ஆதாரம் தேடி அவர்கள் வேறு இடங்களுக்குச் சென்றதால், அவர்களுடைய போதனைகள் பைபிளுக்கு அந்நியமானவையாக இருப்பதை அர்த்தப்படுத்துமா? அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்.”—எபிரெயர் 13:9.
[பக்கம் 18-ன் படங்கள்]
© Archivo Iconografico, S.A./CORBIS
[பக்கம் 20-ன் பெட்டி/படம்]
அலெக்ஸாண்டிரியாவின் சிரில் சர்ச்சைக்குரிய சர்ச் ஃபாதர்
அலெக்ஸாண்டிரியாவின் சிரில் (சுமார் பொ.ச. 375-444) என்பவர்தான் சர்ச் ஃபாதர்களிலே மிகவும் சர்ச்சைக்குரிய ஃபாதர். சர்ச் வரலாற்றாசிரியர் ஹான்ஸ் ஃபான் காம்பென்ஹாவுஸன் அவரை இவ்வாறு வருணிக்கிறார்: “அவருக்கு கிடைத்த மகத்தான பணி, மற்றும் அவருடைய பதவிக்கு இருந்த சிறப்பின் காரணமாக அவர் பிடிவாதமுள்ளவராக, மூர்க்கமானவராக, தந்திரமுள்ளவராக இருந்தார். தனக்கு பிரயோஜனமாகவும், தன் செல்வாக்கையும் அதிகாரத்தையும் முன்னேற்றுவிப்பதாகவும் இருந்தாலொழிய எதையும் அவர் சரி என்று சொல்ல மாட்டார் . . . அவர் கையாண்ட கொடூரமான, நேர்மையற்ற முறைகளால் அவர் ஒருபோதும் வருத்தமடையவில்லை.” சிரில் அலெக்ஸாண்டிரியாவின் பிஷப்பாக இருந்தபோது லஞ்சம் கொடுத்து, பொய் குற்றஞ்சாட்டி, வீண்பழி சுமத்தி கான்ஸ்டான்டிநோப்பிள் பிஷப்பை பதவியிலிருந்து இறக்கினார். பொ.ச. 415-ல் ஹிப்பாஸ்னி என்ற புகழ்பெற்ற தத்துவஞானி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கும் இவரே காரணம் என்று கூறப்படுகிறது. சிரில் எழுதிய இறையியல் எழுத்துக்களைப் பற்றி காம்பென்ஹாவுஸன் இவ்வாறு கூறுகிறார்: “நம்பிக்கைகளைப் பற்றிய விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முழுவதுமாக பைபிளை சார்ந்திராமல் பொருத்தமான மேற்கோள்களை அல்லது பிரபல அறிஞர்களின் மேற்கோள்கள் அடங்கிய தொகுப்புகளை அடிப்படையாக கொண்டு தீர்மானம் எடுக்கும் பழக்கத்தை இவர் ஆரம்பித்து வைத்தார்.”
[பக்கம் 19-ன் படங்கள்]
ஜெரோம்
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian