யெகோவா நம்மிடம் மிக அதிகம் கேட்கிறாரா?
“நியாயஞ்செய்து மனதார இரக்கத்தைப் பாராட்டி உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்க வேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்.”—மீகா 6:8, தி.மொ.
1. சிலர் கடவுளை வணங்காமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்?
யெகோவா தமது மக்களிடம் ஏதோ ஒன்றை கேட்கிறார். ஆனால் மேற்குறிப்பிடப்பட்ட மீகாவின் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசித்த பின்பு, கடவுள் கேட்பவை நியாயமானவையே என்ற முடிவுக்கு நீங்கள் வரலாம். என்றபோதிலும், பலர் நம்முடைய மகத்தான சிருஷ்டிகரை வணங்குவதில்லை. ஒரு காலத்தில் அவரை வணங்கி வந்தவர்களும் தற்போது பின்வாங்கி விட்டார்கள். காரணம்? கடவுள் நம்மிடம் மிக அதிகத்தைக் கேட்கிறார் என்று அவர்கள் நினைப்பதே. அப்படியானால் கடவுள் நம்மிடம் அதிகத்தை கேட்கிறாரா? அல்லது இது சம்பந்தமாக ஒருவருடைய மனப்பான்மையில்தான் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? ஒரு சரித்திரப்பூர்வ விவரம் இதன்பேரில் உட்பார்வையை அளிக்கிறது.
2. நாகமான் யார், என்ன செய்யும்படி யெகோவாவின் தீர்க்கதரிசி அவரிடம் சொன்னார்?
2 சீரியாவின் படைத்தலைவராகிய நாகமான் குஷ்டரோகத்தால் அவதிப்பட்டார். அவரை சுகப்படுத்தும் வல்லமை படைத்த யெகோவாவின் தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இருப்பதாக நாகமானிடம் சொல்லப்பட்டது. ஆகையால், அவர் தனது பரிவாரத்துடன் இஸ்ரவேலுக்குச் சென்று கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலிசாவின் வீட்டை அடைந்தார். தன்னை காணவந்த மதிப்புமிக்க இந்தப் பிரமுகரை வரவேற்பதற்கு எலிசா வராமல், ஓர் ஊழியக்காரனை அனுப்பி நாகமானிடம் இவ்வாறு சொல்லச் சொன்னார்: “நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய்.”—2 இராஜாக்கள் 5:10.
3. யெகோவா சொன்னதை செய்வதற்கு நாகமான் முதலில் ஏன் மறுத்தார்?
3 கடவுளுடைய தீர்க்கதரிசி சொன்னபடி நாகமான் செய்தால், அருவருப்பான அந்த நோயிலிருந்து சுகமாவார். ஆனால், யெகோவா அவரிடம் மிக அதிகத்தை கேட்டாரா? இல்லவே இல்லை. இருந்தபோதிலும், யெகோவா கேட்டதைச் செய்ய நாகமானுக்கு மனதில்லை. “நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ”? என்று மறுத்துரைத்து, கோபாவேசத்துடன் நாகமான் போய்விட்டார்.—2 இராஜாக்கள் 5:12.
4, 5. (அ) நாகமானின் கீழ்ப்படிதலுக்குக் கிடைத்த பலன் என்ன, அதைப் பெற்றபோது அவர் எவ்வாறு பிரதிபலித்தார்? (ஆ) இப்போது நாம் எதைச் சிந்திப்போம்?
4 உண்மையில் நாகமானின் பிரச்சினை என்ன? அவரிடம் செய்ய சொன்னது மிகவும் கடினம் அல்ல. நாகமானின் ஊழியக்காரர்கள் சாதுரியமாய் அவரிடம்: “அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம்?” என்று சொன்னார்கள். (2 இராஜாக்கள் 5:13) நாகமானின் மனப்பான்மையே பிரச்சினையாக இருந்தது. தனக்கே உரித்தான மதிப்புடன் தான் நடத்தப்படவில்லை என்பதாகவும், வீணாகவும் மதிப்புக்குறைவாகவும் தோன்றிய ஒன்றை செய்ய சொன்னதாகவும் நினைத்தார். இருப்பினும், தன்னுடைய ஊழியக்காரர்களின் சாதுரியமான ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, யோர்தான் நதியில் ஏழுதரம் முழுகினார். ‘அவர் மாம்சம் ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவர் சுத்தமானபோது,’ அவருக்கு உண்டான மகிழ்ச்சியை சற்று கற்பனைசெய்து பாருங்கள்! அவர் இருதயம் நன்றியுணர்ச்சியால் பொங்கி வழிந்தது. மேலும், இனிமேல் யெகோவாவைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்கப்போவதில்லை என்று நாகமான் அறிவித்தார்.—2 இராஜாக்கள் 5:14-17.
