கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை ருசித்திருக்கிறீர்களா?
ஒரு பெண்மணி கிறிஸ்தவ சேவையில் கிட்டத்தட்ட 50 வருடங்களாக முழுமூச்சுடன் ஈடுபட்டிருக்கிறார். முதிர்வயது காரணமாக உடல் பலம் குன்றிவிட்டிருந்தபோதும், புதிதாக கட்டப்பட்டிருந்த ராஜ்ய மன்றத்தை எப்படியாவது போய் பார்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாயிருந்தார். அன்பான சகோதரர் ஒருவர் அவரை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வர, அந்த சகோதரி ராஜ்ய மன்றத்திற்குள் மெதுவாக நடந்து வந்தார், ஆனால் நேராக தான் போக நினைத்திருந்த இடத்திற்கு, அதாவது நன்கொடைப் பெட்டி இருந்த இடத்திற்கு போனார். புதிய ராஜ்ய மன்றத்திற்கென்றே இத்தனை நாளாக குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து வைத்திருந்த சிறிய தொகையை அதில் போட்டார். ராஜ்ய மன்றத்தை கட்டுவதற்கு சரீர உழைப்பை தர முடியவில்லை என்றாலும் தன்னால் முடிந்த பண உதவியை அளிக்க விரும்பினார்.
இந்தக் கிறிஸ்தவ சகோதரியின் செயல், இன்னொரு உத்தம பெண்மணியின், அதாவது ஓர் ‘ஏழை விதவையின்’ செயலை உங்களுக்கு நினைப்பூட்டலாம். ஆலயத்திலிருந்த காணிக்கைப் பெட்டியில் அவள் இரண்டு காசு போட்டதை இயேசு கவனித்தார். அவளுடைய சூழ்நிலை பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் அந்தக் காலத்தில் கணவனை இழந்த ஒரு பெண் பயங்கர பணக் கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தத்தளிக்க வேண்டியிருந்திருக்கும். அவளுடைய கஷ்டத்தை நன்றாக புரிந்துகொண்டதால் இயேசு அவள் மீது இரக்கப்பட்டார். அவளை ஒரு முன்மாதிரியாக சீஷர்களிடம் சுட்டிக்காட்டி, ‘தன்னிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தன் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே’ சிறிய அன்பளிப்பாக அவள் போட்டதை அவர் குறிப்பிட்டார்.—மாற்கு 12:41-44; பொது மொழிபெயர்ப்பு.
வறுமையில் வாடிய அந்த ஏழை விதவை எதற்காக அவ்வளவு பெரிய தியாகத்தை செய்தாள்? யெகோவா தேவனுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்திருந்ததாலும் எருசலேம் ஆலயம் வணக்கத்தின் மையமாக இருந்ததாலுமே அவ்வாறு செய்தாள் என்பது தெளிவாக தெரிகிறது. கொஞ்சமே கொடுக்க முடியும் என்றாலும் பரிசுத்த சேவையை முன்னேற்றுவிப்பதற்கு விரும்பினாள். தன்னால் முடிந்த நன்கொடையை கொடுப்பதில் உண்மையான மகிழ்ச்சியை அடைந்திருப்பாள் என்பதில் சந்தேகமேயில்லை.
யெகோவாவின் சேவையை ஆதரிக்க கொடுத்தல்
பொருளையோ பணத்தையோ நன்கொடையாக கொடுப்பது எப்போதுமே உண்மை வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாக இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல அது எப்போதும் சந்தோஷத்தையும் அள்ளித் தந்திருக்கிறது. (1 நாளாகமம் 29:9) பூர்வ இஸ்ரவேலர்கள் ஆலயத்தை அழகுபடுத்துவதற்கு மட்டும் நன்கொடைகளைப் பயன்படுத்தவில்லை; யெகோவாவின் வணக்கம் சம்பந்தப்பட்ட எல்லா காரியங்களையும் தினம்தினம் தவறாமல் செய்வதற்கும் அதைப் பயன்படுத்தினார்கள். ஆலய சேவைகள் செய்துவந்த லேவியர்களை ஆதரிப்பதற்காக இஸ்ரவேலர்கள் விளைச்சலிலிருந்து பத்தில் ஒரு பாகத்தை அவர்களுக்கு கொடுக்கும்படி நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. ஆனால் லேவியர்களும்கூட தங்களுக்கு கிடைத்தவற்றில் பத்தில் ஒரு பாகத்தை யெகோவாவுக்கு கொடுக்க வேண்டியிருந்தது.—எண்ணாகமம் 18:21-29.
