கடவுளுக்குத் துதிசேர்க்க ஐக்கியமாகக் கட்டுதல்
சாலமன் தீவுகள் ஒன்றில் யெகோவாவின் சாட்சிகளால் கட்டப்பட்ட ஒரு புதிய ராஜ்ய மன்றம் அங்கிருந்தவர்களின் கவனத்தைக் கவர்ந்தது. சாட்சியாய் இருந்த சகோதரியிடம் ஒரு பெண்மணி கேட்டார்: “எங்கள் சர்ச்சில் என்னென்னவோ நிகழ்ச்சிகளை நடத்தி பணம் வசூலிக்கிறோம்; நன்கொடை தரும்படி சர்ச் உறுப்பினர்களிடம் நேரடியாகவும் கேட்டு வாங்குகிறோம்; ஆனாலும் ஒரு புது சர்ச் கட்டுகிற அளவுக்குப் பணம் சேரவில்லையே. உங்களுக்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது?” அந்தச் சகோதரி அதற்குப் பின்வருமாறு பதிலளித்தார்: “நாங்கள் ஓர் உலகளாவிய குடும்பமாக யெகோவாவை வணங்குகிறோம். இந்தப் புதிய ராஜ்ய மன்றத்திற்குத் தேவையான நன்கொடையை, எங்கள் சபையாரும் உலகமெங்குமுள்ள எங்கள் சகோதரர்களும் அளித்தார்கள். எல்லாவற்றையும் ஐக்கியமாய் செய்வதற்கு யெகோவா எங்களுக்குக் கற்பித்திருக்கிறார்.”
ஆயிரக்கணக்கான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது உட்பட, யெகோவாவின் சாட்சிகள் செய்கிற எல்லா வேலைகளிலும் ஐக்கியத்தைக் காண முடிகிறது. இதுபோன்ற கட்டுமானத் திட்டங்களில் ஐக்கியத்துடன் ஈடுபடுவது, நேற்றைய இன்றைய சமாச்சாரமல்ல. இப்படிப்பட்ட ஐக்கியம் கடவுளுடைய ஜனங்களின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நிலவிவந்திருக்கிறது. எப்படி?
ஆசரிப்புக் கூடாரத்தையும் ஆலயத்தையும் கட்டுதல்
“எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக” என்ற கட்டளையை சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு மோசேயின் மூலமாக இஸ்ரவேல் ஜனத்திடம் யெகோவா தெரிவித்தார். (யாத்திராகமம் 25:8) அதன் வடிவமைப்பு சம்பந்தமாக யெகோவா மேலும் இப்படிச் சொன்னார்: “நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக.” (யாத்திராகமம் 25:9) பின்னர் பரிசுத்த ஸ்தலம், அதன் உட்புற அலங்காரம், பிற பொருள்கள் ஆகியவை சம்பந்தமாக திட்டவட்டமான அறிவுரைகளை யெகோவா கொடுத்தார். (யாத்திராகமம் 25:10–27:19) “ஆசரிப்புக் கூடாரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்தக் கூடாரமே எல்லா இஸ்ரவேலருக்கும் உண்மை வணக்கத்தின் மையமாய் ஆகவேண்டியிருந்தது.
இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள் என்பது நமக்குத் தெரியாது, ஆனால் இஸ்ரவேலர் எல்லாருமே இதற்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார்கள். அவர்களிடம் மோசே சொன்னார்: “உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்.” (யாத்திராகமம் 35:4-9) இஸ்ரவேலர் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள்? யாத்திராகமம் 36:3 குறிப்பிடுகிறது: “அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.”
இதனால் சீக்கிரத்திலேயே நன்கொடைப் பொருள்கள் மலைபோல் குவிந்துவிட்டன; அப்படியும் ஜனங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். கடைசியில், கட்டுமானப் பணியை முன்னின்று நடத்திய கைவினைஞர்கள் மோசேயிடம் வந்து: “கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள். ஆகவே மோசே பின்வருமாறு கட்டளை கொடுத்தார்: “இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒருவேலையும் செய்யவேண்டாம்.” நன்கொடைப் பொருள்கள் எந்தளவு சேர்ந்திருந்தன? “செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது.”—யாத்திராகமம் 36:4-7.
