தீர்க்காயுசுடன் வாழ தீரா ஆசை
“பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி. மலர்போல் பூத்து அவர்கள் உலர்ந்து போகின்றனர்; நிழல்போல் ஓடி அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.”—யோபு 14:1, 2, பொது மொழிபெயர்ப்பு.
இது 3,500 வருஷங்களுக்கு முன்பு எழுதப்பட்டது. ஆனாலும், மனிதரின் குறுகிய கால வாழ்க்கையைப் பற்றிய இந்தக் கருத்தை மறுப்போர் இன்றும்கூட ஒருசிலரே. மான்போல துள்ளிக் குதிக்கும் பருவம் விரைவில் மாயமாக மறைந்துவிடுகிறது, பின்பு தள்ளாடும் வயது, தடுக்கி விழுந்தால் குழி—சவக்குழி. இதுதான் மனித வாழ்க்கை. இதை அறியாதோர் இல்லை. ஆகவே, தீர்க்காயுசுடன் வாழ்வதற்கான வழிமுறைகள் மனித சரித்திரம் முழுவதிலும் மண்டிக்கிடந்ததில் ஆச்சரியமில்லை.
யோபுவின் காலத்தில் எகிப்தியர் இளமை திரும்ப வீணான முயற்சியில் மிருகங்களின் விரைகளை சாப்பிட்டார்கள். இடைநிலை காலத்திய இரசவாதத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தீர்க்காயுசுடன் வாழ வழிநடத்தும் ஜீவாமிர்தத்தை தயாரிப்பதாகும். தங்கபஸ்பம் சாவாமையை தரும், ஆகவே அதை தங்கத் தட்டிலிருந்து சாப்பிட்டால் சாவில்லா வாழ்வு கிட்டும் என அநேக இரசவாதிகள் நம்பினார்கள். தியானம், சுவாச பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் போன்ற நுட்பங்களை பயன்படுத்தினால் உடலின் வேதியியல் அமைப்பை மாற்றி சாவாமையை அடைய முடியும் என பூர்வ சீன தாவோ மதத்தவர்கள் கருதினார்கள்.
ஸ்பானிய ஆய்வுப் பயணி ஜ்வான் பான்ட்ஸ் டே லீயோன் என்பவர் இளமை ஊற்றின் மனந்தளராத ஆராய்ச்சிக்குப் பேர் பெற்றவர். இளம் கன்னிப் பெண்களை இளவேனிற்காலத்தில் ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, அவர்கள் வெளிவிடும் சுவாசத்தை பாட்டில்களில் சேர்த்து ஆயுள் காலத்தை நீடிக்க வைக்கும் அருமருந்தாக பயன்படுத்தலாம் என ஹெர்மிபஸ் ரெடிவிவஸ் என்ற புத்தகத்தில் பரிந்துரை செய்தார் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மருத்துவர். இந்த வழிமுறைகளில் எதுவும் பலனளிக்கவில்லை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
மேற்கூறப்பட்ட யோபுவின் கூற்றை மோசே பதிவு செய்து 3,500 வருஷங்கள் உருண்டோடி விட்டன. இன்று மனிதன் சந்திரனில் காலடி பதித்திருக்கிறான், கார்களையும் கம்ப்யூட்டர்களையும் கண்டுபிடித்திருக்கிறான், அணுவையும் உயிரணுவையும் சோதித்திருக்கிறான். இன்றைய விஞ்ஞான உலகம் இப்படிப்பட்ட வியத்தகு விந்தைகள் பல புரிந்திருக்கிறது. ஆனால், இன்னும் நம்முடைய ‘வாழ்நாள் குறுகியதாகவும் வருத்தம் மிகுதியாகவுமே’ இருக்கிறது. கடந்த நூற்றாண்டிலிருந்தே வளர்ச்சியடைந்த நாடுகளில் மனிதனின் ஆயுட்காலம் மிக வேகமாக அதிகரித்துள்ளது என்பது உண்மையே. ஆனால் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் முன்னேற்றம், திறம்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சிறந்த போஷாக்கே இதற்கு காரணம். உதாரணமாக, ஸ்வீடனில் 19-ம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து 1990-களின் ஆரம்பம் வரை, சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 40-லிருந்து 75 வருடங்களாகவும் பெண்களுக்கு 44-லிருந்து 80 வருடங்களாகவும் உயர்ந்துள்ளது. ஆனால் தீர்க்காயுசுடன் வாழ்வதற்கான மனிதனின் பேராவல் திருப்தியளிக்கப்பட்டதை இது அர்த்தப்படுத்துகிறதா?
இல்லை, சில நாடுகளில் அநேகர் முதுமை வரை வாழ்கிறபோதிலும், பல வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட மோசேயின் வார்த்தைகள் இன்னும் பொருந்துகின்றன: “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும் . . . , அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” (சங்கீதம் 90:10) சமீப எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை நாம் காண்போமா? மனிதனால் தீர்க்காயுசுடன் வாழ முடியுமா? இந்தக் கேள்விகளை அடுத்த கட்டுரை ஆராயும்.