5 மனித சரித்திரம் முழுவதிலுமே, பல்வேறு கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுமாறு யெகோவா மக்களை கேட்டிருக்கிறார். இவற்றில் சிலவற்றை நீங்கள் ஆராயும்படி உங்களை அழைக்கிறோம். இப்படி நீங்கள் ஆராய்கையில், அத்தகைய காரியங்களைச் செய்யும்படி யெகோவா உங்களைக் கேட்டிருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் என்று கேட்டுக்கொள்ளுங்கள். பிற்பாடு, யெகோவா நம்மிடம் இன்று எதைக் கேட்கிறார் என்பதை சிந்திப்போம்.
கடந்த காலத்தில் யெகோவா கேட்டவை
6. அந்த முதல் ஜோடியிடம் என்ன செய்யும்படி கேட்கப்பட்டது? அத்தகைய கட்டளைகளுக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலித்திருப்பீர்கள்?
6 பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும், பூமியைக் கீழ்ப்படுத்தவும், மிருக ஜீவன்களை ஆண்டுகொள்ளவும் யெகோவா முதல் மனித ஜோடியாகிய ஆதாம் ஏவாளுக்குக் கட்டளையிட்டார். பரந்துவிரிந்த அழகிய பூங்காவனம் போன்ற வீட்டை பெற்றுக்கொள்வதன் மூலம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:27, 28; 2:9-15) ஆனால் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஏதேன் தோட்டத்திலிருந்த கனிதரும் மரங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மாத்திரம் அவர்கள் புசிக்கக்கூடாது. (ஆதியாகமம் 2:16, 17) அது மிக அதிகத்தைக் கேட்பதாக இருந்ததா? பூரண ஆரோக்கியத்தோடு என்றும் வாழும் எதிர்பார்ப்புடன் அப்படிப்பட்ட வேலையை நிறைவேற்றுவதில் நீங்கள் மகிழ்ச்சியடைந்திருப்பீர்கள் அல்லவா? அந்தத் தோட்டத்தில் ஒரு சோதனைக்காரன் தோன்றினபோதிலும், அவனுடைய விவாதத்தை புறக்கணித்திருப்பீர்கள் அல்லவா? சாதாரண ஒரு கட்டுப்பாட்டை விதிக்க யெகோவாவுக்கு உரிமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டிருப்பீர்கள் அல்லவா?—ஆதியாகமம் 3:1-5.
7. (அ) நோவாவுக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டது, அவருக்கு வந்த எதிர்ப்பு என்ன? (ஆ) நோவாவிடம் யெகோவா செய்ய சொன்னதைப் பற்றி நீங்கள் எப்படி கருதுகிறீர்கள்?
7 பிற்காலத்தில், பூகோள ஜலப்பிரளயத்திலிருந்து பாதுகாக்க ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவுக்கு யெகோவா கட்டளையிட்டார். அந்தப் பேழையின் பிரமாண்டமான தோற்றத்தைப் பார்க்கும்போது அந்த வேலை சுலபமானதல்ல என்பது தெரியவருகிறது. மேலும், மிகுந்த கேலிக்கும் பகைமைக்கும் மத்தியில் அப்பேழையை நோவா கட்டி முடித்திருக்கலாம். ஆனால் தன் குடும்பத்தாரையும் மிருகஜீவன்களையும் காப்பாற்ற முடிந்தது நோவாவுக்கு எப்பேர்ப்பட்ட பாக்கியம்! (ஆதியாகமம் 6:1-8, 14-16; எபிரெயர் 11:7; 2 பேதுரு 2:5) அத்தகைய ஒரு வேலை உங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அதை நிறைவேற்ற நீங்கள் கடினமாக உழைத்திருப்பீர்களா? அல்லது யெகோவா உங்களிடம் மிக அதிகத்தைக் கேட்டதாக முடிவு செய்திருப்பீர்களா?
