மரணத்திற்கு பின் வாழ்க்கை—ஜனங்கள் நம்புவதென்ன?
“மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?”—யோபு 14:14.
1, 2. அன்பானவரை மரணத்தில் இழந்த அநேகர் எவ்வாறு ஆறுதலைத் தேடுகின்றனர்?
நியூ யார்க் மாநகரத்திலுள்ள சவ அடக்க நிலையம் ஒன்றில், புற்றுநோயால் மரித்த 17 வயது இளைஞனுடைய உடல் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களும் குடும்ப அங்கத்தினர்களும் அமைதியாக அதை பார்வையிட்டு செல்கின்றனர். மனமொடிந்த அவன் தாய் கண்ணீரும்கம்பலையுமாக சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார்: “டாமீ இப்போது சந்தோஷமாக இருக்கிறான். அவன் தன்னோடு பரலோகத்தில் இருக்க வேண்டுமென்று கடவுள் விரும்பினார்.” அப்படித்தான் அவர் நம்பினார், ஏனென்றால் அவருக்கு போதிக்கப்பட்டிருந்தது அதுதான்.
2 சுமார் 11,000 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு காட்சி. இந்தியாவிலுள்ள ஜாம்நகரில் மூன்று மகன்களில் மூத்தவர் மரித்த தங்கள் தகப்பனுடைய சிதைக்கு தீ மூட்டுகிறார். எரியும் அக்கினிகுண்டத்திற்கு அருகில் அமர்ந்த புரோகிதர் பின்வரும் சமஸ்கிருத மந்திரங்களை ஓதுகிறார்: “என்றுமே அழியாத ஆன்மா, பிரம்மத்தோடு ஐக்கியமாவதற்கான அதன் முயற்சியில் தொடருவதாக.”
3. பல்லாண்டுகளாக ஜனங்கள் என்ன கேள்விகளை ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றனர்?
3 மரணம் என்ற தவிர்க்க முடியாத நிஜத்தை நாம் எங்கும் பார்க்கிறோம். (ரோமர் 5:12) ஆகவே, மரணம்தான் தவிர்க்க இயலாத முடிவா என நாம் யோசிப்பது இயல்பானதே. பூர்வகாலத்தில், யெகோவா தேவனுக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாய் இருந்த யோபு தாவரங்களின் இயற்கையான சுழற்சியை மனதில் வைத்தவராக இவ்வாறு கூறினார்: “ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்.” அப்படியென்றால், மனிதர்களைப் பற்றியென்ன? “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என யோபு கேட்டார். (யோபு 14:7, 14) பல்லாண்டுகளாக ஒவ்வொரு சமுதாயத்தில் இருக்கும் மக்களும் பின்வரும் கேள்விகளை ஆழ்ந்து சிந்தித்திருக்கின்றனர்: மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டா? அப்படியென்றால் எப்படிப்பட்ட வாழ்க்கை? அதன் காரணமாக ஜனங்கள் எதை நம்புகின்றனர்? ஏன் அதை நம்புகின்றனர்?
விஷயம் ஒன்று, பதில்கள் அநேகம்
4. மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றி பல்வேறு மதத்தினர் என்ன நம்புகின்றனர்?