இன்று கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் இல்லை. என்றாலும், கடவுளுடைய ஊழியர்கள் உண்மை வணக்கத்தை ஆதரிப்பதற்கு பொருள் வளங்களை நன்கொடையாக கொடுக்கும் நியமம் மாறவில்லை. (கலாத்தியர் 5:1) அதுமட்டுமல்ல தங்களுடைய சகோதரர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கருதினார்கள். (அப்போஸ்தலர் 2:45, 46) கடவுள் தங்களுக்கு நல்ல நல்ல காரியங்களை தாராளமாக தந்திருப்பது போலவே தாங்களும் மற்றவர்களுக்கு தாராளமாக தர வேண்டும் என்பதை கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் நினைப்பூட்டினார். அவர் இவ்வாறு எழுதினார்: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.” (1 தீமோத்தேயு 6:17-19; 2 கொரிந்தியர் 9:11) உண்மையிலேயே, “வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்” என்ற இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை பவுல் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்ல முடிந்தது.—அப்போஸ்தலர் 20:35.
இன்றைய கிறிஸ்தவ கொடுத்தல்
இன்றும்கூட யெகோவாவின் ஊழியர்கள் சக விசுவாசிகளுக்கு உதவி செய்வதற்காகவும் கடவுளுடைய வேலையை ஆதரிப்பதற்காகவும் தங்களுடைய பொருள் வளத்தை பயன்படுத்துகிறார்கள். வசதியில்லாதவர்களும்கூட தங்களால் இயன்றதை கொடுக்கிறார்கள். ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்,’ இந்த எல்லா நன்கொடைகளையும் சிறந்த விதத்தில் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணருகிறார்கள், அதற்காக யெகோவாவுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:45) கிளை அலுவலகங்கள் இயங்குவதற்கு, பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு, பெரிய கிறிஸ்தவ கூட்டங்களை நடத்துவதற்கு, பயணக் கண்காணிகளையும் மிஷனரிகளையும் பயிற்றுவித்து வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதற்கு, ஆபத்துக் காலத்தில் நிவாரணம் அளிப்பதற்கு என பயனுள்ள பல வேலைகளுக்காக இந்த நன்கொடைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட வேலைகளில் ஒன்றை மட்டும், அதாவது ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கும் விஷயத்தை மட்டும் இப்போது விவரமாக பார்க்கலாம்.
ஆன்மீக கல்வியையும் நல்ல கூட்டுறவையும் பெற்று பயனடைவதற்கு யெகோவாவின் சாட்சிகள் வாரத்தில் பலமுறை தங்களுடைய ராஜ்ய மன்றங்களில் கூடிவருகிறார்கள். அநேக இடங்களில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் அங்குள்ள யெகோவாவின் சாட்சிகளால் நிதி உதவியின்றி ராஜ்ய மன்றங்களை கட்ட முடிவதில்லை. ஆகவே பணக்கார நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதியை வைத்து ஏழை நாடுகளில் ராஜ்ய மன்றங்களை கட்டும் ஒரு திட்டத்தை 1999-ல் யெகோவாவின் சாட்சிகள் ஆரம்பித்தார்கள். அதுமட்டுமல்ல ஆயிரக்கணக்கான வாலண்டியர்கள் இந்த நாடுகளின் ஒதுக்குப்புற பகுதிகளில் அடிக்கடி வேலை செய்து தங்களுடைய நேரத்தையும் திறமைகளையும் நன்கொடையாக அளித்திருக்கிறார்கள். ராஜ்ய மன்றங்களைக் கட்டும் சமயத்தில் உள்ளூர் சாட்சிகள் கட்டடம் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். இதனால், கட்டடத்திற்குத் தேவையான பொருள்களையும் கருவிகளையும் வாங்குவதற்கு ராஜ்ய மன்ற நிதியைப் பயன்படுத்த முடிகிறது. இப்போது இந்தப் புதிய ராஜ்ய மன்றங்களை உபயோகிக்கும் சாட்சிகள், அதற்காக நேரத்தையும் பணத்தையும் நன்கொடையாக அளித்த சகோதரர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். இவர்களும்கூட புதிய ராஜ்ய மன்றத்தை பராமரிப்பதற்கும் இதுவரை ஏற்பட்டுள்ள கட்டுமான செலவுகளை ஈடுகட்டுவதற்கும் ஒவ்வொரு மாதமும் நன்கொடைகளை அளிக்கிறார்கள்; இவ்வாறு இன்னும் நிறைய ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுவதற்கு உதவி செய்கிறார்கள்.