8. என்ன செய்யும்படி ஆபிரகாமிடம் கேட்கப்பட்டது, அவர் கீழ்ப்படிந்ததன் பலனாக எது சித்தரித்துக் காட்டப்பட்டது?
8 மிகவும் கடினமான ஒன்றை செய்யும்படி ஆபிரகாமிடம் கடவுள் கேட்டார். “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு” என்று சொன்னார். (ஆதியாகமம் 22:2) அப்போது குழந்தைகள் இல்லாமலிருந்த ஈசாக்குக்கு எதிர்காலத்தில் பிள்ளைகள் பிறப்பார்கள் என்று யெகோவா வாக்குறுதி அளித்திருந்தார். ஆகவே ஈசாக்கை கடவுள் திரும்ப உயிர்ப்பிக்க முடியும் என்பதில் ஆபிரகாமின் விசுவாசம் சோதிக்கப்பட்டது. ஈசாக்கை பலியிட ஆபிரகாம் முயன்றபோது, கடவுள் அந்த வாலிபனை பாதுகாத்தார். கடவுள் தம் சொந்தக் குமாரனை மனிதவர்க்கத்திற்காக பலிசெலுத்தி, பின்னால் அவரை உயிர்த்தெழுப்புவார் என்பதை இச்சம்பவம் சித்தரித்துக் காட்டியது.—ஆதியாகமம் 17:19; 22:9-18; யோவான் 3:16; அப்போஸ்தலர் 2:23, 24, 29-32; எபிரெயர் 11:17-19.
9. ஆபிரகாமிடம் யெகோவா மிக அதிகத்தைக் கேட்கவில்லை என்று எப்படி சொல்லலாம்?
9 ஆபிரகாமிடம் யெகோவா தேவன் மிக அதிகத்தைக் கேட்டதாக சிலர் ஒருவேளை நினைக்கலாம். ஆனால் அவர் அதிகத்தைக் கேட்டாரா? ஒருவேளை தற்காலிகமாக நாம் மரணத்தில் நித்திரையடைய வேண்டியிருந்தாலும், மரித்தோரை உயிர்த்தெழுப்ப வல்லவராகிய நம் சிருஷ்டிகர் தமக்கு கீழ்ப்படியும்படி நம்மைக் கேட்பது உண்மையில் அன்பற்றதா? இயேசு கிறிஸ்துவும் ஆரம்ப காலத்தில் அவரைப் பின்பற்றினவர்களும் அவ்வாறு நினைக்கவில்லை. கடவுளுடைய சித்தத்தைச் செய்ய சரீர துன்புறுத்துதலை சகிக்கவும், ஏன், மரிக்கவும்கூட மனமுள்ளோராக இருந்தார்களே! (யோவான் 10:11, 17, 18; அப்போஸ்தலர் 5:40-42; 21:13) சூழ்நிலைமைகள் அவசியப்படுத்தினால், இதையே செய்ய நீங்கள் மனமுள்ளோராக இருப்பீர்களா? தம்முடைய ஜனமாக இருப்பதற்கு ஒப்புக்கொண்டவர்களிடம் யெகோவா கேட்ட சிலவற்றை கவனியுங்கள்.
இஸ்ரவேலுக்கான யெகோவாவின் சட்டம்
10. யெகோவா கேட்ட அனைத்தையும் செய்வதாக வாக்குறுதி அளித்தவர்கள் யார், யெகோவா அவர்களுக்கு என்ன கொடுத்தார்?
10 ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கின் வழியாகவும் பேரனாகிய யாக்கோபு அல்லது இஸ்ரவேலின் வழியாகவும் தோன்றிய சந்ததியார், இஸ்ரவேல் தேசம் என்று சொல்லும் அளவுக்கு பெருகினார்கள். இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து யெகோவா விடுவித்தார். (ஆதியாகமம் 32:28; 46:1-3; 2 சாமுவேல் 7:23, 24) அதன் பின் சீக்கிரத்திலேயே, கடவுள் தங்களிடம் கேட்கும் எல்லாவற்றையும் செய்வதாக வாக்குறுதி அளித்தார்கள். “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்” என்பதாக சொன்னார்கள். (யாத்திராகமம் 19:8, தி.மொ.) யெகோவா ஆளும்படி விரும்பிய இஸ்ரவேலரின் விருப்பத்திற்கு இசைவாக, பத்துக் கற்பனைகள் உட்பட, 600-க்கும் மேற்பட்ட சட்டங்களை யெகோவா அந்த ஜனத்திற்குக் கொடுத்தார். மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட கடவுளின் இந்தச் சட்டங்கள், காலப்போக்கில் வெறுமனே நியாயப்பிரமாணம் என அறியப்பட்டன.—எஸ்றா 7:6; லூக்கா 10:25-27; யோவான் 1:17.
