உலக அழிவு—அஞ்ச வேண்டுமா, நம்பிக்கையோடு எதிர்நோக்க வேண்டுமா?
“அப்பாக்கலிப்ஸ் என்பது பைபிள் விவரிப்பு மட்டுமல்ல, ஆனால் நூற்றுக்கு நூறு நடக்கப்போகும் ஒன்று.”—ஹாவியர் பெரஸ் டே குவெயார், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச்செயலர்.
“அப்பாக்கலிப்ஸ்” என்ற வார்த்தையை இந்த உலகப் பிரமுகர் உபயோகிப்பது பெரும்பாலான மக்கள் அதைப் புரிந்துகொண்டிருக்கும் விதத்தை காட்டுகிறது. மேலும், திரைப்படம் மற்றும் புத்தக பெயர்கள், பத்திரிகை கட்டுரைகள், செய்தித்தாள் அறிக்கைகள் ஆகியவற்றிலும் அது இவ்வாறே உபயோகிக்கப்படுகிறது. அது அண்டத்தின் அழிவைப் பற்றிய காட்சிகளையே மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஆனால் உண்மையில் “அப்பாக்கலிப்ஸ்” என்ற வார்த்தை எதை அர்த்தப்படுத்துகிறது? அதைவிட முக்கியமாக அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் என்று பெயரிடப்பட்ட பைபிள் புத்தகத்தில் என்ன செய்தி அடங்கியிருக்கிறது?
“அப்பாக்கலிப்ஸ்” என்ற வார்த்தை கிரேக்க சொல்லிலிருந்து பிறக்கிறது; அதற்கு “திறப்பது” அல்லது “வெளிப்படுத்துவது” என்று அர்த்தம். பைபிளின் வெளிப்படுத்துதலில் எது வெளிப்படுத்தப்பட்டது? தப்பிப்பிழைப்பவர்கள் எவரும் இல்லாத முற்றும் முழுமையான அழிவை முன்னறிவுக்கும் ஒரு செய்தியா? என்ஸ்டியூட் டா ஃபிரான்ஸ்ஸின் அங்கத்தினரான சரித்திராசிரியர் ஷான் டெலுயுமோவிடம் அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் பற்றிய கருத்தைக் கேட்டபோது அவர் சொன்னதாவது: “அது ஆறுதலையும் நம்பிக்கையையும் அள்ளித் தரும் புத்தகம். மக்கள் அதிலுள்ள அழிவின் சம்பவங்களுக்கு அதிக கவனம் செலுத்தி அதன் செய்தியை மிகைப்படுத்தியிருக்கின்றனர்.”
ஆரம்ப கால சர்ச்சும் உலக அழிவும்
உலக அழிவையும் பூமியில் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் அது அளிக்கும் நம்பிக்கையையும் குறித்து ஆரம்ப கால “கிறிஸ்தவர்கள்” எப்படி உணர்ந்தனர்? “மொத்தத்தில், முதல் சில நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் ஆயிர வருட கொள்கையை ஏற்றுக்கொண்டவர்களாகவே எனக்கு தெரிகிறது. . . . ஆரம்ப நூற்றாண்டுகளிலிருந்த கிறிஸ்தவர்களில், ஆயிர வருட கொள்கையை நம்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆசியா மைனரைச் சேர்ந்த எராபோலிஸின் மத குருவான பேப்பியஸ், . . . பாலஸ்தீனாவில் பிறந்து சுமார் 165-ல் ரோமில் உயிர்த்தியாகியான புனிதர் ஜஸ்டின், 202-ல் உயிர்நீத்த லையன்ஸின் மத குருவான புனிதர் இரேனியஸ், 222-ல் இறந்த டெர்ட்டுலியன், . . . புகழ்பெற்ற எழுத்தாளர் லேக்டான்ஷியஸ் ஆகியோர்” என முன் குறிப்பிடப்பட்ட அதே சரித்திராசிரியர் சொன்னார்.