சாதாரண கட்டுமான முறைகளையும் பொருள்களையும் பயன்படுத்தியே ராஜ்ய மன்றங்கள் கட்டப்படுகின்றன. அவை பிரமாண்டமாக இல்லையென்றாலும் அழகாக, பொருத்தமாக, வசதியாக இருக்குமாறு கட்டப்படுகின்றன. 1999-ல் இந்தக் கட்டுமான திட்டம் தொடங்கியபோது பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த கிட்டத்தட்ட 40 நாடுகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. அன்றிலிருந்து கட்டுமான திட்டம் விரிவாக்கப்பட்டு 116 நாடுகளில் கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது. அதாவது உலகிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் பாதிக்கும் மேலானவற்றில் அது ஆரம்பிக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்துக்கும் அதிகமான புதிய ராஜ்ய மன்றங்கள் என்ற கணக்கில் 9,000-த்திற்கும் மேலான ராஜ்ய மன்றங்கள் இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கின்றன! ஆனால் இந்த 116 நாடுகளில் இன்னமும் 14,500 ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும், உலகம் முழுவதிலுமுள்ள அவருடைய சாட்சிகள் மனமுவந்து அளிக்கும் தாராள குணத்தாலும் இந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.—சங்கீதம் 127:1.
ராஜ்ய மன்றங்களால் அதிவேக வளர்ச்சி
இந்த மாபெரும் வேலை அந்தந்த ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளையும் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையையும் எவ்வாறு பாதித்திருக்கிறது? நிறைய இடங்களில் ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்டப்பட்டவுடன் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக புருண்டியிலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “ராஜ்ய மன்றங்கள் கட்டி முடிக்கப்பட்ட உடனேயே நிரம்பிவிடுகின்றன. உதாரணத்திற்கு, சராசரியாக கிட்டத்தட்ட 100 பேர் கூட்டங்களுக்கு வந்துகொண்டிருந்த ஒரு சபைக்காக 150 பேர் வசதியாக உட்கார முடிந்த ஒரு புதிய ராஜ்ய மன்றம் கட்டப்பட்டது. ஆனால் அதைக் கட்டி முடிப்பதற்குள் கூட்டங்களுக்கு வருவோரின் எண்ணிக்கை 250-க்கு உயர்ந்துவிட்டது.”
ஏன் அப்படிப்பட்ட அதிகரிப்புகள் ஏற்படுகின்றன? ஒரு காரணம்: கூடிவருவதற்கு சரியான இடம் இல்லாததால் தொகுதி தொகுதியாக மரத்தடியிலும் வயல்வெளியிலும் ராஜ்ய பிரஸ்தாபிகள் கூடினபோது மக்கள் அவர்களை சந்தேகிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாட்டில், இவ்வாறு கூடிவரும் சிறுசிறு மத தொகுதிகள் காரணமாக இனக்கலவரமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே மத கூட்டங்கள் அனைத்தும் ஒரு கட்டடத்தில்தான் நடைபெற வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
யெகோவாவின் சாட்சிகளுக்கு சொந்தமாக ஒரு மன்றம் இருப்பது, தாங்கள் ஏதோ ஒரு பாஸ்டரை பின்பற்றிக் கொண்டில்லை என்பதை சமுதாயத்திற்கு உணர்த்தவும் உதவுகிறது. ஜிம்பாப்வேயிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து வந்த கடிதம் இவ்வாறு வாசிக்கிறது: “முன்பெல்லாம் சகோதரர்கள் வீடுகளில்தான் கூடுவார்கள். அதனால் உள்ளூர் மக்கள் அந்த வீட்டு ஓனருடைய பெயரை வைத்துத்தான் அங்கு கூடிவரும் சபையின் பெயரை அழைப்பார்கள். இன்னாருடைய சர்ச்சின் அங்கத்தினர் என்றே சகோதரர்களை அழைப்பார்கள். இப்போதெல்லாம் நிலைமை மாறிவருகிறது; ஏனென்றால் ‘யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம்’ என்று கொட்டை எழுத்துக்களில் உள்ள பெயர்ப் பலகைகளை ஜனங்கள் ஒவ்வொரு மன்றத்தின் முன்னாலும் பார்க்கிறார்கள்.”