11. நியாயப்பிரமாணத்தின் ஒரு நோக்கமென்ன, அதை நிறைவேற்ற உதவிய சில கட்டளைகள் யாவை?
11 நியாயப்பிரமாணத்தின் ஒரு நோக்கம் என்னவென்றால், பாலியல் ஒழுக்கம், வியாபார சம்பந்தமாக கொடுக்கல் வாங்கல் முறைகள், பிள்ளை கவனிப்பு போன்ற காரியங்களை உட்படுத்தும் நலமான விதிமுறைகளை அளித்து இஸ்ரவேலரை பாதுகாப்பது. (யாத்திராகமம் 20:14; லேவியராகமம் 18:6-18, 22-24; 19:35, 36; உபாகமம் 6:6-9) சக மனிதரை எவ்வாறு நடத்துவது என்பதோடுகூட தங்களுடைய மிருகங்களை எவ்வாறு நடத்துவது என்பது சம்பந்தமாகவும் விதிமுறைகள் கொடுக்கப்பட்டன. (லேவியராகமம் 19:18; உபாகமம் 22:4, 10) வருடாந்தர பண்டிகைகளும் வணக்கத்திற்காக ஒன்றுகூடி வருவது சம்பந்தப்பட்ட கட்டளைகளும் ஆவிக்குரியப்பிரகாரம் ஜனங்களைப் பாதுகாப்பதற்கு உதவின.—லேவியராகமம் 23:1-43; உபாகமம் 31:10-13.
12. நியாயப்பிரமாணத்தின் முக்கிய நோக்கம் என்ன?
12 நியாயப்பிரமாணத்தின் முக்கியமான ஒரு நோக்கம் அப்போஸ்தலன் பவுலால் குறிப்பிடப்பட்டது. அவர் இவ்வாறு எழுதினார்: “வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த வித்து [கிறிஸ்து] வரும் வரையில், மீறுதல்களை வெளிப்படுத்துவதற்கு அது சேர்க்கப்பட்டது.” (கலாத்தியர் 3:19, NW) தாங்கள் அபூரணர் என்பதை இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் நினைப்பூட்டியது. அப்படியானால், அவர்களுடைய பாவங்களை முற்றிலும் நீக்குவதற்கு நியாயப்படி ஒரு பரிபூரண பலி தேவைப்பட்டது. (எபிரெயர் 10:1-4) எனவே, மேசியா அல்லது கிறிஸ்துவாக இருந்த இயேசுவை ஏற்பதற்கு ஜனங்களை ஆயத்தப்படுத்துவதே நியாயப்பிரமாணத்தின் நோக்கம். பவுல் எழுதினார்: “நாம் விசுவாசத்தினால் நீதிமான்களாகத் தீர்க்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவினிடம் வழிநடத்துகிற உபாத்தியானது.”—கலாத்தியர் 3:24, தி.மொ.
யெகோவாவின் நியாயப்பிரமாணம் பாரமானதா?
13. (அ) அபூரண மனிதர் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு கருதினார்கள், ஏன்? (ஆ) நியாயப்பிரமாணம் உண்மையில் பாரமானதாக இருந்ததா?
13 நியாயப்பிரமாணம் “பரிசுத்தமும் நீதியும் நன்மையுமான[தாக]” இருந்தபோதிலும், பலர் அதை பாரமானதாக கருதினார்கள். (ரோமர் 7:12, தி.மொ.) நியாயப்பிரமாணம் பூரணமானதாக இருந்ததால், அதன் உயர்ந்த தராதரங்களை இஸ்ரவேலரால் கடைப்பிடிக்க முடியவில்லை. (சங்கீதம் 19:7) அதனால்தான் அப்போஸ்தலன் பேதுரு அதை, “நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடி” என்று அழைத்தார். (அப்போஸ்தலர் 15:10) நிச்சயமாகவே, அந்த நியாயப்பிரமாணம்தானே பாரமானதாக இல்லை, அதற்குக் கீழ்ப்படிந்தது அந்த ஜனங்களுக்குத்தான் நன்மையளித்தது.