பொ.ச. 161-ல் அல்லது 165-ல் பெர்கமுவில் உயிர்த்தியாகியாக மரித்தவர் என சொல்லப்படும் பேப்பியஸைப் பற்றி குறிப்பிடுகையில் த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறதாவது: “எராபோலிஸின் மதகுருவும் புனித யோவானின் சீஷருமான பேப்பியஸ், ஆயிர வருட கொள்கையை ஆதரித்து பேசுபவராய் தோன்றினார். அப்போஸ்தலர் வாழ்ந்த அதே காலப்பகுதியில் வாழ்ந்தவர்களிடமிருந்து தன் கொள்கையைப் பெற்றுக்கொண்டதாக பெருமையாக சொன்னார். சீஷனாகிய யோவானை கண்டவரும், அவருடைய பேச்சைக் கேட்டவருமான மற்றொரு ‘பிரெஸ்பிடரி’ இருந்ததாக இரேனியஸ் குறிப்பிடுகிறார்; இவர் யோவானிடமிருந்து ஆயிர வருட கொள்கையைப் பற்றிய நம்பிக்கையை கர்த்தருடைய கோட்பாட்டின் பாகமாக கற்றறிந்ததாக சொல்கிறார். யூஸிபியஸின்படி . . . மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்குப்பின், கிறிஸ்துவின் மகிமை பொருந்திய பூமிக்குரிய ஆயிர வருட ஆட்சி காணத்தக்க விதத்தில் துவங்கும் என பேப்பியஸ் தன்னுடைய புத்தகத்தில் உறுதியளித்தார்.”
ஆரம்ப கால விசுவாசிகள்மீது இந்தப் புத்தகமாகிய அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் செலுத்திய செல்வாக்கைப் பற்றி இது நமக்கு என்ன சொல்கிறது? எதை தோற்றுவித்தது—பயத்தையா, நம்பிக்கையையா? பண்டைய கிறிஸ்தவர்களை கேலியேட்டுகள் [திரு ஆயிரக்கோட்பாட்டாளர்கள்] என சரித்திராசிரியர்கள் அழைத்தனர். கேலிய யிட்டு (khiʹli·a eʹte) (ஆயிரம் வருடங்கள்) என்ற கிரேக்க வார்த்தைகளே இப்பெயர் பிறக்க காரணம் என்பது அக்கறைக்குரிய விஷயம். பூமியில் பூங்காவனம் போன்ற நிலைக்கு வழிவகுக்கும் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியில் விசுவாசம் வைத்தவர்களாகவே அவர்களில் அநேகர் இருந்தனர். பைபிளில் ஆயிர வருட நம்பிக்கையைக் குறிப்பாக சொல்லும் ஒரே பகுதி அப்பாக்கலிப்ஸ் அல்லது வெளிப்படுத்துதல் மட்டுமே. (வெளிப்படுத்துதல் 20:1-7) விசுவாசிகளைப் பயமுறுத்துவதற்குப் பதிலாக, வெளிப்படுத்துதல் அவர்களுக்கு மகத்தான நம்பிக்கையை அளித்தது. “கேலியேட்டுகளின் கருத்துக்கள் இறுதியில் புறக்கணிக்கப்பட்டபோதிலும் அவை வெகு காலத்திற்கு சர்ச்சுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவும் பெரும் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய சில எழுத்தாளர்களால் கற்பிக்கப்பட்டவையாகவும் இருந்தன” என ஆரம்ப கால சர்ச்சும் உலகமும் என்ற தன் ஆங்கில நூலில் சர்ச் வரலாற்று துறை ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் சிசில் காடு எழுதுகிறார்.
வெளிப்படுத்துதல் நம்பிக்கை ஏற்றுக்கொள்ளப்படாததற்குக் காரணம்
பெரும்பான்மையர் இல்லாவிட்டாலும் அநேக ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் பூங்காவனம் போன்ற பூமிக்குரிய பரதீஸில் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியை எதிர்நோக்கியிருந்தனர் என்பது மறுக்க முடியாத சரித்திரப்பூர்வ உண்மை. அப்படி இருக்கையில், ‘கேலியேட்டுகளின் கருத்துக்கள்’ எவ்வாறு ‘இறுதியில் புறக்கணிக்கப்பட்டன’? “வருத்தகரமாக, அநேக கேலியேட்டுகள் தங்கள் கற்பனை வளத்தை தங்குதடையில்லாமல் ஓடவிட்டதோடு, ஆயிர வருட காலத்தில் அனுபவிக்கப்போகும் எல்லா விதமான பொருட்செல்வங்கள், இன்பங்கள் பற்றி மிகைப்படுத்திக் கூறியதாலே” சில நியாயமான விமர்சனங்கள் உதிர்ந்தன என கல்விமான் ராபர்ட் மௌன்ஸ் குறிப்பிட்டார். ஆனால், இந்த மிதமிஞ்சிய கருத்துக்களை ஆயிர வருட ஆட்சியின் உண்மையான நம்பிக்கையைப் புறக்கணிக்காமலேயே சரிப்படுத்தியிருக்கலாம்.
