அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்க மனமுவந்த நன்கொடை
யெகோவாவின் மீட்கும் வல்லமை—இதற்கு இஸ்ரவேலர் கண்கண்ட சாட்சிகள். செங்கடல் அற்புதமாக பிளவுற்றதை கண்டார்கள். இதனால், வறண்ட நிலத்தைப் போன்ற வழியே கால்பாவி எகிப்திய சேனையிடமிருந்து தப்பிவந்தார்கள். சுவர்போன்று நின்ற தண்ணீர் தங்களை பின்தொடர்ந்தவர்கள்மீது சரிந்து விழுந்ததையும் பாதுகாப்பான தூரத்தில் நின்று கண்டார்கள். யெகோவா அவர்களின் உயிரை காப்பாற்றினார்!—யாத்திராகமம் 14:21-31.
ஆனால், வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால், இஸ்ரவேலர் சிலர் கடவுள் தங்களுக்கு செய்தவற்றை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர். மோசே சீனாய் மலையில் இருக்கையில், அவர்கள் தங்களுடைய பொன் ஆபரணங்களை ஆரோனிடம் கொடுத்து தாங்கள் வணங்குவதற்கு ஒரு தெய்வத்தை உண்டுபண்ணும்படி கேட்டார்கள். மோசே திரும்பி வருகையில், இந்தக் கலகக்கார கூட்டம் புசித்து குடித்து கும்மாளம் அடித்து ஆடிப்பாடிக் கொண்டு இருந்ததையும் கன்றுக்குட்டியை வணங்குவதையும் கண்டார்! யெகோவா சொன்னபடி, இந்தக் கலகத்திற்கு முக்கிய காரணமாயிருந்த சுமார் 3,000 பேர் அழிக்கப்பட்டார்கள். யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை கொடுக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய முக்கிய பாடத்தை அன்றைய தினமே கடவுளுடைய ஜனங்கள் கற்றுக் கொண்டார்கள்.—யாத்திராகமம் 32:1-6, 19-29.
இந்தச் சம்பவத்திற்குப்பின் சீக்கிரத்திலேயே, ஆசரிப்புக் கூடாரத்தை—வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லத்தக்க வகையில் இருந்த வணக்கத்திற்குரிய ஓர் கூடாரத்தை—கட்டும்படி கடவுள் கொடுத்த கட்டளையை நிறைவேற்ற மோசே தயாரானார். இந்த ஆசரிப்புக் கூடார கட்டுமான திட்டத்திற்கு விலையுயர்ந்த பொருட்களும் திறமையான வேலையாட்களும் தேவை. இவையெல்லாம் எங்கிருந்து கிடைக்கும்? இந்த பைபிள் பதிவிலிருந்து நமக்கென்ன பாடம்?
காணிக்கையாக—பொருட்களும் திறமைகளும்
மோசேயின் வாயிலாக இஸ்ரவேலர்களிடம் யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்.” என்ன வகையான காணிக்கை? பொன், வெள்ளி, வெண்கலம், நூல்கள், தோல்கள், மரம், விலையுயர்ந்த மணிகற்கள் ஆகியவை மோசே பட்டியலிட்டவற்றில் இடம்பெற்றிருந்தன.—யாத்திராகமம் 35:5-9.
இப்படி தாராளமாக கொடுப்பதற்கு இஸ்ரவேலரிடம் ஏராளமான செல்வங்கள் குவிந்திருந்தன. அவர்கள் எகிப்தை விட்டு புறப்பட்டபோது வஸ்திரங்களை மட்டுமல்ல, பொன்னையும் வெள்ளியையும் தங்களுடன் வாரிக்கொண்டு வந்தார்கள். உண்மையிலேயே “அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.”a (யாத்திராகமம் 12:35, 36) இதற்கு முன்பு பொய் வணக்கத்திற்காக விக்கிரகத்தை உண்டுபண்ணியபோது இஸ்ரவேலர் தங்கள் பொன்னாபரணங்களை மனப்பூர்வமாக கழற்றி கொடுத்திருந்தார்கள். இப்பொழுது தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்க கொடுப்பதில் அதேபோன்ற ஆர்வத்தை காட்டுவார்களா?
ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டும் என மோசே ஒப்பந்தம் செய்யவுமில்லை, அவர்களை குற்றப்படுத்தி அல்லது புண்படுத்தி காணிக்கை கொடுக்க வேண்டுமென்று தூண்டவுமில்லை என்பதையும் கவனியுங்கள். மாறாக, ‘மனமுள்ள எவனையும்’ தயவாய் வேண்டிக்கொண்டார். கடவுளுடைய ஜனங்களை கட்டாயப்படுத்தி வாங்கும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. அவரவர்களுக்கு முடிந்ததை அவரவர்கள் கொடுப்பார்கள் என்பதில் மோசே உறுதியாயிருந்தார்.—2 கொரிந்தியர் 8:10-12-ஐ ஒப்பிடுக.