இஸ்ரவேலர் தாராள மனப்பான்மையுடன் உதவி செய்ததால் ஆசரிப்புக் கூடார வேலை ஒரு வருடத்திற்குள் முடிந்துவிட்டது. (யாத்திராகமம் 19:1; 40:1, 2) கடவுளுடைய ஜனங்களாகிய அவர்கள், உண்மை வணக்கத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் யெகோவாவை கனப்படுத்தினார்கள். (நீதிமொழிகள் 3:9) பின்னர், இதைவிடப் பெரிய கட்டுமான வேலையில் ஈடுபட இருந்தார்கள். அந்தச் சமயத்திலும், கட்டுமானத் திறமைகள் இருந்தவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி, அந்த வேலையில் ஈடுபட வாய்ப்பிருந்தது; மனவிருப்பம் மட்டுமே போதுமானதாக இருந்தது.
ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டி கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் உருண்டோடியபிறகு, இஸ்ரவேலர் எருசலேமில் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினார்கள். (1 இராஜாக்கள் 6:1) கற்களாலும் மரங்களாலும் கட்டப்பட்ட அதிஅற்புத, நிரந்தரக் கட்டடமாக இது அமையவிருந்தது. (1 இராஜாக்கள் 5:17, 18) ஆலயக் கட்டுமானத் திட்டங்களை தாவீதுக்கு யெகோவா தமது ‘ஆவியினால் கட்டளையிட்டார்.’ (1 நாளாகமம் 28:11-19) ஆனால், தாவீதின் மகன் சாலொமோனையே கட்டட வேலையில் தலைமை தாங்குவதற்குத் தேர்ந்தெடுத்தார். (1 நாளாகமம் 22:6-10) தாவீது இந்தக் கட்டுமானத் திட்டத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவளித்தார். கற்களையும், உத்தரங்களையும், பிற பொருள்களையும் சேகரித்து வைத்ததோடு தன்னிடமிருந்த தங்கத்தையும் வெள்ளியையும்கூட தாராளமாக அளித்தார். இப்படித் தாராளமாக நன்கொடை அளிக்கும்படி சக இஸ்ரவேலரையும் ஊக்கப்படுத்தினார். அவர் பின்வருமாறு கேட்டார்: “உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார்?” இதற்கு ஜனங்கள் எப்படி ஆதரவு காட்டினார்கள்?—1 நாளாகமம் 29:1-5.
ஆலயக் கட்டுமானத்தை சாலொமோன் ஆரம்பித்த சமயத்தில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள தங்கமும் வெள்ளியும் சேர்ந்திருந்தன. அதுமட்டுமா, அளவிட முடியாத அளவுக்கு வெண்கலமும் [அதாவது, தாமிரமும்] இரும்பும் வந்து குவிந்தன. (1 நாளாகமம் 22:14-16) யெகோவாவின் துணையோடும், இஸ்ரவேலர் அனைவரும் ஐக்கியப்பட்டு அளித்த ஆதரவோடும், அந்தக் கட்டுமான வேலை ஏழரை ஆண்டுகளிலேயே முடிந்துவிட்டது.—1 இராஜாக்கள் 6:1, 37, 38.
‘உண்மைத் தேவனுடைய ஆலயம்’
ஆசரிப்புக் கூடாரமும் சரி, ஆலயமும் சரி, இரண்டுமே ‘தேவனுடைய [“உண்மைத் தேவனுடைய,” NW] ஆலயம்’ என்று அழைக்கப்பட்டன. (நியாயாதிபதிகள் 18:31; 2 நாளாகமம் 24:7) யெகோவா தங்குவதற்கென்று ஓர் இடம் எப்போதுமே தேவைப்பட்டதில்லை. (ஏசாயா 66:1) மனிதரின் நன்மைக்காகவே அந்தக் கட்டடங்களை அவர் கட்டும்படி செய்தார். சொல்லப்போனால், ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் பின்வருமாறு கேட்டார்: “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?”—1 இராஜாக்கள் 8:27.
தமது தீர்க்கதரிசியான ஏசாயா மூலம் யெகோவா கூறினதாவது: “என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.” (ஏசாயா 56:7) யூதர்கள், யூதரல்லாதவர்கள் என்றில்லாமல் தேவபக்தியுள்ளவர்கள் அனைவரும் ஆலயத்தில் பலி செலுத்தினார்கள்; ஜெபங்களை ஏறெடுத்தார்கள்; பண்டிகைகளைக் கொண்டாடினார்கள்; இவையெல்லாம் அவர்களை உண்மைத் தேவனிடம் நெருங்கி வரச் செய்தன. யெகோவாவின் வீட்டில் வழிபட்டதன் மூலம் அவருடைய நட்பையும் பாதுகாப்பையும் பெற்றார்கள். ஆலயப் பிரதிஷ்டையின்போது சாலொமோன் செய்த ஜெபம் இந்த உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கடவுளிடம் அவர் செய்த உருக்கமான ஜெபத்தை 1 இராஜாக்கள் 8:22-53-லும், 2 நாளாகமம் 6:12-42-லும் வாசித்துப் பாருங்கள்.