4 மரணத்திற்குப் பின் ஆட்கள் பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்கு போவதாகவே கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டுகிறவர்களில் அநேகர் நம்புகின்றனர். இந்துக்களோ மறுபிறப்பில் நம்பிக்கை வைக்கின்றனர். இஸ்லாமியர்கள் நம்பிக்கையின்படி மரணத்திற்கு பின் ஒரு நியாயத்தீர்ப்பு நாள் வரும். அப்போது அல்லாஹ் ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் போக்கையும் ஆராய்ந்து அவர்களை ஜன்னத்திற்கு (சொர்க்கத்திற்கு) அல்லது தோஷக்கிற்கு (நரகத்திற்கு) அனுப்புவார். சில நாடுகளிலோ மரித்தவர்களைப் பற்றிய நம்பிக்கைகள், பெயர் கிறிஸ்தவமும் உள்ளூர் சடங்காச்சாரங்களும் இரண்டறக் கலந்த ஒரு விநோத கலவையாக உள்ளன. உதாரணமாக, இலங்கையில் புத்த மதத்தவரும் கத்தோலிக்கரும் தங்கள் வீட்டில் மரணம் ஏற்பட்டால் கதவுகளையும் ஜன்னல்களையும் முழுவதுமாக திறந்து வைக்கின்றனர்; மேலும், மரித்தவருடைய கால்கள் முன்வாசலை நோக்கியிருக்கும்படி பிணத்தை வைக்கின்றனர். இப்படி செய்தால் மரித்தவருடைய ஆத்துமா சுலபமாக வெளியே செல்லும் என நம்புகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அநேக கத்தோலிக்கரும் புராட்டஸ்டண்டினரும், மரித்தவருடைய வீட்டிலுள்ள கண்ணாடிகளை எல்லாம் துணிகளால் மூடிவிடுவது வழக்கம்; கண்ணாடியை பார்ப்பவர், மரித்த ஆளுடைய ஆத்துமாவை பார்ப்பதை அது தவிர்க்குமாம். பிறகு 40 நாட்கள் கழித்து, அந்த ஆத்துமா பரலோகத்திற்கு சென்றுவிட்டதாக கருதி குடும்ப அங்கத்தினரும் நண்பர்களும் அதை கொண்டாடுகின்றனர்.
5. பெரும்பாலான மதங்கள் எந்த முக்கிய நம்பிக்கையில் ஒத்திருக்கின்றன?
5 எத்தனையோ வேறுபாடுகள் இருந்தபோதிலும் ஒரு விஷயத்திலாவது பெரும்பாலான மதங்கள் ஒத்துப்போவதாக தோன்றுகிறது. அழியாமையுள்ள ஏதோவொன்று ஓர் ஆளுக்குள் இருக்கிறது எனவும் உடல் மரித்தபின்பும் அது தொடர்ந்து உயிர் வாழ்கிறது எனவும் நம்புகின்றனர். கிறிஸ்தவமண்டலத்தின் நூற்றுக்கணக்கான பிரிவுகளிலும் உட்பிரிவுகளிலும் சொல்லப்போனால் எல்லாமே, அழிவில்லாத ஏதோவொன்று மனிதனுக்குள் இருக்கிறது என்று போதிக்கின்றன. இந்த நம்பிக்கை யூதமதத்திலும் ஓர் அடிப்படை கோட்பாடாகும். இந்துமத போதனையாகிய மறுபிறப்பிற்கு இதுவே அடிப்படையாகும். உடல் மரித்தபிறகு ரூஹ் தொடர்ந்து உயிர் வாழ்கிறதென இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலிய பழங்குடி, ஆப்பிரிக்க ஆன்மீகவாதி, ஷின்டோ, புத்த மதத்தினர் என எல்லாருமே இதே கருத்தை வெவ்வேறுபட்ட விதங்களில் போதிக்கின்றனர்.
6. மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்பதை குறித்து சில வல்லுநர்களின் கருத்து என்ன?
6 மறுபட்சத்தில், மரணத்தின்போது உணர்வுள்ள வாழ்க்கை முடிந்துவிடுகிறது என நம்புகிறவர்களும் இருக்கின்றனர். அவர்களுக்கு, உடலைவிட்டு பிரிந்து தனியாக வாழும் ஆள்தன்மையற்ற, நிழலுருவமான ஏதோவொன்றில் உயிர் தொடருகிறது என்ற எண்ணமே முற்றிலும் நியாயமற்றதாக தோன்றுகிறது. அதுமட்டுமல்ல, தனி நபர்களுக்கு அழியாமை இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களுள் சிலர், புகழ்பெற்ற பூர்வகால தத்துவஞானிகளான அரிஸ்டாட்டில் மற்றும் எபிக்கூரஸ், மருத்துவரான ஹிப்போகிரேடஸ், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தத்துவஞானி டேவிட் ஹியூம், அரேபிய வல்லுநர் ஏவிரோஸ், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோர்.