14. இஸ்ரவேலருக்கு அதிக பயனுள்ள நோக்கத்திற்கேதுவாக நியாயப்பிரமாணம் இருந்தது என்பதை காட்டும் சில உதாரணங்கள் யாவை?
14 உதாரணமாக, நியாயப்பிரமாணத்தின்படி, ஒரு திருடன் சிறையில் அடைக்கப்படவில்லை. ஆனால் அவன் திருடினதற்கு இரட்டிப்பாக அல்லது அதற்கு அதிகமாக அபராதம் செலுத்த வேலை செய்ய வேண்டியிருந்தது. இதனால், பறிகொடுத்தவருக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, சிறைச்சாலை ஏற்பாட்டை ஆதரிக்க கடினமாக உழைக்கும் பொதுமக்கள்மீது எந்தச் சுமையும் சுமத்தப்படவில்லை. (யாத்திராகமம் 22:1, 3, 4, 7) தீங்கு விளைவிக்கும் உணவு வகைகள் தடைசெய்யப்பட்டன. நன்றாய் வேகவைக்காவிட்டால் பன்றி இறைச்சியை சாப்பிடுபவர் இழைப்புழு (trichinosis) நோயால் தாக்கப்படலாம். முயல் இறைச்சியை புசிப்பவருக்கு டுலரேமியா (tularemia) என்ற நோயை உண்டாக்கலாம். (லேவியராகமம் 11:4-12) அவ்வாறே, பிணங்களைத் தொடக்கூடாதென்று சொல்வதன் மூலம் நியாயப்பிரமாணம் பாதுகாப்பளித்தது. பிணத்தை ஒருவன் தொட்டால், அவன் குளிக்கவும் தன் உடைகளைத் துவைக்கவும் வேண்டியிருந்தது. (லேவியராகமம் 11:31-36; எண்ணாகமம் 19:11-22) கிருமிகள் பரவுவதிலிருந்து ஜனங்களைப் பாதுகாப்பதற்கு, மலத்தைப் புதைக்க வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது. இதனால் கிருமிகள் பரவுவதைப் பற்றி சமீப நூற்றாண்டுகளில்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.—உபாகமம் 23:13.
15. எது இஸ்ரவேலருக்கு பாரமாக ஆனது?
15 நியாயப்பிரமாணம் ஜனங்களிடம் மிக அதிகத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் நியாயப்பிரமாணத்திற்கு விளக்கம் தந்தவர்களைப் பற்றி அவ்வாறு சொல்ல முடியாது. அவர்கள் விதித்த சட்டங்களைக் குறித்து, ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்ட ஒரு பைபிள் அகராதி (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிட்டது: “பைபிள் கட்டளைகள் ஒவ்வொன்றும் அற்பமான விதிகளால் சூழப்பட்டிருந்தது. . . . கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் நியாயப்பிரமாண வரம்பிற்குட்படுத்தப்பட்டு, இரக்கமற்ற தர்க்க முறையால் மனித நடத்தை முழுவதையும் அனுபவ ரீதியில் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. . . . மனசாட்சியின் குரல் ஒடுக்கப்பட்டது; கடவுளுடைய வார்த்தையின் செயல்படும் வல்லமை ஒடுக்கப்பட்டு, புறம்பான அநேக விதிகளால் அமுக்கப்பட்டது.”
16. மதத் தலைவர்களின் பாரமான சட்டங்களையும் பாரம்பரியங்களையும் பற்றி இயேசு என்ன சொன்னார்?
16 எக்கச்சக்கமான சட்டங்களைச் சுமத்திய மதத் தலைவர்களை இயேசு கிறிஸ்து இவ்வாறு சொல்லி கண்டித்தார்: “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.” (மத்தேயு 23:2, 4) விரிவான சுத்திகரிப்பு முறை உட்பட, மனிதன் உண்டுபண்ணிய பாரமான கட்டளைகளும் பாரம்பரியங்களும், “தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கின” என்று அவர் சுட்டிக்காட்டினார். (மாற்கு 7:1-13; மத்தேயு 23:13, 24-26) எனினும், இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பேயும்கூட, இஸ்ரவேலில் இருந்த மத போதகர்கள் யெகோவா உண்மையில் கேட்பவற்றை தவறாக எடுத்துரைத்தார்கள்.