சந்தோஷமாக கொடுப்பவர்கள்
“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 9:7) பெரிய தொகையாக கிடைக்கும் நன்கொடைகள் மிக பயனுள்ளவை என்பது உண்மையே. ஆனாலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கான நிதிகள் ராஜ்ய மன்றத்தின் நன்கொடைப் பெட்டிகளிலிருந்தே அதிகமாக கிடைக்கின்றன. ஆகவே சிறியதோ பெரியதோ எல்லாருடைய நன்கொடைகளும் முக்கியமானவை; அற்பமானவையல்ல. ஏழை விதவை போட்ட இரண்டு காசுகளை இயேசு கவனித்தார் என்பதை நினைவில் வையுங்கள். தூதர்களும் யெகோவாவும்கூட அவளை கவனித்தார்கள். அந்த விதவையின் பெயர்கூட நமக்கு தெரியாது. ஆனால் அவளுடைய தன்னலமற்ற செயல் என்றென்றைக்கும் அறியப்படும்படி யெகோவா அதை பைபிளில் பதிவு செய்திருக்கிறார்.
நாம் வழங்கும் நன்கொடைகள் ராஜ்ய மன்றங்களை கட்டுவதற்கு மட்டுமல்லாமல், முக்கியமான ராஜ்ய வேலையின் மற்ற எல்லா அம்சங்களுக்கும் பயன்படுகின்றன. இவ்விதத்தில் நாம் ஒத்துழைப்பது, சந்தோஷப்படுவதற்கும், “தேவனுக்கு அளவுகடந்த நன்றி” செலுத்துவதற்கும் காரணத்தை அளிக்கிறது. (2 கொரிந்தியர் 9:12, ஈஸி டு ரீட் வர்ஷன்) பெனின் நகரத்திலுள்ள நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்: “உலகம் முழுவதிலுமுள்ள சகோதரர்களிடமிருந்து பெற்ற நிதி உதவிக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம்.” அதே சமயத்தில், நன்கொடை கொடுப்பதன் மூலம் ராஜ்ய சேவையை ஆதரிக்கும் நாம் அனைவரும் இதில் கிடைக்கும் சந்தோஷத்தை ருசிக்கிறோம்!
[பக்கம் 22, 23-ன் பெட்டி/படம்]
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
சிலர் வழங்க விரும்பும் வழிகள்
அநேகர் திட்டமிட்டு பணம் ஒதுக்கி, ராஜ்ய மன்றங்களிலுள்ள நன்கொடைப் பெட்டிகளில் அதை போடுகின்றனர்; அதாவது, “உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிக்கப்பட்டிருக்கும் நன்கொடைப் பெட்டிகளில் அதை போடுகின்றனர்.
இத்தொகையை ஒவ்வொரு மாதமும் அந்தந்த நாட்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு சபைகள் அனுப்பி வைக்கின்றன. இவ்வாறு மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடைப் பணத்தை நேரடியாகவும் அனுப்பி வைக்கலாம். கிளை அலுவலகங்களின் விலாசங்களை இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் காணலாம். காசோலைகளை “Watch Tower” என்ற பெயரில் எடுக்க வேண்டும். நகைகளை அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களைக்கூட நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி கொடுக்கப்படும் அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அவற்றை அனுப்பி வைக்க வேண்டும்.