ஆயிர வருட கொள்கையை ஒடுக்குவதற்கு எதிரிகள் உபயோகித்த வழிமுறைகள் உண்மையில் ஆச்சரியமானவையே. (இரண்டாம் நூற்றாண்டின் முடிவிலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்த) ரோமன் சர்ச் அங்கத்தினர் கேயஸ் பற்றி டிக்ஷ்னர் டா டேயாலஷி கேடாலிக் இவ்வாறு சொல்கிறது: “ஆயிர வருட கொள்கையை முறியடிக்க, அப்பாக்கலிப்ஸ் [வெளிப்படுத்துதல்] மற்றும் புனித யோவானின் சுவிசேஷம் ஆகியவற்றின் நம்பத்தக்க தன்மையை அவர் உறுதியாக மறுத்தார்.” மேலும், ஆயிர வருட கொள்கைக்கு எதிரான ஆய்வுக் கட்டுரையை டையோனிஷியஸ் என்ற அலெக்ஸாண்டிரியாவின் மூன்றாம் நூற்றாண்டின் மதகுரு எழுதினார் என இந்த டிக்ஷ்னர் குறிப்பிடுகிறது. “இக்கருத்தைப் பின்பற்றுபவர்கள், புனித யோவானின் வெளிப்படுத்துதலை தங்கள் நம்பிக்கைக்கு ஆதாரமாக வைப்பதைத் தடுப்பதற்கு டையோனிஷியஸ் அதன் நம்பகத் தன்மையையே மறுக்க தயங்கவில்லை” என்றும் அது சொல்கிறது. பூமியில் ஆயிர வருட ஆட்சியின் ஆசீர்வாதங்களின் எதிர்பார்ப்புக்கு இருந்த இத்தகைய கொடிய எதிர்ப்பு, அப்போது இறையியலாளர்களுக்கு மத்தியில் செயல்பட்டு வந்த தந்திரமான செல்வாக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஆயிர வருட ஆட்சியை நாடித்தேடுதல் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் பேராசிரியர் நார்மன் கோன் இவ்வாறு எழுதுகிறார்: “ஆயிர வருட கொள்கையில் நம்பிக்கையை குலைப்பதற்கான முதல் முயற்சி மூன்றாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்டது. ராஜ்யம் என்பது சொல்லர்த்தமாக நிகழவிருப்பதல்ல, மாறாக விசுவாசிகளுக்குள் நிகழும் சம்பவம் என அப்போது ஆரிகன் விளக்கமளிக்க தொடங்கினார். அவர் பண்டைய சர்ச்சின் இறையியல் வல்லுநர்களிலேயே பெரும் செல்வாக்கு படைத்தவர்.” பைபிளை ஒதுக்கிவிட்டு கிரேக்க தத்துவங்களையே சார்ந்திருந்தார் ஆரிகன். மேசியானிய ராஜ்யத்தின்கீழ் பூமியிலிருப்போர் பெறவிருக்கும் ஆசீர்வாதங்களின் ஒளிமயமான நம்பிக்கையை ஒளியிழக்கச் செய்தார். அதை, ‘விசுவாசிகளுக்குள் நிகழும் சம்பவம்’ என புரிந்துகொள்ள முடியாதபடி விளக்கினார். லேயோன் கிரே என்ற கத்தோலிக்க எழுத்தாளர் எழுதியதாவது: “கிரேக்க தத்துவத்தின் மேலோங்கிய செல்வாக்கு . . . ஆயிர வருட ஆட்சி பற்றிய நம்பிக்கைகளை மெல்ல மெல்ல வீழ்த்தியது.”
