நாங்களோ விசுவாசிக்கிறவர்கள்
இத்தாலியில் ஆறுதலின் செய்தியை அறிவித்தல்
யெகோவாவை ‘சகலவிதமான ஆறுதலின் தேவன்’ என்று பைபிள் அழைக்கிறது. அவரைப் பின்பற்ற முயலும் அவருடைய ஊழியர்கள், “எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு . . . ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாக” இருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 1:3, 4; எபேசியர் 5:1) இதுவே, யெகோவாவின் சாட்சிகள் செய்துவரும் பிரசங்க ஊழியத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
தேவையிலிருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவுதல்
முக்கியமாய் சமீப ஆண்டுகளில், வறுமையாலும், போராலும், நல்ல வாழ்க்கையைக் கண்டடையும் ஆவலாலும் பலர் பெருஞ்செல்வம் மிகுந்த நாடுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். ஆனால், புதிய சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு சமாளிப்பது எளிதல்ல. மான்யோலே, தன் சமுதாயத்தைச் சேர்ந்த அல்பேனியருடன் போர்கோமானேரோவில் வாழ்ந்தாள். இத்தாலியில் அவள் வாழ்வதற்கான சட்டப்பூர்வ அனுமதி பெறாமல் இருந்ததால், யெகோவாவின் சாட்சியான வாண்டாவிடம் பேசத் தயங்கினாள். இருப்பினும், மான்யோலேவை சந்தித்துப் பேச வாண்டா ஏற்பாடு செய்தாள். மொழி தெரியாததால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வது கடினமாக இருந்தது. என்றபோதிலும், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் மான்யோலேவின் ஆர்வம் மடமடவென்று அதிகரித்தது. சில சந்திப்புகளுக்குப் பிறகோ, வீட்டில் எவரையும் அதற்கு மேலும் வாண்டாவால் காண முடியவில்லை. என்ன நடந்துவிட்டது? அந்த வீட்டிலிருந்தவர்களில் ஒருவனான மான்யோலேவின் நெருங்கிய நண்பன், கொலை குற்றத்திற்காக தேடப்பட்டு வந்ததால், அந்த வீட்டில் வசித்த எல்லாரும் ஓடிவிட்டார்கள் என்று வாண்டாவுக்குத் தெரியவந்தது.
நான்கு மாதங்களுக்குப் பின், வாண்டா மான்யோலேவை மறுபடியுமாக சந்தித்தாள். “அவள் வெளிறிப்போய், மெலிந்து இருந்தாள். ஏதோ இக்கட்டுக்குள்ளாகியிருக்க வேண்டும் என்பதை அவளது தோற்றமே காட்டியது” என்று வாண்டா சொல்கிறாள். நடந்ததையெல்லாம் மான்யோலே விலாவாரியாக தெரிவித்தாள். தன் முன்னாள் காதலன் சிறையில் இருந்ததாகவும், உதவியை எதிர்பார்த்துச் சென்ற நண்பர்கள் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும், மனவேதனையில் உதவிக்காக கடவுளிடம் தான் ஜெபித்ததாகவும், அப்போதுதான் பைபிளைப் பற்றி தன்னிடம் பேசியிருந்த வாண்டாவின் நினைவு அவளுக்கு வந்ததாகவும் அவள் சொன்னாள். வாண்டாவை மறுபடியும் கண்டதில்தான் மான்யோலேவுக்கு எவ்வளவு சந்தோஷம்!
பைபிள் படிப்பு திரும்பவும் தொடங்கப்பட்டது, சீக்கிரத்தில் மான்யோலே, கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினாள். இத்தாலியில் வசிப்பதற்கு சட்டப்பூர்வ அனுமதியும் பெற்றாள். ஓர் ஆண்டுக்குப் பின், மான்யோலே முழுக்காட்டப்பட்ட சாட்சியானாள். கடவுளுடைய வாக்குறுதிகளால் ஆறுதல் அடைந்தவளாய், ஆறுதலளிக்கும் பைபிளின் செய்தியை தன் நாட்டு மக்களிடம் பகிர்ந்துகொள்ளும்படி அல்பேனியாவுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறாள்.
குடியேறிகள் முகாமில் சாட்சிபகர்தல்
‘இத்தாலிய சபைகள் பல, மான்யோலேவைப் போன்ற, குடிபுகுந்தோருக்கு சாட்சி கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றன. உதாரணமாக, ஃப்ளாரன்ஸில் உள்ள ஒரு சபை, குடியேறினவர்களின் முகாம் ஒன்றுக்குத் தவறாமல் சென்று வந்தது. அந்த முகாமில் குடியிருந்தவர்கள்—பலர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும், மாசிடோனியாவிலிருந்தும், கோஸோவோவிலிருந்தும் வந்தவர்கள்—பல்வேறு இக்கட்டுகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். போதைப் பொருட்கள் அல்லது குடிப்பழக்க பிரச்சினைகள் சிலருக்கு இருந்தது. தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக சிறு சிறு திருட்டுத் தொழிலிலும் பலர் ஈடுபட்டனர்.