7. ஆத்துமா என்ற போதகத்தைப் பற்றிய என்ன முக்கிய கேள்விகளை சிந்திக்க வேண்டும்?
7 இப்படிப்பட்ட முரண்படும் கருத்துகளும் நம்பிக்கைகளும் நம்மைத் தாக்குவதால் பின்வரும் கேள்விகள் எழும்புகின்றன: அழியாத ஆத்துமா என்ற ஒன்று உண்மையில் நமக்குள் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால், இந்தப் பொய் போதகம் எப்படி இன்றுள்ள அநேக மதங்களின் முக்கிய போதகமானது? அந்தக் கருத்து எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விகளுக்கு நாம் உண்மையான, திருப்தியளிக்கும் பதில்களைக் காண வேண்டியது மிகவும் முக்கியம்; ஏனென்றால் நம்முடைய எதிர்காலம் அதில் சார்ந்திருக்கிறது. (1 கொரிந்தியர் 15:19) முதலில் ஆத்துமா என்ற போதகம் பிறந்த கதையை ஆராயலாம்.
அந்தக் கோட்பாட்டின் பிறப்பு
8. அழியாமையுள்ள ஆத்துமா என்ற போதகத்தைப் பரப்புவதில் சாக்ரடீஸும் பிளேட்டோவும் என்ன பங்கு வகித்தனர்?
8 பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸும் பிளேட்டோவும்தான், அழியாத ஓர் ஆத்துமா இருக்கிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்த முதலானவர்கள் என நம்பப்படுகிறது. ஆனாலும் இந்தக் கருத்திற்கு அவர்கள் வித்திடவில்லை. மாறாக, அதற்கு மெருகேற்றி, தத்துவ வடிவைக் கொடுத்து, அப்போதும் இப்போதும் இருக்கும் நவநாகரிக வகுப்பினரின் கருத்தை கவருவதாக ஆக்கினர். உண்மை என்னவென்றால், அழியாமையுள்ள ஏதோவொன்று மனிதனுக்குள் இருக்கிறது என பூர்வ பெர்சியாவிலிருந்த ஜோராஷ்டிரியர்களும் அவர்களுக்கு முன்பே எகிப்தியர்களும் நம்பினர். அப்படியென்றால் கேள்வியானது, இந்தப் போதகத்தின் ஆரம்பம்தான் என்ன?
9. எகிப்து, பெர்சியா, கிரீஸ் போன்ற நாடுகளின் புராதன கலாச்சாரங்களைப் பாதித்த பொது ஊற்றுமூலம் என்ன?
9 பாபிலோனியா, அசீரியா தேசத்து மதங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்குகிறது: “பூர்வகாலத்தில் . . . பாபிலோனிய மதத்தின் செல்வாக்கால் எகிப்து, பெர்சியா, கிரீஸ் ஆகியவை பாதிக்கப்பட்டன.” எகிப்திய மத நம்பிக்கைகளைப் பற்றி அந்தப் புத்தகம் தொடர்ந்து கூறுவதாவது: “எல்-அமர்னா பலகைத்துண்டுகள் காண்பிக்கிறபடி, எகிப்திற்கும் பாபிலோனியாவிற்கும் இடையே தொன்றுதொட்டே இருந்துவந்த தொடர்பின் காரணமாக பாபிலோனிய கருத்துகளும் பழக்கவழக்கங்களும் எகிப்திய மதங்களில் ஊடுருவுவதற்கான வாய்ப்புகள் ஏராளம் இருந்தன.” a பூர்வ பெர்சிய, கிரேக்க கலாச்சாரங்களைப் பொறுத்ததிலும்கூட இதுவே உண்மையாகும்.
10. மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றிய பாபிலோனியர்களின் கருத்து என்ன?