உண்மைக் கடவுளின் அந்தப் பண்டைய வீடு எப்பொழுதோ அழிந்துவிட்டது. ஆனால், எதிர்காலத்தில் யெகோவாவை அவருடைய மாபெரும் ஆன்மீக ஆலயத்தில் வணங்குவதற்காக எல்லா தேசத்து ஜனங்களும் கூடிவருவார்கள் என கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது. (ஏசாயா 2:2) எருசலேம் ஆலயத்தில் செலுத்தப்பட்ட மிருக பலிகள் யாவும், கடவுளுடைய ஒரேபேறான குமாரன் ஒரேதடவையாக செலுத்திய பரிபூரண பலிக்கு முன்நிழலாக இருந்தன. இந்தப் பலியே யெகோவாவை அணுகுவதற்கான வழியைத் திறந்துவைத்தது. (யோவான் 14:6; எபிரெயர் 7:27; 9:12) இந்த மேம்பட்ட வழியில் யெகோவாவின் சாட்சிகள் இப்போது கடவுளை வணங்கி வருகிறார்கள். அவ்வாறு வணங்க மற்ற அநேகருக்கும் உதவி வருகிறார்கள்.
இக்காலக் கட்டுமானத் திட்டங்கள்
உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் உண்மைக் கடவுளுக்குச் சேவை செய்து வருகிறார்கள். அவர்கள் ஒரு ‘பலத்த ஜாதியாய்’ ஆகியிருக்கிறார்கள்; அவர்களுடைய எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. (ஏசாயா 60:22) பொதுவாக, யெகோவாவின் சாட்சிகள் வணக்கத்திற்காகக் கூடிவருகிற இடம் ராஜ்ய மன்றம் என அழைக்கப்படுகிறது.a இத்தகைய ராஜ்ய மன்றங்கள் ஏற்கெனவே ஆயிரக்கணக்கில் உள்ளன, இன்னும் ஆயிரக்கணக்கானவை தேவைப்படுகின்றன.
தேவையான ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு யெகோவாவின் சாட்சிகள் தங்களை ‘மனப்பூர்வமாய்’ அளிக்கிறார்கள். (சங்கீதம் 110:3) என்றாலும், உள்ளூர் சாட்சிகளில் பெரும்பாலோருக்குப் போதிய கட்டுமானத் திறமைகள் இருப்பதில்லை; அத்துடன், சாட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இடங்கள் சிலவற்றில் கடும் வறுமை நிலவுகிறது. இப்படிப்பட்ட முட்டுக்கட்டைகளைத் தகர்ப்பதற்காக, 1999-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவினர் ராஜ்ய மன்றக் கட்டுமானத் திட்டத்தை ஆரம்பித்தார்கள். இத்திட்டத்தின் மூலம், கட்டுமானத் துறையில் திறமையுள்ள சாட்சிகள் உலகின் பல இடங்களுக்கும் சென்று ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு அங்குள்ள சாட்சிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இப்படிப் பயிற்சி பெற்ற சகோதரர்கள் அந்தந்தப் பகுதிகளில் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார்கள். இந்த விசேஷ திட்டத்தால் என்ன பலன்கள் கிடைத்திருக்கின்றன?
2006, பிப்ரவரி மாதத்திற்குள், வசதி குறைந்த நாடுகளில் வாழும் யெகோவாவின் சாட்சிகளுக்காக மட்டுமே 13,000 புதிய ராஜ்ய மன்றங்கள் கட்டப்பட்டிருந்தன. இந்தப் புதிய ராஜ்ய மன்றங்களைப் பயன்படுத்துபவர்களில் சிலர் என்ன சொல்கிறார்கள்?
“சபை கூட்டங்களுக்குச் சராசரியாக 160 பேர் வந்துகொண்டிருந்தார்கள். புதிய ராஜ்ய மன்றத்தில் நடத்தப்பட்ட முதல் கூட்டத்திற்கு 200 பேர் வந்திருந்தார்கள். ஆறு மாதங்கள் கழித்து, இப்போது கூட்டங்களுக்குச் சராசரியாக 230 பேர் வருகிறார்கள். எளிய, அதே சமயத்தில் பயனுள்ள இந்தக் கட்டடங்களைக் கட்டுவதில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பது தெளிவு.”—ஈக்வடாரில் ஒரு வட்டாரக் கண்காணி.