“நம்பிக்கையின் செய்தியை சர்ச் இழந்துவிட்டிருக்கிறது”
அகஸ்டின் என்பவர் சர்ச்சின் அங்கீகாரம் பெற்ற எழுத்தாளராய் திகழ்ந்தார். அவருடைய காலத்திற்குள் உண்மை கிறிஸ்தவத்திலிருந்து வெகுவாய் விலகிப் போய்விட்டிருந்த கிறிஸ்தவ மதத்தில் கிரேக்க தத்துவத்தைப் புகுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்ப காலத்தில் ஆயிர வருட கொள்கையை தீவிரமாக ஆதரித்த இவர், இறுதியில், கிறிஸ்து பூமியின்மீது ஆயிர வருடம் ஆட்சி செய்வார் என்ற கருத்தையே முற்றும் முழுமையுமாக புறக்கணித்தார். அவர் வெளிப்படுத்துதல் 20-ம் அதிகாரத்தை அடையாள அர்த்தத்தில் திரித்துச் சொல்லிவிட்டார்.
“ஆயிர வருட ஆட்சி என்று எதுவுமில்லை என்ற திட்டவட்டமான முடிவுக்கு ஆகஸ்டின் இறுதியில் வந்தார். . . . இந்த அதிகாரத்தில் குறிப்பிடப்படும் முதல் உயிர்த்தெழுதல், ஞானஸ்நானமாகிய ஆவிக்குரிய மறுபிறப்பை குறிக்கிறது; ஆறாயிரம் ஆண்டுகால சரித்திரத்திற்குப்பின் வரும் ஆயிர வருட ஓய்வுநாள்தான் நித்திய ஜீவனையே குறிக்கிறது என அவர் சொல்கிறார்” என்கிறது த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா. “அடையாள அர்த்தத்தில் அகஸ்டின் குறிப்பிட்ட ஆயிர வருட கொள்கை, சர்ச்சின் அதிகாரப்பூர்வ கோட்பாடாகியது. . . . லூத்தரன், கால்வினியர்கள், ஆங்கிலிகன் ஆகிய தொகுதிகளின் புராட்டஸ்டண்ட் சீர்திருத்தவாதிகள் . . . அகஸ்டினின் கருத்துக்களை உறுதியாக பற்றிக் கொண்டனர்” என சொல்கிறது த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா. இவ்வாறு கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் அங்கத்தினர்கள் ஆயிர வருட ஆட்சி பற்றிய நம்பிக்கையே இல்லாமல் போயினர்.
மேலும், ஸ்விஸ் இறையியலர் ஃபிரெட்ரிக் டா ரூஷ்மோன்டின்படி “ஆயிர வருட ஆட்சியைப் பற்றிய தன்னுடைய ஆரம்ப கால விசுவாசத்தை கைவிடுவதன்மூலம் [அகஸ்டின்] மதிப்பிட முடியாதளவு சேதத்தை சர்ச்சுக்கு ஏற்படுத்தினார். அவருக்கிருந்த அசைக்க முடியாத செல்வாக்கின் காரணமாக, தவறான கருத்தை ஆதரிப்பதன் மூலம் பூமி சம்பந்தப்பட்ட நம்பிக்கையை [சர்ச்] இழக்கும்படி செய்தார்.” ஆயிர வருட கொள்கையில் ஏற்பட்ட அவநம்பிக்கையினால் மக்கள், “தாங்கள் புரிந்துகொண்டிருந்த மதத்தை” இழந்து போனார்கள். “பழைய மதத்திற்கும் பழைய நம்பிக்கைகளுக்கும்” பதிலாக, இப்போது தாங்கள் “புரிந்துகொள்ளாத ஒரு மதத்தில்” இருப்பதை அவர்கள் கண்டார்கள் என அடால்ஃப் ஹார்நாக் என்ற ஜெர்மன் இறையியலர் ஒப்புக்கொண்டார். அநேக தேசங்களில் இன்று சர்ச்சுகள் வெறிச்சோடி கிடப்பது, ஜனங்களுக்கு புரிந்துகொள்ள முடிந்த விசுவாசமும் நம்பிக்கையும் தேவை என்பதற்கு பலமான அத்தாட்சி அளிக்கிறது.