10 ஆனால், அழியாத ஏதோவொன்று மனிதனுக்குள் இருப்பதாக பூர்வீக பாபிலோனியர்கள் நம்பினார்களா? இதன் சம்பந்தமாக, அ.ஐ.மா.-விலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மாரிஸ் ஜாஸ்டிரோ ஜூனியர் இவ்வாறு எழுதினார்: “படைக்கப்பட்ட எதுவுமே முற்றிலும் அழிந்துபோகுமென [பாபிலோனியாவைச் சேர்ந்த] மக்களோ மத தலைவர்களோ நம்பவில்லை. [அவர்களுடைய எண்ணத்தில்] மரணம் என்பது மற்றொரு வாழ்க்கைக்கு போகும் வழிதான்; [இந்த வாழ்க்கையில்] அழியாமை கிட்டவில்லை என்பது, மரணம் மற்றொரு வாழ்க்கைக்கு நிச்சயம் வழிநடத்தும் என்பதையே வலியுறுத்துகிறது.” ஆகவே, மரணத்திற்கு பிறகு உயிர் ஏதோவொரு விதத்தில் ஏதோவொரு வடிவில் தொடருகிறது என பாபிலோனியர்கள் நம்பினர். இவ்வாறு தங்களுக்கிருந்த இந்த நம்பிக்கையின் காரணமாக, மரித்தவர்கள் மறுஜென்மத்தில் உபயோகிப்பதற்கு சில பொருட்களையும் அவர்களோடு சேர்த்து புதைத்தனர்.
11, 12. ஜலப்பிரளயத்திற்கு பிறகு, மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற போதகம் எங்கே ஆரம்பமானது?
11 அழியாத ஏதோவொன்று மனிதனுக்குள் இருக்கிறது என்ற போதகம் பூர்வ பாபிலோனில் ஆரம்பமானது தெள்ளத்தெளிவாய் உள்ளது. இது அக்கறைக்குரியதா? ஆம்; ஏனென்றால் பைபிளின்படி நோவாவின் கொள்ளுப்பேரனான நிம்ரோது, பாபேல் நகரத்தை அல்லது பாபிலோனை நிறுவினான். நோவாவின் நாளைய உலகளாவிய ஜலப்பிரளயத்திற்கு பின் உலகெங்கும் ஒரே மொழியும் ஒரே மதமுமே இருந்தன. நிம்ரோது, ‘யெகோவாவுக்கு விரோதமாக’ இருந்ததோடு, அவனும் அவனைப் பின்பற்றினோரும் தங்கள் ‘பெயர் பிரபலமடைய’ வேண்டும் என நினைத்தார்கள். இவ்வாறாக, ஒரு நகரத்தை நிறுவி அதில் ஒரு கோபுரத்தைக் கட்டினதினால் நிம்ரோது மற்றொரு மதத்தை ஆரம்பித்தான்.—ஆதியாகமம் 10:1, 6, 8-10; 11:1-4, NW.
12 நிம்ரோது கொடூரமான முறையில் மரித்தான் என்கிறது மரபு. பாபிலோன் நகரத்தை நிறுவி, அதை விஸ்தரித்து, அதன் முதல் ராஜாவாக ஆன நிம்ரோதை அவனுடைய மரணத்திற்கு பின் அந்த மக்கள் உயர்வாக போற்றிப் புகழ்ந்திருப்பார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. கடவுளாக்கப்பட்ட நிம்ரோதுதான் உண்மையில் பாபிலோனிய கடவுளான மார்துக் (மெரோதாக்) என சில நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனென்றால், மார்துக் பாபிலோனை நிறுவியதாக நம்பப்பட்டது; அதுமட்டுமல்ல அநேக பாபிலோனிய ராஜாக்களின் பெயர்களிலும் அவன் பெயர் சேர்ந்தே இருந்தது. (2 இராஜாக்கள் 25:27; ஏசாயா 39:1; எரேமியா 50:2) இது உண்மையென்றால், ஓர் ஆளின் மரணத்திற்கு பிறகு அவனுக்குள் இருக்கும் ஏதோவொன்று மரிக்காமல் உயிர் வாழ்கிறது என்ற எண்ணம் நிம்ரோதுடைய மரணத்தின் சமயத்திலாவது புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் ஜலப்பிரளயத்திற்கு பிறகு, மனிதனுக்கு அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற போதகம் பாபேலில் அல்லது பாபிலோனில்தான் தோன்றியது என்பது சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினாலே தெரியும்.