“‘உங்கள் பிரசுரங்களில் காட்டப்பட்டிருப்பதைப் போன்ற ராஜ்ய மன்றங்களை நீங்கள் எப்போது கட்டுவீர்கள்?’ என்று வருடக்கணக்கில் ஜனங்கள் எங்களிடம் கேட்டிருக்கிறார்கள். கடைசியில் யெகோவாவின் உதவியோடு அவருடைய வணக்கத்திற்காக ஓர் அருமையான மன்றத்தை நாங்கள் கட்டி முடித்திருக்கிறோம். அதற்கு முன், ஒரு சகோதரருக்குச் சொந்தமான ஸ்டோரில் கூட்டங்களை நடத்தி வந்தோம், சராசரியாக 30 பேர் வந்துகொண்டிருந்தார்கள். புதிய ராஜ்ய மன்றத்தில் முதலாவதாக நடத்தப்பட்ட கூட்டத்திற்கு 110 பேர் வந்திருந்தார்கள்.”—உகாண்டாவிலுள்ள ஒரு சபை.
“ராஜ்ய மன்றம் கட்டப்பட்டதிலிருந்து, அந்தப் பிராந்தியத்தில் ஊழியம் செய்யும்போது கிடைக்கிற சந்தோஷமே அலாதிதான் என்பதாக ஒழுங்கான பயனியர் சகோதரிகள் இருவர் தெரிவிக்கிறார்கள். வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதும் சரி, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதும் சரி, ஆட்கள் முன்பைவிட நன்றாகக் கேட்கிறார்கள். இச்சகோதரிகள் தற்போது 17 பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள். இந்த பைபிள் மாணாக்கரில் அநேகர் கூட்டங்களுக்கு வருகிறார்கள்.”—சாலமன் தீவுகளின் கிளை அலுவலகம்.
“இந்தப் புதிய ராஜ்ய மன்றத்தால் அந்தப் பகுதியின் மதிப்பு கூடியிருக்கிறது; அங்குள்ளவர்கள் இந்த மன்றத்தால் பெருமிதம் அடைந்திருக்கிறார்கள் என்பதாக இந்த ராஜ்ய மன்றத்துக்குப் பக்கத்தில் குடியிருக்கும் பாஸ்டர் சொல்கிறார். இதைக் கடந்து செல்கிற அநேகர் இந்த மன்றத்தின் அழகைப் பற்றி நாலு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போகிறார்கள். இதனால், சாட்சி கொடுக்க சகோதரர்களுக்கு அருமையான சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. நம் உலகளாவிய சகோதரத்துவத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அதிகமதிகமானோர் விரும்புகிறார்கள். வருடக்கணக்கில் கூட்டங்களுக்கே வராதிருந்தவர்கள்கூட தவறாமல் கூட்டங்களுக்கு வர உந்துவிக்கப்பட்டிருக்கிறார்கள்.”—மயன்மார் கிளை அலுவலகம்.
“ஆர்வம் காட்டிய ஒருவரை, அவர் வசிக்கும் பகுதியில் கட்டப்பட்டு வரும் ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியைப் பார்க்க வரும்படி ஒரு சகோதரி அழைத்திருந்தார். பார்த்துவிட்டு அவர் சொன்னார்: ‘அங்கு வேலை செய்பவர்கள் என்னை உள்ளே விடமாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் என்னை அன்போடு வரவேற்றதும் எனக்கு ஒரே ஆச்சரியம்! நேரத்தை வீணடிக்காமல் ஆண்களும் பெண்களும் கடினமாய் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஐக்கியமாக, சந்தோஷமாக அதைச் செய்தார்கள்.’ அவர் பைபிள் படிப்பிற்கு ஒப்புக்கொண்டார்; கூட்டங்களுக்கும் வரத் தொடங்கினார். பின்பு அவர் சொன்னார்: ‘என் எண்ணம் அடியோடு மாறிவிட்டது. கடவுளை நான் கண்டுபிடித்துவிட்டேன், இப்போது அவரை விட்டு வேறெங்கும் போக மாட்டேன்.’”—கொலம்பியா கிளை அலுவலகம்.