யெகோவா உண்மையில் கேட்பவை
17. உண்மையற்ற இஸ்ரவேலரின் தகன பலிகளில் யெகோவா ஏன் பிரியப்படவில்லை?
17 தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகரமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை.” (ஏசாயா 1:10, 11) நியாயப்பிரமாணத்தில் கடவுள்தாமே கட்டளையிட்டிருந்த பலிகள் அவருக்கே பிரியமில்லாமல் போனதற்குக் காரணம் என்ன? (லேவியராகமம் 1:1–4:35) ஏனெனில், அந்த ஜனங்கள் அவரை மதிப்புக்குறைவாக நடத்தினார்கள். ஆகையால், அவர்களுக்கு இவ்வாறு புத்திமதி அளிக்கப்பட்டது: “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மை செய்யப் படியுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.” (ஏசாயா 1:16, 17) யெகோவா தம்முடைய ஊழியர்களிடமிருந்து எதைக் கேட்கிறார் என்பதை மதித்துணர, இது நமக்கு உதவி செய்கிறதல்லவா?
18. இஸ்ரவேலரிடமிருந்து உண்மையில் யெகோவா எதை கேட்டார்?
18 கடவுள் உண்மையில் எதைக் கேட்கிறார் என்பதை இயேசு காண்பித்தார். “நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது” என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [“யெகோவாவிடத்தில்,” NW] உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது.” (மத்தேயு 22:36-40; லேவியராகமம் 19:18; உபாகமம் 6:4-6) தீர்க்கதரிசியாகிய மோசேயும் இதே குறிப்பைச் சொன்னார்: “உன் கடவுளாகிய யெகோவா உன்னிடம் கேட்பது என்ன? நீ உன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் கடவுளாகிய யெகோவாவைச் சேவித்து, . . . யெகோவாவின் கட்டளைகளையும் நியமங்களையும் . . . கைக்கொள்ள வேண்டும் என்பதுதானே.”—உபாகமம் 10:12, 13, தி.மொ.; 15:7, 8.
19. இஸ்ரவேலர் எவ்வாறு தங்களை பரிசுத்தராக காட்டிக்கொள்ள முயன்றனர், ஆனால் அவர்களிடம் யெகோவா என்ன சொன்னார்?
19 இஸ்ரவேலர் தவறு செய்தபோதிலும் தங்களை பரிசுத்தமானவர்களாக காட்டிக்கொள்ள விரும்பினார்கள். வருடாந்தர பாவநிவாரண நாளில் மாத்திரமே உபவாசம் இருக்கும்படி நியாயப்பிரமாணம் கட்டளையிட்டபோதிலும், அவர்கள் அடிக்கடி உபவாசமிருக்கத் தொடங்கினார்கள். (லேவியராகமம் 16:30, 31) ஆனால், யெகோவா அவர்களை இவ்வாறு கடிந்துகொண்டார்: “அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.”—ஏசாயா 58:3-7.
20. மத மாய்மாலக்காரரை இயேசு எதற்காக கண்டனம் செய்தார்?
20 அந்தச் சுயநீதிக்காரரான இஸ்ரவேலருக்கு இருந்த அதே பிரச்சினை மத மாய்மாலக்காரரிடத்திலும் இருந்தது. இயேசு அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.” (மத்தேயு 23:23; லேவியராகமம் 27:30) யெகோவா நம்மிடமிருந்து எதை உண்மையில் கேட்கிறார் என்பதை மதித்துணருவதற்கு இயேசுவின் இந்த வார்த்தைகள் நமக்கு உதவி செய்கின்றன அல்லவா?
21. யெகோவா நம்மிடம் எதை கேட்கிறார், எதை கேட்பதில்லை என்பதை தீர்க்கதரிசியாகிய மீகா எவ்வாறு சுருக்கிக் கூறினார்?