13. அழியாத ஆத்துமா என்ற போதகம் உலகமுழுவதும் பரவியது எவ்வாறு, என்ன விளைவுகளுடன்?
13 பாபேலில் கோபுரம் கட்டியவர்களின் பாஷைகளை தாறுமாறாக்கி அவர்களுடைய முயற்சிகளை கடவுள் முறியடித்தார் என பைபிள் காட்டுகிறது. ஒருவரோடு ஒருவர் பேச முடியாதவர்களாய் அவர்கள் தங்கள் திட்டத்தைக் கைவிட்டு, ‘பூமியின்மீதெங்கும் சிதறிப்போனார்கள்.’ (ஆதியாகமம் 11:5-9) கோபுரத்தைக் கட்டவிருந்தவர்களின் பாஷைதான் மாறியதே ஒழிய அவர்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும் மாறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஆகவே அவர்கள் எங்கு சென்றாலும் தங்களுடைய மத கருத்துக்களையே தொடர்ந்து பின்பற்றினர். இவ்வாறாக, அழிவில்லாத ஆத்துமா என்ற நம்பிக்கை உட்பட பாபிலோனிய மத போதகங்கள் நாலாபுறமும் பரவி உலகின் முக்கிய மதங்களின் அடிப்படை ஆயின. இப்படித்தான் பொய்மத உலகப் பேரரசு ஆரம்பமானது. அதை, “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என பைபிள் விவரிப்பது பொருத்தமானதே.—வெளிப்படுத்துதல் 17:5.
பொய்மத உலகப் பேரரசு கிழக்கிற்கு பரவுகிறது
14. பாபிலோனிய மத நம்பிக்கைகள் இந்திய துணை கண்டத்திற்குள் நுழைந்ததெப்படி?
14 சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு, வெள்ளைநிற ஆரிய இனத்தவர் வடமேற்கு பகுதியிலிருந்து தற்போது இந்தியா, பாகிஸ்தான் எல்லையிலுள்ள சிந்து சமவெளிக்கு இடம்பெயர்ந்தனர் என சில சரித்திராசிரியர்கள் கூறுகின்றனர். அங்கிருந்து கங்கை சமவெளிக்கும் பின்னர் இந்தியா முழுவதற்கும் பரவினார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களின் மத நம்பிக்கைகள், பூர்வ ஈரானிய, பாபிலோனிய போதகங்களில் சார்ந்திருந்ததென சில வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த மத நம்பிக்கைகளே இந்து மதத்தின் அஸ்திவாரம் ஆயின.
15. அழியாத ஆத்துமா என்ற கருத்து இன்றைய இந்து மதத்தில் தலைதூக்கியது எவ்வாறு?
15 அழியாத ஆத்துமா என்ற கருத்து இந்தியாவில் மறுபிறப்பு கோட்பாடாக உருவெடுத்தது. மனிதர் மத்தியில் காணப்பட்ட பொல்லாங்கு, துன்பம் போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் சிக்கித் தவித்த இந்துமத ஞானிகள் கர்மா என்னும் சட்டத்தை, அதாவது ஊழ்வினையும் பயனும் என்னும் சட்டத்தை ஏற்படுத்தினர். இந்தச் சட்டத்தை அழியாத ஆத்துமா என்ற நம்பிக்கையோடு சேர்த்து மறுபிறப்பு கோட்பாட்டை ஏற்படுத்தினர்; இவ்வாறு, ஒரு பிறவியில் செய்யும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் அடுத்த பிறவியில் பலன் அல்லது தண்டனை கிடைக்கும். உண்மையுள்ளோருக்கான பரிசு சொர்க்கம் அல்லது பிறவி சுழற்சிகளிலிருந்து விடுபட்டு பிரம்மம் என அழைக்கப்படுவதோடு ஐக்கியமாவதே. நூற்றாண்டுகளினூடே இந்துமதம் பரவுகையில் மறுபிறப்பு போதகமும் பரவியது. இந்தக் கோட்பாடே இன்றைய இந்துமதத்தின் அடிப்படை ஆனது.
16. மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றிய என்ன நம்பிக்கை கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த பெரும்பகுதியினரின் மத கருத்துகளிலும் பழக்கவழக்கங்களிலும் செல்வாக்கு செலுத்தியது?
16 புத்த, ஜைன, சீக்கிய மதங்கள் இந்து மதத்திலிருந்தே தோன்றின. இவையும்கூட மறுபிறப்பில் நம்பிக்கை வைக்கின்றன. மேலுமாக புத்தமதம், சீனா, கொரியா, ஜப்பான் உட்பட கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதிகளில் தன் வேர்களை பரவவிட்டபோது அந்த முழு பகுதியின் பண்பாட்டையும் மதத்தையும் அது பெருமளவு பாதித்தது. இதன் விளைவாக, புத்தமத நம்பிக்கைகள், ஆவிக்கொள்கை, மூதாதையர் வழிபாடு போன்ற நம்பிக்கைகளின் கலவையாக பல மதங்கள் தோன்றின. இவற்றுள், தாவோயிஸம், கன்ஃபூசியனிஸம், ஷின்டோ ஆகியவை மிகவும் பிரபலமாயின. இவ்வாறாக, உடல் மரித்தபிறகும் உயிர் தொடர்ந்து வாழ்கிறது என்ற நம்பிக்கை அத்தேசங்களில் வாழ்ந்தோரில் பெரும்பகுதியினரின் மத கருத்துகளிலும் பழக்கவழக்கங்களிலும் செல்வாக்கு செலுத்தியது.
யூதமதம், கிறிஸ்தவமண்டலம், இஸ்லாம் ஆகியவற்றை பற்றியென்ன?
17. மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றி பூர்வ யூதர்களின் நம்பிக்கை என்ன?
17 மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றி யூதமதம், கிறிஸ்தவமண்டலம், இஸ்லாம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் என்ன நம்புகின்றனர்? இவற்றுள் யூதமதமே மிகவும் பழமையானது. அதின் வேர்கள் சுமார் 4,000 வருடங்கள் பின்னோக்கி ஆபிரகாமின் காலம் வரை செல்கின்றன. இது, அழியாத ஆத்துமா என்ற கோட்பாட்டை சாக்ரடீஸும் பிளேட்டோவும் பிரபலப்படுத்துவதற்கு வெகு காலத்திற்கு முன்பாகும். பூர்வ யூதர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைத்தனர்; இயல்பான மனித அழியாமையில் அல்ல. (மத்தேயு 22:31, 32; எபிரெயர் 11:18, 19) அப்படியென்றால், அழியாத ஆத்துமா என்ற இந்தக் கோட்பாடு எவ்வாறு யூதமதத்திற்குள் நுழைந்தது? சரித்திரம் பதிலளிக்கிறது.
18, 19. அழியாத ஆத்துமா என்ற போதகம் யூதமதத்திற்குள் எவ்வாறு நுழைந்தது?
18 பொ.ச.மு. 332-ல் மகா அலெக்ஸாண்டர், எருசலேம் உட்பட மத்திய கிழக்கு பகுதிகளைக் கைப்பற்றினார். அலெக்ஸாண்டருக்கு பின் வந்தவர்கள் கிரேக்கமயமாக்கும் அவருடைய கனவை நனவாக்க முயலுகையில் கிரேக்க, யூத பண்பாடுகள் இரண்டறக் கலந்தன. காலப்போக்கில் யூதர்களுக்கு கிரேக்க கருத்துகள் அத்துப்படியாயின; அவர்களில் சிலர் தத்துவ ஞானிகளுமாயினர்.