ஆனால், கட்டுமான திட்டத்திற்குப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருந்தது. யெகோவா இஸ்ரவேலரிடம் மேலும் சொன்னார்: “உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக.” ஆம், இந்தக் கட்டுமான திட்டத்திற்கு திறமையுள்ள வேலையாட்களும் தேவைப்பட்டார்கள். உண்மையிலேயே மர வேலை, உலோக வேலை, தட்டான் வேலை உட்பட “எல்லாவித நுண்ணிய வேலைகள்” இத்திட்டத்தை முடிக்க தேவைப்பட்டிருக்கும். நிச்சயமாகவே, இந்த வேலையாட்களின் திறமைகளை யெகோவா வழிநடத்தியிருப்பார். எனவே, இத்திட்டத்தின் வெற்றிக்கான புகழ் அவருக்கே உரியது.—யாத்திராகமம் 35:10, 30-35; 36:1, 2.
செல்வத்தையும் திறமைகளையும் அர்ப்பணிக்கும்படி விடுக்கப்பட்ட அழைப்புக்கு இஸ்ரவேலர் ஆர்வத்துடன் பிரதிபலித்தார்கள். பைபிள் பதிவு குறிப்பிடுகிறது: “பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும் . . . வந்தார்கள்.”—யாத்திராகமம் 35:21, 22.
நமக்குப் பாடம்
இன்று கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் பிரமாண்டமான வேலை மனப்பூர்வமான நன்கொடைகளால் சாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த நன்கொடைகள் பணமாக கொடுக்கப்படுகின்றன. மற்ற சந்தர்ப்பங்களில், கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் தங்களுக்கு இருக்கும் நல்ல அனுபவத்தை ராஜ்ய மன்றங்கள், மாநாட்டு மன்றங்கள், கிளை அலுவலகங்கள் கட்ட உதவுவதில் பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுவதும் இருக்கும் நூறுக்கும் அதிகமான பெத்தேல் வீடுகளில், வித்தியாசமான பல திறமைகளை உட்படுத்தும் வேலைகள் செய்யப்படுகின்றன. இப்படிப்பட்ட காணிக்கைகளை மனப்பூர்வமாக வாரிவழங்கிய உள்ளங்களின் கடின உழைப்பை யெகோவா மறக்க மாட்டார் என்பதில் நிச்சயமாக இருக்கலாம்!—எபிரெயர் 6:10.
இதே விஷயம் கிறிஸ்தவ ஊழியத்தில் பங்கு கொள்ளும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்துகிறது. பிரசங்க வேலையில் வைராக்கியத்துடன் கலந்துகொள்ள நேரத்தை வாங்கும்படி அனைவரும் உந்துவிக்கப்படுகிறார்கள். (மத்தேயு 24:14; எபேசியர் 5:15-17, NW) சிலர் முழுநேர ஊழியர்களாகவோ பயனியர்களாகவோ இதைச் செய்கிறார்கள். சூழ்நிலைமைகள் காரணமாக மற்றவர்கள் ஒரு பயனியராக ஊழியத்தில் அதிக நேரம் செலவிட முடிவதில்லை. ஆனால் அவர்களும்கூட யெகோவாவை பிரியப்படுத்துகின்றனர். ஆசரிப்புக் கூடார காணிக்கை விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என யெகோவா கேட்காததைப் போலவே, ஒவ்வொருவரிடமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை கேட்பதில்லை. ஆனால், அவர் எதை நம்மிடம் கேட்கிறாரென்றால், நாம் ஒவ்வொருவரும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதையே. (மாற்கு 12:30) அவ்வாறு செய்கிறோமென்றால், மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க நாம் தரும் மனமுவந்த காணிக்கைகளுக்கு அவர் பலனளிப்பார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.—எபிரெயர் 11:6.
[அடிக்குறிப்புகள்]
a இது ஒரு திருட்டு அல்ல. எகிப்தியரிடம் காணிக்கைகளை கேட்டதால் இவை இஸ்ரவேலருக்கு இலவசமாக கொடுக்கப்பட்டன. சொல்லப்போனால், இஸ்ரவேலரை அடிமைப்படுத்த எகிப்தியருக்கு எந்த உரிமையும் இல்லை, வருடக்கணக்காக கடவுளுடைய ஜனங்கள் கடுமையாக உழைத்ததற்கு கூலிகொடுக்க அவர்கள் கடன்பட்டிருந்தார்கள்.