நம் ஆதரவு அவசியம்
ராஜ்ய மன்றங்களைக் கட்டுவது நம் பரிசுத்த சேவையின் மிக முக்கியமான அம்சமாகும். இந்த வேலைக்கு உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் பண உதவியையும் பிற உதவிகளையும் செய்வதன்மூலம் ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இது பாராட்டத்தக்கதே. என்றாலும், பரிசுத்த சேவையின் பிற அம்சங்களும் முக்கியமானவை என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். அவ்வப்போது, கிறிஸ்தவர்கள் இயற்கைப் பேரழிவுகளில் சிக்கித் தவிப்பதால், நம் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பைபிள் பிரசுரங்களைத் தயாரிப்பதும் பரிசுத்த சேவையின் மிக முக்கியமான ஓர் அம்சமாகும். இவ்வேலைக்கும் நாம் ஆதரவளிப்பது அவசியம். ஏனெனில், நல்மனமுள்ளவர்களுக்கு பைபிள் சம்பந்தமான பத்திரிகையையோ புத்தகத்தையோ அளிப்பதால் வரும் பலனை நம்மில் பெரும்பாலோர் கண்ணாரக் கண்டிருக்கிறோம். அத்துடன், மிஷனரிகளையும் மற்ற முழுநேர ஊழியர்களையும் ஆதரிப்பது மிக முக்கியமாகும். இப்படிப்பட்ட சுயதியாக மனப்பான்மையுள்ள கிறிஸ்தவர்களே இந்தக் கடைசி நாட்களில் பிரசங்க வேலையை விரிவாக்குவதில் மிக முக்கியப் பங்கை வகிக்கிறார்கள்.
அன்று, ஆலயக் கட்டுமானத்திற்காக நன்கொடை அளித்தவர்கள் பெரிதும் சந்தோஷப்பட்டார்கள். (1 நாளாகமம் 29:9) இன்றும்கூட, உண்மை வணக்கத்திற்கு நன்கொடை கொடுப்பதன் மூலம் ஆதரவு அளிக்கும்போது நாம் சந்தோஷப்படுகிறோம். (அப்போஸ்தலர் 20:35) ராஜ்ய மன்ற நிதி எனக் குறிக்கப்பட்டிருக்கும் பெட்டியில் நன்கொடைகளைப் போடும்போதும் நாம் சந்தோஷப்படுகிறோம்; ராஜ்ய பிரசங்கிப்பு சம்பந்தமான பிற திட்டங்களுக்கு நம் ஆதரவைக் காட்டுவதற்காக உலகளாவிய வேலைக்கு நன்கொடை அளிக்கும்போதும் நாம் சந்தோஷப்படுகிறோம். இன்று அற்புதமான விதத்தில் யெகோவாவின் சாட்சிகள் உண்மை வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். அந்த வணக்கத்தை ஆதரிப்பதால் வரும் சந்தோஷம் நம் இருதயங்களை நிரப்புவதாக!
[அடிக்குறிப்பு]
a “ராஜ்ய மன்றம்” என்ற பெயர் தோன்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ள, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 319-ஐக் காண்க.
[பக்கம் 20, 21-ன் பெட்டி/படம்]
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, “உலகளாவிய வேலைக்காக நன்கொடை—மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதைப் போடுகிறார்கள்.
இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன. மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் இந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கலாம். கிளை அலுவலகங்களின் விலாசங்களை இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் காணலாம். காசோலைகளை “Watch Tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருள்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படுகிற அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகளும், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகளும் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம் வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கு மாற்றீடாகப் பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டைச் செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரி விலக்கு உண்டு.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாகக் குறிப்பிடலாம். மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரிச் சலுகைகள் கிடைக்கலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டமிட்ட நன்கொடை மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.b பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாகக் கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்கக் கொடுப்பது பற்றிய தகவல்களை அளிப்பதற்காக இச்சிற்றேடு தயாரிக்கப்பட்டது. அநேகர் இந்தச் சிற்றேட்டைப் படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகரிடம் அல்லது வரிவிதிப்பு ஆலோசகரிடம் கலந்தாலோசித்த பிறகு உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவியிருக்கிறார்கள். இச்சிற்றேட்டை திட்டமிட்ட நன்கொடை அலுவலகத்திலிருந்தே நேரடியாகக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிற்குரிய யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
Jehovah’s Witnesses,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[அடிக்குறிப்பு]
b இந்தியாவில் கிடைப்பதில்லை.
[பக்கம் 18-ன் படம்]
நம் ஐக்கியப்பட்ட உழைப்பாலேயே உலகெங்கும் அழகிய ராஜ்ய மன்றங்களைக் கட்ட முடிகிறது
[பக்கம் 18-ன் படம்]
கானாவில் புதிய ராஜ்ய மன்றம்