தேடித் தேடி.. கண்டடைந்தாள்
“யெகோவா? யார் இந்த யெகோவா?” எட்டு வயது சில்வியா கேட்டாள். அவளுடைய தோழி வீட்டில் பொக்கிஷமாக வைக்கப்பட்டிருந்த அர்மீனிய பைபிளில் அந்தப் பெயரை பார்த்தாள். இதைப் பற்றி அக்கம் பக்கத்திலுள்ளோரைக் கேட்டாள். ஆனால், யெகோவா யார் என்பதை அவள் இருந்த இடமாகிய அர்மீனியாவிலுள்ள ஏரேவினில் ஒருவரும் அவளுக்குச் சொல்ல முடியவில்லை. அவளுடைய பெற்றோராலும் முடியவில்லை, பள்ளி ஆசிரியர்களாலும் முடியவில்லை, அவ்விடத்து சர்ச்சின் போதகர்களாலுங்கூட முடியவில்லை.
சில்வியா வளர்ந்து பெரியவளாகி, தன் பள்ளி படிப்பை முடித்து, ஒரு வேலைக்கும் செல்லத் தொடங்கிவிட்டாள். ஆனால், யெகோவா யார் என்று அவள் இன்னும் அறியவில்லை. வாலிப வயதில் அவள் அர்மீனியாவை விட்டு தப்பியோட வேண்டியிருந்தது. சிறிது காலத்திற்குப் பின் போலாந்தில், மற்ற அகதிகளோடுகூட ஒரு சிறிய அறையில் வாழ்ந்தாள். தன் அறைத் தோழிகளில் ஒருவரைக் காண தவறாமல் ஆட்கள் வந்து போவதைக்கண்டு, “உன்னை பார்க்க அடிக்கடி வருகிறார்களே அவர்கள் யார்?” என்று சில்வியா கேட்டாள். “அவர்கள் யெகோவாவின் சாட்சிகள், எனக்கு பைபிள் கற்பிக்க இங்கு வருகிறார்கள்,” என்று அவள் பதிலளித்தாள்.
யெகோவா என்ற பெயரைக் கேட்டபோது, சில்வியாவின் இருதயம் மகிழ்ச்சியால் துள்ளியது. கடைசியாக, யெகோவா யார், அவர் எத்தகைய அன்புள்ள கடவுள் என்பதை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது! ஆனால் சீக்கிரத்தில் அவள் போலந்தை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. பால்டிக் கடலுக்கு அப்பாலுள்ள டென்மார்க்கில் அடைக்கலம் தேடினாள். சொற்ப உடைமைகளையே அவள் எடுத்துச் சென்றாள். ஆனால், அவற்றுள் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் பிரசுரங்கள் இருந்தன. ஒரு பிரசுரத்தின் கடைசி பக்கத்தில், உவாட்ச் டவர் சொஸைட்டி கிளை அலுவலகங்களின் விலாசங்கள் அடங்கிய பட்டியலை சில்வியா கண்டாள். அது அவளுடைய மிக முக்கியமான உடைமையாக, யெகோவாவிடம் கரைசேர்க்கும் உயிர் காக்கிற மிதவையாக ஆனது.
டென்மார்க்கில் சில்வியா, அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் உடனடியாக யெகோவாவின் சாட்சிகளைத் தேடத் தொடங்கினாள். டென்மார்க்கில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகம் அல்போர்க் பட்டணத்தில் இருந்ததை தன் விலாச பட்டியலிலிருந்து அவள் அறிய வந்தாள். ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்குள் சில்வியா மற்றொரு முகாமுக்கு மாற்றப்பட்டாள். ட்ரெயினில் அந்த முகாமுக்கு சென்றுகொண்டிருக்கையில் ரயில் அல்போர்க் பட்டணத்தை கடந்து சென்றது! மறுபடியும் அவளுடைய இருதயம் மகிழ்ச்சியால் துள்ளிற்று.
கொஞ்ச நாளில் சில்வியா அல்போர்க்குக்கு ட்ரெயினில் சென்றாள். ஸ்டேஷனிலிருந்து கிளை அலுவலகத்தை நோக்கி நடந்தாள். “நான் அந்தத் தோட்டத்திற்குள் பிரவேசித்தபோது, ஒரு பெஞ்சின்மீது உட்கார்ந்து, ‘இதுதான் பரதீஸ்!’ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்” என்கிறாள். கிளை அலுவலகத்தில் அவள் அன்புடன் வரவேற்கப்பட்டாள், கடைசியாக, பைபிள் படிக்கும் பாக்கியத்தை பெற்றாள்.
ஆனால் முகாம்விட்டு முகாமாக பல இடங்களுக்கு மாறிக்கொண்டேயிருந்தாலும், போகுமிடங்களிலெல்லாம் சாட்சிகளைக் கண்டுபிடித்து பைபிளை விடாமல் படித்து வந்தாள். இரண்டு ஆண்டுகளில் போதுமான அளவு கற்றுக்கொண்டு, யெகோவாவுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தாள். அவள் முழுக்காட்டப்பட்டு, அதன்பின் சீக்கிரத்திலேயே முழுநேர சேவையில் பங்குகொண்டாள். 1998-ல் டென்மார்க் நாட்டு அதிகாரிகள் அவளுக்குப் புகலிடம் அளித்தார்கள்.
சில்வியாவுக்கு இப்போது 26 வயது. பரதீஸாக எண்ணி அவள் கால்வைத்த டென்மார்க் கிளை அலுவலகத்திலேயே சேவை செய்கிறாள். அவள் இப்போது கூறுவதாவது: “நான் சிறுமியாக இருந்ததிலிருந்து யெகோவாவை தேடினேன். என் முயற்சி வீணாகவில்லை, இப்போது நான் அவரைக் கண்டுபிடித்துவிட்டேன். என் வாழ்க்கையை அவருடைய சேவையிலேயே அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன், இதோ பெத்தேலில் இருக்கிறேன். இனிவரும் காலமெல்லாம் இதுவே என் வீடாக இருக்கும்படி ஜெபிக்கிறேன்!”