இந்தச் சமுதாயத்தில் பிரசங்கிப்பது சாட்சிகளுக்கு ஒரு சவாலாக இருந்தது. எனினும், நற்செய்தியின் முழுநேர ஊழியரான பாவோலா என்ற பெயருடைய சாட்சி, ஸாக்லீனா என்ற மாசிடோனிய பெண்ணைச் சந்தித்தார். சில சந்திப்புகளுக்குப் பின்பு ஸாக்லீனா, பைபிளை ஆராய்ந்து பார்க்கும்படி தன் சிநேகிதி சூசன்னாவை ஊக்குவித்தாள். சூசன்னாவும் அவ்வாறே மற்ற உறவினர்களிடம் பேசினாள். சீக்கிரத்தில், அந்தக் குடும்பத்தினரில் ஐந்து பேர், தவறாமல் பைபிள் படித்தார்கள், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வந்தார்கள், தாங்கள் படிப்பதற்கேற்ப வாழ்ந்து காட்டினார்கள். தாங்கள் எதிர்ப்படவிருக்கும் பிரச்சினைகளைப் பொருட்படுத்தாமல், யெகோவாவிடமிருந்தும் அவருடைய வார்த்தையிலிருந்தும் ஆறுதலை கண்டடைகிறார்கள்.
ஒரு கன்னியாஸ்திரீ யெகோவாவிடமிருந்து வரும் ஆறுதலை ஏற்கிறார்
ஃபோர்மியா என்ற பட்டணத்தில், நற்செய்தி பிரசங்கிக்கும் முழுநேர ஊழியக்காரியான ஆஸுன்ட்டா, கஷ்டப்பட்டு நடந்துகொண்டிருந்த ஓர் அம்மாளிடம் பேசினாள். அந்த அம்மாள், ஒரு கன்னியாஸ்திரீ. மருத்துவமனைகளிலும் தனிப்பட்ட வீடுகளிலும் நோயுற்றோருக்கும் உடல்நலிந்தோருக்கும் உதவியளிக்கிற மத நிறுவனத்தைச் சேர்ந்தவர்.
அந்தக் கன்னியாஸ்திரீயிடம் ஆஸுன்ட்டா இவ்வாறு சொன்னாள்: “நீங்களும்கூட வேதனை அனுபவிக்கிறீர்கள் அல்லவா? என்ன செய்வது, நாம் எல்லாருமே பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறதே!” அப்போது அந்த கன்னியாஸ்திரீக்கு அழுகை பீறிட்டது, தனக்குக் கடுமையான உடல்நல பிரச்சினை இருந்ததாக தெரிவித்தார். பைபிளின் கடவுள் ஆறுதல்படுத்த முடியும் என்று சொல்லி, ஆஸுன்ட்டா அவரை தேற்றினாள். ஆஸுன்ட்டா அளித்த, பைபிளில் ஆதாரமுடைய பத்திரிகைகளை அந்தக் கன்னியாஸ்திரீ ஏற்றுக்கொண்டார்.
அந்தக் கன்னியாஸ்திரீயின் பெயர் பல்மீரா. அவர்களுடைய அடுத்த உரையாடலின்போது தான் பட்ட துன்பத்துக்கு அளவில்லை என்று அவர் சொன்னார். கன்னியாஸ்திரீகளால் நடத்தப்பட்ட ஒரு நிறுவனத்தில் அவர் வெகு காலமாக வாழ்ந்திருந்தார். உடல்நலக்கேட்டின் காரணமாக தற்காலிகமாக அதை விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது; ஆனால் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், பல்மீரா, கன்னியாஸ்திரீயானபோது தான் கடவுளிடம் செய்திருந்த உறுதிமொழியின்படி கடவுளுக்குக் கடமைப்பட்டவராக உணர்ந்தார். “சிகிச்சைக்காக” சுகப்படுத்துவோரிடம் சென்றார், ஆனால் அந்த அனுபவத்தால் அதிர்ச்சிக்குள்ளாகி, மனவேதனைதான் மிஞ்சியது. பல்மீரா பைபிள் படிக்க ஒப்புக்கொண்டு, ஓர் ஆண்டாக கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வந்தார். பின்பு வேறு இடத்திற்கு மாறிச் சென்றார். அந்தச் சாட்சிக்கு அவர்களுடன் தொடர்பு இல்லாமல் போயிற்று. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே இருவரும் மறுபடியுமாக சந்தித்தனர். பல்மீராவுக்கு தன் குடும்பத்தினரிடமிருந்தும் மதகுருவினிடமிருந்தும் பலமான எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் மறுபடியும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டு, ஆவிக்குரிய முன்னேற்றம் செய்து, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டார்.
ஆம், ‘ஆறுதலை அளிக்கும் தேவனின்’ செய்தி பலருக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. (ரோமர் 15:4, 6) ஆகையால், இத்தாலியில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய அதிசயமான ஆறுதலின் செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதால், அவருடைய மாதிரியைத் தொடர்ந்து பின்பற்றி நடக்கும்படி தீர்மானித்திருக்கிறார்கள்.