21 யெகோவா நம்மிடமிருந்து எதை கேட்கிறார், எதை கேட்பதில்லை என்பதை தெளிவுபடுத்தும்படி கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய மீகா இவ்வாறு கேட்டார்: “எதைக் கொண்டு நான் யெகோவாவின் சந்நிதியில் வந்து உன்னதமான கடவுளுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும் ஒரு வயது கன்றுக் குட்டிகளோடும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கடாக்களின்பேரிலும் லட்சக்கணக்கான ஆறுகளாய் ஓடும் எண்ணெயின்பேரிலும் யெகோவா பிரியங்கொள்வாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற்பேறானவனையும் என் ஆத்துமாவின் பாவத்தைப்போக்க என் சொந்தப் பிள்ளையையும் கொடுக்க வேண்டுமோ? மனிதனே, நலமானது இன்னதென அவர் உனக்குத் தெரிவித்திருக்கிறார், நியாயஞ்செய்து மனதார இரக்கத்தைப் பாராட்டி உன் கடவுளுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடக்கவேண்டுமெனக் கேட்பதேயல்லாமல் வேறே எதை யெகோவா உன்னிடம் கேட்கிறார்.”—மீகா 6:6-8, தி.மொ.
22. நியாயப்பிரமாணத்தை பின்பற்றியவர்களிடமிருந்து யெகோவா முக்கியமாக எதைக் கேட்டார்?
22 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின்கீழ் வாழ்ந்தவர்களிடமிருந்து யெகோவா எதை முக்கியமாய் கேட்டார்? நிச்சயமாகவே, அவர்கள் யெகோவா தேவனை நேசிக்க வேண்டும். மேலும், அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.” (கலாத்தியர் 5:14) இதைப் போலவே, ரோமிலிருந்த கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார்: “பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். . . . அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.”—ரோமர் 13:8-10.
இது மிக அதிகமல்ல
23, 24. (அ) யெகோவா கேட்பதை செய்வது ஏன் நமக்கு ஒருபோதும் மிக அதிகமானதாக இருக்காது? (ஆ) அடுத்த கட்டுரையில் நாம் எதை சிந்திப்போம்?
23 அன்பும் பிறர் நலனை எண்ணிப்பார்க்கும் பண்பும் இரக்கமுமுள்ள கடவுளாக யெகோவா இருப்பதால் நாம் மனம் கவரப்படுகிறோம். அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, கடவுளுடைய அன்பை உயர்த்திக் காட்ட—யெகோவாவுக்குத் தாங்கள் எவ்வளவு அருமையானவர்கள் என்று ஜனங்கள் அறியும்படி செய்ய—பூமிக்கு வந்தார். கடவுளுடைய அன்பை உதாரணத்துடன் விளக்கியபோது, மதிப்பற்ற அடைக்கலான் குருவிகளைக் குறித்து இயேசு சொன்னார்: “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.” ஆகவே, “பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று முடிவாக சொன்னார். (மத்தேயு 10:29-31) நிச்சயமாகவே, இப்படிப்பட்ட அன்புள்ள கடவுள் கேட்கிற எதையும் செய்வது நமக்கு மிக அதிகம் என்பதாக நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது!
24 ஆனால், இன்று யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்? கடவுள் மிக அதிகம் கேட்பதாக ஏன் சிலர் நினைப்பதாக தெரிகிறது? இந்தக் கேள்விகளை ஆராய்வதன்மூலம், யெகோவா கேட்கிற எதையும் செய்வது ஏன் மிகச் சிறந்த பாக்கியம் என்பதை நாம் நிச்சயம் காண முடியும்.
நீங்கள் பதிலளிக்க முடியுமா?
◻ ஏன் சிலர் யெகோவாவை சேவிக்காமல் பின்வாங்குகின்றனர்?
◻ யெகோவா கேட்பவை எவ்வாறு ஆண்டுகளினூடே வேறுபட்டன?
◻ நியாயப்பிரமாணத்தால் என்ன நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டன?
◻ யெகோவா நம்மிடம் கேட்பது ஏன் மிக அதிகமல்ல?
[பக்கம் 18-ன் படம்]
சுத்திகரிப்பு சம்பந்தமாக மனிதன் உண்டாக்கிய விலாவாரியான சட்டங்கள் கடவுள் வணக்கத்தை பாரமாக்கின