19 அப்படிப்பட்ட தத்துவ ஞானிகளுள் ஒருவர்தான் பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அலெக்ஸாந்திரியாவின் பிலோ. அவர் பிளேட்டோவை உயர்வாக மதித்து, யூதமதத்தை கிரேக்க தத்துவங்களின் அடிப்படையில் விளக்க முற்பட்டார். இவ்வாறாக பின்னர் வந்த யூதமத சிந்தனையாளர்களுக்கு முன்னோடியானார். இந்தக் கிரேக்க எண்ணம், ரபீக்களின் வாய்மொழி சட்டங்களுக்கு எழுதப்பட்ட விளக்கம் தரும் டால்மூட்டையும் விட்டுவைக்கவில்லை. என்ஸைக்ளோப்பீடியா ஜூடைக்கா கூறுகிறது: “மரணத்திற்கு பிறகு ஆத்துமா தொடர்ந்து உயிர்வாழ்கிறதென டால்மூட்டின் ரபீக்கள் நம்பினர்.” அதுமட்டுமா, பின்னர் எழுதப்பட்ட கபாலா போன்ற யூத புராண இலக்கியங்கள் மறுபிறப்பை போதிக்கும் அளவுக்கு சென்றன. இவ்வாறாக, அழியாத ஆத்துமா என்ற எண்ணம், கிரேக்க தத்துவம் வாயிலாக மெல்ல மெல்ல யூதமதத்திற்குள் நுழைந்தது. கிறிஸ்தவமண்டலத்திற்குள் இந்தப் போதகம் நுழைந்ததைப் பற்றி என்ன?
20, 21. (அ) பிளேட்டோனிய அல்லது கிரேக்க தத்துவங்களிடமாக ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நிலைநிற்கை என்ன? (ஆ) பிளேட்டோவின் எண்ணங்கள் கிறிஸ்தவ போதகங்களோடு இணைவதற்கு காரணம் என்ன?
20 உண்மைக் கிறிஸ்தவத்தை ஆரம்பித்து வைத்தவர் இயேசு கிறிஸ்துவே. இயேசுவைப் பற்றி முகையில் டெ உனாமுனோ இவ்வாறு எழுதினார்: “[கிரேக்க] பிளேட்டோனிய கருத்தின்படி ஆத்துமா அழியாது என்பதில் அல்ல, யூத கருத்தின்படி சரீரம் உயிர்த்தெழுப்பப்படும் என்பதிலேயே அவர் நம்பிக்கை வைத்தார்.” அவர் இவ்வாறு கூறி முடித்தார்: “ஆத்துமா அழியாமை என்பது . . . புறமத தத்துவஞ்சார்ந்த கோட்பாடு.” இதனால்தான், ‘லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், கிறிஸ்துவைப் பற்றினதல்லாமல் மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றிய’ போதகங்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்கும்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களை பவுல் கடுமையாக எச்சரித்தார். அது ஏன் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?—கொலோசெயர் 2:8.
21 ஆனால், இந்தப் “புறமத தத்துவஞ்சார்ந்த கோட்பாடு” எப்போது, எப்படி கிறிஸ்தவமண்டலத்திற்குள் நுழைந்தது? த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது: “கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து, கிரேக்க தத்துவத்தில் சிறிதளவு பயிற்சி பெற்றிருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விசுவாசத்தைத் தத்துவ ரீதியில் வெளிப்படுத்தவேண்டிய தேவையை உணர ஆரம்பித்தனர். தங்களுடைய அறிவு பசியைத் தீர்ப்பதற்கும், மேதைகளான புறமதத்தினரை மதமாற்றுவதற்கும் அது தேவை என நினைத்தனர். இதைச் செய்ய அவர்களுக்கு மிகவும் உதவியது பிளேட்டோனிய தத்துவமே.” இவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடுகளில் பெரும் செல்வாக்கு செலுத்திய இரண்டு ஆரம்பகால தத்துவ ஞானிகள் அலெக்ஸாந்திரியாவின் ஆரிகனும் ஹிப்போவின் அகஸ்டீனும் ஆவர். இவர்கள் இருவரும் பிளேட்டோனிய எண்ணங்களில் மூழ்கிப்போயினர். அவற்றை கிறிஸ்தவ போதகங்களுடன் இணைப்பதிலும் பெரும் பங்குவகித்தவர்கள் இவர்களே.
22. அழியாத ஆத்துமா அல்லது ரூஹ் என்ற போதகம் இஸ்லாமின் முக்கிய கொள்கையாக தொடர்ந்திருப்பது எப்படி?
22 அழியாத ஆத்துமா என்ற எண்ணம் பிளேட்டோனிய செல்வாக்கினால் யூதமதத்திலும் கிறிஸ்தவமண்டலத்திலும் நுழைந்தது; ஆனால் இஸ்லாமோ அந்தக் கோட்பாடோடுதான் ஆரம்பமானது. இஸ்லாமியர்களின் புனித புத்தகமான குர்ஆன், மரணத்திற்கு பிறகு தொடர்ந்து உயிர்வாழும் ஓர் ஆத்துமா (அரபிக்: ரூஹ்) மனிதனுக்கு இருக்கிறது என போதிக்கிறது. பரலோக பரதீஸிய பூங்காவில் (ஜன்னத்தில்) வாழ்க்கை அல்லது எரியும் நரகத்தில் (தோஷக்கில்) தண்டனை என்பதே இந்த ஆத்துமா அல்லது ரூஹ் இறுதியில் அனுபவிக்க வேண்டிய முடிவு என அது கூறுகிறது. இதை வைத்து, இஸ்லாமிய போதகங்களையும் கிரேக்க தத்துவத்தையும் கலக்க அரேபிய வல்லுநர்கள் முயலவில்லை என எடைபோட்டுவிட முடியாது. உண்மையில், அரேபியர்கள் அரிஸ்டாடிலுடைய எழுத்துக்களால் ஓரளவு பாதிக்கப்பட்டனர். இருந்தாலும், அழியாத ஆத்துமா அல்லது ரூஹ் இருக்கிறது என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
23. மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றிய என்ன முக்கியமான கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்?
23 மரிக்காத ஏதோவொன்று மனிதனுக்குள் தொடர்ந்திருக்கிறது என்ற எண்ணத்தை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதிலுமுள்ள மதங்கள், மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றிய குழப்பமூட்டும் நம்பிக்கைகளை உருவாக்கியிருக்கின்றன. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் கோடிக்கணக்கான ஜனங்களை பாதித்திருக்கின்றன; அநேகர்மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை அடிமைப்படுத்தியும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் எதிர்ப்படும் நாம் பின்வருமாறு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது: நாம் மரிக்கையில் என்ன ஏற்படுகிறது என்ற உண்மையை அறிய முடியுமா? மரணத்திற்கு பின் வாழ்க்கை இருக்கிறதா? அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இதை ஏன் அடுத்த கட்டுரையில் படித்துப் பார்க்கக்கூடாது?
[அடிக்குறிப்பு]
a எல்-அமர்னா என்பது பொ.ச.மு. 14-வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படும் எகிப்திய நகரமாகிய ஏகடாட்டன் என்பதன் இடிபாடுகளே ஆகும்.
உங்களால் விளக்க முடியுமா?
◻ மரணத்திற்கு பின் வாழ்க்கையைப் பற்றி என்ன பொதுவான கருத்து பெரும்பாலான மதங்களில் காணப்படுகிறது?
◻ அழியாத ஆத்துமா என்ற போதகம் பூர்வ பாபிலோனில் ஆரம்பமானதை சரித்திரமும் பைபிளும் எவ்வாறு சுட்டிக்காட்டுகின்றன?
◻ அழியாத ஆத்துமா என்ற பாபிலோனிய நம்பிக்கையால் கிழக்கத்திய மதங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன?
◻ அழியாத ஆத்துமா என்ற போதகம், யூத, கிறிஸ்தவமண்டலம், இஸ்லாம் ஆகிய மதங்களில் நுழைந்தது எவ்வாறு?
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
கிரேக்க, யூத கலாச்சாரங்கள் இரண்டறக் கலப்பதற்கு காரணம் மகா அலெக்ஸாண்டரின் வெற்றிகளே
அகஸ்டீன், பிளேட்டோனிய தத்துவத்தை கிறிஸ்தவத்தோடு இணைக்க முயன்றார்
[படத்திற்கான நன்றி]
அலெக்ஸாண்டர்: Musei Capitolini, Roma; அகஸ்டீன்: Great Men and Famous Women என்ற புத்தகத்திலிருந்து