“ஒருபுறம் அகஸ்டினின் பெரும் செல்வாக்கு இருந்ததாலும், மறுபுறம் அநேக பிரிவினர் ஆயிர வருட கொள்கையை ஏற்றுக்கொண்டதாலும் கத்தோலிக்க மதமும் புராட்டஸ்டண்ட் மதமும் இதைப் புறக்கணிப்பதில் ஒன்று போல செயல்பட்டன. இதைவிட்டால் இந்த உலகத்தில் மனிதருக்கு என்ன நம்பிக்கையிருக்கிறது என கேட்டபோது சொல்லப்பட்ட அதிகாரப்பூர்வ பதில்: எதுவுமில்லை என்பதே. கிறிஸ்துவின் வருகையில் பூமி அழிக்கப்படும், மக்கள் நித்தியமாக பரலோகத்திலோ நரகத்திலோ வாழ்வு பெறுவார்கள், கடந்தகால சரித்திரம் மறக்கப்படும். . . . ஆக, நம்பிக்கையின் செய்தியை சர்ச் இழந்துவிட்டிருக்கிறது” என வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முக்கியக் குறிப்புகள் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் ஜார்ஜ் பீஸ்லி மரீ என்ற பைபிள் கல்விமான் எழுதினார்.
வெளிப்படுத்துதல் நம்பிக்கை எனும் மங்காத சுடர்!
யெகோவாவின் சாட்சிகளைப் பொறுத்தவரை, ஆயிர வருட ஆட்சி சம்பந்தப்பட்ட அருமையான வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதில் அவர்கள் அசைக்க முடியாத உறுதியோடு இருக்கின்றனர். “2000-மாவது வருடம்: உலக அழிவு பற்றிய பயம்” என்ற தலைப்பில் ஃபிரெஞ்ச் டிவி நிகழ்ச்சிநிரலின் நேர்முக பேட்டியில் ஃபிரெஞ்ச் சரித்திராசிரியர் ஜீன் டெலுயுமோ குறிப்பிட்டதாவது: “ஆயிர வருட ஆட்சி பற்றிய கருத்தை யெகோவாவின் சாட்சிகள் அப்படியே நம்புகிறார்கள். அவர்களுடைய கருத்துப்படி, சீக்கிரத்தில் . . . நாம் சந்தோஷம் பொங்கும் 1,000 வருட காலப் பகுதிக்குள் நுழைவோம், அதற்குமுன் பெரும் அழிவை சந்திப்போம்.”
இதைத்தான் அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் பார்த்து, அப்பாக்கலிப்ஸில் அல்லது வெளிப்படுத்துதலில் விவரித்தார். “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; . . . மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது” என எழுதினார்.—வெளிப்படுத்துதல் 21:1, 3, 4.
இந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள எத்தனை பேருக்கு உதவ முடியுமோ அத்தனை பேருக்கும் உதவ, யெகோவாவின் சாட்சிகள் உலகளாவிய விதத்தில் பைபிளை போதிக்கின்றனர். இதைக் குறித்து நீங்கள் அதிகம் கற்றுக்கொள்ள உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் அவர்கள் அகமகிழ்வார்கள்.
[பக்கம் 6-ன் படம்]
அப்போஸ்தலர் காலத்தில் வாழ்ந்தோரிடமிருந்து நேரடியாக ஆயிர வருட ஆட்சி கோட்பாட்டைப் பெற்றுக் கொண்டதாக பேப்பியஸ் பெருமையாக சொன்னார்
[பக்கம் 7-ன் படம்]
கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியை டெர்ட்டுலியன் நம்பினார்
[படத்திற்கான நன்றி]
© Cliché Bibliothèque Nationale de France, Paris
[பக்கம் 7-ன் படம்]
“ஆயிர வருட ஆட்சியைப் பற்றிய தன்னுடைய ஆரம்ப கால விசுவாசத்தை கைவிடுவதன்மூலம் [அகஸ்டின்] மதிப்பிட முடியாதளவு சேதத்தை சர்ச்சுக்கு ஏற்படுத்தினார்”
[பக்கம் 8-ன் படம்]
அப்பாக்கலிப்ஸ் புத்தகத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமி உண்மையிலேயே ஆவலோடு எதிர்நோக்க வேண்டிய ஒன்று