நிபந்தனைக்கு உட்பட்ட நன்கொடை ஏற்பாடு
சில நாடுகளில், பணத்தை மற்றொரு விசேஷ ஏற்பாட்டின் மூலமும் நன்கொடையாக அளிக்கலாம். இந்த ஏற்பாட்டின்படி, நன்கொடை அளிப்பவருக்கு பணம் தேவைப்படும் சமயத்தில் அது திருப்பி கொடுக்கப்படும். மேலுமான தகவல்களுக்கு தயவுசெய்து உங்கள் கிளை அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளவும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனைக்கு உட்பட்ட பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற வழிமுறைகளும் இருக்கின்றன. அவையாவன:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரத்தில் அல்லது ரிட்டையர்மென்ட்/ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் ஒரு டிரஸ்ட் ஏற்பாட்டின் மூலம் அல்லது மரணத்திற்குப் பிறகு உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு கொடுக்கும் ஏற்பாட்டின் மூலம் உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதி வைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம்.
நிலம், வீடு: நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம் அல்லது வசிக்குமிடமாக இருந்தால், அதை அளிப்பவர் தன் மரணம் வரை அதை அனுபவிப்பதற்கான ஏற்பாடு செய்துகொள்ளலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரத்தில் எழுதுவதற்கு முன் உங்கள் நாட்டிலுள்ள கிளை அலுவலகத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
வருடாந்தர அன்பளிப்பு: இது, ஒருவர் தன்னுடைய பணத்தை அல்லது செக்யூரிட்டி டெபாஸிட்டுகளை உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதிக் கொடுக்கும் ஏற்பாடாகும். நன்கொடை அளிப்பவர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு வருடமும் வாழ்நாள் முழுவதுமாக ஒரு குறிப்பிட்ட தொகையை இதற்கு மாற்றீடாக பெறுகிறார். வருடாந்தர அன்பளிப்பு என்ற இந்த ஏற்பாட்டை செய்யும் ஆண்டில் நன்கொடை வழங்குபவருக்கு வருமான வரி விலக்கு உண்டு.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை சட்டப்படி எழுதப்பட்ட உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதி வைக்கலாம் அல்லது ஒரு டிரஸ்ட் ஒப்பந்தத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம். சில நாடுகளில், மத அமைப்புக்கு உதவும் ஒரு டிரஸ்ட்டுக்கு வரி சலுகைகள் கிடைக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு இது பொருந்தாது.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இப்படிப்பட்ட திட்டமிட்ட நன்கொடை மூலம் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு நன்மை செய்ய விரும்புகிறவர்களுக்கு உதவ உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை என்ற சிற்றேடு ஆங்கிலத்திலும் ஸ்பானிஷிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. நன்கொடைகள், உயில்கள் மற்றும் டிரஸ்டுகள் சம்பந்தமாக சொஸைட்டியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்தச் சிற்றேடு எழுதப்பட்டிருக்கிறது. நிலம், பணம் மற்றும் வரி சம்பந்தப்பட்டதில் திட்டமிடுவதற்கு பயனுள்ள கூடுதல் தகவல்கள்கூட இதில் உள்ளன. மேலும் தனிநபர்கள் பல்வேறு வழிகளில் இப்போதே நன்கொடையாக கொடுப்பது அல்லது மரணத்திற்குப்பின் அனுபோகிக்க கொடுப்பது பற்றி இது தெரிவிக்கிறது. இந்தச் சிற்றேட்டை படித்துவிட்டு, தங்களுடைய சட்ட ஆலோசகருடன் அல்லது வரிவிதிப்பு ஆலோசகருடன், அதோடு நன்கொடை திட்ட அலுவலகத்துடன் கலந்தாலோசித்தப் பின் அநேகர் உலகமுழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்கு உதவ முடிந்துள்ளது. அதே சமயத்தில் அவ்வாறு செய்வதன் மூலம் நிறைய வரி சலுகைகளையும் பெற்றுள்ளனர்.
கூடுதல் விவரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கோ உங்கள் நாட்டிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அலுவலகத்திற்கோ கடிதம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Charitable Planning Office
Jehovah’s Witnesses,
Post Box 6440,
Yelahanka,
Bangalore 560 064,
Karnataka.
Telephone: (080) 28468072
[பக்கம் 20-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய பழைய மற்றும் புதிய மன்றங்கள்
ஜாம்பியா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு